Friday, March 21, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அரவிந்த் கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டியிருக்கிறார் ?

அரவிந்த் கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டியிருக்கிறார் ?

-

ஆம் ஆத்மி : சீரழிந்த நாடாளுமன்ற அரசியலைச் சிங்காரிக்க புதிய துடைப்பம் !

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது ஆட்சியும் அமைத்துள்ளது. 2004 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்ற பா.ஜ.க. வின் முழக்கத்துக்கு எதிராகத் தாங்கள் முன்வைத்த “ஆம் ஆத்மி” (எளிய மனிதன்) என்ற முழக்கத்தைத் திருடி விட்டதாக கேஜ்ரிவாலைக் குற்றம் சாட்டியிருந்தார் திக்விஜய் சிங். தற்போது காங்கிரசு ஆட்சிக்கெதிரான மக்களின் அதிருப்தியை அறுவடை செய்யக் காத்திருந்த டெல்லி மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியதிகாரக் கனவைத் திருடிவிட்டது ஆம் ஆத்மி கட்சி. அது மட்டுமின்றி, மோடியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட டில்லியின் ஐந்து தொகுதிகளில் நான்கில், பாரதிய ஜனதா வேட்பாளரை மண்ணைக் கவ்வ வைத்து, “மோடி அலை” என்ற மோசடியின் முகத்திலும் மக்கள் காறி உமிழ்ந்துவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலிலும் பல மாநிலங்களில் போட்டியிடவிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருப்பதால், காங்கிரசு ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யக் காத்திருந்த பாரதிய ஜனதாவின் ஆசையிலும் மண் விழுந்திருக்கிறது.

அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள்
டெல்லி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் (இடது) மற்றும் அவரது “எளிமையான” அமைச்சரவை சகாக்கள்.

கட்சி தொடங்கிய 14 மாதங்களில் பணபலமும் அதிகார பலமும் கொண்ட காங்கிரசு, பாரதிய ஜனதா என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருப்பதாக ஊடகங்கள் அதிசயிக்கின்றன; இது ஓரளவிற்கு உண்மையே எனினும், இந்த வெற்றி விளங்கிக் கொள்ள முடியாத புதிர் அல்ல. ஆம் ஆத்மி கட்சிக்கான ஆரம்ப கட்ட விளம்பரத்தை ஆளும் வர்க்கங்கள்தான் முழுவீச்சில் செய்தன. லோக்பாலுக்காக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் எனும் கோமாளிக்கூத்து ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாகத் திட்டமிட்டே ஊடகங்களால் ஊதிப்பெருக்க வைக்கப்பட்டது.

மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக, படிப்படியாகச் சட்டபூர்வமாக்கப்பட்டு வரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையை மறைப்பதற்காகவும், அதற்கெதிராகத் திரண்டுவரும் பொதுக்கருத்தையும் போராட்டங்களையும் மடை மாற்றுவதற்காகவும்தான் அன்னா ஹசாரே அவதார புருசனாக்கப்பட்டார். சிறந்த அரசாளுமை – ஊழல் ஒழிப்பு என்ற முழக்கத்தின் அடிப்படையிலான இயக்கங்களைப் பின்தங்கிய நாடுகளில் கட்டியமைக்கின்ற உலகவங்கியின் திட்டத்துக்கும், உலக வங்கியின் விருது பெற்ற ஹசாரேவுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, புலனாய்வு செய்து கண்டுபிடிக்குமளவுக்குச் சூட்சுமமானதல்ல.

மின் இணைப்பு
மின்வாரியத்தால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் இணைக்கும் கேஜ்ரிவாலின் ‘துணிகர’ நடவடிக்கை.

அன்னா ஹசாரேயின் தளபதியாக அன்று ஊடக வெளிச்சத்தில் மிதந்த அரவிந்த் கேஜ்ரிவால், “வளர்ந்து வரும் புதிய தலைமை” என்று போற்றப்பட்டு, ராக்பெல்லர் பவுன்டேசனால் வழங்கப்படும் மகசேசே விருதைப் பெற்றவர் என்பதும் இங்கே நினைவிற்கொள்ளத்தக்கது. “நான் அன்னா ஹசாரே” என்று நாடு முழுவதும் அன்று பிரபலப்படுத்தப்பட்ட முழக்கத்தையே “நான் எளிய மனிதன்” என்று மாற்றிக் கட்சி தொடங்கி விட்டார் கேஜ்ரிவால். ஆக, ஆம் ஆத்மி கட்சிக்கு மோடியை விஞ்சுமளவு விளம்பரம் செய்து, சாதகமான பொதுக்கருத்தை உருவாக்கும் பணியையும் ஆளும் வர்க்க ஊடகங்கள் ஏற்கெனவே செய்து கொடுத்து விட்டன என்பதையும் இந்த வெற்றியைக் கண்டு அதிசயிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

டெல்லியில் மின்சாரம் மற்றும் தண்ணீரின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதனால் தூண்டிவிடப்பட்ட மக்களின் கோபம் ஆம் ஆத்மி கட்சிக்குச் சாதகமாக அமைந்தது. இக்கட்டண உயர்வைத் “தனியார்மயத்தின் விளைவு” என்று அம்பலப்படுத்தாமல், “ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் விளைவு” என்று சித்தரித்ததுடன், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படுமென்றும், ஒரு குடும்பத்துக்கு 667 லிட்டர் தண்ணீர் கட்டணமின்றி வழங்கப்படுமென்றும் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இது மட்டுமின்றி, மாதம் ரூ.4000, 5000 என விதிக்கப்பட்ட அடாத மின் கட்டணத்தைக் கட்டமுடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்குவது போன்ற போராட்டங்களை நடத்தியதும், குடிசைப்பகுதிகள் அகற்றப்படாது என்ற வாக்குறுதியும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் ஆதரவை ஆம் ஆத்மிக்குப் பெற்றுக் கொடுத்திருந்தன.

மக்களின் இத்தகைய பருண்மையான பிரச்சினைகளைப் பற்றி எதுவுமே பேசாமல், மேடைக்கு மேடை பஞ்ச் டயலாக்குகளைப் பொழிந்து கொண்டிருந்த மோடியின் பிரச்சாரம் தோல்வியுற்றதற்கும், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்குமான பின்புலம் இதுதான். குறிப்பாக, பெரும்பாலான குடிசைப்பகுதி மக்கள் தங்களது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கூறிய காரணத்தினாலேயே ஆம் ஆத்மிக்கு வாக்களித்திருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த சூழல் இதுதான்.

ஜந்தர்-மந்தர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அரவிந்த் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களோடு டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுப் பின்புலம் கலவையானது. ஐ.ஐ.டி. பட்டதாரிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களின் உயர் பதவி வகித்தவர்கள், ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிப்பவர்கள், பலவிதமான தன்னார்வக் குழுக்களை இயக்குபவர்கள் – என இக்கட்சியின் முன்னணியாளர்கள் அனைவரும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்பதுடன், இவர்களில் பலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தால் “அரசியல் உணர்வு” பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார்மய – தாராளமயக் கொள்கைகளை அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழலின்றி முறையாக அமல்படுத்துவதுதான் நாட்டு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்று கருதும் உயர் நடுத்தர வர்க்கம், மின் கட்டண, தண்ணீர் கட்டண உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் தனியார்மயக் கொள்கைகளின் மீதும், ஊழல் அரசியல்வாதிகளின் மீதும் வெறுப்பு கொண்ட நடுத்தர வர்க்கம், தனியார்மயக் கொள்கைகளால் கல்வி, மருத்துவ வசதியிழந்து, விலைவாசி உயர்வால் வாழ்க்கைத் தரம் மென்மேலும் வீழ்ச்சி அடைந்து அன்றாடத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அடிப்படை வர்க்கம் – என்று முரண்பட்ட கருத்துகளையும் நலன்களையும் கொண்ட வர்க்கங்கள் ஆம் ஆத்மியை ஆதரித்திருக்கிறார்கள்.

மேற்கண்ட பிரச்சினைகள் குறித்த ஆம் ஆத்மி கட்சியின் நிலை என்ன என்பதை கேஜ்ரிவால் இப்படிக் கூறுகிறார்: “நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ள வில்லை. இரண்டாவதாக, தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று “ஓபன் மாகசினுக்கு” அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார் கேஜ்ரிவால். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளை, “ஊழலுக்குப் பலியானவர்கள்” என்று கூறுவதிலிருந்தே, கேஜ்ரிவால் எந்த சித்தாந்தத்துக்குத் தாலி கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகி விடுகிறது.

caption-002-aap-1

இதே ஆம் ஆத்மி கட்சியின் இன்னொரு தலைவரான பிரசாந்த் பூஷண், “நாட்டின் அதிகார அமைப்பு முழுவதையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு கார்ப்பரேட் மாஃபியா உருவாகியிருப்பதுதான் ஊழல் என்பதன் கொடிய விளைவு” என்று கேஜ்ரிவாலின் கூற்றுக்கு நேர்எதிராக கருத்துரைத்திருக்கிறார்.

“நாங்கள் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் நடுவிலான கொள்கையை உடையவர்கள் அல்ல. வலது, இடது என்ற இந்த இருமை எதிர்வைக் கடந்து செல்ல விரும்புகிறவர்கள்; இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர சித்தாந்தங்களின் மீது, குறிப்பாக இடதுசாரி சித்தாந்தத்தின் மீது ஆழ்ந்த ஐயம் கொண்டவர்கள். எங்களது விழுமியம் என்பது கடைசி மனிதன் மீதும் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. அந்த விழுமியத்தை நான் விட்டுக் கொடுக்க முடியாது. இதேபோல பொதுத்துறையையும், மானியங்களையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஒருவர் சொல்வாரேயானால் அவர் இலட்சியத்தை வழிமுறையோடு போட்டுக் குழப்புகிறார் என்று பொருள். மேதா பட்கர், அருணா ராய் உள்ளிட்டுப் பொதுவாழ்வில் உள்ள சிறந்தவர்கள் அனைவரையும் சேர்த்த ஒரு கூட்டணியாக ஆம் ஆத்மி கட்சியை நாங்கள் மாற்ற விரும்புகிறோம்” என்று கொள்கை விளக்கமளிக்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவரான யோகேந்திர யாதவ்.

ஊழல் எதிர்ப்பாளர்
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரே உள்ளிட்டோர் ஊழலைத் தவிர பிற சமூகப் பிரச்சினைகளைக் கொண்டு கொள்வதில்லை என அம்பலப்படுத்தும் கேலிச் சித்திரம் (கோப்புப் படம்).

எளிய மனிதனின் நலனைத் தனியார்மயக் கொள்கையின் கீழ் பெற முடியும் என்ற கேஜ்ரிவாலின் கருத்தைத்தான் தனது வார்த்தை ஜாலங்கள் மூலம் மழுப்பிச் சோல்கிறார் யாதவ். எந்தத் தனியார்மயக் கொள்கைகள் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் தண்ணீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எல்லா வகையான கொள்ளைகளுக்கும் வழிவகுத்திருக்கிறதோ, அந்தத் தனியார்மயம் எளிய மனிதனின் நலனைக் காக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி.

அது மட்டுமல்ல, பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சொந்தமாக்குவதும், அவர்களது கொள்ளைக்கு நாட்டையே திறந்துவிடுவதும் சட்டபூர்மாகவே நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மறுகாலனியாக்க அடிமைத்தனமே சட்டபூர்வமாக்கப்பட்டு, அதற்கெதிராகக் குரல் கொடுப்பது தேசத்துரோக நடவடிக்கை என்று தண்டிக்கப்படும் இக்காலத்தில், நிலப்பறிப்பும், வாழ்வுரிமைப் பறிப்பும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமை பறிப்பும், கல்வி-மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் முதலாளிகள் அடிக்கும் கொள்ளையும் தலைவிரித்து ஆடும் இந்தக் காலத்தில், இவை எதைப் பற்றியும் பேசாமல், ஊழல் ஒழிப்பு மட்டுமே முக்கியப் பிரச்சினையென்று கூறுகிறது ஆம் ஆத்மி கட்சி.

அதுமட்டுமல்ல, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, ஒழுங்குமுறை ஆணையங்கள் என்ற பெயரில் அதிகார வர்க்கமும், தரகு முதலாளி வர்க்கமும் அரசு அதிகாரத்தை நேரடியாகவே கைப்பற்றிக் கொண்டு, வேண்டியவாறு கொள்கைகளை வகுத்துக் கொள்ளும் இன்றைய சூழலில், அவற்றைப் பற்றிக் கருத்து ஏதும் சொல்லாமல் குடியிருப்போர் கமிட்டிகளுக்கு அதிகாரம் வழங்குதல், அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயர்களில் மையமான பிரச்சினையை ஆம் ஆத்மி வேண்டுமென்றே திசை திருப்புகிறது.

002-aap-5காஷ்மீர் பிரச்சினை, தலித் மக்கள் மீதான அடக்குமுறை, இந்து மதவெறி, பாக். எதிர்ப்பு அரசியல் என்பன போன்று, ஒரு கொள்கை நிலை எடுத்துத் தெளிவாகப் பேசவேண்டிய பிரச்சினைகளில் கருத்தே கூறாமல் மவுனம் சாதிக்கிறார் கேஜ்ரிவால். மோடியைப் பற்றிக் கருத்து கேட்டால், “தனிநபர்களைப் பற்றிக் கருத்து கூறுவதில்லை” என்றொரு அபத்தமான பதிலைக் கூறி நழுவுகிறார். அதே நேரத்தில் தனது கூட்டங்களில் “வந்தேமாதரம், பாரத் மாதா கி ஜெ” என்று முழங்குகிறார். ஆம் ஆத்மிக்கு வாக்களித்தவர்களில் பாதிப்பேர் பிரதமர் பதவிக்கு மோடியை ஆதரிக்கிறார்கள் என்றும், பாக்.எதிர்ப்பு தேசவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் டில்லியில் நடத்தப்பட்ட ஒரு மாதிரி சர்வே கூறுகிறது.

கேஜ்ரிவாலுடைய மவுனத்தின் பொருள் என்ன? மோதிக் கொள்ளும் சித்தாந்தங்கள், வர்க்க நலன்கள் இவற்றில் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதிப்பவர்களும், தனக்கு ஒரு கொள்கை கிடையாது என்று கூறும் நபர்களும் ஆபத்தானவர்கள். டெல்லியில் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா, வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது அந்த கேள்விக்கு விடை காண வேண்டிய ஆம் ஆத்மி கட்சி, தனது முடிவுக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து மிகவும் தந்திரமாக நழுவிக்கொண்டது. மக்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பதாகக் கூறி, பரவலாக ஊர்க்கூட்டங்களை நடத்திக் கருத்துக் கேட்டு, தனது இந்தச்செயலையே மாபெரும் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கையாகவும் காட்டிக் கொண்டது.

பதவியேற்றவுடன் குடிதண்ணீர், மின்சாரம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதுடன், நட்டக்கணக்கு காட்டிவரும் டாடா மற்றும் அம்பானிக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய்யுமாறு, கணக்கு- தணிக்கை அதிகாரியை ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி ஆளும் வர்க்க ஊடகங்கள் கொதிப்படைந்து சாமியாடுகின்றன. இலவசக் குடிநீராகட்டும், மின்கட்டணக் குறைப்பாகட்டும் அவற்றுக்கான நிதியை அரசு தனது வரி வருவாயிலிருந்துதான் கொடுக்க வேண்டுமென்பதால் அரசின் நிதிச்சுமை நிச்சயம் அதிகரிக்கும்.

caption-002-aap-2எல்லோருக்கும் நல்லவராகவும், எல்லோருக்கும் எல்லாமாகவும் இருக்க ஆம் ஆத்மி அரசு விரும்புவதென்னவோ உண்மைதான். ஆனால், ஒரு வர்க்கத்திடமிருந்து எடுக்காமல் இன்னொரு வர்க்கத்துக்குக் கொடுக்க முடியாது. டாடா, அம்பானி போன்றோருடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்தால்தான் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எதையும் இலவசமாக மக்களுக்கு வழங்க முடியும். அதைச் செய்வதற்கான முயற்சியில் கேஜ்ரிவாலின் அரசு இறங்குமா? அவ்வாறு இறங்கும் என்று கற்பனை செய்துகொண்டால், ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம், நீதித்துறை, சர்வதேச நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த அரசமைப்பையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் சீரழிக்கும் ஊழலை மட்டும் ஒழித்துவிட்டால், சிறந்த அரசாளுமையை வழங்கிவிடலாம் என்று அவர் பரப்பி வரும் புனைகதையும், கேஜ்ரிவாலின் அரசும் அவர் கண் முன்னாலேயே நொறுங்கி விழும். முதற்பெரும் ஊழலே இந்த அரசமைப்பும் மறுகாலனியாக்க கொள்கையும்தான் என்ற உண்மை அம்பலமாகும்.
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________

  1. Corruption is the main problem in any society. Whatever engine(capitalism/communism) you use for your vehicle, if there is a leak in fuel tank, you cant reach the destination

    Vinavu should ask their Soviet friends, if corruption existed ? How it affected their day to day life…

    Can Vinavu put article on Argentina ? How subsidy bringing down the country…

    http://www.bloomberg.com/news/2014-01-23/argentina-s-peso-plunges-17-as-central-bank-scales-back-support.html

    This is a preview for India’s subsidy policy

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க