Monday, August 15, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு

வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு

-

மெரிக்காவின் சில்லறை வணிகத் துறையில் வேலை செய்யும் சுமார் 7,275 பேருக்கு 2014-ன் புத்தாண்டு, வேலை இழப்போடு விடிந்திருக்கிறது.

சாம்ஸ் கிளப்
சாம்ஸ் கிளப்

சென்ற டிசம்பர் மாதம் கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை பருவத்தில் சில்லறை விற்பனை நிறுவனங்களின் விற்பனை வருவாய் முந்தைய ஆண்டை விட 2.7 சதவீதம் வீழ்ச்சியடைந்து, $57.4 பில்லியன் மட்டுமே விற்பனை செய்ய முடிந்திருக்கிறது. உடனே விழித்துக் கொண்ட அந்நிறுவனங்களின் உயர் மட்ட அதிகாரிகள் தமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.

வால்மார்ட்டுக்குச் சொந்தமான சாம்ஸ் கிளப் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் வேலை செய்யும் 2,300 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போகிறது.  வேலையிழக்கப் போகும் பெரும்பான்மை ஊழியர்கள் மணிக் கூலிக்கு வேலை செய்பவர்களும், துணை மேலாளர் பதவி வகிப்பவர்களும் ஆவார்கள். இறைச்சி, மீன்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை விற்கும் பிரிவில் நிர்வாக மேலாளர்களில் பாதி பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.

இவர்கள் சாம்ஸ் கிளப் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களிலேயே காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் 3 மாதங்கள் வரை அதற்கான அவகாசம் வழங்கப்படும் என்றும், அதற்குள் பொருத்தமான வேலையில் அமர முடியா விட்டால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வால்மார்ட் தெரிவித்திருக்கிறது. தம்மிடம் வேலை செய்பவர்களுக்கு மறுபயிற்சி அளித்து புதிய காலி இடங்களில் நியமிக்கும் பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத லாப வேட்டைதான் வால்மார்ட்டை வழி நடத்தும் முதலாளித்துவ நடைமுறை.

ஜனவரி மாத ஆரம்பத்தில் மேசி’ஸ் என்ற சில்லறை விற்பனை பெரு நிறுவனம் 2,500 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு $10 கோடி (சுமார் ரூ 600 கோடி) சேமிக்கப் போவதாக மேசி கூறியதை அடுத்து, பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் விலை 7% அதிகரித்தது. 2,500 பேரின் வேலையை பறித்து தெருவில் நிறுத்தினாலும், தமக்கு லாபம் கிடைப்பதுதான் முக்கியம் என்பது பங்குச்சந்தை முதலாளிகளின் லாபவெறிக் கணக்கு.

மேசி'ஸ்
மேசி’ஸ்

மேலும், அமெரிக்காவின் மிகப் பழமையான சில்லறை விற்பனை சங்கிலித் தொடர் நிறுவனமான ஜே சி பென்னி 47 கடைகளை மூடி 5,500 பேரை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த வேலை நீக்கங்கள் மூலம் தனது லாப வீதத்தை உயர்த்திக் கொள்ளப் போவதாக ஜே சி பென்னி குறிப்பிட்டிருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்வாதாரங்களை பறித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் சுதந்திரம் முதலாளிகளுக்கும், எந்தத் தலையீடும் இல்லாமல் பட்டினி கிடக்கவோ, நோய் வந்து அவதிப்படவோ தொழிலாளர்களுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதுதான் தாராளவாத பொருளாதார சித்தாந்தத்தின் அடிப்படை.

இவ்வாறு வேலை இழந்தவர்களின் நிலையை மேலும் மேலும் மோசமாக்கும்படியான கொள்கைகளை அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் அதிகரித்து வருகின்றன.

2013 இறுதியில் 6 மாதங்களுக்கு மேல் வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களுக்கான அரசு உதவித் தொகையை நிறுத்தி, சுமார் 14 லட்சம் அமெரிக்கர்களை தெருவில் விட்டது அமெரிக்க அரசு. 2014-ல் இவ்வாறு உதவித் தொகை காலாவதியாகப் போகிறவர்களில் கூடுதலாக 49 லட்சம் பேர் சேர்ந்து விடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்தின் இந்த சாதனைப் பட்டியலை விரிவுபடுத்த தமது ஊழியர்களில் 7,275 பேரை வேலை தேடுவோர் வரிசையில் சேர்த்திருக்கின்றன வால்மார்ட், ஜே சி பென்னி, மேசீஸ், டார்கெட் போன்ற சில்லறை வணிக பெரு நிறுவனங்கள்.

மேலும் சியர்ஸ், ரீபக் நிறுவனம் 89 கடைகளை மூடி 2,400 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக இந்த மாதம் அறிவித்திருக்கிறது. மான்ட்கோமரி வார்ட் என்ற நிறுவனம் முழுவதுமாக இழுத்து மூடப்பட்டு 250 கடைகளில் வேலை செய்யும் 37,000 பேரை நட்டாற்றில் விடவிருப்பதாக சென்ற மாதம் அறிவித்திருந்தது.

அமெரிக்க தொழிலாளர் துறையின் அறிக்கையின்படி டிசம்பர் மாதத்தில் மொத்தம் 74,000 புதிய வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இயல்பான மக்கள் தொகை வளர்ச்சியின் படி வேலைச் சந்தையில் புதிதாக சேருபவர்களின் எண்ணிக்கையில் இது பாதிதான். எனவே வேலையில்லாதவர்களின் சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். மாறாக, வேலையில்லாதவர்களின் சதவீதம் 0.3 புள்ளிகள் குறைந்து 6.7 சதவீதமாகியிருக்கிறது. அமெரிக்காவின் முதலாளித்துவத்தால் வேலை கொடுக்க முடியாதவர்களில் பலர் வேலை தேடுவதை நிறுத்தி விட்டதால், வேலைச் சந்தையிலிருந்தும் அரசின் அதிகார பூர்வ கணக்கீடுகளிலிருந்தும் அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்றுதான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசு தனது நிதி நிலையை திட்டமிட்டு, முதலாளிகளின் விருப்பப்படி முறைப்படுத்திக் கொள்வதற்கும், தனியார் நிறுவனங்கள் தமது லாபக் கணக்கை மேம்படுத்திக் கொள்வதற்கு திட்டமிடவும் சுதந்திரமளிக்கும் இந்த அமைப்பில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தம் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் எந்த நேரமும் நடுத்தெருவில் நிறுத்தப்படுகிறார்கள்.

இத்தகைய அமெரிக்க சந்தைப் பொருளாதார மாதிரியில் செயல்படும் பன்னாட்டு சில்லறை வணிக பெருநிறுவனங்கள் வந்துதான் இந்தியாவில் வேலை வாய்ப்பை பெருக்கி இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்று மோசடி செய்கின்றனர் மன்மோகன் சிங், ப சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய ஆளும் வர்க்கங்கள்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க