Saturday, October 19, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா

சகாரா சுப்ரதா ராய்க்கு பயப்படும் பாரத மாதா

-

ந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான சகாரா குழும முதலாளி சுப்ரதா ராய் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். செவ்வாய்க் கிழமை (மார்ச் 4, 2014) கைது செய்யப்பட்டவர் அடுத்த விசாரணை தேதியான மார்ச் 11 வரை திகார் சிறையில் வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் அழைத்துச் செல்லப்படும் சுப்ரதா ராய்
உச்சநீதிமன்றத்தில் அழைத்துச் செல்லப்படும் சுப்ரதா ராய்

“திகார் சிறையில் சுப்ரதா ராய் மற்ற கைதிகளைப் போலவே தரையில் படுத்து தூங்குவார், சிறை உணவையே சாப்பிடுவார்” என்று அலறியது ஒரு தலைப்புச் செய்தி. ‘கிரிமினல்’களும், ‘மோசடி பேர்வழி’களும் வைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையில் சுப்ரதா ராய் போன்ற தொழிலதிபரை, ‘தேச பக்த’ரை, ‘பாசமிக்க குடும்ப’த் தலைவரை, தாயை ‘நேசி’க்கும் மகனை அடைத்து வைக்க நேர்ந்ததற்கு என்ன காரணம் என்று பலரும் சாமியாடுகின்றனர். இந்த கேள்விகளின் நியாயத்தை உணர்ந்துள்ள உச்சநீதிமன்றம் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளது.

முதலாவதாக, “சந்தையின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது பொருளாதார வளர்ச்சிக்கும், தேசிய நலனுக்கும் இன்றியமையாதது. சந்தையை முறைகேடாக பயன்படுத்தும் நிதித் துறை குற்றங்கள் நாட்டின் பொருளாதார அமைப்பையே கேள்விக்குள்ளாகி, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சொத்து ஏற்றத் தாழ்வை உருவாக்கி விடுகின்றன.” என்கிறது நீதிமன்றம்.

சமூக ஏற்றத் தாழ்வில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பல நூறு கோடி சொத்துக்களை கொண்ட தில்லை கோயிலை சில நூறு தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்த உச்சநீதிமன்றம் முதலாளிகளின் பொருளாதார அமைப்பை பாதுகாப்பதற்காக ஏழைகளின் நலனை எண்ணி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறது.

சுப்ரதா ராய்
சொல்பேச்சு கேட்காமல் அடம் பிடித்ததற்காகத்தான் சுப்ரதா ராய்க்கு ஒரு செல்லக் குட்டு

அப்படியே அவர்கள் சொல்லும் புனிதமான சந்தையின் செயல்பாட்டு அடிப்படையில் பார்த்தாலும் சந்தை முறைகேடுகளுக்காக தண்டிக்கப்பட வேண்டியவர்களின் வரிசையில் ரிலையன்ஸ் அம்பானியிலிருந்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் வரை பெரிய தரகு முதலாளிகளின் பட்டியலே உள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்தின் உள்ளூர் கந்து வட்டிக்காரனான சுப்ரதா ராய் மட்டும் தண்டிக்கப்படுவதற்கு காரணம், முதலாளிகள் நாட்டையும் மக்களின் சேமிப்பையும் கொள்ளை அடிப்பதற்காக தமக்குள் வகுத்துக் கொண்டிருக்கும் பங்குச் சந்தை விதிகளை அவர் மதிக்காமல் நடந்து கொண்டதுதான். அதாவது திருடர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தத்தை ஒரு திருடன் மீறினால் திருட்டு சமூகம் அவனை கண்டிக்கும் அல்லவா?

இருந்தாலும் உடனடி காரணமாக தன் சொல்பேச்சு கேட்காமல் அடம் பிடித்ததற்காகத்தான் சுப்ரதா ராய்க்கு ஒரு செல்லக் குட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

“இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது, நமது நீதி அமைப்பிலும், சட்டரீதியிலான ஆட்சியின் மாண்பையும் அசைத்துப் பார்க்கிறது. அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இந்த நீதிமன்றத்தின் கௌரவம் அடங்கியிருக்கிறது. இதன் மூலம்தான் இந்நாட்டு மக்களுக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பராமரிக்க முடியும்”. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்த அனில் அம்பானி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி முன் தோன்றி, கேட்ட கேள்விக்கெல்லாம் “மறந்து விட்டது”  என்று சமத்தாக பதில் சொன்னது போல சுப்ரதாவும் ஒருவேளை 26-ம் தேதியே ஆஜராகியிருந்தால் ஆளும் வர்க்க சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருக்கும். அவர்களின் நலன்களுக்கு காவலாக இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கோபம் வந்திருக்காது.

ஆனால், சுப்ரதா ராயின் ‘நேர்மை’ அதற்கெல்லாம் அப்பாற்பட்டது. மோசடி செய்வதிலும் சரி, அதிலிருந்து தப்பிப்பதிலும் சரி நேர்மை, தேசபக்தி, குடும்ப பாசம் என்று இந்து ஞான மரபின் விழுமியங்களை தவறாமல் கடைபிடிப்பவர் அவர். “நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்ப்பதற்கு வழக்கமாக (முதலாளிகள்) செய்வது போல உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் போய் படுத்துக் கொள்ளும்படி பலர் எனக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், அது போன்ற டிராமாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை” என்று தனது நேர்மையை பறை சாற்றியிருந்தார்.

மாறாக, ஒரே நேரத்தில் லட்சம் பேரை ஜனகணமன பாட வைத்த கின்னஸ் சாதனையை பாரதமாதாவின் திருவடியில் சமர்ப்பிப்பது, அதை நாட்டுக்கு அறியத் தருவதற்காக அனைத்து தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிடுவது என்று விரிவான திரைக்கதையுடன் கூடிய நாடகங்களை அரங்கேற்றுபவர் அவர்.

சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேசன், சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 3 கோடி மக்களிடம் திரட்டியதாக சொல்லப்பட்ட ரூ 19,000 கோடி நிதியை 15% வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி 2010 நவம்பரில் செபி (இந்திய பங்குச் சந்தை வாரியம்) உத்தரவிட்டது. முதலாளிகளின் நலன்களை பாதுகாக்க செபி வகுத்திருந்த சட்ட திட்டங்களுக்கு உட்படாமல் சகாராவின் நிதி திரட்டல் நடத்தப்பட்டதுதான் செபியின் கோபத்தை தூண்டியிருந்தது.

சுப்ரதா ராய்
ஒரே நேரத்தில் லட்சம் பேரை ஜனகணமன பாட வைத்த கின்னஸ் சாதனையை பாரதமாதாவின் திருவடியில் சமர்ப்பித்த சுப்ரதா ராய்

இதை எதிர்த்து சகாரா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்த போது சகாரா ரூ. 22,500 கோடியை செபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்தப் பணத்தை செபி முதலீட்டாளர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னது உச்ச நீதிமன்றம். இதில் முதல் தவணையாக ரூ. 5,210 கோடியை செபியிடம் சகாரா செலுத்தியது. இரண்டு மாதங்கள் கழித்து, முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர்களுக்கு தானே நேரடியாகப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் இன்னும் ரூ. 2,620 கோடி மட்டுமே பாக்கியிருக்கிறது என்றும் கூறும் சகாராவின் முழுப் பக்க விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன.

செபி அமைப்பு, தான் கொடுத்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க முயற்சிக்கவேயில்லை என்று சகாரா குற்றம் சாட்டியது. தேசத்துக்கு சேவை செய்து வரும் சகாரா குழுமத்தின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் செபி அதிகாரிகள் வேண்டுமென்றே செயல்படுவதாக வழக்கம் போல பாரதமாதா படத்துடன் கூடிய முழுப்பக்க விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. ஆர்.எஸ்.எஸ்க்கு அடுத்தபடியாக பாரதமாதாவை அதிகம் பயன்படுத்தியது சகாரா குழுமம் மட்டும்தான்.

பணம் கேட்டு வெறும் 3,500 கோரிக்கைகள் மட்டுமே வந்தததாகவும் அவற்றில் 560 மட்டுமே உண்மையானவை என்றும் செபி கூறி விட்டது. அதாவது பணம் போட்டதாக கூறப்படும் பல கோடி பேருக்கு தமது பணத்தை திரும்பப் பெறும் ‘அக்கறை’யே இல்லை.

சரி, சகாரா தானே திருப்பிக் கொடுத்த ரூ 19,000 கோடிக்கான ரசீது ஆதாரங்களை காட்டச் சொல்லி கேட்டால் 127 லாரிகளில், 32,000 அலுமினிய பெட்டிகளில் ஆவணங்களை நிரப்பிக் கொண்டு வந்து செபி அலுவலகத்தில் இறக்கியது. மும்பையில் செபி அலுவலகம் அமைந்திருந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடியே ஏற்பட்டு விட்டதாம். அந்த ஆவணங்களிலிருந்து இயைபிலா அடிப்படையில் (ரேண்டமாக) 20,000 முதலீட்டாளர்களுக்கு தகவல் அனுப்பியதில் 68 பேர்தான் பதில் போட்டிருக்கின்றனர். முதலீட்டாளர்கள் பட்டியலில் ஒரே பெயர்கள் பல முறை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன, உதாரணமாக கலாவதி என்ற பெயர் மட்டும் 6,000 முறை வருகிறது.

“எங்களிடம் பணம் போட்டவர்கள் எல்லாம் வீடு, வாசல் இல்லாத மக்கள். அவர்களுக்கு செபி போட்ட கடிதமே போய் சேர்ந்திருக்காது. ஒரு ரிக்சா தொழிலாளி பணத்தை திரும்ப பெற்ற பிறகு ரூ 2-க்கு தபால்தலை வாங்கி செபிக்கு எழுதப் போவதில்லை.” என்று அடித்து விட்டிருக்கிறார் சுப்ரதா ராய். அதாவது, சுமார் 3 கோடி வீடற்ற ஏழை மக்களிடமிருந்து ரூ 19,000 கோடி திரட்டினாராம். அதைத் திருப்பியும் கொடுத்து விட்டாராம்.

பங்குச் சந்தையிலும் வங்கிக் கடன்களிலும் வரி தள்ளுபடிகளிலும் ‘சட்டப்படி’ மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் முதலாளிகளுக்கு மத்தியில், பணம் வசூலிக்காமலேயே நிதி மோசடி செய்திருக்கிறார் சுப்ரதா ராய்.

சகாரா போர்ஸ் இந்தியா
சகாரா போர்ஸ் இந்தியா – சுப்ரதா ராய், விஜய் மல்லையாவுடன்

மேலும், தனது நிறுவனத்தின் 37 ஆண்டு கால வரலாற்றில் 137 லட்சம் கோடி பணத்தை திருப்பிக் கொடுத்திருப்பதாக நீதிமன்றத்தில் கணக்கு சொல்லியிருக்கிறார். ‘இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை பங்குச் சந்தைக்கு இழுத்து வந்து நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி’ என்று குரு படத்தில் மணிரத்தினம் காட்டியது போல , 37 ஆண்டுகளில் 8 கோடி ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்ததாக வீரவசனம் பேசினார் சுப்ரதா ராய். உண்மையில் ஏழைகளின் பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து பண முதலைகளின் கருப்புப் பணத்தை புழங்க விடும் திருப்பணியைத்தான் சுப்ரதா ராய் செய்து வந்திருக்கிறார்.

மேலும் சகாரா நிறுவனம், செபியிடம் ஒப்படைத்த சொத்து ஆவணங்களில் பலவற்றின் மதிப்பு மிகையாக மதிப்பிடப்பட்டிருந்தது. மும்பையில் இருக்கும் அம்பி பள்ளத்தாக்கின் மதிப்பாக குறிப்பிட்டிருந்த ரூ 10,000 கோடி, சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம். மும்பை வெர்சோவாவில் ரூ 118 கோடிக்கு வாங்கிய நிலத்தின் மதிப்பை ரூ 20,000 கோடி என்று குறிப்பிட்டிருக்கிறது சகாரா. இன்னும் 67 பிளாட்டுகளின் மதிப்பு, 2012-13ல் வாங்கிய விலையை விட 16 மடங்கு அதிகமாக காட்டப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பெரிய மோசடி பேர்வழியை உடனடியாக தேடிப்பிடித்து என்கவுன்டர் செய்து விட வேண்டும் என்று தேசபக்த ஊடகங்கள் கொதிக்கவில்லை. இந்த மோசடிகளுக்கான ஆதாரங்கள் தன் முன்னே வைக்கப்பட்டும் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்துவதற்காக அவருக்கு தூக்குத் தண்டனையும் விதித்து விடவில்லை உச்சநீதிமன்றம்.

ஏனென்றால் தேசபக்தியிலும், தேசத் தொண்டிலும் அசைக்க முடியாத ரிக்கார்ட் வைத்திருக்கிறார் சுப்ரதா ராய். சென்ற ஆண்டு டிசம்பர் வரை இந்திய கிரிக்கெட் அணியின் புரவலர் அந்தஸ்தை குத்தகை எடுத்திருந்ததன் மூலம் தேசத்தின் கூட்டு மனசாட்சியையும்  குத்தகைக்கு எடுத்திருந்தார். சகாரா ஃபோர்ஸ் இந்தியா கார் பந்தய அணியை பெங்களூரு பிளேபாய் விஜய் மல்லையாவுடன் இணைந்து பராமரிப்பவராகவும் திகழ்கிறார் சுப்ரதா ராய். ஆர்.எஸ்.எஸ்சின் தேசபக்திக்கு ஆதாரமாக முன்வைக்கப்படும் சேவைகளைப் போல பாரதத் தாயின் உண்மையான புதல்வனாக, கார்கில் தியாகி குடும்பங்களுக்கு உதவி, மும்பை பயங்கரவாத தாக்குதல் தியாகிகளுக்கு ஆறுதல், வெள்ளம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று தான் செய்த சேவைகளின் பட்டியலையும் வைத்திருக்கிறார்.

சகாரா கிரிக்கெட்
சகாராவின் ‘தேச’ப்பற்று இந்திய கிரிக்கெட் அணியின் சட்டையில்

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சுப்ரதா ராயும் பிற சகாரா இயக்குனர்களும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மட்டும் ஒரு ‘கடுமையான’ உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

சுப்ரதா ராய் இந்த துக்கடா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கூட கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லாதவர். சகாராஸ்ரீ என்று அழைக்கப்படும் அவர் லக்னோவின் குறுநில மன்னராக வாழ்பவர்; உத்தர பிரதேசத்தின் சமஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் அரசை தன் பைக்குள் வைத்திருப்பவர்.

மார்ச் 2012-ல் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மூத்த அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், மற்றும் தொழில்துறை முதலாளிகள் லக்னோவில் உள்ள சுப்ரதா ராயின் சகாரா ஷகர் பண்ணையில் கொண்டாட்டத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு முழுவதும் வெளிநாட்டு மது வகைகள் வெள்ளமாக ஓடின. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தமது தொழில்முறை அரட்டைகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். பல கட்சித் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் சகாரா ஷகரின் பசும்புல் வெளிகளில் மட்டையாகியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் சகாரா ஷகருக்கு சொந்தமான வெள்ளை நிற மெர்சிடஸ் கார்களில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ‘நம்ம வீட்டில் தண்ணி குடித்த லக்னோ அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நம்மை கைது செய்து விடுவார்களா என்ன’ என்று அவர் தெனாவெட்டாக யோசித்திருக்கலாம்.

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே கண்டு நடுங்கும் நாட்டின் விலை உயர்ந்த ராம் ஜெத்மலானி, ஆர்யமா சுந்தரம் போன்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை தன் சார்பில் வாதாட அமர்த்தியிருக்கிறார்.

சகாரா திருமணம்
ரூ 500 கோடியில் நடத்தப்பட்ட சகாரா திருமணத்தின் போது ஜொலிக்கும் சகாரா ஷகர்.

2004-ம் ஆண்டு லக்னோவில் ரூ 500 கோடி செலவில், அமிதாப் பச்சன், ஷாரூக் கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களும், சச்சின் டெண்டூல்கர் முதலான கிரிக்கெட் தேசபக்தர்களும், வாஜ்பாய் தலைமையிலான அரசியல் தலைவர்களும் உட்பட 10,000 பேர் கலந்து கொண்ட அவரது இரண்டு மகன்களின் திருமண விழாவின் போது ராம்ஜெத்மலானியும், பா.ஜ.கவின் ரவிசங்கர் பிரசாத்தும்தான் அது தொடர்பான சட்ட சிக்கல்களை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த திருமணத்தில் மெழுகுவர்த்தி வாங்கக் கூட ஒன்றரைக் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம். விருந்தினர்கள் தனி விமானத்தில் லக்னோவுக்கு அழைதுத்து வரப்பட்டார்கள்.

ராம்ஜெத்மலானி உருவத்தில் சட்டமும், அகிலேஷ் யாதவ் வடிவத்தில் அரசு நிர்வாகமும், கிரிக்கெட்-கார் பந்தயம்-தேசிய கீதம் வடிவத்தில் தேசத்தின் கூட்டு மனசாட்சியும் தன் பக்கம் இருக்கையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு டிமிக்கி கொடுத்து விட முடிவு செய்தார். ராம்ஜெத்மலானியின் ஆலோசனைப்படி 92 வயதான தனது அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார் என்று நீதிமன்றத்துக்கு லீவ் லெட்டர் அனுப்பினார். அம்மாவின் உடல்நிலை குறித்தும் மகன் அம்மாவின் அருகில் உட்கார்ந்திருப்பதற்கான தேவை குறித்தும் சான்றிதழ் கொடுப்பதற்கு சகாராவுக்கு சொந்தமான லக்னோவின் மேட்டுக்குடி மருத்துவமனையின் இருதய பிரிவு தலைமை மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் மன்சூர் ஹசனும் இருக்கிறார்.

சகாரா மருத்துவமனை
சகாரா மருத்துவமனை

ஆனால், நீதிமன்ற ஊழியர்களிடமிருந்து பாட்டிக்கு உடம்பு  சரியில்லை என்று மருத்துவ சான்றிதழ்களுடன் பல லீவு லெட்டர்களை பார்த்திருக்கக் கூடிய நீதிபதிகள் தமக்கு இழைக்கப்பட்ட ‘அவமான’த்தை தாங்க முடியாமல், சுப்ரதா ராய் மீது பிணை வாங்க முடியாத கைது ஆணை பிறப்பித்து விட்டார்கள். “அம்மாவின் அருகில் உட்கார்ந்திருக்கும் அந்த மகன் நகர முடியாமல் அவரது கையை தாய் பிடித்திருக்கிறார்” என்ற ராம்ஜெத்மலானியின் சென்டிமென்டும் எடுபடவில்லை.

சுப்ரதா ராயை கைது செய்ய சொல்லும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உ.பி போலீசாருக்கு அனுப்பப்படுகிறது. லக்னோ மாஜிஸ்திரேட்டிடம் வாரண்ட் வாங்கிக் கொண்டு 370 ஏக்கரில் அமைந்திருக்கும் சுப்ரதா ராயின் லக்னோ வசிப்பிடமான சகாரா ஷகருக்குப் போய் 2 மணி நேரம் தேடியதாக சொல்கிறார்கள். மருத்துவர்களால் சூழப்பட்ட 92 வயதான அவரது தாய் மட்டும்தான் வீட்டில் இருந்தாராம். கொலைக் குற்றவாளிகளை பிடிப்பதற்கு விமானத்தில் பறந்து சென்று அவர்கள் ரயிலில் ஊர் போய்ச் சேருவதற்கு முன்பு கைது செய்து விடும் சென்னை சி.பி.சி.ஐ.டி போன்ற திறமை அவர்களுக்கு இல்லை போலிருக்கிறது.

உண்மையில் சகாரா ஷகருக்குள் போலீஸ் அதிகாரிகளுக்கு பலத்த விருந்துபச்சாரம் நடந்திருக்கிறது. தானே சரணடைந்து விட்டதாக அறிவிக்கும்படியும் சிறையில் அடைப்பு வேண்டாம், வீட்டுக் கைதியாக இருப்பதாக சொல்லி விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார் சுப்ரதா.

சகாரா ஷகருக்கு வெளியே லக்னோவின் சிரிப்பு போலீஸ்
சகாரா ஷகருக்கு வெளியே சுப்ரதா ராயின் கைதை அறிவிக்கும் லக்னோவின்  போலீஸ்

இதைத் தொடர்ந்து திரைப்படம் சென்டிமென்ட் காட்சிகளுக்குத் திரும்பியது.

“மார்ச் 3-ம் தேதி வரை என் அம்மாவுடன் வாழ அனுமதிக்கும் வகையில் வீட்டுச் சிறையில் வைக்கும்படி நீதிபதிகளை கைகூப்பி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” உருக்கமான அறிக்கை ஒன்றை சுப்ரதா வெளியிட்டார். “என்னை பழி வாங்க நினைக்கும் பல ஊடகங்கள் வேண்டுமென்றே கட்டுக் கதைகளை பரப்பி வருகின்றனர். நான் ஊரில் இல்லாத நேரத்தில் என் அம்மாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்” என்று தமிழ்/இந்தி சினிமா கதாநாயகர்கள் போல டயலாக் பேசினார்.

டெல்லி போலீசின் அழுத்தம் காரணமாக, கடைசியில் மாலை 5 மணிக்கு மேல் மாளிகையிலிருந்து சுப்ரதாவுடன் உத்தர பிரதேச போலீஸ் வெளியேறுகிறது. சொகுசு கார்களின் அணிவகுப்பில் வந்து இறங்கிய சுப்ரதா ராயை காவலில் எடுப்பதற்கு டெல்லி போலீஸ் அனுமதி கேட்கிறது. கொடுக்கலாமா என்று நீதிபதி அரசு சிறப்பு வழக்கறிஞரிடம் கேட்க, அவர் பதில் சொல்ல முடியாமல் திகைத்து நெஞ்சு வலிக்கிறது என்று உட்கார்ந்து விடுகிறார். லக்னோ போலீசின் காவலில் வைக்க உத்தரவிட்டு தனது பொறுப்பை கைகழுவுகிறார் நீதிபதி. போலீஸ் புடைசூழ குக்ரைல் என்ற சுற்றுலா தலத்தில் உள்ள வனத்துறை விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுகிறார் சகாராஸ்ரீ.

சுப்ரதா ராய் மனைவி சுவப்னாவுடன்
சுப்ரதா ராய் மனைவி சுவப்னாவுடன்

தான் கைது செய்யப்பட்டிருப்பது தனது தேசம் கொடுத்திருக்கும் மிக உயர்ந்த கௌரவம் என்று அடுத்த பஞ்ச் டயலாகை அடித்து விட்டார். “நான் தலைமறைவாகியிருக்கிறேன என்ற செய்திகள் என்னையே என்னை வெறுக்க வைத்திருக்கின்றன. இந்த அளவிலான மன உளைச்சலையும், அவமானத்தையும் தாங்க முடியவில்லை. எதிர்மறை மனம் படைத்த, உணர்ச்சிரீதியாக முடங்கிய சில ஊடகவியலாளர்களை பார்த்து நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.” என்று உணர்ச்சிபூர்வமாக உருகினார்.

4-ம் தேதி டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அவர் காரில் அழைத்து வரப்படுகிறார். “நீதி கருணையோடு வழங்கப்பட வேண்டும்” என்று ராம் ஜெத்மலானி வாதாடினார்.

பெரும்பான்மை வைப்புதாரர்களுக்கு பணம் கொடுத்து விட்டதாக சகாரா கூறுவது பொய் என்றும் சகாரா சமர்ப்பித்த ஆவணங்களே, முதலீட்டாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் இருக்கிறார்களா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்றும் இது தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் அனைவரும் பெரும்பான்மை முதலீட்டாளர்கள் உண்மையில் இல்லவே இல்லை என்று சந்தேகிப்பதாகவும் சொன்ன நீதிபதிகள், ஒன்றரை ஆண்டுகளாக சகாரா குழுமம் தம்மை ஏமாற்றி வருவதாகவும் அறிவித்தனர்.

சுப்ரதோ ராயையும் சகாராவின் இன்னும் இரண்டு இயக்குனர்களான அசோக் ராய் சவுத்ரி, ரவிசங்கர் தூபே ஆகியோரையும் சிறைக்கு அனுப்பியிருக்கின்றனர். நான்காவது இயக்குனரான வந்தனா பார்கவே வெளியில் இருந்து, நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தயாரித்து வழங்கும் பணிகளை ஒருங்கிணைக்க அனுமதித்திருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளாக அடுக்கடுக்காக பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தை ஏமாற்றியதாக சகாரா முதலாளிகளை குற்றம் சாட்டினாலும், 11-ம் தேதிக்கு முன்னதாகவே திருப்திகரமான மாற்றுத் திட்டத்தை சமர்ப்பித்து விட்டால் சுப்ரதா முதலானோரை பிணையில் விடுவதையும் பரிசீலிப்பதாக ஆறுதலும் கூறியிருக்கிறது.

சுப்ரதா ராய் முகத்தில் மை
மனோஜ் சர்மா என்ற குவாலியரைச் சேர்ந்த சுயமரியாதை உள்ள வழக்கறிஞர், சுப்ரதா ராயின் கறுப்பு டை, வெள்ளை சட்டையின் மீது மை வீசியிருக்கிறார்.

1970-களின் இறுதியில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் ஒரு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் தெருத் தெருவாக  பிஸ்கெட், காரச்சேவு வினியோகம் செய்யும் வேலை செய்து கொண்டிருந்த சுப்ரதா ராயின் இத்தகைய பிரமிக்கத்தக்க முன்னேற்றம் நவீன இந்தியக் கனவின் மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். எளிய சீட்டு கம்பெனியில் வாழ்வை ஆரம்பித்த சுப்ரதா ராயின் சகாரா குழுமத்தின் இப்போதைய சொத்து மதிப்பு ரூ 70,000 கோடியிலிருந்து ரூ 1.5 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று பல்வேறு மதிப்பீடுகள் சொல்கின்றன. 12 லட்சம் ஊழியர்கள், 8 கோடி முதலீட்டாளர்கள் என்று பிரம்மாண்டமான எண்களை அள்ளி விடுகிறது சகாராவின் இணையதளம். அந்த குழுமத்தில் 4,800 நிறுவனங்கள் உள்ளனவாம். லண்டனில் உள்ள குரோஸ்வேனர் பேலஸ் ஹோட்டல், நியூயார்க்கின் மன்ஹாட்டன் பிளாசா ஹோட்டல் பூனா வாரியர்ஸ் ஐ.பி.எல் அணி மற்றும் சகாரா சமய என்ற பெயரில் இந்தியிலும், பிற இந்திய மொழிகள் 24-லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார் சுப்ரதா. இன்னும் சகாரா ஃபில்மி சேனல், மற்றும் நாடு முழுவதும் 36,000 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்.

அத்தகைய பெருமை வாய்ந்த சுப்ரதா ராய் உச்சநீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது, காமன்வெல்த் ஊழல் புகழ் சுரேஷ் கல்மாடி மீது செருப்பு வீசிய மனோஜ் சர்மா என்ற குவாலியரைச் சேர்ந்த சுயமரியாதை உள்ள வழக்கறிஞர், சுப்ரதா ராயின் கறுப்பு டை, வெள்ளை சட்டையின் மீது மை வீசியிருக்கிறார். முகத்தில் வழியும் மையையும் தனது தொப்பியில் சொருகிய சிறகாக கருதி பெருமையாக நகர்ந்திருக்கிறார் சுப்ரதா ராய். ஒவ்வொரு நாளும் தானும் தன் சக முதலாளிகளும் இந்திய மக்களின் முகத்தின் மீது ஊற்றும் மைக்கு முன் இது ஒரு மேட்டரா என்று அவர் நினைத்திருக்கலாம்.

மை வீசிய மனோஜ் சர்மாவின் செயலை தானாகவே முன் வந்து விசாரித்த நீதிபதி லோதா தலைமையிலான பெஞ்சு அவரை 11-ம் தேதி வரை திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருக்கிறது. சிறைக்குப் போன சுப்ரதா ராய்க்கோ, வயதானவர் என்ற காரணத்தை முன்னிட்டு மரக்கட்டிலும், போர்வைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போக என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று நாம் அறியவே முடியாது.

சகாரா ஸ்ரீஜி என்று அழைக்கப்படும் சுப்ரதா ராய் சிறைக்குள் போயிருக்கிறார். இதனால் அவரது கொள்ளைக் கூட்ட தொழில் சாம்ராஜ்ஜியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப் போவதில்லை. ஒரு மாநிலத்தின் கட்சி செல்வாக்கை வைத்தே சொத்து குவிப்பை வழக்கை ஜெயலலிதா கேலிக்குரியதாக்கியிருக்கும் போது, நாடு முழுவதும் கட்சிகள், போலீசு, நீதிமன்றங்கள், விளையாட்டு, தொழில்கள் என்று அனைத்தையும் சட்டைப் பையில் வைத்திருக்கும் சுப்ரதா ராயை என்ன செய்து விட முடியும்?

இந்த சமூக அமைப்பு தூக்கி எறியப்படாத வரை சுப்ரதா ராய் போன்ற திமிங்கலங்களை ஒன்றும் செய்ய முடியாது.

–    அப்துல்.

மேலும் படிக்க

 1. ஒரு மாநிலத்தின் கட்சி செல்வாக்கை வைத்தே சொத்து குவிப்பை வழக்கை ஜெயலலிதா கேலிக்குரியதாக்கியிருக்கும் போது, நாடு முழுவதும் கட்சிகள், போலீசு, நீதிமன்றங்கள், விளையாட்டு, தொழில்கள் என்று அனைத்தையும் சட்டைப் பையில் வைத்திருக்கும் சுப்ரதா ராயின் தலை முடியில் ஒன்றைக்கூட என்ன செய்து விட முடியும்?

  • என்ன செய்ய முடியும்?
   வேண்டுமானால்,சுப்ரதா ராயின் மயிரை பிடுங்கி,பாரதமாதாவுக்கு
   இடிமயிர் செய்து தரலாம்…மிச்சம் மீதி மயிர் இருந்தால்,பீனல் கோடு அவுறாமல் இருக்க……

 2. எந்த சமுக அமைப்ப எங்க துக்கி எறிய போறிங்க? யாரு துக்கி எறிய போறா?

  உங்களால முடியுமா?

  இந்த சமுக அமைப்பில் தான் நீங்கள் இயங்கி கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் மறந்து விட வேண்டாம்.

  சமுகத்தை மாற்ற வேண்டும் என்றால் சமுகத்தில் உங்கள் முகத்தை காண்பியுங்கள்.

  இன்றைய தேதிக்கு உங்களை இந்த தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்?

  மாற்ற முடியும் மாற்ற முடிவதற்கான கருத்தாற்றல் உங்களிடம் இருக்கிறதென்றால்

  தேர்தல் அரசியலில் நுழைய எது உங்களுக்கு தடை?

  தேர்தல் அரசியல் சாக்கடை என்று சாக்கு சொல்ல வேண்டாம்?

  தேர்தல் அரசியலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் வெரி சாரி ஜெண்டில்மேன்ஸ்

  உங்களால் எதுவும் முடியாது கண்டிப்பாக. அரசியல் அதிகாரத்தைப் பெற்ற பின்பே

  நம்மால் எதையும் சாதிக்க முடியும். அதுவரை நீங்களும் ஆம் ஆத்மி கோஷ்டிதான். போராட

  மட்டுமே தெரிந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • ஆம் ஆத்மி கோஷ்டி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று என்னத்தை கிழித்தார்கள்…….

   • அதைத்தான் நானும் உங்களுக்கு சொல்கிறேன்.

    தேர்தல் அரசியலலில் இல்லாமல்

    உங்களாளும் ஒன்றும் ————– முடியாது.

    • தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று என்னத்தை கிழித்தார்கள்……

     • கிழிக்க முடியாததற்கு காரணம் திறமையின்மையே தவிர தேர்தல் அரசியல் அல்ல.

      நீங்கள் தேர்தல் அரசியலை விரும்பாததன் பிண்ணனியும் திறமையின்மையோ?

  • //இந்த சமூக அமைப்பு தூக்கி எறியப்படாத வரை சுப்ரதா ராய் போன்ற திமிங்கலங்களை ஒன்றும் செய்ய முடியாது.//

   They want absolute power and then they will change the system and deliver justice.
   They dont want being answerable to people through election. Why would they? After all these people have solution for everything. You just have to trust them and give them power, they will take very good care of you..

   If you have doubt ask North koreans…

 3. உச்ச நீதிமன்றம் அப்பப்போ இப்படி ஏதாவது செய்து தனது மாண்பு என்ற மாயையைக் காப்பாற்றிக்கொள்ள மக்களை ஏய்க்கும்.ராய் அவரது மகன்களின் திருமணத்தின் போது அடித்த கொட்டம் ஏழை மக்களுக்கு அவர்கள் ஏற்படுத்திய மறக்கமுடியாத அவமானம்.அவர்களுடைய பித்தலாட்டங்களுக்காக மக்கள் காறித் துப்பிய அடையாளம் தான் இந்த கருப்பு மை அடையாளம்.அந்த வழக்குரைஞரை உச்ச நீதிமன்றம் ரொம்பவும் கடிந்துகொண்டு சிறையில் தள்ளியிருக்கிறது.தேசீயத் திருடர்கள் கௌரவமாக நடத்தப் படவேண்டும் என்பதுதான் அதன் கருத்து.

 4. //தேர்தல் அரசியலில் நுழைய எது உங்களுக்கு தடை?

  தேர்தல் அரசியல் சாக்கடை என்று சாக்கு சொல்ல வேண்டாம்?

  தேர்தல் அரசியலில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் வெரி சாரி ஜெண்டில்மேன்ஸ்// Gentleman what is Election gentleman?

  • எனக்கு தெரியல ஜென்டில்மேன்..

   ஆனா இங்க தேர்தல்ல வெற்றி பெற்றால்தான் அதிகாரத்தைப் பெற முடியும்.

   அதிகாரம் கையில் இருந்தாதான் ஒடுக்கப்பட்டவர்கள், உழைப்பாளிகளுக்கான உரிமைகளை

   வென்றெடுக்க முடியும். வேறு வழி முறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.

   ஏற்றுக் கொள்கிறேன்.

 5. ஆளும் வர்க்கங்களால் உருட்டி திரட்டப்பட்ட பார்ப்பன பாசிசத்தின் கைக் கூலியான உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்த பகல் கொள்ளையன் சுப்ரதாராய் என்ற கேடியை தண்டிக்க முடியாது என்பதையும்,
  மக்கள் நீதிமன்றங்கள் மட்டும் தான், உண்மையான நேர்மையான விசாரணையை நடத்தி தண்டனையையும் வழங்கும் என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க