Sunday, April 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் 17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!

17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!!

-

கொள்ளையன்டன் பத்திரங்களை விற்று திரட்டிய ரூ 17,700 கோடி நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சஹாராவின் சார்பாக ‘உணர்ச்சிபூர்வமாக சொல்கிறோம்’ என்ற தலைப்புடன் ஆங்கில நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டிருந்தன. (விளம்பரத்தை பார்க்க இங்கே அழுத்தவும்)

சுப்ரதோ ராயால் 1978-ல் தொடங்கப்பட்ட சஹாரா உத்தர பிரதேச கிராம மக்களிடம் சிறு முதலீடுகளை திரட்டுவதன் மூலம் தனது வியாபரத்தை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கூட சேமிப்பு வாங்கப்பட்ட இந்தத் திட்டம் 4 கோடி மக்களை ஈர்த்தது. இந்த அடித்தளத்தை பயன்படுத்தி சுப்ரதோ ராய், சஹாராவை ஒரு உலகளாவிய நிறுவனமாக மாற்றினார்.

  • சஹாரா நிறுவனம் நாடெங்கிலும் மேல்தட்டு குடியிருப்பு நகரீயங்களை கட்டி வருகிறது.
  • பார்மூலா ஒன் கார் பந்தய அணி ஒன்றிற்கு நிதி ஆதரவு அளிக்கிறது.
  • இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியின் முதன்மை வணிக ஆதரவாளராக செயல்படுகிறது.
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் மன்ஹாட்டனின் பிளாசா ஹோட்டலை விலைக்கு வாங்கியது
  • ஆகஸ்ட் மாதம் சில்லறை விற்பனை துறையில் நுழைந்தது.

‘சஹாரா இந்தியா – நவீன இந்தியாவின் பன்னாட்டு முகமாக விளங்குகிறது’ என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல். தேசிய கிரிக்கெட் அணியை ஆதரிக்கும் ‘நாட்டுப் பற்று’ மிக்க நிறுவனமாகவும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ பாரதீய ஜனதா ஆட்சியிலிருந்த போது நடந்த சுப்ரதோ ராயின் மகன் திருணத்திற்கு 12 அமைச்சர்களும் கட்சித் தலைவர் அத்வானியும் போயிருந்தனர். பல நூறு கோடி ரூபாய் செலவில் நடந்த அந்த திருமணம், வேறு எப்போதும் நடந்ததில்லை. இப்போதைய ஒரு பக்க விளம்பரத்திலும் பாரதமாதாவின் படத்தை போட்டு ‘தீங்குகளிலிருந்து தங்களை பாதுகாக்கும் தேவதை’யாக உருவகித்திருக்கிறது சஹாரா.

ஆனாலும், ‘சஹாராவின் வேகமான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் அதிகார அமைப்புகள் வேண்டுமென்றே தொடர்ந்து அவதூறுகளை கிளப்பி வருகின்றன’ என்கிறது சஹாரா. 2008-ம் ஆண்டு சஹாரா இந்தியா பைனான்சியல் நிறுவனத்தின் வைப்புத் தொகை திட்டத்தை ரத்து செய்து திரட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

அதே ஆண்டு மார்ச் மாதம் சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆகிய நிறுவனங்களின் பெயரில் பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய கடன் பத்திரங்களை விற்று நிதி திரட்ட ஆரம்பித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2.2 கோடி பேருக்கு ரூ 17,700 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்றிருக்கிறது.

‘முதலீட்டாளர்கள் பற்றிய விபரங்களை முறையாக பதிவு செய்யவில்லை, செபி கேட்ட தகவல்களை கொடுக்கவில்லை’ என்று செபி இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை எதிர்த்து சஹாரா பதிவு செய்திருந்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் திரட்டிய பணத்தை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

‘விதி முறைகளை பின்பற்றாமல் இருக்க சஹாரா கிண்டர் கார்டனா நடத்துகிறது!’ என்று உச்ச நீதி மன்றம் கொதித்திருக்கிறது.

கிண்டர் கார்டன் முதலாளிகளைப் போல இல்லாமல் எஞ்சினியரிங் காலேஜ் முதலாளிகள் போல திறமையாக நடந்து கொண்டிருந்தால் செபியோ நீதிமன்றங்களோ தலையிட்டிருக்கப் போவதில்லை. இதற்கு சான்றாக இன்று வெளியாகியிருக்கும் ‘ரிலையன்ஸ் பவர் நிறுவனம் சாசன் நிலக்கரி வயலில் சுரங்கம் தோண்டுதலை ஆரம்பித்தது’ என்ற செய்தியை பார்க்கலாம்.

2008-ம் ஆண்டு பங்குகளை முதலீட்டாளர்களிடம் விற்று ரூ 11,500 கோடி நிதி திரட்டியது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம். ரூ 10க்கான பங்குகள் ரூ 450 விலையில் விற்கப்பட்டன. ‘உலக சமூகம் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு இது. இந்திய பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கையோடு இருப்பது போலத் தோன்றுகிறது’ என்று ரிலையன்ஸ் பவரின் நிதி திரட்டலை பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார் அமைச்சர் ப சிதம்பரம்.

‘எந்த விதமான சொத்துக்களும் இல்லாதவை’ என்ற காரணத்தால் சஹாரா நிறுவனங்களை பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்ட செபி, எந்த விதமான சொத்துக்களும் இல்லாத ரிலையன்ஸ் பவர் நிறுவனம் ரூ 11,500 கோடி திரட்டிய போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2011-12-ல் ரிலையன்ஸ் பவரின் மொத்த வருவாய் ரூ 66 கோடிதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரட்டிய ரூ 11,500 கோடியில் இது 0.5% மட்டுமே. பணத்தை வங்கியில் போட்டால் கூட இதை பல மடங்கு அதிக வட்டி கிடைத்திருக்கும். பங்கு விலை இப்போது ரூ 75 ஆக குறைந்திருக்கிறது.

‘செபி சட்டத்தின் 11B பிரிவின் படி முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக செபி கடன் மற்றும் பங்குச் சந்தையோடு தொடர்புடைய யாருக்கும் பொருத்தமான உத்தரவை பிறப்பிக்கலாம்’ என்று சஹாரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அத்தகைய உத்தரவு அனில் அம்பானிக்கு எதிராக ஏன் பிறப்பிக்கப்படவில்லை?

நாசூக்காக நாட்டை கொள்ளை அடிக்கும் முதலாளிகள், சஹாரா போன்றவர்களின் கொச்சையான செயல்பாடுகளை ஒழித்துக் கட்ட விரும்புகிறார்கள். முதலாளிகளின் பிரதிநிதியான அரசு அமைப்புகளும் நீதிமன்றங்களும் தனியார் கொள்ளையர்கள் ‘விதிப்படி நடந்து கொள்கிறார்களா’ என்பதை மட்டும் சரி பார்க்கிறார்கள்.

இதையும் படிக்கவும்

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. //2011-12-ல் ரிலையன்ஸ் பவரின் மொத்த வருவாய் ரூ 66 கோடிதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரட்டிய ரூ 11,500 கோடியில் இது 0.5% மட்டுமே. பணத்தை வங்கியில் போட்டால் கூட இதை பல மடங்கு அதிக வட்டி கிடைத்திருக்கும். பங்கு விலை இப்போது ரூ 75 ஆக குறைந்திருக்கிறது.
    //
    This is not fully correct. Relaince Power executes projects through subsidies, what you refer is from stand alone report. You should refer to the consolidated report for the actual revenue.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க