Wednesday, March 22, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

ஒசூர் வெக் ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

-

ஒசூர் வெக் இந்தியா ஆலையில் புரட்சிகர தொழிற்சங்கம் உதயம்!

வெக் இந்தியா
வெக் இந்தியா

னரக மோட்டார்ஸ்களை பெருமளவில் உற்பத்தி செய்துவரும் பிரேசில் நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட் ஒசூர் சிப்காட்-2 பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பல நூற்றுக்கணக்கில் இந்தியாவில் தொடங்கப்பட்டு உற்பத்தியை குவித்து கொள்ளை லாபமீட்டுகின்றன. இந்தக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு பட்டுக்கம்பளம் விரித்து அழைத்து அனைத்து சலுகைகளையும் செய்து தருகிறது. ஆளும்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள ஓட்டுக்கட்சிகள் அனைத்துமே இந்த சேவைகளை போட்டி போட்டுக் கொண்டு செய்து வருவதோடு மட்டுமின்றி இந்த வேதனைகளையே சாதனைகளாக சொல்லி பீற்றிக் கொள்கின்றன.

‘பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்’ என சவடால் அடிக்கின்றனர். உண்மையில் அப்படி அழைத்துவரப்படுகின்ற கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்காகதான் வருகின்றனவா? அவர்கள் தொழிலாளர்களது உரிமைகளையோ, அல்லது இந்த நாட்டின் சட்டதிட்டங்களையோ மயிரளவுகூட மதித்து நடந்துக்கொள்வதில்லை என்பதையே பல அனுபவங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களும் ரத்த சாட்சியங்களாக நாட்டுமக்களுக்கு உணர்த்திவருகின்றன. இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனஙகளில் தொழிற்சங்கம் அமைத்து நிலைநிறுத்துவது என்பதே சவாலான பணியாக உள்ளது.

1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்
1WEG India நிறுவன தொழிலாளி விஜயசந்திரன்

இதற்கு மற்றுமொரு உதாரணம்தான் ஒசூர் சிப்காட் 2 பகுதியில் செயல்பட்டுவரும் பிரேசில நாட்டு நிறுவனமான வெக் இண்டஸ்டீரீஸ் இந்தியா லிமிடெட்.

இந்த நிறுவனத்தில் பெயிண்டிங் பிரிவில் பெயின்டராக வேலைசெய்துவருபவர்தான் விஐயசந்திரன் எனும் தொழிலாளி. இவருக்கு அண்மையில் இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்ட நிலையில்கூட அவருக்கு மருத்துவ வசதிகளை செய்துதர மறுத்து வருகிறது அந்த ஈவிரக்கமற்ற லாபவெறி பிடித்த ஆலை நிர்வாகம். இதனை அந்த ஆலையில் இருக்கின்ற சங்கமும் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில் ஒசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி எனும் புரட்சிகர அமைப்பு சார்பாக இந்த ஆலைநிர்வாகத்தை கண்டித்து சுவரொட்டி இயக்கம் எடுத்து ஒசூர் முழுவதும் பிரச்சாரம் செய்திருந்தனர். இதனை கண்ட அந்த ஆலையில் வேலைசெய்துவரும் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து தங்கள் ஆலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளைச்சங்கத்தை ஏற்படுத்திப் போராடி தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க துணிந்தனர். அதனடிப்படையில் கடந்த 07.02.2014 அன்று சங்க தொடக்க விழா அறிவித்தனர். உடனே ஒசூர் போலீசு ஓடோடிவந்து இங்கே 32 ஆக்ட் இருப்பதை காரணம்காட்டி அனுமதியை மறுத்து 12.02.2014 அன்று நடத்திக் கொள்ளுங்கள் என நைச்சியமாக மிரட்டியது. தற்போதுதான் தொடக்கம் என்பதால் தொழிலாளர்களின் உணர்வுமட்டம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு பின்வாங்கி 12.02.2014 அன்று போலீசு அனுமதியுடன் தொடக்கவிழா நடத்தப்பட்டது.

இந்த புதிய புரட்சிகர தொழிற்சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் இணைந்துக்கொண்டனர். இந்த தொழிற்சங்கத்திடம் விஜய சந்திரன் எனும் தொழிலாளியின் மருத்துவம் மற்றும் ஊதிய உயர்வுப்பிரச்சினை, ஆலையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் பேசித்தீர்க்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் செவிடன் காதில் விழுந்த சங்காக இருந்ததனால, இதனை மக்கள் மத்தியிலும் மாவட்ட நிர்வாகத்தின் மத்தியிலும் கொண்டுச் செல்லும் வகையில் அவ்வாலைத் தொழிலாளர்களை திரட்டி ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பே மாபெறும கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக திட்டமிட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அதனடிப்படையில் கடந்த 14.03.2014 அன்று மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அவ்வமைப்புக்கேயுரிய எழுச்சியோடு நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வாலையின் கிளைச்சங்க செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமைத் தாங்கினார்.

கண்டன உரையாக

 1. தோழர் ராஜேஸ்வரன், கிளை இணைச்செயலாளர்
 2. செந்தில்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்
 3. தோழர் பரசுராமன், மாவட்டத்தலைவர்

ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக சாதுசுந்தர்சிங் நன்றியுரையாற்றினார்.

அவர்கள் பிரச்சாரம் செய்த துண்டறிக்கையில் உள்ள செய்திகளை அப்படியே இங்கே தருகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஓசூர்.

——————————————————–

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் தேவைகளையும் மறுத்து, அற்பக்கூலிக்கு இரத்தம் சுண்ட சுண்ட வேலைவாங்கும் நவீன அடிமைகளின் நகரமாக மாறிவிட்ட ஒசூரில், சிப்காட் 2-ல் இயங்கிவரும் ‘செங்கல்சூளை’தான் பன்னாட்டு நிறுவனமான வெக் இந்தியா எனும் கனரக மோட்டார் தொழிற்சாலை!

இந்த ஆலையில் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், நவீன கொத்தடிமைத்தனங்களுக்கு சில உதாரணங்கள்!

 • வெல்டிங், கிரைன்டிங்க், பெயின்டிங்,பிட்டிங் போன்ற அதிக வெப்பத்தையும் நச்சுப் புகை, தூசி, வெளிச்சத்தை உருவாக்கும் வேலைகளை, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அருகருகே அமைந்து பணிச்செய்யும் சூழல்.
 • உற்பத்தித் தளத்தைவிட உற்பத்திச் செய்யப்படும் மோட்டார்களின் அளவு மிகப்பெரியவை. இது உற்பத்திக்கு பொருத்தமில்லாத தளம். இதனால், மிகப்பெரும் இன்னல்களைத் தொழிலாளர்கள் அனுபவிக்கின்றனர்.
 • 8 மணிநேர வேலைநேரத்தில் ஒரு நிமிடம் கூட சும்மா நிற்கக்கூடாது என்று தொழிலாளர்களை வேலைவாங்கும் இலாப வெறிபிடித்த அதிகாரிகள்.
 • அருகில் உள்ள தொழிலாளியைப் பார்த்து பேசக் கூடாது, உட்கார்ந்து டீ குடிக்கக் கூடாது, தரமற்ற கேண்டீன் உணவு பற்றி பேசக் கூடாது, மீறி கேட்டால் பொய் குற்றம் சட்டப்படும் அபாயம், இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக சிறுநீர் போன்ற இயற்கை உபாதைகளுக்கு கூட செல்வதற்கு அனுமதி இல்லை என ஒரு பண்ணையடிமைவிட கேவலமாக வேலை வாங்கப்படும் நிலைமை உள்ளது.

வெக் இந்தியாவின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முதல் தாக்குதல், தொழிலாளி விஜயசந்திரன்!

மேற்கண்ட முதலாளித்துவ பயங்கரவாத பணிச்சூழலில் வேலை செய்தவர்தான் தொழிலாளி விஜயசந்திரன் (வயது 32). ரூ 9000 என்ற அற்பக்கூலிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கமர்த்தப்பட்டார். வேலையில் சேர்ப்பதற்கு முன்பாக, முறையாக மருத்துவப் பரிசோதனை செய்துதான் எடுத்துக்கொண்டது வெக் இந்தியா ஆலை நிர்வாகம். இவர் டூல் மேக்கர் என்ற பணிக்கு தான் இவ்வாலை மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டார் . ஆனால், இவருக்கு சிறிதும் அனுபவமற்ற பெயின்டிங் வேலை கட்டாயமாக இவ்வாலை நிர்வாகத்தால் திணிக்கப்பட்டது.

முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தராமல் செயல்பட்டதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்து உடல்நிலை பற்றி தொழிலாளர்க்கு விவரம் தெரிவிக்க வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக மருத்துவ அறிக்கை விவரம் மறைக்கப்பட்டு வருகிறது. வெக் நிர்வாகத்தால் இவருக்குரிய மருத்துவ அறிக்கை விவரம் சொல்லப்படவில்லை. கடந்தாண்டு சிறுநீரகம் பழுதடைவது ஆரம்ப நிலையில் இருந்ததை தெரிந்தும், விஜயசந்திரனுக்கு இந்த விசயத்தை தெரிவிக்காமல் மறைத்து, தனது சட்டவிரோத பணிச்சூழலில் தொடந்து வேலையில் ஈடுபடுத்தியது. இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. மீண்டும் முழுமையான பரிசோதனை செய்து, இவருக்கு விடுப்பு கொடுத்து முறைப்படுத்தாமல் ஆலை மருத்துவரை கொண்டு வேலையில் ஈடுபடுத்துவதற்கான மருந்துகளை மட்டும் கொடுத்தது. உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டியது, நிர்வாகம்.

இந்த வகையான ஆலைநிர்வாகத்தின் அடக்குமுறையால் விஜயசந்திரனின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதனால், இவர் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் உள்ளார். இதற்கு ஆலை நிர்வாகம் இதுவரை எந்த உதவியும் செய்யாமல் இவர் மரணம் அடையவேண்டும் என காத்திருக்கிறது. விஜயசந்திரன் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரத்த சுத்திகரிப்பு (டையலிஸிஸ்) செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். மாதம் ரூ 45,000 செலவு செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார். மிகவும் வறிய அவரது குடும்பத்தினர் தங்களது நகை, வாகனம் மற்றும் உடைமைகளை விற்று அவரது உயிரை காத்து வருகின்றனர். கைக்குழந்தையுடன் அவரது மனைவி அன்றாடம் உணவுக்கே திண்டாடி வருகிறார்.

இவர் மட்டுமல்ல, வெல்டிங், பெயின்டிங், ஹீட் ட்ரீட்மெண்ட், ஸ்பாட்வெல்டிங் போன்ற பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் முறையான பாதுகாப்பு இல்லாததால் பலவித நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான மருத்துவ ஆய்வறிக்கையையும் ஆலை நிர்வாகம் ரகசியமாக வைத்துள்ளது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் உள்ளே இருக்கும் டாக்டர் (பரதேசி படத்தில்வரும் டாக்டரைப் போன்ற நிர்வாகத்தின் எடுபிடி மருத்துவர்) அனுமதி கொடுத்தால் தான் வெளியே வரமுடியும் என்ற அவலநிலை உள்ளது. ஆனால், அந்த மருத்துவரும் அனுமதி கொடுப்பதில்லை.

எனவே, விஜயசந்திரனுக்கு மரணத்திற்கு சமமான ஒரு துன்பத்தை ஏற்படுத்தியதாலும், கடந்த 2013–ஏப்ரல் மாதத்திலேயே கிட்னி செயலிழந்துவிட்டதை தெரிந்தும் அவருக்கு அதனை மறைத்ததற்காகவும், தனது இலாபவெறிக்காக உரிய மருத்துவம் செய்யாததற்காகவும், தொடர்ந்து அபாயகரமான உற்பத்தியில் ஈடுபத்தியதற்காகவும், தற்போது கூடிய விரைவில் கிட்னி மாற்றவில்லையெனில், விஜயசந்திரன் இறந்துவிடுவார் என்று தெரிந்தும் அவரது உயிரைக் காப்பாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது மரணத்திற்காக காத்திருப்பதாலும் (கொலை முயற்சி), ஆலையை பாதுகாப்பு இல்லாமல் நடத்துவதால் விஜயசந்திரனைப் போலவே தொழிலாளர்களுக்கு பாதிப்பு விளையும் என்று தெரிந்தும் தொடர்ந்து இதே பாதுகாப்பற்ற பணிச்சூழலில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துவதாலும் ஆலை நிர்வாகத்தையும், இந்த பணிச்சூழலில் வேலை செய்ய வைக்கும் மேனேஜர்கள், அடிமை மருத்துவர் ஆகியோரை கொலை முயற்சிக் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்க வேண்டும்.

தொழிலாளியின் உயிரைப் பொருட்படுத்தாமல் ரகசிய பேரம் பேசும் ஆட்காட்டி ஏ.ஐ.டி.யூ.சி.!

இவ்வாலையில் நிர்வாக அதிகாரிகளால் மற்றும் அவர்களது வெளி நண்பர்களால் தொழிலாளர்களில் சிலரை ஏமாற்றி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ.ஐ.டி.யூ.சி. என்ற சங்கம்.

இந்த சங்கத்தின் யோக்கியதை என்ன?…

 • இச்சங்கம் சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாத சங்கம். சில கட்ட பஞ்சாயத்து நபர்களால் நடத்தப்படுகின்ற சங்கம்.
 • சங்கத்தின் தலைவராகவும் செயலாளராகவும் வெளியாட்களைக் கொண்டுள்ளதே, இது கட்டபஞ்சாயத்து சங்கம் என்பதற்கு ஆதாரம்.
 • இந்த சங்கம் எப்போது தொடங்கப்பட்டது தெரியுமா? ஆலையில் தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கு எதிராக உணர்வு பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்காக ஒரு சங்கம் கட்ட முயன்ற போதுதான் ஆலை நிர்வாகத்தால் இச்சங்கம் தொடங்கப்பட்டது.
 • இதுவரை தொழிலாளர்களுக்காக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி தொழிலாளர்களையும் ஏ.ஐ.டி.யூ.சி. முன்னணியாளர்களையும் ஏமாற்றி வருகிறது
 • நடக்காத ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைக் காரணம் காட்டி, இவ்வாலை நிர்வாகத்தால் பொய் காரணங்கள் கூறி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களுக்காக இந்த சங்கம் பேசவில்லை. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி பேச முடியாது என்றது.
 • சட்டபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ஏமாற்றி வந்த இச்சங்கம், இதுவரை தொழிலாளர் துறையில் எந்த வழக்கு பதிவு ஏதுமில்லை என கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 • இச்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆலையில் உள்ள இச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பேச்சுவார்த்தையை சங்க நிர்வாகிகளை கூட வைத்துக் கொள்ளாமல் ரகசியமாக நடத்தி வருகின்றனர். இதற்கு பெயர் கட்டைபஞ்சாயத்து! லோக்கல் மொழியில் சொன்னால், அன்டர் டீலிங்!
 • இதனால்தான் இவ்வாலையில் இவர்கள் நடத்துவதாக கூறிக்கொள்ளும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை எந்த அடிப்படையில் நடத்துகின்றனர் என்பதையோ, என்ன வகையில் கோரிக்கைகள் வைத்துள்ளனர் என்பதையோ, பிற விசயங்கள் எதையும் தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.

இதுபோன்று இச்சங்கத்தின் சட்டவிரோத, தொழிலாளர் விரோத செயல்பாடுகள் பல. சுருக்கமாக சொன்னால், இது சங்கமல்ல. ஆலைநிர்வாகமே உருவாக்கியுள்ள ஒரு கைப்பாவை அமைப்பு. மற்ற ஆலைகளில் துரோக சங்கத்தில் அவ்வாலை தொழிலாளர்கள் இருப்பர். இங்கு ஒருபடி மேலே எல்லாமே வெளியாட்கள்! இவர்கள் இதற்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் என்ற ஆலையில் சட்டவிரோத ஒப்பந்தம் போட முயற்சித்து அவ்வாலை தொழிலாளர்களால் அம்பலப்பட்டு போனவர்கள் என்பது ஒரு உதாரணம்.

தொடங்கியது பு.ஜ.தொ.மு.வின் புரட்சிகர சங்கம்!

ஏ.ஐ.டி.யூ.சி.யின் இந்த ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்டுதான் பு.ஜ.தொ.மு. தொடங்கப்பட்டது. சங்கம் தொடங்கிய முதல் இவ்வாலையில் நடந்து வரும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக முறையாக குரல் கொடுத்து வருகிறோம். சட்டபூர்வமாக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பெரும்பான்மை சங்கமாக பு.ஜ.தொ.மு.விடம் இவ்வாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்ந்து தனது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விஜயசந்திரன் உயிரைக் காப்பாற்ற வலியுறுத்தி பு.ஜ.தொ.மு. சுவரொட்டி இயக்கம், மக்கள் மத்தியில் பிரச்சாரம், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், ஆலை நிர்வாகம், இந்த வெளியாட்களுடன் ஒப்பந்தத்தை போட்டு தொழிலாளர்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது. இந்த சதியின் மூலம் அடுத்து பல ஆண்டுகளுக்கு தொழிலாளர்களை நாயைவிட கேடாகக் கொடுமைப்படுத்த முடியும். இதுபோன்ற துரோக ஒப்பந்தங்கள் போடப்பட்ட பல ஆலைகளில் (அசோக் லேலாண்டு, கார்போரண்டம்) தொழிலாளர்களை நிரந்தரமாக பிளவுப்படுத்தி குளிர்காய்ந்து வருகின்றன, அவ்வாலை நிர்வாகங்கள். இதேபோல, வெக் இந்தியா தொழிலாளர்களையும் ஒரு கட்டபஞ்சாயத்து கும்பலை வைத்து துரோக ஒப்பந்தம் போட்டு ஏமாற்றிவிடலாம் என்று கருதுகிறது வெக் இந்தியா நிர்வாகம்.

ஆனால், இதனை பு.ஜ.தொ.மு. அப்படியே விட்டுவிடாது. தொழிலாளர்களும் ஏமாந்து இருந்துவிடமாட்டார்கள். இது போன்று ஏற்கனவே குளோபல் ஃபார்மாடெக் ஆலையில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த, துரோக ஒப்பந்தம் போட எத்தனித்த நிர்வாக அதிகாரி ஏகாம்பரம் சிறைக்கு சென்று, களி தின்று, ஓசூரில் செல்லாக்காசாகி போன வரலாறு உள்ளது. ஆகையால், வெக் இந்தியா ஆலைநிர்வாகம் ஜனநாயகமான முறையில் எங்களது கருத்துக்களை எடுத்துக்கொண்டு சட்டபூர்வமான சங்கமான பு.ஜ.தொ.மு.வுடன் பொதுகோரிக்கைக்கான பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். உடனடியாக, விஜயசந்திரனின் உயிரைக்காப்பாற்ற சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்கு நிதி ஒதுக்க வேண்டும். அவரது குடும்பத்தை பசி, பட்டினியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

முதலாளித்துவ இலாபவெறிக்கு தொழிலாளர்களை பலியிடுவது என்பது அசோக்லேலாண்டில் சாந்தகுமார் என்ற தொழிலாளி முதல் நோக்கியாவில் அம்பிகா என்ற தொழிலாளி வரை நாடெங்கும் பரவி உள்ளது. ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் உழைக்கும் மக்களைக் காவு கொண்ட போபால் விசவாயு போன்ற படுகொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகின்றன. இருப்பினும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஆகையால், ஒசூர் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் வெக் இந்தியா ஆலை நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தொடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் நாளை நம்மையும் தாக்கும் என்பதை உணர வேண்டும். அதேசமயம், ஓட்டு சீட்டு தொழிற்சங்கங்களும், ஆலை நிர்வாகத்தின் கைப்பாவை தொழிற்சங்கங்களும் எந்த காலத்திலும் தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடியதில்லை. நாடாளுமன்றத்தில் தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகளை நாட்டிற்குள் தொழில் தொடங்க அழைத்துவரும் இந்த ஓட்டுக்கட்சிகள், இந்த கம்பெனிகள் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளை எதிர்ப்பார்கள் என்று கருதுவது முட்டாள்தனம்!

ஆகையால், மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு. சங்கம் போராடி வருகிறது. ஒசூரில் உள்ள பிற ஆலை தொழிலாளர்களே, நீங்கள் எங்களது இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுங்கள். ஒசூரில் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு குரல் கொடுத்துவரும் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள வெக் இந்தியா தொழிலாளர்களாகிய நாங்களும் பிற ஆலை தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்! ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை புதைக்குழியில் தள்ளுவோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வெக் இண்டஸ்ட்ரீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிட்டெட் கிளைச் சங்கம்
தொடர்புக்கு: 97880 11784 – ஒசூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க