Tuesday, February 25, 2020

அந்த வீரன் இன்னும் சாகவில்லை

-

மார்ச் 23 : பகத்சிங் நினைவுநாள் – முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டம்

1. சென்னை

“இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 23.03.2014 அன்று மாலை 6 மணிக்கு அம்பத்தூர் முருகன் கோயில் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் தலைமை தாங்கினார். தலைமையுரையில் பல்வேறு நிறுவனங்களில் தினமும் நடைபெறும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், தன் லாப வெறிக்காக இயற்கையையே சீரழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் தொழிலாளி வர்க்கத்துக்கு விடிவில்லை என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

தலைமையுரைக்கு முன்னதாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அடுத்ததாக உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து அதன் மூலம் கொள்ளையடிக்கும் முதலாளிகளையும், சமீபத்தில் வரி ஏய்ப்பு செய்து அம்பலப்பட்டுப் போன நோக்கிய நிறுவனத்தையும் அம்பலப்படுத்தினார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் சொ.செல்வகுமார் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் சிக்கி வாழ முடியாமல் பல்வேறு வர்க்கங்களை சார்ந்தவர்களும் தற்கொலை செய்து வருவது அதிகரித்துள்ளது சுட்டிக் காட்டினார். மக்கள் எழுச்சிக்கு பயந்து பகத்சிங்கை முந்தைய நாளே தூக்கிலிட்ட ஆங்கிலேயர்களைப் போல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வளர்ச்சியைக் கண்டு முதலாளிகள் அஞ்சி நடுங்குவதை எடுத்துரைத்தார்.

ஒரு புரட்சிகர பாடலுக்குப் பின் தன் உரையை துவக்கிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜன் தங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஆலைகள் குறித்தும், தண்ணீர் தனியார்மயமானதின் விளைவாகவும் உழைக்கும் மக்கள் வாழ வழியற்ற மாவட்டமாக மாறி வருவதையும் இதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாது சுரண்டி சுரண்டி செல்வம் சேர்க்கும் முதலாளித்துவத்தினை ஜலசமாதி செய்திட வேண்டுமென கூறி முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி தோழர் இரா.லோகநாதன் சிக்கனம் செய்வதாகக் கூறி தொழிலாளிகளின் உயிரை மாய்க்கும் முதலாளித்துவ லாபவெறியை பல்வேறு உதாரணங்களின் மூலம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் தோழர் விளவை இராமசாமி தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற போர்வையில் தொழிலாளிகளை ஏய்க்கும், தொழிற்சங்கத்துக்கு துரோகமிழைக்கும் முதலாளிகளை அம்பலப்படுத்தினார். குறிப்பாக கோவை தேசிய பஞ்சாலைக் கழகத் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் சூழ்ச்சியையும் அதை முறியடித்து புஜதொமு தேர்தலை நடத்தி வெற்றி பெற உள்ளதையும் விளக்கி துரோகிகளை இனங்கண்டு தனிமைப்படுத்தி வேண்டுமென தொழிலாளிகளுக்கு உரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தோழர் சு.பரசுராமன், மக்கள் குடியிருப்புகளில் வன விலங்குகள் வருவதற்கு காரணம் முதலாளித்துவ பயங்கரவாதமே, வன விலங்குகள் வாழ்கின்ற இயற்கை சார்ந்த சூழலான காட்டை அழிப்பதன் மூலம் விலங்குகள் வாழ முடியாமல் மக்கள் வசிப்பிடங்களில் வந்து அச்சுறுத்துகின்றன. இப்படி ஒட்டு மொத்த உயிரினங்களுக்கும் எதிரியான முதலாளித்துவத்தை வேரோடு வீழ்த்த தொழிலாளி வர்க்கத்தினால்தான் முடியும் எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு சமீபத்தில் கழிவுநீரை சுத்தம் செய்ய சென்று தொழிலாளிகள் மரணமடைந்த சம்பவத்தை திட்டமிட்ட படுகொலை என்று துவங்கி இப்படி நித்தம் நித்தம் படுகொலை செய்யும் முதலாளிக்கெதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டி முதலாளிக்கு ஆதரவாக ஆளும் வர்க்கம் நடந்து கொள்கிறதென கூறினார். ராமலிங்கம் என்ற ஐ.பி.எஸ்-ம், சென்னை மாவட்ட ஏடிஜிபியும் போராடும் தொழிலாளிகளுக்கு எதிராக போலீசு முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை அனைத்து துரோகிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதை பல்வேறு உதாரணங்களுடன் பதிவு செய்தார். குட்ட குட்ட தொழிலாளிகள் குனிந்து கொண்டே இருக்க வேண்டும், நிமிர்ந்து நின்றால் பயங்கரவாதிகள் கொல்லும் என்று கோவை பிரிக்காலிலும், மானோசர் மாருதி சுசுகியிலும் நடந்த தொழிலாளர் போராட்டங்களை சித்தரிக்கும் முதலாளித்துவத்தின் குரூரத்தை விவரமாக பதிவு செய்தார்.

ஆலைகளில் மாசடைந்த நீரை சட்டவிரோதமாக ஆறுகளில் கொட்டுவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும், காசுகளை அழிப்பதும், குளிர்சாதனத்தை பயன்படுத்தி புவியை வெப்பமயமாக்குவதும் என மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றும் முதலாளித்துவத்தினை ஒழிக்காமல் தொழிலாளி வர்க்கம் விடுதலையடைய சாத்தியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய தேர்தலை பற்றிய பாடல் இன்றும் கூட பொருந்துவதாக இருப்பதைக் கூறி, “கொள்ளை கூட்டணி ஒவ்வொன்னுக்கும் என்ன பின்னணி” என்ற பாடலில் தொடங்கி பல புரட்சிகரப் பாடல்களை இசைத்து மக்களை ஈர்த்த கலைக்குழுவினர் இறுதியாக பகத்சிங் பாடலுடன் நிறைவு செய்தனர்.

இணைப்பு சங்க, கிளைச்சங்க தொழிலாளிகள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் ஆவடி-அம்பத்தூர் பகுதித் தலைவர் தோழர் ம.சரவணன் நன்றியுரைக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

2. தருமபுரி

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளை முன்னிட்டு “ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தியாகத்தை நெஞ்சிலேந்துவோம் என்ற தலைப்பில் தருமபுரி புமாஇமு சார்பில் கல்லூரிகளிலும், பள்ளியிலும் பேருந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இயக்கத்தின் இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பகத்சிங் படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். கூடியிருந்த மக்கள் மத்தியில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

march-23-dharmapuri

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி

3.  தூத்துக்குடி

மார்ச் 23 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தூத்துக்குடியில் ஏகாதிபத்திய எதிர்ப்புப்போராளிகள் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது.

march-23-tuticorin-poster

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தூத்துக்குடி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  • “அந்த வீரன் இன்னும் சாகவில்லை”

   பகத்சிங்கின் தோழர்களை நினைத்தால் பொறமையாக உள்ளது.அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு,இன்றைய இளைஞர்களுக்கு கிடைத்தும் அதனை செயல்படுத்த முனையாமல் உள்ளனர்.காலம் அவர்களை களத்துக்கு அழைக்கும்.சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் போனிக்ஸ் பறவையைப்போல் எழுவார்கள்.இந்த பூவுலகை தம்கைகளில் ஏந்தி பொன்னுலகைப் படைப்பார்கள்.

   “அந்த வீரன் இன்னும் சாகவில்லை” என முழங்குவார்கள்.

   ”இன்குலாப் ஜிந்தாபாத்,” ,”புரட்சி ஓங்குக”

 1. பெருமிதமாக உள்ளது .
  [தேர்தல் பிரசாரத்தில் எவராவது பகத்சிங்கைப் பற்றி பேசிவிடமாட்டார்களா?என்ற தேடல் என்னிடம் இருந்தது.செய்வீர்களா?…வாக்களீப்பீர்களா?…இன்னும் பலவற்றை பற்றித்தான்
  கேட்க முடிந்தது.சுயநலத்தின் முன் அதை மட்டும்தானே எதிர் பார்க்க முடியும்.]
  பகத்சிங்காகவே வாழவிரும்பும் பாபுபகத்தின் வணக்கங்கள் உங்களுக்கு உரித்தாகுக.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க