privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுதுவை பல்கலை நிர்வாகத்தின் கொடுங்கோன்மை - அதிர்ச்சி ரிப்போர்ட் !

புதுவை பல்கலை நிர்வாகத்தின் கொடுங்கோன்மை – அதிர்ச்சி ரிப்போர்ட் !

-

புதுவை பல்கலைக்கழகமானது மத்திய மனித வள மேம்பாட்டுத் அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகிய அமைப்புகளின் கீழ் இயங்கும் மத்தியப் பல்கலைக்கழகம்தான் என்றாலும், பொதுவாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) போன்ற பிற மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வு அவ்வளவு பரவலாகவும் வீரியமாகவும் இங்கு இல்லை. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை நடத்திவரும் விதமும் நிர்வாகத்தை மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் பார்ப்பனக் கும்பலின் எதேச்சதிகாரமும் மாணவர்களை தன்னெழுச்சியான போராட்டங்களை நோக்கித் தள்ளிக்கொண்டு வந்துள்ளன.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சந்திரா கிருஷ்ணமூர்த்தி சென்ற 2013 பிப்ரவரியில் பொறுப்பேற்றது முதல் பார்ப்பன அதிகாரம் அங்கு முழுவீச்சில் கோலோச்சத் தொடங்கியது. அவர் முதலாளிகளின் சேவைக்கு தன்னை அர்பணித்துள்ள மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினியின் நெருங்கிய நண்பர் மற்றும் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர் என்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததாலேதான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் அகாடமிக் ஸ்டாஃப் காலேஜ் இயக்குனராக இருக்கும் ஹரிஹரன் என்ற அதிகாரத் திமிரில் ஊறியிருக்கும் பார்ப்பனர் எல்லா நிர்வாக அலுவல்களையும் கவனிக்கலானார். இவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் கொடுத்த சிபிஐ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இதுவரையில் துணை வேந்தர் சிபிஐக்கு அனுமதி அளிக்க மறுத்து அவரை பாதுகாத்து வருகிறார். இவர் மீது இன்னும் சில கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அவருக்குத் துணையாக ராம தீர்த்தம் என்ற பழுத்த பார்ப்பன “சட்ட மேதை”யை துணைவேந்தரும் ஹரிஹரனும் பணியில் அமர்த்தினர்.

இயக்குநர் ஹரிஹரன்
இயக்குநர் ஹரிஹரன்

இவர்களில் முக்கியமாக ஹரிஹரன் செய்துவந்த கேள்விமுறையற்ற அதிகார அட்டுழியங்கள் எல்லாத் தரப்பினரையும் பாதித்தன. தினக் கூலி காண்டிராக்ட் பணியாளர்களான செக்யூரிட்டி பணியாளர்களிடம் கூட வஞ்சத்துடனும் சர்வாதிகாரத்துடனும் நடந்துகொண்ட ஹரிஹரன், யாரை எங்கே என்ன பணியில் அமர்த்துவது, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் எந்த மாணவர், பேராசிரியர் அல்லது அலுவலரை எப்படி தண்டிப்பது உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் ஏகபோகமாக தன் கையில் வைத்திருந்தார்.

அதே நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தினுள் கோஷ்டி மோதல்களும் பெண்கள் உள்ளிட்ட மாணவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழலும் பெருகி வந்தது. குறிப்பாக, பெண்கள் விடுதிகளுக்கு உள்ளேயும் சுற்றியும் ஒரு மர்ம கிரிமினல் காமுகன் ஆடையில்லாமல் உடல் முழுவதும் எண்ணையைப் பூசிக்கொண்டு இரவிலும் பகலிலும் நடமாடி அச்சுருத்தியிருக்கிறான்.

கடந்த இரு மாதங்களாக அவனது நடமாட்டம் மாணவிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து அந்தக் காமுகனைப் பிடிக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் நிர்வாகம் அதற்காக எந்த உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு அந்தப் பிரச்சனை பெரிதாகிவிடாமல், போராட்டங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் பல்வேறு சாக்குகளைச் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தது. அந்த மர்ம கிரிமினல் மாணவிகளை அச்சுறுத்துவது தொடரவே மாணவிகள் பெருமளவில் கூடி போராடத் தொடங்கினர்.

இச்செய்தி நாளிதழ்களிலும் பிற ஊடகங்களிலும் பரவலாக வெளியானதால் நிர்வாகத்திற்கு நெருக்கடி முற்றியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி பட்டப் பகலில் சுமார் 2.45 மணிக்கு அவன் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, அங்கு அவனைத் தடுத்துப் பிடிக்க முயன்ற பெண் பாதுகாவலரைத் தள்ளி விட்டுவிட்டு ஓடிவிட்டான். இந்தச் சம்பவம் மாணவியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடும் சந்தேகத்தையும் உருவாக்கியது. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க வக்கற்ற நிர்வாகமும் பாதுகாப்புக்கான ஒப்பந்தக் கம்பெனியும் புதிய காரணங்களையும் திசைதிருப்பும் முயற்சிகளையும் செய்தன.

தற்போது பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்றுள்ள கம்பெனி எம்.டி. ஹரிஹரனுக்கு நெருக்கமான நபர் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில்தான் விதிமுறைகளைத் திருத்தி அதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்த நிறுவனம் பொறுப்பேற்றவுடன் முன்பிருந்த எல்லாப் பாதுகாப்புப் பணியாளர்களும் எந்த முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டனர் என்பதும், அதில் ஹரிஹரன் விரும்பியவர்கள் மட்டுமே மீண்டும் ஒருமாதம் அலைந்து திரிந்து போராடியபின் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர் என்பதும் எல்லோரும் அறிந்த நிகழ்வுகள்தான். இவ்வாறு ஹரிஹரனின் சர்வாதிகாரமும் நிர்வாகத்தின் கையாலாகாத் தனமும் அம்பலமான நிலையில், ஓர் அப்பாவி மாணவனைப் பிடித்து அவர்தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தார் என்று சாதிக்க முயன்றது ஹரிஹரன் கும்பல்.

புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் முதலாண்டு படிக்கும் ஏழை மாணவர் ராதா கிருஷ்ணன். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து உயர்கல்வி படிக்க வந்துள்ள அவர் தன் தாய் மற்றும் ஒரே தம்பியின் உதவியினாலேயே படித்து வருகிறார். கடந்த 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 11.20 மணியளவில் புதுவைப் பல்கலைக்கழக சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் விடுதியிலுள் தான் தங்கியிருக்கும் அறையில் இருந்துள்ளார். அப்போது பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கிப் படிக்கும் சில மாணவர்கள் காணாமல்போன தங்களுடைய பேண்ட்களைத் தேடிக் கொண்டு சந்தேகத்தின் பேரில் ராதா கிருஷ்ணனின் அறைக்கு வந்தனர். குழந்தைக்காலம் தொட்டே வறுமையில் வளர்ந்த அவர் மறைத்து வைத்திருந்த பிற மாணவர்களுடைய  பேண்ட்கள் மற்றும் சட்டைகளை அவர்களிடத்து ஒப்படைத்திருக்கிறார். தவிர தன்னிடமிருந்த மற்ற துணிகளை உரிய விடுதி மாணவர்களிடம் அப்போதே ஒப்படைத்துவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்நேரத்தில் அவ்விடத்திற்கு வந்த ஆண்கள் விடுதித் தலைமைப் பாதுகாப்பாளர் (Chief Warden for Men – Incharge) சுடலைமுத்து என்ற பேராசிரியர் நடந்த நிகழ்வுகளை முழுமையாக விசாரித்தார். மேலும் அங்கு வேறெதும் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அவ்விடத்திற்கு வந்த பாதுகாப்பு அதிகாரி (Security Manager) சியாம், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘இதுமட்டும்தான் திருடினியா, இல்லை லேப்டாப், வாட்ச், சைக்கிள் போன்றவற்றையும் திருடினாயா?’ என்று கேட்டு கையில் வைத்திருந்த லத்திக்கழியால் ஐந்தாறு அடிகள் உடம்பில் சரமாரியாக அடித்துள்ளார். அதோடு மிக வேகத்துடன் தனது கார் டிரைவரை கூப்பிட்டு அவரைக் காரில் ஏற்றச் சொல்லியுள்ளார். அப்போது அவரைக் காரில் ஏற்றி செக்யூரிட்டி-க்கு கொண்டு சென்றனர். அங்கேயும் கையினாலும் லத்திக்கழியினாலும் பலமாக அடித்து மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளது அந்த ஹரிஹரனின் அடிவருடிக் கூட்டம்.

அவ்விடத்தில் பூஷன் என்ற பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கு தான்தான் அத்தாரிட்டி என்று அறிவித்துக் கொண்டுள்ள ஹரிஹரனின் விசுவாசி, அந்த மாணவரை லத்திக்கழியைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு காணாமல்போன மாணவர்களின் பொருட்கள் திருடுப் போனதற்கும் ராதா கிருஷ்ணன்தான் காரணம் என்ற குற்றத்தையும் அவர்மீது போட்டுள்ளார். ‘நீ பேண்ட், சட்டையை மட்டும் திருடவில்லை. எத்தனையோ லேப்டாப், வாட்ச், ஹெட்செட், செல்போன், மிதிவண்டி திருடியதாக புகார் வந்திருக்கு. டேய்! உண்மையைச் சொல்லு இதற்கெல்லாம் நீதான் பொறுப்பு. சொல்லு, இந்தக் காரியங்களைச் செய்தது நீ ஒருத்தன்தானா? இல்லை ஒரு கேங்கே இருக்கா?’ என்று தொடர்ந்து அடித்துச் சித்திரவதை செய்து மிரட்டியுள்ளார்.

அந்நேரத்தில் அங்கு நுழைந்த ஹரிகரன், ராதா கிருஷ்ணனைப் பார்த்து ‘டேய்! அன்றைக்கு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் போனவன் நீதானடா?’ என்று சொல்லி மிரட்டியுள்ளார். அதற்கு அவர் , “ஐயா, நான் பேண்ட், சட்டையை எடுத்தது உண்மைதான். அவற்றை நான் விற்கவோ அல்லது வேறெந்த மோசமான நோக்கத்துடனோ எடுக்கவில்லை. மேலும் அவற்றை உடனடியாக உரிய மாணவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். வேறெந்த குற்றமும் நான் செய்யவில்லை,  பெண்கள் விடுதிக்குள் நான் நுழையவில்லை’ என்று கெஞ்சி மன்றாடியுள்ளார்.

இந்த அப்பாவி ஏழை மாணவனை வைத்தே பெண்கள் விடுதிப் பிரச்னையை ஊத்தி மூடிவிடுவது என்று முடிவு செய்துகொண்ட ஹரிஹரன், ‘ஒத்துக்கடா, ஒத்துக்கடா’ என்று சொல்லி அவரைக் கடுமையாக ஓங்கி ஓங்கி அடித்துள்ளார். அப்போது அவரின் அழைப்பின் பேரில் அவ்விடத்திற்கு வந்த ஒரு பெண் காவலர் (Security) ‘03.04.2014 அன்றைக்கு என் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவி தப்பி ஓடிய பையன் இவன்தான்’ என்று அபாண்டமாக அவர்மேல் சாட்டப்பட்டிருந்த குற்றத்தை உறுதி செய்துள்ளார். அப்போது ‘டேய் பொம்பள பொறுக்கி மாட்டுனியா’என்று திட்டிக் கொண்டே மேற்சொன்ன பூஷன் அவரை அடித்துள்ளார்.

மேலும் ஹரிகரன், “டேய்! கிரிமினல்! கிரிமினல்! ஒத்துக்கோடா அந்த பொம்பளையே நீதான்னு சொல்லிட்டாடா, மேலும் இது இல்லாமல் கம்பளைண்ட் கொடுத்த இரண்டு பெண் பிள்ளைகளோட அப்பா எல்லாம் போலீஸ் அதிகாரிங்க, நீ ஹாஸ்டலுக்குள் வந்ததை இவங்க பாத்தாங்களாம். போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போறாங்களாம். உன் வாழ்க்கையே தொலைஞ்சுதுடா, எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிடுவாங்க ஒழுங்கா குற்றத்த ஏத்துக்கோடா” என்று கடுமையாக மிரட்டிக் கொண்டிருந்த வேளையில் செக்யூரிட்டி அதிகாரிகளான பூஷன் குணசேகரன் உள்ளிட்டோர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

ஹரிகரன், ‘நீ ஒத்துக்கோடா உனக்கு யூனிவர்சிட்டில படிக்கிறதுக்கு எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கறேன். நீ என் பிள்ளை மாதிரி இருக்குற. உன் காலில் வேணும்னாலும் விழுறேன்டா!’ என்று நைச்சியமாகப் பேசி அந்த ஏழை மாணவனைத் தனது பார்ப்பனச் சதிக்குள் சிக்கவைக்கப் பார்த்துள்ளார்.

கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான ராதா கிருஷ்ணன், செய்வதறியாமல் திகைத்துள்ளார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் அதிர்ச்சியிலிருந்து இன்னுமும் கூட தன்னால் மீள முடியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் அவர். தன் மேல் முதல் தகவல் அறிக்கை போட்டுவிட்டால் என்னாகும் என்று அஞ்சியும், கல்வி கற்பதற்கு 40,000 ரூபாய் வட்டிக்குக் கடன்வாங்கி படிக்கவைக்கும் தன் அம்மா மற்றும் தம்பி ஆகியோரின் உழைப்பு வீண் போகக்கூடாது  என்ற கவலையினாலும் உடைந்துபோன அவரை உடம்பில் விழுந்த அடிகளும் சேர்ந்துகொண்டு வருத்தியுள்ளன.

அதற்கடுத்ததாக, சிறிது நாட்களுக்கு முன்பு மகளிர் விடுதிக்குள் எவர் எவரோ சென்று பெண்களைப் பயமுறுத்திய குற்றத்தையெல்லாம் ராதா கிருஷ்ணன் பெயரில் சுமத்திக் கொண்டிருந்தனர்.

“இரவு எத்தனை மணிக்கு Girls Hostel-க்கு போவ, என்னென்னவெல்லாம் பண்ணுவ?” என்று அடித்துக்கொண்டே கேட்டுள்ளார் பூசன். பிறகு மேல்சட்டை அணியாத நிலையில் இருந்த அவரை மகளிர் விடுதி நோக்கி ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இடையிடையில் ஓரிருமுறை அவரை அடித்த ஹரிகரன், சரஸ்வதி பெண்கள் விடுதிக்கு முன்பு ராதா கிருஷ்ணனை நிற்கவைத்து, அங்குள்ள அனைத்து மாணவிகளையும் அழைத்து, “இதோ இவன்தான் இத்தனைநாள் அட்டூழியம் செய்த மகாபாவி’ என்று அவர் அணிந்திருந்த டீ சர்ட்டை கழுத்தோடு இறுக்கிப் பிடித்துப் பிடரியில் ஓங்கி அடித்துள்ளார்.

பிறகு பெண் பாதுகாவலரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய இடம் இதுதானென ஓரிடத்தைக் காட்டி அவர்கள் அங்கேயே ராதா கிருஷ்ணனை குத்த வைத்து உட்காரச் செய்து ஒரு யூகத்தினடிப்படையில் அங்குமிங்கும் விடுதிகளின் மேல் ஏறிக்காட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.  வேறுவழியின்றி பெண்கள் விடுதியில் அவர்கள் கூறியவாறு அவர் ஏறிக்காண்பிக்கும் செயலைச் செய்ய, அதனை முழுவதுமாக பூசன் கேமிராவில் படம் பிடித்துக் கொண்டுள்ளார். உடல் வலியால் ஏற முடியவில்லை என்று மறுத்தபோதும் கூட அவரை விடவில்லை அந்தக் கும்பல். பிறகு அங்குள்ள கங்கா பெண்கள் விடுதிக்கும்  அழைத்துச்சென்று அங்கேயும் அனைத்து மாணவிகளையும் அழைத்து, ‘இவன் ஒரு சைக்கோ, இவன்தான் இத்தனைநாள் இங்கே நிர்வாணமாக வந்தவன்’ என்று நாகூசாமல் ஹரிகரன் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். ‘இவன் யாரு தெரியுமா? நம்ம யுனிவர்சிட்டியில் எம்.ஏ. தமிழ் படிக்கிறவன், தமிழ் படிக்கிற கம்மனாட்டி என்று துறையை இதில் சம்மந்தப்படுத்தி ‘தமிழ் ஒரு நீச பாஷை’ தமிழர்கள் நீசர்கள் என்ற பார்ப்பனியக் கண்டுபிடிப்பையும் எல்லா மாநில மாணவிகளிடமும் பரப்பியிருக்கிறார் ஹரிஹரன்.

பின்னர் “பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறமுள்ள ஏதோ ஒரு பள்ளத்தையும் கடந்துதான் அன்றைக்கு நீ ஓடினியாமே” என்று எவரோ, என்றைக்கோ ஓடிய இடத்திற்கும் ராதா கிருஷ்ணனை அழைத்துச் சென்றார்கள். அவரைத் தாறுமாறாகத் திட்டிக்கொண்டும், கேமிராவில் படம் எடுத்துக்கொண்டும் இருந்தனர். ஓர் இடத்தைக் காட்டி அங்கிருந்துதான் அவர் ஓடியிருக்க வேண்டுமென்று சொல்லி அவரை நடக்கவைத்துப் படமெடுத்துள்ளனர். அப்போது மாலை நேரமாகிவிட்டதால் ராதா கிருஷ்ணனை செக்யூரிட்டி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகளிர் விடுதிக்குள் நுழைந்தது அவர்தான் என்றும், மேலும் பல குற்றங்களை அவர்தான் செய்தார் என்றும் கட்டாயப்படுத்தி வெள்ளைத்தாளில் எழுதி வாங்கி கொண்டனர். அங்கு பசியால் தள்ளாடிய நிலையில் இருந்த அவரைக் கொலைக் குற்றம் செய்த சிறைக் கைதியைவிடவும் மோசமாக நடத்தினர். அவரிடம் எந்த நபரையும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. காலை முதல் மாலைவரை உணவு உண்ணாததாலும் மாறிமாறி பலரது கைகளாலும் லத்திகளாலும் அவரவர் ஆசைதீர அடித்ததால் அவரது உடம்பு மேலும் ரணமானது. சுமார் ஒன்றரை நாட்கள் அவரை அடைத்து வைத்திருந்ததில் மொத்தம் மூன்றே மூன்று இட்லிகள்தான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

மறுநாள் 07.04.2014 அன்று திங்கட்கிழமை காலையில் கழிவறைக்குச்செல்லவும்கூட உடலில் திராணி இல்லாமல் போய் குற்றுயிராகக் கிடந்தார் அந்த மாணவர். இது “வி.சி மேடம் போட்ட கட்டளையென்றார்” பூசன். இப்படியே பொழுது கழிய மதியம் 3.30 மணியளவில் இதுபற்றிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் தொடங்கலானது. இதற்கு சற்று முன்னர்தான் தமிழியற்புல முதல்வருக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. தான் ஹரிஹரன் கும்பலின் வலுக்கட்டாயத்தினால் மகளிர் விடுதிக்குள் சென்றேன் என்ற பொய்யை எழுதிக் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர் என்றும், தன்னை மிருகத்தனமாக அடித்தும் மிரட்டியும் பெண்கள் விடுதிக்குள் நுழைந்தது தான்தான் என்பதுபோல நடிக்கவைத்து படம்பிடித்துக் கொண்டனறேன்றும் ராதா கிருஷ்ணன் தன் நிலையை எடுத்துரைத்தார்.

இவர்கள் மிக அழகாக ஜோடித்த எல்லா கட்டுக்கதைகளையும் உடைத்தெறிய ஆதாரமாக தான் பெண்கள் விடுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நாள் மற்றும் நேரத்தில் (03/04/2014: 2.45 PM) தான் நூலகத்தில் இருந்ததைக் கூறினார், ராதா கிருஷ்ணன். அவரது கூற்று உண்மையெனில், நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி  காமிராக்களில் அவர் நுழைந்ததும் வெளியேறியதும் பதிவாகி இருக்கவேண்டும்; எனவே நூலகத்தின் காமிராப் பதிவுகளை ஆய்வு செய்வது என்று குழு முடிவுசெய்தது. அவ்வாறு சோதித்துப் பார்த்ததில் ராதா கிருஷ்ணன் ஏப்ரல் மூன்றாம் தேதி 1.40 PM மணிக்கு நூலகத்தினுள் நுழைந்ததும், அவர் அங்கேயே இருந்ததும், பின்னர் 5.10 PM மணிக்கு நூலகத்திலிருந்து வெளியேறியதும் மூன்று காமிராக்களில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் அவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததர்க்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டன.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்த பேராசிரியர்கள் சிலர் நடுநிலையானவர்கள் என்பதால் நிர்வாகத்தின் மீதுதான் தவறு என்றும் அந்த மாணவர் பிற மாணவர்களின் சட்டையை எடுத்ததைத் தவிர வேறெந்தத் தவறும் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் தொடர் சித்திரவதைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளான ராதா கிருஷ்ணன் அடுத்தநாள் வகுப்பில் மயக்கமடைந்து விழுந்துவிடவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னரே சுயநினைவுக்கு வந்தார். அவருக்கு நடந்த அநீதி மாணவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவிகள் பலர் முன்னின்று போராடி ஹரிஹரன் கும்பலுக்குத் தண்டனை பெற்றுத்தர தயாராக இருந்தனர்.

மாணவர் முற்றுகை
நிர்வாக வளாகத்தினுள் முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பகுதி.

கடந்த புதன் (ஏப்ரல் ஒன்பதாம் தேதி) அன்று மாணவர்கள் சுமார் முன்னூறு பேர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் ஹரிஹரன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டுமென்று வலியுறுத்திப் போராடத் தொடங்கினர். பார்ப்பனக் கூட்டாளி என்பதற்காகவே பதிவாளராக தற்காலிகப் பொறுப்பு வகித்துவரும் பேராசிரியர் இந்துமதி வந்து மாணவர்களைச் சமாதானப் படுத்த முயன்றார். மாணவர்கள் அவருடன் பேசத் தயாரில்லை என்று கூறித் துரத்திவிடவே நிர்வாகம் மாலை வரை மாணவர்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுக் கலைந்துபோக வைக்கலாம் என்று கணக்குப் போட்டது.

ஆனால் மாலையில் இன்னும் வீரியமடைந்த மாணவர்கள் நிர்வாகக் கூட்டங்கள் நடைபெறும் அரங்கினுள் நுழைந்து அங்கு நடைபெற இருந்த ஓர் ஏலத்தைத் தடுத்து ஏலப் பெட்டியைக் கைப்பற்றிக் கொண்டனர். வேறுவழியின்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மற்றும் துணைவேந்தர் நீங்கலாக பதிவாளர் இயக்குனர் என அனைவரும் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மாணவிகள் போராட்டம்
போராட்டத்தில் தீவிரமாக களமிறங்கிய மாணவிகள்

இது கண்துடைப்பு வேலை என்பதை உணர்ந்த மாணவர்கள், “என்ன நடவடிக்கை எடுக்கப்படும், எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதைத் தெளிவாக எழுத்தில் வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதற்கிடையில் நிர்வாகம் காவல்த்துறையை உள்ளே அழைத்தது. காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்துகொண்ட மாணவர்கள் தமது நியாயங்களை எடுத்துக் கூறி, “இதில் நிர்வாகத்திற்கு அடியாள் வேலை பார்க்க வேண்டாம்” என்று விளக்கினர். ஆய்வாளரும் இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை அல்ல என்றும் நிர்வாகமே பேசித் தீர்க்குமாறும் கூறிவிட்டு தேர்தல் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். மாணவிகள் பதிவாளரைச் சூழ்ந்துகொண்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி விடவே அடுத்தநாள் பதினோரு மணிக்கு என்ன நடவடிக்கை என்பது பற்றியும் அதன் விபரங்களையும் தெரிவிப்பதாக எழுதிக் கொடுத்தார்.

நிர்வாகம் ஏதேனும் தீர்வு வழங்கி ஹரிஹரன் கும்பல் மீது பெயரளவுக்காவது ஏதாவது நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையோடு மாணவர்கள் அடுத்தநாள் கூடினர். ஆனால் நிர்வாகமோ ஒழுங்கு நடவடிக்கைக் குழுசமர்ப்பித்திருந்த அறிக்கையை மட்டும் படித்துவிட்டு ‘நீங்கள் கேட்டதற்கு இதுதான் பதில்’ என்று கூறி மோசடி செய்தது. சட்ட விரோதமாக ஒருவரை அடைத்து வைத்திருந்தது, அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்தது, ஒவ்வொரு பெண்கள் விடுதியாகக் கூட்டிச் சென்று அவமானப் படுத்தியது, அவரது அனுமதி இல்லாமல் அவரைப் படம் பிடித்தது, மிரட்டி தாங்கள் விரும்பியவற்றை எழுதிக் கையெழுத்துப் பெற்றது என்று அடுக்கடுக்கான குற்றங்களைச் செய்த ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முன்வராது என்பதை உணர்ந்த மாணவர்கள் தாமாகவே புறப்பட்டு பூஷன் அறையை உடைத்து உள்ளிருந்த பொருட்களைக் கலைத்துப்போட்டனர்.

மாணவிகளே இதனை முன்னின்று செய்து பெண்களின் போராட்ட உறுதியைப் பறைசாற்றினர். தங்களுக்கு கிடைக்கவேண்டிய சரியான தீர்வை வேண்டுமென்றே நிர்வாகம் ஒருசார்புத்தன்மையோடு மறுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாத மாணவர்கள் கோபமுற்று பின்னர் ஹரிஹரனின் வீடு மற்றும் கார் ஆகியவற்றை சேதப்படுத்திய நிகழ்வு, ஆளும் வர்க்கம் நீதியை நிலைநாட்டத் தவறி, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும்போது மக்கள் நீதியை நிலைநாட்டுவார்கள் என்பதை உணர்த்துகிறது. நிர்வாகம் 15 ஏப்ரல் செவ்வாய் அன்று ஹரிஹரன் கும்பலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரிடம் அளிக்கப்பட்டுள்ளது. பூஷன், ஹரிஹரன் இருவரும் மாணவர்கள் தமது சொத்துக்களைச் சேதப்படுத்திவிட்டதாகக் கூறி காவல்த்துறையில் புகார் அளித்துள்ளனர்.

முற்றுகை போராட்டம்
நீதி வேண்டி Director of Studies அலுவலகத்தை முற்றுகையிட்டபோது எடுத்த படம். நன்றி: தி ஹிந்து

மாணவர்கள் தன்னெழுச்சியாகவே நடத்திய இந்தப் போராட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தொடக்கம் முதல் உடனிருந்து ஆலோசனைகள் வழங்கியும் பங்கேற்றும் வருகிறது. குறிப்பாக, குறிப்பிட்ட மாணவர் அந்தக் குற்றங்களைச் செய்தாரா இல்லையா என்பதைவிட முக்கியமான பிரச்சனை ஹரிஹரனுக்கோ பாதுகாப்பு ஒப்பந்ததாரருக்கோ அதனை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது என்பதும், விசாரணை நடத்தப்பட்ட முறை முற்றிலும் கிரிமினல் தனமானது என்பதும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த பல்கலைகழக நிர்வாக சீர்கேட்டிற்கு பளிச்செனத் தெரியும் ஒரு உதாரணம் ராதா கிருஷ்ணணனை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து பொய் வாக்குமூலம் வாங்கிய பூசன் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஒரு உறுப்பினர். இதையும் அம்பலப்படுத்தி மாணவர் மத்தியில் பேசப்பட்டது.  மேலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் ஹரிஹரன் கும்பலைத் தண்டிக்கக் கோரியும் பல்கலைக்கழகம் பார்ப்பனமயமாகிவிட்டதைக் கண்டித்தும் பல்கலைகழக வளாகம் மற்றும் புதுவை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சுவரொட்டி
ஹரிஹரன் மற்றும் கூட்டாளிகளை அம்பலப்படுத்தி புதுவை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.
ஆங்கில சுவரொட்டி
போராட்டத்தை ஒட்டி பல்கலைகழக வளாகத்தினுள் ஒட்டப்பட்ட A3 அளவு சுவரொட்டி.

அதுமட்டுமன்றி ஹைதராபாத் உள்ளிட்ட பிற மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் அந்தந்த வளாகங்களில் புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அராஜகப் போக்கைக் கண்டித்துச் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதோடு அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கையெழுத்தியக்கமும் தொடங்கியுள்ளனர். போராட்டம் ஒன்றுதான் தம் விடுதலையையும் உரிமைகளையும் பெற ஒரே வழி என்பதைப் புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் ராதா கிருஷ்ணனுக்கு நடந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தின் மூலம் தாமாகவே தம் சொந்த அனுபவத்தில் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

இவண்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.)
தமிழ்நாடு & புதுச்சேரி