privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !

அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

may-day-poster-3ஓட்டுப் போட்டு விட்டோம். புதிய ஆட்சி வரப்போகிறது. ஏதாவது நல்லது நடக்கப்போகிறது என நீங்கள் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால், மோடியோ, லேடியோ அல்லது வேறு எந்த கேடியோ யாருடைய ஆட்சி அமைந்தாலும் நம்முடைய பிரச்சினைகள் தீரப்போவதில்லை; மாறாக, தீவிரமடையத்தான் போகின்றன.

ஆட்சி மாறலாம், அவலங்கள் மாறாது!

யார் ஆட்சிக்கு வந்தாலும் கல்வி தனியார்மயம் ஒழியாது;
கல்விக்கட்டணங்கள் உயரும்;
மருத்துவச்செலவு அதிகரிக்கும்;
விலைவாசி இன்னும் உயரும்;
டாஸ்மாக் சாராயக்கடைகளால் தாலியறுக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;
பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்மயமாகும்;
மின்வெட்டு நீடிக்கும்;
அப்படியே மின்வெட்டு நீக்கப்பட்டாலும் மின்கட்டணம் மூன்று, நான்கு மடங்கு உயரும்; மீதேன் எடுப்பு;
ஜிண்டால் இரும்புத்தாது எடுப்பு திட்டங்கள், ஆபத்தான அணு உலைகள் தொடரும்;
தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை வரைமுறையற்று நடக்கும்;
இதனால் எல்லா இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு நிலம், நீர், வான்வெளி என அனைத்தும் நஞ்சாகி பாழாகும்;
காடுகள் அழிக்கப்படும்;
குடிதண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும்.

விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், சிறு, குறு தொழிலதிபர்கள், மீனவர்கள், வணிகர்கள் ஆகியோரின் வாழ்வாதார உடைமைகள் பறிக்கப்பட்டு ஏதுமற்றவர்களாக விசிறியடிக்கப்படுவதும் அதிகமாகும். மிச்சமீதி இருகின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் பறிக்கப்பட்டு, நிரந்தரத் தொழிலாளர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டு ஒப்பந்த தினக்கூலித் தொழிலாளர்களாக எல்லோரும் மாற்றப்படுவார்கள். 12 மணி நேர சிப்ட் முறையில் இன்னும் கடுமையாக ஒட்டச் சுரண்டப்படுவார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்கும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வுகளும் மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.

பட்டப் பகலில் கொலை கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை கலாச்சாரம், நுகர்வுவெறி கலாச்சாரம், ஆபாச சீரழிவுகள், வக்கிரங்கள், போலீசின் அராஜகம் பெருகும். இலஞ்சம், ஊழல் அதிகரிக்கும். தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் சிவில், ஜனநாயக உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒரு பாசிச காட்டாட்சி கட்டவிழ்த்து விடப்பட்டு எல்லா பிரிவு மக்களின் நியாயமான போராட்டங்களும் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படும். சாதி, மதவெறியர்களின் கட்சிகளும் சங்கங்களும் போலீசு துணையோடு வெறியாட்டம் போடும்.

மேற்சொன்ன எல்லாக் கொடுமைகளும் சுரண்டல்களும் ஏற்பட்டதற்கு அடிப்படை 1990-களின் தொடக்கத்திலிருந்து புகுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள் தான். அன்றிலிருந்து இன்று வரை எல்லா மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் (எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆண்ட போதும்) இந்த கொள்கைகளையே போட்டி போட்டுக் கொண்டு அமுல்படுத்தி வந்துள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட எந்தக் கூட்டணியாவது அல்லது கட்சியாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளை அமுல்படுத்த மாட்டோம் எனச் சொல்லவில்லை. மாறாக, அவற்றை தீவிரமாக அமுல்படுத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பை பெருக்கி நமது வாழ்க்கையை உண்னதமாக்கப் போவதாகத் தான் சவடால் அடிக்கின்றன. எனவே தான், தனியார்மய-தாராளமய- உலகமயக் கொள்கைகளால் ஏற்கெனவே உருவான கொடுமைகளும் சீரழிவுகளும் தீவிரமாகும் என்று அடித்துச்சொல்கிறோம்.

பகட்டாகிறது வாழ்க்கை! படுகுழியில் பண்பாடு!

தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளால் பல்வேறு வசதிகள் வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன, முதலாளித்துவ ஊடகங்கள். செல்போனும், இன்டெர்நெட்டும், அடுக்கு மாடிக்கட்டிடங்களும் வசதிகளின் அடையாளமாம்! இந்த வசதிகள் வந்த அதே வழியில் தான் விவசாயிகள் தற்கொலையும், வேலை பறிப்பும், கிட்னி விற்பனையும் வந்திருக்கின்றன. அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான பாலியன் வன்முறைகளும், கிரிமினல் குற்றங்களும், போதைப் பழக்கங்களும், பல்வேறு புதிய நோய்களும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இதுமட்டுமின்றி, மனித மாண்புகளையும், இயற்கையை நேசித்து பாதுகாக்கும் உயரிய பண்புகளையும் காவு கொடுத்து தான் இந்த ‘வசதிகளை’ பெற்றிருக்கிறோம்!

நீர், நிலம், கடல், வான்வெளி மட்டுமின்றி தாய்ப்பாலையும் நஞ்சாக்கியிருப்பது இந்த உலகமயமாக்கல் கொள்கை தான். நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரில் மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டியதும், தொழில் வளத்தை அதிகரிப்பது என்கிற பெயரில் 2005 முதல் 2013 வரை 8 ஆண்டுகளில் 31,11,000 கோடி ரூபாய்களை முதலாளிகளுக்கு சலுகையாக வாரி இறைத்ததும் உலகமயக் கொள்கை தான். 3.5 லட்சம் விவசாயிகளின் சாம்பலிலிருந்து தான் இந்த வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

பாராளுமன்றம் ஒரு டம்மி! ஆணையங்கள் போடுது கும்மி!

இந்த ஆட்சி அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கு (எம்.பி, எம்.எல்.ஏ) சட்டமியற்றும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நிரந்தரமாக இருக்கும் அதிகாரிகள், போலீசு, இராணுவம், நீதிபதிகள் ஆகியோரிடம் உள்ளது. இவர்கள் தான் நமக்கு எதிரிகளாகவும் நமக்கு மேலே நின்று அதிகாரம் செலுத்தும் – அடக்கி ஒடுக்கும் வன்முறைக் கருவிகளாகவும் உள்ளனர். இவர்கள் யாரும் எம்.எல்.ஏக்களுக்கும், எம்.பி.களுக்கும் அமைச்சர்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிரந்தரமாக இவர்களின் சர்வாதிகாரமே நடக்கிறது. டெல்லியில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் கூட, எவ்வித பிரச்சினையும் இன்றி ஆட்சி நடப்பதே இதற்கு எடுத்துக்காட்டு!

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சியின் தலைமை அதைச் சுற்றியுள்ள ஒரு சிறிய கோடீஸ்வர-கிரிமினல்-சாதிவெறி-மதவெறி கும்பல் தான் பன்னாட்டு கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் கொள்ளைக்கு வசதியாக எல்லாகொள்கை முடிவுகளையும் எடுக்கின்றது. இதற்கேற்ப முதலாளிகளிடமிருந்து சன்மானங்களையும் காண்ட்ராக்ட்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

சட்டத்தை இயற்ற மட்டுமே அதிகாரத்தைக் கொண்டுள்ள பாராளுமன்ற அமைப்பை மேலும் டம்மியாக்கி வருகிறது மறுகாலனியாக்கக் கொள்கைகள். தனியார்மயத்தின் விளைவாக மிண்கட்டணம், பெட்ரோல் விலை, சாலைகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளை ஆட்சி செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டு ஆணையங்கள், தீர்ப்பாயங்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. பன்னாட்டு கம்பெனிகள், அம்பானி, அதானி போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பிரதிநிதிகள் தான் இந்த ஆணையங்கள், தீர்ப்பாயங்களை நடத்துபவர்கள். இந்த ஆணையங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ கிடையாது. அவை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து உயர் நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ போவதற்கும் உரிமை இல்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுடன் அரசு போட்டுக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது.

பாராளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் மேலே சூப்பர் அதிகார அமைப்புகளாகவே இந்த ஆணையங்களும் தீர்ப்பாயங்களும் செயல்படுகின்றன.

எல்லாக் கட்சி ஆட்சிகளிலும் இதுதான் நிலைமை. இதை தான் குஜராத் மாடல் என்று, மோடி ஏதோ தான் கண்டுபிடித்தது போல சொல்கிறார். மக்களின் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரி இறைப்பதில் மற்ற முதல்வர்களை விட முன்னணியில் இருக்கிறார் என்பதே மோடியின் ‘சாதனை’.

நீதித்துறையும் மறுகாலனியாக்கத்துக்கு பக்க மேளம் வாசித்து, நாட்டு வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையிடவும், தொழிலாளர் நலங்களை காவுகொடுத்திடவும் தீர்ப்புகளை எழுதுகிறது. அதே நேரத்தில் பார்ப்பன பயங்கரவாதத்தின் முதுகை வருடிக் கொடுத்து வருகிறது. சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு கட்டமொய்யாக எழுதியது முதல் அயோத்தி தீர்ப்பு வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பார்ப்பன ஜெயாவுக்காக சட்டத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் நுழைந்து நீதியை வளைத்து வருகிறது உச்சநீதி மன்றம்.

மொத்தத்தில், இந்த பன்னாட்டு கம்பெனிகள்-பார்ப்பன சர்வாதிகாரத்தை நம் மீது செலுத்திக்கொண்டே, ஜனநாயகத்தின் பெயரால் எல்லா மக்கள் விரோதச் செயல்களையும் திட்டங்களையும் திணிக்கின்றனர். அதை எதிர்த்தால் தடியையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி நம்மை ஒடுக்குகின்றனர். ‘வாக்குரிமை’ ஒன்றை மட்டும் நம்மிடம் கொடுத்துவிட்டு ‘ஜனநாயகம்’ நம் கைகளில் இருப்பதாக மாய்மாலம் செய்கின்றனர்.

அதிகாரத்தை கையில் எடு! அநீதிகளுக்கு முடிவு கட்டு!

இனியும் இந்த மாய்மாலத்திற்கு மசியாமல் உண்மையான ஜனநாயகத்தை, மாற்று அதிகாரத்தை நாம் கையில் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

  • பன்னாட்டுக் கம்பெனிகள், அம்பானி-டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவோம்.
  • பகற்கொள்ளையடித்த ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சொத்துக்களைப் பறித்தெடுத்து அரசுடைமையாக்குவோம்.
  • கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும் தனியார்மயத்தை ஒழித்து பொதுவுடைமையாக்குவோம்.
  • வளர்ச்சி எனும் பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்.
  • தரகு அதிகார வர்க்க முதலாளிகள், நில முதலைகள், கல்வி, மருத்துவ, ரியல் எஸ்டேட், தண்ணீர்க் கொள்ளையர் கூட்டத்தின் சொத்துரிமை, வாக்குரிமையை பறிப்போம்.
  • உழைப்போருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கும் மக்கள் அதிகாரத்தை படைப்போம்.
  •  அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.
  • சட்டம் இயற்றவும், அதை அமுல்படுத்தவும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளுக்கே. தவறிழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியைப் பறிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வாக்களித்த மக்களுக்கே.
  • போராட்டங்கள், எழுச்சிகள் மூலம் அவற்றை உண்மையான மக்கள் ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளாக வளர்த்தெடுப்போம்.

ஓட்டுக்கட்சிகள், நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் செயல்பாடுகள் எல்லாம் ஆளும் வர்க்கங்களே, அவர்களின் சித்தாந்தவாதிகளே சொன்ன விழுமியங்கள், நடத்தை விதிகள், விதிமுறைகள், ஒழுக்கங்கள், தார்மீக நெறிகள் ஆகியவைகள் எல்லாம் இந்த கட்சிகள் அமைச்சர்களாலேயே தூக்கியெறியப்பட்டு, பித்தலாட்டங்களும், ஏமாற்றுகளும் கொண்டதாக மாறிவிட்டன. அவற்றை சரி செய்ய முடியாமல் நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று அவர்களே புலம்புகின்றனர். அரசின் பிற அங்கங்களான போலீசு, அதிகார வர்க்கம், இராணுவம், நீதித்துறையும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை, விளையாட்டு, பண்பாடு, குடும்ப உறவுகள், மதம், மனித உறவுகள் அனைத்தும் இதே போல் சீரழிந்து, கேவலப்பட்டு, திவாலாகி, தோல்வியடைந்துவிட்டன என ஒப்பாரி வைக்கின்றனர். இவ்வாறு இந்தக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது என அவர்களே ஒப்புகொண்ட பின், இன்னும் தயக்கம் எதற்கு?

வாருங்கள், இதைத் தட்டித் தகர்த்தெறிவோம்! நமக்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்.

மே நாளில் சூளுரைப்போம்!

  • பன்னாட்டு கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்!
  • உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

மே நாள் தமிழகமெங்கும் பேரணி ஆர்ப்பாட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு