privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

தனியார் பள்ளிகள் ஒழியட்டும் ! அரசுப் பள்ளிகள் பெருகட்டும் !

-

“என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லாரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலை ஞானத்தால்,
பராக்கிரமத்தால், அன்பால்
உன்னத இமயமலைபோல்
ஓங்கிடும் கீர்த்தியெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந் நாளோ?”

அரசுப் பள்ளி
அடிப்படை வசதிகள் அற்ற அரசுப் பள்ளிகள்.

என்று தமிழகத்து பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக ஏக்கத்துடன் கனவு கண்டார் பாரதிதாசன். இன்னும் அந்த ஏக்கம் தீராத நிலையில், அரசால் புறக்கணிக்கப்பட்ட அடிப்படை வசதிகள், கல்விச் சூழல் குறைபாடுகள் இவற்றிற்கு இடையே அரசுப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ப்ளஸ் டூ தேர்வில் தங்களது முன்முயற்சியால் 84 சதவீதம் தேர்ச்சியை எட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சி பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியும், அவற்றில் நான்கு மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும் காட்டியுள்ளன.

இந்த சாதனையும், முன்முயற்சியும் சாதிக்கப்பட்ட சூழல் என்ன தெரியுமா?

அரசு, சட்டத்தில் கிறுக்கியுள்ள எந்த தரம் பற்றிய விதியோடும் அரசுப் பேருந்துகள் ஓடுவதில்லை என்பதை போல்தான் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அரசாணைப்படி (நிலை எண்: 270) அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உட்கட்டமைப்பு வசதிகள் எந்த பள்ளிகளிலும் இல்லை.

குடிநீர்க் குழாய், கழிப்பறை வசதி, துப்புரவு உள்ளிட்ட கல்வி பயில்வதற்கான சூழல் அனைத்துமே பிரச்சனைதான். மேற்கூரை இடிந்து விழும் நிலையில் வகுப்பறைகள் மட்டுமல்ல, மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களும் கிடையாது. உடற்பயிற்சி, கணினி அறிவியல், இசை, ஓவியம், தொழில்பயிற்சி போன்ற பாடங்களுக்கு பல இடங்களில் ஆசிரியர்கள் இல்லை, இருக்கும் ஒரு சில பள்ளிகளிலும் நிரந்தரப் பணி ஆசிரியர்களில்லை. இந்த லட்சணத்தில் பள்ளிகளில் எழுத்தர், அலுவலக உதவியாளர் பணிகளைப் பார்த்துக் கொள்வதும் இந்த பற்றாக்குறை ஆசிரியர்கள்தான்.

அரசாணைப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை நிறைவேற்றாத அரசு, இருக்கின்ற குறைவான ஆசிரியர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் வேலைகள், ஆதார் அட்டை விசாரணை என பல வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த வேலைகளுக்கு தனியாக ஊழியர்களை உருவாக்கி பயன்படுத்தாமல், மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டிய ஆசிரியப் பணியை கெடுக்கும் வகையிலும் அரசு செயல்படுகிறது.

தனியார் பள்ளிகள்
கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள்

பள்ளி ஆய்வகத்தில் தண்ணீர், ஆய்வுப் பொருட்கள் மட்டுமல்ல தேவையான ஆய்வக உதவியாளர் (LAB ASSISTANT) கூட இல்லாமல் இயங்கும் இந்த இடர்பாட்டு நிலைமைகளுக்கிடையே தான் அரசுப் பள்ளியின் ஏழை, எளிய மாணவர்களும் அரசுப் பள்ளியின் பொறுப்புள்ள ஆசிரியர்களும் சேர்ந்து இந்த தேர்ச்சி விழுக்காட்டை எட்டியுள்ளனர் என்பது வியக்கத்தக்க விசயம்!

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களாய் பார்த்து தள்ளிக் கொண்டு போய் தனியே உரம் போட்டு, வளர்க்கும் தனியார் பள்ளிகளின் சாதனை இதற்கு முன் சாதாரணம் தான். “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தாரேன் எம் புள்ளைய ஒடுக்கெடுத்து ஒரு மெடிக்கல், இன்ஜினியரிங் காலேஜ் சீட்டா மாத்திக் கொடுங்க” என்று பெற்ற பிள்ளையை தனியார் பள்ளிகளிடம் விற்கும் பெற்றோர்களின் செழிப்பான பொருளாதாரச் சுழலுடன் ஒப்பிடுகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் பெருவாரியாக படிக்கும் அரசுப் பள்ளிகளின் சாதனை மெச்சத்தகுந்தது.

விரல்விட்டு எண்ணக் கூடிய முதலிடம், இரண்டாமிடம் என்று கதாநாயகர்களைக் காட்டும் தனியார், சுயநிதிப் பள்ளிகளில் படிக்கும் பலரை கேட்டுப்பாருங்கள்! பலரது மதிப்பெண் 800, 830 என்று தொள்ளாயிரத்துக்கும் கீழ்தான்.

பர்ஸ்ட் ரேங்கை காட்டி பரபரப்பூட்டி உங்கள் பல்சை ஏத்தி, பர்ஸ் ரேங்க்கை கொள்ளையடிப்பதுதான் தனியார் பள்ளிகளின் தந்திரம். மற்றபடி தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டாலே பையன் மார்க்கு தள்ளும் ஏ.டி.எம். மிசினா மாறிடுவான் என்று நம்புகிறவர்கள் எண்ணத்தில் மண்தான்!

மூணு சப்ஜெட்டில் பெயில் அரசு பள்ளியில் பார்ப்பதில் ஆச்சரியமில்லை, அங்கே அரசாங்கமே பெயிலாகி கிடக்கையில், பிள்ளைகள் பாசாவதுதான் அதிசயம். ஆனால், சொத்துல பாதியக்கொட்டி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட வாரிசு அங்கேயும் மூணு சப்ஜெக்ட்ல பெயில் என்பதைப் பார்க்கையில் தனியார் பள்ளியின் தரத்தையும், மேட்டுக்குடியின் வர்க்கத் தரத்தையும் உரித்துக் காட்டுகிறது, கெட்டாலும் மேன் மக்களே!

குறைபாடுகளுடைய அரசுப் பள்ளிச் சூழலுக்கிடையேயும் சாதாரண ஏழை உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பெருமளவு தேர்ச்சியும், மதிப்பெண்களும் பெற்றிருப்பதன் மூலம் அரசால்தான் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கமுடியும் என்ற உண்மை பளிச்சிடுவதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம்.

விறகு வெட்டும் தொழிலாளியின் மகள் உசிலம்பட்டி உஷாராணி புவியியலில் 200 -க்கு 200 என பொளந்து கட்டியிருக்கிறார். பென்னாகர் அரசுப் பள்ளி மாணவி பச்சையம்மாள் நர்சிங் பாடத்தில் 192 எடுத்து மாநிலத்திலேயே மூன்றாவது வந்துள்ளார். (முதல் மதிப்பெண் 193 – தான்).

கட்டணக் கொள்ளை
தங்களால்தான் இந்த தரம் சாத்தியம் என்று தம்பட்டமடித்து தனியார் பள்ளிகள் கல்லா கட்டத்தான் இந்த அதிக மார்க் ஆர்ப்பாட்டம் பயன்படுகிறது.

அரசே அனைத்து பள்ளிகளையும் நடத்தி, தரமான கல்வி வழங்கினால், எத்தனை ஏழை, எளிய மாணவர்கள் கல்வியின் மூலமாக தங்களது திறனை இன்னும் அதிகரித்துக் கொள்ள முடியும், வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு ஒப்பீட்டிற்காக மதிப்பெண், மாநிலத்தில் வரிசைத்தரம் என இருக்கிற நிலையை புரிந்து கொள்ள பேசலாமே தவிர, தேர்ச்சியைத் தவிர எதற்கு இந்த மாநிலத்திலேயே முதல், இரண்டு, மூன்றாம் இடம் என்ற பரபரப்பு?

பாசானவனெல்லாம் பெரிய அறிவாளி என்ற பந்தா எதற்கு? வீட்டில் பீஸ் போனால் பீஸ் கூட போடத் தெரியாத பி.ஈ. படித்த சிங்கமும் உண்டு, ஹெல்ப்பரா வேல பாத்து விட்டே ஒட்டுமொத்த ஒயரிங்கும் பண்ணத்தெரிந்த பெயிலானவனும் உண்டு!

அறிவுக்கும், மார்க்குக்கும் சம்பந்தமில்லாத நாட்டில், இந்த ஆர்பாட்டமெல்லாம் ‘பாரு பாரு எங்க பள்ளி பர்ஸ்ட் ரேங்க்கு’ என்று சீன்காட்டி நம்மிடம் காசு புடுங்கத்தான் பயன்படும்!

ஊருக்குள் நடந்தால் இன்னும் ஒரு மாசத்துக்கு தனியார் பள்ளிகளின் தேர்ச்சி புராண ப்ளக்ஸ் பேனர் தொல்லை தாங்க முடியாது! முதலில் கண்ணை பிடுங்கும் விளம்பரம், பின்பு காசை புடுங்கும் கல்வித்தரம்! இதுதான் தனியார் பள்ளியின் தந்திரம்!

தேர்ச்சி விகிதத்தோடு அறிவிப்பு போதும், முதலில் பெயிலானவர்கள், பின் தங்கியவர்களை, ஏற்றத்தாழ்வு காண்பிக்கும் இந்த பர்ஸ்ட்மார்க் பந்தா, ஆரவாரத்தை நிறுத்த வேண்டும்!

“தாம் இன்புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்ற வள்ளுவரின் அழகிய கருத்தினிமை போல கல்வியின் இன்பம் அதை பிறரும் பெறுவதைக் காணும் இன்பம்தானே ஒழிய பீத்திக்கொண்டு அலையத் தேவையில்லாதது.

தங்களால்தான் இந்த தரம் சாத்தியம் என்று தம்பட்டமடித்து தனியார் பள்ளிகள் கல்லா கட்டத்தான் இந்த அதிக மார்க் ஆர்ப்பாட்டம் பயன்படுகிறது.

அரசாங்கமே வறண்டு போகுமளவுக்கு அனைத்து சூழலையும் சுரண்டிக்கொள்ளும் தனியார் பள்ளிகளை ஒழித்தால்தான் பெருவாரியான மக்களுக்கு கல்வி விடுதலையே கிடைக்கும்.

மாணவர்கள், இளைஞர்கள் போராட வரமாட்டார்கள் என்பது நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல், பத்து முறை சொன்னாலும் பிள்ளைக்கு அ – னா எழுத வரவில்லை என்பதற்காக யாரும் தற்குறியாய் விடுவதில்லை, எப்படியாவது தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று விடாப்பிடியாய் போராடுவது போல தங்களுக்கு தேவையான அரசுப்பள்ளிகளை அனைவருக்கும் பெற போராடித்தான் ஆகவேண்டும்! “அரசே அனைவருக்கும் தரமான தாய்மொழிவழிக் கல்வியை வழங்கு” என்று வீதிக்கு வந்து பாடம் படிக்கத்தான் வேண்டும்! “எதுக்கு தனியாரு? எங்களுக்குத் தேவை அரசுப் பள்ளிகள்தான்” என்று தமிழகமே முழங்க வேண்டும்!

எனவே கல்வியை காசாக்கும் தனியார்மயக் கயமையை முதலில் ஒழித்துகட்ட வேண்டும், கல்வியின் சமுதாய நலன்களை சீரழித்து, சுயநல, சுயநிதி வெறியைத் தூண்டும் கல்வி முறையை மாற்ற வேண்டும்!

அனைத்து பள்ளியையும் அரசே ஏற்று நடத்து! அனைவருக்கும் தரமான தாய்மொழிவழிக் கல்வியை அரசே வழங்கு!” என்ற அரசியல் தேர்ச்சிதான் இனி நம் தலைமுறையைக் காப்பாற்றும்.

– துரை.சண்முகம்