Monday, October 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி

பேய்கள் உலவும் கோவை இண்டஸ் பொறியியல் கல்லூரி

-

இன்டஸ் பொறியியல் கல்லூரி 290’களுக்கு பிறகான காட் (GATT) ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனம் அமலாக்கப்பட்டதின் விளைவால் கல்வி தனியார்மயம் தீவிரமாக்கப்பட்டது. திடீர் பணக்கார அரசியல்வாதிகளும், திடீர் பணக்கார ரவுடிகளும், சாராய, மணல், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும், மொத்தத்தில் பணக்காரர் எவரும் கல்வி நிறுவனம் துவங்கலாம், கல்வித் தந்தை ஆகலாம்  எனும் நிலை தோன்றியது. இதனாலேயே புற்றீசல் போல கல்லூரிகளும் பள்ளிகளும் துவங்கப்பட்டன. அதிலும் பொறியியல் கல்லூரிகள் பல்கிப்பெருகின. இத்தகையதோர் கிரிமினல் கல்வி முதலாளியின் கொடூரமான லாப வெறிக்கு வாழும் உதாரணமாக கோவை ஆலாந்துறை அருகிலுள்ள இண்டஸ் பொறியியல் கல்லூரி ‘ஒளி’ வீசிக் கொண்டிருக்கிறது.

மாணவர்களிடையே பொறியியல் கல்விக் கொள்ளை ஆர்வம் குறைந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு இருண்ட கல்லூரியை அறிமுகப்படுத்துவது பயனளிக்கும். இந்த இண்டஸ் கல்லூரி மற்றும் ஈஸா காருண்யா போன்ற பல நிறுவனங்கள், மேற்கு தொடர்ச்சி மலை அருகாமையில் ஆக்கிரமித்துக் கொண்டு, வனபகுதி ஆக்கிரமிப்பு வழக்குகளில் உள்ளன. அதில் இந்த கல்லூரி மிக மோசம்.

வனப்பகுதிக்கும் ஊர்ப்புறத்திற்கும் இடையே “இடைதாங்கு மண்டலம்” என்று ஒரு பகுதி இருக்கும். இங்கு எந்த கட்டிடமும் இருக்க கூடாது என்பதே விதி. ஆனால் இந்த கல்லூரியில் அந்த இடைதாங்கு மண்டல குறியீட்டு கல்லே கல்லூரி வளாகத்தில்தான் இருக்கிறது. அடுத்து இன்னும் எத்தனை நாட்கள் இந்த கல்லூரி இருக்கும் என தெரியாத நிலையில் இங்கு படிக்கும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களின், 800 குடும்பங்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த திருட்டுக் கல்லூரி.

இந்த கல்லூரி மாணவர்கள் சமீபத்தில், அடிப்படை வசதிகளுக்காகவும் தரமான உணவுக்காகவும் செய்த போராட்டமும், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த நிகழ்வையும் கவனித்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் அங்கே சென்றோம். கிளம்பும் போதே மணி மாலை 6 ஆகிவிட்டிருந்தது. ஆலாந்துறை சென்று விசாரித்ததில் பெரும்பாலானோர்க்கு அப்படி ஒரு கல்லூரி இருப்பதே தெரியவில்லை. மேலும் விசாரித்துக்கொண்டு சென்றோம்.

கல்லூரியின் முகப்பு என அவர்கள் இணைய தளத்தில் போட்டிருக்கும் படம். ஆனால் இப்படி ஒரு கட்டிடமே அங்கு இல்லை.

நாதே கவுண்டன் புதூர், காளிமங்கலம் செல்லும் வழியில் முதனத்மைச் சாலையிலிருந்து கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டியிருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலை வனத்திற்குள்  செல்லும் சாலை அது. இருபுறமும் தெரு விளக்கு ஏதுமின்றி கும்மிருட்டாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யானையோ,சிறுத்தையோ அல்லது காட்டுப்பன்றியோ வரக்கூடிய சூழல். வீடுகளிலும் 7 மணிக்கு மேல் யாரும் பெரும்பாலும் வெளியே வருவதில்லை. ஊரை தாண்டி வனத்திற்குள் செல்லும் சாலையில் நடந்து, கிட்டத்தட்ட கல்லூரியை நெருங்கி விட்டோம். மலையின் அடிவாரத்திற்கே வந்து விட்டோம். மணி எட்டு இருக்கும். சாலையின் இடது புறம் நான்கு மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். ரொம்ப நல்லதாகவே போச்சு என நினைத்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் பேசினோம்.

இறங்கியவுடன் “அட்மிஷனா…?” என கேட்டனர்.

இல்லை என கூறி புமாஇமு-வை அறிமுகப்படுத்திக் கொண்டு, கல்லூரியில் என்னதான் நடக்கிறதென்பதை தெரிந்து கொள்ள வந்ததை கூற…

அம்மாணவர்கள் விரக்தியுடன் பேசத் துவங்கினர்.

“நீங்களே பாருங்கண்ணா.,
ஆலாந்துறை யிலிருந்து காளி மங்களம் வரைதான் அரசுப்பேருந்து. அதுவும் மூன்று பேருந்து தான். அங்கிருந்து எப்பவுமே இரண்டு கிலோமீட்டர் நடந்து தான் வர வேண்டும். அந்த பேருந்தை விட்டு விட்டால் அவ்வளவு தான், எட்டு கிலோ மீட்டர் நடக்கணும். இத்தனைக்கும் இது யானை அடிக்கடி இறங்கும் பகுதி. இப்பவும் பஸ்ஸை விட்டுவிட்டு நடந்து வருகிறோம்” என்றார்கள்.  “

எப்படி பயமில்லாமல் வருகிறீர்கள்” என கேட்கவும், பழகி விட்டது என்கிறார்கள். “சரி, இப்போது எங்கே போய்விட்டு இவ்வளவு லேட்டாக வருகிறீர்கள்” என்று கேட்டவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கல்லூரியில் சென்று அப்ளிகேஷன் வாங்கி வந்ததை கூறினார்கள். கல்லூரி மாறுமளவுக்கு அங்கே என்ன பிரச்சினை..?

“இந்த காலேஜ் தாண்ணா பிரச்சினை.

அஞ்சு மாசமா எந்த ஸ்டாஃப்க்கும் சம்பளம் கொடுக்கல, அதனால அவங்களும் பாடம் நடத்தல. கேண்டீன்ல சாப்பாடு எதுவுமே சரியில்ல… அண்ணா பல்கலை கவுன்சிலிங்க் மூலமா தெரியாம வந்து சேர்ந்துட்டோம். இப்ப TC தர மாட்டேங்குறான். குடிக்கவோ, குளிக்கவோ தண்ணி இல்லீங்க. எந்த பிரச்சினை எடுத்து ஸ்டிரைக் பண்ணாலும் டைரக்டர் வருவாரு (சிவகுமார்). பசங்கள்ட்ட ‘அப்பிடியே நாளைக்கு ரெடி பண்ணிறலாம், நாளை மறு நாள் செஞ்சுரலாம்னு’ சொல்லி சொல்லியே கலைச்சுருவாரு. நல்லா மண்டைய கழுவுவாரு. அடுத்த ஒரு வாரத்துக்கு நல்லா இருக்கும் அப்புறம் அவ்ளோதான் மறுபடியும் பழைய பஞ்சாங்கம்தான் தொடரும்.

ஸ்டாஃப் எல்லோருமே எங்களுக்கு சப்போர்ட்டு, பிரின்சிபாலும் எங்களுக்கு சப்போர்ட்டு. ஸ்டாஃப்ல முக்காவாசி பேரு M.E கூட கம்ப்ளீட் பண்ணல. எல்லாம் BE முடிச்சிட்டு வேலையில்லாம இருந்தவங்க அப்புறம் M.E கரஸ்ல பண்றவங்க. அவ்ளோதான்.

போன மாதம் முதல் வருட மாணவன் ஒருவன் சகித்துக்கொள்ள முடியாமல் TC வாங்க அவனின் பெற்றோரை  அழைத்து வர… கல்லூரி நிர்வாகமோ, “இப்பல்லாம் டைரக்டரா பாக்க முடியாது. TC யும் தர முடியாது நீங்க அப்டியே ஈசா வெள்ளிங்கிரி மலைனு சுத்தி பாத்துட்டு ஊரப்பாக்க போங்க”  என தெனாவெட்டாக பதில் சொல்லியிருக்கிறது.

இன்னொரு மாணவனின் தந்தையும் தந்தையின் நண்பர்களும் பையனை பார்க்கலாம் என வந்த பொழுது குடிக்கவோ…கழிவறை தேவைக்கோ கூட தண்ணியில்லாமல் தொட்டியில் இறங்கி மாணவர்கள் மொண்டு கொடுத்திருக்கிறார்கள்.

இண்டஸ் பொறியியில் கல்லூரி
கல்லூரியின் இணைய தளத்தில் மட்டும் இடம் பெற்றிருக்கும் ஃகிராபிக் கட்டிடம். நேரில் சென்றால் யாரும் பார்க்க முடியாத பேய் மாளிகை!

இதிலும் ஹாஸ்டலில் உள்ள பெண்கள் நிலை ரொம்பவுமே மோசம். தண்ணியில்லாம என்னதான் செய்யறாங்களோ… வெளியவே வர மாட்டாங்கண்ணா. நீர்த்தேக்க தொட்டி சுத்தமாகவே பராமரிப்பில்லாமல் பாசி பிடித்து பார்க்கவே அருவெறுப்பாக இருக்கும். அந்த தண்ணில குளிச்சு நிறையா பேருக்கு ஸ்கின் டிசிஸ் வந்துருக்குது என்றனர். கைகளிலும் தோள் பட்டையிலும் நிறைய பேருக்கு கொப்புளங்களும் தேமலும் தென்பட்டன.

இன்ஸ்பெக்சன் வரும் பொழுது மட்டும் வெளியிலிருந்து வாடகைக்கு படித்த ஸ்டாஃப்களை கூட்டி வந்து பில்ட் அப் கொடுத்துவிடுவார்கள். மாணவர்கள் எங்களுக்கு ஐடி கார்டு மூணு மாசம் கழித்து தான் வந்துச்சு ஆனா அவங்களுக்கு ஒரே நாள்ல ஐடி கார்டு. இன்ஸ்பெக்சன் வர்ற அன்னிக்கு  எங்கள வெளியவே விட மாட்டாங்க. இல்ல லீவு விட்டு அனுப்பிருவாங்க… ஸ்டிரைக் பண்ணா ஒன் வீக் லீவு. தண்ணி யில்லானா லீவு, என்ன பிரச்சினைனாலும் லீவு. பாடம் இன்னும் ஒரு யூனிட் கூட கம்ப்ளீட் பண்ணலனா… அப்புறம் நாங்க எப்படிதான் படிக்கிறது. இதுனாலயே எல்லோருமே அரியரு. ஆனா பீஸு மட்டும் கரக்டா வாங்கிருவாங்கண்ணா….. வருசத்துக்கு அப்டி இப்பிடி னு கிட்டத்தட்ட 1 லட்சம் வாங்கிருவாங்க…

கரண்ட் பல மாசமா கட்டாம EB ல இருந்து வந்து பீஸ் கட்டய புடுங்கிட்டு போயிட்டாங்க. ஒரு வாரம் இருட்டுல கெடந்தோம் சாப்டரப்ப மட்டும் அரை மணி நேரம் ஜெனரேட்டர் போடுவாங்க அவ்ளோதான். ஃபோன் பில் கட்டாம நெட் கனக்சன கட் பண்ணி விட்டுட்டாங்க…. வேற வழியில்லாம பிரின்சிபால் அவர் வீட்டிலிருந்து டேட்டா கார்டு கொண்டு வந்து கல்லூரி கோப்புகளை மாணவர் மதிப்பெண்களை அண்ணா யூனிவர்சிட்டிக்கு அப்லோட் பண்ணுனாரு. இந்த மாதிரியான கொடுமை எங்கயாவது  நடக்குமா…

ஒவ்வொரு ஸ்டாப்க்கும் 50,000 வரை சம்பளம் பெண்டிங்க். இது போக பிரின்சிபால், ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட் HOD எல்லாம் லச்சக்கணக்குல காலேஜ்க்கு கடன் கொடுத்துட்டு அதுவும் கெடைக்காம சம்பளமும் இல்லாம இருக்காங்க. காலேஜ் பஸ் மூணு இருக்குது. மூனுமே டீசல் போட காசில்லாம நிக்குது. ஆனா எல்லாத்துக்கு பீஸு வாங்குராங்க. பிளேஸ்மெண்ட் ட்ரெயினிங்னு காசு வாங்குநாங்க…. சென்னை சில்க்ஸ்ல அக்கவுண்டண்ட் வேலைக்கு வந்து MBA பசங்க ஒரு 4 பேரை கூட்டிட்டு போனாங்க அவ்ளோதான். ஒண்ணும் நடக்கல. I.V னு சொல்லி ஒவ்வொருத்தன் கிட்டயும் 10,000 வாங்குனாங்க இன்னிக்கு வரைக்கும் காலேஜ் கேட்ட தாண்டி கூட்டிட்டு போகல.

இப்படியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்க இன்னும் ஒரு அஞ்சாறு பசங்க அதே மாதிரி நடந்து வர.. அவர்களையும் இணைத்துக்கொண்டோம். மணி ஒன்பதை தாண்டியிருந்தது. அவர்களும் வேறு கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்க போனவர்களே.

சரி, இது யானை வர இடம் காலேஜ்க்குள்ள போலாம் இல்லாட்டி நீங்க கிளம்புங்க என அவர்கள் கூற… கல்லூரிக்குள் செல்வது என முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தோம்.

இவ்ளோ நேரம் கழித்து கல்லூரிக்குள் போறோமே என்று யாரும் எங்களை மறிக்கவில்லை. நாங்கள் கேட்டை திறந்து போக வாட்ச் மேன் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

காலேஜ்க்கு போர்ட்லாம் இல்லையா….?

இருந்துச்சு….. ரெண்டு நாளைக்கு முன்னாடி கலெக்டர் ஆபீசுக்கு போறதுக்கு முந்தின நாள் ஸ்ட்ரைக்லா தான் பசங்க ஒடச்சாங்கா….!

கல்லூரியின் மெய்ன் கெட் வழியாக யானை ஒரு முறை உள்ளே வந்து பின்னே உள்ள தொட்டியில் நீர் குடித்துவிட்டு சென்றிருக்கிறது. இரு நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை உள்ளே வந்து கல்லூரிக்குள் சுற்றி கொண்டிருந்த நாயை அடித்து இழுத்து சென்றிருக்கிறது.

கல்லூரிக்கு சுற்றுச்சுவர் ஒரு புறம் தான் இருக்கிறது. மறு புறம் சுவரே இல்லை நேரடியாகவே மலையின் அடிப்புறத்தில் இறங்குகிறது.

இப்படித்தான் ஒரு முறை மாணவர்கள் தரமான உணவு வேணும் என கேட்டு ஸ்டிரைக் செய்ய டைரக்டர் வந்து மாட்டி கொண்டார். அவரை சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி மாணவர்கள் சாப்பிட வைக்க….. வாயில் வைக்க முடியாத சாப்பாட்டை நல்லாதான் இருக்கு என வாய் கூசாமல் அவர் கூற…. சார் மனசாட்சியோட சொல்லுங்க உங்க பசங்க இந்த சாப்பாட்டை சாப்பிடுவாங்கலான்னு என ஒரு மாணவர்  கேட்க… அமைதியாக தலையை குனிந்து கொண்டாராம். இப்போதெல்லாம் அவர் வருவதே இல்லை.

இண்டஸ் பொறியியில் கல்லூரி.1
கழிப்பறைக்கே வசதி செய்யாத கல்லூரி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வேலை வாங்கித் தருமாம்!

கல்லூரிக்குள் சென்று அனைத்து பகுதிகளையையும் மாணவர்கள் காட்டினார்கள். செய்முறை வகுப்பகங்களில் பயிற்சிக்கான உபகரணங்கள் அனைத்தும் பற்றாக்குறை. மொத்தமாகவே 2 அல்லது 3 லேத் தான் இருக்கும் மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கும் மொத்த மாணவர்களுக்கும். மாணவர்களின் ஹாஸ்டலும் லேப் உம் ஒரே கூரையின் கீழ் கேபின் கேபினாக பிரித்திருக்கிறார்கள். லேபை பூட்டினாலும் ஹாஸ்டல் வழியாக சென்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடலாம். அடுத்து கேண்டீனுக்கு சென்றோம். நமக்கும் சாப்பாடு போட்டு கொண்டு வந்து தந்தார்கள். சகித்து கொள்ளலாம் என்ற அளவில் இருந்தது. ஆனால் இதுவே நல்ல சாப்பாடு எனவும் ஸ்டிரைக் நடந்த பின்புதான் இந்த அளவு சாப்பாடு எனவும் கூறினர். குடிக்க தண்ணீயே பல நாள் கழித்து இப்பதான் வருது என்று கூறினர். கழிவறை காண சகிக்காமல் கதவே இல்லாமல் இருந்தது.

இவர்கள் ஸ்டிரைக் செய்யும் பொழுதெல்லாம் ஒரு ஒருங்கிணைப்பும் தீர்மானமான முடிவும் இல்லாதிருக்க நிர்வாகம் பொய்யான வாக்குறுதி கொடுத்து கலைப்பது எளிதாகவே இருந்திருக்கிறது.

வரும் 5-ம் தேதி அனைவருக்கும் TC தருவதாக கூறியிருக்கிறார்களாம். அப்படி நடக்காவிடில் மறுபடியும் ஸ்டிரைக் என அறிவிப்போம் என கூறுகின்றனர். 2007 இல் துவங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்போது கிட்டத்தட்ட 400 ரெகுலர் மாணவர்கள் 200 ஹாஸ்டல் மாணவர்கள் 200 மாணவிகள் மொத்தமாக படிக்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதத்தினரின் கருத்து என்னவெனில்…

 • இந்த விஷயத்தை பெரிய பிரச்சினை ஆக்கி அம்பலப்படுத்த வேண்டும் தமிழ்நாடு முழுவதும் தெரியப்படுத்தி இதே போன்ற கல்லூரிகளை மூட வேண்டும். அல்லது அரசுடைமையாக்க வேண்டும். அங்கீகாரம் கொடுத்த அண்ணா பல்கலை உரிய பதில் சொல்ல வேண்டும்.
 • இந்த கல்லூரி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.எங்கள் அனைவருக்கும் வேறு கல்லூரியில் இடம் வாங்கி தர வேண்டும்.

இப்படியாக இம்மாதிரியான கல்விக்கொள்ளையர்கள், அவர்கள் கொழுத்த லாபம் அடைய சமூகத்தையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகின்றனர்.

இது ஏதோ ஒரு கல்லூரியின் கதை மட்டுமல்ல. தமிழகம் ஏன் இந்தியாவின் பல கல்லூரிகளும் இப்படித்தான் இறங்குகின்றன. இன்று பெயரெடுத்திருக்கும் முன்னணி கல்லூரிகள் பலவும் பல ஆண்டுகளாக இப்படி இயங்கி பின்னர் பணத்தை சேர்த்து தம்மை கொஞ்சம் நவீனப்படுத்திக் கொண்டன. தேவைக்கு இன்றி, பன்னாட்டு நிறுவனங்களின் அடிமாட்டு கூலிக்கு மாணவர்கள் தேவை என்பதாலேயே இத்தகைய தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பெரும் வியாபாரமாக நடத்தப்படுகின்றன.

இந்த பொறியியல் மாயையிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் வெளியேற வேண்டுமென்றால் அவர்கள் மறுகாலனியாக்க எதிர்ப்பு போராட்டங்களோடு தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஆயுசு முழுக்க  உழைத்து சேர்த்த உழைப்பை இத்தகைய கல்வி பிக்பாக்கெட் முதலாளிகள்  பறித்து கொண்டு போய்விடுவர்.

_________________________________________________________________________

தகவல் –  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கோவை.

 1. ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இதே நிலமையில்தான் இயங்குகின்றன அண்ணா பல்கலைகழக இன்ஸ்பெக்சன் நடக்குறபோது மட்டும் வெளிக்கல்லூரிகளில் இருந்து லேபுக்கு தேவையான கருவிகளை கொண்டு வருவார்கள் அண்ணா பல்கலைக்கழத்துகாரங்க முன்னக்கூடியே என்னென்ன கருவிகள் லேப்ல இருக்கனும்னு லிஸ்ட் குடுத்துரான் அதவச்சு வெளிக்கல்லூரியிலோ இல்லை கம்பெனியிலோ வாடகைக்கு வாங்கி வந்து வைத்து விடுவார்கள் அப்புறம் எம் ஈ படிச்சுட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களையோ இல்லை கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களையோ ஒரு நாள் பேராசியராக நியமித்து கொள்கின்றனர் எனக்கும் அது போல ஒரு நாள் பேராசிரியாரக சென்று வந்த அனுபவம் உண்டு ஒருநாள் பேராசிரியர்கிட்ட 6 மாத அட்டனன்சுல கையெழுத்தும் 6 மாசம் 23,800 ரூபாய் சம்பளம் வாங்கியதாக வவுச்சர்ல கையெழுத்தும் வாங்கிருவாங்க ஒரு நாள் பேராசிரியரா போரவங்களுக்கு கல்லூரியின் தகுதியை பொருத்து 3000 முதல் 6000 வரை அந்த ஒருநாளுக்கு சம்பளமா குடுக்குறாங்க அண்ணா பல்கலைக்கழகம் ஏன் ரகசியமா இன்ஸ்பெக்சன் போக கூடாது அண்னா பல்கலைக்கழகம் முன் கூட்டியே தேதி குடுக்காம் இன்ஸ்பெக்சன் போனா பெரிய கல்லூரினு நம்பப்படும் கல்லூரிகளே மாட்டிக்கும் இதுதான் கல்வி வள்ளல் களின் நிலைனு தெரிஞ்சு போகும் பெரிய கல்லூரிகளில் சாப்ட்வேர் டூல்ஸ் எல்லாம் இருக்காது என் சொந்த அனுபவ்த்துல சொல்லுறேன் 5 லட்சம் பத்து லட்சம் வரை உள்ள சாப்ட்வேர் டூல்ஸ் எல்லாம் மருந்துக்கு எதேனும் ஒரு சிஸ்டத்துல மட்டும் வச்சு இருப்பாங்க அத அப்டேட் பன்றதுக்கு கூட தெரியாத பேரசிரியர்கள்தான் இருப்பனுக எல்லாத்தயும் சரியா வச்சு இருக்குற கல்லூரிய தேடினா 600 கல்லூரில 10 கூட மிஞ்சாது வினவு தைரியமா யாரும் எழுதாத விசயத்த எழுதுது நன்றி வினவு

 2. பின் குறிப்பு _ யாரவது மந்திரி இல்ல அவனுக்கு வேண்டப்பட்டவன் கல்லூரிய வினவு தைரியமா இது போல நோண்டி வெளிய கொண்டு வருமா தைரியமா மந்திரி பினாமி பேருல நடத்துற கல்லூரில இது போல நடக்குது வெளிய சொன்னா வெக்கக்கேடு அது இப்ப பெரிய கல்லூரி ஆங்…..

 3. திருடன் கடை தொறந்த மாதிறி இந்த இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகம் முழுவது நீக்கமரம் போல பல இடங்களீல் நீங்கள் பார்க்கலாம். இதருக்கு மிக முக்கியமான கரணம் ௧. மாணவரும் அவர் பெட்றோறும் தான் காரணம் எந்த ஒரு அடிப்படை காரணமும் இல்லாம கோவை, சென்னை பகுதி இருக்கு கல்லூரிகள் தேருந்து எடுக்கறது (இங்க படிச்ச பசங்க வெளி நாடுகள வேலை செயரங்க என்று சொல்லிகொண்டு போய் சேருவது, அந்த பசங்க வெளி நாடுகள என்ன பண்ணுறன் என்று கூட கேக்கமா) அப்பறம் அது நொட்டை இது நொட்டை என்று கூப்பாடு போடுவது. இதறுக்கு மாணவன் மற்றும் அவன் பெட்றோறுக்கும் உள்ள பேராசை இதை இந்த கல்லூரிகல் பையன் படுத்தி கொள்ளுகிறது.

  இதைவிட கொடுமை ஒன்னு இருக்குது ஊருக்கு ஒரு பொறீயல் படிப்பு சேர்கை மையம் உள்ளது இங்கு உள்ள தரகர்கல் சின்ன கிராமாதில் இருக்கும் படிபரிவு இல்லாத மாணவன் பெட்றோகலை ஏமாத்தி மாணவன் மண்டையை கழுவி இந்த மாதிரி கலுரிகளே சேத்து விடுவது தான் இவர்கள் வேலை ஆனால் இந்த தரகர்கள் கர்நாடக , ஆந்தர பல்கலைகழக படிப்பு மையம் என்று பலகை வைத்து இருப்பார்கள் இதை பத்தி வினவு ஆராச்சி பண்ணி ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்

 4. Indus College of Engineering Advisory committee:

  Sri. PDT Achary, Secretary General Loksabha, Parliament House, New Delhi.

  Sri.Gokulam Gopalan,Chairman,Sree Gokulam Medical College and Hopital, Trivandrum.

  Sri KS Babai, Correspondent, MeenakshiSundararajan College of Engineering, Chennai.

  Dr.KS Lakshmi, Correspondent, Meenakshi College, Chennai.

  Sri.N Anandan, Senate Member, Annamalai University.

  – இது அவன் வெப் சைட்டுல இருக்குற தகவல் தான். இவனுங்களயும் சும்மா உடக்கூடாது. இவனுங்கள சட்டையப்புடிச்சு சந்திக்கு இழுக்கனும்.

 5. பொறியியல் மட்டுமல்ல எல்லா கல்லூரிகளுமே.. மருத்துவம் உட்பட.. (மறக்க முடியுமா கேத்தன் தேசாயை..) அனைத்தும் இப்படியே…

 6. இந்தக் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டு கட் ஆப் மதிப்பெண் கோணல் மாணலாக உள்ளது. ஏன் எனப் புரியவில்லை!

  EEE 172
  CSE 137
  IT 117
  ECE 111
  CIVIL
  MECH 90

  சாதாரணமாக, இந்த கட் ஆப் மதிப்பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தானே இருக்கும்?? இங்கே EEE 172, MECH 90. என்னங்கய்யா இது?

  மேலே சொன்னவை OC கட் ஆப் மதிப்பெண்கள். மற்ற பிரிவினருக்கு கட் ஆப்பே கிடையாது! ஏன்னா சீட் ஃபில் ஆவலை! OC என்றால் 90 மதிப்பெண் பெற்றால் மெகானிகல் சீட் கிடைக்கும். மற்ற பிரிவினர் என்றால் பாஸ் பண்ணா போதும் (அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் போதும்).

 7. அப்படியே என் காலேஜ பத்தி படிக்கிற மாதிரி இருந்துது. இவ்வளவு ஆதரத்தோட போட்ட பின்னும் இங்குள்ள வாசகர்கள் சிசர்,” ஏன்பா பிரச்சனைன்னு சொல்லுங்க சரி… ஆனா, யானை வருகிற பாதை, காம்பவுண்ட் சுவர் இல்லை, சாப்பாடு கூட சரியில்லை அப்படின்னு சொல்றது எல்லாம் நம்பும்படி இல்லை. இப்படியொரு காலேஜ் இருக்குதுன்னா இவ்ளோ நேரத்துக்கு யார் கண்ணுலையும் படாமலேயேவா இருக்கும். அப்படின்னு நம்ப மறுப்பாங்க. ஆனால் இது மாதிரி தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த தகவல்படி 150 முதல் 220 காலேஜ் வரையில் உள்ளன. இன்னொரு விஷயம். இப்படி இருந்தும் அவர்கள் தப்பிக்க காரணம் நிறைய பேருக்கு புரியமாட்டேங்குது. இன்டர்னல் மார்க்ஸ், ப்ராக்டிகல்ஸ், ஹால் டிக்கேட், இப்படின்னு நிறைய விஷயத்தை வச்சுக்கிட்டு மாணவர்கள் வாய் திறக்க விடாமல் செய்துவிடுகிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க