Wednesday, May 18, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

-

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யாலய கேந்திரா மெட்ரிக் பள்ளியில் மாணவி வைஷ்ணவி மர்ம மரணம் ! நீதி கேட்க சென்றவர்கள் மீது போலீசு தடியடி !

”திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை…

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் வைஷ்ணவி. நேற்று பள்ளிக்கு சென்ற வைஷ்ணவி வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் மாணவியின் அம்மாவும் உறவினர்களும் பள்ளி ஆசிரியர்களும் அலுவலர்களும் பள்ளியில் தேடினார்கள். அப்போது அம்மா என்ற அலறலோடு மாடியிலிருந்து குதித்த வைஷ்ணவி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த உயிரிழந்தாள். மாணவியின் கையில் ”சாரி மம்மீ, சாரி டாடி” என்று எழுதப்பட்டிருந்தது.”

இப்படி ஒரு செய்தியை நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து இருப்போம். அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது தடியடி நடத்தியதை கூட கடனுக்காக சில ஊடகங்கள் கூறின. மொத்தமாக அது தற்கொலைதான் என்று அரசு, போலீசு, ஊடகங்கள் என அனைத்தும் ஒற்றுமையாக சாதித்தன.

எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அரசோ, பள்ளியோ, ஊடகங்களோ சொல்லவில்லை. இதைப் பற்றி பேசாமல் தற்கொலை என்று சொல்வது எதையோ மறைப்பது என்பது வெள்ளிடை மலை. ஒரு தனியார் பள்ளி என்று அப்பள்ளியின் பெயரை போடாதது பத்திரிக்கை தர்மம் என்றால் போஸ்ட்மார்டம் செய்யாமலே இது தற்கொலைதான் என்று அறிவிப்பதும் கூட பத்திரிக்கை தர்மமாக இருக்கலாம். ஒரு சோகக்கதையைப் போல இச்சம்பவத்தை வடித்த பத்திரிக்கைகள், இதற்கு அக்குழந்தையையே காரணமாக்கின.

உண்மைதான்.

“கந்து வட்டிக்கு வாங்கி புள்ளைய தனியார் பள்ளியில சேர்க்காதீங்க, அது பொணாமாகத்தான் திரும்பி வரும்” என்று பேருந்து, ரயில்கள், தெருக்களில் முழங்கிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் கூறிய வார்த்தைக்கு இம்மியளவும் மாறாமல் நடந்த கல்வி தனியார்மயத்தின் கொலைக்களத்தில் மறக்கடிக்கப்பட்ட கதைதான் வைஷ்ணவியுடையது.

ஆம், ‘நாம்தான் படிக்கவில்லை, நாம் என்ன கஷ்டப்பட்டாலும் சரி, நம் பிள்ளையயாவது படிக்கவைக்க வேண்டும்’ என்று கனவு கண்ட லட்சக்கணக்கான அப்பாக்களைப்போலவே ஒரு அப்பாதான், திருவொற்றியூர், பர்மா நகரில் வசிக்கும் வைஷ்ணவியின் தந்தை உதயகுமார். கார் டிரைவராக வேலை பார்த்தாலும் கருவேப்பிலைக்கொழுந்து போல பெற்றெடுத்த ஒரு பெண்ணையும் ஒரு பையனையும் சுற்றிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் சேர்த்தார். பெண்ணை திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியிலும் பையனை டான் பாஸ்கோவிலும் சேர்த்தார். கல்விக்கட்டணம் மிகவும் அதிகம் தான், என்ன செய்வது ? பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தார்.

சென்ற வாரம் கூட வைஷ்ணவி படிக்கும் பள்ளியில் இருந்து உதயகுமாரை வரச்சொன்னார்கள். பீஸ் கட்டுவதற்கான கெடு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியதாக தகவல் தெரிவித்தார்கள். “அய்யய்யோ பிள்ளையோட வாழ்க்கை பாழாப்போயிடுமே” என்று கந்து வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கி தனியார் பள்ளியில் கொட்டினார், தன் பிள்ளையை இன்னும் ஒரு வாரத்தில் சடலமாக மூட்டையில் வந்து கொட்டுவார்கள் என்று தெரியாமலே.

எப்போதும் பள்ளி 3.30 மணிக்கே முடிந்துவிடும், 4 அல்லது 4.30 மணிக்குள் வைஷ்ணவி வீட்டிற்கு வந்து விடுவாள். 27 ஜூன் அன்று மாலை 5 மணி ஆகியும் அவள் வரவில்லை என்பதால், வைஷ்ணவியின் உறவினர்கள் பள்ளியில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது வாட்ச்மேன், அவர்களிடம் ”உள்ளே யாரும் இல்லை அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். உங்கள் மகள் எங்கே போனாள்? என்பது எங்களுக்கு தெரியாது, மறுபடி வீட்டிற்கு போய் பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி உள்ளார்.

அதன் பின் மறுபடி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். இரவு 7 மணி ஆனதும் பயந்து போன உறவினர்கள் மறுபடியும் சென்று பள்ளியில் விசாரித்துள்ளனர். பள்ளியின் காவலர் மீண்டும் பழையபடியே பேச, வந்த உறவினர்கள் கோபத்தில் சத்தமிட வேறு வழியின்றி “உள்ளே பி.டி ஆசிரியர் இருப்பார். அவர்கிட்ட கேட்டுப் பாருங்க” என்று அவர் வழிவிட்டார். பதைபதைப்போடு அவரிடம் முறையிட்டார்கள், அவரோ உள்ளே யாரும் இல்லை என்று மாணவியின் உறவினர்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

வேறு வழியின்றி திரும்பிய அவர்களின் கண்ணில் பள்ளிக்கட்டிடத்தில் யாரோ காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது போல் இருந்தது. நம்ம பொண்ணா இருக்குமோ? என்ற பயத்தில் ”அம்மா வைஷ்ணவி ” என்று உறவினர்கள் அழைத்துபடியே அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள், காலில் ஷூவும் சாக்ஸும் இல்லை.

குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வைஷ்ணவியோடு மேலே யாராவது இருந்தார்களா என்று கவனிக்காமல் தூக்கிச் சென்றார்கள், மருத்துவமனைக்கு. செல்லும் வழியிலேயே வைஷ்ணவியின் உயிர் பிரிந்தது. மேற்கொண்டு பள்ளியில் இருந்து யாரும் வைஷ்ணவியின் பெற்றோரை சந்தித்து பேசவும் இல்லை. இந்த மவுனமே மாணவியின் இறப்புக்கும் பள்ளிக்கும் உள்ள தொடர்பைக் கூற அந்த மாணவியின் வீட்டருகே உள்ள சாலையில் உறவினர்கள், அருகில் உள்ள மக்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளியின் ‘செல்வாக்கை’ பயன்படுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள் மூலமாக அப்போராட்டம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

வைஷ்ணவியின் மரணத்துக்கு காரணமான தனியார் பள்ளியின் மீதான கோபம் போராடிக் கொண்டிருந்த மக்களிடம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. பிரச்சினையை கேள்விப்பட்டுப் போன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், தமிழகம் முழுவதும் நடக்கும் கல்வி தனியார்மயத்தின் பலிகளை விளக்கி “இனியும் இப்படி அழுது கொண்டிருந்தால் எந்த பயனும்கிடைக்காது, பிள்ளையின் இறப்பிற்கும் நியாயமும் கிடைக்காது. பள்ளி நிர்வாகம் நேரில் வரும் வரை பிணத்தை எடுக்காமல், பள்ளிக்கு சென்று முற்றுகையிடுவோம்” என்றார்கள்.

உள்ளூர் அரசியல்கட்சியை சேர்ந்த சிலரோ, “போராட்டம் எதுவும் வேண்டாம், டி.வி யில் பேட்டி கொடுப்பதன் மூலமே இந்த விசயத்தை பரவலாக்கலாம்” என்று பேச,

அழுது கொண்டிருந்த மாணவியின் அம்மா “அவர்களிடம் பேட்டி கொடுத்தால் மட்டும் என் பிள்ளை திரும்பி வந்து விடுமா? உங்களால் என் பிள்ளையை திருப்பி கொடுக்க முடியுமா? இறந்தது என் பிள்ளை, அதற்கு நியாயம் கிடைக்கணும். பத்திரிக்கையில என் மகள், என் கண் முன் தான் விழுந்து இறந்தாள் போட்டிருக்குது, எப்படி அவர்கள் எழுதுவார்கள், என் பிள்ளையின் மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்காது, யாரோ தள்ளி விட்டு தான் இருக்கணும், என்ன நடந்தது என்று யாரும் சொல்ல மாட்றாங்க, தனியா அந்த பிள்ளை ஏன் மொட்டை மாடிக்கு போகணும், அப்படி போகணும் என்று நினைத்தாலும் வழி குறுகலாகத்தான் இருக்கும். அதில் பையை மாட்டிக் கொண்டு போய் இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை தற்கொலையாகவே இருந்தாலும், பெற்றோர்கள் பிள்ளையை காணவில்லை என்று சொல்லும் போது, ஒழுங்காக எந்த பதிலும் சொல்ல வில்லை. நாங்க காசு கொட்டி அழுதது, பிள்ளையை அவர்கள் காவு வாங்குவதற்கா? நம்பி தானே பிள்ளையை அனுப்பினேன். இப்போது பிணமாக அனுப்பி இருக்காங்க, எனக்கு இதற்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்” என்றபடி அந்தத்தாயும் அவரின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட கிளம்பினார்கள்.

நாம் வருவதற்கு முன்பே தனியார் பள்ளியைக் காக்க போலீசு காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. போலீசு மக்களை தடுத்து நிறுத்த முயன்ற போதும் யாரும் கலைந்து செல்லவில்லை. நேரம் செல்லச்செல்ல மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்து ஏறத்தாழ முந்நூறைத் தொட, இன்ஸ்பெக்டர் வந்து பள்ளிக்கு ஆதரவாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

”பள்ளியின் தாளாளர் இங்கு வந்தாக வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம்” என மக்கள் கூறத்தொடங்க, ”எங்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசம் கொடுங்கள் இப்போது வந்து விடுவார்கள்” என்று கூறிய போலீசு சிறிது நேரத்தில் , பள்ளியின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர்களை மட்டும் உள்ளே அனுப்பியது.

உள்ளே பேச்சு வார்த்தையின் போது, பள்ளி முதல்வரின் தந்தை “ஒழுக்கமான பொண்ணா இருந்தா தற்கொலை பண்ணியிருக்காது, வீட்டுல ஒழுக்கமா வளர்க்காம இங்க வந்து பேசுற”? என்று எகிற, பள்ளி முதல்வர்  ”இது தவறு தான் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், வெளியே பெரிய விசயமாக கொண்டு செல்லாதீர்கள் , காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்று இருவரும் நாடகமாட, எவ்வித முடிவும் இல்லாமல் மக்கள் வெளியேறினார்கள்.

நிர்வாகத்தின் சார்பில், பி.டி ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், மற்றும் வாட்ச்மேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தனர். மக்கள் இதை ஏற்காமல் “நடவடிக்கை மட்டும் போதாது, அவர்களையும் பள்ளி நிர்வாகியையும் கைது செய்ய வேண்டும்” என்று கூச்சலிட, அதை ஏற்பது போல கூறி சிலரை சஸ்பெண்ட் செய்வதை மட்டும் எழுதிக்கொடுத்தது பள்ளி நிர்வாகம்.

அதை ஏற்க மறுத்த மக்கள் மீது போலீசு தடியடி நடத்தி தன் விசுவாசத்தைக் காட்டியது. சிதறி ஓடிய 50 பேரை குறிவைத்துத் தாக்கி, தான் தனியார் பள்ளி முதலாளிகளின் விசுவாசமிக்க நாய் என்பதை மீண்டும் நிரூபித்தது. அரசு ஊரை ஏமாற்ற அமைத்த ஆர்டிஓ விசாரணையோ தனியார்பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் விசாரணை நடத்திவிட்டு சென்றது.

வைஷ்ணவியின் அப்பா உதயகுமார் நம்மிடம் “ஆர்டிஓ அறிக்கை வர ஒரு வாரம் ஆகுமாம். இனி எது செய்தாலும் பயன் இல்லை, நாளை என் பிள்ளைக்கு நடந்தது வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக் கூடாது. இருக்குற இன்னொரு புள்ளையையும் தனியார் பள்ளிக்கு நான் காவு கொடுக்க மாட்டேன். உடனே டிசியை வாங்கிட்டு, அவனை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க போறேன். அவனோட உயிர்தான் முக்கியம்.”என்றார்.

பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்றால் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மேல் நடத்தும் உளவியல் சித்திரவதை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படிக்கும் வயதில் படிப்பதற்கான செலவே கழுத்தை நெரிக்கும் காரணமாக இருந்தால் வைஷ்ணவி ஒரு கணத்தில் ஏன் உடைந்து போக கூடாது? அல்லது வேறு காரணங்களா? அப்படி இருந்தாலும் பள்ளி பெயரைக் காப்பாற்ற இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். வைஷ்ணவியின் பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கதறலை நெரிப்பதற்கு அரசும், போலிசும், சங்கர வித்யாலயாவும் பெரு முயற்சி செய்கின்றன.

கல்வி தனியார்மயத்தை ஒழிக்கப் போராடாமல் இனியும் நாம் அமைதியாக இருந்தால் கல்வி தனியார்மயத்தின் புதைகுழியில் நம்பிள்ளைகளை பலிகொடுப்பதில்தான் முடியும் என்பதைத்தவிர வைஷ்ணவியின் மரணம் வேறெதைக் கூறுகிறது?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் –
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை . தொடர்புக்கு : 9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க