Sunday, May 26, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகுடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை - மகஇக

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்

16, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற் சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
தொலைபேசி 99411 75876
மின்னஞ்சல் – vinavu@gmail.com    pukatn@gmail.com

பத்திரிகை செய்தி

குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை!

த்தாண்டுகால இழுத்தடிப்பிற்கு பின், குடந்தை தனியார் பள்ளி தீ விபத்து வழக்கு 30.07.2014 அன்று முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த 94 குழந்தைகளைக் காவு கொண்டு, தமிழக மக்களை உலுக்கிய இந்த கொடிய கொலை வழக்கு பிற எல்லா வழக்குகளையும் போலவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 25 பேரில் தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணன், மாவட்டத் தலைமைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோரை தமிழக அரசே வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. இவர்களை விடுவித்திப்பதிலிருந்தே இந்த வழக்கில் தமிழக அரசு யார் பக்கம் என்பதை அறியலாம்.

மறுக்கப்பட்ட நீதிவர்கள் போக ஒருவர் இறந்துவிட, மீதமுள்ள 21 பேரில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என 11 பேரை விடுவித்த நீதிமன்றம் பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறையும் கட்டிட உறுதிக்குச் சான்றளித்த பொறியாளருக்கு இரண்டாண்டுகள், ஏனைய எட்டு பேருக்கும் ஐந்தாண்டுகள் வீதமும், தண்டனை வழங்கி புலவர் பழனிச்சாமிக்கு ரூ 51 லட்சம் உட்பட மொத்தம் ரூ 52.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று பேசாதவர்கள் இல்லை. பணபலமும், அதிகார பலமும் கொண்டவர்களை காப்பாற்ற எத்தனை யுகங்கள் வேண்டுமானாலும் வழக்கை இழுத்தடிக்க நமது நீதிமன்றங்கள் தயங்குவது இல்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைவிட துலக்கமான வேறு உதாரணம் தேவையில்லை. விரைவாக தீர்ப்பு வழங்குவதற்கென்றே உருவாக்கப்பட்ட விரைவு நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டு பின் அவசியப்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டும் வழக்கு முன்னேற்றமில்லாததால் மாவட்ட நீதிமன்றத்திற்க்கு 2012-ல் மாற்றப்பட்டு இரண்டாண்டு விசாரணைக்குப் பின் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 94 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்ட இந்த வழக்கை நடத்தக்கூடாது என்பதில் அரசு காட்டிய அக்கறையையே இத்தாமதம் காட்டுகிறது.

குற்றத்தில் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி (நிறுவனர் பழனிச்சாமியின் மனைவி), தலைமை ஆசிரியை சாந்தா லட்சுமி (பழனிச்சாமியின் வளர்ப்பு மகள்) ஆகிய இருவரின் பங்கையும், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகிய இருவரின் பங்கையும் சமமாகக் கருதி அனைவருக்கும் ஐந்தாண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் உரிமையாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் அதிக தண்டனை கொடுப்பதை தவிர்க்கும் முகமாகவே இந்த ‘சமத்துவ’ பார்வை இங்கே முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல் கல்வித்துறை எழுத்தர்கள் சிவப்பிரகாசம், துரைராஜ், துணைநிலை அலுவலர்கள் தாண்டவன், பாலாஜி ஆகியோருக்கு ஐந்தாண்டுகள் தண்டனையளித்த நீதிமன்றம் நகராட்சி ஆணையர், நகரத்திட்டமிடல் அலுவலர், கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஆகிய முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது. விபத்து நடந்தால் கீழ்மட்டத்தில் சிலரைத் தண்டித்துவிட்டு லஞ்ச ஊழலில் பெரும்பங்கைச் சுருட்டுகின்ற உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவாகத்தான் நமது சட்டங்களே இயற்றப்பட்டிருக்கின்றன. அதனால்தான் மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் எந்தவித மீறலும் இல்லை என ஜெயலலிதாவால் அறிவிக்க முடிகிறது.

பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்து போனதால் மக்களுடைய கோபத்தை தணிப்பதற்குத்தான் இந்த தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இந்தப் படுகொலைக்கு காரணமான தனியார் கல்விக்கொள்ளை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் இன்னும் பன்மடங்கு தீவிரமடைந்திருக்கிறது. அரசு அதற்குத் துணை நிற்கிறது.

தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளையோ, குடந்தை தீ விபத்தையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் அளித்த பரிந்துரைகளையோ கூட இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தனியார் பள்ளி கூட மதித்து நடைமுறைப்படுத்தவில்லை. அது மட்டுமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என அரசை மிரட்டவும் செய்கின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு பள்ளி மீது கூட வழக்கில்லை, தண்டனையில்லை. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எந்த பள்ளியும் வசூலிப்பதில்லை. தாம் நிர்ணயித்திருக்கும் கொள்ளைக் கட்டணத்தைத்தான் பகிரங்கமாக வசூலிக்கிறார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை.. இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் மொத்த கல்வி செலவையும் அரசு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்வதற்கு மேல் நீதி மன்றம் சிந்திக்க விரும்பவில்லை.

நாடு முழுவதும் அன்றாடம் நம் குழந்தைகளின் பேருந்து பயணத்திலிருந்து, வகுப்பறைக் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கொலைகள், தற்கொலைகள் என அனைத்திற்கும் மூல முதற்காரணம் தனியார் மயக் கல்வியும், கொள்ளையுமே. இந்தத் தனியார் மயத்தை ஊக்குவித்து வளர்க்கும் அரசும், அதிகார வர்க்கமுமே முதல் குற்றவாளிகள். இவர்களை நீதிமன்றங்கள் ஒரு போதும் தண்டிக்காது. நீதிமன்றங்களும் குற்றவாளிகளின் கூட்டாளிகளே என்பதைத்தான் இத்தீர்ப்பிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இவண்,
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

  1. நீதுமன்ற நீதிபதியாக “வினவு” குறிப்பிடும் நபர்களை நியமிக்கலாம்! அப்போது நீதி வென்றதாக எடுத்துக்கொள்ளலாம். வினவுவின் ஆசைப்படி நீதி சொல்லாவிட்டால் நீதி செத்துவிட்டது என்று அறிவித்து விடலாம். “வினவு” சொல்படிதான் நீதிமன்றம் ஆடவேண்டும். _____!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க