privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

-

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலனுடன் நேர்முகம் – 4 : மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்

றிவை உருவாக்குதல், பயன்படுத்துதல், பரப்புதல் ஆகியவற்றின் மூலமாகத்தான் மொழி வளரும், புத்தறிவை இப்படித்தான் வளர்க்க முடியும். ஆனால் இதற்கான வேலைகளில் ஈடுபடுபவர்கள் பாமர மக்களாக இல்லை. துளிர், விஞ்ஞானிகள் சிறகு போன்ற சிறு பத்திரிகைகள் ஓரளவு முயன்றாலும் அது இன்னமும் பாமர மக்களை சென்றடையவில்லை. இதனை தனியாக யாரும் செய்ய முடியாது. அரசுதான் முன்நின்று செய்ய வேண்டும்.

பாடத்திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒரு உறுப்பினர். மக்களிடம் போனோம். மாணவர்களும் முன்வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மாணவியர்வந்த மாணவர்களில் ஒருவன், “ஐயா எங்களுக்கு பாவுக்கு ஒன்றென செய்யுள் பகுதிகள் வைத்தால் போதாதா, சீறாப்புராணம், கம்பராமாயணம், பெரிய புராணம், சீவக சிந்தாமணி என வகைவகையாக வைக்க வேண்டுமா” என்று கேட்டான். அதற்கு, “நமது நாடு பல மத நம்பிக்கை கொண்டவர்களை உடையது, அதனால் வகைக்கொன்றாக வைத்திருக்கிறோம்” என்றார் ஆசிரியர். “அப்படியானால் நீங்கள் எங்களுக்கு தமிழ் சொல்லித் தரப் போகிறீர்களா? மதம் சொல்லித் தரப் போகிறீர்களா?” எனக் கேட்டான் அம்மாணவன்.

ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவி “இதெல்லாம் வேண்டாம், தற்கால தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்’’ என்றாள்.

அதைக் கேட்ட தமிழாசிரியரும், புகழ்பெற்ற பெரிய பள்ளியின் தலைமையாசிரியருமான ஒருவர் “ஏம்மா அப்படியானால் உனக்கு தமிழ் பண்பாடு தெரிய வேண்டாமா’’ என்று அக்கறையோடு கேட்டார்.

உடனே தமிழ் புத்தகத்தை எடுத்த அப்பெண் நளவெண்பா பகுதியை எடுத்து வாசித்தாள். அதில் நளன் தமயந்தியை நள்ளிரவில் விட்டு விட்டு போனான் என்ற படலம் வருகிறது. “ஐயா, கல்யாணம் பண்ணிக்கோ. நள்ளிரவில் பொண்டாட்டியை தனியாக தவிக்க விட்டுவிட்டுப் போ என்பதுதான் தமிழ்ப் பண்பாடா’’ என்று கேட்டாள். உடனே அந்த ஆசிரியர் அதனை கேட்டு வாங்கி பார்த்துவிட்டு, பாடநூல் நிறுவனத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த படலத்தை எடுத்து விட்டு வேறு படலத்தை அடுத்த ஆண்டு போடச் சொன்னார்.

பள்ளிக்கூடம் யாருக்கானது? பெற்றோர்களுக்கானதா? அரசுக்கானாதா? இல்லை, மாணவர்களுக்கானது. அங்கு அந்த மாணவர்களுக்கு முடிவெடுக்க ஏதாவது இடமிருக்கிறதா? குழந்தைகளால் அவர்களது தேவையை வெளிப்படுத்த இங்கே இடமேயில்லை. பெங்குவின் வெளியிட்ட ஆசிரியர்களுக்கான கடிதங்கள் அப்படி பதின்ம வயது மாணவர்கள் எழுதியவைதான். கற்றல், வகுப்பறை, பாடத்திட்டம் ஆகியன பற்றி நிறைய அவர்களது எண்ணங்களை பதிவுசெய்துள்ளது அப்புத்தகம். அப்படி நமது மாணவர்களை நாம் சிந்திக்க வைத்துள்ளோமா?

ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்?

“ஏனப்பா விதியை மீறி விட்டாய்?” என்று கேட்டேன்.

“யார் போட்ட விதி?” என்று கேட்ட அம்மாணவன் ஒரு மார்க்சிஸ்டு.

ஒரு விநாடி எனக்கு கோபம் வந்தாலும், ஒரு முப்பதாண்டு அனுபவம் உள்ள என்னிடம் ஒரு பொடிப்பயல் இப்படி கேட்கலாமா? என்ற கேள்வி எழுந்தாலும், அவன் கேட்பது நியாயம்தானே என்பதை என்னளவில் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் விதியை நாங்கள் போடவில்லை, நாங்களே பள்ளி கல்வித்துறை சொன்ன விதிமுறைகளைத்தானே பள்ளியில் வைத்துள்ளோம்.

ஆகவே அவனையே “விதிமுறைகளை நீயே வகுக்கிறாயா” என்று கேட்டேன்.

“சரி” என்றான்.

“அப்படியானால் நீ மட்டும் வகுப்பது சரியாக இருக்காது. வகுப்புக்கு ஒரு பிரதிநிதி வீதம் தினசரி மாலை ஒரு மணி நேரம் கூடி விவாதித்து விதிகளை வகுத்து தாருங்கள்” கூறினேன். அதற்காக பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பற்றிய புத்தகங்கள், குறிப்புகளை எல்லாம் அவனுக்கு தேடி எடுத்துக் கொடுத்தேன்.

அதன்பிறகு அவர்கள் வகுத்து தந்த விதிமுறையின் தலைப்பே ஒழுங்கு விதிகள் என்பதற்கு பதிலாக எனது வாழ்க்கை நெறிகள் என்று மாற்றியிருந்தார்கள்.

“நான் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி எனக்கும், எனது பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்க்க முற்படுவேன்” என்று துவங்குகிறது அந்தப் பட்டியல். முதல் விதி “தினமும் நீ பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வராதே” என்பது நம்முடையது. அவர்கள் வகுத்த விதியில் “நான் தினமும் வகுப்புக்கு முன்னரே படித்து தயாரித்து விட்டு ஆயத்தமுடன் சரியான நேரத்துக்கு வருவேன்” என்று இருந்தது.

மாணவர்கள்இது தவிர நாம் சொல்லாத விதியாக, “ஆசிரியர் நடத்தும் பாடத்தை உன்னிப்பாக கவனித்து, அதில் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் எழுந்து நின்று கேட்டு நிவர்த்தி செய்து புரிந்து கொள்வேன்” என்றும் சொல்லி இருந்தார்கள்.

அவன் போட்ட 17-வது விதி என்னை மிகவும் கவர்ந்தது. அவன் பள்ளிக்கு வெளியிலும் விதியை வகுத்திருந்தான். “பேருந்தில் பெண்களோ, நோயுற்றவர்களோ, குழந்தைகளோ, முதியவர்களோ வந்தால் நான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து அவர்களுக்கு இடமளிப்பேன்” என்று சொல்லியிருந்தார்கள்.

20 விதிகள் வரை போட்டார்கள்.

“இதனை நான் சொல்ல மாட்டேன். தினமும் இதனை நாளொன்றுக்கு ஒரு விதியாக இரண்டாயிரம் மாணவர்களிடமும் விளக்கி அனைவரிடமும் ஒப்புதல் பெறுங்கள்” என்று சொன்னேன். அப்படித்தான் அவர்கள் செய்தார்கள்.

அதே போல, “விதியை நடைமுறைப்படுத்துவதையும் நான் கண்காணிக்க மாட்டேன்” என்று சொல்லி விட்டேன். “நீ போட்ட விதியை நீதான் நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு நீதான் பொறுப்பு” என்றேன்.

சிறப்பாகவே இப்படி எங்களது பள்ளிக்கு விதிமுறைகள் மாணவர்களால் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டது. கோவையில் உள்ள சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் இது நடைபெற்றது. நடந்து முப்பது ஆண்டுகளாவது இருக்கும். ஆனால் அந்த நடைமுறை இப்போது மாறிவிட்டது. இலக்கிய மன்ற கூட்டம் முறையாக அப்போது மாதந்தோறும் நடைபெற்றது.

சமூக அறிவியல் பாடத்தில் நடப்பு செய்திகள் என்ற பகுதியை எடுத்து விட்டார்கள். ஏன் தெரியுமா? பக்தவத்சலம் ஆட்சியில் அரசியலை ஆசிரியர்கள் பேசுகிறார்கள் என்று காரணம் காட்டி இதனை எடுத்து விட்டார்கள். நானே பெருந்துறையில் ஆசிரியராக இருக்கையில் மாணவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதற்காக பெரியார் கூட்டத்திற்கு உருமால் கட்டிக்கொண்டு போய் பார்ப்பேன். மாணவர்கள் பெருமளவு வருவார்கள். வகுப்பறையில் இல்லாவிட்டாலும் வெளியில் மாணவர்கள் அரசியலை தெரிந்து கொள்ளத்தான் போகிறார்கள். ஒருவேளை அதற்கு நீங்கள் தடைபோட்டாலும் தனிப்பட்ட ஒருவர் சிந்திப்பதற்கு நீங்கள் தடை போட முடியாதுதானே.

அதுபோலவே மாணவர்களையும், ஆசிரியர்களையும் என்னை மதிப்பீடு செய்யச் சொல்லி கோருவேன். என்னைப் பற்றிய மாணவரது அபிப்ராயம் தெரியும் பட்சத்தில் என்னைப் பற்றி அவனுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். அல்லது தவறு என்பக்கம் இருக்கையில் திருத்திக் கொள்வேன். இதனை வெளிப்படுத்த விடாமல் தடுப்பதால் தான் மாணவர்கள் கழிப்பறைகளில் ஆசிரியர்களைப் பற்றி எழுத துவங்குகிறார்கள். அதனை முகத்துக்கு நேரே சொல்ல ஏன் வாய்ப்பளிக்க கூடாது?

ஆனால் இதனை பிற ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “உங்களை மதிப்பீடு செய்ய அனுமதித்தால் பிறகு எங்களைப் பற்றியும் மதிப்பீடு செய்ய கேட்பார்களே” என்று பயந்தார்கள். மாணவன் ஆசிரியரை பற்றி ஒரு அபிப்ராயத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்பதால் தான் பொது இடத்தில் எழுதுகிறான். நாம் கருத்து சுதந்திரம் என்பதை ஊடகம் என்பதை தாண்டி இதற்கும் விரிவுபடுத்தி பார்க்க வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க