Thursday, May 30, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதுரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி

துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி

-

ந்தியாவில் உலகமயம் மக்களை அழிக்கிறது என்று உண்மையைச் சொன்னால் மறுகாலனியாக்க ஆதரவு அறிஞர்கள் சட்டென்று சொல்வது எல்லோரிடமும் செல்பேசி இருப்பது எப்படி என்பார்கள். உலகிலேயே ‘மிஸ்டுகால்’ எனும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து ‘காசு’ இன்றி பேசி வரும் மக்களின் நாட்டில் எது வளர்ச்சி?

மூழ்கும் நோக்கியா
செல்பேசியின் அடையாளமாக இருந்த நோக்கியா, ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-ம் ஆண்டில் நுழைந்தது

செல்பேசியின் அடையாளமாக இருந்த நோக்கியா, ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-ம் ஆண்டில் நுழைந்தது. பிறகு அது செய்த பல்லாயிரம் கோடி வரிஏய்ப்பு, மத்திய-மாநில அரசுகள் கொடுத்த சில ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகள், தற்போது வரிகட்ட மறுத்து தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பிய கதை எல்லாம் வினவில் நிறைய முறை எழுதப்பட்டிருக்கின்றது. அறியாதோர் இணைப்பிலுள்ள கட்டுரைகளை அவசியம் படியுங்கள்.

நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !

‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?

நோக்கியா எனும் பன்னாட்டு கொள்ளைக் கம்பெனியை யார் கொண்டு வந்தார்கள், எப்படி தமிழகத்தை வளர்ச்சி பாதையில் ஏவினார்கள் என்றெல்லாம் ஜெயா – கருணாநிதியிடையே நடந்த லாவணியும் தமிழகப் பிரசித்தம். இப்போது?

நோக்கியா தொழிலாளிகளுக்கு வேலை
“நோக்கியா தொழிலாளிகளுக்கு மீண்டும் வேலை”

நோக்கியா மற்றும் அதன் துணை தொழிற்சாலைகளில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நீக்கம், விருப்ப ஓய்வு என்ற பெயரில் விரட்டப்பட்டிருக்கிறார்கள். வளர்ச்சியின் பிதாமகர்களாக காட்டியவர்கள் தற்போது வாய்மூடிகளாக நழுவி வருகின்றனர். எனினும் விரட்டப்பட்ட தொழிலாளர்கள் ஏதும் அமைப்பாகத் திரண்டு போர்க்குணமிக்க முறையில் போராடினால் என்ன செய்வது?

உடனே அரசு அதிகாரிகள், ஏகாதிபத்திய சிந்தனைக்குழாம் அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து வேலையற்ற நோக்கியா தொழிலாளிகளுக்கு வேலை கொடுப்பதாக ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். அது என்ன?

“நோக்கியா தொழிலாளிகளுக்கு மீண்டும் வேலை” என்று அனைத்து தமிழ் ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் விரட்டப்பட்ட தொழிலாளிகள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் 19.08.2014 அன்று செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மறு வேலைவாய்ப்பு, கடனுதவி திட்டங்கள், சுய உதவி வேலை வாய்ப்பு என்று பந்தாவாக நடைபெற்ற கூட்டத்தில் ஏதும் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் – அதிகமும் பெண்கள் – கலந்து கொண்டார்கள்.

காஞ்சிபுரம் ஆட்சியர் கூட்டம்
காஞ்சிபுரம் ஆட்சியர் கூட்டம் (படம் : நன்றி தினமணி)

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் மற்ற அரசுத்துறை அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதி என்ன? சுய தொழில் தொடங்க விரும்பினால் ரூ 25 லட்சம் மானியத்துடன் ஒரு கோடி ரூபாய் கடன் வசதி, தனியாக தொழில் துவங்க விரும்புவோருக்கு வங்கிகளில் கடன் பெற்றுத்தர நடவடிக்கை, குழுவாக சுயதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு மகளிர் திட்டத்தின் மூலம் உதவி, தொழிற்சாலையில் பணிபுரிய விரும்புவோருக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மீண்டும் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்துதல்….இவையெல்லாம் விரட்டப்பட்ட தொழிலாளிகளுக்கு காட்டப்பட்ட நம்பிக்கை கீற்றுகள்.

என்ன சொல்வது?

20,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கடன் வாங்கி தொழில் நடத்தி முதலாளிகளாக மாறலாமாம். அனைவருக்கும் ஒரு கோடி கடன், 25 லட்சம் மானியம் என்றால் மொத்தம் 25,000 கோடி ரூபாய் வருகிறது. இவ்வளவு நிதி ஒதுக்கி 20,000-ம் பேரையும் முதலாளிகளாக மாற்றப் போகிறார்களா? எவ்வளவு இழிவாக இவர்கள் தொழிலாளிகளையும் நாட்டு மக்களையும் நினைக்கிறார்கள்?

இல்லை, பெண் தொழிலாளிகள் மகளிர் சுய உதவி குழுவாக சோப்பு, ஊசி, பாசி மாலை செய்தால் நிலைமை மாறிவிடுமா? அதன் யோக்கியதை குறித்தும் வினவில் ஒரு கட்டுரை விளக்குகிறது. சோப்பு எந்திரம் விற்ற குஜராத் முதலாளிக்கும், மூலிகை சோப்பு என்று உள் குத்தகை விட்டு வாங்கி விற்கும் பெரும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுத்த வங்கிக்கும் பெண்களது பணம் போகுமே அன்றி அவர்களது வீடு நோக்கி போகாது. மக்களை ஏதோ வேலை செய்து முன்னேறுகிறோம் என்ற மனப்பான்மையில் வைப்பதோடு கூடவே அவர்களது உழைப்பை அபகரிக்கும் சதித்தனமே இந்த சுய உதவிக் குழுக்கள். மேலாக அவர்கள் அரசியல் உணர்வை காயடிப்பதே இதன் நோக்கம்.

இல்லை விஜய் மல்லையாவுக்கு வழங்கியது போல பொதுத்துறை வங்கிகளோ இல்லை தனியார் வங்கிகளோ தொழிலாளிகளுக்கு பெரும் கடன் வழங்குமா? அல்லது தற்போது சிறு, நடுத்தர முதலாளிகள் எல்லாரும் பெரும் நிறுவனங்களின் கொத்தடிமை போல தொழில் செய்யும் படையில் ஓரிருவர் சேருவதால் என்ன நடக்கும்?

இந்தியாவிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிய நோக்கிய நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியே 20,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. அதை வாங்கி தலைக்கு ஒரு கோடி கொடுத்தாலும் நோக்கியா இங்கிருந்து எடுத்து சென்ற இலாபம் மிக அதிகம். ஆனால் மாவட்ட ஆட்சியர் நோக்கியாவைக் காப்பாற்றும் அரசின் முகவராக தொழிலாளிகளை பேசியே ஏமாற்றுகிறார்.

இந்த கூட்டத்திற்கு வந்த தொழிலாளிகள் ஏதும் வேலை கிடைக்கும் என்று வந்தோம், வந்து பார்த்தால் கடன், உதவி, தொழில் என்று ஏதோதோ பேசுகிறார்கள், அதிருப்தியுடன் திரும்புகிறோம் என்று ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்கள்.

ஆம், தொழிலாளிகளே உங்களது அதிருப்தி விழிப்புணர்வாக, வர்க்க உணர்வாக திரட்டப்பட்டு போராடாத வரை அவர்கள் அப்படித்தான் ஏமாற்றுவார்கள். ‘வளர்ச்சி’க்கு வாதாடிய துரோக அறிஞர்கள் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?

மேலும் படிக்க