ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம் 3
கடந்த ஏப்ரல் (2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம்” என்ற கட்டுரையில் சிந்தனைக் குழாம்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய இரு புதிய விஷயங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அவற்றின் தொடர்ச்சியாக, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகள் மற்றும் அவற்றின் அரசியல் முன்னெடுப்புகள் என்ற மேலுமொரு புதிய விஷயத்தை த் தமிழ் வாசகர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டியதை – இங்கே வலியுறுத்துகிறோம். இம்மூன்று விஷயங்களின் தொகுப்பில் ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம் பொதிந்திருக்கிறது.
மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை எதிர்ப்பதாக அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் மீது முன்பு காங்கிரசும், இப்போது பா.ஜ.க.வுக்காக ஐ.பி. என்ற இந்திய உளவு நிறுவனமும் குற்றஞ்சாட்டின. அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டக் குழுவின் உதயகுமாரன், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் கெஜரிவால் போன்ற பலர் இவ்வாறான குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். மேலைநாடுகளில் இருந்து நிதி பெற்றதாகத் தனது அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டைக் கடுமையாக எதிர்க்கும் உதயகுமாரன், அமெரிக்க ஆய்வாளர் ஒருவருக்காகத் தான் செய்த ஆய்வு வேலைக்கான ஊதியம் பெற்றதாக ஒப்புக்கொள்கிறார். அது என்ன ஆய்வு வேலை என்பதை மட்டும் சொல்லவில்லை. ஆனால், தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் வாயடைக்கும் வகையிலான வழமையான கேள்வியொன்றை உதயகுமாரன் வீசியிருக்கிறார். “மேலைநாடுகளில் இருந்து நிதிபெற்று இந்திய அரசுக்கு எதிராக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வேலைசெய்வது உண்மையானால் இந்திய அரசு ஏன் அதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை?” இதற்கு இந்தியா அரசு பதில் கூறவில்லைதான்.
அதனாலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மேலைநாடுகளில் இருந்து நிதி பெறவில்லை என்பது உண்மையாகிவிடுமா? இந்திய ரிசர்வ் வங்கி அறியவும் சட்டப்படியேயும் மேலைநாடுகளிருந்து அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுகின்றன. அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் அவற்றின் செயல்பாடுகளில் இந்திய அரசுக்கு சில அதிருப்தியிருந்தாலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் தடையின்றிப் பாதுகாப்பாகச் செயல்படுவதற்காக இந்திய அரசு தனது எஜமானர்களான மேலைநாடுகளுக்கு உத்திரவாதமளித்துள்ளதோடு, அதற்குரிய ஐ.நா. ஒப்பந்தத்திலும் கைச்சாத்தளித்திருக்கிறது.
ஆகவே, மேலைநாடுகளில் இருந்து நிதிபெறும் உண்மையைவிட நமது அக்கறைக்குரியது, அமெரிக்க மேல்நிலை வல்லரசின் வல்லாதிக்கத்தின் கீழ் தேசங்கடந்த, பன்னாட்டுக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் கூட்டணிகளுடைய உலகச் செயற்திட்டத்தின் கைக்கைூலிகளாக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் செயல்படுகின்றன என்பதுதான்!
கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வேலைஅளிப்பு (production and employment) விவகாரங்களில் எப்போதும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வந்ததை அனைவரும் அறிவர். ஆனால், அளவிலும் எண்ணிக்கையிலும் அவை வளர்ந்தபிறகு, பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசியலிலும் நேரடிச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன; இதைப் பலரும் கண்டுகொள்வதில்லை. தனியொரு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனம் தனது நேரடி, உடனடி நலனுக்காகவும் வெளிநாடுகளில் விரிவாக்கம் செய்வதற்காகவும் நன்கொடை, ஆள்பிடிப்பு மூலமாக அடிக்கடி அரசியல் தலையீடு செய்வதையும் அரசு, பொதுத் துறை ஆகியவற்றில் தனக்குச் சாதகமான செயல் திட்டங்களை வகுப்பதையும் முன்தள்ளுவதையும் அனைவரும் அறிவர்.
ஆனால் இப்போது, தனிப்பட்ட முறையில் பொருளாதாரத்திலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்துவதோடு கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்கள் நிறைவு கொள்வதில்லை. இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து அவை ஒட்டு மொத்தமாகத் தமது அதிகாரச் சக்தியை அதிகரிக்கவும் தமக்குச் சாதகமாக முடிவுகளெடுக்குமாறு அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. 1970-களில் வியத்நாம் உட்பட இந்தோ-சீன நாடுகளில் அமெரிக்காவுக்கு நேர்ந்த பின்னடைவோடு, கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் இலாப விகிதங்கள் வீழ்ச்சி கண்டன. உலகமெங்கும் அமெரிக்க ஆதிக்கத்தையும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களையும் எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும் பரவின. அதனால், தொழிற்கழகங்களின் அதிகாரத்தைத் தட்டிக்கேட்டதோடு அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கங்களும் நிர்பந்திக்கப்பட்டன. 1967-1977 ஆகிய பத்தாண்டுகளில் அமெரிக்காவில் எடுக்கப்பட்டதொரு கருத்துக் கணிப்பின்படி பெரும் தொழிற்கழகங்களின் மீதான நம்பிக்கை 55 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாகச் சரிந்தது.
தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் தொழிற்கழகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெருமளவு சுற்றுச்சூழலைப் பாதிப்பது, மாசுபடச் செய்வது, நுகர்வோர் ஏமாற்றப்படுவது, மக்கள் கொள்ளையிடப்படுவது, தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது – ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்கள் பெருகின. இப்பிரச்சினைகளில் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கு எதிராக உலகின் பல நாட்டு அரசுகள் சட்டங்கள் இயற்றித் தடைகளும் கட்டுப்பாடுகளும் விதித்தன. “உலகமெங்கும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிகாரத்துக்குச் சவால் விடப்படுகிறது. அதன் அதிகார உரிமை நொறுங்கிப்போகிறது” என்று அமெரிக்காவின் பெரிய கார்ப்பரேட் நிறுவன இயக்குநர் புலம்பினார். நமது பொருளாதார சுதந்திரத்தை அரசாங்கம் கைப்பற்றிக்கொள்வதற்கெதிரான சண்டையில் நாம் தோற்றுக் கொண்டிருக் கிறோம்” என்றார், அமெரிக்க தேசிய சுயதொழிற்கழகங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர்.
இந்நிலைமைக்கு எதிர் வினையாற்றும் முகமாக அரசியல் ஆதரவைத் திரட்டிக் கொள்ளவும் தமது ஆதிக்கத்தை மறுவுறுதி செய்து கொள்ளவும் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளின் தலைவர்கள் தொழிற்கழகங்களின் வலைப்பின்னல்களை உருவாக்கினார்கள். அவை உலகின் பல நாடுகளிலுள்ள அரசாங்கங்களை வசியம் செய்வதில் இறங்கின. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டணிகளும் அவற்றின் துணை அமைப்புகளும் அரசாங்கங்களிடமிருந்து அதிகாரத்தைக் கைமாற்றம் செய்யும் வழிவகைகளையும் திசைவழிகளையும் வகுக்குமாறு சிந்தனைக் குழாம்களின் வலைப் பின்னல்களிடம் ஏராளமான டாலர்களைக் கொண்டு போய்க்கொட்டின.
அமெரிக்காவில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொழிற்பேரவை, தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய பழைய அமைப்புகளோடு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தொழில் வட்டமேசை, சிறு தொழில்களுக்காக சிறு தொழில்கள் சட்டப் பேரவைகள் ஆகியன உருவாக்கப்பட்டன. பிரிட்டனில், பிரிட்டிஷ் உற்பத்தியாளர்கள் தேசிய சங்கம், பிரிட்டிஷ் தொழில்கள் மற்றும் பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் கூட்டுப்பேரவை ஆகியவற்றோடு இணைந்து பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை உருவாகியது. தனது கருத்துக்களைக் கேட்டுத்தான் உயர்மட்ட அளவில் பிரிட்டிஷ் அரசாங்கம் சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டதாக பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை கூறிக்கொண்டது. வேறு எந்தத் தொழில் நிறுவனத்தையும்விட அதிக அளவு பிரிட்டிஷ் தொழில்கள் கூட்டுப்பேரவை பிரிட்டிஷ் அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கருத்துருவாக்கம் செய்பவர்கள், ஊடகங்கள் ஆகியவர்களோடு தொடர்புகளின் வலைப்பின்னலை பெற்றிருந்தது.
அமெரிக்க, பிரிட்டிஷ் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு ஐரோப்பாவிலும் ஆஸ்திரியாவிலும்கூட முறையே ஐரோப்பிய தொழிலதிபர்களின் வட்டமேசை மற்றும் ஆஸ்திரிய தொழில்கள் கூட்டுப்பேரவை ஆகியன நிறுவப்பட்டன. நாட்டின் பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தெரியாமல் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், அமைச்சரவைக் குழுக்கள், உயர்மட்ட அதிகாரவர்க்கக் கமிட்டிகள் கூடி கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளின் ஆலோசனைகள், கருத்துக்களைக்கேட்டு அரசின் பொருளாதார, தொழிற்கொள்கைகள் மீது முடிவெடுக்கத் தொடங்கின.
அப்போதிருந்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கங்களிடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவது, தலையீடு செய்வது என்ற ‘தற்காப்பு’ நிலையிலிருந்து, அதாவது தமது பொருளாதார சுதந்திரத்தைக் காத்துகொள்வது என்ற தற்காப்பு நிலையிலிருந்து, தமது அரசியல் மற்றும் பிற நலன்களுக்காகப் ‘பேராடுவது’ என்ற தாக்குதல் நிலைக்கு மாறின. இப்போது அவை தமது அதிகாரத்தை, ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொடுக்கும்படியும் தொழிற்சங்கங்களை அழித்து ஒழித்துவிடும்படியும் கோருகின்றன. அரசாங்கத்தின் கேந்திரமான கொள்கை வகுப்பு மற்றும் பிற சேவை வாய்ப்புகளையும் கைப்பற்றிக்கொண்டுவிட்டன. மேலும் மேலும் இதைச் சாதிப்பதன் மூலம், “ஜனநாயக அமைப்புகளின்” அதிகாரம் கீழறுக்கப்பட்டு சீர்குலைக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் மேல்நிலைப் பதவி வகிக்கும் தலைமை நிர்வாகிகளும், தலைவர்களும், இயக்குநர்களும் மேலைநாடுகளில் ஏகாதிபத்திய, ஏகபோக முதலாளிய வர்க்கத்தன்மை கொண்டவர்களாக உள்ளனர். கீழை நாடுகளில் தரகு, தேசங் கடந்த முதலாளிய வர்க்கத் தன்மைகொண்டவர்களாக உள்ளனர். அவர்கள் இப்போது வழமையான குறிப்பிட்ட தொழிற்கழகங்களின் வட்டார நலன்களையும் தாண்டி பொதுவான, உலக அளவிலான செயல் திட்டங்களை முன்வைத்துச் செயல்படுகிறார்கள். இவர்கள் உலக அரசியல் அரங்கங்களில் ஏகாதிபத்திய, பன்னாட்டு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கூடுதலான அதிகாரத்துக்காக வாதிடுகிறார்கள். இத்தகைய நோக்கங்களுக்காக ஒவ்வொரு நாட்டிலும், உலக அளவிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தேசங்கடந்த பன்னாட்டு தொழிற் கழகங்கள் அடங்கிய கூட்டணிகள் கட்டமைக்கப்படுகின்றன.
1970-களில் தொழிற்துறையை வீழ்த்திவிடும் அளவுக்கான ஆபத்து, தாக்குதல் வருவதாக அவர்கள் சித்தரித்துக் கொண்டவை கடந்த கால வரலாறாகிப்போன அதேசமயம், பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியலில் தலையிட்டு செல்வாக்கைத் திரட்டிக்கொள்வது வேகம் பிடித்தது. தமது மூர்க்கமான, நேரடி அரசியல் அதிகாரத் தலையீடுகள் பிரச்சனைகளைக் கிளப்பும் என்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அஞ்சவில்லை. இவ்வகையான வெற்றி, முதலாளியச் சந்தைப் பொருளாதாரமே சிறந்தது என்ற சித்தாந்தத்தை உலகம் முழுவதும் நிலைகொள்ளச் செய்தது. விளைவாக, தொழிற்சங்கங்கள், தொழிற்சட்டங்கள், அரசு தொழில்களை நெறிப்படுத்துவது போன்றவற்றை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முற்றாக நிராகரித்தன.
1980-கள் மற்றும் 1990-களில் கொழுத்த நிதி ஆதரவு பெற்ற சிந்தனைக் குழாம்கள் மற்றும் அதிகாரத் தரகு-தொடர்பு நிறுவனங்களின் அணிவரிசையைக் கொண்ட பெரும் கார்ப்பரேட் தொழிற் கூட்டமைப்புகளும் குழுக்களும் பெருகின. அவை முந்தைய கால அதிகாரத் தரகு-தொடர்புப் பணிகளை மட்டும் கவனிக்கவில்லை. அதிகரிக்கும் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் அதிகாரங்களையும் சுயேச்சைத் தன்மையையும் அரசுக் கொள்கை உறுதிசெய்யும்படி கொள்கை உருவாக்கம் செய்பவர்களை நிர்ப்பந்திக்கின்றன. இந்தக் கூட்டணிகள் பலவற்றின் வீச்சு இப்போது நவீனக் கூட்டுப்பங்கு (கார்ப்பரேட்) நிறுவனங்களின் தேசங்கடந்த தன்மைக்கேற்ப உலக அளவினதாகி விட்டன. இதன் காரணமாக அவை இப்போது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான திறந்த வாய்ப்புகளைக் கொண்ட கொள்கைகளைக் கடைப் பிடிக்கும்படி உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்களை நிர்பந்திக்கின்றன.
“ஜனநாயக” அரசாங்கங்களின் இடத்தைத் தாம் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தொடங்கினர். வடஅமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னாள் – இன்னாள் – தலைவர்கள் மத்தியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட மேட்டுக்குடியினர்களைக் கொண்டதுதான் சர்வதேசக் கொள்கை உருவாக்க உயர் மட்ட முத்தரப்பு ஆணையம். அதன் நிறுவனரும் தலைவருமான டேவிட் ராக்ஃபெல்லர் “நிர்வாகத்தில் அரசாங்கத்தின் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்று தொழிற் துறையினர் கூறுகையில் அரசாங்கத்தின் இடத்தை வேறுசிலர் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதைச் செய்வதற்கானவர்கள் தர்க்க நியாயப்படி தொழிற்துறையினர்தாம்” என்று எழுதினார். அதாவது, அரசாங்க அதிகாரத்தைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்.
தற்போதைய “ஜனநாயக அரசமைப்பு முறை’’க்கு மாற்றாக அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய தொழிற்துறையினரின் வலைப் பின்னலைக் கட்டமைப்பதற்கு இந்த முத்தரப்பு ஆணையம் ஒரு உதாரணம். 1975-ல் இந்த முத்தரப்பு ஆணையம், ஒரு நூலைப் பதிப்பித்தது. “நிர்வாகத்தின் சில பிரச்சனைகள் அதிகமான ஜனநாயகத்தினால் விளைபவை. அதற்குப் பதிலாக, ஜனநாயகத்தை ஓரளவு மிதமாக்குவதுதான் தேவையானது” என்கிறது, “ஜனநாயகத்தின் நெருக்கடி” என்னும் அந்நூல்.
கடந்த நூற்றாண்டில் கலப்புப் பொருளாதாரமும் மக்கள் நலத் திட்டங்களும் அவற்றில் உறுதியான அரசாங்கமும் ஓரளவு மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வந்தன. முதலாளியத்தின் தொட்டிலான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்கூட பல மக்கள்நலத் திட்டங்களும் அரசுப் பொதுத்துறை செயல்பாடுகளும் இருந்து வந்தன. புதிய தாராளமயக் கொள்கை புகுத்தப்பட்டதோடு, மக்கள்நலத் திட்டப் பொறுப்புகளைக் கைகழுவிவிட்டு, மிகக் குறைவான பங்கேற்பையே அரசாங்கத்திடம் கார்ப்பரேட் முதலாளிகள் வலியுறுத்துகின்றனர்.
முதலாளியத்துக்கு எப்போதும் சந்தை விரிவாக்கமும் பொருளாதார வளர்ச்சியும் தேவை. ஆனால், தற்போதைய சந்தை சுருங்கிவிட்டதால் கார்ப்பரேட் முதலாளிகள் தனிப்பட்ட தேசங்களில் இருந்து உலக அளவில் விரிவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். இதற்கு முன்பு சந்தைப் பொருளாக இல்லாத தனிப்பட்ட வாழ்க்கை, சமூக உறவுகள் மட்டுமல்ல; வழமையாகச் சந்தைக்கு வெளியிலுள்ளதாகக் கருதப்பட்ட அரசாங்க நடவடிக்கைகள், பொறுப்புகள், கடமைகள்கூட விற்பனைச் சரக்குகளாக, இலாபமீட்டும் சந்தைப் பொருட்களாக மாற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிதண்ணீர், அடிப்படைக் கல்வி, பொதுசுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, சாலைப்போக்குவரத்து, முன்னேறிய வேலை நிலைமைகள் போன்றவைகூட சேவைச் சரக்குகளாக, வியாபாரப் பொருளாக மாற்றப்பட்டன. பொதுநலன்களுக்காகத் தனிமனிதத் திறமையையும் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் நெறிப்படுத்துவதுதான் ஜனநாயகம் என்பதுபோய், கார்ப்பரேட் முதலாளிகளின் தொழில், சந்தை வியாபார நலன்களுக்காக அரசாங்கக் கட்டுமானங்களையும், சமூகத்தையும் சட்டதிட்டங்களையும் நெறிப்படுத்துவதாக மாற்றப்படுகின்றன.
இந்த மாற்றங்களைக் கொண்டுவரும் கார்ப்பரேட் (கூட்டுப்பங்கு)நிறுவனங்களின் சதியில் சிந்தனைக் குழாம்களும் குடிமைச் சமூகங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. குறிப்பாக, நமது நாட்டில் நடந்து முடிந்த 14-வது நாடாளுமன்றத் தேர்தல்களிலும், அதன் பிறகும், மோடியின் அரசியல் சதிகள் மூலமாகவும், ஆம் ஆத்மிக் கட்சியின் அறிமுகம் மூலமாகவும் முன்னுக்கு வந்திருக்கும் சிந்தனைக் குழாம்களையும் குடிமைச் சமூகங்களையும் பற்றிப் பேசாமலிருப்பது புரட்சிகர அரசியலுக்கேகூட குறையாகவே இருக்கும்.
(தொடரும்)
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 1
ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் ! – 2
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________
காலம் காலமாக கடற்க்கரையோரத்தில் வாழ்ந்துவருகின்ற பாண்டிய பரதவ மக்கள் மீன்வளம்,உப்புவளம்,கிளிங்சல் வளம்,முத்துவளம்,பண்டமாற்று வாணிபவளம்,மிகப்பெரிய நாவாய்,தோணி,வள்ளம்,கட்டுமரம் செலுத்துதல் ஆகியன்வற்றில் சிற்ப்புற்றுத்திகழ்ந்தனர் தமிழ்நாட்டில் இய்ற்க்கையாக வாந்த அனத்துசாதிகளுக்கும் எந்த பிரட்ச்சினையும் இல்லை ஆனால் ___________ விவசாய சாதியான நாடார்,எனப்படுவர்களாகிய இவர்கள் தன் காமாராசு தலைமையில் எழுச்சிபெற்று தொழில்களில் பல்வேறு சாதிகளுடன் தமிழ்நாட்டில் _____________ஈடுபட்டுவருகின்றனர்.அதில் இது முக்கிய எடுத்துக்காட்டு.இயற்கை வளங்களை தனிநபர் அழிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.வைகுண்டராசன்,நடிகை செயா,சோ,சசிகலா, தமிழ்நாட்டு நீதிமன்றம்,காவலர்,அரசு அதிகாரிகள் மற்றும் நீர் குறிப்பிடுகின்ற என்.க்ஜி.ஓ க்களும் உடந்தை இது பின்லேடனை விட மிகப்பெரிய நெட் வொர்க்??? எச்சரிக்கை தமிழர்கள்.