ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் !

4

ரசியலையும் வரலாற்றையும் ஆழமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் திடீர்த் தோற்றமும் தேர்தல் வெற்றியும் அதிசயக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் பின்னணியைப் புரிந்து கொள்ளாத பல அரசியல் விமர்சகர்கள் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டிலும் என்.டி.ஆர். ஆந்திரத்திலும் திடீரென்று அரசியல் கட்சிகளைத் தொடங்கி, குறுகிய காலத்திலேயே – 16 மாதங்களிலேயே – ஆட்சியைப் பிடித்ததை ஆம் ஆத்மி கட்சியின் “சாதனை”யோடு ஒப்பிடுகிறார்கள்.

ஆனால், பலரும் காணத் தவறிய, ஒரு உண்மை உண்டு. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசு கட்சியும் அந்நிய சக்திகளின் தூண்டுதலினால், ஒரே காரணத்தால், ஒரே வகையான வரலாற்றுப் பின்னணியில் தோற்றமெடுத்தவை என்பது மறுக்க முடியாது. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பரில், ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் விவசாயம் மற்றும் வருவாய்த்துறை செயலராக இருந்த ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற வெள்ளை அதிகாரியின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகக் குமுறிக்கொண்டிருந்த இந்திய மக்கள் கொந்தளிப்பில் இருப்பதாக, உளவுத்துறையின் ஏழு தொகுப்பு இரகசிய அறிக்கைகள் ஹுயூமிடம் கையளிக்கப்பட்டு, அதைக் காப்பதற்கான வடிகாலாகத்தான் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சியை ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தார்கள் என்பது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை.

(TTCSP) சின்னம்
“சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களி்ன் திட்ட”த்தின் (TTCSP) சின்னம்.

இப்போது இந்திய மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல; செயலிழந்துவரும் அரசு, அதிகரித்துவரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்துவரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதுடன், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசன் நிறுவனத்தின் நிதியளிப்பில் இயங்கி வரும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தும் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ் முதலானவர்கள் ஆம் ஆத்மி கட்சியை 2012-ம் ஆண்டு தோற்றுவித்தார்கள். பின்னாளில் நாடுமுழுவதும் உள்ள இலட்சக்கணக்காண அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் – இப்போது அவர்கள் குடிமைச் சமூகம் என்று தமக்குப் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர் – இந்தக் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளன.

குடிமை சமூகம் இதழ்
குடிமை சமூகம் முதல் இதழில் – 2003 செப்டம்பரில் அரவிந்த் கேஜ்ரிவால் குறித்த அட்டைப்படக் கட்டுரை (இடது); மற்றும் அரசுசார தொண்டு நிறுவனங்கள் அரசியலில் ஈடுபடுவதைக் குறித்து விவாதம் நடப்பதாக அட்டைக் கட்டுரை இடம் பெற்ற குடிமை சமூகம் 2003 நவம்பர் இதழ்.

இந்த விவரம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் பூர்வீகம், அடிப்படை, நோக்கம், எதிர்கால இலட்சியம் போன்றவை அவர்களுக்குத் தெரியா. அரசியல் கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காகவும் ஆதாயத்துக்காகவும் எதிராளிகள் மீது “அந்நிய (குறிப்பாக அமெரிக்க) நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு-சதி” என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தி வருகின்றன. அது ஒருபுறமிருக்க, உலகமயமாக்கமும் மறுகாலனியாதிக்கமும் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதில் இருந்து நமது நாட்டின் அரசியல் அமைப்பில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கேற்பு அதிகாரபூர்வமாகவே அதிகரித்து வந்திருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் மக்கள் நலப்பணிகள் திட்டமிடுதல்களில், அமலாக்கங்களில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டன. அந்த மட்டங்களில் இருந்து பிரதமர், அமைச்சகங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது வரை அவற்றுக்கு அரசுடன் கலந்துறவாட இடமளிக்கப்பட்டது. அரசு அமைப்பில் உயரதிகாரிகளாக இருந்து கொண்டே, அந்நிய, குறிப்பாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு அரசே நிதியளிக்கவும் செய்தது.

இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? ஏகாதிபத்திய உலகமயமாக்கம் திணித்த புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசியல் கட்டுமானச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. “இனி நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்துத் துறைகளிலும் சட்ட திட்டங்கள் எதுவானாலும், அரசின் முறைசார்ந்த அமைப்புகள் மட்டும் தீர்மானிப்பதாகவும் செயல்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது. அப்படியான சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா என்று அறியவும் அல்லது மாற்றுக்களைப் பரிந்துரைக்கவும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் தீர்மானிக்க வேண்டும்” என்பது கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அரசு – அது எதுவானாலும் – அமலாக்கிவரும் புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்பின் முக்கியமான கூறு ஆகும். அரசின் முறைசார்ந்த அமைப்புகளான தேர்தல் அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் முதலானவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றச்செயல்கள் காரணமாக அவற்றின்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

08-c-1

இது, மேற்பார்வைக்கு மிகவும் ஜனநாயகபூர்வமானதாகத் தோன்றும். இதைத்தான் ‘அடிமட்ட/ வேர்வரையிலான ஜனநாயகம் (grassroot democracy); மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது (Empowerment of people)’ என்கிறார்கள். இது உண்மையில் ஒரு மாபெரும் சதி/தந்திரம். அரசுத்துறை, பொதுத்துறைத் தொழில்கள், நிறுவனங்கள் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு இல்லாததால்தான் நட்டமடைந்து, நலிந்துபோய்விட்டன; அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்களின் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு காரணமாக தொழிலும் பொருளாதாரமும் செழித்து வளரும் என்று சொல்லித்தான் அவற்றை கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டு, பொதுச்சொத்தைச் சூறையாடினர்.

அதேசமயம், அரசின் முறைசார்ந்த அமைப்புகளின் மிக முக்கிய அங்கமாகவும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் அதிகார வர்க்கத்தைக் கட்டுமானச் சீரமைப்பு ஒழிப்பதில்லை. மாறாக, அதற்கு மேலும் அதிகாரம் கொடுக்கச் சொல்லுகிறது. ஓய்வுபெற்ற அதிகார வர்க்க நபர்கள் ஒழுங்குமுறை ஆணையங்கள், சிறப்பு ஆலோசகர்கள், நிபுணர் குழுக்கள் என்ற பெயரில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு மேல் நிறுத்தப்படுகிறார்கள். மேலும், பல முன்னாள் அரசு அதிகார வர்க்கத்தினர் தரகு முதலாளிகளின், பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும் பதவியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஓய்வுபெற்ற பிறகும் அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியம் செய்து, எல்லா இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்குமான ஊடகமாகச்செயல்படுகிறார்கள். தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. காரணம், மேட்டுக்குடி வர்க்க சகோதர பாசம்தான்.

பார்த்தா ஜெ.ஷா
குடிமை சமூகங்களின் மையத்தை நடத்தும் பார்த்தா ஜெ.ஷா, அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்றவர்.

இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளையும் நடத்திவரும் அதே நபர்கள்தாம், நாட்டின் தற்போதைய எல்லா அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கேடுகளுக்கும் காரணமாகவுள்ள புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்புக் கொள்கைகளை அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து வகுத்து அமலாக்குகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் “கொள்கை” முடிவெடுக்கவும் “திட்டங்கள்” வகுக்கவும் பொறுப்பேற்கும் மந்திரிகளில் ஏறக்குறைய எவருக்குமே அந்தத் “தகுதி” கிடையாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தக் காலியிடத்தை நிரப்புவதுடன், இந்த உண்மையை இப்போது அப்பட்டமாகவே ஒப்புக்கொள்ளும் வகையில் உருவாகியிருக்கின்றன, சிந்தனைக் குழாம்கள் (“திங்க் டாங்க்ஸ்”) என்ற ஏற்பாடுகள். அதாவது, ஆலோசனை வியாபாரிகள். ஒரு சிந்தனைக் குழாம் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பது சமூகக் கொள்கைகள், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் சேவை நிறுவனங்கள்.

ரக்-ஷக் ஃபவுண்டேசன், விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன், இந்தியன் கவுன்சில் ஆன் குளோபல் ரிலேஷன்ஸ் போன்றவை இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் சில. மொத்தம் 269 சிந்தனைக் குழாம்களைக் கொண்டுள்ள நமது நாடு, அவற்றின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக்கழகக் கல்வி, உணவு பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவற்றைக் கணினிமயமாக்கம்-நவீனமயமாக்கம் செய்தல் – இப்படிப் பன்முகப் பணிகளில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

08-c-2

இந்தப் பன்முகப் பணிகளில் சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கை களையும், திட்டங்களையும் அரசை ஏற்கச் செய்யும், அழுத்தம்கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

சிந்தனைக் குழாம்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகள் பற்றி இங்கே, இதுவரை சொல்லப்பட்டிருப்பவை எதுவும் ஆதாரமற்ற, கற்பனையான கோட்பாடுகள் அல்ல. அவை ஆதாரபூர்வமானவைதாம். “சிந்தனைக் குழாம்கள் -குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்” (TTCSP)என்ற இணையத்தளத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டிருக்கிறது:

08-c-3

“உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் மீது கொள்கை நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பது பற்றி அமெரிக்கப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்தின் கீழ் ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) ஆய்வுகள் நடத்துகிறது. அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் உள்ள அயலுறவுக் கொள்கை ஆய்வகத்தில் 1989-ம் ஆண்டு ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) அமைக்கப்பட்டது; அது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்துக்கு மாற்றப்பட்டது. பெரும்பாலும் சிந்தனைக் குழாம்கள் (திங்க் டாங்க்ஸ்) என்று சொல்லப்படும் Kசிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP)” பொதுத் துறைகளின் கொள்கை ஆய்வு அமைப்புகளுடைய பரிணாம வளர்ச்சி மற்றும் பங்கு பாத்திரத்தைப் பரிசீலிக்கின்றது. சர்வதேச அமைதி-பாதுகாப்பு, உலகமயமாக்கம்-ஆட்சி நிர்வாகம், சர்வதேசப் பெருமாதாரங்கள், சுற்றுச்சூழல், சமூகம் – தகவல், வறுமைக்குறைப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றின் பாரிய கொள்கைத் தளங்களுக்கும் திட்டங்கள்-கொள்கைளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பி ஒரு உலக முன்முயற்சிக்கான அடித்தளமிடுவதைக் கடந்த 20 ஆண்டுகளாக சிந்தனைக் குழாம்களும் மற்றும் குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) கட்டமைத்து வருகிறது. இந்தச் சர்வதேசக் கூட்டுறவு முயற்சி பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான கொள்கை நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் அடங்கிய ஒரு வலைப்பின்னலை நிறுவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; அந்த வலைப்பின்னல் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நிறுவனங்கள், சமூகங்களின் கொள்கை உருவாக்கத்தை முன்னேற்றி அவற்றுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தும்”.

ஜெயபிரகாஷ் நாராயணன்.
ஆம் ஆத்மி கட்சியைப் போலவே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் லோக்சத்தா கட்சியை நிறுவிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயபிரகாஷ் நாராயணன்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏழாண்டுகள் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, இந்தியாவின் பொருளாதார, சமூக, அரசியல் சுதந்திரத்துக்காக இரண்டாவது விடுதலை இயக்கம் நடத்தப் போவதாகக் கூறிக்கொண்டு 1997-ல் நாடு திரும்பினார், குஜராத்தைச் சேர்ந்த பார்த்தா ஜெ. ஷா. அவர் இப்போது தில்லியில் “குடிமைச் சமூகங்கள் மையம்” என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழாமை நடத்தி வருகிறார். அது இந்திய மற்றும் குஜராத் அரசுகளுக்காக பல துறைகளில் பணியாற்றுகிறது. அது, பென்சில்வேனியா பல்கலைக்கழகச் சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) 2012-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகிலேயே 55-வது இடத்தில் இருக்கிறது. இப்படிப் பல பார்த்தா ஜெ.ஷாக்கள் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் இருந்து கடந்த 10, 15 ஆண்டுளில் இந்தியா வந்திறங்கினார்கள்.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து 2000 -ம் ஆண்டில் இருந்தே சிந்தனைக்குழாம்களின் மத்தியில் விவாதங்களும் ஆய்வுகளும் நடந்து வந்தன. இந்த விவாதங்கள், ஆய்வுகளில் பிறந்தவைதாம் ஆந்திராவில் லோக்சத்தா கட்சியும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும். பலரும் எண்ணுவதைப்போல அன்னா ஹசாரே தலைமையிலான Kஊழல் எதிர்ப்பு இந்தியா” இயக்கம் பிளவுபட்டு அரவிந்த் கேஜரிவால் கும்பல் திடீரென்று உருவாக்கியதல்ல, ஆம் ஆத்மி கட்சி.

(தொடரும்…)
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________

4 மறுமொழிகள்

  1. கற்றது கையளவு,

    ஆம் ஆத்மி மீது தீரா காதல் கொண்ட நீங்கள் இக் கட்டுரையை விமர்சிக்கலாமே ! உங்கள் கருத்துகளை எடுத்து பட்டியல் போடலாமே !

  2. இங்கிலாந்து காரன் நம்மள நம்ம பொருளாதாரத்த கொள்ளை அடிக்க அத எதுத்து கேக்கமா இருக்க எப்பிடி காங்கிரஸ்னு கட்சிய ஆரம்பிச்சானோ அத மாரி வெளி நாட்டு உள்நாட்டு கார்பரெட் கம்பெனிக்காரன் நம்ம இயற்க்கை வளத்த கொள்ளை அடிக்கிறத கண்டுக்காம அரசியல் பன்ன காசு குடுத்து ஆம் ஆத்மின்ற கச்சியா வளர்க்குறானு சொல்ல வறிங்க இருக்கும் இருக்கும் எனக்கும் அந்த சந்தேகம் உண்டு

  3. இது ஒரு குழப்பமான பதிவு. இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    1) மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசுசாரா நிறுவனங்கள்/சிந்தனை குழாம்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் கொள்கைகளை நிர்ணயிக்கின்றன.

    2) இந்த அரசு சாரா நிறுவனங்களின் (ண்Gஓ) நிதி அன்னிய நாடுகளில் இருந்து வருகிறது – குறிப்பாக அமெரிக்காவில் இருந்து. இதில் இருக்கும் சில தலைவர்கள், அமெரிக்கப் பல்கலைகளில் படித்தவர்கள்.

    ஆக, இந்த அரசுசாரா நிறுவனங்கள், அன்னிய அரசின் கைக்கூலியாக இருந்து, தேர்ந்தெடுக்கப் படாமலேயே நம் அரசின் நடத்தையை கட்டுமானம் செய்கின்றன என்பது தானே உங்கள் வாதம்.
    ஆம் ஆத்மி கட்சி தேர்தலில், தங்களது கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று வாக்குகளைப் பெற முயற்சி செய்தனரே. இதை நேரடி அரசியல் அல்லாமல் வேறென்ன? இதில் என்ன ஒழிவு மறைவு இருக்கிறது? ஆம் ஆத்மி கட்சியோ, லோக் சத்தா கட்சியோ, திரை மறைவில் நின்று தேசத்தை ஆள முயற்சிக்கவில்லையே? இது ஆதாரமற்ற, போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கும் செயல் தானே?

    இரண்டாவதாக, அரசு சாரா நிறுவனங்கள்/சிந்தனைக் குழாம்கள் மூலமாக, அரசின் கொள்கைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது. தேர்ந்தெடுக்கப் படும் அமைச்சர்களில் வெகு சிலரே, அந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள். இப்படி இருப்பவர்களை, ஆட்டி வைக்க, சிந்தனைக் குழாம்கள் கூடத் தேவையில்லை, என்பது தானே உண்மை? ஆம் ஆத்மி, போன்ற கட்சிகளில் அடிப்படைக் கோரிக்கையே, ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது தானே? ஜனநாயக நாடுகள் அனைத்திலும், அரசுசாரா நிறுவனங்கள், தத்தம் அரசுகளின், செய்கையை மாற்றத் தான் முயற்சிக்கின்றன. இந்த முயற்சியில், அன்னிய நிதி, விளையாடுவதும் இருக்கத் தான் செய்கிறது. அப்படி இருப்பதை, ஆதாரப் பூர்வமாக நிருவுவது தான், இந்த முயற்சிகளை எதிர் கொள்ள உதவும். பொத்தாம் பொதுவாக, எல்லா இயக்கங்களையும் “அமெரிக்க ஏகாதிபத்யம்” என்று முத்திரையிட்டு, கூச்சலிடுவது அவதூறல்லாமல் வேறென்ன?.
    நீங்கள்:
    1) ஆம் ஆத்மி/லோக் சத்தா கட்சியின் கொள்கைகள், எந்த விதத்தில் அமெரிக்காவிற்கு அனுகூலமாக இருக்கின்றன என்பதை விளக்கிச் சொல்லலாம்.

    2) மக்களுக்கு எதிராக, ஒரு அரசு நடக்கும் போது, அதை எதிர்க்க, அரசுசார/குடிமை இயக்கங்கள் தோன்றுவது இயல்பு தானே? அந்த இயக்கங்களுக்கு தலைவராக இருப்பவர்கள், எக்காலத்திலும் வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாக இருக்கக் கூடாது என்பது தான் உங்களது நிலைப்பாடா?

    3) உங்கள் பார்வையில், மக்கள் எந்த மாதிரி போராடினால், சமூக மாற்றத்தைக் கொண்டு வரலாம், அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும் என்பதையும் விளக்கலாம். ஏன் இந்த முயற்சிகள் இத்தனை காலமாக வெற்றியடையவில்லை என்பதையும் சொல்லலாம்.

    இதையெல்லாம் விடுத்து, இதைச் சொல்பவர், ஒரு அமெரிக்க ஏகாதிபத்யவாதி என்றும் ஏசலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க