privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஜானகிராமனைக் கொன்றது யார் ?

-

விபத்தில் இறந்த தொழிலாளியை மறைத்து விட்டு, ஒரு நிறுவனம் சுதந்திர தின விழாவை கொண்டாடியதோடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?

அன்றாடம் 1,730 கார்களை உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, சென்னை இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலைதான் அது.

ஹூண்டாய்
ஹூண்டாய் தொழிற்சாலை

ஆனந்த சுதந்திரத்தை கொண்டாடிய பிறகு தான் முந்தைய இரவு துப்புரவு பணியினை செய்யச் சென்ற ஜானகிராமன் (வயது 52) என்ற தொழிலாளி எதிர்பாராத விபத்தால் இறந்து போனதாக அறிவித்தார்கள். ஆனால் ஏற்கெனவே 2010 விபத்தில் சில பொறியியலாளர்கள் இறந்த போது, செய்தியாக வெளியானதைப் போல இந்தமுறை அதிகம் கசியாமல் இருக்க ஊடகங்களை நல்ல முறையில் ‘கவனித்து’க் கொண்டார்கள் முதலாளிகள். அதையும் மீறி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை வைத்தும், நேரடியாக தொழிலாளிகள், தொழிற்சங்க தலைவர்களிடம் தொலைபேசி வழியாக பேசியும் இப்பதிவு எழுதப்படுகிறது.

ஜானகிராமனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பட்டயப் படிப்பு முடித்து அங்கு ஒப்பந்தத் தொழிலாளியாகவும், இன்னொருவர் சாதாரண தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்போது நட்ட ஈடாக பட்டயப் படிப்பு முடித்திருக்கும் அவரது மகன் தன்ராஜ் தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோருகிறார். அதற்கு கூட ஹுண்டாய் தயாராக இல்லை.

“சுதந்திர தினமென்பதால் எல்லோருக்கும் விடுமுறை அளித்திருந்தோம். அதனால் அவர் இறந்து கிடந்தது எங்களுக்கு தெரியாது” என்கிறார் ஹூண்டாய் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி சாய் கணேஷ். “ஜானகிராமனுக்கு மாத்திரம் விடுமுறையன்று சிறப்பு பணி தரப்பட்டிருந்ததா?” என்ற கேள்விக்கு “அவருக்கு பேக்டரிக்கு உள்ளே வேலை கிடையாது. கார் உற்பத்தியாகும் பகுதிக்கு அருகில் உள்ள தோட்டத்தில்தான் வேலை” என்று பதில் சொல்லியிருக்கிறார். பதிலுக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஹூண்டாய் வாளகத்தை விட்டு வெளியே ஹூண்டாய்க்காக வேலை செய்தால், ஹூண்டாய் கணக்கில் வராதாம்.

1996 மே மாதம் தனது முதலாவது பகற் கொள்ளையாட்சி மூலம் தமிழகத்தையே மொட்டையடித்த ஜெயா கும்பல் கடைசியாக போட்ட சில கையெழுத்துகளின் கீழ் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது. 17 மாதங்களில் அது தனது முதல் காரை தயாரித்த போது நேரடியாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றார் கருணாநிதி. இன்றைக்கு வரையிலும் 1500 பேர் கூட அங்கே நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகே கை கூடியிருக்கிறது. அவர்களுக்கே கடைசியாக போட்ட ஒப்பந்தப்படி மாத வருமானம் அதிகபட்சம் ரூ 13 ஆயிரம் தான்.

மீதமுள்ள எட்டாயிரம் ஒப்பந்த தொழிலாளிகளை அழைத்து வர கங்காணி நிறுவனங்கள் பல வெண்டார்கள் என்ற பெயரில் சென்னையில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் லேப்கான் நிறுவனம். அந்நிறுவனம் தரும் மாதச் சம்பளம் ரூ 4 ஆயிரத்தை தாண்டாது. லாஜிஸ்டிக் பிரிவில் டிவிஎஸ் கம்பெனியும் வென்டார் சேவையை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த லேப்கான் கம்பெனியின் தொழிலாளிதான் தற்போது மரணமடைந்துள்ள அல்லது பாதுகாப்பு அற்ற பணிச்சூழல் காரணமாக கொல்லப்பட்டுள்ள தொழிலாளி ஜானகிராமன். ஏனெனில் கழிவுநீரை அகற்றுவது மட்டும்தான் அவரது வேலை. ஆனால் உற்பத்தி, பெயிண்ட் அடித்தல் போன்றவற்றின் போது வெளிவரும் ரசாயனக் கழிவுகளை அகற்றுவது அவரது பணியல்ல. அதனை செய்வதற்கு இளங்கலை வேதியியல், அல்லது வேதி பொறியியல் படிப்பு படித்தவர்கள் தான் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களால் தான் இதன் தாக்கத்தை ஓரளவு புரிந்துகொண்டு தேவையான போது தப்பிக்க முடியும்.

அன்று வேலையில் இருந்த மேலாளர்கள் ஒன்றும் நடந்து விடாது என்று சாதாரண தொழிலாளியான ஜானகிராமனையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்தக் கழிவுகளில் மீத்தேன் வாயு இருக்கும். பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்கப் போகும் பலரையும் காவு வாங்கும் அதே வாயு.

சாதாரண காற்றை விட மீத்தேன் அடர்த்தி குறைவாக இருப்பதால் இதனை சுவாசிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதனை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டே இருந்தால் உயிர் வாயுவை (ஆக்சிஜன்) எடுப்பது குறைய ஆரம்பிக்கும். உயிர் வாயுவின் அளவு நீங்கள் சுவாசிக்கும் காற்றில் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது ஆரோக்யமான ஒருவருக்கு கூட மயக்கமும், சுயநினைவிழத்தலும், இதயம் நின்று போவதும், வயிற்றோடு போவதும், அதனூடாக சிறுநீரகம் செயலிழந்து போவதும் என பல செயல்கள் ஒரே நேரத்தில் நிகழும். முறையாக அதற்கான படிப்புகளை படித்தவர்களுக்கே இதைப் புரிந்து சுதாரிப்பதற்குள் மரணம் வாசல் படியில் வந்து நிற்கும். 2010-ல் இறந்த பொறியாளர்கள் நால்வரும் வேதி பொறியியலில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள். அவர்களுக்கே அந்தக் கதியென்றால் எதுவுமே தெரியாத ஜானகிராமன் தான் செத்துப்போவது தெரியாமலேயே மரணத்தை தழுவியிருக்கிறார்.

அப்பாவின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை தூக்கி நிறுத்த தனக்கு நிரந்தர வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறார், தன்ராஜ். அதனாலேயே தந்தையின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்பதை கூட அவர் செய்யவில்லை. ஆனால் அவரது நம்பிக்கை நிறைவேறும் நிலைமை அங்கு இல்லை. மறைக்கப்பட்ட முந்தைய விபத்துக்களைப் போல இதற்கும் நிர்வாகம் பணம் தர முன்வரக் கூடும். ஏனெனில் இந்த விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை எண்ணை ஜானகிராமனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் காவல்துறையினர் எழுதவேயில்லை. உண்மையில் பிணத்தை எரித்து விட்ட காவல்துறையினர் புதைத்து விட்டதாக அதில் பதிவு செய்திருக்கின்றனர். இப்போது கூட யாராவது ஜானகிராமனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று உயர்நீதி மன்றத்தில் மனுப் போட்டால் தோண்டி எடுக்க பிணமில்லை.

இரண்டாவது, போஸ்ட் மார்ட்டம் செய்தது சுதந்திர தினத்தன்று. அப்படி பொதுவாக அரசு மருத்துவமனையில் அரசு விடுமுறையன்று பிரேத பரிசோதனை செய்ய மாட்டார்கள். மாவட்ட அளவிலான மாஜிஸ்டிரேட் தகுதியுள்ள அரசு அதிகாரியிடம் அதற்கு உத்திரவு பெற்றுத் தந்தால் தான் செய்வார்கள். அதுவும் இங்கே நடக்கவில்லை. இவையெல்லாம் ஜானகிராமன் மரணத்தை மறைப்பதற்காக அல்லது அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்று காட்டுவதற்காக திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

ஜானகிராமனது மரணத்துக்கு நீதி கேட்க யாரும் இப்போது தயாராக இல்லை. ‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.

இந்த விபத்து பற்றி ஜானகிராமனை வேலைக்கு அனுப்பிய வெண்டார் நிறுவன அதிபர் வர்தன் குமார் என்பவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னமும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு பேசுகிறேன்’ என்று பொய் பேசுகிறார். ‘இல்லைங்க, என்ன நடந்தது என்றாவது சொல்லுங்கள்’ என்றதற்கு ‘அதெல்லாம் சொல்ல முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

ஒரு காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஆரம்பித்த போது ஒரு தேநீர்க்கடை வைத்திருந்தவர், இன்று அந்நிறுவனத்துக்கு வேலையாட்களை சப்ளை செய்யும் முக்கியமான வெண்டார்களில் ஒருவர். ஏறக்குறைய நான்காயிரம் தொழிலாளிகளை இவர் கம்பெனிக்கு அனுப்பி வருகிறார். முதலில் நான்கு விதமான துணைத் தொழில்களை இணைத்து இவரும், சில நண்பர்களும் ஹூண்டாயின் உயரதிகாரிகளின் ஆசியுடன் இன்போடெக் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதிலிருந்து பிரிந்தவர் உலோக, ரசாயன கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் ஹூண்டாயிடம் இருந்து வாங்குவது, அதற்கு அடிமாட்டு விலையில் தொழிலாளர்களை பதிலுக்கு ஹூண்டாய்க்கு தருவது, வங்கிகளுக்கு கடனை வசூலித்து கொடுப்பது என தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி விட்டார். இவரைப் போல பல பத்து ஜாம்பவான்கள் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடுவில் ஒட்டுண்ணியாக ஆண்டு வருகின்றனர்.

ஹூண்டாய் கார்
ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

இந்த ஒட்டுண்ணிகள் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதோடு, அவர்களது மருத்துவ காப்பீட்டு உரிமை, சங்கம் கட்டும் உரிமை, பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகளைத் பறிப்பதை எந்த குற்றவுணர்ச்சியுமில்லாமல் செய்கின்றனர். இனி இந்த வர்தன் குமாருக்கு சில ஆண்டுகளில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் விருது பாரிவேந்தராலோ அல்லது புரட்சித் தலைவியின் பொற்கரங்களாலோ, விஜய் டிவியாலோ வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆக ஜானகிராமன் மரணம் இங்கே சட்டபூர்வமாக கூட பதியப்படவில்லை. சமூகங்களில் நடக்கும் கொலைகளில் கூட குற்றவாளிகள் தப்பித்தாலும் சட்டப்படி அதை நியாயப்படுத்த மாட்டார்கள். ஆனால் தொழிலாளிகளைக் கொல்லும் நிறுவனங்களில் அதை சட்டப்படியே செய்து தப்பிக்கிறார்கள்.

இலாபவெறியால் போதுமான நிரந்தர தொழிலாளிகளை எடுக்காமல், ஒப்பந்த தொழிலாளிகளை வேலைக்கெடுத்து, பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே ஜானகிராமன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

–    கௌதமன்.