Tuesday, May 28, 2024
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுமக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !

மக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !

-

தோழர். அசோக் என்பவர் DR. சந்தோஷ் நகர் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலாளர். இவர் இப்பகுதி மக்களில் ஒருவராக இருந்து பகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும், பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடி வரும் தோழர். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடம் புமாஇமு செல்வாக்கு கூடி வருகிறது. இதனால்அப்பகுதியில் உள்ள F2 எழும்பூர் போலீசுக்கு ரவுடித்தனம் செய்ய இயலவில்லை. இதற்கு பழிவாங்கும் நோக்குடன்  தோழர் அசோக் மீது  F2 எழும்பூர் போலீசு பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்துள்ளது.

திரைக் கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்த ஆள் கடத்தல் போலீசு

சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம்
சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)

கடந்த 19-ம்தேதி காலை 10.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகம் வழியே வேலைக்குச் சென்றிருக்கிறார் தோழர் அசோக். அப்போது சீருடை அணியாத 3 உளவு போலீசார் அவரை பின் தொடர்ந்து வந்து வழி மறித்து “நீதான வினோத்” என்று கேட்க, அதற்கு “என் பெயர் வினோத் இல்லை, அசோக்” என்று பதில் சொல்லியுள்ளார். உடனே அவர்கள் “எல்லாம் எங்களுக்கும் தெரியும்டா தே ……………….. பையா” என்று கூறி அடித்து இழுத்து தயாராக வைத்திருந்த ஒரு ஆட்டோவுக்குள் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர்.

அசோக்கை கடத்திச் சென்ற உளவு போலீசார், அவரை நேராக போலீசு நிலையம் கொண்டு செல்லவில்லை. பதிலாக எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள ஒரு அறையில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டியுள்ளனர். அதன்பின்னர் தான் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணனிடம் ஒப்படைத்து வழிப்பறி உள்ளிட்டு 5 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்கு ஜோடித்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள் கடத்தல் செய்தது, அசோக்கின் செல்போன், இரு சக்கர வாகனத்தை பறித்தது, சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது, கற்பனையாக திரைக்கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்தது என அனைத்து குற்றங்களையும் செய்தது, உளவுத்துறை போலீசார் மற்றும் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர்தான். கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டைபஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் குவிந்து கிடக்கும் குற்றவாளிகள் கூடாரமே போலீசு நிலையம்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இந்த யோக்கிய சிகாமணிகள் மக்களுக்காக போராடி வந்த தோழர் அசோக்கை குற்றவாளிபோல் சித்தரிக்கிறார்கள். பீதியூட்டும் நோக்கில் யாரும் நம்பமுடியாத பொய்வழக்கை ஜோடித்து கைது செய்து சிறையிலடைத்துள்ளார்கள்.

புமாஇமு தோழர் மீது ஏன் இந்த பொய் வழக்கு?

அசோக்குக்கும் போலீசாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இருந்தது இல்லை. சமூக மாற்றத்திற்காக போராடும் புமாஇமுவின் பகுதி செயலர் என்ற முறையில் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி போராடியதுதான் குற்றம் என்கிறது போலீசு.

பல்நோக்கு கட்டிடம் கட்ட வலியுறுத்தி கவுன்சிலரை பார்க்க பகுதி மக்களை திரட்டிச் சென்ற போது ‘’ நீ என்ன இந்த ஊர்த் தலைவரா? ஏன் இவங்களுக்கு வழிகாட்டிவிடுற, உனக்கு என்ன வேணும்னு சொல்லு?’’ என்று கவுன்சிலர் பேரம் பேசியதற்கு பணியாமல் தொடர்ந்து போராடியது; இந்த ஊர் பிள்ளைங்களுக்கு நல்ல கல்வி கிடைக்காத சூழலில், பணம் கொடுத்து ட்யூசன் படிக்க முடியாத நிலையில் இரவு பாடசாலை நடத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இரவு பாடசாலைக்காக மேயருடன் சலியாது போராடி சாதித்தது; கண்முன்னால் நடந்த ரவுடித்தனத்தைத் தட்டிக்கேட்டது; போலீசார் ஊருக்குள் அத்துமீறி புகுந்து இளைஞர்களைத் தாக்கி வந்த அராஜகத்தை எதிர்த்து கேள்வி எழுப்பும் துணிச்சலை இளைஞர்களுக்கு உருவாக்கியது இவைகள் எல்லாம்தான் போலீசு பார்வையில் மாபெரும் குற்றமாம்.

எமது புமாஇமு தோழர்கள் இரவு பகலாக மக்களுக்காக உழைப்பதை பார்த்து பலர் “சின்ன வயது பிள்ளைங்க உங்க வாழ்க்கையையும் பாருங்கப்பா” என்று பாசத்தோடு சொன்ன போது,  “உங்களுக்காக உழைத்தால் எங்க வாழ்க்கையை நீங்க பாத்துக்க மாட்டீங்களா” என்று கூறி மக்கள் நலன்தான் முக்கியம் என்று போராடியதற்காகத்தான் இந்த பொய் வழக்கை போட்டுள்ளது போலீசு.

F2 எழும்பூர் போலீசின் கனவை தகர்ப்போம்!

போலீசின் யோக்கியதை என்ன என்று உங்களுக்கே தெரியும். சமீபத்தில் ஊருக்குள்ளேயே ஒரு கருங்காலியை உருவாக்கினார்கள், பொய்யாக ஒரு புகார் பெற்றார்கள். எந்தவித விசாரணையும் இல்லாமல் ஊருக்குள் புகுந்து அசோக்கையும் பிற தோழர்களையும் கொலை வெறியோடு தாக்கி கைது செய்ய முயன்றார்கள். அப்போது எங்களின் பாசத்திற்குரிய உழைக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போலீசு மிருகங்களிடம் இருந்து தோழர்களை காப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு பீனிக்ஸ் பறவை போல் புமாஇமுவின் அரசியல் உறுதிகொண்ட இந்த தோழர்கள் மீண்டும் களமிறங்கி மக்கள் பணியாற்றி வந்ததை இவர்களால் ஏற்க முடியமா என்ன? இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இப்போது ஒரு அபாண்ட புளுகை வழக்காக ஜோடித்து பழிவாங்குகிறார்கள். இதன் மூலம் இப்பகுதியில் மக்கள் செல்வாக்கோடு இயங்கி வரும் எமது புமாஇமு தோழர்களின் செயல்பாட்டை முடக்கவும், இதனைத் தொடர்ந்து பழையபடி இப்பகுதியில் கேள்வி கேட்பாரின்றி போலீசு அரஜாகத்தை கட்டவிழ்த்துவிடவும் கனவு காண்கிறது போலீசு.

உழைக்கும் மக்களின் உற்ற தோழன் புமாஇமு

அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம்
அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம் (கோப்புப் படம்)

இப்பகுதி கடந்த காலங்களில் எப்படி இருந்தது ? மாநகராட்சியும், அரசும் இப்பகுதியை தீண்டத்தகாத சேரியாகவே நடத்தியது, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்தது. இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இப்பகுதியில் கிளை தொடங்கிய பின்னர்தான் அடிப்படை பிரச்சனைகள் ஒவ்வொன்றாக போராடி தீர்க்கப்பட்டு வருகிறது.

ஊரை இடித்து தரைமட்டமாக்க குடிசைமாற்று வாரியம் எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். பராமரிப்பு இன்றி கிடந்த பொது கழிவறை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுக்க வால்வு, குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் தொட்டிகள், ஊரை சுகாதாரமாக வைத்திருக்க குப்பைக் கூடைகள், அவ்வப்போது மருத்துவ முகாம்கள், ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இரவுபாட சாலை. இவை எல்லாம் இந்த பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி, மாநகராட்சி மேயர், சென்னை கலெக்டர், மற்றும் பிற அதிகாரிகள் ஆகியோர்களின் கருணையினாலா நடந்தது? இல்லையே. புமாஇமுவின் இப்பகுதி செயலர் தோழர் அசோக் மற்றும் பிற தோழர்கள் தலைமையில் அப்பகுதி மக்கள் அனைவரையும் திரட்டி போராடியதன் மூலம்தான் கிடைத்தது.

ஆனால், இதெல்லாம் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமைதானே, அதற்கு ஏன் போராட்டம், போலீசு கேசு என்று சிலர் கேட்கலாம். இது மக்கள் நலனுக்கான அரசாக இருந்தால் அப்படி நினைக்கலாம். இது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலன் கொண்ட அரசு என்பதை உங்கள் சொந்த அனுபவங்களில் இருந்தே நீங்கள் பார்க்கலாம். நமக்கு கல்வி , மருத்துவம், குடிநீர், சாலை, சுகாதார வசதி செய்து கொடுக்க காசு இல்லை என்று மறுக்கும் அரசுதான், ஃபோர்டு, ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கும், அம்பானி, டாடா போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் சலுகைகள், மானியங்களுக்காக நமது வரிப்பணத்தில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை ஆண்டு தோறும் வாரி இறைக்கிறது. பணம் இல்லையென்றால் இது எப்படி முடிகிறது? இது நமக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இப்படிப்பட்ட அரசிடம் போராடாமல் எப்படி நமது உரிமைகளைப் பெற முடியும். இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களைத் திரட்டி போராடுவதால்தான் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடிகிறது. இதைத்தான் இந்த அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படியே போனால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள், இந்த கேடுகெட்ட மக்கள் விரோத அரசுக்கு முடிவுகட்டிவிடுவார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் போராடுகின்ற புரட்சிகர அமைப்புகளை ஒடுக்குவது, பின்னர் போராடும் மக்களையே கேள்விகேட்பாரின்றி அடக்கி ஒடுக்குவது என்ற சதித் திட்டத்தோடு வெறிகொண்டு அலைகிறது இந்த அரசு.

DR. சந்தோஷ் நகர் பகுதியில் இன்று மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கிறது போலீசு. இதன் மூலம் அமைப்பு, போராட்டம் என்றாலே போலீசு பொய் கேஸ் போடும், சிறையிலடைக்கும் என்று மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறது.

உழைக்கும் மக்களே இவர்கள் நினைப்பதைப் போல் நடந்தால் என்னாகும் என சற்று யோசித்துப் பாருங்கள். இப்போதே ஊருக்குள் உளவு போலீசார் அத்துமீறி நுழைந்து மக்களிடையே இல்லாதது பொல்லாததை சொல்லி பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நம்மிடையே இருந்து சில போலீசு உளவாளிகளை உருவாக்க நினைக்கிறார்கள், ஊரின் ஒரு பகுதி மாணவர்கள் இளைஞர்களிடையே சில சலுகைகளை செய்து தருவதாகக் கூறி ஊழல்படுத்த முயலுகிறார்கள்.

மற்றொரு புறம் இதுவரை நம்பகுதிக்குள் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மதவெறியர்கள் கால் எடுத்து வைக்க நாம் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் நம்மிடையே உள்ள கடவுள் நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு விநாயகர் சிலை வைக்கப்போவதாக நாங்கள் கேள்விபடுகிறோம். இதன் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள், மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பார்கள். அப்போதும் போலீசு அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.

இறுதியாக, சிங்காரச் சென்னைக்காக மாநகரில் பல குடிசைப்பகுதிகளை அகற்றியதைப் போல் நாளை நம் பகுதியையும் அரசு அகற்றும். அப்போது அதை எதிர்த்துப் போராட புரட்சிகர அமைப்பும் இருக்காது, மக்களிடையே ஒற்றுமையும் இருக்காது.

இந்த நிலைமை நம்பகுதிக்கு வர வேண்டுமா? அக்கறையோடு சிந்தித்துப் பாருங்கள் நிச்சயம் வரவே கூடாது என்றால் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியுடன் கரம் சேருங்கள். போராடுகின்ற அமைப்புத் தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு தனிமைபடுத்தவும், மக்களை பீதியூட்டவும் நினைக்கும் போலீசின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்போம் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து புமாஇமு வின் டாக்டர் சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர் அசோக் மீதான பொய் வழக்கை முறியடிக்கும் போராட்டத்தை மக்கள் ஆதரவோடு நடத்தி வருகிறது புமாஇமு.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.

  1. சிறை சித்திரவாதத்திற்க்கு அஞ்சுபவர்கள் பு.மா.இ.மு தோழர்கள் அல்ல என்பதை பல முறை இந்த அரசுக்கும்,போலீசுக்கும் நிருபித்து காட்டி உள்ளோம் இம் முறையும் நிருபித்து காட்டுவோம் தோழர்களே.

    கம்யூனிஸ்டுகள் போராட்டத்தை ஒடுக்குவது என்பது எறியும் நெருப்பில் பெட்ரோல் உற்றி அணைக்க முயற்சிப்பது போன்றது என்பதற்க்கு வரல்ற்றில் பல சாட்ச்சிகள் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க