privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்

ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்

-

கேன் இந்தியா (Cairn India) தனியார் எரிசக்தி பெருநிறுவனமும், நவீன தொழில்நுட்பமும் இணைந்ததன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் சத்தமில்லாமல் ஒரு ‘புரட்சி’ நடத்தப்பட்டுள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் வியந்தோதுகின்றன. தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைத்து அவற்றை அக்கிராம மக்களே சுயமாக நிர்வகித்துக் கொள்வது தான் அந்த புரட்சி. இத்தகைய ‘புரட்சி குறித்து’ 2 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்திருந்தது வினவு.

தண்ணீர் ஏ.டி.எம்
தண்ணீர் ஏ.டி.எம்மில் ராஜஸ்தானி பெண்கள்

இந்தியாவின் மொத்த பரப்பளவில் 10.4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 5.5% சதவீதத்தையும் கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் நாட்டின் மொத்த நீராதாரத்தில் 1.15% மட்டுமே பெற்றுள்ளது. வருடாந்திர மழையளவோ 100 மி.மீ இருந்து 800 மி.மீக்குள் தான் இருக்கிறது.

ராஜஸ்தானின் வறட்சி மிகுந்த இரு மாவட்டங்களில் 22 எதிர் சவ்வூடுபரவல் (Reverse Osmosis RO) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவற்றுடன் தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் (ATM) இணைக்கப்பட்டுள்ளன.

கவாஸ், குடா, ஜோகாசாகர், பைய்டு உள்ளிட்ட தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தண்ணீர் ஏ.டி.எம் மையங்களில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி ரூ 5 விலையில் 20 லிட்டர் குடிநீரை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக கிராம மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டின் ஆரம்ப விலை ரூ 150. குறைந்தபட்சம் ரூ 20-க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

“இத்திட்டத்தால் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் குடிநீர் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் ஏடிஎம்கள் மக்களிடையே பிரபலமடைந்து வருவதாகவும் பலரும் தண்ணீருக்கான ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவு, ஜீவன் அம்ரித் திட்டத்தின் (Jeevan Amrit Project) மூலம் இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கிறது. டாடா திட்டங்கள் (TATA Projects) நிறுவனம் RO நிலையங்களையும், ATM-களையும் நிறுவும் வேலையை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பொது சுகாதார பொறியியல் துறை (PHED) நீராதாரத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் இணைப்பையும், இந்நிலையங்களுக்கான வளாகங்களையும் கட்டித்தந்துள்ளது. உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கள் இதற்கான இடத்தை வழங்கியுள்ளன. அதாவது, இடம், தண்ணீர் இணைப்பு, கட்டிடம் கட்டியது போன்ற அடிப்படை அம்சங்கள் அரசு செலவில்; மக்களிடம் பணம் வசூலிப்பதற்கான ஏ.டி.எம், சுத்திகரிப்பு நிலையம் போன்ற கூடுதல் அம்சங்களை தனியார் அமைக்கின்றனர்; மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் பணத்தில் அரிசி, தனியாரின் உமி என்ற இந்த வகை மாதிரிதான் அரசு-தனியார் கூட்டிணைவு செயல்படும் அடிப்படை.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கிராமங்களில் 15 பேர் கொண்ட ‘தண்ணீர் கமிட்டிகள்’ ஏடிஎம்களையும் வரவு செலவுகளையும் நிர்வகிக்கும் என்றும், தண்ணீர் விற்பனை செய்து வரும் பணத்தில் ஏடிஎம்களின் பராமரிப்பு, இயக்குபவருக்கான ஊதியம் போக மீதியுள்ள தொகை கிராம நலனுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு செலவளிக்கப்படும் என்றும் கேன் இந்தியா நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த வளர்ச்சிப் பணிகளுக்கான செலவும் தனியார் முதலாளிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் திட்டமிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தண்ணீர் தனியார்மயம்இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தாரா (Dhara) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பங்குதாரராக செயல்படுகிறது. இந்நிறுவனம் கிராம தண்ணீர் கமிட்டிகளை ஒருங்கிணைப்பதோடு, சுத்தமான, சுகாதரமான குடிநீர் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துவருகிறது. அதாவது, அரசுத் துறை கொண்டு வரும் தண்ணீரை, கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் நாம் பிடித்துக் கொள்கிறோம். இடையில் குடத்துக்கு ரூ 5 என்று மொட்டை அடிப்பது எதற்காக என்று யாரும் கேள்வி கேட்டு விடாமல் இந்த ‘சிறப்பு’ தண்ணீரின் தேவையை மக்களிடம் நிறுவுவது இந்தத் தொண்டு நிறுவனத்தின் வேலை.

இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கும் கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவின் தலைவர் நிலேஷ் ஜெயின் – இது அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களுக்கும், சுயமேலாண்மைக்கும் மிகச் சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.

வறட்சியான கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொடுப்பதில் கேன் இந்தியா, டாடா, தாரா என்.ஜி.ஓ இவர்களுக்கெல்லாம் இவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்?

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, உற்பத்தியில் ஈடுபடும் பெரும் தனியார் நிறுவனங்களில் ஒன்றான கேன் இந்தியாவின் சந்தை மதிப்பு சுமார் 60,000 கோடி ரூபாயாகும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 30 சதவீதத்தை கேன் இந்தியா உற்பத்தி செய்கிறது. ராஜஸ்தானில் உள்ள மங்களா, பாக்கியம், ஐஸ்வர்யா போன்ற இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் கேன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் தற்போதைய உரிமையாளர் வேறு யாருமல்ல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதல் செசா கோவா சுரங்க நிறுவனம், சத்தீஸ்கர் ஜர்சுகுடாவில் வேதாநாத அலுமினியன் வரை இழிபுகழ் ஈட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் தான்.

எண்ணெய் உள்ளிட்ட இந்நாட்டின் பொதுச் சொத்துக்களான இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் கொடுத்து அவை கொள்ளை லாபமீட்ட வழி செய்கிறது தனியார் மயக் கொள்கை. இதன் மறுபக்கமாக அரசு மக்கள் நலத் திட்டங்களை வெட்டி வரும் நிலையில், தனியார் முதலாளிகளே சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக காட்டுவதற்கு பெயர்தான் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிடி.

சுய ஆளுகைக்கு (Self Governance) சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் இந்தத் தண்ணீர் ஏ.டி.எம் திட்டம், தண்ணீர் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பதை மாற்றி, காசு உள்ளவருக்கு தண்ணீர் என்பதைக் கொண்டு வந்திருக்கிறது. பணம் உள்ளவர் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு எல்லா தண்ணீரையும் தனக்கு திருப்பி விட்டுக் கொண்டு, காசில்லாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் அதை இந்த சுயஆளுகை அமைப்புகள் தடுத்து நிறுத்துவது சந்தையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக ஆகும் என்பதால் அது அனுமதிக்கப்படாது. மேலும், கிராம தண்ணீர் கமிட்டிகளை கையாளும் பொறுப்பையும், இத்திட்டத்தின் வரவு செலவை நிர்வகிக்கும் பொறுப்பையும், ஏற்றிருக்கும் தொண்டு நிறுவனமான தாராவின் கணக்குகளை தணிக்கை செய்து சரிபார்க்க யாராலும் முடியாது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை சோதித்தறிய மங்கள்யான் அனுப்பி மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கும் அரசுக்கு, தன்னுடைய குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க தேவையான நிதியும், தொழில்நுட்பமும் இல்லையாம். அதனால் தான் இது போன்ற அரசு – தனியார் கூட்டு திட்டத்தின்(PPP) மூலம் செயல்படுத்துவதாக அரசு கூறுகிறது.

குடிமக்களுக்கு தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளை வழங்கும் தனது பொறுப்பிலிருந்து அரசு விடுவித்துக் கொண்டு, அவற்றை விற்பனை சரக்குகளாக  சந்தை செயல்பாட்டுக்கு திறந்து விடுவதுதான் PPP என்ற அரசு-தனியார் கூட்டு திட்டங்கள் போன்றவற்றின் நோக்கம். உதாரணமாக PPP திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைகள் எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் திட்டத்தில் முதலீடு செய்த தனியார் நிறுவனங்கள் சுங்கச் சாவடிகளை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதன் மூலம் சாலைகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நாள் வரையிலும் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காமல் மக்களைத் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கவிட்ட அரசு இன்று இத்திட்டத்திற்கு தண்ணீர் இணைப்பை வழங்கி வேறு வழியில்லாமல் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு மக்களை தந்திரமாக தள்ளியுள்ளது.

ஏற்கனவே நகர்ப்புறங்களில் உயிரின் ஆதாரமான குடிநீர், லாபத்திற்கான சரக்காக விற்பனை செய்யப்பட்டுவருகிறது, காசு கொடுத்து வாங்கிக் குடிக்க மக்களும் பழகிவிட்டார்கள். கிராமப்புற மக்களையும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் முறைக்கு பயிற்றுவிக்கும் முகமாகவே இத்தண்ணீர் ஏ.டி.எம்கள் PPP, CSR மற்றும் NGO-களின் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செயல்தந்திரமும் கூட இந்த அரசின் சொந்த தயாரிப்பு இல்லை. உலகவங்கி தீட்டிக்கொடுத்த ’குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கி படிப்படியாக கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போய் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற திட்டம் தான் இது.

சாலை வசதி, கல்வி, மருத்துவம், சுகாதாரம், தண்ணீர் முதலான அடிப்படைத் தேவைகளை பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. இவற்றை குடிமக்களுக்கு ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அரசு இப்பொறுப்பிலிருந்து விலக்கிகொண்டு அடிப்படை உரிமைகள் அனைத்தையும் விற்பனை சரக்காக்க வேண்டும் என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. மொத்தத்தில் தண்ணீர் தனியார்மய நிகழ்ச்சி நிரலில் வரக்கூடிய மற்றுமொரு திட்டமே இத்தண்ணீர் ஏ.டி.எம்.

குடிமக்களின் அடிப்படை தேவைகளை செய்துகொடுக்கும் கடமையிலிருந்து அரசை விடுவிப்பதன் மூலம் அதன் பணிகளை வெட்டிச் சுருக்கியுள்ளன புதிய தாராளவாத கொள்கைகள். இத்தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் போது அதை எதிர்க்கும் மக்களை ஒடுக்குவதை மட்டுமே தனது தலையாய கடமையாக செய்துவருகிறது அரசு.

பூமியைத் தவிர வேறெந்த கோளிலும் தண்ணீர் இல்லாததால் அங்கு நுண்ணுயிரிகள், தாவரங்கள் உள்ளிட்டு எந்த உயிரினமும் இல்லை. உயிர் வாழ்வதற்கு மூலாதாரம் தண்ணீர். அது இயற்கையின் அருட்கொடை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. அதை சில முதலாளிகள் அபகரித்துக் கொண்டு, மக்களை சுரண்டுவது என்பது இயற்கை நியதிக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதம். இது தொடர்ந்தால் நாளை நாம் சுவாசிக்கும் காற்றும் கூட தனியார்மயமாக்கப்படும்.

மேலும் படிக்க…