privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தடைகளை தகர்த்து புதுச்சேரியில் புஜதொமு பொதுக்கூட்டம்

தடைகளை தகர்த்து புதுச்சேரியில் புஜதொமு பொதுக்கூட்டம்

-

தொழிலாளி வர்க்கமே எழுச்சி கொள்!
புதுச்சேரி புஜதொமு – வின் பொதுக்கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி!

டந்த 05.08.2014 அன்று தொழிற்பேட்டைகளில் ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் முதலாளிகளின் ஏவல்படையாக செயல்படும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளைக் கண்டித்து பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேரணி தொடங்கிய சில நிமிடத்திலேயே, ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் செயல்படும் ரவுடிகள் தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்களைக் தற்காத்துக் கொள்ள திருப்பித் தாக்கினர். இதைப் பயன்படுத்தி போலீசு, தொழிலாளர்களில் 20 பேரை கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது.

கைதான தோழர்களுக்கு பிணை வழங்காமல் தடுத்து அவர்களைச் சிறையில் வைப்பதன் மூலம் அவர்களை அச்சமூட்டி, அதன் மூலம் தங்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கும், சங்கம் துவங்க நினைக்கும் தொழிலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு – நீதிமன்றம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இருந்து செயல்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் பிணை கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கைதான 23 நாட்களுக்குப் பிறகு 23.09.2014 அன்று தோழர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

கைது, சிறை போன்றவை எங்களது போராட்ட குணத்தை முடக்கிவிடாது, அது எங்களது போராட்ட உணர்வை மேலும் விசிறியெழச் செய்யும் என்பதை முதலாளிகள் – ஒப்பந்த ரவுடிகள் – போலீசு கூட்டுக் களவாணிகளுக்கு உணர்த்தும் வகையில் இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்லும் வகையில் 09.09.2014 அன்று திருபுவனை பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டு அதற்காக, சம்மந்தப்பட்ட போலிசு நிலையத்தில் அனுமதி கோரி கடிதம் தரப்பட்டது. எதிர்பார்த்தது போலவே போலீசு அனுமதி மறுத்தது.

அதற்கு அவர்கள் சொன்ன காரணம், “நீங்கள் கூட்டம் நடத்தினால், ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வரும் அதனால் உங்களுக்கு அனுமதி தரமுடியாது” என்பது தான். ஒப்பந்ததாரர்களால் பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் உள்ளது என விளக்கிப் பேசப்பட்டது.

“அதைப் பற்றியெல்லாம் பேசமுடியாது. அனுமதி கிடையாது என்றால் கிடையாது தான்” என்று ஒப்பந்ததாரர்களுக்கு பங்காளி போல் பேசி காலம் கடத்துவதிலும், அனுமதி மறுப்பதிலுமிலேயே குறியாக இருந்தது போலீசு. இதற்கு மேல் இவர்களிடம் பேசுவதில் பலன் இல்லை என்பது உணர்ந்து அனுமதி மறுப்பை எழுதிக் கேட்டபோது அதையும் தர மறுத்தது போலீசு.

“நாங்கள் அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அனுமதி கொடுங்கள்; இல்லையேல் அனுமதி மறுத்து எழுதிக் கொடுங்கள்” என்று விடாப்பிடியாகப் போராடி கேட்ட பிறகு தான் அனுமதி மறுப்பதாக எழுதி கொடுத்தது போலீசு. அதனையும் எப்போதும் போல் கடைசி நேரத்தில் கொடுத்து தாங்கள் முதலாளிகளின் எடுபிடிகள் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.

அதன்பின் 19.09.2014 அன்று பொதுக்கூட்டம் நடத்தும் வகையில் திட்டமிட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அங்கும், காலம் கடத்துவதில் தான் குறியாய் இருந்தது போலிசு. எமது தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு இறுதியாக 23.09.2014 அன்று திருபுவனைக்குப் பதிலாக அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியான மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.

அந்த ஆணையின் அடிப்படையில் ஆணை பெறப்பட்ட 20.09.2014 அன்றே அனுமதி கோரி போலிசிடம் கடிதம் தரப்பட்டது. அதற்கு பதில் கேட்டபோது இரண்டு நாட்கள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. 22.09.2014 அன்று அழுத்தம் கொடுத்து கறாராக பேசி அனுமதி பற்றிக் கேட்ட போது, “உங்களது அனுமதி கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி, வேறு கடிதம் கேட்டனர். “கடிதத்தில் எண் குறிக்கப்பட்டுள்ளது” என்பதை சுட்டிக் காட்டிய பிறகும், வேறு கடிதத்தில் ரிட் மனு எண் குறிப்பிட்டுத் தருமாறு கேட்டது.

“ஏற்கனவே கொடுத்த கடிதத்தின் மீதான பதில் தெரியாமல் புதிய கடிதம் தரமுடியாது” என கறாராக மறுத்த பிறகு, நீதிமன்ற ஆணை நகலைக் கேட்டது போலிசு. ஆணை கொடுத்தபின் அதைப் பார்த்து, “ஆணையில் தேதியும், இடமும் குறிப்பிடப்படவில்லை” எனக் கூறி மீண்டும் இழுத்தடித்தது போலிசு. அதுவும் குறிக்கப்பட்டுள்ளது என சுட்டிக் காட்டி விளக்கப்பட்டது.

அதன்பின், “அந்த ஆணையில் அனுமதி தருவதாக குறிக்கப்படவில்லை, அனுமதியை பரிசீலிக்க மட்டுமே கூறியுள்ளது. அதனால், பரிசீலித்து முடிவு சொல்வ”தாக கூறியது.

“ஆணையில் அனுமதி தரச் சொல்லித் தான் உத்தரவு உள்ளது. மாற்று இடமான மதகடிப்பட்டில் நடத்த தேவையான விதிமுறைகளைப் பற்றிப் பரிசீலிக்குமாறு தான் குறிப்பிடப்பட்டுள்ளது” என போலிசு அதிகாரியிடம் விளக்கியதும் உடனே, “அதைப் பற்றி தனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை” என்று தனது எரிச்சலைப் பொரிந்து தள்ளினார்.

மேலும், எஸ்பி தெய்வசிகாமணியோ, “வாங்கிய காசிற்கு மேலாக தனிநபர்களைப் பற்றிப் பேசக்கூடாது, யார் மனதும் புண்படும்படி பேசக் கூடாது, தவறான வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என நீங்கள் எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி பற்றிப் பேசமுடியும்” என்று கூவினார்.

“ஏற்கனவே, இவையெல்லாம் அனுமதி கடிதத்தில் விதிமுறைகளாக நீங்கள் கொடுப்பீர்கள். பின் ஏன் தனியாக எழுதித் தரவேண்டும்” எனக் கேட்ட போதும், “எழுதிக் கொடுத்தால் தான் அனுமதி” என்று எஸ்பி கூறிவிட்டார்.

ஆகவே, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி புதுச்சேரி பகுதியின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் தோழர் ராஜூ அவர்களிடம் தெரிவித்து, அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எஸ்பியிடம், “தனிநபரைப் பற்றிப் பேசினால், சம்மந்தப்பட்ட அந்தத் தனிநபர் புகார் கொடுக்கும் பட்சத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கத்தான் போகிறீர்கள். மேலும், என்ன பேசப் போகிறோம் என முன்கூட்டியே கடிதம் தர சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே, தனியாக எழுதித் தரமுடியாது” என கறாராக கூறியவுடன், அவரிடம் அனுமதி அளித்து விடுவதாக கூறிய எஸ்பி, தோழர்களிடமோ, பொதுக்கூட்டம் நடத்தும் பகுதியில் உள்ள கோவில் தீமிதி பிரச்சினை காரணமாக, சிபிஎம் அலுவலகம் எரிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, உங்கள் அமைப்பினரைத் தவிர யாரையும் பேச அழைக்கமாட்டீர்கள் என எழுதிக் கேட்டார்.

வாங்கின காசுக்காக ஏதாவது எழுதிவாங்கி அதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்தைத் தடுத்து விட வேண்டும் என்பதில் அனைத்து அதிகாரிகளும் குறியாய் இருந்தனர். நமக்கோ போலீசுக்கு சட்டநடைமுறைகளைப் பின்பற்றுமாறு சட்டத்தைப் பற்றிக் ’கற்றுக்’ கொடுக்க வேண்டிய சூழல் தான் இருந்தது. அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் நாமும் பதில் சொல்ல வேண்டியதாய் இருந்தது.

அதனால், நிகழ்ச்சி நிரலின் படி தான் பொதுக்கூட்டம் நடக்கும். அதனால் தனியாக எழுதித் தரமுடியாது என மறுத்த பின், மீண்டும் அனுமதி தரவேண்டுமென்றால், தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் திருபுவனை பகுதி போலீசு நிலையத்தில் சென்று எஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் அறிவுரைகளைக் கேட்டு வந்தால் தான் தரமுடியும் என்று கூறினார்.

“பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை எழுத்துபூர்வமாக அளித்தால் தான் நாங்கள் வருவோம்” என்றும், “இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாது. அதனால், அனுமதி தரமுடியாது எனில் அனுமதி மறுத்து கடிதம் கொடுங்கள். நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுக் கொள்கிறோம். மற்றதை நீதிபதி உங்களுக்கு சொல்லுவார்” என்று கூறிய பிறகு, வேறு வழியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தும் அன்று காலை 10.30 மணிக்குத் தான் அனுமதி கொடுத்தனர். அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதி கொடுத்தது போலீசு. முதலாளிகளும், ஒப்பந்ததாரர்களும் வீசிய எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டு, அந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகவே இத்தனை கடிதங்கள், இழுத்தடிப்புகள் செய்து புதுச்சேரி முதலாளிகளின் சட்டபூர்வ அடியாள்படையாக பகிரங்கமாக செயல்பட்டது போலீசு.

உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றும் 22.09.2014 அன்று முழுவதும் இந்த அனுமதிக்காக போலீசு அலுவலகத்தில் காத்துக் கிடந்து தான் வாங்க முடிந்தது. இந்த அரசு, நமது நாட்டை ஜனநாயக நாடு என்றும், மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து ஜனநாயக உரிமைகளும் உள்ளது என மூலைக்கு மூலை பிரச்சாரம் செய்தாலும், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னையில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களை வெளிநாட்டு நிறுவனத்தின் லாப வெறிக்காக, காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் இந்த நாடு சுதந்திர நாடு இல்லை என நிரூபித்தது போலீசு. இப்போது இன்னொரு முறை புதுச்சேரியில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

“மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்களே” என்ற வடிவேலுவின் காமெடி போல் ஜனநாயகம் பல்லிளிக்கிறது. ஆனால், மக்கள் வெள்ளந்தியாக இந்த அரசை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அடித்தாலும் வாங்குவதால் மக்களை ரொம்ப நல்லவர்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறது அரசு. நாம் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருக்கப் போகிறோமா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.

இந்தக் கேள்விக்கான பதிலாகத் தான் இந்தப் பொதுக்கூட்டம் இவ்வளவு இடர்ப்பாடுகளுக்குமிடையிலும் அனுமதி வாங்கி நடத்தப்பட்டது. இந்தப் பொதுக்கூட்டம் அனுமதியின் படி மிகச் சரியாக 06.00 மணிக்கு தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது. பொதுக்கூட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர்.சுதாகர் தலைமை தாங்கினார்.

தோழர்.சுதாகர்
தோழர்.சுதாகர்

அவர் தனது தலைமையுரையில், அவர் பணிபுரியும் ஸ்ரீ மதர் பிளாஸ்ட் நிறுவனத்தில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கினார். “50 இயந்திரங்களுடன், மூன்று பணிமுறைகளில் இயங்கும் நிறுவனத்தில் வெறும் 30 பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டவிரோதமான முறையில் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து அந்தத் தொழிலாளர்களை சட்டப்படி பணிநிரந்தரமாக்கக் கோரி சம்மந்தப்பட்ட தொழிலாளர் துறையிடம் மனு கொடுத்தால், ஆய்வு செய்ய வந்த தொழிற்சாலை ஆய்வாளர், நிறுவன அலுவலகத்தில் உட்கார்ந்து சமோசா, டீ சாப்பிட்டுவிட்டு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் மறைத்து வைத்த பின்னர் சாவகாசமாக வந்து சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். தொழிலாளர்களிடம் எந்த விசாரணையும் செய்யவில்லை. இதனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஆய்வறிக்கை கேட்டு வாங்கிப் பார்த்தால், நிறுவனத்தில் அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறது என்று அறிக்கை கொடுத்துள்ளது தெரிந்தது. 50 இயந்திரங்கள், மூன்று பணிமுறைகளில் இயங்கினால் 30 தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வாறு நிறுவனத்தை இயக்க முடியும் என்ற அடிப்படையான கேள்வி கேட்கக் கூட தெரியாத முட்டாளா அந்த ஆய்வாளர் என்று நாம் நினைக்கலாம். தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதால், நம்மை முட்டாளாக நினைக்கிறார்கள். நமது அமைதியைக் கலைத்து ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்து கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு மங்கலம் கிளைப் பொருளாளர் தோழர் வீரலட்சுமி, தான் பணிபுரிந்த பவர் சோப் நிறுவனத்தில் தொழிலாளர் படும் துயரங்களை தனது சொந்த அனுபவத்திலிருந்து விளக்கிப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

படிக்காத முட்டாளான பவர்சோப் முதலாளி தனபால் என்ற ஒருநபரின் குடும்பம் சொகுசாக இருக்க நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது என்பதையும், தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி யோசிக்காமல், நிர்வாக அதிகாரியின் கால் புண்படும் என்று கவலைப்படும் போலீசு அதிகாரிகளின் திமிர்த்தனத்தை, அடிமைப் புத்தியை தனது பாணியில் உணர்ச்சிகரமான முறையில் விளக்கிப் பேசினார். சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் பெண்கள் படும் துயரங்களை விளக்கி இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட புதிய ஜனநாயக அரசு ஒன்று தான் தீர்வு என பேசினார்.

கண்டனவுரை நிகழ்த்திய புஜதொமு வின் புதுச்சேரி மாநில அலுவலக செயலாளர் தோழர். லோகநாதன் தனது உரையில், “05.08.2014 அன்று நடந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் போலீசு தான். ஒருபக்கம் அனுமதி கொடுத்து விட்டு மறுபுறம் பிரச்சினை வரும் என்று சொல்லி, அவ்வாறு வந்தால் வழக்குப் போடுவேன் என்றும் சொல்லி, திட்டமிட்ட முறையில் போலீசின் பின்புலத்தில் தான் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகத் தான் தோழர்கள் மீது பொய்வழக்கு, கைது, சிறை. எனவே, இப்பிரச்சினைக்கு முக்கிய காரணம், போலீசு தான் என்பதையும், முதலாளிகள், ஒப்பந்த ரவுடிகளுக்கு அடியாளாக செயல்பட்டு தொழிலாளர்களை ஒடுக்கி தான் மக்களின் விரோதி என்பதை நிரூபித்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சிறை என்றால் பயப்பட நாங்கள் சமூகக் குற்றம் செய்து சிறை செல்லவில்லை. போராடித் தான் சிறை சென்றுள்ளோம். சிறையிலுள்ள தொழில்முறைக் குற்றவாளிகள் கூட தங்கள் சூழ்நிலைகளைச் சொல்லி குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ள இந்த நேர்மை கூட காக்கிச்சட்டை போட்ட இந்த குற்றவாளிகளுக்குக் கிடையாது” என போலீசு அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை கேலிசெய்தார்.

“சிறையில் எங்களது போராட்டம் தொடர்ந்தது. சிறை அதிகாரிக்கும் நாங்கள் ஒரு போராளியாகத் தான் தெரிந்தோம். சிறை எங்களைத் தான் பூட்டி வைக்க முடிந்தது.. எங்கள் அரசியல் உணர்வுகளைப் பூட்டிவைக்க முடியவில்லை. எனவே, எங்களை சிறையில் தள்ளியதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது” என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் பதிவு செய்தார். தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது உரிமைகளை வெல்லமுடியும் என்பதையும் அதற்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே சாத்தியம் என்பதையும், வர்க்கமாய் அணிதிரள வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மாநில மனித உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ தனது உரையில், “இந்தப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே போலீசு எப்படியெல்லாம் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டது” என்பதை விளக்கிப் பேசினார். “திருபுவனை போலீசின் கட்டுப்பாட்டில் ரவுடிகள் இல்லை; ரவுடிகளின் கட்டுபாட்டில் தான் திருபுவனை போலீசே இருந்தது. அதனால் தான், ரவுடிகளைக் கட்டுப்படுத்தி, தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசு, தொழிலாளர்களை ஒடுக்கி, மக்களை பயமுறுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியரோ போராடி கைதான தொழிலாளர்களை தண்டிக்கும் அதிகாரம் இல்லாத போதும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு நேரடியாக தண்டனை வழங்கி உத்தரவிடுகிறார். இதைப் பற்றி கேட்டால் இங்கு இப்படித்தான் என்று அதிகாரத் திமிரில் பேசுகிறார். சட்டத்தை நிலைநாட்டி மக்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியவரே சட்டத்தை மீறி தண்டனை வழங்கிய கொடுமை இந்த புதுச்சேரியில் மட்டும் தான் உள்ளது” என்று இந்தப் பிரச்சினையில் போலீசு, அரசின் கூட்டுக் களவாணித் தனத்தை அம்பலப்படுத்தியதுடன், மாவட்ட ஆட்சியரின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கியதையும் விளக்கினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“தொழிலாளர்கள் அமைதியாக போராடாமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று சொல்கிறது போலீசு. இனிமேல், தொழிலாளர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளைக் கோரி போலீசிடம் முறையிடுங்கள். அவர்கள் அதை பெற்றுத் தரட்டும் அல்லது எவ்வாறு போராடுவது என்று அவர்கள் சொல்லட்டும். தொழிலாளர்கள் போராடினால் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்கும் போலீசு, தொழிலாளர்களின் சட்டபூர்வ கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருக்கும் முதலாளிகளையோ அல்லது அதன் மீது நடவடிக்கைகளை எடுக்காத தொழிலாளர்துறை அதிகாரிகளையோ தூக்கிக் கொண்டு போய் வெளுக்க முடியுமா?” என்று கேட்டபோது மக்கள் தங்களது கரவொலி மூலம் போலீசின் கையாலாகத்தனத்தை கேலிசெய்தனர்.

“இந்த அரசின் சட்ட மீறல்கள், அனைத்து மக்கள் போராட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்று, விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களும், மாணவர்களிடமிருந்து கல்வியும், மீனவர்களிடமிருந்து கடலும், பழங்குடி மக்களிடமிருந்து காடுகள், மலைகளும் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. போராடும் மக்கள் மீது அரசு வன்முறையால் ஒடுக்குகிறது. இதை மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து, சிறப்புரையாற்றிய புஜதொமுவின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு, தனது உரையில், “தொழிலாளர் சட்டதிருத்தங்கள் என்ற பெயரில் தற்போது இருக்கும் அரைகுறை உரிமைகளும் பறிக்கப்படவிருக்கின்றன. தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் என்ற தரகர்கள் முதலாளிகளுக்குத் தேவையில்லை. முதலாளிகளே நேரடியாக அப்பரண்டீஸ் என்ற தொழிற்பழகுநர்களையே தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். இன்று ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் ஆட்டம் போடும் இவர்களும் நாளைக்கு வீதிக்குத் தான் வந்து ஆகவேண்டும்” என்று நடைமுறையை உணர்த்தும் வகையில் சொன்னார்.

தோழர் சுப. தங்கராசு
தோழர் சுப. தங்கராசு

மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி, தொழிலாளர் சட்டங்களைத் திருத்தப்போவதாக எந்த வாக்குறுதியும் சொல்லவில்லை. வாக்குறுதியாக கொடுத்ததைச் செய்ய தாமதிக்கும் மோடி, முதலாளிகளுக்கு தாமதமின்றி சேவை செய்வதை விளக்கி மோடியைத் தேர்ந்தெடுத்தது மக்கள் அல்ல. காங்கிரசு மேல் மக்களுக்கிருந்த வெறுப்பை, மோடிக்கு செல்வாக்காக திருப்பும் வகையில் செயல்பட்ட முதலாளிகளே என்பதை விளக்கினார்.

மேலும், இந்த சட்டதிருத்தங்களால் ஏற்படப்போகும் அபாயங்களை உணத்திப் போராட வேண்டிய அவசியத்தை விளக்கினார். 650 கோடி ரூபாய் முதலீட்டிலும், பல்வேறு அரசின் சலுகைகள் மூலமும் தொழிலைத் தொடங்கிய நோக்கியா நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள வித்தியாசத்தைச் சொல்லி நமது நாட்டுத் தொழிலாளியின் மோசமான நிலையை விளக்கினார். இந்த நிறுவனம் ரூ 89,000 கோடி இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகையை செலுத்தாததால் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க மறுத்தது. ஒரே ஒரு நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ராயல்டி தொகை மட்டுமே இவ்வளவு என்றால் ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் அடையும் இலாபத்தைக் கணக்கிட்டால் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குக் கடத்திச் செல்லப்படும் மக்கள் உழைப்பைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம். இந்த விசயத்தில் திமுக, அதிமுக, காங்கிரசு, பாஜக, இடது-வலது போலிகள் என்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வித்தியாசம் இன்றி செயல்படுகிறது என்பதை விளக்கிப் பேசினார். இது போன்ற சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், ஓட்டுக் கட்சிகளை நம்பாமல் மாற்று அரசை நிறுவுவது தான் வழி என்று விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.

நிறைவாக மக்கள் கலை இலக்கிய கழகம் மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி அங்கு திரண்டிருந்த தொழிலாளர்களின் போராட்ட உணர்வை தட்டி எழுப்புவதாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

புஜதொமு திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் சக்திவேல் நன்றியுரைக்குப் பின் பாட்டாளிவர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.

இப்பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களிடமும், தொழிலாளர்களிடமும் போராடும் எண்ணத்தைத் தூண்டியுள்ளதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்து வருகின்றனர்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு : 9597789801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க