Friday, January 17, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !

-

ரசியப் புரட்சி! செயலின் மகிழ்ச்சி!

விளக்கவே தேவையில்லை
கண்ணைத் திறந்து
வெளி உலகைப் பார்த்தாலே
விளங்கிவிடும் உண்மை,
காண்பவைகள்
சமூக அநீதி மட்டுமல்ல
இந்த சமூக அமைப்பே அநீதி!

ரசியப் புரட்சியின் போது லெனின்
ரசியப் புரட்சியின் போது லெனின்

‘வளர்ச்சியை’ நம்பி
வாழ்க்கையை ஒப்படைத்த
நோக்கியா தொழிலாளிகள்
தெருவில்,

வரி ஏய்ப்பு செய்து
கொள்ளையடித்து
தொழிலாளரின் செல்லையே சிதைத்த
பன்னாட்டு முதலாளி பாதுகாப்பாக
திமிரில்.

ஒரே இரவில்
போபால் மக்களை
அறுத்துக் கொன்றது
அமெரிக்க மூலதனத்தின் நஞ்சு.

காரணமான,
யூனியன் கார்பைடு ஆண்டர்சனுக்கு
அரசாங்க செலவில் விருந்து,
பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டு
அவன் பங்குகள் விற்க அனுமதிக்கப்பட்டு
கடைசி வரை தண்டிக்கப்படாமலேயே
அமெரிக்காவில் (அவன்) இயற்கை மரணம்.

பாதிக்கப்பட்ட இந்தியனுக்கோ
கருக்குலைந்து, முகம் பிதுங்கி
புற்று வைத்து… இன்று வரை தண்டனை,
அன்றாடம் நடை பிணம்!

ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்
ஸ்மோல்னி இன்ஸ்டிட்யூட்டுக்கு போகும் புரட்சிப் படையினர்

அரசு அன்றே கொல்லும்
நிதி மூலதனம்
நின்று கொல்லும்,
இரண்டையும் பார்க்கையில்,
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு அனுபவமும்
இந்தக் கட்டமைப்பையே
நொறுக்கச் சொல்லும்!

முதலாளித்துவ தேள்களின் கொடுக்குக்கு
முழுநீள வாலாக சட்டங்கள்,
சுரண்டலுக்கு தட்டிக் கொடுக்க
நீதிமன்றச் சுத்தியல்கள்.

நீதி தேவதையின்
கண் கட்டை அவிழ்த்தால்
அங்கே
கார்ப்பரேட்டுகளின் திருட்டு முழிகள்!

ராமனுக்கு கோயில் கட்ட
சூலங்கள்!
அந்நிய மூலதனத்துக்கு
தேசத்தையே வாரிக் கொட்ட
துடைப்பங்கள்!
நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு
நாடகமாடும் தர்ப்பைகள்!

குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்
குளிர்கால அரண்மனை மீது தாக்குதல்

இழந்த நீர்ப்பெருக்கின்
உலர்ந்த நம்பிக்கையில்
இன்னும் மிச்சமிருக்கும்
அந்த ஆற்றின் அடிமனம் கேட்டுப்பார்
சுரண்டலுக்கு எதிராக
ஒரு புரட்சி வாராதா
எனுமதன் ஏக்கத்தை
கருமணல் விரித்துக் காட்டும்!

வெடிவைத்து பிளக்கப்படும்
பாறையின் இதயத்தில் பொருந்து,
“இந்தப் பாவிகளை நொறுக்க
ஒரு புரட்சி வாராதா”
என எழும்பும் ஒலி
உனக்கும் கேட்கும்!

பன்னெடுங்காலமாய்
மண் கரு சேர்த்த தாதுக்களை
தனி ஒரு முதலாளி சுரண்டிக் கொழுக்க
தாய்மடி கிழிக்கும் குரூரத்தில்
“இந்தத் தனியார்மயக் கொடுமைக்கெதிராக
ஒரு புரட்சி வாராதா?”
என ஏங்கும் இயற்கையின்
எதிர்பார்ப்பு குரல்
இன்னுமா நீ கேட்கவில்லை…

ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நாளில்
ரசியப் புரட்சி 2-ம் ஆண்டு நினைவு நாளில்

முற்றிலும்
முதலாளிகளை காப்பாற்றுவதற்காக மட்டுமே
திணிக்கப்படும் இந்த அரசமைப்பை
ஏற்க எந்த நியாயமும் இல்லை!

எது வளர்ச்சி?
எங்கள் ஊருக்கு தேவை
விவசாயம்,
தண்ணீர், மின்சாரம், இடுபொருள் வசதி
செய்ய வேண்டியது அவசியம்.
இதுக்கில்லாமல் எதுக்கு அரசு?

கார் கம்பெனிகளுக்கு சகல வசதி
கழனியில் பாடுபடும் விவசாயிக்கு
சமாதி!

உலகுக்கே உணவூட்ட
வேளாண்மை இருக்க
எதுக்கு மீத்தேன் திட்டம்?

எங்களுக்கு கடமையாற்றத்தான்
மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும்
எதிரி பன்னாட்டுக் கம்பெனிக்கு அடியாளானால்
களைகளோடு சேர்த்து
கலெக்டரையும் புடுங்கி எறி!

எது முன்னேற்றம்?
இயற்கை வழங்கும் தண்ணீருக்கு
எதுக்கு காசு,
குடிக்க தண்ணிகூட தரமுடியாத
நகராட்சிக்கு எதுக்கு ஆபீசு!

LENINஎங்கள் ஊருக்கு
பொதுக்குழாய் தேவை,
எங்கள் மக்களுக்கு
மருத்துவமனை தேவை,
எங்கள் தெருவுக்கு
சாலை வசதி தேவை,

மொத்தத்தையும்
முதலாளிகளுக்கு காசாக்கிவிட்ட
இந்த அரசை புதைக்க
உடனே ஒரு சுடுகாடு தேவை!

எங்கள் பிள்ளைகளுக்குத் தேவை
அரசு பள்ளிக்கூடம்.
டாஸ்மாக் நடத்த ஐ.ஏ.எஸ். உண்டு
பாஸ் மார்க் போட ஆசிரியரில்லையா?
எதுக்கு தனியார் பள்ளிக்கூடம்
இழுத்து மூடு!
எல்லோர்க்கும் தாய்மொழியில்
கல்வி கொடு!
மக்களுக்கான அரசு இல்லையேல்
தூக்கி குப்பையில் போடு!

மனித குலத்தையே
மூலதன அடிமையாக
மரபணு மாற்றம் செய்வதா வளர்ச்சி?
இழி முதலாளித்துவத்தை அழித்தொழித்து
மனித மாண்பை மண்ணில் வளர்க்க
இப்படியெல்லாம் சிந்திப்பதும், செயலாற்றுவதும் தான்
நவம்பர் ஏழு ரசியப் புரட்சி!

– துரை.சண்முகம்

_______________________________________

அனைவருக்கும் 97-வது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

காரல் மார்க்ஸும், பிரடெரிக் ஏங்கெல்சும் ஆரம்பித்த கம்யூனிஸ்டு அகிலத்தின் 150-வது ஆண்டு இது. 19-வது நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்படுத்தவும், பொதுவுடமை தத்துவத்தை உலகெங்கும் பரப்பவும், தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகளை ஈட்டவும் இந்த அகிலம் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா பிரிவினைகளையும் கடந்து தொழிலாளி வர்க்கம் உலகெங்கும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் எனும் உன்னத நோக்கமும் இந்த அகிலத்தின் நோக்கங்களில் ஒன்று.

உலகெங்கும் பொதுவுடமைத் தத்துவம் பரவி சில வெற்றிகளையும், சில பின்னடைவுகளையும்  கண்டிருந்தாலும் பாரிய படிப்பினைகளையும் கம்யூனிச இயக்கம் கற்றிருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகளிலேயே முதலாளித்துவ கட்டுமானங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிகழ்காலம் தொடங்கி வருங்கால வரலாறு வரையிலும் பொதுவுடைமை இயக்கமே மனித குலத்தை மீட்டெடுக்கும். அதை முதலில் சாதித்து, இது கனவல்ல, நிஜம் என்று உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்திய நாள் நவம்பர் 7! ரசியாவில் 1917-ல் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனைதான் இந்த உலகிலேயே மிக முக்கியமான நாள்!

அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளை அறிவதும், ஏற்பதும், பரப்புவதும் நமது கடமை!

மீண்டும் வாழ்த்துக்கள்!

– வினவு

  1. வரலாறுகள் நினைவில் கொள்வதற்கு மட்டுமல்ல,தீமைகளை வேரறுத்து,நன்மைகள் உருவாக நாமும் ஓர் காரணமாகவும் இருப்பதற்காகத்தான்….
    வாழ்த்துகள் உண்மையானவர்களுக்கு…

  2. புரட்சி அவசியம்.அதற்கான மக்கள் மிகமிக அவசியம்.
    இங்கே சமுகத்தில் போராடுவதற்கான சூழலை அதிகார வர்க்கம் வழிந்தோடும் வெள்ளம்போல ஓடவிட்டிருந்தும் அதை எதிர்க்கும் மக்களுக்கான பஞ்சம்தான் அனைவரையும் கைகட்டி வாய்பொத்தி நின்று வேடிக்கைபார்க்க வைத்திருக்கிறது.
    துணிவும் தூய்மையும் கொண்டவர்களால் மட்டுமே போராட்டத்தை முன்னடத்தி செல்ல இயலும்.
    முதலில் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை சரிசெய்யமுயல்வோம்.
    ஆட்டோகாரர்கள்முதல் டீக்கடை, மளிகைக்கடை மற்றும் சிறுதொழில் முதலாளிகள் வரை அனைவரையும் நாம் கூறும் தொழிலாளர் நலன்களையும் சலுகைகளையும் மக்களுக்கான சேவைகளையும் பின்பற்ற செய்வோம்.
    அரசாங்கத்தின் கடைநிலை உழியர்களின் லஞ்சத்தை அகற்றசெய்வோம்.
    ஏனென்றால் நமது போராட்டத்தின் பங்கேற்பாளர்கள் இவர்கள் தான்.
    இவர்கள் கை சுத்தமாக இருந்தால் நெஞ்சினில் உண்மையான சேவை மனப்பான்மை இருந்தால் போராட்ட கொடி பிடிப்பதில் யாருக்கும் எவ்வித தயக்கமுமிருக்காது.
    மடியில் கனமில்லைஎன்றால் வழியில் பயமில்லை என்பார்கள்.
    நியாயமாக நடந்துகொள்ளும் மக்களுக்குத்தான் அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் குணம் வரும்.
    அதை அகற்ற, நியாயத்தை நிலைநிறுத்த போராடவேண்டும் எனும் போராட்ட உணர்வுவரும்.
    மாறாக அநீதியாக நடந்துகொள்பவர்களுக்கு தன்னைபற்றின பயமே மனதில் மிகுந்திருக்கும்.
    யாருடைய அநீதிக்கெதிராகவும் அவனது கை ஒங்க மறுக்கும்.
    எனவே நமது பங்கேர்ப்பாளர்களை பக்குவப்படுத்துவதின் முதல் படி அவர்களை நியாயவழியில் நடக்க செய்வதுதான்.
    நமது உரிமைகளை பெற முதலில் நாம் நமக்கு கீழுள்ளவர்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை தருவது முக்கியம்.
    தூய்மையான சுவரின் மீது சேறடிக்க கைகூசும்.பாழடைந்த சுவரின்மீது சிறுநீர் கழிக்ககூட யாருக்கும் தயக்கமிருக்காது.
    நம் ஒவ்வொருவரின் தூய்மை நமது சமுதாயத்தின் தூய்மை.
    நமது போராட்டத்தின் வலிமையும் மூலதனமும் அதுவே.

  3. தற்காலத்தில் உள்ள எகாதிப்பத்தியதிர்க்கும் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அனைத்து வித சுரண்டல்களையும், அழகாக படம்பிடித்துக் காட்டும் மிக அற்புதமான கவிதை.. சோஷியலிச புரட்சி ஏற்ப்பட என் வாழ்த்துக்கள்!!!

    • Taste of socialism

      http://www.dinamalar.com/news_detail.asp?id=1107999

      கிராமிய ஆயுள் காப்பீடு திட்டத்தில், ஒருவர் இணைய அஞ்சல் துறைக்கு ஏற்படும் செலவு, 420 ரூபாய். பிரீமியம் தொகை, 15 ரூபாய் போக, மீதமுள்ள, 405 ரூபாய் அஞ்சல் துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம்.

      • Smell of Socilaism

        ஆயுள் காப்பீடு, முதலீட்டுத்துறை என்பதன் அடிப்படையில் இராமன் போன்று முதலாளித்துவ விசுவாசிகள் இலாப நட்டத்தை சுட்டிக்காட்டுகிற பொழுது, இந்தியப் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஐந்தாண்டு திட்டத்திற்காக ஏழு இலட்சம் கோடியை திரட்டித்தந்திருக்கிறது. ஆனால் முதலாளித்துவ தரகு வர்க்கமோ 50% காப்பீட்டை அன்னிய முதலீட்டிற்கு திறந்துவிட்டிருக்கிறது. மேலும் மக்களின் பணத்தில் இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையாக வழங்கியிருக்கிறது. இது என்ன சுவையோ? கசப்பா இனிப்பா?

        Diabolical Capitalism

        மாலேகான் குண்டுவெடிப்பை விசாரித்த ஹேமந்த கர்காரே, மும்பைத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டார். தீவிரவாதம், ஆயுள் காப்பீட்டின் கீழ் வராது என்று சொல்லி ஆயுள் காப்பீடு தரமறுத்தது அமெரிக்கா தனியார் காப்பீடு நிறுவனம். ஆனால் இந்திய பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி ஆயுள் காப்பீடு வழங்கியது. இதுதாம்பா சோசலிசம்.

        கிராமப்புற ஆயுள் காப்பீடு, நட்டம் என்று சொல்கிறவர்களின் நீலிக்கண்ணீர் ஸ்டாண்டர்டு சாட்டர்டு என்று வந்தால் மட்டும் ஆனந்தக்கண்ணீராக மாறிவிடுகிறது. நவம்பர் புரட்சி போன்ற சோசலிச புரட்சி, முதலாளித்துவ முதலைகளின் நீலிக்கண்ணீரை இரத்தக் கண்ணீராக மாற்றும்! மாற்றுவோம்!

  4. தனது சுற்றுபுறத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டு எப்படி இரு இசுலாமிய இளைஞன் , சரியா சட்டமும் , ஒன்று பட்ட இசுலாமிய அரசாங்கமும் அமைந்து விட்டால் , சமூகத்தை திருத்தி மக்களை நல்லவர்களாக்கி சொர்கலோகதை பூமியில் கொண்டுவந்துவிடலாம் என்று கனவு காண்கிறானோ அது போன்ற ஒரு கனவு …

    • அநீதி என்றாலே என்னவென்று தெரியாத அல்லது பழக்கப்பட்டுப் போன மக்கள் வாழும் நாட்டில் நல்லவர்கள் காணும் கனவு பலிக்க சற்று காலதாமதம் ஆகுமேயொழிய அது முடியாத செயல் அல்ல.

  5. விளக்கவே தேவையில்லை
    கண்ணைத் திறந்து
    வெளி உலகைப் பார்த்தாலே
    விளங்கிவிடும் உண்மை,
    காண்பவைகள்
    சமூக அநீதி மட்டுமல்ல
    இந்த சமூக அமைப்பே அநீதி!!!!!,,,,,,,+/-, ——-.

  6. மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் கீழே உள்ள நேர்காணலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    http://thevieweast.wordpress.com/2014/02/14/paula-kirby-on-life-in-the-gdr/

    எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடே தார்மீக ரீதியில் மனதிற்கு உகந்ததாக இருக்கிறது என்பதை ஒரு பக்கம் நகர்த்தி வைத்து விட்டு, தன்னல நோக்கில் பார்த்தாலும் இது சிறப்பானதாக உள்ளது. பிள்ளைகள் எதிர்காலம், ஓய்வுக்கு (retirement) பிறகான நமது வாழ்வு என எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்றான பின் நமக்கு நாமே பணம் குவிக்கும் தேவை இல்லை. அரசு வீடு தரும் என்றால் EMI கட்டி ஓய்ந்து போக வேண்டியதில்லை. பெரிதாக பணம் சேர்த்தாலும், அடுத்தவனை விட பெரிதாக நுகர்ந்துவிட ஏதும் இல்லை என்றான பின், தினசரி வாழ்வுக்கான பணம் ஈட்டினால் போதும். கூலிக்கு மாரடிக்காமல், மனதிற்கு உகந்த தொழில் செய்யலாம். யான் பெற்ற கல்வியை இளம் மாணவர்களுக்கு சொல்லித் தர சென்று விட முடியும். எல்லாம் முடிந்து ஓய்ந்து வீழும்போது, இவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்வில் சாதித்தது எங்கோ ஒரு மூலையில் பொட்டி வீடு ஒன்று, எங்கோ ஒரு மூலையில் சிறு நிலம் என மொக்கை வாழ்வே எஞ்சி நிற்கும் அவலம் இருக்காது. தவிரவும், எலிப் பந்தயம் அர்த்தமற்றதானபின், விரும்புவதை சுவைக்க தெளிந்த மனமும், நேரமும் அதிகம் கிடைக்கும் என்றும் தோன்றுகிறது. “உருகுமால் நேசம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்” எனப் திருக்காட்கரை அப்பனிடம் உருகுவது கூட மேலும் இனிக்கக் கூடும்.

    ஒரே ஒரு அச்சம் மட்டுமே உள்ளது. அந்த உலகில் திருக்காட்கரை அப்பனை நோக்கி பாடும் எனது உரிமை பறிபோகுமோ என்பதும், அந்தக் கோவிலை இடித்து விடுவார்களோ என்பதும்.

    • //ஒரே ஒரு அச்சம் மட்டுமே உள்ளது. அந்த உலகில் திருக்காட்கரை அப்பனை நோக்கி பாடும் எனது உரிமை பறிபோகுமோ என்பதும், அந்தக் கோவிலை இடித்து விடுவார்களோ என்பதும்//

      அஞ்சேல் 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க