Thursday, January 16, 2025
முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்

-

யிஷா எனும் கதை, பள்ளி ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடந்தேறும் உளவியலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுவர் இலக்கியம். இந்த கதை எழுதிய இரா நடராஜனுக்கு 14.11.2014 அன்று பால சாகித்ய அகாடமி பரிசு (சிறுவர் இலக்கிய பரிசு) பெங்களூருவில் வழங்கப்பட்டிருக்கிறது.

கடலூரில் ஆயிஷா இரா.நடராஜன் எழுதிய “டார்வின் ஸ்கூல”; மற்றும் “இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்” ஆகிய நூல்களின் வெளியிட்டு விழா பாரதி புத்தகாலயத்தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் கடந்த நவம்பர் 7-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால்கி ஒருங்கிணைப்பு செய்தார்.

ayeesha-natarajanஇந்நிகழ்ச்சியைப் பற்றி விவரிப்பதற்கு முன்பாக பெற்றோர்களின் இரத்தத்தை உறிஞ்சும் கிருஷ்ணசாமி பள்ளி நிர்வாகத்தின் முதல்வராக வீற்றிருக்கும்  (பள்ளி முதலாளியின் கல்லா நிரப்ப அரும்பாடுபடும்)  திருவாளர் ஆயிஷா இரா. நடராஜன் எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரது நடைமுறைகளைப் பற்றியும் பேச வேண்டும்.

அறிவியல் மேதமையும், உளவியல் ஆளுமையும், தற்புகழ்ச்சி போதையும், மாணவர், ஆசிரியர் மீது அதிகார அடக்குமுறையும்  ஏவும் உளவியல் அறிஞர் இரா.நடராஜன்  எனும் சிந்தனையாளரின் படைப்புகளையும், அவரின் நடைமுறைகளைப் பற்றியும் விவாதிப்பதற்கு முன்பாக அவர் முதல்வராக இருக்கும் பள்ளியைப் பற்றி சுருக்கமாக இங்கே சொல்ல வேண்டியுள்ளது.

கடலூரில் ஒருகாலத்தில் சிறுநீரகத் திருட்டில் புகழ்பெற்ற டாக்டர். ராஜேந்திரன் என்பவர் கடந்த 1990-ல் ஒருசாதாரண கட்டிடத்தில் மெட்ரிக்குலேசன் பள்ளியைத் துவங்கினார். பின் மெல்ல மெல்ல நாளொரு மேனியும, பொழுதொரு வண்ணமாக பெற்றோர்களின் தாலியறுத்து 1997-ல் பாலிடெக்னிக் கல்லூரி, 2001-ல் பொறியியல் கல்லூரி, 2007-ம் ஆண்டு அறிவியல் கலைக்கல்லூரி என மிகப்பெரிய அளவில் கால்பரப்பி விரிந்துள்ளது கிருஷ்ணசாமி நினைவு கல்வி நிறுவனங்கள். கடலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் கொடூரமான முறையில் கொள்ளை அடிப்பது, கிருஷ்ணசாமி பள்ளிதான் என்பதை கடலூர் மக்கள் நன்கு அறிவார்கள். நீதிபதி சிங்காரவேலர் குறிப்பிட்டுள்ள கட்டண விதிமுறைக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு கொள்ளை அடித்து வருகின்றனர் இந்த கயவர்கள்.

மேலும் இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்றால் 8,000 அல்லது 7,000 மட்டுமே கையில் கொடுப்பார்கள். பள்ளிக் கட்டணம் என்ற பெயரில் 12,000 ரூபாய் வாங்கி கொண்டு ரூ 4000, ரூ 6000 என ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பார்கள். அதற்கு முறையான ரசீது ஏதும் கிடையாது. இவை அனைத்தும் திருவாளர் நடராசன் அவர்களுக்கு தெரிந்தே நடப்பது தான. இவர்களின் தவறை யாரும் கேட்க முடியாது. அப்படி கேட்கும் பெற்றோர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இப்பள்ளியின் மாணவர்களில் பணம் கட்டியவர்கள், கட்டாதவர்கள் என இருவகையில் தரம் பிரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

இப்படிப்பட்ட புகழுக்கெல்லாம் காரணமான இப்பள்ளியின் முறையாக அடிக்கட்டுமான வசதியின்மைக் காரணம் கடந்த 2011 முதல் பதிவு செய்யப்படாத பள்ளிகளின் பட்டியலில் வந்துவிட்டது. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சுமார் 122 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 22 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் பள்ளியின் பொன்விழாவிற்கு கடந்த வாரம் 01.11.14 அன்று தமிழக ஆளுநர் ரோசையாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்தனர். இதற்காக கடலூர் நகரம் முழுவதும் பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் என மாவட்ட நிர்வாகத்தையே தனது பள்ளிக்கான வேலைகளில் ஈடுபடுத்தி வந்த நிலையில், சமூக ஆர்வலர் ராஜ்மோகன் என்பவர் “அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு ஆளுநர் வரலாமா?” என கேள்வி எழுப்பி மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தார்.

இதுவே தி இந்து நாளிதழிலும் செய்தியாக வெளிவரவே அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உளவுத்துறை மூலம் செய்தி சேகரித்து உள்துறை செயலாளருக்கு அனுப்பியதின் விளைவாக ஆளுநர் வருகை ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து கடுமையாக கண்டித்தார் கலெக்டர். ஆளுநர் வருகை ரத்து செய்யப்படவே புராணப் புரட்டு புகழ் ஆன்மீக முரசு திருமிகு சுகிசிவம் வரவைக்கப்பட்டார். ஊடகங்களிலும், மேடைகளிலும் நேரம், காலம், உள்ளிட்டு, சதாசர்வகாலமும் இராமாயணம், மகாபாரதம், கிருஷ்ண உபதேசம் போன்றவற்றையே பாரத மக்களுக்கு அருள்பாலிக்கும் இந்த சுகிசிவம், கரன்சி சிவமான கிட்டினி திருடனிடம் பஞ்சம் பிழைப்பது ஏன் என்பது கரன்சி கடவுளான லட்சுமிக்கே வெளிச்சம் என்பது தனிக்கதை, நாம் மீண்டும் மேட்டருக்கு வருவோம்.

கடலூரின் பள்ளிகளிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை தான் டேம் பீஸ் வாங்குவார்கள். ஆனால் இங்கோ எப்போது சொல்வார்கள் என்றே தெரியாது. திடீர் திடீர் என்று பணம் கேட்டு மிரட்டுவார்கள். கட்டியே தீரவேண்டும் இல்லையேல் தேர்வு எழுத விடமாட்டார்கள். அதுமட்டுமல்ல “படிக்க பணம் கட்ட முடியலன்னா ஏன்யா வரிங்க” என்று அருவருப்புடன் பேசுவார்கள்.

மேற்கண்ட பிரச்சனைகள் அனைத்தும் முதல்வர் பதவியில் அதிகாரம் செலுத்தும் நம்ம கல்வி உரிமைப்போராளி, குழந்தைகள் உரிமைப்போராளி, உளவியல் வேந்தன், அறிவியல் ஆசான் தற்புகழ்ச்சி பேரொளி ‘ஆயிஷா’ நடராசனுக்கு தெரியாதது அல்ல, எல்லாம் தெரியும், தெரிந்தேதான் செய்கிறார்.

  • கல்வித்துறையின் எந்த விதிமுறைகளையும் மதிக்காமல் எல்லாவற்றையும் கரன்சி துறை கட்டுப்படுத்தி மாணவர்களின் ஒழுக்கம், கல்வி, ஆளுமை, விளையாட்டுத் திடல் என்று எதையும் கவனிக்காமல் பில்டப் காட்டி பணம் பறிக்கும் பகல் கொள்ளையாளிகளுக்கு தூணாய் துணைநின்று துரும்பாய் உழைத்து வழிநடத்துபவர் தான் இந்த ‘ஆயிஷா’ நடராசன்.
  • கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், இந்த மாணவப் போராளி முதல்வர்.
  • பார்க் இல்லை என்று அதிகாரி கேட்க அடுத்தவன் இடத்தை ஆக்கிரமித்து பார்க் கட்டி,  ராதிகாவை வரவழைத்து திறக்க ரூட் போட்டு கொடுத்ததே இந்த நடராசன் தான.
  • பொதுப் போக்குவரத்துக்கான ரோட்டை தனது பள்ளிக்காக ஆக்கிரமிக்க ஆலோசனை சொன்னதும் இந்த நடராசன்தான்.
  • சமீபத்தில் ஆளுநர் வருகைக்காக பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.100, கல்லூரி மாணவர்கள் அதற்கு மேலும் தனியாக பணம் கட்ட வேண்டும் என ஆலோசனை தந்து சில லட்சம் செலவு செய்து பல லட்சம் மக்கள் பணத்தை ஆட்டையை போட ஐடியா தந்ததும் இந்த நடராசன் தான்.
  • “என்ன சார் முற்போக்கா பல புத்தகம் எழுதி இருக்கீங்க. ஆயிஷா புத்தகமும், ஆவணப்படமும் இன்னமும் உங்களப்பத்தி நல்லவிதமா பேசுது, உங்கள ஸ்கூல்ல பாத்தா இப்படி இருக்கீங்களே” என்று கேட்டால், “அதுவேற, இதுவேற. அங்க நான் அப்படித்தான், இங்கு நான் இப்படிதான் செய்வேன; ரூல்ஸ்படிதான் கேட்கணும்” என்று பேசகிறார் இந்த கல்வி உளவியலாளர்.

பெரும்பாலும் இவரின் போலி முகத்தை நம்பி, பின்னர் உண்மை முகத்தை காணும் பல பெற்றோரும், ஆசிரியர்களும் “உண்மையில் இவர் ஒரு பசுந்தோல் போர்த்திய புலி சார்” என்றே சொல்கின்றனர். “கத்தியில்லாம, தடி, பிளேடு என ஆயுதம் இல்லாமல் டை கட்டிகிட்டு எப்படி வழிபறி பண்ணணும்ங்கிற கலையை இவங்க ஒரு பல்கலைக்கழகமே நடத்தலாம் சார்” என்றும் போட்டு உடைக்கிறார்கள்.

முற்போக்கு, பிற்போக்கு வைத்து முதல்வர் வேலை பார்க்கும் இந்த மேதமைமிக்க நடராசனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு கடலூர் கவிஞர் பால்கி தலைமை தாங்கி, “நடராசன் எழுத்துலகின் புது அவதாரம், படைப்புகளின் பன்முகத் தன்மையை ஒருங்கே பெற்றவரை வளர்த்தெடுக்கவே இந்நிகழ்ச்சி” என்று சொறிந்தார். சொறிந்த சொறியில் நடராசன் மிதக்கும்போது அடுத்து வந்த கடலூர் குடியிருப்போர் சங்கத்தலைவரும், சிபிஎம் கட்சியின் மா.வ.க. உறுப்பினருமான மருது, “இரா.நடராசன் ஒரு கல்வித்துறை அறிவாளி, கடலூரின் சொத்து இவரை நாம் அடையாளப்படுத்தியே தீரவேண்டும்” என்றார்.

இதன் பிறகு நடராசனின் நண்பரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவருமான பேரா.மணி பேசும்போது, “எங்கள் சிந்தனை, சொல் என அனைத்தையும் தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல உதவியது சி.பி.எம் கட்சி. இது உழைக்கும் மக்களின் கட்சி இவர்கள் நடத்தும் பாரதி புத்தகாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ள ‘ஆயிஷா நடராசனின்’ படைப்புகள் உண்மையில் சமூகத்திற்கு தேவையான விஷயத்தை சொல்கின்றன. என்னைப் பொறுத்தவரை இவர் சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் போது, நாம் இவரைப் பற்றியும் இவரின் படைப்புகளைப் பற்றியும், இவரின் நவீன சிந்தனையைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யலாம்னு ஆசை” என ஏற்கனவே சொறிந்த அறிப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒருமுறை இவரும் சொறிந்தார்.

அடுத்துபேசிய சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், “ஆயிஷா நடராசனைப் பொறுத்தவரை அவரை எனக்கு 2000-ம் ஆண்டு முதல் நல்ல அறிமுகம். அவர் புத்தகத்தைப் படித்துவிட்டு பலமுறை அவரை கைபேசியில் பாராட்டியுள்ளேன். இப்போது நேரில் பாராட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது” என்று துவங்கி “நடராசனின் சிறப்பு என்னவென்றால் தமிழில் இதுவரை தேடித்தேடி கிடைக்காத பல அறிவியல் விஷயங்களை நமக்கு கண்டுபிடித்து தந்துள்ளார்.” என்று புகழ் மாலை சூட்டினார்.

“2012-ல் பத்தோடு பதினொன்றாக இருந்த ஆயிஷா நடராசனின் நூல்கள் இன்று முன்னணியில் உள்ளது. 2005-ல் பாரதி புத்தகாலயத்தில் உறுப்பினராக இருந்தவர் என்று புத்தகம் பேசுது நூலின் முதன்மை ஆசிரியராக உள்ளார்” என்று பேசினார். இப்படி சிலாகித்து உச்சத்தில் பேசும்போது, சாய்ந்து உட்கார்ந்து இருந்த நடராசன் புகழ்ச்சி தாங்காமல் நாற்காலியின் உச்சத்திற்கு வந்து விட்டார் ஒரு கட்டத்தில் புகழின் அரிப்பு தாங்காமல் எழுந்து நின்றே விட்டார்.

இதோடு நின்று விடவில்லை ஜி.ஆர். கொஞ்சம் சமூகப்பிரச்சனைப் பற்றி பேசணுமில்லையா அதனால் அரசுப்பள்ளியின் பக்கம் தனது பேச்சை திருப்பினார். “கோவை காரமடை ஒன்றியப் பள்ளி 1930-ல் துவங்கப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்த பள்ளியில் இப்போ 67 பேர்தான் உள்ளனர். பள்ளியின் அடிப்படை வசதிக்காக அரசு நிதி ஒதுக்கவில்லை, பின் ஆசிரியர்கள் ரூ 50,000 சொந்த பணத்தில் செலவு செய்தபோது ஊர்மக்கள் 3 லட்சம் வசூலித்து தந்தார்கள், இதைக்கேள்விப்பட்ட ஆட்சியர் 3 லட்சம் தந்தார்.

மேலும் நெடுவயல் எனும் கிராமத்தில் பள்ளியை சீரமைக்க கருப்பையா அண்ணன் ஆண்டுதோறும் வசூல்செய்து சீர்படுத்தினார். இப்படி நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்று கொடுப்பதற்கு நடராசனிடம் நிறையவே உள்ளது” என்று முடித்தார்.

“ஆயிஷா வந்த காலத்தில் அதை வாங்க யாரும் இல்ல, இப்ப பாரதி புத்தகாலயம் மூலமாவும் நான் அடையாளம் கண்டுபிடிப்பதற்கு என்னை பலரும் நாடி வருகிறார்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் நடராஜன்.

இப்படி நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை தொகுப்பாக பார்க்கும்போது அரசுப்பள்ளியின் அவலம் குறித்து மேடையில் பேசிய யாரும் அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கவில்லை. மாணவர்களின் படிப்பறிவை பற்றி பேசியவர்கள் யாரும் மாணவர்களைப் பணயமாக்கி கொள்ளையடிக்கும், உழைக்கும் மக்களின் இரத்தம் குடிக்கும் தனியார்மயத்தால் உருவாக்கப்பட்ட தனியார் பள்ளி, கல்லூரிகளின் அராஜகத்தைப் பற்றியோ, ரவுடித் தனத்தைப் பற்றியோ துளியளவும் விமர்சிக்கவில்லை.

நாடு முழுவதும் அரங்கேறிவரும் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்ளையால் மனிதகுலம் இதுவரையில் அனுபவித்த கல்வி, மருத்துவம், தண்ணீர், மின்சாரம், சுகாதாரம் அனைத்தையும் ஏப்பம்விட்டு, காடுகள், மணல்கள், கடல், மலைகள், கனிம வளங்களையும் ஏப்பம் விட்டு மனிதகுலத்திற்கே அழிவை ஏற்படுத்தும் எதிரியை அடையாளம் காட்டாமல் மிக எச்சரிக்கையுடன் வாசகர்களையும், பார்வையாளர்களையும் மடைமாற்றம் செய்யும் வேலைதான் நடராசனின் படைப்புகள், அறிவு உள்ளிட்ட மனிதகுல வளம் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விருந்தாக்கும் வேலையைதான் இதுபோன்ற அறிவியல் எழுத்தாளர்களின் படைப்பு உள்ளது. எதிரியை அடையாளம் காட்டாத இவர்களின் அறிவியல் நிச்சயம் முதலாளிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் எந்த இடத்திலும் தரங்கெட்டு வரும் அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு காரணம் தனியார்மயம் தான், தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபவெறிதான் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை. அரசு மக்கள் நலத்திட்டத்தில் வேலைகளில் இருந்து விலகி முதலாளிகளின் சேவகர்களாக மாறி ஒருமக்கள் விரோத நிறுவனமாக செயல்படுவதையோ அல்லது கார்ப்பரேட் முதலாளியாக நாட்டை சூறையாடுவதையோ யார்? என அடையாளம் காட்டாமல் குள்ள நரித்தனமாக பதுங்கும் இவர்கள் தான் மக்களை விழிப்படையச் செய்யபோகிறார்களாம். நல்ல வேடிக்கை, இந்த நேரத்தில் ஒரு பட்டுக்கோட்டை பாடல் நினைவுக்கு வருகிறது.

“‘மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?”

“நாம் சேர்கின்ற செல்வங்கள் பண்ணையாரிடம் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி…….”

என்ற வரியை வேறு இடத்தில் போய் சேர்வதனால் வந்த தொல்லையடி என்று மாற்றினார்கள் சினிமாக்காரர்கள்.

“நாயும் வயிற்றை வளர்க்கும், வயிற்றுச்சோற்றை பெரிதென்று சொல்வீரோ”

என்றார் பாரதிதாசன்

இந்த வரிகளில் இருந்து சொந்த வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று பேசும் நடராசன் போன்றவர்களின் நோக்கத்தையும், புரிந்துகொண்டு உண்மையில் இப்படி பணத்துக்காகவும், பெயர், புகழுக்காகவும, பேனா பிடிக்கும் ‘நான் அவன் இல்லை. அவன் நான் இல்லை’ என்று இரட்டை வேடம் போடும் இவர்களை மக்களிடம் அடையாளம் காட்ட வேண்டும. இவர்கள் உண்மையில் மக்களின் எதிரிகள் என்கிறார் பாரதிதாசன்.

பின்குறிப்பு

இந்நிகழ்ச்சி நடத்த அன்று நவ 7 ரசியப் புரட்சி நாள். ஏதுமற்ற ஏழைப் பாட்டாளி வர்க்கம். கொடுங்கோல் ஜார் அரசனையும் முதலாளித்துவ அடிவருடி அரசையும் தூக்கியெறிந்து உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய இத் திருவிழாவை பற்றி இந்த சிபிஎம் ‘போராளிகள்’ ஒருவரி கூடபேசவில்லை. சரிதானே! தனியார் பள்ளி கொள்ளையர்களை காப்பாற்றுவதை பகிரங்கமாக செய்யும் ஆயிஷா நடராஜன் போன்றோரை தூக்கி சுமக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் ரசிய புரட்சி பற்றி பேசினால்தானே பிரச்சினை!

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்.

  1. நீங்கள் கண்டிப்பது இருக்கட்டும். அதில் இருக்கும் நியாயங்களை யாராலும் மறுக்க இயலாது.
    ஆனால் பிரச்சனையின் ஆணிவேரை விட்டுவிட்டு சுய விருப்பு வெறுப்பு பேசும் அரசியல் கட்சிகளைப்போல பேசி இருக்கிறீர்கள்.

    “ஜி.ராமகிருஷ்ணன் தனது பேச்சில் எந்த இடத்திலும் தரங்கெட்டு வரும் அரசுப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு காரணம் தனியார்மயம் தான், தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபவெறிதான் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை. “.
    உங்களது லாஜிக்கே புரியவில்லை.
    நீங்கள் குறிபபிட்டிருப்பதைபோல தனியார் பள்ளிகளின் கொள்ளை லாபம் மக்களை அரசு பள்ளிகளை நோக்கியல்லவா நகர்த்தி இருக்க வேண்டும்.
    ஆனால் நடைமுறையில் நிலைமை தலைகீழாக அல்லவா உள்ளது?
    இங்கே இலவச மிக்சி ,கிரைண்டர்,மின்விசிரிக்காக அலைபவர்கள் நீங்கள் சொல்லும் தாலியறுக்கும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளுக்கு இடம் கோரி அல்லவா அலைகிறார்கள்?

    அரசு பள்ளிகளின் தரங்கெட்ட தனத்திற்கு அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் அலட்சியம் தான் முதல்காரணம்.
    அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மை அவர்களை ஆய்வு செய்யும் கல்வி ஆய்வாளர்களின் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவை மற்ற உதிரி காரணங்கள்.
    திரையரங்கில் ஒரு நிமிடம் படம் மங்கலாக தெரிந்தாலோ சப்தம் சரிவர வாராவிடாலோ உடனடியாக கத்தி கலாட்டா செய்து மேலாளரின் கவனத்தை ஈர்த்து சரிசெய்ய நடவடிக்கை எடுப்பவர்கள் தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் அவலங்களை கைகட்டி வாய்மூடி நின்று வேடிக்கை பார்ப்பதை என்வென்று சொல்ல?
    அவலங்களை கண்டுகொள்ளாது விட்டுவிட்டு இன்னுமொரு அவலத்தை புதிதாக தோற்றுவித்து வளர்த்து வருபவர்கள் பொறுப்பில்லாத பெற்றோர்கள்தான்.
    வினவு வழக்கம்போல பொதுமக்களின் தவறுகளை அவர்களின் கண்களில் காட்டாது அநியாயம் அங்கே நடக்குது, அதுக்கு அங்கிட்டு நடக்குது என போக்கு காட்டிகொண்டிருக்கிறது.
    இப்படி இருக்கும் வரை சமுகத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.ஒரு ஆதங்கதிர்காக நீங்களும் கட்டுரை எழுதலாம்.ஒரு ஆர்வத்திற்காக மக்களும் படித்து செல்லலாம்.அவ்வளவே.
    தான் செய்யும் தவறுகளை உணர்ந்து அதை சரிசெய்ய நினைப்பவன்தான் தன்னை சுற்றிநடக்கும் தவறுகளை சீர்செய்ய முன்வருவான்.
    நீங்கள் தவறுகள் எங்கோ மேல்மட்டத்தில் ,சமூகத்திலுள்ள சிலரால் மட்டும்தான் நடைபெறுகிறது என கட்டுரை எழுதிகொண்டிருந்தால் அதனால் பாதிக்கபாடாத பலரும் அதை ஒரு செய்தியாக மட்டுமே வாசித்துசெல்வார்கள் என்பது நிச்சயம்.

    என்னால் நேர்மையாக நடந்துகொள்ள முடியும்போது உன்னால் ஏன் அவ்வாறு நடந்துகொள்ள முடியவில்லை ?எனும் நிலை வரும்போது அங்கே யாரும் சொல்லாமலே அநீதிக்கெதிரான போராட்டம் தோன்றும்.
    ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிகாட்டுவது மட்டும் புரட்சிக்கு வழிவகுக்காது.அதற்க்கு எதிரான நமது அலட்சியபோக்குகளையும் கட்டாயம் மக்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்யவேண்டும்.

    அந்த வகையில் ஒவ்வொருமனிதனின் தவறுகளையும், தவறுகளுக்கு எதிரான அவனது பொறுப்பற்ற தன்மைகளையும்,அலட்சியத்தையும் சுட்டிக்காட்டி ஒரு பொறுப்பான சமுக அக்கறைகொண்ட மனிதனாக ஒவ்வொருவரையும் மாற்றுவதுதான் புரட்சி நடத்த எண்ணுவோர் செய்யவேண்டிய முதல் பணி.
    அதை விடுத்து தவறுகளை மக்களுக்கு சம்பந்தமிலாத தூரத்தில் நடப்பதாக காட்டிகொண்டிருக்கும்வரையில் புரட்சியாவது,புண்ணாக்காவது?

    • அருமையான தகவல்களைக் கொடுத்துள்ளீர்கள் நண்பரே! செயல் படாத எவ்வொரு வார்த்தைக்கும் வலிமை இல்லைதான்,உணர்ந்த நீங்கள் போராடத் தயாரா?,நான் தயாராக இருக்கிறேன்.செயலில் வீரம் செறிந்த நபர்களால் தான் வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது,’வினவாவது’ தைரியமாக போலிகளை தோலுரிக்கிறது ஆனால் உங்களைப் போன்றவர்கள் குற்றம் கண்டுபிடித்து வாழ்க்கையை கழிப்பது கண்டுதான் வேதனயாக இருக்கிறது.நாம் எல்லோரும் ஆதரவளித்தால்தான் பொய்மைகள் தோலுரிக்கப்படும்.

  2. வினவாவது’ தைரியமாக போலிகளை தோலுரிக்கிறது “,,,
    தவறு நண்பரே,
    ஒரு இனத்தை மட்டும் குறிவைத்து ஒரு தலைபட்சமாக என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
    உண்மையில் அநீதிகளை எதிர்ப்பதுதான் தலையாய நோக்கம் என்றிருந்தால் ஒரு விசயத்தில் நடந்த அநீதிதான் (அது யாரால் மேற்கொள்ளப்பட்டிருப்பினும்) பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருக்குமே தவிர வினவைபோல தவறை இனம்,மொழி,சாதி அடிப்படையில் நிச்சயம் பார்க்காது நண்பரே.
    போராட்டம் என்பது தெருவில் கொடிபிடிப்பது,ஒழிக கோசம் போடுவது மட்டுமல்ல நண்பரே.
    என்னளவில் நேர்மையாக நடந்துகொள்வதும் அநீதிகெதிரான ஒரு போராட்டமே.
    எல்லோரும்தான் செய்கிறார்கள் என சால்ஜாப்பு சொல்லிகொள்லாமல் அதிகாரத்தையோ பணத்தையோ பயன்படுத்தி குறுக்குவழியில் செல்லாமல் அநீதிக்கு ஆதரவளிக்காமல் அதன் கைகளில் என்னை சிக்கவைத்துகொள்ளாமல் இருப்பதுவும், சூதாட்டம் மிகுந்த கிரிக்கெட்டை ஒதுக்கியதிலிருந்து கன்றாவி சினிமாவை அலட்சியப்படுதியதுவரை எல்லாமே என்னளவில் நாளும் நான் காணும் போராட்டமே.
    இப்பொழுது சிலபல நஷ்டங்களை சந்தித்தாலும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான பொழுதும் என்னளவில் நேர்மையாக தான் இருந்துவருகிறேன். ஒரு தனி நபராக அல்லது எனது குடும்பத்தை பொறுத்தவரை அநியாயங்களை புறக்கணிப்பது எனும் அளவில்தான் என்னுடைய போராட்டம் இருந்துவருகிறது.
    அநியாயங்களை எதிர்த்து எனும் அளவில் வரவேண்டுமானால் இன்னமும் பல விசயங்களுக்கு தயாராகவேண்டி உள்ளது.
    அதிலும் யாருடன் சேர்ந்து? என்பதில் பல கோணங்களில் யோசிக்க வேண்டியுள்ளது.
    இங்கே அநியாயங்களை எதிர்பதாக சொல்லிகொள்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரன்முறைக்குட்பட்டு (இன்னார் செய்த அநியாயத்தை மட்டும் எதிர்ப்பது ,இவர்களில் இந்த இடத்தில செய்த அநியாயத்தை மட்டும் எதிர்ப்பது என)எல்லை பிரித்துக்கொண்டு ஒரு சாதி சங்கங்களைபோல தான் போராட்டம் நடத்துகிறார்கள்.யாரும் உண்மையான மக்கள் நலனில் அக்கறைகொண்டு போராடுவதாக தெரியவில்லை.
    அதுவும் மக்களின் தவறுகளை பற்றியோ, அவர்களின் பொறுப்புனர்வின்மை பற்றியோ யாரும் மக்களுக்கு உணர்த்துவதாக காணோம்.
    மக்கள் நலனுக்காக போராடுவதாக சொல்லிகொள்பவர்கள் எல்லாம் அநீதி என்பது அமெரிக்காவின் நடவடிக்கைகளிலும் ஆதிக்க சக்திகளின் செயல்களிலும் தான் இருப்பதாக காட்டிகொண்டு அன்றாட வாழ்வில் மக்கள் ஒவ்வொருவரும் செய்துவரும் வரம்பு மீறிய தவறுகளை மக்களுக்கு காட்டாமலே ஒரு மாயையில் மக்களை வைத்துவிடுகிறார்கள்.
    மக்களை பொறுத்தவரை சமுகத்தில் நிலவும் தவறுகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் அவையெல்லாம் தங்களை மீறிய ஒரு சமுகத்தில் ஒருசிலரால் நடத்தப்பட்டு வருகின்றன என்பதுபோலத்தான் இவர்கள் செய்திகளை வெளியிடுகிறார்கள்.
    தங்கள் பகுதிகளில் தங்களுக்கு பலனளிக்கும் ஒரு செயலை தாங்களே மேற்கொண்டு செய்யும் நுறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்களே நேரடியாக ஊழல் புரிவதைபற்றி அவர்களை கண்டிப்பதையோ அவர்களின் செயல்கள் அவர்களை எப்படி பாதிக்கிறது என்பது பற்றியோ ஒரு கண்டிப்போ விழிப்புணர்வோ செய்வது இல்லை.
    மக்களே நேரடியாக பங்குபெறும் ஒரு நிகழ்வில் அவர்களே தவறு செய்ய முனைகையில் மக்களை கண்களால் பார்க்காமல் வெறும் கோப்புகளில் மட்டும் கையெழுத்திடும் அதிகாரிகளின் தவறுகளை யாரை குட்டிக்கொண்டு சென்று கேட்பது?யாரை சேர்த்துக்கொண்டு போராட்டம் செய்வது நண்பரே.
    துடைக்க செல்லும் கைகள் வலுவானதாக இருப்பதுடன் தூய்மையானதாகவும் இருக்கவேண்டும் நண்பரே .
    அது சாத்தியமாகும் வரை “அசிங்கப்படுத்தாமலிருப்பது” என்பதுகூட அசிங்கத்தை எதிர்க்கும் / தூய்மைபடுத்தும் போராட்டதின் ஒரு பகுதிதான் நண்பரே.

    • உங்களது செயல்பாடுகள் எனக்கு பாரதிதாசன் எழுதிய கவிதை வரிகளான…தன் பெண்டு,தன் பிள்ளை…என்ற ‘இருண்ட வீடு’பாடல் வரிகளை நினைவூட்டுகிறது.
      எப்படியிருந்தாலும் தங்களது நேர்மைக்கு தலை வணங்குகிறேன்.அதே மாதிரி முன்மாதிரிகளை தேட வேண்டாம்,நாம் முன்மாதிரியாக வாழமுடியுமா? என்பது எனது கேள்வி,
      தவறு வேறு, அறியாமை வேறு,திருட்டு வேறு முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள் நண்பரே!….
      மக்கள் தவறு செய்வதற்கும்,மன்னன் தவறு செய்வதற்கும் வேறுபாடுகள் உண்டு,ஒன்று அழிக்கப்படும் அல்லது உணர வைக்கப்படும் ,மற்றொன்று அழிக்கும்.
      தவறை யார் செய்தாலும் தவறுதான் நண்பரே! வினவுக்கும் சேர்த்துதான்.
      நான் முன்மாதிரியாக வாழ வேண்டும் என்று நினைப்பவன்.

  3. ”ஒளிவட்டம் கட்டி சதிராட்டம்” போட்டு, கல்விக் கொள்ளைக்கு சேவை செய்யும் ஆயிஷா.நடராஜசனை அம்லப்படுத்திய புரட்சிகர மாணவ- இளைஞகர் முன்னணியின் தோழர்களுக்கு முதலில் நன்றி! நன்றி!

    இந்த தனியார்மய, உலகமய சூழலில் ‘கல்விக்கொள்ளையர்’ களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து செய்து வரும் பு.மா.இ.மு.ன் போராட்ட வரலாற்றில் இந்த ‘அம்பலப்படுத்தல்’ ஒரு மைல்கல்.

    ஆயிஷா. நடராஜனின் உண்மை முகத்தை ஏற்க்கனவே சி.பி.எம். நண்பர்கள் சிலர் மிகுந்த மனவேதனையுடன் பலமுறை புலம்பியுள்ளனர். இந்த கள்ளப்பூனைக்கு மணி கட்டியதும் சி. பி. எம். நண்பர்கள் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

    7-11-14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜி.ரா. சார்ந்த சி.பி.எம். கட்சியின் அரசியல் ஓட்டாண்டித்தனம் மீண்டும் அம்பலத்துக்கு வந்துள்ளது வளமையானது.
    இரணியன்

  4. am living in cuddalore…. i thought tat ayisha one of the intellectual in cuddalore till now…but after reading…… teared the face ayisha sir……but i hav doubt all these are true….me studied in the krishnasamy college

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க