சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சுகாதார நலத்துறை சார்பாக பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட கருத்தடை முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 83 பெண்களில் 13 பேர் மரணமடைந்துள்ளனர்; சுமார் 50 பேர் கவலைக்கிடமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆர்.கே குப்தா என்ற அரசு மருத்துவரின் தலைமையில் நடந்த இந்த கருத்தடை முகாமில், ஐந்து மணி நேரத்திற்குள் 83 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், தமது முதல் கட்ட விசாரணையில் அறுவை சிகிச்சைகள் நடந்த கட்டிடம் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததையும் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இருந்ததையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள, “ஒரு மருத்துவர் ஒரு நாளில் முப்பது கருத்தடை அறுவை சிகிச்சைகள் வரை செய்யலாம்” என்ற அளவைத் தாண்டி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பதும் மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தமது முதல்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் முடிவு செய்துள்ளனர். மேல் கட்ட விசாரணைகளைத் துவங்கியுள்ள காவல் துறை, தனது ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் மருத்துவர் குப்தாவை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் தனது பணிக்காலத்தில் சுமார் ஐம்பதாயிரம் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவர் என்பதும், அவரது இந்த ‘சாதனைக்காக’ கடந்த குடியரசு தினத்தன்று மாநில பாரதிய ஜனதா அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட குப்தா தனது தரப்பாக, தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சை முறையில் தவறுகள் ஏதும் இல்லையென்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் வழங்கப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், அரசு சுகாதாரப் பணியாளர்கள் மூலமும் அறுவை சிகிச்சை முகாமுக்காக பெண்கள் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்ட நிலையில் ஒரு மருத்துவர் என்ற முறையில் தான் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதே முறையென்றும், அதிக எண்ணிக்கையில் நடந்த அறுவை சிகிச்சைகளினாலோ தரமற்ற மருந்துகளினாலோ மரணங்கள் நிகழ்ந்திருந்தால் அதற்குத் தான் மட்டும் பொறுப்பல்ல என்றும் மாவட்ட நிர்வாகமும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
விநாயகனுக்கே ’பிளாஸ்டிக் சர்ஜரி’(!?) மூலம் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு நவீன விஞ்ஞானத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னேறி விட்ட ’இந்துத்துவ’ இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளில் நடந்த தோல்வி சங்கபரிவாரத்தின் முகத்தில் சாணியைக் கரைத்து ஊற்றியுள்ளது. அதிலும் 2003 – 2012 காலகட்டத்தில் மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சையின் விளைவாக சுமார் 1500 பெண்கள் மரணித்துள்ளனர் என்கிறது அரசு கணக்கெடுப்பு ஒன்று.
2010-11ல் இருந்து 2013-14 காலட்டம் வரை மட்டும் 14,901 கருத்தடை அறுவை சிகிச்சைகள் தோல்வியுற்று அதில் 363 பெண்கள் இறந்துள்ளனர். வழக்கமாக இந்தச் சாவுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்லும் வட இந்திய ஆங்கில ஊடகங்கள் இந்த முறை வேறு டி.ஆர்.பி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கையிலெடுத்து நான்கைந்து நாட்கள் சாமியாடி விட்டு ஓய்ந்தன.
அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளைக் கூட நிறைவேற்ற வக்கற்று பெண்களை மரணத்தில் தள்ளும் ஒரு நாட்டிற்கு செவ்வாய் கிரக சுற்றுலா ஒரு கேடா என்று நாம் கேட்டால், ”ஒரே கிளிஷேவா பேசாதீங்க பாஸ்” என்று அதியமான், பத்ரி வகையறாக்கள் உள்ளிட்ட முதலாளித்துவ சொம்பு தூக்கிகள் ’ஜகா’ வாங்கக் கூடும். என்றாலும் “எல்லோருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருக்கும் கேக் கிடையாது” என்று ஆசான் லெனின் சொன்னதன் பொருளை நாங்கள் மட்டுமல்ல அரசின் புறக்கணிப்பால் சாவுக்கு வாக்கப்பட்ட சாதாரண மக்களும் கூட இந்த தருணத்தில் சரியாகவே புரிந்து கொள்வர்.
இது ஒரு புறமிருக்க, இத்தனை மரணங்கள் விளைந்த பின்னும் மத்திய அரசு தனது கருத்தடை திட்டங்களில் பிடிவாதமாக ஊன்றி நிற்கிறது. மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வர பெண்களின் உயிரைக் காவு வாங்கும் நடைமுறையைத் தவிர்த்து வேறு மாற்றுத் திட்டங்கள் குறித்து சிந்திக்கவில்லை. நாடெங்கும் அதிகாரப்பூர்வ சமூக நலப் பணியாளர்களை ( Accredited Social Health Activists – ASHA) நியமித்து பெண்களுக்கான கருத்தடை திட்டங்களை வெறி கொண்ட வேகத்தில் முன்னெடுத்து வருகிறது.
ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தவிர இதற்கென்றே இயங்கும் என்.ஜி.ஓ குழுக்களிடமும் கருத்தடை பிரச்சாரத்தையும், கருத்தடை முகாம்களுக்குப் பெண்களை இழுத்து வரும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் 1,500 ரூபாய் மருத்துவமனைக்கு வழங்கும் அரசு 30 கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் கூடுதல் போனசாக 500 ரூபாய் அறிவித்துள்ளது. தவிர பெண்களை அழைத்து வரும் என்.ஜி.ஓ பணியாளருக்கு ஒரு ‘உருப்படிக்கு’ 150 ரூபாயும் மருத்துவருக்கு 75 ரூபாயும் சன்மானமாக நிர்ணயித்துள்ளது. அறுவை மேற்கொள்ளும் பெண்களுக்கு 600 ரூபாய் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளது.
இது தவிர அரசு மருத்துவமனைகளுக்கும் ஆஷா பணியாளர்களுக்கும் தனித்தனியே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலக்கை அடைய முடியாத ஆஷா பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்வது, சம்பளத்தை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது அரசு. இவ்வாறு தனது கீழ்மட்ட உறுப்புகளை கசக்கிப் பிழிந்து நிறைவேற்றப்படும் ’இலக்குகள்’ எதார்த்தத்தில் அப்பாவிப் பெண்களின் மரணத்தில் முடிகிறது.
என்றாலும் இந்திய அரசு தனது மக்களின் கருவறுப்பதில் போதிய வேகத்தைக் காட்டவில்லை என்பதே ஏகாதிபத்திய நாடுகளின் மனக்குறை. இதற்காகவே மெலிந்தா பில் கேட்ஸ் அறக்கட்டளை, பிரிட்டிஷ் எய்டு போன்ற ஏகாதிபத்திய அறக்கட்டளைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ வலைப் பின்னல்கள் மற்றும் கீழ்மட்ட அரசு நிர்வாக அலகுகள் வரை ஊடுருவியுள்ள இந்த அறக்கட்டளைகள், கருத்தடை செய்வது குறித்தும் அதில் இலக்கை எட்டுவது குறித்தும் இந்தியாவுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் நடக்கும் பல்வேறு என்.ஜி.ஓ பணிகளுக்கு சுமார் 100 கோடி டாலர் (சுமார் ரூ 6,000 கோடி) நிதியை இறக்கியுள்ள மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை அதில் கணிசமான தொகையை கருத்தடை திட்டங்களுக்கென்று ஒதுக்கியுள்ளது. பிரிட்டிஷ் எய்டு தனது பங்காக சுமார் 16.6 கோடி யூரோ (சுமார் ரூ 1,250 கோடி) நிதியை கருத்தடைத் திட்டங்களுக்காகவே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவில் கருத்தடை அறுவை சிகிச்சைகளால் நிகழும் மரணங்கள் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு பெரும் சூறாவளியைக் கிளப்பியது.
ஆங்கிலேயர்களின் வரிப்பணம் இந்திய அரசால் கட்டாய கருத்தடை செய்ய பயன்படுத்தப்படுவதாக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தாண்டின் துவக்கத்தில் குற்றம் சுமத்தி விவகாரத்தை அந்நாட்டு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றன. தாம் கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகளையோ கருத்தடை முகாம்களையோ ஆதரிக்கவில்லை என்றும், இதற்காக இங்கிலாந்தின் வரிப்பணம் செலவிடப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் அரசுத் தரப்பில் விளக்கங்களாக முன்வைக்கப்பட்டது.
என்றாலும், கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ஒரிசா, சத்தீர்கர், பீகார், உ.பி, குஜராத், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டத்தின் நடைமுறை செயல்பாடு வேறுவிதமாகவே உள்ளது. 600 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டியும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பதை மறைத்தும், பொதுவான மருத்துவ பரிசோதனைதான் என்று ஏமாற்றியும் பெண்களை அழைத்து வரும் ஆஷா பணியாளர்களும், என்.ஜி.ஓக்களும் படிப்பறிவற்ற ஏழைப் பெண்களைக் கருத்தடை முகாம்கள் என்று அழைக்கப்படும் மரண முகாம்களில் தள்ளி விடுகின்றனர்.
ஏன் இந்த வெறித்தனமான வேகம்?
நாடு எதிர்கொள்ளும் மொத்த பிரச்சினைக்கும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது தான் காரணம் என்கிற முதலாளித்துவ கண்ணோட்டமே முதலில் தவறு. நாட்டின் வளங்களை மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு அதிக மக்கள் தொகை ஒரு காரணமன்று – மாறாக, வளங்களின் வினியோகம் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனிநபர்களான முதலாளிகளின் கட்டுபாட்டில் இருப்பதும் அவர்களி லாப வெறியுமே மாபெரும் தடையாக நிற்கிறது.
மக்கள் தொகை அதிகரிப்பு என்பது சாதாரண மக்களைப் பொருத்தளவில் அவர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சிகளின் பட்டியலில் இல்லை. ஆனால், முதலாளித்துவ சமூகத்திற்கும் அதன் கட்டுமானத்தைக் காத்து முதலாளிகளின் நலன்களை உத்திரவாதப்படும் ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற அல்லக்கை நாடுகளின் பிரதான கவலையாக மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கிறது. எனவேதான் வறுமை ஒழிப்பு, கல்விக்கான உத்திரவாதம், வேலைக்கான உத்திரவாதம், விலைவாசி உயர்வு, அடிப்படை சுகாதாரப் பிரச்சினைகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட மக்கள் தொகையைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தை பிரதானப்படுத்துகிறார்கள்.
ஏன் அவர்கள் மக்கள் தொகை அதிகரிப்பதைப் பற்றிக் கவலை கொள்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கான பதிலை நாம் புரிந்து கொள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் ஹென்றி கிஸ்ஸிங்கரால் 1974-ம் ஆண்டு முன்மொழியப்பட்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜெரால்டு ஃபோர்டால் 1975-ம் ஆண்டு அரசின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட NSSM 200 என்ற ஆய்வறிக்கையையும், அதன் பரிந்துரைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
”தேசிய பாதுகாப்பு ஆய்வறிக்கை 200: உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சியால் அமெரிக்க பாதுகாப்புக்கும் எல்லை தாண்டிய நலன்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் (NSSM200)” என்ற பெயரில் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
மேற்படி அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான பகுதிகளின் சாராம்சத்தை கீழே பார்க்கலாம் –
”அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து அதிகளவில் தாதுப் பொருட்கள் தேவைப்படும். எனவே இந்நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும்.
இந்நாடுகளின் அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் காரணமாகவோ, வன்முறை மற்றும் குடிமைச்சமூக போராட்டங்களின் காரணமாகவோ மூலப் பொருட்களின் விநியோகம் தடைபடலாம். மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சினை மட்டுமே இதற்குக் காரணம் இல்லையென்றாலும் பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது.
வளர்ச்சியடையாத நாடுகளில் உள்ள இளைஞர்கள் நிலையற்றவர்களாகவும், தீவிரத்தன்மை கொண்டவர்களாகவும் தனிமைப்பட்டவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இளைஞர்களை ‘நிறுவனங்களுக்கு’ எதிராகவோ ‘ஏகாதிபத்தியங்களுக்கு’ எதிராகவோ அல்லது பிற ‘அந்நிய தலையீடுகளுக்கு’ எதிராகவோ திசைதிருப்புவது எளிது. இதன் காரணமாக இந்நாடுகளில் இருந்து வளங்களையும் மூலாதாரங்களை அமெரிக்க பொருளாதார நலன்களுக்காக பெறுவது தடைபடக் கூடும்.
எனவே இந்நாடுகளின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானது. இதில் முக்கியமானது என்னவென்றால், அந்நாடுகளின் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என்பதற்கான நமது நடவடிக்கைகள் அவர்களது கவனத்தை ஈர்த்து நமது நோக்கங்களை அறிவிக்கும் விதமாக இருக்கக் கூடாது.”
இக்கட்டுரையின் இணைப்பில் உள்ள சுட்டியின் மூலம் அமெரிக்காவின் திட்ட அறிக்கையை முழுவதுமாக தரவிறக்கம் செய்து வாசிக்குமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கிறோம்.
இந்தியாவில் கருத்தடை திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வரும் மாநிலங்களில் வடகிழக்கு மாநிலங்களும் மத்திய இந்தியாவின் மாநிலங்களும் குஜராத்தின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுமே முன்னணியில் நிற்கின்றன. கருத்தடை அறுவை சிகிச்சைகளின் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்தப் பகுதிகளே முன்னணி வகிக்கின்றன.
ஆக, நடந்து கொண்டிருப்பது ஒரு இனப்படுகொலை. காங்கிரசு ஆட்சியின் போது பன்னாட்டுக் கம்பெனிகள் மத்திய இந்தியாவின் வளங்களை சூறையாடிச் செல்ல தடையாக இருந்த பழங்குடி மக்களின் மேலும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களின் மீதும் பச்சை வேட்டைப் படுகொலைகள் என்ற உள்நாட்டு போரைத் தொடுத்திருந்த அதே வேளையில் பன்னாட்டு அறக்கட்டளைகளும் என்.ஜி.ஓ கைக்கூலிகளும் அதற்கு இணையாக சத்தமின்றி ஒரு இனப்படுகொலையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் முன்னணியில் நின்றது பாரதிய ஜனதா ஆட்சி புரிந்த சத்தீஸ்கரும் குஜராத்தும் தான்.
முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் தமது பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பெண்களின் கருப்பை வரையிலும் தமது விஷக் கரங்களை நீட்டத் தயங்காதவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர்.
ஏகாதிபத்தியங்கள் தமது நேரடி நலன்களுக்காக இனக்கொலையில் இறங்கி நிற்கும் அதே நேரம், அதற்கான மருந்துகளில் கூட ஊழல் புரிந்து ஏகாதிபத்தியங்களின் நோக்கத்தை சுலபமாக்குகிறது இந்திய ஆளும் வர்க்கம். சத்தீஸ்கரில் கருத்தடை முகாமில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் எலி விஷம் கலந்துள்ளதை போலீசு விசாரணை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் உள்ளூர் பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான உப்புமா கம்பெனி ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் கொள்முதல் செய்யப்பட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
கேட்கவே நெஞ்சம் பதறும் இந்தச் சம்பவங்களை இந்திய ஆங்கில ஊடகங்கள் தமது டி.ஆர்.பியை உயர்த்திக் கொள்ளும் வகையில் பின்னணி இசைக் கோர்வையுடன் மலினமான திரில்லர் கதை போல் விவரித்துச் செல்கின்றன. டைம்ஸ் நௌ தொலைக்காட்சி மருத்துவர் குப்தாவுக்கு “மரண மருத்துவர்” (Dr. Death) என்ற பட்டப் பெயர் அளித்துள்ளது. மற்றொரு வட இந்திய ஆங்கில ஊடகம் “பிலாஸ்பூரின் கசாப்புக்காரர்” (Butcher or Bilaspur) என்ற பட்டப் பெயரை அளித்துள்ளது.
மொத்த விவகாரத்தையும் மருத்துவர் குப்தாவின் தலையில் கட்டி ஒருசில நாட்கள் டி.ஆர்.பியை தேற்றிக் கொண்டபின் ஒட்டுமொத்தமாக ஊற்றி மூடிவிடும் திசையில் காய் நகர்த்துகின்றன ஜனநாயகத்தின் நான்காவது கழிப்பறையான முதலாளித்துவ ஊடகங்கள்.
”முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும்” என்கிற முழக்கத்தை எமது அமைப்புகளின் போஸ்டர்களில் நீங்கள் படித்திருக்கக்கூடும். அந்த முழக்கத்தின் முதல் பகுதியை அவர்கள் நாளும் நாளும் நிரூபித்து வருகிறார்கள். முதலாளித்துவத்தின் வெற்றிச் சரித்திரத்தில் சத்தீஸ்கரில் மரணித்துப் போன 13 பெண்களின் பெயர்களும் இடம் பெற்று விட்டது. முதலாளித்துவ நிதிமூலதனக் கொடுங்கோன்மையை வீழ்த்தி எமது முழக்கத்தின் பிந்தைய பகுதியை நிகழ்த்திக் காட்டுவது மட்டுமே பரந்துபட்ட மக்களின் வாழ்க்கையை உத்திரவாதப்படுத்தும்.
– தமிழரசன்.
மேலும் படிக்க
- 11 women die after sterilisation surgeries in Chhattisgarh
- UK aid helps to fund forced sterilisation of India’s poor
- Built-in violence
- Sterilising Women To Death
- The Kissinger Report
- Death Toll Rises: Did Bill Gates & UK Pay For Sterilizations in India?
- Sterilsation deaths in Chattisgarh
- Rat poison chemical found in antibiotics
அன்புள்ள வினவு,
வினவுவின் கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் பின்னூட்டமிடும் தனி நபர்கள் பற்றி அதிகம் குறிப்பிட அவசியமில்லையென கருதுகிறேன்.
கிஸ்ஸிங்கர் அறிக்கை சமர்ப்பித்த ஆண்டு 1774 என தவறாக உள்ளது