Wednesday, May 12, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் - நேரடி ரிப்போர்ட்

கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்

-

“அண்ணா என்ன போட்டோ எடுக்காதண்ணா. குடும்பம், கொழந்த இருக்குது. இப்பவே ‘கம்பெனி கேன் தண்ணியா குடிச்சி கம்பெனிய லாஸ் பண்ணிட்டோம், ஒண்ணுக்கு வருதுன்னு பாத்ரூம் அடிக்கடி போயி, உற்பத்திய குறைச்சிட்டோம்’னு கொரியாக்காரன் எங்கள இழுத்துப் போட்டு உதைக்கிறான். நியாயம் கேட்டா, போலீசு எங்கள கைது பண்ணி சிறையில தள்ளுது. வேலையும் இல்லாம இப்ப கேசு, வாய்தானு நிம்மதியில்லாம கோர்ட்டுக்கு அலையிறோம்”

என்று ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் மர நிழலில் சக தொழிலாளர்களுடன் ஒன்று கலந்தார் என்.வி.எச் பெண் தொழிலாளர் அஸ்வினி. அங்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி என தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து வேலைசெய்யும் தொழிலாளர்கள் பலர் காத்திருந்தனர்.

என்.வி.எச் தொழிலாளர்கள்
மறுகாலனியாக்க அடிமைகளாக நடத்தப்படும் தொழிலாளர்கள்

சென்னை – ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 1400 ஏக்கரில் விரிந்திருக்கும் தெற்கு ஆசியாவின் மிகப் பெரும் ‘ஆட்டோ மொபைல்’ உற்பத்தி மையம்.

ஹூண்டாய், ஃபோர்டு, நிஸ்ஸான் என்று நூற்றுக்கணக்கான ஏக்கரில் எழுந்துள்ள இந்த தொழிற்பேட்டையில் உதிரிபாகங்கள் சப்ளை செய்யும் பல நூறு கம்பெனிகள் அமைந்துள்ளன. அவற்றில் பல வெளிநாட்டு கம்பெனிகளே. அதில் ஒன்றுதான் என்.வி.எச் இந்தியா என்ற கொரிய நிறுவனம். ஹூண்டாய் பன்னாட்டு நிறுவனத்துக்கான சப்ளையர் நிறுவனம். நோக்கியா, ஃபாக்ஸ்கான் வரிசையில் தற்போது 120-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை, போலீசு துணையுடன் தொழிற்சாலைக்குள்ளேயே அடித்து சிறையில் தள்ளியுள்ளது.

அப்படி,தொழிலாளிகள் செய்த குற்றம்தான் என்ன?

காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளி அருள்மொழி

“என் அப்பா கைத்தறி நெசவுத் தொழிலாளி. இதய நோயாளி. கஷ்டப்பட்டு என்னை +2 வரை படிக்க வைத்தார். 2007-ம் ஆண்டு ரூ 2700 சம்பளத்திற்கு இங்கு வேலையில் சேர்ந்தேன். என் சம்பளத்தில் வைத்தியம் கூட பார்த்துக் கொள்ளாமல் 4 ஆண்டுகள் என் சம்பாத்யத்தை சேமித்துதான் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்.

இக்கம்பெனியில் நாள் முழுக்க நான் பிளேடு பிடிச்சுதான் வேலை செய்யணும். கொஞ்சம் பிசகினாலும் கை பாதி போய்டும். பாதுகாப்புக்கு கொடுக்கும் துணி கையுறையைக் கூட கம்பெனில புதுசா தரதில்லை. மத்தவங்க போட்டதைத்தான் கொடுப்பாங்க. கேட்டா துவைச்சுதான் தர்றோம்னு கத்துவாங்க. பல பேரு வேர்வை பட்டதால கையில புண்ணு வரும். அதச் சொன்னா எதிரி மாதிரி பாப்பாங்க.

ஆலை முழுக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடி காமிரா மூலம் கண்காணிப்பாங்க, அவசரமா பாத்ரூம் போனா, அடிக்கடி பாத்ரூம் போயி என்ன பண்றனு அசிங்கமா கேட்டு கதவைத் தட்டுவாங்க. எம்.டி.யே இப்படி பலமுறை தட்டியிருக்காரு. எங்களுக்கு அழுகையா வரும். தண்ணி குடிக்க போனா, அசிங்கமா பேசுவாங்க இவ்வளவு நேரம் என்ன பண்னிணன்னு மத்தவங்க சிரிக்கிறா மாதிரி டபுள் மீனிங்கில் அடியாளுங்க கேட்பாங்க. காண்டிராக்ட் தொழிலாளிங்க நெலம இன்னும் மோசம். பெண்ணுனுக்கூட பாக்காம பாத்ரூம்ல இருந்து இழுத்துக்குனு போய் கேட்டாண்ட நிக்க வச்சிருவாங்க. அதப் பாத்து நாங்க பயப்படணும்னு சொல்வாங்க..

இவ்வளவு கஷ்டத்த பொறுத்துக்கினு இருக்கிறதுக்கு காரணம் எங்க குடும்ப நெலமதான். கடந்த ஆறு மாதமா கம்பெனில வேலை செய்றது சித்திரவதையா இருக்குது. 8 மணி நேர வேலைய 9 மணி நேரமாக்கிட்டாங்க, ஒரு மணி நேரத்துக்கு 40 பீசுக்கு பதிலா 80 பீசு புரடக்சன் தரணும்னு மிரட்டுறாங்க. காண்டிராக்டு தொழிலாளிங்க பயந்து போய் செய்றாங்க. இதப் பொறுக்க முடியாமத்தான் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம். இப்ப நிர்வாகத்து இடத்துல போலீசு. கைது, கேசு, கோர்ட்னு வதைக்குது. எஙக கஷ்டத்த யார்கிட்ட நாங்க சொல்றதுனே தெரியல”

என்றார் துயரத்துடன்.

nvh-company

1984-ம் ஆண்டு கொரியாவில் ஆரம்பிக்கப்பட்ட என்.வி.எச் நிறுவனம், சீனாவில் இரண்டு கிளைகள், ரசியாவில் ஒரு கிளையுடன் செயல்பட்டு வருகிறது 2007-ல் இந்தியாவில் கால் வைத்த இந்நிறுவனம் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பிரதான பங்கு வகிக்கிறது. கார் எஞ்சினில் உருவாகும் வெப்பம், அதிக ஒலி, அதிர்வுகளை குறைக்கும் காரின் உட்புறத்தை சொகுசாக்கும் ஃபோம் மற்றும் பிளாஸ்டிக் மோல்டிங்கிலான பாகங்களை தயாரிக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 ஆண்டுகளிலேயே அதன் ஆண்டு வணிகம் 3 கோடி டாலரிலிருந்து 30 கோடி டாலராக உயர்ந்தது. இப்போது சென்னை-ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் 66 உதிரி பாகங்களை தயாரிக்கும் இந்நிறுவனம் “‘ஃபோம்’ உற்பத்தியில் கிடைக்கும் இலாபத்தை மட்டும்தான் நிர்வாகத்தை இயக்க ஒதுக்குகிறது. மற்ற 65 உதிரி பாகங்களின் இலாபத்தையும் இங்கிருந்து அள்ளிச் செல்கிறது என்று எங்களை மிரட்டும்போது திமிராக சொல்கிறது, நிர்வாகம்” என்கின்றனர், தொழிலாளிகள்.

என்.வி.எச் நிறுவன தலைமை அடியாளாக வேலை செய்யும் லியோ தவமணி பாண்டியன், இவரது கைத்தடிகளாக இருக்கும் பாரி, செல்வம் ஆகியோர், இவர்களுக்கு கீழ் ஒரு அல்லக்கை ஐந்தாம் படை மாஃபியா கும்பல் நிர்வாகம் என்ற பெயரில் தொழிலாளர்களை கடித்துக் குதறுகிறது.

“நீங்கள் வீடியோவில் காணும் கொலைவெறி, கொடுமைகளில் ஒரு துளிதான்” என்கிறார், தொழிலாளி யோகா நந்தன்.

“கடந்த கோடைக் காலத்தில் ஜூன் மாதம் நடத்த அட்டூழியம் குரூரத்தின் உச்சம். சராசரியாக ஒரு ஷிப்டுக்கு 100 கேன் தண்ணீர் செலவாகும். ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை ‘ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க’ என்று திமிராக பேசினர். கொதித்த தொழிலாளிகள் ஒன்றுபட்டு உள்ளிருப்பு போராட்டம் செய்தோம்.

தாழ்த்தப்பட்ட தொழிலாளிகளை கேவலமாக பேசும் லியோ தவமணியை கைது செய்யும்படி போலீசில் புகார் கொடுத்தோம். உடனே நிர்வாகம் போராடிய தொழிலாளிகளை வேலையில் இருந்து நீக்கியது. தொழிற்சாலையில் உற்பத்தியை தடுத்ததாக பொய்க் காரணங்களைக் கூறி ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக வேலைநீக்கம் செய்த 8 தொழிலாளர்களுக்கு இதுநாள் வரையில் வேலை கொடுக்கவில்லை.

nvh-workers-2மேலும் வரும் மார்ச் மாதம் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையும் இருப்பதால் அதற்கு முன்பே நிரந்தரத் தொழிலாளர்களை மொத்தமாக வேலையிலிருந்து தூக்க நிர்வாகம் முயற்சிப்பதை எதிர்த்து,

வேலைநீக்கம் செய்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்
தொழிலாளர்களை மரியாதையாக நடத்த வேண்டும்
பணியிடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

என்று கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2.1.15 அன்று காலை 9 மணிக்கு உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்தினோம்.

நாங்கள் போராட்டத்தை அறிவிக்கும்போதே அடியாட்கள் வைத்து அங்கிருந்த உதிரிபாகங்களை லாரியில் ஏற்றியது நிர்வாகம்.

nvh-workers-4“எங்கள் கோரிக்கைக்கு பதில் சொல்லி விட்டு நாங்கள் தயாரித்த பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று தடுத்தோம்.

‘ஈனத் தொழிலாளிகளுக்கு இவ்வளவு திமிரா’ என்று வெறியோடு பாய்ந்து அடியாள் கும்பல். தொழிலாளர்கள் சிறிதும் அஞ்சாமல் தொடர்ந்து மறிக்கவே கடைசியில் நிறுவனத்தின் எம்.டி யே அடியாள் படைக்கு தலைமை தாங்கினார். கையில் கிடைத்த தொழிலாளியைக் கீழே தள்ளி, இழுத்து, காலிடுக்கில் மிதித்து மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்று வெறியோடு கத்தினார். இந்தக் கொலைவெறிக்கு மிரளாமல் நடு இரவு வரை தொழிற்சாலைக்குள் 3 பெண் தொழிலாளர்கள் உட்பட 129 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தோம். இத்தொழிற்சாலையிலிருந்து உதிரிபாகங்கள் போவது தடைப்பட்டதால் ஹூண்டாயின் மொத்த உற்பத்தியும் முடங்கும் நிலைக்கு சென்றது”

என்றார்.

நாம், அவரது பேச்சை இடைமறித்து, “எப்படி, உங்களைப் போன்ற சிறிய நிறுவனத்தின் உதிரிபாகம் இல்லாததால் ஹூண்டாய் முடங்கிப்போகும்? விளக்கமாக சொல்லுங்கள்” என்று கேட்டோம்.

இதை sequence parts production என்று அழைப்போம். தாய் நிறுவனமான ஹூண்டாயில் அடுத்த ஒவ்வொரு மணி நேரம் எந்தெந்த மாடலில் எந்தெந்த பாகங்கள் இணைக்கப்படும் என்று வேலை அறிக்கை, எங்கள் கம்பெனியின் production departmentக்கு வந்து சேரும். அதனடிப்படையில் நாங்கள் தயாரிக்கும் 66 பாகங்களையும் முறைப்படி அனுப்பிக் கொண்டே இருப்போம். இம்மாதிரி சுமார் 120 சப்ளை நிறுவனங்களும் இயங்கும். பெரிய பிசாசு வாயில் விழப் போகும் பொருட்கள் கன்வேயர் பெல்ட்டில், பாதி வழியில் நின்று விட்டால் என்ன ஆகும். அப்பொருளுக்கு மேல் உட்காரும் அடுத்தடுத்த பாகங்கள் பல்வேறு இடத்திலிருந்து வந்தாலும் வீணாகத்தான் கிடக்கும், உற்பத்தி முடங்கும்”

என்றார்.

nvh-workers-3இந்த இயக்கம் துல்லியமாக நடைபெறும் ஒவ்வொரு கணமும் முதலாளிக்கு கொள்ளை இலாபம். இயங்கும் பல்வேறு பற்களில் ஒன்று நின்றாலும் முதலாளிக்கு பட்டை நாமம். இதைத்தான் வேறு வார்த்தையில் ‘ஜிட்’ (JIT – just in time) என்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு முன் தேவையான பொருட்களைக் கூட இருப்பு வைத்துக் கொள்வதை வீண் வேலையாகவும், இலாப இழப்பாகவும் கருதுகின்றன, ஏகாதிபத்திய நிறுவனங்கள். காரணம், தேவையற்ற லோடிங், அன்லோடிங், குடோன் கட்டுமானம் பராமரிப்புச் செலவுகளை குறைக்கும் cost cutting என்ற விதியின் கீழ் இலாபத்தைத்தவிர முதலாளித்துவத்திற்கு மற்ற இயக்கம் எல்லாம் வீண்!

அதன்படி, “நள்ளிரவு 12 மணியிலிருந்து, போலீசு உயரதிகாரிகள் எங்களை ஆலையிலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்கள். பெண்கள் உட்பட நாங்கள் அனைவரும் போலீசின் மிரட்டலுக்கு பணிய மறுத்தோம். எங்களைத் தாக்கிய எம்.டி பகிரங்க மன்னிப்பு கேட்காதவரை நாங்கள் நகர மாட்டோம் என்றோம். பின்னிரவு 2 மணிக்கு போலீசு எங்களை வலுக்கட்டாயமாக இழுத்து 3 கம்பெனி வண்டிகளில் ஏற்றி தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். திடீரென 1 வண்டியில் வந்த எங்கள் தொழிலாளர்களைக் காணவில்லை. மறுநாள்தான் எங்களுக்கு உண்மை தெரிந்தது. நிறுவனத்தின் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், ஹூண்டாய் நிறுவனத்திற்கு சென்ற உதிரிபாகங்களை தடுத்து உற்பத்தியை குலைத்ததாகவும் பொய்வழக்கு போட்டு வேலூர் சிறையில் அடைத்தனர். அத்தொழிலாளர்களை பிணையில் எடுப்பதற்கு இன்று ஒட்டுமொத்தத் தொழிலாளர்களும் இங்கு கோர்ட்டுக்கு வந்துள்ளோம். ஆனால் இதுவரை ஆலையில் வைத்து காட்டுமிராண்டி போலத் தாக்கிய கொரிய எம்.டி மேல் ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. விசாரிக்கவும் இல்லை.” என்றார் கோபமாக.

என்.வி.எச். தொழிலாளர்களுக்கு, நிசான் உதிரி பாகங்கள் தயாரிக்கும் யூனிப்பிரஸ் மற்றும் கேட்டர் பில்லர் தொழிலாளர்களும் ஆதரவு கரம் நீட்டுகின்றனர். “இந்த நிலைமை எங்களுக்கும் வரக்கூடாது என்பதால் இங்கு வந்துள்ளோம். தொழிலாளிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கு, பேசுவதற்கு தொழிலாளர் உதவி ஆணையர் இருக்காருனு சொல்றாங்க, ஆனால் அவங்க எல்லாம் கம்பெனி கஸ்டத்த முதலாளி மாதிரியே எங்ககிட்டப் பேசறாங்க. எங்க கஸ்ட்டத்த பேசறத்துதான் யாரும் இல்ல” என்றார், வெறுப்புடன், யூனிபிரெஸ் தொழிலாளி.

இந்த வழியில், முன்னோக்கி போராடும் என்.வி.எச் தொழிலாளர்களை ‘சட்டபூர்வ’ கயிறு மாட்டி, கட்டிப்போடுகிறது, யு.எல்.எஃப் என்னும் ‘அரசியல்’சாரா தொழிற்சங்க அமைப்பு. அதன் இரண்டாம் மட்ட தலைவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் கா. மாரியப்பன் மற்றும் வி. லஷ்மணன்.

“தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் தங்கள் சங்கம் வன்முறை நாடாமல், அரசியல் சாராமல், வேகமாக வளர்கிறது. மிகப்பெரும் நிறுவனங்கள் அச்சப்படும் அளவு எங்கள் தலைவரும் சீனியர் லாயருமான பிரகாஷ் சட்டரீதியாகவே அனைத்து பிரச்சினைகளிலும் வெற்றி காண்கிறார். அதே நேரத்தில் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பனையும் கறாராகக் கூறுகிறார். நிர்வாகம், சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும். சங்கத்தை அணுகி, சட்டவல்லுநர்களின் ஆலோசனைப்பெற்று அதன்படிதான் செயல்படவேண்டும், அப்போதுதான் தொழிலாளி வெல்ல முடியும். இப்படித்தான் வெற்றிமேல் வெற்றி பெற்று, ஓசூர், பெங்களூர், பாண்டிச்சேரி என பல இடங்களில் வளர்ந்து வருகிறோம்” என்று தாங்கள் வளர்ந்த ரகசியத்தை சொன்னார்கள்.

முதலாளியினுடைய அடக்குமுறைக்கு எதிராக பதிலடி கொடுக்கும் யூனியனை நிர்வாகம் விரும்புவதில்லை. முதலாளி சட்ட விரோதமாக நடந்தாலும் தொழிலாளர்கள் சட்ட பூர்வமாகத்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளியின் விருப்பமும். அதையே யூனியனும் பேசினால், அதில் தொழிலாளர்களின் குரல் எங்கு உள்ளது? முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர் கொள்ள சட்டம், நீதிமன்றம், போலீசு என்ற திசையில் திரும்புவது எந்த பலனும் அளிக்காது என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிர்வாக அமைப்புக்கள் அனைத்தும் தொழிலாளிகளின் அரசியல் ரீதியான ஒற்றுமைக்கு மட்டுமே பயப்படும். உலகமயமாக்கம் எனும் சுரண்டலை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு, பல்வேறு துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி இதர பிரிவு மக்களோடும் சேர்ந்தும்தான் எதிர் கொள்ள முடியும். அதற்கா அரசியலையும் வழிமுறையையும் கொண்டிருப்பது புரட்சிக தொழிற்சங்கம் மட்டுமே.

– வினவு செய்தியாளர்கள்

 1. //தாழ்த்தப்பட்ட தொழிலாளிகளை கேவலமாக பேசும் லியோ தவமணியை கைது செய்யும்படி போலீசில் புகார் கொடுத்தோம்//தொழிற்சாலைக்குள் “தாழ்த்தப்பட்ட தொழிலாளி” என்பது எப்படி? அது ஒன்றும் சென்ற நூற்றாண்டு பார்ப்பன அக்ரஹாரம் இல்லையே?

  லியோ தவமணியும் பார்ப்பனர் இல்லை என்றே தோன்றுகிறது. (அவர் மட்டும் பார்ப்பனராக இருந்திருந்தால் பதிவில் பத்து முறை திட்டியிருப்போம்!)

  தவமணியும் ஒரு தொழிலாளி தான்: ஓரிரு தட்டு மேலே உள்ள நிர்வாகியாக இருப்பார் : ஆனால் தொழிலாளி தான்: முதலாளி இல்லை. அவர் நடவடிக்கைகளுக்கு நாம் கொரிய முதலாளியையும் முதலாளித்துவதையும் எவ்வாறு திட்ட முடியும்? நம்மவரே மனித நேயம் இல்லாமல் இருப்பது பற்றி நாம் வருந்த வேண்டும். கண்டிக்க வேண்டும். காணொளியை நான் காண முடியவில்லை.

  நம் நாட்டில் தொழில் பெருக வேண்டும்; கொரியனோ, சீனனோ, ஜெர்மானியனோ தம் தொழில் நுட்பத்தையும் தம் முதலீட்டையும் நம் தொழிலாளர்களையும் வைத்து தொழில் துவங்க வேண்டியது தான். அரசே எல்லா தொழிலையும் நடத்தும் கம்யூனிசம் வெற்றி பெறவில்லை. கியூபாவிலும் அதன் கடைசி நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

  Continuing in English, as the transliteration software playing pranks:

  We have to concede: MNCs will have to be there. Of course, we have to revise our views on them, review our relation with them, rewrite laws to protect our weak employees and punish the guilty; we have to learn to live with them.

 2. There is no rule of law in the country.

  Will the same korean company,ill treat its employees in America?
  He would have received,25 years jail time.And judgement would have been delivered in less than 2 years.
  On top of it, the victim would have received a compensation from the company.

  It is outrageous to see a labor is treated this low.

  Not sure what future holds for the country with lot of people and no capability to build products on their own

 3. அயல்நாட்டு தொழில்நுட்பத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு நம்பி இருக்க போகிறோம்.

  உள்ளூர் நிறுவனங்கள் அயல்நாட்டு உதவி இல்லாமல் பொருட்களை உற்பத்தி செய்யும் காலம் என்று வருமோ. வெளிநாடுகளுக்கும் நம் நாட்டுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம். வெளிநாடுகளில் தொழிலின் முதலாளிக்கு அந்த தொழிலின் தொழில்நுட்பத்தை அறிந்திருப்பார். நம் நாட்டில் முதலாளிகள் முதலை, அதாவது பணத்தை மட்டும் அறிந்திருக்கிறார்கள். தரம் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை, இலாபம் எங்கு அதிகம் கிடைக்கும் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். குறைந்த காலத்தில் அதிக இலாபம் பார்க்க பேராசை படுகிறார்கள்.

  தைவான், கொரியா நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் உலகம் முழுக்க செல்கிறது. நம் ஊரில், நாங்களும் தயார் செய்கிறோம் என்ற பெயரில் அதே தைவான், கொரிய, சீன பாகங்களை வாங்கி அசெம்பிள் செய்து அது நம்ம ஊர் தயாரிப்பு என்று பீற்றிக்கொள்கிறோம்.

  இதற்கு முன் மருத்துவ கருவிகள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்திருந்தேன். அந்த துறையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகள் என்று பெருமையாக சொல்லிக்கொண்டே உள்ளுக்குள் இருக்கும் அத்தனை பகுதிகளையும் சீனாவில் இருந்தோ தைவானில் இருந்தோ கொண்டு வந்து இங்கு அசெம்பிள் செய்து மேட் இன் இந்தியா ஸ்டிக்கரை ஒட்டி விடுவார்கள்.
  என்ன கொடுமை என்றால் அந்த கருவியின் பிளாஸ்டிக் டப்பா கூட வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டது தான்.

 4. தாமஸ் ஆல்வா எடிசனோ அல்லது பில் கேட்சோ, இவர்கள் நிறுவனத்தை தொடங்கும்போது அந்த தொழில்நுட்பம் பற்றி அவர்களுக்கு நன்று தெரிந்திருக்கும்.

  நம்ம ஊர் அம்பானிக்கும் டாட்டாக்களுக்கும் மல்லையாக்களுக்கும் அவர்களின் தொழில்நுட்பம் பற்றிய அறிவு எத்தனை சதவீதம் இருக்கும்?

  அதனால் தான் தரம் என்று வருகையில் நம் பொருட்கள் பின்வாங்கி விடுகின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க