privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்ஜிகினாத் தோலுக்கு சிதையும் தொழிலாளி - புகைப்படக் கட்டுரை

ஜிகினாத் தோலுக்கு சிதையும் தொழிலாளி – புகைப்படக் கட்டுரை

-

ராணிப்பேட்டை சிப்காட் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரசாயனக் கழிவு சேற்றை தேக்கி வைக்கும் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலியான அதே நாள் (ஜனவரி 31, 2015) மாலையில் சென்ற ஆண்டு தோல் ஏற்றுமதியில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்த மையத்தில் நடைபெற்றது. அதில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல் மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களைப் பற்றி ஊடகங்களும் முற்றிலும் மறந்து விட்ட சூழலில், ராணிப்பேட்டையில் இரசாயனக் கழிவு சகதியை நீக்கும் பணியில் தீயணைப்புப் படையினரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஊழியர்களும் ஈடுபட்டிருந்த அடுத்த 3 நாட்களில் (பிப்ரவரி 1, 2, 3 தேதிகள்) சென்னை வர்த்தக மையத்தில் ஐரோப்பிய, அமெரிக்க தோல் வர்த்தகர்களுடன் இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தக பேரங்களும், ஒப்பந்தங்களும் குளிரூட்டப்பட்ட சர்வதேச தரத்திலான சூழலில் நடந்து கொண்டிருந்தன.

இந்தியா சர்வதேச தோல் கண்காட்சியின் முகப்பு
இந்தியா சர்வதேச தோல் கண்காட்சியின் நேர்த்தியான முகப்பு

ராணிப்பேட்டை சிப்காட்
ராணிப்பேட்டை சிப்காட்டில் குவிந்திருந்த இரசாயனக் கழிவு

அரண்மனை குதிரை சேணம்
பல கோடி ரூபாய் செலவில் சர்வதேச தோல் கண்காட்சி கோலாகலம்

சிப்காட் விபத்து
அழிவுக்கு பொறுப்பேற்க வேண்டிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மத்திய தோல் ஆராய்ச்சி கழகமுமே ஆய்வு செய்யும் அவலம்.

கழிவுநீர் சுத்திகரிப்புக்கு முன்னேறிய தொழில்நுட்பத்தை அமல்படுத்தியுள்ள தமிழ்நாட்டிலேயே தொழிலாளர்களின் உயிருக்கும், சுற்றுப் புற பகுதிகளின் நலனுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்தியாவின் பிற பகுதிகளான கொல்கத்தா, கான்பூர், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமையை கற்பனை செய்து கொள்ளலாம்.

சென்னை சர்வதேச தோல் கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், உலகெங்கும் தோல் தொழிற்சாலைகளின் வேலைச் சூழலை காட்டும் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் தமது லாப வேட்டைக்காக மூன்றாம் உலக நாடுகளின் தொழிலாளர்களை சுரண்டி, சுற்றுச் சூழலை ஈவு இரக்கமின்றி சீரழிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கோர முகத்தை தெரிந்து கொள்ளலாம்.

தோல் கண்காட்சி
தோல் கண்காட்சியின் குளிரூட்டப்பட்ட, கம்பளம் விரிக்கப்பட்ட, மெருகூட்டப்பட்ட அரங்குகளில்…

கான்பூர் - ஜஜ்மாவ்
அழுகும் பச்சைத் தோலின் நாற்றம் சூழ, இரசாயன கழிவு நீரில் கால் புதைந்து நிற்கும் இந்தியாவின் எதிர்காலம்…

தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் நலனை உறுதி செய்வதற்கான அரசு உறுப்புகளோ சீர்குலைந்து போயுள்ளன. ராணிப்பேட்டை சிப்காட் கொலைகளுக்கு முதன்மை பொறுப்பாளர்களான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர் அமிர்தகடேசன், இயக்குநர்கள் இரகுநாதன், ஜெயச்சந்திரன், சொக்கலிங்கம் பிள்ளை, சரவண குமார் மற்றும் இரகுபதி ஆகியோரை தேடிப் பிடிப்பதற்கு 7 பேர் கொண்ட ஒரு சிறப்புப் போலீஸ் படை அமைக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது. பல கோடி ரூபாய் சொத்துக்கள் உடைய, தொழிற்சாலை முதலாளிகளான இவர்களை பிடிப்பதற்கு சிறப்புப் படை அமைப்பதிலேயே போலீஸ் யார் கையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அழகூட்டப்பட்ட தோல்கள்
இப்படி தொங்கும் தோல்கள்…

எத்தியோப்பியா பச்சைத் தோல் கிடங்கு
இப்படித்தான் தயாராகின்றன…

வர்த்தகக் கண்காட்சி
இவர்களின் கோடி ரூபாய் பேரங்களுக்கு…

மொராக்கோவில் தோல் சதை ஒதுக்கும் தொழிலாளி
இவர்களின் வாழ்க்கை தேய்க்கப்படுகிறது…

இத்தகைய பேரழிவுகளை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள தோல் ஆராய்ச்சிக் கழகமும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் கண்காணிப்பை அமல்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், இந்த விபத்து தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று பசுமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயம், தேசிய பசுமை தீர்ப்பாயம் என்று சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பின் யோக்கியதை இதுதான்.

தோல் இரசாயன நிறுவனம் ஸ்டால்
வெளிநாட்டு தொழில்நுட்பம் விஷத்தையும் பளபளப்பாக்கிக் காட்டும்.

தோல் தொழிலாளர்கள்
தோல் தொழிலாளர்களுக்கு வேலையே விஷமாகும்…

ஐரோப்பிய நவநாகரீகம்
ஐரோப்பிய கனவான்களின் சூட்டு, கோட்டுக்கு….

கான்பூர் தோல் தொழிற்சாலையில் இரசாயன பதப்படுத்தல்
கான்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கை கரைகிறது…

கடைசியாக மத்திய அரசு, “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் தோல் துறையை “கவனம் குவிக்க வேண்டிய துறை” என்று அறிவித்து இந்தத் துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளில் $2700 கோடி (சுமார் ரூ 1..6 லட்சம் கோடி) ஏற்றுமதி இலக்கு நிர்ணயித்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்கான “மேக் இன் இந்தியா” தொழிலாளர்களுக்கு கொண்டு வரும் வேலை வாய்ப்புகளின் இலட்சணத்தையும், முதலாளிகளுக்கு கொண்டு வரும் சுகவாழ்வையும் புரிந்து கொள்ள தோல் கண்காட்சி காட்சிகளையும் ராணிப்பேட்டை விபத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

சி.எல்.ஆர்.ஐ, சி.எல்.ஈ, ஐ.டி.பி.ஓ
சி.எல்.ஆர்.ஐ (மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்), சி.எல்.ஈ (தோல் ஏற்றுமதி குழுமம்), ஐ.டி.பி.ஓ (இந்திய வர்த்தக வளர்ச்சி நிறுவனம்) காட்டும் “எதிர்கால கனவுகள்”

இந்திய தோல் தொழிலாளர்களின் இருள்சூழ்ந்த வாழ்க்கை
இந்திய தோல் தொழிலாளர்களின் இருள்சூழ்ந்த வாழ்க்கை

சொகுசான வர்த்தக பேரங்களுக்கு பின்னே....
சொகுசான வர்த்தக பேரங்களுக்கு பின்னே….

Images Inside Kolkata Tanneries Ahead Of Industrial Production Figures
தொழிலாளர்களின் குனிந்த முதுகுகள்…

தோல் நவநாகரீகம்
தோல் செருப்பணிந்த கால்களை நெற்றியில் தாங்கலாம்.

ஜப்பான் தோல் தொழிற்சாலை
அந்தத் தோல் செய்யும் தொழிற்சாலையில் குடியிருக்க முடியுமா?

தோல் கண்காட்சி படங்கள் : வினவு செய்தியாளர்கள்

தோல் தொழிற்சாலை படங்கள் : இணையத்திலிருந்து

கீழே ராணிப்பேட்டையில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் (படங்கள் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க