Sunday, November 29, 2020
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் "எந்த சட்டத்தையும் திணிக்காதே" பின் நவீனத்துவப் பிதற்றல்!

“எந்த சட்டத்தையும் திணிக்காதே” பின் நவீனத்துவப் பிதற்றல்!

-

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 6 (இறுதிப் பகுதி)

சீர்திருத்தவாதிகளின் இத்தகைய குளறுபடிகள் ஒருபுறமிருக்க, மதச் சார்பற்ற சிவில் சட்டத்திற்கெதிராக அதிபுரட்சிகமான சவடால்கள் சிலவற்றை பின் நவீனத்துவ நோயால் பீடிக்கப்பட்ட அறிஞர்கள் சிலர் முன் வைக்கின்றனர்.

பின் நவீனத்துவ நோய்
பின் நவீனத்துவ நோய்

“எந்தச் சமூகத்தினர் மீதும் எந்தவொரு சட்டத்தையும் கட்டாயமாகத் திணிக்கக் கூடாது; தனது மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் உரிமை ஒவ்வொரு சமூகத்துக்கும் உண்டு; அவ்வாறு திணிப்பது பன்முகத் தன்மைக்கு எதிரானது: மதச் சட்டமும் இருக்கட்டும், மதச்சார்பற்ற சட்டமும் இருக்கட்டும் – தனக்கு எது வேண்டுமென்பதை சம்பந்தப்பட்ட பெண் தீர்மானிக்கட்டும்” இவ்வாறான பல ரகங்களில் இவர்களது வாதம் முன்வைக்கப்படுகிறது.

உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் முதல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் வரை அனைத்துச் சட்டங்ளையும் எதிர்க்கும் பிற்போக்குவாதிகளுக்கு மிகவும் உவப்பான கண்ணோட்டம் இதுதான். இது ஒருபுறமிருக்க இக்கண்ணோட்டத்தின் அடிப்படையை ஆராய்வோம்.

“சட்டத்தைத் திணிக்கக் கூடாது” என்ற வாதமே தவறானதாகும். ஒரு வர்க்கம் அல்லது குழு பிறிதொரு பிரிவினர் மீது அவர்களது விருப்பத்திற்கு விரோதமாகவும் திணிப்பதற்குப் பெயர்தான் சட்டம். சட்டம் என்பதே கட்டாயம் அல்லது நிர்ப்பந்தம்தான். தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளிவர்க்கம் இவ்வாறுதான் தன் சட்டங்களைத் திணிக்கிறது. அவ்வாறே முதலாளித்துவ வர்க்கத்தின் மீது திணிக்கப்படு்ம் சர்வாதிகாம்தான் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்.

தீண்டாமை ஒழிப்பு, சதி ஒழிப்பு, பலதார மண ஒழிப்புச் சட்டங்களும் பிற்போக்காளர்கள் மீது திணிக்கப்படுபவைதான்.

ஒரு மதத்தின் மரபை மீறி, அவர்கள் மீது அரசு தனது சட்டத்தை திணிக்கக் கூடாது என்று இந்த ‘ஜனநாயகவாதிகள்’ உளறும்போது மதத்தின் யோக்கியதையை இவர்கள் மறந்து விடுகின்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பெண்கள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் மதம் விதிக்கின்ற கட்டுப்பாடுகளும் திணிக்கப் பட்டவைதானே!அரசின் அதிகாரம் பற்றிக் கவலைப்படுபவர்கள் மதத்தின் அதிகாரம் குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

மேலும் தற்போது நிலவும் மதத் தனிநபர் சட்டம் என்பதன் உண்மையான பொருள் மதம் மற்றும் அரசின் கூட்டு அதிகாரம் என்பதன்றி வேறு என்ன? மதத்தின் ஒழுக்கம் என்று மதவாதிகளாலும், ஆதிக்க சக்திகளாலும் வியாக்கியானம் செய்யப் படுபவற்றை, அந்த மதத்தைச் சேர்ந்த மக்கள் (குறிப்பாகப் பெண்கள்) மீது தனது அதிகார, ஆயுத வலிமை கொண்டு அரசு நிலைநாட்டுகிறது. இதுதான் மதத் தனிநபர் சட்டம்.

அரசுக்கும் மதத்திற்கும் இடையிலான இந்தக் கூட்டணியை உடைப்பதுதான் மதச்சார்பற்ற அரசுக்கான கோரிக்கையின் சாரம்.

ஒழுக்கத்தின் காவலன் என்ற அதிகாரத்தை மதத்திடமிருந்து பிடுங்கி அரசிடம் ஒப்படைக்கிறது மதச்சார்பின்மை. அதாவது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் எது நல்லொழுக்கம், தீயொழுக்கம் அல்லது தண்டனைக்குரிய தீயொழுக்கம் என்பதை அரசு தீர்மானிக்கிறது. இந்தத் தர நிர்ணய அளவுகோல் ஒரு குறிப்பிட்ட அரசின் வர்க்கத் தன்மைக்கேற்ப வேறுபடும். சட்டம் என்ற பெயரில் உடைமை வர்க்கங்களால் திணிக்கப்படும் இத்தகைய ஒழுக்கங்களை ஒடுக்கப்பட்ட வர்க்கம் எதிர்த்துப் போராடும்.

ஆனால் ஒழுக்கத்தின் காவலன் என்ற பொறுப்பு மதத்திற்கு அளிக்கப்படும்போது அது தனது தார்மீக நெறிகள் குறித்து அறிவு பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவதில்லை. மாறாக, அந்தத் தார்மீக நெறிகள் ‘கடவுளின் ஆணை’ என்றும் அது விவாதத்திற்கப்பாற்பட்டது என்றும் மிரட்டுகிறது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணுரிமைப் போராட்டம், சொத்துடைமை ஆதிக்கத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டம், மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் தனக்கெதிரான கலகமென்று முத்திரை குத்தி நசுக்குகிறது மதம்.

எனவே அனைத்து அதிகாரத்தையும் எதிர்ப்பதாகக் கூறும் இந்தச் சவடால் அறிஞர்கள் நடைமுறையில் மதத்தின் அதிகாரத்திற்கு மண்டியிடச் சொல்கிறார்கள்.

பார்ப்பனப் பிரோகிதர்களும் பின்நவீனத்துவப் புரட்சிக்காரர்களும்!

“தனிநபர் உரிமை என்ற பெயரில் ஒரு குழு அல்லது சமூகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது” என இன்று பின் நவீனத்துவ அறிஞர்கள் வைக்கும்வாதம்தான் முன் நவீனத்துவ காலத்தில், அதாவது 19- ஆம் நூற்றாண்டில், பார்ப்பனப் புரோகிதர்களால் முன் வைக்கப்பட்டது.

உடன்கட்டை ஏறுதல்
கணவனை இழந்த பெண்ணின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர முயன்ற போது அது இந்துச் சமூகத்தின் உரிமையில் தலையிடுவதாகக் கூறிப் புரோகிதர்கள் எதிர்த்தனர்.

கணவனை இழந்த பெண்ணின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாக்க பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர முயன்ற போது அது இந்துச் சமூகத்தின் உரிமையில் தலையிடுவதாகக் கூறிப் புரோகிதர்கள் எதிர்த்தனர். இன்று கருவறை நுழைவையும் இந்த அடிப்படையில்தான் எதிர்க்கின்றனர். ஷாபானுவுக்கு எதிராக முசுலீம் பழமைவாதிகள் திரண்டதும் இதே அடிப்படையில்தான் .

ஒரு மதக்குழுவின் பண்பாடு, சாதியின் பண்பாடு, சிறுபான்மையினரின் பண்பாடு என்ற பெயர்களில் பின்நவீனத்துவம் புரோகிதர்கள் இதற்குத் தான் வக்காலத்து வாங்குகின்றனர்.

தனிநபர் மீது மதம் செலுத்தும் ஆதிக்கத்திற்கு இவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள்? ஷா பானுவுக்கு என்ன வழி சொல்கிறார்கள்?

“மதச்சார்பற்ற சட்டமும் இருக்கட்டும்; மதச்சட்டமும் இருக்கட்டும், தனக்கு விருப்பமானதைப் பெண் தெரிவு செய்து கொள்ளட்டும்” என்கிறார்கள். இதையேதான் ராஜமாதா விஜயராஜே சிந்தியாவும் கூறுகிறார். “கட்டாயமாக உடன்கட்டை ஏற்றக் கூடாது; தானாக விரும்பி உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கவும் கூடாது” என்கிறார்.

இந்த அடிப்படையில் தானாக விரும்பி ஒரு பெண் இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாக வாழ்க்கைப் படுவதையோ, அல்லது கணவன் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதையோ, தானாக விரும்பி வரதட்சிணை கொடுப்பதையோ கூட தடுக்கக் கூடாது. தீணடாமை ஒழிப்புச சட்டத்துக்கும் இதைப் பொருத்தினால் மனமுவந்து தீண்டாமைக்கு உட்படுவதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு என்றுதான் கொள்ளவேண்டும்.

ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் கோலோச்சும் இச்சமூகத்தில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரின் ‘சுதந்திரத் தேர்வு’ எவ்வளவு சுதந்திரமானதாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அடிமையாக வாழ்வதற்கான உரிமையினைப் பெற்றுத் தருவதற்குத்தான் பின் நவீனத்துவ அறிஞர்கள் எப்படிப் போராடுகிறார்கள்!

இந்த வெட்கங்கெட்ட கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்த பன்முகத்தன்மை, பன்முகமான மதிப்பீடுகள், அடையாளங்கள் என்ற பல வண்ணச் சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொள்கிறார்கள். அந்த மதிப்பீடுகளின் தன்மை என்ன, அடையாளங்களின் உட்கிடை என்ன என்பது குறித்து ஆராயக்கூடாது என்கிறார்கள்.

இவ்வாறு பூடகமான தத்துவ ஞானச் சேட்டைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு சாதி, மதம் மற்றும் இனச் குழுவுக்கான தனித்தனி சிவில், கிரிமினல் சட்டங்களை உருவாகும் முயற்சியில் இவர்கள் நேரடியாக ஈடுபடுவார்களேயானால், தாங்கள் கோமாளிகள் என்ற உண்மையை நடைமுறையில் புரிந்து கொள்வார்கள்.

பலவிதமாக முன் வைக்கப்படும் இவ்வாதங்கள் அனைத்தும் தற்போது நிலவுகின்ற போலி மதச்சார்பின்மையை நியாயப்படுத்துவதற்கோ, அல்லது இதைவிடப் பிற்போக்கான நிலைமைக்குச் சமூகத்தைத் தள்ளுவதற்கோதான் துணை நிற்கின்றன.

மேலிருந்து சட்டத்தைத் திணிக்கக் கூடாதா?

இன்னொரு பிரிவினர் “சிவில் சட்டம் குறித்த விவாதமே வெட்டிப் பேச்சென்றும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கிராமப் பஞ்சாயத்துகள் தனியே இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

காப் பஞ்சாயத்து
பெரும்பான்மை கிராமப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகின்றன.

இது ஒரளவு உண்மையே. கிராமப் பஞ்சாயத்துகளின் சில தீர்ப்புகள் மற்றும் மரபுகள், நீதிமன்றம் மற்றும் சட்டங்களைக் காட்டிலும் முற்போக்கானவையாக இருப்பதும் உண்மைதான். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும், பழங்குடி மக்கள் மத்தியிலுமே விதிவிலக்காக இத்தகைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஆனால் பெரும்பான்மை கிராமப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகின்றன. இத்தகைய தீர்ப்புகளுக்கெதிராகவும், ஜனநாயக வழிப்பட்ட மக்கள் நீதிமன்றம் அமைப்பதற்காகவும் கீழிருந்து போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

ஆனால் இதற்காக மேலிருந்து சட்டத்திருத்தம் கொண்டு வரும் முயற்சியைக் கைவிட முடியாது. நிலப்பிரபுத்துவக் கொடுங்கோனமையின் கீழ் வழங்கப்படும் பாரபட்சமான, கொடூரமான பல தீர்ப்புகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்கள் நகரத்தையும், நீதிமன்றத்தையும் நாடி வருவதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.

ஜமாத் போன்ற மதப் பஞ்சாத்துக்களும், பழங்குடி, சாதிப் பஞ்சாயத்துக்களும் தம் விருப்பப்படி தண்டனை வழங்குகின்றன. கசையடி, சமூகப் புறக்கணிப்பு, அநியாய அபராதம் போன்ற இந்தத் தீர்ப்புகளெல்லாம் அரசியல் சட்டப்படி ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானவை; கிரிமினல் சட்டப்படி இந்தப் பஞ்சாயத்துக்காரர்கள் குற்றவாளிகள்.

மத ஆதிக்கச் சக்திகளும், இனக்குழுக்களின் நாட்டாமைகளும் வழங்கும் பல கொடுமையான தீர்ப்புகள் தனிநபர் சட்டங்களால் காப்பாற்றப்படுகின்றன. எனவே மத உரிமை, குழு உரிமை, மரபு, பண்பாடு என்ற பெயர்களில் இழைக்கப்படும் இத்தகைய அநீதிகளை அனுமதிக்கவியலாது.

இன்றில்லையேல் என்று!

மதச்சார்பற்ற ஜனநாயக ரீதியான சிவில் சட்டம் தேவை என்பதைக் கருத்தளவில் ஏற்றுக் கொள்ளும் சிலர் ” இச்சட்டத்தை 1950-இலேயே கொண்டு வந்திருக்க வேண்டும்; இன்று இந்து மதவெறி மேலோங்கியிருக்கும் தருணத்தில் இது சாத்தியமில்லை” என்கின்றனர். மார்க்சிஸ்டு கட்சி -சார்ந்த ” அறிவு ஜீவிகளோ இசுலாமியப் பெண்களே இன்று இதற்கு ஆதரவாக வரமாட்டார்கள்” என்று வாதிடுகிறார்கள்.

இவையனைத்துமே தவறான வாதங்கள். மதச்சார்பற்ற சட்டம் ஒன்றைக் கொண்டுவர அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் முயன்றபோது அதை முறியடிக்க இந்து, முசுலீம் மதவாதிகள் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம்.

மதச்சார்பற்ற சிவில் சட்டம்
நாம் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை முன் வைக்கிறோம். இது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத ஒரு கோரிக்கையாகும்.

இன்று ஒருபடித்தான சிவில் சட்டம் வேண்டும் என பாரதீய ஜனதா கூச்சவிடும்போது பிற கட்சிகள் அஞ்சி நடுங்கி, ஒடி ஒளிவதுதான் மையமான பிரச்சினை. மாறாக, அரசு விவகாரங்களிலிருந்தும், அரசியலிலிருந்தும், மதத்தை அறுத்தெறிகின்ற இலக்கணச்சுத்தமான மதச்சார்பின்மையையும், அதன் அடிப்படையிலான சிவில் சட்டத்தையும் கொண்டு வருவதற்குப் போராடத்துவங்கினால், பாரதீய ஜனதாவின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும்; அத்தகைய சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் பாரதீய ஜனதாவே முன்னணியில் நிற்கும்; அம்பலப்பட்டும் போகும்.

மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து இந்து மதவெறியர்களை ஒழித்துக் கட்டுவதோ, இந்து மதவெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மத ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதா என்று இசுலாமியப் பழமைவாதிகளும், மதவெறியர்களும் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

எனவே, இந்து மதவெறிக் கும்பல் வளர்ந்து அம்பலப்பட்டு நிற்கும் இன்றைய தருணத்தைக் காட்டிலும் இப்போராட்டத்தை நடத்துவதற்கு வேறு பொருத்தமான தருணம் கிடைக்காது என்பதே உண்மை.

இசுலாமியப் பெண்களே இதை ஆதரிக்கமாட்டார்கள் என்ற கூற்றில் இந்துச் சட்டத்தால் இந்துப் பெண்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என்ற கருத்து தொக்கி நிற்கிறது.

இசுலாமிய மக்கள் மீதான தாக்குதலும், மதக்கலவரங்களும் மிகுந்துள்ள சூழலில் தமது சமூகம் என்ற அடிப்படையில் இசுலாமியச் சமூகத்துடன் அப்பெண்கள் தம்மை நெருக்கமாக இணைத்துக் கொள்வதும், மதத்தின் பெயரால் நடக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடத் தயங்குவதும் வியப்பான விசயங்கள் அல்ல; அதே போல இந்த மவுனம் நிரந்தரமானதும் அல்ல.

ஷரியத்தில் நிவாரணம் கிடைக்காது என்பதை உணர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நிவாரணம் கோரி ஆயிரக்கணக்கான விவாகரத்து செய்யப்பட்ட முசுலீம் பெண்கள் நீதிமன்றத்தை அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மனுவும் ஷரியத்தின் ஆணாதிக்கத்திற்கும் அநீதிக்கும் எதிரான பிரகடனங்கள். அந்தப் பெண்களை எந்த இமாம்புகாரியிலும், சகாபுதீனாலும் தடுக்க முடியவில்லை; முடியாது.

மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்காகவும், மதச்சார்பின்மைக்காகவும் ஜனநாயக சக்திகள் எவ்வளவு நாணயமாகப் போராடுகிறார்களோ அந்த அளவிற்குத்தான் இசுலாமியப் பெண்களை மதவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும்.

இன்றைய கடமையைக் கைவிட்டால்தான் நாளைய புரட்சி நடக்குமா?

ஆனால் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்கான போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பும் சில முற்போக்காளர்கள் ” சாதி ஒழிப்பு, மதச் சார்பின்மை ஆகிய எதையும் தனியே உருவாக்க முடியாது; அது ஒட்டு மொத்தச் சமூக எதார்த்தங்களைக் கணக்கில் கொள்ளாமல் விவாதிக்க முடியாது” என்றும் கூறுகிறார்கள்

அதெல்லாம் சரிதான். பார்ப்பன இந்துமதவெறி தாக்குதல் நிலையில் உள்ளது என்ற இன்றைய சமூக எதார்த்தத்தை அங்கீகரிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதை எப்படி எதிர் கொள்வது என்பதில்தான் வேறுபாடு.

இந்து மதவெறியைச் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் எதிர்க்கும் துணிவற்ற சிலர் இன்றைய போலி மதச்சார்பின்மைக் கோட்பாட்டையே அதற்கு மாற்றாக முன் வைக்கின்றனர்; அல்லது ஒட்டு மொத்தச் சமூக மாற்றம், புரட்சி என்று கூறி நழுவுகின்றனர்.

பொருளாதார அடித்தளத்தில், உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழாமல் மேற்கட்டுமானத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் நிலைக்காது என்பது உண்மைதான். ஆனால் சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், ஆணாதிக்கம், இன, மொழி ஆதிக்கம் ஆகியவை புரட்சியில்தான் ஒழியும் என்று கூறி கைகட்டி நிற்பது புரட்சி குறித்த எந்திரவியல் பார்வையாகும். மாறாக இவற்றுக்கெதிராக புதிய ஜனநாயகக் கோட்பாடுகளை முன்வைத்து நடத்தப் படும் போராட்டங்களினூடாகத்தான் புரட்சி முன் செல்கிறது

பொருளாதார விடுதலை பெறவில்லையென்றால், பெண்ணிடத்திற்கு மணவிலக்கு உரிமையால் பயனில்லை என்பது சரிதான். ஆனால் மணவிலக்குப் பெறுகின்ற சட்டரீதியான உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் பெண்களனைவரும் பொருளாதார விடுதலை அடைவதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.

‘உழுபவனுக்கே நிலம்’ என்ற கோரிக்கையை முன் வைக்காமல் பேசப்படும் தீண்டாமை ஒழிப்புச சவடால் மோசடியானது. உழுபவனுக்கு நிலம் உரிமையாகும்வரை தீண்டாமை ஒழியாது எனக் கைகட்டிக் காத்திருப்பது அபத்தமானது.

அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகியற்றுக்கிடையிலான இயங்கியல் உறவை மறுத்து, ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதும், நிலைப்பாடின்றி மவுனம் சாதிப்பதும் நடைமுறையில் தற்போது நிலவும் மதத்தனிநபர் சட்டங்களை ஆதரிப்பதாகவே முடியும்.

“ஒரு நாடு- ஒரு மக்கள்-ஒரு சட்டம்” என்ற முழக்கத்தின் கீழ் இந்து தேசியத்தை உருவாக்கும் கருவியாக பொது சிவில் சட்டத்தை பாரதீய ஜனதா பயனபடுத்துகிறது.

பொது சிவில் சட்டத்தைத் திணிக்கக்கூடாது என்று எதிர்க்கும் எதிர்க்கட்சிகளும், இந்திய தேசிய அரசு ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.

இவ்விரண்டுக்கும் எதிராக நாம் மதச்சார்பற்ற சிவில் சட்டத்தை முன் வைக்கிறோம். இது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத ஒரு கோரிக்கையாகும். தந்தை வழி ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம், இன ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கும், அவற்றைப் புனிதப் படுத்தும் மதச்சட்டங்களுக்கும் எதிரான கோரிக்கையாகும். பார்ப்பன இந்துமதவெறியின் குடுமியைப் பிடித்து உலுக்கும் கோரிக்கையாகும்.

பின்னிணைப்பு – இந்துச் சட்டம் இசுலாமியச் சட்டம் ஒரு ஒப்பீடு

பொது சிவில் சட்டம் குறித்துப் பேசுபவர்கள் இந்துச் முற்போக்கானதென்றும் இசுலாமியச் சட்டம்தான் பிற்போக்கு என்றும் கருதுகின்றனர். நீதிபதி குல்தீப்சிங் தெரிவித்துள்ள கருத்தும் அத்தகையதுதான். ஆனால் மையமான பிரச்சினைகளில் இவையிரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டுக்கும் பெரிய வேறுபாடில்லையென்பது புலனாகிறது.

இசுலாமியச் சட்டம் பெரும்பாலும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளது. சீர்திருத்தப்பட்ட இந்துச் சட்டமோ மேற்பார்வைக்கு முற்போக்கு போலத் தோற்றமளித்து ஏமாற்றுகிறது.

பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினைகளில் இசுலாமிய, இந்துச் சட்டங்களின் சாராம்சமான நிலை கீழே சுருக்கமாகத் தரப்படுகிறது.

குழந்தைத் திருமணம்

இசுலாமியச் சட்டம்; ஒரு சிறுவன் அல்லது சிறுமிக்கு அவர்களது காப்பாளர் திருமணம் செய்து வைக்கலாம். அச்சிறுமி பருவத்திற்கு வந்தபின் (15 முதல்த 18 வயதிற்குள்) அவள் விரும்பாத பட்சத்தில் அத்திருமணத்தை ரத்து செய்யலாம். ஆனால் அவர்களிடையே பாலுறவு ஏற்பட்டிருக்கக் கூடாது என்பது நிபந்தனை.

இந்துச் சட்டம்; குழந்தைத் திருமணம் செல்லத்தக்கது. திருமண வயது ஆணுக்கு 21,பெண்ணுக்கு 18 என்பது ஆலோசனைதானே தவிர சட்டம் அல்ல; வயதுக்கு வந்தபின் மனைவி இத்திருமணத்தை ரத்து செய்ய விரும்பினால், (வழக்கமான விவாகரத்து சட்ட விதிகள்படி) கணவன் தன்னை கொடுமைப்படுத்தியதாகவோ, கைவிட்டுவிட்டதாகவோ, அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகவோ நிரூபிக்க வேண்டும். இத்துடன் இசுலாமியச் சட்டத்தில் உள்ள பருவம் வந்தபின் மணவிலக்கு செய்யும் உரிமையும் சேர்க்கப்பட்டுள்ளது.

பலதார மணம்

இசுலாமியச் சட்டம்; ஒரே நேரத்தில் 4 மனைவியரை மணந்து கொள்ள அனுமதிக்கிறது. ஐந்தாவதாக ஒரு பெண்ணை மணந்தாலும் அது செல்லத்தகாதது அல்ல; முறைகேடானது அவ்வளவே. ஐந்தாவது திருமணத்திற்குப் பின் ஏற்கனவே இருக்கின்ற நான்கு மனைவியரில் ஒருவரை விவாகரத்து செய்து விட்டால் ஐந்தாவதாகச் செய்து கொண்ட முறைகேடான திருமணம் முறையானதாகிவிடும்.

இந்துச் சட்டம்; முதல் மனைவி ஒப்புதலுடன் மணக்கலாம். இருதார மணம் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் முதல் மனைவி ஒப்புதலுடன் மணக்கலாம். இருதார மணம் தடை செய்யப்பட்டிருப்பதாகக் முதல் மனைவி வழக்கு தொடுக்கவில்லையெனில் இது சட்டவிரோதமாகாது. மேலும் இரண்டாவது மனைவியுடன் தனது கணவன் செய்து கொண்ட திருமணத்தில் சப்தபதி என்ற சடங்கு நடத்தப்பட்டதை முதல் மனைவி நிரூபித்தால்தான் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கொள்ளப்படும்.

ஒரு மனைவிக்கு மேற்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் அனைவரின் ஒப்புதலும் பெற்றுத்தான் தத்து எடுக்க வேண்டும் என்று ‘இந்து தத்தெடுத்தல் சட்டம்’ கூறுகிறது. பலதார மணத்தை இந்துச் சட்டம் அங்கீகரிப்பதை இது மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிறது.

மணமக்களின் சம்மதம்

இசுலாமியச் சட்டம்; வயது வந்த ஆண் பெண்ணிடம் சம்மதம் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் வயது வந்த என்ற சொல்லுக்கு பருவம் வந்த என்று பொருளாதலால் 10 வயது சிறுமியைக்கூட பருவம் வந்த பெண் எனக் கூறி அவளது சம்மதத்தைப் பெற்றதாகக் கூறிவிட முடியும். அமீனா என்ற ஐதராபாத் சிறுமியை கிழட்டு அராபிய ஷேக்கிற்கு திருமணம் செய்து வைத்தது இப்படித்தான்.

இந்துச் சட்டம்; குழந்தை மணமாக இருக்கும் பட்சத்தில் அவர்களது காப்பாளர்களின் ஒப்புதலையும், அல்லது வயது வந்த மணமக்களாக இருப்பின் அவர்களது ஒப்புதலையும் ஏமாற்றியோ மிரட்டியோ பெற்றிருந்தால்கூட சடங்கு முடிந்துவிட்டால் திருமணம் செல்லும். மணமக்களின் ‘ஒப்புதல்’ என்ற அம்சத்திற்கே இந்துச் சட்டத்தில் இடம் கிடையாது. “கட்டாயத் திருமணம் என்ற காரணத்தைக் காட்டி திருமணத்தை ரத்து செய்யவோ மணவிலக்குப் பெறவோ முடியாது; ஏனென்றால் இந்துச சட்டப்படி திருமணம் என்பது புனிதமானது”என பல உயர்நீதி மன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மணவிலக்கு

இசுலாமியச் சட்டம்; கணவன் இதற்குக் காரணம் எதுவும் தெரிவிக்க அவசியமில்லை. மூன்றுமுறை தலாக் என்று கூறினால் போதுமானது. மனைவி, தன் கணவனை விவாகரத்து செய்ய விரும்பினால் வழக்கு தொடுத்து கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும்.

1.கணவனை நான்கு ஆண்டுகளாகக் காணவில்லை

2.தன்னை பராமரிப்பதில்லை.

3.ஆண்மையின்மை.

4.மனநிலை பிறழ்வு.

5.கொடுமைப்படுத்துதல்.

civil-code-1இந்துச் சட்டம்; இருவருமே மணவிலக்குச் செய்துவிட விரும்பினால் செய்து கொள்ளலாம். யாரேனும் ஒருவர் மட்டுமே மணவிலக்கு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும். இரண்டாண்டுகள் தொடர்பின்றி விட்டுச் செல்லுதல், கொடுமைப்படுத்துதல், மதம் மாறியிருத்தல், பால்வினை நோய், தொழுநோய், 7 ஆண்டுகளாகக் காணமல் போயிவிடுதல், வேறு நபருடன் பாலுறவு வைத்திருத்தல்

ஜீவனாம்சம்

இசுலாமியச் சட்டம்; விவாகரத்து செய்யப்பட்ட பெண் வேறொருவரை மணக்காமலும்.,கற்புநெறி பறழாமலும் இருந்தால் மட்டுமே உண்டு. இது தொடர்பாக ஷாபானு தீர்ப்புக்கெதிரான வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் உள்ளன.

இந்துச் சட்டம்; கற்பிழந்தவள் என்று நிரூபிக்கப்படாமல் இருந்தால் உண்டு.

மணவாழ்க்கைக்கு வெளியே பாலுறவு

இசுலாமியச் சட்டம்; ஆணுக்கு நான்கு மனைவியர் வரை உண்டு. பெண் தன் கணவனைத் தவிர வேறு நபருடன் உறவு கொண்டிருந்தால் இ.பி.கோ. 494-வது பிரிவின்படி குற்றம்.

இந்துச் சட்டம்; திருமணமாகாத பெண்களுடன் கணவன் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் மனைவியைப் பொருத்தவரை இது இ.பி.கோ.494-வது பிரிவின்படி குற்றம்.

குழந்தைகள் மீதான காப்பாளர் உரிமை

இசுலாமியச் சட்டம்; தந்தைதான் இயற்கையான காப்பாளர். தந்தை இறந்துவிட்டால் தந்தைவழிப் பாட்டன்.

இந்துச் சட்டம்; தந்தைதான் காப்பாளர். தந்தை இறந்தால் தாய். விவாகரத்து ஆகி பராமரிப்புக்காகக் குழந்தைகள் தாயிடம் விடப்பட்டாலும், காப்பாளர் தந்தைதான்.

முந்தைய பகுதிகள்

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை
  4. மரத்தில் மறைந்தது மா மத யானை
  5. மதச்சார்பற்ற அறிஞர்களின் நரியை பரியாக்கும் முயற்சி

இந்நூல் முதல் பதிப்பாக புதிய கலாச்சாரத்தின் மூலமும், இரண்டாம் பதிப்பு கீழைக்காற்று பதிப்பகத்தின் மூலமும்  வெளிவந்திருக்கிறது

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா

பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள்
புதிய கலாச்சாரம் கட்டுரைகள்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 40
பக்கங்கள் : 64

கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னை – 600002
044-28412367

  1. சிறப்பான ,நெஞ்சுறுதியுடன் எழுதப்பட்ட,குற்றம் காண முடியாத ,உண்மையான மத சார்பின்மையை வலியுறுத்தும் முற்போக்கான கட்டுரை .வாழ்த்துக்கள் வினவு

  2. நெத்தியடி வினவு !

    //இன்று ஒருபடித்தான சிவில் சட்டம் வேண்டும் என பாரதீய ஜனதா கூச்சவிடும்போது பிற கட்சிகள் அஞ்சி நடுங்கி, ஒடி ஒளிவதுதான் மையமான பிரச்சினை. மாறாக, அரசு விவகாரங்களிலிருந்தும், அரசியலிலிருந்தும், மதத்தை அறுத்தெறிகின்ற இலக்கணச்சுத்தமான மதச்சார்பின்மையையும், அதன் அடிப்படையிலான சிவில் சட்டத்தையும் கொண்டு வருவதற்குப் போராடத்துவங்கினால், பாரதீய ஜனதாவின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும்; அத்தகைய சிவில் சட்டத்தை எதிர்ப்பதில் பாரதீய ஜனதாவே முன்னணியில் நிற்கும்; அம்பலப்பட்டும் போகும்//

  3. ஒரு மதத்தின் மரபை மீறி, அவர்கள் மீது அரசு தனது சட்டத்தை திணிக்கக் கூடாது என்று இந்த ‘ஜனநாயகவாதிகள்’ உளறும்போது மதத்தின் யோக்கியதையை இவர்கள் மறந்து விடுகின்றனர். ஒழுக்கம் என்ற பெயரில் பெண்கள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதியினர் மீதும் மதம் விதிக்கின்ற கட்டுப்பாடுகளும் திணிக்கப் பட்டவைதானே!அரசின் அதிகாரம் பற்றிக் கவலைப்படுபவர்கள் மதத்தின் அதிகாரம் குறித்து மவுனம் சாதிக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க