தனியார் மயம், கார்ப்பரேட் மயம் மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்!
மக்களுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒவ்வொரு அரசுத் துறையும் இன்று மீளமுடியாத மாபெரும் வீழ்ச்சியிலும், சீரழிவிலும் சிக்கிக் கிடப்பதோடு, அவை மக்களுக்கு எதிரானவையாக மாறி நிற்கின்றன. இந்த இழிநிலைக்கு மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல.
ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் இன்று மருத்துவக் கட்டணம், மருந்து விலை என்ற போர்வையில் மக்களைக் கொள்ளையடிக்கும் அட்டைப் பூச்சிகளாக மாறி நிற்பதைப் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாகச் சொன்னால், இதய இரத்தநாள அடைப்பைச் சரி செய்யும் அறுவை சிகிச்சையில் மட்டும் வருடத்திற்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய மக்களிடமிருந்து மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் கூட்டணி கொள்ளையடித்து வரும் புள்ளிவிவரமொன்றை வெளியிட்டிருக்கிறது, இந்து நாளிதழ்.
அரசு மருத்துவமனைகளில்கூட இன்று காப்பீட்டு திட்ட அட்டையோடு உள்ளே செல்லவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளமுடியாது என்றவாறு அரசு மருத்துவமனைகளும் இலாப நோக்கத்தோடு இயங்கத் தொடங்கிவிட்டன. மருத்துவத் துறையின் இந்த வீழ்ச்சியை அங்குலம் அங்குலமாகத் தோலுரித்துக் காட்டும் இக்கட்டுரை, இதற்கு மாற்றாக மாவோவின் மக்கள் சீனத்தில் பின்பற்றப்பட்ட வெறுங்கால் மருத்துவத் திட்டத்தை வாசகர்களின் பரிசீலனைக்கு முன்வைக்கிறது.
“மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருக்கும். அதன் மூலம் கிடைக்கும் பணமோ, இதர சலுகைகளோ எனக்கு இரண்டாம்பட்சம்தான் – இவ்வாறான பல மனித அறம், மாண்பு சார்ந்த உறுதிமொழிகளை ஏற்றுக் கையெழுத்திட்ட பின்னரே மருத்துவப் படிப்பை முடிக்கும் ஒவ்வொருவரும் இந்திய மருத்துவக் கழகத்தால் மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம். ஆனால், நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், எத்தனை மருத்துவர்கள் இந்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கிறோம்?” – என மருத்துவத் துறை ஊழல்களை உள்ளிருந்தே அம்பலப்படுத்திய மருத்துவர் கே.ஆர்.சேதுராமன் தன்னுடைய “போஸ்ட்மார்ட்டம்” நூலின் முதல் அத்தியாயத்தில் கேள்வி எழுப்பியிருப்பார்.

இன்றைக்கு மருத்துவர்கள் எந்த அற உணர்வும் இல்லாமல், மனிதாபிமானம் இல்லாமல், சக மனிதன் என்ற அனுதாபம் இல்லாமல் பணத்தைக் கறப்பதிலேயே குறியாக இருக்கிற குற்றக் கும்பல்களாக மாறிவிட்டனர். அன்றாடம் செய்தித்தாள்களில் வெளியாகும் கீழ்க்கண்டவாறான செய்திகளே மருத்துவத் துறையின் இந்த வீழ்ச்சியை எடுத்துரைக்கின்றன.
- நோயாளி இறந்துபோன பிறகும் அதனை உறவினர்களிடமிருந்து மறைத்து பிணத்திற்குச் ‘சிகிச்சை’ செய்து பணம் கறப்பது.
- விவரமறியாத ஏழை நோயாளிகளிடமிருந்து சிறுநீரகம் மற்றும் பிற உடல் உறுப்புகளைத் திருடிப் பணக்கார நோயாளிகளுக்கு விற்றுக் காசு பார்ப்பது.
- பிரசவம் ஆகும் நிலையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களை, பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் வெளியே துரத்திவிடுவது.
- மருத்துவம் பார்க்கவரும் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, வன்புணர்ச்சியில் ஈடுபடுவது. இவற்றை ஆபாச வீடியோவாக எடுத்துவைத்துக்கொண்டு, அப்பெண்களை மிரட்டிப் பணம் பறிப்பது.
- மருந்து கம்பெனிகளுடன் இரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நோயாளிகளைப் புதிய மருந்துகளைச் சோதனை செய்யும் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்துவது.
- கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதைச் சட்டவிரோதமாகக் கூறிப் பணம் பெற்றுக்கொள்வதோடு, பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பதற்கு உதவி செய்வது.
இவற்றையெல்லாம் தாண்டி மருத்துவர்களைத் தரகர்களாக மாற்றும் திட்டத்தை அதிகாரபூர்வமாகநடத்திவருகிறது அம்பானியின் மருத்துவமனை. தங்களிடம் வரும் நோயாளிகளை அம்பானி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மருத்துவர்களுக்கு இலட்சங்களில் இலஞ்சம் – 40 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ 1 இலட்சம், 50 நோயாளிகளை அனுப்பிவைத்தால் ரூ 1.5 இலட்சம் என்றவாறு – கொடுக்கப்படுகிறது.
கைமாறும் மருத்துவ சேவை
எப்போது நோயாளிகளை தேவையற்ற பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கும் தரகு முறை அறிமுகமானதோ, அப்பொழுதிலிருந்தே அதன் பின்விளைவாக இன்றைய தலைமுறை மருத்துவர்கள் பலருக்கு நோயாளிகளிடம் பேசி, அவர்கள் உடலைப் பரிசோதித்து, நோயைக் கண்டறியும் “கிளினிக்கல் எக்ஸாம்” முறையே பரிச்சயம் இல்லாமல் போவிட்டது. இன்று, மருத்துவரை விடவும் பரிசோதனைக் கருவிகளும், தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்களும் சக்தி படைத்தவை ஆகிவிட்டன. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான பிணைப்பு அறுந்துவிடும் நிலையில், பெரும் முதலீடுகளுடன் மருத்துவமனைகளைத் தொடங்குபவர்கள் மருத்துவர்களை வெறும் பரிந்துரையாளர்களாகவும் தரகர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். வியாபாரிகளின் கையை நோக்கி மருத்துவம் சென்று கொண்டிருக்கிறது.
அழுகி நாறும் மருத்துவக் கல்வி

மருத்துவக் கல்வியின் தரம் 1990-களில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதிலிருந்து வீழ்ச்சியடையத் தொடங்கியது. பணக்காரக் குடும்பங்களிலிருந்து தகுதியே இல்லாத மருத்துவர்கள் உருவாவதற்கான கச்சிதமான வழிமுறைதான் இத்தனியார்மயம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் இரகசியமாகச் சேகரித்து வெளியிட்ட செய்தியின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் 50 இலட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை விற்கப்படுவதாகவும், முதுகலைப் படிப்பிற்கான இடங்களின் விலை ரூ.1.5 கோடி முதல் 3 கோடி வரை உள்ளதாகவும் தெரிகிறது. இந்த விற்பனை காரணமாக நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் கருப்புப் பணம் புழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் மட்டுமின்றி, படிப்பை முடித்துப் பட்டம் பெறுவது, இந்திய மருத்துவக் கவுன்சிலில் உறுப்பினராகப் பதிவு செய்வது என்று ஒவ்வொரு நிலையிலும் இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. ஒரு மாணவருக்குப் பதிலாக வேறொரு மாணவர் தேர்வெழுதுவது, தேர்வுக்கு முன்னரே இரகசியமாக வினாத்தாள்ள் வெளியிடப்படுவது ஆகியவை சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. இப்படி இலஞ்சத்திற்கு மேல் இலஞ்சம் கொடுத்து மருத்துவ பட்டத்தைப் பெறுபவர்கள், நோயாளிகளைப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளிடம் பணயம் வைத்து, தாம் விட்ட பணத்தை வசூலிக்கிறார்கள்.
மருத்துவ சேவையின் தரத்தை நிர்ணயிப்பது எது?

ஒருவர் மருத்துவ படிப்பைப் படிப்பதற்கு மனித உடல் தேவை. அந்த உடலை டாடா, பிர்லா, அம்பானி பரம்பரையோ அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள புதுப் பணக்காரக் கும்பலோ, அவ்வளவு ஏன், தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் முதலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ தருவதில்லை, தரப் போவதுமில்லை. நூற்றுக்கு 99.9 சதவீத மருத்துவர்களே கூட உயிரோடு இருக்கும்போதும் சரி, செய்த பிறகும் சரி தமது உடல்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த சம்மதிப்பதில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளோடும், தனியார் மருத்துவக் கல்லூரிகளோடும் இணைந்திருக்கும் மருத்துவமனைகளை நாடிவரும் ஏழை – எளிய மக்களின் உடல்கள்தான் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களின் பரிசோதனைக் களமாக இருந்து வருகிறது. இப்படி எளிய மக்களின் உடல்களை அறுத்துப் பார்த்தும், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தியும் மருத்துவம் படித்துவிட்டு வருகிற மருத்துவர்கள், அதன்பின் தங்களின் ‘சேவைகளை’ யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் செய்கிறார்கள்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் மருந்து எழுதிக் கொடுக்கும் மருத்துவர்கள், மாலை நேரத்தில் தனியார் மருத்துவமனையிலோ அல்லது தனது கிளினிக்கிலோ, நோயாளிகளிடம் கருணையும் அன்பும் வழியவழிய பேசுவார். அனைத்துவிதமான பரிசோதனைகளையும் பொறுமையாகச் செய்வார். இவ்வாறு மருத்துவ சேவையின் தரம் நோயாளிகளின் பொருளாதாரத் தரத்தை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.
இலாப நோக்கில் இயங்கும் இந்திய அரசு

சர்வதேச மருத்துவ இதழான “லான்செட்”, “இந்திய அரசு ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் நிதியை மருத்துவம்-பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்தால் மட்டுமே, அடுத்த 20 ஆண்டுகளில் தொற்று நோய்களால் ஏற்படும் இழப்பு, தாய்-சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை உலகத்தரத்திற்கு ஈடாகக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கிறது. ஆனால், ஆட்சியைப் பிடித்துள்ள மோடி கும்பலோ, பொது சுகாதாரத்திற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட அற்பமான தொகையிலிருந்து மேலும் 6,000 கோடி ரூபாயை வெட்டப் போவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருக்கிறது. பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க இதைத் தவிர – அதாவது ஏழை மக்களின் உயிரோடு விளையாடுவதைத் தவிர – வேறுவழியில்லை என இரக்கமற்று அறிவித்திருக்கிறது, மோடி அரசு.
- இந்தியாவில் பிறந்து ஒரு மாதத்திற்குள் இறந்துபோகும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு பத்து இலட்சமாக உள்ளது. இந்த இறப்பு விகிதம் மிகவும் வறிய ஆப்பிரிக்க நாடுகளைவிட அதிகமாகும்.
- உலகிலுள்ள மொத்த காசநோயாளிகளில் 20 சதம் பேர் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் இருவர் காசநோயால் இறக்கின்றனர்.
- மாசுபட்ட குடிநீர் மற்றும் காற்றால் ஆண்டுக்கு ஒன்பது இலட்சம் பேர் மரணமடைகின்றனர்.
- 6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான குழந்தைகளுள் 70 சதம் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 500:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டிய மக்கள்-மருத்துவர் விகிதம், 500:0.3 ஆக உள்ளது. இந்த விகிதமும் 29 சதவீத கிராமப்புற மக்களுக்குக் கிடைப்பதில்லை.
இவ்வாறு ஏற்கெனவே அதலபாதளத்தில் உள்ள இந்தியாவின் பொது சுகாதாரத்தின் நிலைமை, பொது சுகாதாரத்திற்கான நிதி வெட்டப்படுவதால் இன்னும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்படுவது உறுதி. பொது சுகாதாரத்துக்கான நிதி வெட்டப்படுவது மருத்துவ சேவை தனியார்மயமாக்கப்படுவதன் ஒரு பகுதிதான். அதன் இன்னொருபுறம் பொது மருத்துவமனைகளே காப்பீடு திட்டங்கள், சேவைக் கட்டணங்கள், கட்டண சிகிச்சை (pay wards) போன்ற வழிமுறைகளின் மூலம் தனியார்மயமாக்கப்படுகின்றன.

மேலும், மருத்துவ நல ஆராய்ச்சி முதலியவற்றைத் தனியார்மயப்படுத்துவது, மருத்துவம் தொடர்பான அரசின் பொறுப்புகளை அரசு சாரா நிறுவனங்களிடமும், தனியாரிடமும், பொது-தனியார் கூட்டு என்ற முறையில் ஒப்படைப்பது என்றெல்லாம் புதுப்புது வழிகளில் மருத்துவ சேவையில் தனியார்மயம் புகுத்தப்படுகிறது. பிரசவம் மற்றும் குழந்தை நலம், நோய்க் கட்டுப்பாடு செயல்பாடுகள் ஆகியவற்றில் உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த அறக்கட்டளைகள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் முதலான மாநிலங்கள் பெரிய அளவில் இந்தப் பொது-தனியார் ஒத்துழைப்பையே நம்பியுள்ளன.
எளிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மருத்துவத்தைச் சமூகமயப்படுத்துதல் என 1978-ல் வகுக்கப்பட்ட “அல்மா ஆடா” (Alma Ata Declaration) கொள்கைக்குப் பதிலாக, உயர் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவ சேவை என்கிற கருத்தாக்கம் இன்று வலியுறுத்தப்படுகிறது. இதற்கேற்ப, அடிமாட்டு விலைக்கு நகர்ப்புற நிலங்களை வழங்குவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பரிசோதனைக் கருவிகளுக்கு வரி விலக்கு அளிப்பது என்றவாறு தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டு, இதற்கு ஈடாக அம்மருத்துவமனைகள் குறிப்பிட்ட சதவீத அளவில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனையை எந்தவொரு தனியார் மருத்துவமனையும் கடைப்பிடிப்பதில்லை.
(தொடரும்)
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________
இதைப்பற்றிய ஒரு கட்டுரையை சில மாதங்களுக்கு முன் நான் என் வலைதளத்தில் “மருத்துவ விபச்சாரம் ” என்ற தலைப்பில் பதித்திருந்தேன்.அதை உங்களுடைய பார்வைக்கு வைக்கிறேன்.
http://rakeshkanyakumari.blogspot.in/2014/08/blog-post.html?m=1
I think one of the issues is not having the qualified students becoming doctors. We should remove the reservation system completely and allow the meritorious candidates into the Medical colleges; then we will have calibered doctors (not “half-doctors / murderers”) who won’t just become salesmen of Corporates.