Monday, August 8, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

-

கோவிலூர் சுற்றுப்புற மக்களின் எமனாக விளங்கும் டி.சி.பி.எல் இரசாயன ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு

காரைக்குடி அருகாமையில் உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடேட். இந்த ஆலையில் சமீபத்தில் 12-02-2015 அன்று விசவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விசவாயு கசிவில் மிகப்பெரிய அளவில் சேதாரம் ஏற்படாவிட்டாலும் அந்தப்பகுதியில் வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறி உள்ளனர். ஆலையினுள் வேலை செய்த தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளனர். விபத்தினை அறிந்த
அதிகாரிகள், சுற்று வட்டாரத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

அருகாமை பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவிக்கும் முன்னரே சென்ற கோவிலூர் மக்கள் மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். இந்த பாதிப்பை தொடர்ந்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த ஆலையினை தற்காலிகமாக மூடுவதாகவும், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிய மாசுhfகட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒப்புதல் வழங்குவதாகவும் கூறினர்.

இதன் பிறகுதான் அந்த மக்களின் பல்வேறு பாதிப்புகள் இப்போதல்ல 1980-களிலிருந்தே ஆரம்பமாகி அப்போதிருந்தே போராட ஆரம்பித்து விட்டனர். பல்வேறு போராட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காசு வாங்கி கொண்டு துரோகமிழைத்திருக்கிறார்கள். இப்போதும் அமைதிக்கூட்டம் எனும் பெயரில் ஆலையினை இயக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் இப்பிரச்சனையை கையிலெடுத்துள்ளது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள். அதன் தொடக்கமாக 24.04.2015 அன்று காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் மையமாக

  • கோவிலூர் ஆலையை நிரந்திரமாக இழுத்து மூடு
  • ஆலையின் சொத்துக்களை பறிமுதல் செய்
  • ஆலையின் கழிவால் பாதிக்கபட்ட விவசாயிகள், ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கு
  • கண்மாய் கழிவுநீர் நஞ்சானதும், விவசாயம் முற்றிலும் அழிந்ததும் தெரிந்தும், மறைக்கும் மரமண்டை தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
  • போலிசும், கலெக்டரும், அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் சாராய உடையாரின் கைப்பாவைகளே

போன்ற முழக்கங்கள் இருந்தன.

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
கண்மாய் கழிவுநீர் நஞ்சானதும், விவசாயம் முற்றிலும் அழிந்ததும் தெரிந்தும், மறைக்கும் மரமண்டை தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

தலைமையேற்று உரையாற்றிய தோழர் மாணிக்கம் பு.ஜ.தொ.மு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கப்பட்ட ஆலை, முதலில் அரசு மற்றும் தனியார் கூட்டுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே ஆலை நட்டத்தில்தான் இயங்கியுள்ளது. பின்பு ஜப்பான் சென்று பயின்று வந்தவர்களால் ஆலை இலாபத்தில் இயங்கியது. இந்த இலாப விகிதம் அதிகமாக கிடைத்த காலத்தில்தான் தமிழ்நாடு அரசின் பங்கு முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டு ஆலை சாராய உடையாரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆலை ஆரம்பித்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து நச்சுக்காற்றை சுவாசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களினால் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

1980-களுக்கு பிறகு ஆலை ஆரம்பித்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே மக்கள், “இந்த ஆலையிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுவாயு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்” என்றும், “இந்த ஆலைக்கழிவுகளால் தான் நமது விவசாயம் பாதிப்படைந்துள்ளது” என்பதையும் உணர்ந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். அப்போதெல்லாம் மக்களுடன் இருந்த ஊர்க்காரர்கள் சிலரும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடி போராட்டத்தை மழுங்கடிப்பார்கள். இன்றுவரை தொடர்ந்து இவ்வேலையை செய்து வருகின்றனர்.

12-02-2015 அன்று ஏற்பட்ட விசவாயுக்கசிவின் போது மக்களுக்கு உடனடியாக தகவல் தராமல் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகுதான் கூறியுள்ளனர், ஆலை நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள். அமராவதிபுதூர் குருகுளம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை தந்துள்ளனர். இந்தப் பள்ளி ஆலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கே ஏன் விடுமுறை தரவேண்டும்? ஆலை வெடித்தால் 20 கி.மீ சுற்றளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துதான் விசயத்தை மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை அதிகாரிகளிடமும் அனைத்து பகுதிகளுக்கும் தெரிவித்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னொருபக்கம் ஆபத்தில்லை என்று ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி சொல்கிறார்கள். பின் ஏன் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

எங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் உள்ளது. ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தால் அதிகாரிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக பேசிக்கொண்டு உள்ளனர். இவர்கள் மக்களுக்கானவர்களா?

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தால் அதிகாரிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக பேசிக்கொண்டு உள்ளனர்.

ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். இன்றைக்கு ஆபத்து இல்லை என்று பேசுபவர்கள் 1984-ல் போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்

இங்கு ஏற்கெனவே கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த 800 ஏக்கர் விவசாய நிலங்கள் விளைவதற்கு தகுதியில்லாமல் அழிந்து போய் உள்ளன. இந்த ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்றால் ஆஸ்துமா, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, கருக்கலைதல், ஊனமுற்ற குழந்தைகள் பிறத்தல் போன்ற எண்ணற்ற பாதிப்புகள் உள்ளன. இந்த ஆலை வெடித்தால் 20 கி.மீ அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

இந்த ஆலை ஆரம்பத்திலிருந்து எந்த பராமரிப்பும் இல்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், கோவிலூர் பெரிய கண்மாய் நீர் நஞ்சாகியுள்ளது. இந்த கண்மாய் நீர்தான் இங்கு ஒட்டு மொத்த விவசாயத்தையும் அழித்துள்ளது.

அதுமட்டுமல்ல, காரைக்குடிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சம்பை ஊற்று 5-6 வருடங்களில் வறண்டு போகும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், சம்பை ஊற்றின் அருகாமையில் அமைந்துள்ள ஐந்து போர்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறார்கள். காரைக்குடி பகுதிக்கு சப்ளை செய்யக்கூடிய நீரின் அளவை விட இது மூன்று மடங்கு அதிகம். எனவே, தண்ணீர் தட்டுப்பாடு அபாயமும் உள்ளது.

ஆலை ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறது என்று நினைத்தால் அது நம்மை நாமே தற்கொலை செய்வதற்கு சமம். ஆதலால் இந்த ஆலை மூடப்பட வேண்டும். இதை மூடும் வரை எமதுபோராட்டம் தொடரும்” என்று தலைமையுரையினை முடித்தார்

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
பேச்சு வார்த்தை அல்ல எங்கள் கோரிக்கை. ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு என்பதே எங்கள் கோரிக்கை

அடுத்ததாக பு.ஜ.தொ.மு சிவகங்கை பகுதியை சேர்ந்த தோழர் கணேசன் பேசும் போது,

“1984-ல் போபால் ஆலை வெடித்தது; 25,000 பேர் இறந்தனர்; ஐந்து லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர். 25 ஆண்டுகளாக போராடியும் இன்று வரையும் நிவாரணம் வழங்கவில்லை. ஆனால், அந்த ஆலை முதலாளியை காங்கிரசு அரசின் ராஜீவ் காந்தி அமெரிக்காவிற்கு அரசு செலவில் அனுப்பி வைத்தார். அந்த பாதிப்புகள் பல ஆண்டுகள் கழித்தும், இன்றும் ஊனமுற்ற குழந்தை பிறப்பது என்பது தொடர்கதையாகியுள்ளது. அதே போல், இந்த ஆலையும் வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று பேசினார்.

பு.ஜ.தொ.மு தோழர் சரவணன் பேசும் போது, “பல தொலைக்காட்சிகள் வர்றாங்க. ஏதாவது ஒன்று இந்த ஆலைக்கு எதிரான விசயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ஒளிபரப்ப தயாரா? இங்கு எவ்வளவு பத்திரிகைகள் வந்து பக்கம் பக்கமா எடுத்துட்டு போறாங்க. ஆனால் நாளைக்கு ஒரு வரி கூட வராது. ஏனென்றால் அரசு ஆலை முதலாளியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கொல்லைப்புறம் வழியாக வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இது போக, மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வந்து விடக்கூடாது என்பதும் காரணம்.

நியாயமான போராட்டம் வேண்டும் என்றால் ஓட்டுக்கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு புரட்சிகர இயக்கங்களில் அணிதிரள்வோம், இவர்கள் தான் மக்களுடன் இறுதிவரை இருப்பார்கள்” என எழுச்சியாக பேசி உரையினை நிறைவு செய்தார்.

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு
மக்களுக்கு சிக்கனம் கற்பிக்கும் போது இங்கே உடையாருக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீரை வாரி வழங்குகிறார்கள். ஈரத்துணியை உடம்பை துடைத்தால் அதுகூட குளியல் தான். அதையும் விள்ம்பரம் பண்ணுங்களேன்.

அடுத்து பு.ஜ.தொ.மு காரைக்குடி நகர அமைப்பாளர் தோழர் கல்யாணகுமார் பேசும் போது, “கெமிக்கல் ஆலை துவங்கும் போது இந்த பகுதியில் உள்ள இப்போது 45 வயது நிரம்பியவர்கள் பலர் 6, 7 வயது சிறார்களாக அப்போது இருந்தார்கள். அந்த காலகட்டத்தில், பால்மணம் மாறாத சிறார்களிடம் கூட இரண்டு ரூபாய் சலைவைத்தாள் கொடுத்து கையொப்பம், கைநாட்டு வாங்கி உள்ளனர். ஆலைக்கு தடையில்லா சான்று வாங்க எவ்வளவு கேவலமான அணுகுமுறைகளை கையாண்டுள்ளனர் இந்த அதிகாரிகள். இவர்கள் தான் நம்ம பிரச்சனையை தீர்ப்பார்களாம்.

என்று மக்களை போராட அறைகூவி அழைத்து தன் உரையை முடித்தார்.

அதன் பிறகு பு.ஜ.தொ.மு இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் பேசியதாவது

“கோவிலூர் அருகாமையில் உள்ள பாதாரகுடியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வரும் தகவலின்படி இங்கு பிறக்கும் 90% சதவீதம் குழந்தைகள் மூச்சு இறைப்புடன் பிறக்கின்றனர். மேலும், கருக்கலைப்பு ஏற்படுகிறது, ஆண்மைக் குறைவு உள்ளது என்று மாவட்ட சுகாதார ஏட்டிலே பதிவாகி உள்ளது. இதற்கான ஆதாரங்களை கேட்கும் போது தர மறுக்கிறார்கள். ஏனென்றால், ஒட்டுமொத்த அரசின் உறுப்பும் முதலாளிகளுக்காகத்தான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மண் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யும் இடத்தில் பொய்யான முகவரியையும் கொடுக்க வேண்டி உள்ளது. உண்மையான முகவாரியை கொடுத்தால் சரியாக ஆய்வு செய்வார்களா? மாட்டார்கள் என்பதே உண்மை

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் என்ன? அவை தயாரிக்கபடும்போது ஏற்படும் தீமை என்ன? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அது மக்களுக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் அந்த ஆலைகளை அனுமதிக்க முடியாது என்று கூறி தடுத்துதானே இருக்க வேண்டும். அதை மாசுக்கட்டுபாட்டு வாரியம் செய்யவில்லை. பின் எதற்கு இத்துறை?

1984-ல் போபால் விசவாயு கசிவின் போது ஆலையினுள் இருந்த யாரும் சாகவில்லை. ஆலையின் வெளியில் இருந்த 25,000 சாதாரண மக்கள் தான் இறந்தார்கள். இதன் காரணம் என்ன? ஆலை வெளியில் உள்ள மக்கள் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கிறார்கள், விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது எதுவும் தெரியாது. இப்பிரச்சனைகளை கூறினால் மக்கள் ஆலையை இயங்க விடமாட்டார்கள் என எண்ணி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதன்பின் உள்ளது முதலாளியின் லாபவெறி.

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக கார்மாங்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதிகாரிகளிடம் கூறி பயன் இல்லை என்று ஆற்றில் இறங்கி முற்றுகையிட்டு தடுத்தார்கள் மணற்கொள்ளையினை. அதைப்போன்ற போராட்டம் தான் இங்கு தேவை” என்பதை விளக்கினார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைசெயலாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரை

“உலகத்திலே பலம் வாய்ந்த இராணுவ வல்லமை பொறுந்திய நாடுகளான அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவைகள் இந்த TCPL-உடன் வியாபாரம் செய்கிறார்கள். அனைத்து தொழில்நுட்பமும் கையில் வைத்திருக்கிறார்கள், அப்புறம் ஏன் சாராய உடையாரை எதிர்பார்த்து நிற்க வேண்டும்?

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு
பராமாரிப்பு செய்திருந்தால் அந்த கோர விபத்தை தடுத்திருக்க முடியும். அதை ஆலை முதலாளி செய்ய மாட்டான். காரணம், மக்களின் உயிரை விட அவனுக்கு லாபம் தான் முக்கியம்.

ஏனென்றால், அந்த நாட்டில் உற்பத்தி செய்தால் அந்த நாட்டு மக்கள் தடுப்பார்களோ இல்லையோ அந்த அரசு அங்கு நிறுவ அஞ்சுகிறது. அது போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வர காரணம் ‘இந்தியர்கள் விழிப்புணர்வற்றவர்கள், போராட மாட்டர்கள், எப்பேர்பட்ட விபத்து ஏற்பட்டாலும் அதை இந்தியர்கள் தலையில் கட்டிவிடலாம், ஏனெனில் இந்தியர்கள் உயிர் அவர்கள் நாட்டு பன்றியைவிட கேவலமானது’ எனும் எண்ணம் தான் காரணம்.

இப்படி ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் அரசின் மூலம் உருவாக்கப்பட்டன. தமிழ் நாடு அரசின் தொழிற்சாலை வளர்ச்சி கழகத்தின் சார்பில் TCPL நிறுவபட்டது. இந்த நிறுவனத்திடமிருந்து 86-களில் சாராய உடையாருக்கு தாரைவார்க்கப்பட்டது எம்.ஜி.ஆரால்..

தமிழகத்தில் முதன்முறையாக சுயநிதி கல்லூரி ஆரம்பித்து கல்வியை வியாபாரமாக்கி கொள்ளை அடிக்க உதவியது எம்.ஜி.ஆர். இந்த அயோக்கியத்தனம் மூலம் பயன் பெற்றது அயோக்கியன் உடையார். இதே எம்.ஜி.ஆர் காலத்தில்தான் டாமின் எனப்படும் அரசு கிரானைட் நிறுவனத்தை பி.ஆர்.பழனிசாமியிடம் கொடுத்தார், அதான் இன்று கிரானைட் கொள்ளை நடக்கிறது

மோடிக்கு பல அதானிகள் எப்படியோ அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கு உடையாரும்.

நாங்கள் இந்த ஆலையை மூட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், பலர் கூறலாம் தொழில் வளர வேண்டாமா என்று!

இங்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட் ஆண்டுக்கு 4600 MT என்ற உற்பத்தி திறன் மிகக் குறுகிய காலத்தில் 8000 MT உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி பிரமாண்ட லாபம் கொண்டதாக மாற்றப்பட்ட பின்பு தான், கடந்த இரண்டுமாதத்திற்கு முன் ஏற்பட்ட விசவாயு கசிவு. அதன் பின்பு தான் நமக்கு அதில் அவ்வளவு பாதிப்புகள் என்று உணர்ந்துள்ளோம். ஆனால், ஆலையில் எவ்வளவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு நீர் மாசுபட்டுள்ளது. கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டால் இவ்வளவு பாதிப்புகள் அவசியம் இருக்கும்.

தோல் தொழிற்சாலையில் தேக்கி வைக்கப்பட்ட கழிவுகள் சுவரை உடைத்துக்கொண்டு 10 தொழிலாளர்களின் மீது பாய்ந்ததின் காரணமாக அவர்கள் உயிரிழந்து போனார்கள். அந்த தோல் தொழிற்சாலையில் இங்கு தயாரிக்கப்படக் கூடிய இரசாயனம் கலந்துள்ளது. இந்த ரசாயனம் தான் உணவு பதப்படுத்துவதற்கு, பேப்பர் தயாரிப்பில், மருந்து தயாரிக்க, துணிகள் தயாரிக்க பயன்படுகிறது. அத்துடன் அதன் பாதிப்புகளும் மிக அதிகம். இதை பாதுகாக்க வேண்டிய சுற்றுச்சூழல் துறைகளெல்லாம் முதலாளிகளின் பாக்கெட்டிலே என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இப்போது TCPL தற்காலிகமாக மூடப்படுவதற்கு காரணம், ஏதோ மக்களுக்கு நல்லது செய்யத்தான் என்று எண்ண வேண்டாம், இது விபத்தின் பாதிப்பை சரி செய்வதற்கான நாடகம் தான்.

ஆலைகளில் ஏன் விபத்து ஏற்படுகிறது?

24,000 பேரை காவு கொண்ட போபாலில் கூட 15 லட்சம் ரூபாய் செலவழித்து பராமாரிப்பு செய்திருந்தால் அந்த கோர விபத்தை தடுத்திருக்க முடியும். அதை ஆலை முதலாளி செய்ய மாட்டான். காரணம், மக்களின் உயிரை விட அவனுக்கு லாபம் தான் முக்கியம். அதனால் தான் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆலைகளை முதலாளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறோம். மாறாக அரசிடம் இருக்க வேண்டும், மக்கள் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.

TCPL ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவணத்திடம் தொழில்நுட்பம் வாங்கிக்கொண்டு வந்துள்ளோம். அது மிகவும் பாதுகாப்பானது ISO தரச்சான்றிதழ் வாங்கி உள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ISO தரச்சான்றிதழ் ரூ 50,000 பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமனாலும் வழங்கக்கூடிய ஒரு தனியார் நிறுவனம்தான் ISO. ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் ஒரு கொலைகார கம்பெனி அதனுடன் தான் சாராய உடையார் கூட்டு, இது தான் இவர்களின் பாதுகாப்பின் லட்சணம்.

இந்த நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளும் உள் நாட்டு தரகு முதலாளிகளும் வரன் முறையின்றி இயற்கை வளங்களை சூறையாடி பேரழிவை உண்டாக்குகின்றனர். இதை இந்த அரசு உடனிருந்து செய்கிறது. இந்தக் கொள்ளைக்கு எதிராக இருந்தால் அவர்கள் தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்தக் கொள்ளை தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கு எதிராக போராட புரட்சிகர இயக்கங்களின் கீழ் அணி திரள வேண்டும்” என்று அழைப்பு விடுத்து உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு பரம்பகுடி தோழர் ஆனந்த் அவர்களின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

தகவல்
பு.ஜ.செய்தியாளர்.
சிவகங்கை.

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை
9443175256

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க