Saturday, December 4, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !

செம்மரக் கடத்தல் : ஆந்திர அரசின் இரட்டை வேடம் !

-

திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் இருபது பேரை மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்திருக்கிறது ஆந்திர போலீசு. அவர்களைப் பேருந்தில் வைத்துக் கைது செய்து, தோலைத் தீயால் சுட்டுக் கருக்கி, உறுப்புகளைச் சிதைத்து, மிகவும் வக்கிரமான முறைகளிலெல்லாம் சித்திரவதை செய்து, பின்னர்தான் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும் மறைக்கவியலாத வண்ணம் நிரூபணமாகியிருக்கின்றது.

செம்மரக் கொலைகள்
ஆந்திர போலீசால் சித்திரவதை செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பழங்குடியினத் தொழிலாளர்கள்.

கொல்லப்பட்டவர்களது உறுப்புகள் சிதைக்கப்பட்டிருப்பதாகட்டும், அவர்களது உடலில் உள்ள குண்டுக்காயங்களாகட்டும், உடல்களுக்கு அருகில் மிகவும் அலட்சியமாக வீசப்பட்டிருக்கும் (ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட) செம்மரக் கட்டைகளாகட்டும், இந்தப் போலி மோதல் கொலை குறித்து ஆந்திர போலீசு அளித்த கட்டுக்கதையாகட்டும்; அனைத்திலும் வெளிப்பட்ட செய்தி ஒன்றுதான் – “அப்படித்தான் செய்வோம், எங்களை யார் என்ன புடுங்க முடியும்” என்று எல்லா சட்டபூர்வ நிறுவனங்களுக்கும், சமூகத்துக்கும் போலீசு விடுத்திருக்கும் சவால்தான் அந்தச் செய்தி.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை விஞ்சும் ஆந்திரப் போலீசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான கண்டனங்கள், நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணைக்கான கோரிக்கைகள் நீதிமன்றப் பரிசீலனையில் இருக்கின்ற அதே வேளையில், “இப்படி ஒரு படுகொலையை நடத்தி பாடம் கற்பித்தாலன்றி, செம்மரக் கடத்தலைத் தடுக்கவியலாது” என்று கூறி இந்த வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிறது ஆந்திர அரசு.

இன்னொருபுறம், எந்தக் குற்றத்தைத் தடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு இந்தப் படுகொலையை ஆந்திர அரசு நியாயப்படுத்தி வருகிறதோ, அந்தக் குற்றத்தை, அதாவது செம்மரக் கடத்தலை, சட்டபூர்வமாகவே அனுமதிக்க வேண்டும் என்றும், “செம்மரக் கடத்தலுக்கு எதிரான தடையை நீக்கிவிட வேண்டும் என்றும், செம்மரம் வெட்டுதல், விற்பனை, ஏற்றுமதி ஆகியவற்றை சட்டபூர்வமாக அனுமதிப்பதன் மூலம் மட்டும்தான் இந்தக் கடத்தலை தடுக்க முடியும் “என்றும் ஆந்திர வனத்துறை அமைச்சர் போஜ்ஜல கோபாலகிருஷ்ண ரெட்டி கூறியிருக்கிறார். (டைம்ஸ் ஆப் இந்தியா, 11.4.2015)

இளங்கோ மற்றும்  சேகர்
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆந்திர போலீசாரால் உயிரோடு கடத்திச் செல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சிகள் (இடமிருந்து) இளங்கோ மற்றும் சேகர்.

“செம்மர விற்பனையையும், ஏற்றுமதியையும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறுவதுடன் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. “அருகி வரும் தாவர இனம் என்ற பட்டியலிலிருந்தே செம்மரத்தை நீக்கி விட வேண்டும்” என்றும் கோரியிருக்கிறார். சேஷாசலம் படுகொலை நடந்த மூன்றே நாட்களில் வருகிறது ஆந்திர அமைச்சரின் இந்த அறிக்கை.

இதுதான் செம்மரக் கடத்தல் குறித்த ஆந்திர அரசின் நிலை என்றால், 20 உயிர்களை ஏன் கொடூரமாகப் பறிக்க வேண்டும்? இந்தப் படுகொலையும் அமைச்சரின் அறிக்கையும் முரண்பட்டவை போலத் தோன்றுகின்றன. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே முரண்பாடு இல்லை என்பதே உண்மை.

செம்மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை இந்திய அரசுக்கோ, ஆந்திர அரசுக்கோ கடுகளவும் இல்லை. எப்போதும் இருந்ததுமில்லை. அருகி வரும் தாவர இனங்கள் மற்றும் விலங்கினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தந்தத்தில் (The Convention on International Trade in Endangered Species of wild fauna and flora (CITES சைட்ஸ்) இந்தியா உள்ளிட்ட 179 நாடுகள் கையொப்பமிட்டிருக்கின்றன. மேற்கூறிய ஒப்பந்தத்தால் தடை செய்யப்பட்டுள்ள தாவர வகைகளில் செம்மரமும் ஒன்று.

எனவே தவிர்க்கவியலாமல் 1998 முதல் இந்தியா செம்மரக் கட்டைகளின் ஏற்றுமதியைத் தடை செய்திருக்கிறது. இதன்படி அரசுக்கு சொந்தமான காடுகள், தனியாருக்கு சொந்தமான நிலங்கள் ஆகிய எங்கிருந்தும் செம்மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வது குற்றமாகும்.

இந்திய கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு செம்மரத்தினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியை மட்டும் மைய அரசு அனுமதித்திருக்கின்றது.

இது சட்டப்படி உள்ள நிலை. ஆனால் நடைமுறையோ வேறு. செம்மரக் கடத்தல் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. மறுபுறம், கைவினைப் பொருட்கள் என்று இந்திய அரசால் முறைகேடாக சான்றிதழ் அளிக்கப்பட்டு, செம்மரக் கட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக “சைட்ஸ்” சந்தேகித்தது. மேலும், அவ்வாறு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக இருந்தாலும் கூட, மேற்படி தாவர இனம் அருகி வரும் இனம் என்பதால், அது முற்றிலுமாக அழிந்து படாமல் புதிதாக வளர்ப்பதற்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது (Non – Detriment Finding (NDF) என்பது குறித்து சோதிப்பதற்கும் இந்திய அரசு தவறிவிட்ட காரணத்தினால், ஜூன் 2010 முதல் இந்தியாவிலிருந்து செம்மரப் பொருள் ஏற்றுமதியை முற்றிலுமாகத் தடை செய்தது “சைட்ஸ்.”

தடை விதிக்கப்பட்ட கணம் முதல் இந்த தடையை அகற்றுவதற்குத் தீவிரமாக முயன்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி வைக்கப்பட்டிருக்கும் 11,806 டன் செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செய்ய “சைட்ஸ்” சிடம் அனுமதி பெற்றுத் தந்தது. இதன் அடிப்படையில் பறிமுதல் செய்து வைத்திருக்கும் 8584 டன் செம்மரக் கட்டைகளை ஏற்றுமதி செவதற்கு ஆந்திர அரசு அனுமதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டில் மட்டும் சர்வதேச ஏலத்தில் செம்மரங்களை விற்று ஆந்திர அரசு ஈட்டிய தொகை சுமார் ரூ 1000 கோடி. இந்த ஆண்டு 3500 டன் செம்மரக்கட்டைகளை ஆந்திர அரசு சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய இருக்கிறது. இவையன்றி ஆந்திர அரசிடமிருந்து பாபா ராம்தேவ் சுமார் ரூ 207 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை ஏலமெடுத்திருக்கிறார். இதுவரை பணம் கொடுக்கவில்லை. அவற்றை சர்வதேசச் சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் ராம்தேவின் நோக்கம் என்ற சந்தேகத்தையும் ஆந்திர அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

சீனா மட்டும் ஆண்டுக்கு 3000 டன் செம்மரத்தை கொள்முதல் செய்கிறது. ஜப்பான், கொரியா போன்ற மற்ற நாடுகளின் கணக்கு தனி. அதி உயர்தர செம்மரத்தின் விலை டன்னுக்கு ரூ 1.5 கோடி, உயர்தரம் ரூ 55 லட்சம், சாதாரணத் தரம் ரூ 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

வனத்துறை ஆவணங்களின் படி 2002 முதல் செம்மரக் கடத்தலுக்காக 12,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 18,703 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 12,863 டன் கட்டைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டை கைப்பற்றப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டால், கணக்கில் வராமல் ஒதுக்கப்படுபவை குறைந்தது பத்து கட்டைகளாக இருக்கும் என்பது இத்துறை சார்ந்த அதிகாரிகள் கூறும் தகவல்.

ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி
செம்மரத்தை வெட்டுவதற்கும் அதனைச் சர்வதேச சந்தையில் விற்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியுள்ள ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபால கிருஷ்ண ரெட்டி.

கடத்தப்படும் கட்டைகளை மடக்கிப் பிடிப்பவர்கள் ஆந்திர அரசின் வனத்துறை மற்றும் போலீசு மட்டுமல்ல. தமிழக-கர்நாடக போலீசு, மத்திய வருவா உளவுத்துறை, சுங்கத்துறை, துறைமுகம் உள்ளிட்ட எல்லா மிருகங்களுக்கும் இந்த வேட்டையில் ‘பங்கு’ உண்டு. இவர்களெல்லாம் தாங்கள் கைப்பற்றும் கட்டைகளை, ஆந்திர அரசிடம் ஒப்படைக்காமல், தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்கின்றனர்.

****

செம்மரக் கடத்தல் மூலம் மஃபியாக்கள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தெரிந்த செய்தி. ஆந்திர அரசும் தனது நிதி வருவாய்க்கு செம்மர விற்பனையை நம்பியிருக்கிறது என்பது நாம் கவனிக்கத் தவறும் செய்தி.

ஆந்திர விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கும் சந்திரபாபு நாயுடு, “கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் செம்மரத்தை சர்வதேசச் சந்தையில் ஏலம் விட்டு, கிடைக்கும் பணத்தில்தான் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி தர இயலும்” என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

அதாவது, ஆந்திர அரசுக்கு வருவா வேண்டுமென்றால் செம்மரம் விற்க வேண்டும். தற்போதுள்ள தடையின் காரணமாக அரசு வெளிப்படையாக செம்மரம் வெட்டி விற்க முடியாது. கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டினால், அதனைக் கைப்பற்றி விற்றுத்தான் பணமாக்க முடியும். அப்படித்தான் சென்ற ஆண்டு சுமார் ரூ 1000 கோடி ஈட்டப்பட்டிருக்கிறது. கடத்தல் நடந்தால்தானே அரசு கைப்பற்ற முடியும், விற்றுக் காசாக்க முடியும்? எனவே செம்மரக் கடத்தலில் ஆந்திர அரசு மறைமுகக் கூட்டாளியல்ல, நேரடிக் கூட்டாளி என்பதே உண்மை.

ஆந்திர அரசு எந்த அளவுக்கு செம்மரம் விற்ற காசைச் சார்ந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது போலவும் நடிக்கிறது. இது கஞ்சா வியாபாரியிடம் மாமூலும் வாங்கிக் கொண்டு, கேசு போட்டு உள்ளேயும் தள்ளும் போலீசின் நடத்தையைப் போன்றது.

இது, இவ்விசயத்தின் ஒரு பரிமாணம் மட்டுமே. இதன் இன்னொரு பரிமாணம்தான் மையமானது. இந்திய ஆளும் வர்க்கங்கள் அமல்படுத்திவரும் மறுகாலனியாக்க கொள்கை, இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் பொதுச்சொத்துகளையும் தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதே கொள்கை காரணமாக, முதலாளி வர்க்கத்துக்கு அடுக்கடுக்காக வரிச்சலுகைகள் வழங்கப்படுவதால், மத்திய-மாநில அரசுகளின் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.

சந்திரபாபு நாயுடு சொல்வது போல, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி தருவதற்கு மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பளம் தருவதற்கே இயலாத திவால் நிலையை பல மாநில அரசுகளும் எய்தி விட்டன. இந்த திவால் நிலையைக் காட்டித்தான் நிலக்கரி, இரும்புக் கனிம வயல்கள் முதல் பொதுத்துறை நிறுவனங்கள் வரையிலான அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசுவதை நியாயப்படுத்துகின்றன மத்திய-மாநில அரசுகள். ஆற்றுமணல் கொள்ளை முதல் டாஸ்மாக் வரையிலான எல்லா அநியாயங்களும் இந்த “நியாயத்தின்” மீதுதான் நிற்கின்றன.

05-red-sanders-killings-caption

20 பேரின் படுகொலையை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சரின் அதே நாக்கு அருகிவரும் தாவரம் என்ற பட்டியலிலிருந்தே செம்மரத்தை நீக்குமாறு வெட்கமே இல்லாமல் பேசுகிறதே, இதன் பொருள் என்ன? செம்மரத்தை வெட்டிக் காசு பார்ப்பதில் கடத்தல்காரர்களை விடவும், சந்திரபாபு நாயுடு தீவிரமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள்.

“அரசுக்கான வருவாய் ஆதாரம்” என்ற பெயரில் இயற்கைவளக் கொள்ளைகள் அனைத்தையும் நியாயப்படுத்திக் கொண்டே, மறுபுறம் அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை கார்ப்பரேட் முதலாளிகளும் மஃபியாக்களும் அதிகார வர்க்கமும் ஆளும் கட்சிகளும் கூட்டு சேர்ந்து கொள்ளையிடுகின்றனர். அம்பானி விழுங்கியுள்ள கோதாவரி எண்ணெய் வயலில் தொடங்கி, கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளை வரை இதுதான் நடக்கிறது. செம்மரக் கடத்தலில் நடப்பதும் இதுதான்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் ரெட்டி மற்றும் கம்மா நாயுடு சாதிகளைச் சேர்ந்த மஃபியாக் கும்பல்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு, காங்கிரசு, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கு, அவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதலின் வரலாறு, காங்கிரசு முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் செம்மரக் கடத்தல் மஃபியாவின் தலைவனான ராமச்சந்திர ரெட்டியே வனத்துறை அமைச்சராக இருந்து செம்மரம் கடத்தியது என்பன போன்ற விவரங்களை வாசகர்கள், “வினவு தளம்” வெளியிட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

தற்போது மொரிசியஸில் கைது செய்யப்பட்டிருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த கங்கி ரெட்டி, மஸ்தான் வலி, தெலுகு தேசம் கட்சியைச் சேர்ந்த புல்லட் சுரேஷ், செம்மரக் கடத்தல் முன்னாள் எம்.பி. சவுந்திரராஜன் என்று தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பல ஓட்டுக் கட்சி கிரிமினல்களும், சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான அப்பு போன்ற தொழில்முறைக் கிரிமினல்களும் செம்மரக் கடத்தல் வலைப்பின்னலில் அங்கம் வகிக்கின்றனர்.

பொதுவாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுச்சொத்தைக் கொள்ளையிடுவதில் ஓட்டுக் கட்சிகளிடையே வேறுபாடில்லை. அதேநேரத்தில், என்னென்ன முறைகளில், எந்தெந்தத் துறைகளில், எந்த அளவுக்குக் கொள்ளையடிப்பது என்பது போன்ற விவகாரங்களில் ஓட்டுக் கட்சிகளுக்கிடையே சில வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த வேறுபாட்டின் அடிப்படையில்தான் “ஊழலற்ற நல்லாட்சி” என்று கட்சிகள் தங்களை முன்நிறுத்திக் கொள்கின்றன.

“ஏ.டி.எம். திருடர்கள், கள்ள நோட்டுப் பேர்வழிகள், செம்மரக் கடத்தல்காரர்கள் போன்ற கிரிமினல்கள்தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு கட்சி முழுவதும் நிரம்பியிருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்கள் லார்டு வெங்கடாசலபதியையே திருடி விடுவார்கள்” என்று சமீபத்தில் பேசியிருந்தார் சந்திரபாபு நாயுடு.

அது மிகையல்ல. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு என்பது அ.தி.மு.க. வுடன் ஒப்பிடத்தக்க ஒரு மஃபியாக் கும்பல்தான். செம்மரக் கடத்தலில் முக்கியப் பங்கு வகிப்போரும் அக்கட்சியினர்தான். எனவே சேஷாசலம் தாக்குதல் மூலம், ராமச்சந்திர ரெட்டி உள்ளிட்ட செம்மரக் கடத்தல் பிரமுகர்களைத் தன்னிடம் சரணடைய வைப்பதும் அக்கட்சியைப் பலவீனப்படுத்துவதும் நாயுடுவின் திட்டமாக இருக்கக்கூடும்.

ஆனால், இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ள அரசியலாக நாம் கவனிக்க வேண்டிய முதன்மையான விசயம் இதுவல்ல. “செம்மரம் கடத்தும் ஏகபோக உரிமை அரசுக்கு மட்டுமே உரியது” என்பதுதான் இந்தப் படுகொலை மூலம் நாயுடு அரசு கூறும் செய்தி.

நாயுடு அரசு கோரியுள்ளவாறு, செம்மரத்தை வெட்டுவதன் மீதான தடை நீக்கப்படுமானால், அதனை ஆந்திர அரசு சட்டபூர்வமாகவே வெட்டி விற்பனை செய்யும். நீக்கப்படவில்லையானால், கடத்தல்காரர்கள் மூலம் மரத்தை வெட்ட அரசே ஏற்பாடு செய்யும். பின்னர், அதில் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஏலம் விட்டுக் காசாக்கிக் கொள்ளும். அதேநேரத்தில், கடத்தலைத் தடுத்து செம்மரங்களைக் காப்பாற்றுவதில் அரசு முனைப்பாக இருப்பதாகக் காட்டும் பொருட்டு, அவ்வப்போது ஏழைகள் சிலரை ஆந்திர போலீசு சுட்டுக் கொல்லும்; சிறை பிடிக்கும்.

***

மலைவாழ் மக்களைப் பொருத்தவரை, வளர்ச்சி என்ற பெயரில் அரசு காடுகளை அழித்தாலும் சரி, வனப்பாதுகாப்பு – வனவிலங்குப் பாதுகாப்பு என்ற பெயரில் காடுகளைக் காப்பாற்ற முனைந்தாலும் சரி, அதன் நோக்கம் மலைவாழ் மக்களை வெளியேற்றுவதாகவே இருக்கிறது. இந்தக் கத்தி இரண்டு பக்கமும் மலைவாழ் மக்களை வெட்டுகிறது.

மலைவாழ் மக்களைப் பொருத்தவரை, காடுகளைத் தங்களது வாழ்வின் ஆதாரமாகவும், வாழ்க்கையிலிருந்து பிரிக்கவொண்ணாத அங்கமுமாகவே அவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். செம்மரம் முதல் சந்தன மரம் வரை அனைத்திலும் பணம் காத்துத் தொங்குவதைப் பார்த்த முதலாளித்துவம்தான் அவற்றை வெட்டிக் காசாக்குகிறது.

இவ்வாறு ஏற்கெனவே அழிக்கப்பட்ட சவ்வாது மலைக் காடுகளின் மைந்தர்கள்தான், இன்று செம்மரம் வெட்டுவதற்குக் கூலிக்காரர்களாக அமர்த்தப்பட்டவர்கள். நாளை செம்மர ஏற்றுமதியின் மீதான தடையை நீக்குவதில் சந்திரபாபு நாயுடு ஒருவேளை வெற்றி பெறலாம். அப்போதும் திறமை வாய்ந்த மரம் வெட்டிகளைத் தேடி தரகர்கள் சவ்வாது மலைக் கிராமங்களுக்கு வருவார்கள்.

மலைவாழ் மக்களை இந்த விஷவலையில் சிக்காமல் தடுக்க வேண்டுமானால், சவ்வாது மலையின் மீது தங்களுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அவர்களை நாம் பயிற்றுவிக்க வேண்டும்.

– சூரியன்
__________________________
புதிய ஜனநாயகம், மே 2015
__________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க