privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்இருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு

இருபதாண்டுகளில் குடிப்போர் எண்ணிக்கை 55% அதிகரிப்பு

-

Silhouette of an alcoholic
Silhouette of an alcoholic

குடிவெறி தேசமாக இந்தியா மாறி வருவதாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ’பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம்’ (Organization for Economic cooperation and development – OECD) என்ற பன்னாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான நிறுவனம் நடத்திய உலகளாவிய ஆய்வின் படி, கடந்த 1992 – 2012 இருபதாண்டுகளில் இந்தியர்களின் குடிப்பழக்கம் 55% அதிகரித்துள்ளது.

மேற்படி நிறுவனம், அதன் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பினரல்லாத நாடுகள் என நாற்பது நாடுகளில் இந்த கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தைப் பொறுத்தவரை, ரசியா மற்றும் எஸ்தோனியா நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவதாக வருகிறது. குறிப்பாக, இளம் வயதிலேயே குடிபோதைக்கு பழக்கமாவது அதிகரித்து வருகிறது.

கடந்த இருபதாண்டுகளில் குடி பற்றிய கலாச்சார மனத்தடைகள் உடைந்து வருவதே குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்கிறார் ஜஸ்லோக் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆபா நாக்ரால். சுரா, சோம பானங்களில் வேத கால மாமுனிகள் நீச்சலடித்த பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. எனினும் இடைக்காலத்தில் சாதிய படிநிலைக்கேற்ப பழக்க வழக்கங்களை தீர்மானித்த பார்ப்பனியம் சூத்திர-பஞ்சம சாதிகள் கள்ளுண்பதாலும் கீழானவர்கள் – என்று வரையறுத்தது. கூடவே சமண, புத்த மதங்களின் தாக்கத்தாலும் பார்ப்பனியம் இதை ஒரு ஒழுக்கப் பிரச்சினையாக மாற்றியது.

AlcoholAbuse 4என்றாலும், இந்து பொதுப்புத்தியில் மதுப் பழக்கத்தின் மேல் இருந்த செயற்கையான புறக்கணிப்பை தொண்ணூறுகளின் துவக்கத்தில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்க பொருளாதார நடவடிக்கைகள் மாற்றியமைத்தன. வரலாற்று ரீதியாகவே ஆண்டையின் அடியொற்றிச் செல்ல பழக்கப்படுத்தப்பட்ட இந்து பொதுப்புத்தி, உலகமய பொருளாதாரக் கொள்கைகளோடு சேர்ந்து அதற்குப் பொருத்தமான நுகர்வுக் கலாச்சாரத்தை மேற்கத்திய எஜமானர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது.

இதைத் தெளிவாக புரிந்து கொள்ள மதுவிலக்கு கடுமையாக பின்பற்றப்படும் மாநிலமாகச் சொல்லப்படும் குஜராத்தை எடுத்துக் கொள்வோம். வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார கனவான்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது (30 நாட்கள் செல்லக்கூடிய பர்மிட்) ஒரு விசயம். மற்றொரு புறம் குஜராத்தில் ஓடும் கள்ளச்சாராய ஆற்றின் ஆழமும் அகலமும் பிரம்மாண்டமானது. கடந்த மார்ச் 24-ம் தேதி வடக்கு குஜராத்தில் கள்ளச்சாராய பழக்கத்திற்கு எதிராக போராடி வரும் பாபுபாய் ஷங்கர்தாஸ் பட்டேல், குஜராத்தில் மதுவிலக்கு சரியாக பின்பற்றப்படுவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக, சட்டமன்றத்தின் பார்வையாளர் மாடத்திலிருந்து ஒரு பாக்கெட் சாராயத்தையும், அரசுக்கு எதிரான துண்டறிக்கைகளையும் வீசியிருக்கிறார்.

பெரும்பான்மை இந்திய மாநிலங்கள் கொள்கை ரீதியிலேயே மதுவிலக்கிற்கு எதிரானவை என்பது ஒருபுறமிருக்க, மதுவிலக்கு குஜராத்தின் லட்சணத்தை பாபுபாய் ஷங்கர்தாஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, மொத்த இந்தியர்களில் 30 சதவீதம் பேர் குடிப்பவர்களாகவும், அதில் 50 சதவீதமானோர் அபாயகரமான அளவுகளில் குடிக்கிறார்கள் என்றும், சுமார் 4 – 13 சதவீதம் பேர் தினசரி குடிக்கும் குடிகாரர்களாகவும் இருக்கிறார்கள் என்று கடந்தாண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தனிநபரின் வருடாந்திர மது நுகர்வு, 2003-2005 காலகட்டத்தில்  1.6 லிட்டராக இருந்தது, 2010-2012 காலகட்டத்தில் 2.2 லிட்டராக உயர்ந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

AlcoholAbuse 5ஆக, குடிப்போரின் சதவீதம் மட்டும் அதிகரிக்கவில்லை. குடியின் அளவும் மூன்றில் ஒரு பங்கு அதிகரித்திருக்கிறது.

கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல்வேறு வகையான புற்று நோய்கள், குடியால் விளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சாலை விபத்துகள் ஒரு பக்கம் என்றால், இப்பழக்கம் பரந்து பட்ட மக்களை சிந்தனை ரீதியில் மொன்னையானவர்களாக்குகிறது. அரசநீதியில், மக்களை மதுப்பழக்கத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதற்கு உள்ள முக்கியத்துவத்தை சாணக்கியன் தனது அர்த்த சாஸ்திரத்திலேயே தெளிவாக விளக்கியுள்ளான். எந்தச் சரக்கை யார் காய்ச்சுவது, யார் விற்பது, எங்கே விற்பது யாருக்கு எந்த அளவு விற்க வேண்டும், விற்பவனுக்கு என்ன லாபம், அரசுக்கு என்ன வருமானம் என்று தெளிவாக ரூட்டு போட்டுக் கொடுத்துள்ளான் சாணக்கியன்.

தொண்ணூறுகளுக்குப் பின் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள் இருபது வருடங்கள் கழித்து மக்களை அச்சுறுத்தும் பூதமாக மாறிவிட்டன. பொருளாதாரம் சீரழிவுக்குள்ளாக்கப்பட்டதற்கு இணையாக பண்பாட்டுத் தளத்திலும் மக்கள் சீரழிவுப் பாதைக்குள் திட்டமிட்ட ரீதியில் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு மக்களைச் சீரழிக்கும் கருவிகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாக குடிப்பழக்கம் விளங்குகிறது.

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் சாராயக் கடையை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடினால் அதை ஒரு தீவிரவாத நடவடிக்கையைப் போல் பாவித்து போலீசு ஆயுதங்களோடு வந்திறங்குகிறது. அழிவிடைதாங்கி கிராமத்தில் டாஸ்மாக் சாராயக் கடையை மக்கள் உடைத்த போது அவர்கள் மேல் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பாய்கிறது. மக்கள் சேதப்படுத்திய பொதுச் சொத்தாக அரசு நீதிமன்றத்திடம் காட்டியது எதைத் தெரியுமா? உடைக்கப்பட்ட சாராய பாட்டில்களை!

AlcoholAbuse 12012-13 நிதியாண்டில் மட்டும் தமிழக அரசுக்கு சாராயம் விற்ற வகையில் வந்த வருமானம் ரூ 21,680 கோடிகள். இது மாநில அரசின் மொத்த வருவாயில் 20 சதவீதம். ஆனால், மதுப்பழக்கத்தினால் வரும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு கோடி ரூபாய்! குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று டாஸ்மாக் பெயர்ப் பலகைகளிலும், சினிமா காட்சிகளிலும் வரும் வரிகள்தான் அந்த விழிப்புணர்வின் இலட்சணம்.

2013-ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ம.ம.க (த.மு.மு.க) உறுப்பினர் ஜவாஹிருல்லா, “இந்த ஒரு கோடியை வைத்து என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறீர்கள்” என்று கேட்டதற்கு, ”பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தவும் அதற்குப் பரிசுகள் வழங்கவும் இந்த ஒரு கோடி தாராளமாக போதுமானது” என்று அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார்.

ஆக, சாராயம் வித்த காசில் தான் அரசாங்கமே நடக்கிறது. ஒரு காலத்தில் சாராயம் விற்பவனைப் பார்த்தால் ஊரே காறித் துப்பும், பெண்கள் மண்ணை வாரித் தூற்றி அவன் பரம்பரையையே சபிப்பார்கள் – இன்றைக்கு அரசே சாராயம் விற்கிறது!

கல்வி பெறும் உரிமை தனிநபர் உரிமை – சாராயம் பொது உரிமை; சுகாதாரம் தனிநபரின் தலையெழுத்து – சாராயம் விற்பது அரசின் முதல் கடமை; முன்னாள் சாராய வியாபாரி இந்நாள் கல்வி வியாபாரி; கல்வியளிக்கும் கடமையிலிருந்து கைகழுவி கொள்ளும் அரசு மூலைக்கு மூலை டாஸ்மாக்கைத் திறந்து சாராயம் விற்கிறது. சாராயம் என்பது அரசே தலையிட்டு வினியோகிக்கும் பொதுச் சொத்தாகவும், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட அரசின் கடமைகள் மக்களின் தனிப்பட்ட விசயங்களாகவும் மாறியுள்ள ஒரு வினோதமான காலப்பகுதிக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

AlcoholAbuse 2அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து செய்யப்படும் ஆய்வுகளையும் அதையொட்டி வரும் புள்ளி விவரங்களையும் வெறும் உடல் நலன் என்ற கோணத்திலிருந்தோ தனிநபரின் பழக்க வழக்கம் என்றோ அரசியலற்ற முறையில் பார்ப்பதை விட, இது ஒரு மொத்த சமூகத்தின் சொரணை உணர்ச்சியை அழித்து ஒட்டுமொத்த மக்களையும் மொன்னைகளாகவும் மழுங்கட்டைகளாகவும் மாற்றுகிறது என்பதற்கு கவலைப்பட வேண்டும். சாதாரண மக்களைப் பொறுத்த வரை குறிப்பாக பெண்களுக்கு குடும்பத்தின் பொருளாதாரம், நிம்மதி, மகிழ்ச்சியைக் குலைக்கும் ஆட்கொல்லி நோயாக குடி மாறிவிட்டது.

இறுதியில் தங்களைத் தாக்கும் பொருளாதார பிரச்சினைகளையும் அதற்குக் காரணமான அரசையும் எதிர்க்க வக்கற்றவர்களாகவும் குடி நமது மக்களை மாற்றுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையில் குடிப்பழக்கத்தையும் அதை ஊக்குவிக்கும் அரசையும் எதிர்க்க வேண்டும். இல்லையேல் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடும் சக்தியையும் நாம் பறிகொடுத்து விடுவோம்.

செய்திக்கான மூல சுட்டிகள்:

மேலே உள்ள இணைப்புகளைத் தவிர, 01-05-2015 தேதியிட்ட FRONTLINE பத்திரிகையில் காத்திரமான சில கட்டுரைகள் வந்துள்ளன. அவசியம் படிக்க வேண்டிய அக்கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே….