Sunday, July 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மோடி அரசு உதவியுடன் ஆட்டம் போடும் சீன முதலாளி - சிறப்புச் செய்தி

மோடி அரசு உதவியுடன் ஆட்டம் போடும் சீன முதலாளி – சிறப்புச் செய்தி

-

சென்னை மறைமலைநகரை அடுத்த மகேந்திரா குளோபல் சிட்டி (மகேந்திரா உலக நகரம்)-ல் இன்ஃபோசிஸ், கேப் ஜெமினி, பி.எம்.டபிள்யூ போன்ற ஐ.டி நிறுவனங்களும், டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் முதலான தொழிற்சாலைகளும் உள்ளன.

மகேந்திரா சிட்டி
மகேந்திரா சிட்டி – ‘நவீன’ தொழில்நகரம்

மகேந்திரா சிட்டியின் 8-வது நிழற்சாலையில் அமைந்துள்ளது கிரீடோ மோல்ட்ஸ் என்ற சீன நிறுவனம். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 250 தொழிலாளர்கள் நிறுவனத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சங்கமாக திரண்டிருக்கின்றனர்.

மகேந்திரா சிட்டி
மகேந்திரா சிட்டி உண்மையில் தொழிலாளர்களுக்கு செங்கல் சூளை அடிமை வேலை போன்ற கொத்தடிமை கூடாரம்தான்.

அதைத் தொடர்ந்து, கடந்த மே 28 அன்று சரத்குமார் என்ற தொழிலாளி சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தொழிற்சாலையை துரத்தப்பட்ட போது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழிலாளர்கள் பணியை நிறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிற்சங்கம்
கிரீடோ மோல்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சங்கமாக திரண்டிருக்கின்றனர்.

கிரீடோ மோல்ட்ஸ் சீனாவின் குவாங்தோங் மாகாணத்தின் ஜியயாங் நகரின் ஜியதோங் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் சீன நிறுவனம். இந்நிறுவனம், வாகனங்களின் ரப்பர் டயர்கள் செய்வதற்கான உலோக வார்ப்பு அச்சுகளை தயாரித்து அளிக்கிறது. இந்த வார்ப்பு அச்சுகள் ரூ 45 லட்சம் முதல் ரூ 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலானவை.

கிரீடோ மோல்ட்ஸ்
சீன முதலாளிகள் சென்னையின் மகேந்திரா சிட்டியில் தமது கொடூர சுரண்டல் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

2011-ம் ஆண்டு சென்னையில் 7 தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தது கிரீடோ மோல்ட்ஸ் நிறுவனம். சீனாவுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தொழிலாளிகள் 6 மாத பயிற்சி முடித்து திரும்பும் முன், மஹிந்திரா சிட்டியில் ஒரு தொழில் கூடத்தை கட்டி முடித்து 2012 ஜூன் மாதம் முதல் உற்பத்தியை ஆரம்பித்தனர்.

இப்போது மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் மாதத்துக்கு 25 மோல்டுகள் தயாரிக்கப்படுகின்றன அனுப்பபடுகின்றன. ஆரம்பத்தில் ஒரு மோல்டு செய்து முடிப்பதற்கான நேரம் 26 மணி நேரமாக இருந்தது இப்போது 13 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, நிமிடத்துக்கு 20 சுற்றுகள் வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு எந்திரத்தை நிமிடத்துக்கு 40 சுற்றுகள் என்று அதிகரித்து இயக்க வைக்கின்றனர். அதாவது, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

சீனாவில் பாக்ஸ்கான் முதலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டும் சீன முதலாளிகள் சென்னையின் மகேந்திரா சிட்டியில் தமது கொடூர சுரண்டல் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

சீனப்பூச்சாண்டியை காட்டியே மோடி அரசு தனது செட்டப் தேசபக்தியை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறது. குஜராத்தின் பிள்ளையார் ஊர்லவத்திற்கு பயன்படும் பிள்ளையாரோ, இல்லை தேர்தல் காலத்தில் அச்சுறுத்தும் மோடி முகமூடிகளோ அனைத்தும் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகின்றன. சமீபத்தில் சீனா சென்ற மோடியும் அங்கிருக்கும் முதலாளிகளை குஷிப்படுத்தி பேசியிருக்கிறார்.

ஆக இங்கு இவர்கள் பேசும் சீன எதிர்ப்பு என்பது சீன முதலாளிகள் மீதான எதிர்ப்பல்ல. மாவோவின் சீனாவைத்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் – முதலாளிகளின் இன்றைய சீனாவை அல்ல. இந்தியாவில் வந்திறங்கும் சீன முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை திருத்திக் கொண்டிருக்கிறார் திருவாளர் மோடி.

இனி கிரீடோ மோல்ட்சில் வதைபடும் தொழிலாளிகளின் வாழ்க்கையை பார்க்கலாம்.

முதல் ஷிப்டுக்கு வரும் தொழிலாளர் 6 மணிக்கு தொழிற்சாலையில் வேலை ஆரம்பித்து விட வேண்டும்.

முன்பெல்லாம், காலையில் 6.30-க்கு காலை உணவு என்ற நடைமுறை இருந்திருக்கிறது. அது வேலை நேரத்தை ‘சாப்பிடு’வதாகக் கூறிய நிர்வாகம், ‘வேலையை ஆரம்பிக்கும் முன்னரே சாப்பிட்டு விட வேண்டும்’ என்று, காலை 5.45-க்கு மணிக்கே காலை உணவை திணித்துக் கொண்டு வேலை செய்ய போகும்படி கட்டாயப்படுத்துகிறது நிர்வாகம். இதற்காக, தொழிலாளர் வீட்டில் காலையில் 4.30 மணிக்கு எழுந்து 5.30-க்கு பேருந்தில் ஏறி விட வேண்டும்.

6 மணிக்கு வேலை ஆரம்பித்தால், இடைவெளியே இல்லாமல் மதியம் 12 மணி வரை வேலை செய்ய வேண்டும். இடையே 11 மணிக்கு டீ பணியிடத்துக்கே கொண்டு வரப்படும். ஆனால், அதற்காக வேலையை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கப் போக முடியாது. வேலை செய்து கொண்டே டீயை குடிக்க வேண்டும் – சார்லி சாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” போல.

நடுவில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு வந்தால் அருகில் இருக்கும் தொழிலாளியிடம் வேலையை ஒப்படைத்து விட்டு வேகமாக போய் வர வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உற்பத்தி நின்று விடக் கூடாது, மதியம் 12 மணிக்கு உற்பத்தியை நிறுத்தி விட்டு சாப்பிட ஓட வேண்டும். அரை மணி நேரத்துக்குள் சாப்பிட்டு கை கழுவி, இளைப்பாறி அடுத்த சுற்று உழைப்புக்கு தயாராகி விட வேண்டும்.

எந்த ஷிப்டில் வந்தாலும் கிளம்பும் கடைசி அரை மணி நேரத்தில் அடுத்த மூன்று மணி நேரம் கூடுதல் வேலை செய்ய வேண்டும் என்பார்கள். மறுத்தால், “மார்க் போட மாட்டேன், இன்க்ரிமெண்ட் கட்” என்று மிரட்டுவார்கள். போதாத குறைக்கு மகேந்திரா சிட்டியின் மிகவும் உட்புறமாக இருப்பதால் பேருந்தும் கிளம்பாமல் நடந்துதான் போக வேண்டும். மேலும், சம்பளம் வாழ்க்கை நடத்தவே போதாது என்பதால் மிகை நேர உழைப்புக்கு சம்மதிக்கிறார்கள் தொழிலாளிகள்.

வேலையை முடித்து புறப்படும் முன்பு 6S-என்ற உத்தியின்படி தொழிலாளர்களே சுத்தம் செய்ய வேண்டும். பாத்ரூம் தவிர எல்லா இடத்தையும் கழுவி விட்டுத்தான் அனைவரும் வெளியே வர வேண்டும். அதன் பிறகுதான் பேருந்து கிளம்பும்.

எவ்வளவு சோர்வாக இருந்தாலும் விடுமுறை எடுக்க முடியாது. முன்கூட்டியே சொல்லி அனுமதி வாங்கி விடுப்பு எடுக்க வேண்டும். மாறாக, ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும்.

இந்த ஆள்தின்னி பகாசுர உற்பத்தி சாலை 7 நாட்களும், வருடத்துக்கு 365 நாட்களும் உழைப்பைக் கோருகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கூட 11 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டுதான் விடுகிறது. மாதமொன்றுக்கு 160 முதல் 200 மணி நேரம் வரை கூடுதல் நேரம் வேலை செய்ய அனைவரும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ராஜேஷ் என்ற தொழிலாளர் அவரது ஒன்றரை வருட அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாள், விசேஷ நாட்கள், தனிப்பட்ட விடுப்புகள் உட்பட மொத்தமே 25 நாட்கள்தான் பணியிலிருந்து விடுப்பு எடுத்திருக்கிறார்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி ராஜேஷ்
ஒன்றரை வருட பணி வாழ்க்கையில் மொத்தமே 25 நாட்கள்தான் பணியிலிருந்து விடுப்பு (தொழிலாளி ராஜேஷ்)

இங்கு வேலை செய்யும் 260 தொழிலாளிகளில் பெரும்பாலானோர் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள். சிலர் ஐ.டி.ஐ படித்தவர்கள். யாருக்கும் முறையான சம்பளம் கொடுப்பதில்லை. எச்.ஆர் மேனஜருக்கு தெரிந்த யாராவது வேலைக்கு வந்தால் சம்பளம் மாதம் 7500-8500 வரையும், தெரியாதவர்கள் வந்தால் 5500-6500 வரையும் தருவார்கள்.

படிப்பு சான்றிதழ்களின் ஒரிஜினலை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மூன்று மாதம் வரைதான் தேவை என்றவர்கள், பின்னர் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கொடுத்து விட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும்படி கூறி விட்டனர். சான்றிதழ் பெற்றிருக்கிறோம் என்பதற்கான சான்றொப்பமாவது தாருங்கள் என கொடுத்தவர்களை கேட்கச் சொன்ன போது மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 11-12 மணி நேர வேலை, மாதத்துக்கு 30 நாட்கள் வரை வேலை என்று செய்தால் ஒரு தொழிலாளி சுமார் ரூ 9,000 வரை வீட்டுக்குக் கொண்டு போகலாம். சட்ட விரோதமாக சேம நல நிதியில் தொழிலாளியின் பங்கை மட்டுமின்றி நிர்வாகத்தின் பங்கையும் தொழிலாளியின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்கின்றனர்.

ஒரு தொழிலாளியால் உற்பத்தியில் குறை நேர்ந்தது என்று தரக் கட்டுப்பாட்டு துறை அறிக்கை பதிவு செய்து, ஒரு பதிவுக்கு அத்தொழிலாளியின் ஊதியத்திலிருந்து 300 ரூபாய் பிடிக்கிறார்கள்.

“புடிக்கிறது மட்டுமில்லாம, தப்பு பண்ணினவங்கள, யெல்லோ கலர்ல ரவுண்டா பாக்ஸ் வெச்சிருப்பாங்க, குத்தவாளி போல அங்க நிக்க வைச்சி, ஏன் தப்பு பண்ணினேன்னு கேள்வி கேப்பாங்க.”

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி பிரபாகரன்
“தப்பு பண்ணினவங்கள, யெல்லோ கலர்ல ரவுண்டா பாக்ஸ் வெச்சிருப்பாங்க, குத்தவாளி போல அங்க நிக்க வைச்சி, ஏன் தப்பு பண்ணினேன்னு கேள்வி கேப்பாங்க.” (தொழிலாளி பிரபாகரன்)

அதாவது, தொழிலாளியின் தவறு என்று நிர்வாகம் சுமத்தும் பழிக்கு ஒன்றுக்கு 3 முறை தண்டனை. மேலும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மூன்று நாள் சம்பளத்தை வெட்டி விடுகின்றனர்.

நிறுவனம் உழைப்பையும், ஊதியத்தையும் உறிஞ்சிய பிறகு எஞ்சிய பணத்தில் அறை வாடகையும், சாப்பாடும் கொடுக்கவே சரியாகப் போகிறது. “திருநெல்வேலியில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இந்த ஒன்றரை வருடத்தில் ரூ 20,000 மட்டும்தான் அனுப்பியிருக்கிறேன்” என்கிறார் ராஜேஷ்.

ஊதியம் இப்படியிருக்க, தொழிலாளிகளை புழு பூச்சி போல நடத்துகின்றனர்.

கிரீடோ மோல்ட்ஸ்
“அதான் அப்பப்போ புழு பூச்சினு நான் வெஜ் வருதுல்லாப்பா”

தொழிலாளர் ஒருவர் சாப்பாட்டில் புழு கிடப்பதாக புகார் சொன்ன போது “அப்படித்தான் இருக்கும். வேணும்ணா நீ வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வா” என்றும் சாப்பாட்டில் குக்கர் மூடி விழுந்து கிடந்தது பற்றி புகார் தெரிவித்தால், “இரும்பு சத்துதானேப்பா” என்றும், “ஏதாவது ஒரு நாள் முட்டை போடுங்கள் சார்” என்று கேட்டபோது, “அதான் அப்பப்போ புழு பூச்சினு நான் வெஜ் வருதுல்லாப்பா” என்று நக்கலாக பதில் சொல்லியிருக்கின்றனர் மனித வளத்துறை அதிகாரிகள்.

 • சாண்ட் பிளாஸ்டிங் என்று ஒரு எந்திரம் உள்ளது. கண்ணாடித் துகள்கள் பதிக்கப்பட்ட உருளையில் தேய்த்து மோல்டை பாலீசாக்கா இதனை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடித் துகள் பறந்து கொண்டே இருக்கும்.அதை சுவாசிப்பதால் மூச்சு விட முடியாமல் இரவெல்லாம் திணறுவேன் என்கிறார் பிரபாகரன் என்ற தொழிலாளி. அவரது நுரையீரல் முழுவதும் உலோக துகள் படிந்து விட்டிருக்கிறது என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் கூறியிருக்கிறார். இவர் வேலை செய்யும் போதும், இரவிலும் மூச்சு இழுக்கும், சரியாக தூங்க முடியாது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்குச் சேரும் போது இந்தப் பிரச்சனை அவருக்கு இருந்ததில்லை.
 • வெல்டிங் துறையில் சா வெல்டிங் மிசின் என்று ஒன்று உள்ளது. அதில் வரும் புகையினால் கைகளில் அம்மை போன்ற புண் ஏற்படுகிறது. புகையை சுவாசித்தால் ஒரு பத்து நிமிடத்திற்கு தலைசுற்றல் ஏற்படும். பொதுவாக வெல்டிங் என்பது திறந்த வெளியில்தான் நடக்க வேண்டும். ஆனால் இங்கு மாத்திரம் மூடப்பட்ட குடோன் பகுதியில் நடப்பதால் இந்த புகை வெளியேறாமல் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
 • ரிப்பேர் வேலைக்கு வரும் வார்ப்புரு அச்சு டயர் துகள்கள் ஒட்டிக் கொண்டுதான் வரும். “அதை கிளீன் பண்ணச் சொன்னால் மாட்டங்க. அப்படியே வெல்ட் அடிக்கச் சொல்லுவாங்க. அப்படியே வெல்ட் அடிச்சாக்க அந்த டயர்ல இருக்குற ஸ்பார்க் பட்டு புகை வரும்.அவங்க செலவ சேவ் பண்றாங்களாம். ஆனா எங்களோட ஹெல்த் சேவ் பண்றதுக்கு அவங்க விட மாட்டாங்க. கேஸ் ஃபுள்ளா உள்ளதான் போகும், உள்ள போயிடுச்சின்னா, எப்படின்னா ஒரு 1000 சிகரெட்டு பிடிச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி இருக்கும். மாஸ்க் கேட்டா கொடுக்க மாட்டாங்க.” என்கிறார்கள் தொழிலாளர்கள்
 • “கையில கூலன்ட் ஆயில் பட்டு இப்படி ஆகியிருக்கும. இன்னும் நிறைய பேரு மார் எல்லாம் பபுள்ஸ் மாதிரி வந்தது எல்லாம் இருக்கு.”
 • [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

 • “யூனிஃபார்ம் மேல பர் (சூடான இரும்புத் துகள்) சூடா விழும். நாங்க போய் இந்த யூனிஃபார்ம் மாத்தி கொடுங்க, நீங்க போடுற மாதிரி சட்டை கொடுங்கன்னு கேட்டா, அதெல்லாம் போடறதுக்கு ஒரு தகுதி வேணும்பா என்கிறார்கள். ஹீட்டா வரக் கூடாதுன்னு ஃபீட் ரேட் கொஞ்சம் கம்மியா வச்சா, என்ன கம்மியா வக்கிற அப்படின்னு சொல்லி சைனீசே வந்து கூட்டி விட்டுட்டு போவாரு. மெசின்ல ஆர்.பி.எம் 40தான் வைக்கணும் 200 வைக்க சொன்னா . 40-க்கு பதிலா 80 வைக்கச் சொல்லுவாங்க.”
 • [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே சுமார் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இவ்வளவு தீவிரமான உழைப்புச் சுரண்டலை தாங்கும் உடல் வலு உள்ளது. அதைத் தாங்க முடியாமல் சிறிது சிறிதாக அவர்களது உடல்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன.

4 மாதங்களுக்கு தேனியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற தொழிலாளிக்கு முன்பு சுமார் 250 கிலோ எடையுடைய ஒரு உலோகப் பகுதி காலில் விழுந்து பெருவிரல் துண்டாகி தொங்க ஆரம்பித்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கூட கிடையாது. தொழிற்சாலையின் முதலுதவிப் பெட்டியில் பஞ்சும், டிஞ்சரும் மட்டும் இருந்தன.

“வாகனம் ஏற்பாடு பண்ண முடியுமா” என்று கேட்டதற்கு “ஜெனரல் ஷிப்டுக்கு வருபவர்களை ஏற்றப் போன பேருந்து வரட்டும் அதன் பிறகு போகலாம்” என்றிருக்கிறார்கள். பின்னர், அவருடன் பணிபுரியும் தொழிலாளி ஒருவரை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ‘பெரிய மனதுடன்’அனுமதித்திருக்கிறார்கள்.

அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்து விட்டு, “நீங்கள் பெரிய மருத்துவமனைக்குப் போக வேண்டும்” என்று கூறி விட்டனர். அவர் மறுபடியும் தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து நடந்த மாதத்தில் அவர் வேலை செய்த 15 நாட்களுக்கு ஊதியம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த மாதம் வெறும் 5,000 மட்டும் ஊதியம், 3-வது மாதம் ரூ 2,000 மட்டும் கொடுத்திருக்கின்றனர்.

தாக்குப் பிடிக்க முடியாமல் முழுவதும் குணமாகாமலேயே வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார் பிரபாகரன். இப்போதும் விரல் துண்டுபட்ட காலில் நிற்க முடியாமல் தடுமாறுகிறார் பிரபாகரன்.

“வேலைக்கு வந்து கால் வலிச்சா லீவு கேட்பேன். இதுக்குமேல கம்பெனி செய்ய முடியாது. கம்பெனி எவ்வளவோ செய்திருச்சி. லீவு ஒனக்கு அதிகமா போயிருச்சி, போச்சுன்னா கம்பெனிய விட்டு தூக்குறதுக்கு வாய்ப்பிருக்கு” அப்படின்னு சொல்றாங்க.

கை துண்டான சரத்குமார் என்ற தொழிலாளி இரவில் வண்டி இல்லாமல் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு பைக்கில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

“ஆள் துடிச்சிட்டு இருந்தாலும், மெசினுக்கு சேதாரம், டேமேஜ் ஆயிருச்சான்னு பார்ப்பான். ஆள் அங்க துடிச்சிட்டிருப்பான், இவனுங்க மெசின சுத்திச் சுத்தி வருவானுங்க” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

கிரீடோ மோல்ட்ஸ் பு.ஜ.தொ.மு தோழர் சிவா
“மேக் இன் இந்தியா திட்டத்தின்படி வெளிநாட்டு கம்பெனி எல்லாம் வந்தா வளர்ச்சி என்கிறார் மோடி. ஆனால், பன்னாட்டு கம்பெனி வருவது நம்மை முன்னேற்றுவதற்கு இல்லை என்பதை கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளர்கள் நேரடி அனுபவத்தில் உணர்கிறார்கள்.” – பு.ஜ.தொ.மு தோழர் சிவா (வலது ஓரத்தில் இருப்பவர்)

மகேந்திரா சிட்டி என்றால் ஒரு தொழில்நகரம், சொர்க்க பூமி என சித்தரிப்பு இருக்கிறது. ஆனால், உண்மையில் தொழிலாளர்களுக்கு செங்கல் சூளை அடிமை வேலை போன்ற வேலைதான். கொத்தடிமை கூடாரம் இது. இருங்காட்டுக் கோட்டை ஹூண்டாய் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் செஸ் போன்ற இடங்களில் இருப்பது போலத்தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து உற்பத்தி செய்தால் வளர்ச்சி என்கிறார் மோடி. ஆனால், பன்னாட்டு கம்பெனி வருவது நம்மை முன்னேற்றுவதற்கு இல்லை என்பதை கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளர்கள் நேரடி அனுபவத்தில் உணர்கிறார்கள்.

இந்த சீன நிறுவனம் இந்திய நாட்டின் சட்டங்களை குப்பைக் காகிதம் போல சுருட்டி காது குடைந்து கொண்டிருக்கிறது. மேலும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் இப்படித்தான் இங்கே செயல்படுகின்றன. இவர்களுக்கு அடியாள் வேலை செய்வதையே மோடி அரசு இலட்சியமாக கொண்டு செயல்படுகிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசும் இப்படித்தான் என்றாலும் காங் பெருச்சாளிகள், பாஜகவைப்போல தேசபக்த சீன் போட முடியவில்லை.

சீனாவிலிருந்து வந்த 22 பேர் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அவர்களில், நான்கு பேருக்குதான் வேலை செய்வதற்கான விசா உள்ளது. மற்றவர்கள் டூரிஸ்ட் விசாவில் வந்துதான் வேலை செய்கிறார்கள். “ஒர்க் பெர்மிட் கிடையாது. இங்கு வந்து மிசின் ஓட்டுகிறார்கள். இதை நாம் வெளிநாட்டில் செய்ய முடியுமா?” என்கின்றனர் தொழிலாளர்கள். (அதற்கான விசா சான்று, வேலை பார்ப்பதற்கான வீடியோ சான்றுகளை காண்பிக்கின்றனர்)

கிரீடோ மோல்ட்ஸ்
“ஒர்க் பெர்மிட் கிடையாது. இங்கு வந்து மிசின் ஓட்டுகிறார்கள். இதை நாம் வெளிநாட்டில் செய்ய முடியுமா?”

பணி நியமன உத்தரவு 6 மாத பழகு காலம், 6 மாதம் நீட்டிப்பு, அதன் பிறகு விருப்பப்படி நீட்டிப்பு. இந்திய தொழிலாளர் சட்டம் இவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

இப்படி தொழிலாளிகளை ஒடுக்குவதிலும், பெயரளவு சட்ட உரிமைகளை, விதிகளை மீறினாலும் நிறுவனத்தை தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லை.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கடந்த மூன்றாண்டுகளாக பணி நிரந்தரம் கோரி வருகின்றனர் தொழிலாளர்கள். ஆரம்பத்தில் எடுத்த ஏழு பேரில் மூன்று பேரை அதிக சித்திரவதை, அழுத்தம் கொடுத்து, வேலையை விட்டு விலகச் செய்து விட்டனர். மற்ற மூன்று பேரும் நிர்வாகத்திற்கு ஆமாம் சாமி போடுவதால் உள்ளே பணியில் இருக்கிறார்கள். எதிர்த்துக் கேட்டதால் மனோஜ்குமார் என்ற தொழிலாளி இப்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, பிரச்சனை நீறு பூத்த நெருப்பு போல பூத்துக் கொண்டிருந்த சூழலில் சங்கமாக சேர வேண்டும் என்ற உணர்வுக்கு வந்து பு.ஜ.தொ.முவை தொடர்பு கொண்டிருக்கிறார் மனோஜ். தொழிலாளர்கள் பு.ஜ.தொ.முவில் இணைய ஆரம்பித்திருக்கின்றனர். சங்கத்தின் இணைச்செயலாளர் ராஜேசிடம் “உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. நரி வேலை எல்லாம் பார்க்காதே. இரு இன்னும் இரண்டு நாளில் ரிக்கார்டு ரெடி பண்ணி உன்னை வெளியே அனுப்பி விடுகிறோம்” என்று மிரட்டியிருக்கின்றனர். அடுத்து மனோஜ் குமாரையும் மிரட்டியிருக்கிறது நிர்வாகம்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி மனோஜ்குமார்
“உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. நரி வேலை எல்லாம் பார்க்காதே. இரு இன்னும் இரண்டு நாளில் ரிக்கார்டு ரெடி பண்ணி உன்னை வெளியே அனுப்பி விடுகிறோம்” என்று மிரட்டல். (தொழிலாளி மனோஜ்குமார் – சீருடை அணியாதவர்)

ராஜசேகர் ஒரு டீம் லீடர். ராஜசேகரை கூப்பிட்டு, “சங்கத்தில் சேராதே உன்னை உதவி மேனஜராக நியமிக்கிறேன்” என்று விலை பேசியிருக்கிறார்கள். அவர் தன்மானத்துடன் மறுத்து விட்டார்.

“சங்கத்தில் எப்படி சேரலாம்” என்று அவர்கள் கேட்க, “ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் அமைக்க முடியுமே” என்று இவர் சொல்ல, “சரி இவன் சட்டம் பேச ஆரம்பித்து விட்டான் இனி நமது ஜம்பம் செல்லாது” என்று நிர்வாகம் கப்சிப் ஆகி விட்டது. இதுபோல பலரையும் சாம பேத தண்ட வழிமுறையில் மிரட்டி பணிய வைக்க பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர் ஒற்றுமை இந்த முயற்சிகளை தூள்தூளாக்கி விட்டது.

இதனால் கடுப்பாக இருந்திருக்கிறது நிர்வாகம்.

இந்நிலையில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மனோஜ்குமார், அவரது அனுமதியின்றி சீனத் தொழிலாளி ஒருவர் செய்யும் வெல்டிங் வேலை குறித்து விளக்கம் கேட்கிறார். உடன சீனாவைச் சேர்ந்தஇன்னொரு நிர்வாக பொறுப்பாளர் அதனால உனக்கென்ன என்று கத்தியபடியே மனோஜ்குமாரை அடித்திருக்கிறார்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி ராஜசேகர்
“முதலில் எனக்கு ஒழுங்காக சம்பளம் தாருங்கள்” – தொழிலாளி ராஜசேகர்

இதனையும், இதற்கு முன்னர் நான்கு தொழிலாளிகள் இப்படி நிர்வாகிகளால் அடிபட்டிருப்பதையும் புகாராக எடுத்துக் கொண்டு போனதற்கு ராய் என்ற நிர்வாகி “இதெல்லாம் சாதாரணமப்பா, சீனாவிலும் அப்படித்தான் அடிப்பார்கள்” என்று வக்காலத்து வாங்கியிருக்கிறார். அடித்தவரை அவர்களது நாட்டுக்கு அனுப்பி விட்டு மனோஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து விட்டனர்.

உள்விசாரணை என்ற பெயரில ஒரு நாடகத்தை ரெண்டே நாளில் நடத்தி, குமாரசாமியை காட்டிலும் வேகமாக, அநியாயமாக ஒரு தீர்ப்பு கொடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தது,  நிர்வாகம்.

கிரீடோ மோல்ட்ஸ்
“குமாரசாமியை காட்டிலும் வேகமாக, அநியாயமாக ஒரு தீர்ப்பு”

அதைத் தொடர்ந்து சரத்குமார் என்ற தொழிலாளி அம்மை போட்டதன் காரணமாக வேலைக்கு வரவில்லை. அதை காரணமாக காட்டி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்கிறது.

இங்கு சங்கமாக உருவாகிறார்கள் என்பதை முன்வைத்து முன்னணியாளர்களை ஒவ்வொருவராக கட்டம் கட்டி தூக்க ஆரம்பித்திருக்கிறது நிர்வாகம் என்பதை புரிந்து கொண்டார்கள் தொழிலாளிகள். ஜூன் 2ம் தேதி  சரத்குமாரை மிரட்டி ஐ.டி கார்டு எல்லாம் பிடுங்கி வைத்து விட்டு வெளியில விரட்டியதை  நேரில் பார்க்கும் தொழிலாளிகள் “இதை அனுமதிக்க முடியாது. கண் முன்னாடி மனோஜ்குமார் போயிட்டாரு இவரும் போயிட்டா என்ன பண்றது” என்று உணர்வு பெற்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்.

“அது பொய்யான குற்றச்சாட்டு, அவரு அனுமதி பெற்று லீவு எடுத்திருக்கிறார். தப்பே செய்திருந்தாலும், சஸ்பெண்டதான் செய்ய முடியும். பணி நீக்கம் செய்ய முடியாது. உங்கள் நிர்வாக முறைப்படியே விளக்கம்தானே கேட்டிருக்க வேண்டும்.” என்று பு.ஜ.தொ.மு தொழிலாளி தரப்பில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் வாதாடியது.

சிக்கிக் கொண்டதை உணர்ந்த நிர்வாகம் “டெர்மினேசனை திரும்பப் பெறுகிறோம். 5 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறியது.

கிரீடோ மோல்ட்ஸ்
“ஒரு வெ்ளிநாட்டு கம்பெனி நம்ம கொத்தடிமையாக வைத்திருக்கிறான். அத எதுத்து நாங்க போராடுவோம். கடைசிச் சொட்டு ரத்தம் வரும்வரை நாங்கள் போராடுவோம்.”

அதன்படி தொழிலாளர் உதவியாளர் தர்மசீலன் ஒரு லெட்டர் தயாரிக்கிறார்.

 1. கடந்த 2-6-2015 அன்று இரவு 7 மணி வாக்கில் பு.ஜ.தொ.மு-வின் சார்பாக புகார் தரப்பட்டது. இயற்கை நீதிக்கு எதிரான முறையில் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் சரத்குமார் என்ற தொழிலாளி. இது தொடர்பாக தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதனால், உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
 2. பேச்சுவார்த்தையில் அந்தத் தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டதை நிர்வாகம் திரும்பப் பெறுகிறது. 5 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுத்து 6-வது நாள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் என்ற முடிவை தொழிலாளர் தரப்பும் நிர்வாகத் தரப்பும் ஏற்றுக் கொள்கிறது.
 3. திடுதிப் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது என்ற அறிவுரையை தொழிலாளர் தரப்பு ஏற்றுக் கொண்டது.
 4. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது எந்த விதமான பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
 5. வேலை நிறுத்தம் செய்யப்பட்ட கால கட்டத்தில் no work, no pay என்ற அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டப்படி 8 நாட்கள் சம்பளம் பிடிப்பேன் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
 6. தொழிலாளர் தரப்பும், நிர்வாகத் தரப்பும் தொழில் உறவு, தொழில் அமைதிக்கும் உத்தரவாதம் பரஸ்பரம் ஒத்துழைப்பு தர வேண்டும்

இந்த முடிவுகளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், “பு.ஜ.தொ.மு சங்கம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கையெழுத்து போட மறுத்து விட்டது” நிர்வாகம். அடுத்த நாளும் அதே நிலைப்பாட்டில் நின்றனர்.

“சங்கம் வேண்டாம். வொர்க்கர்ஸ் கமிட்டி வைச்சிக்கிங்க” என்றனர். “சரி, சங்கம் வேண்டாம் ஆனால் தொழிலாளர் குழுவை தொழிலாளர்களாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தொழிலாளர்கள் கூறினர்.

கிரீடோ மோல்ட்ஸ்
“சரி, சங்கம் வேண்டாம் ஆனால் தொழிலாளர் குழுவை தொழிலாளர்களாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்”

ஆனால், “பிரதிநிதிகளை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று வாதம் செய்தது நிர்வாகம்.

சங்கம் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா என்ன? தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையா கேட்டார்கள். அரசமைப்பு சட்டம் அங்கீகரித்த சங்கம் வைக்கும் உரிமையை கேட்டால் ஒரு அன்னிய நிறுவனம் அதை மறுக்கிறது, அதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது.

எனவே, தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.

இதை ஒட்டி 5-ம் தேதி வழங்க வேண்டிய சென்ற மாதத்துக்கான சம்பளத்தை போடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது நிர்வாகம். சம்பளத்தை வெட்டி விட்டால் போராட்டம் நடக்காமல் போய் விடும் என்ற இழிவாக நடந்து கொள்கிறது நிறுவனம்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 9-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவுள்ளது

சட்ட பூர்வமாகவும், வேறு வழியிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதாக உறுதியுடன் உள்ளனர்.

இந்த சீன நிறுவனம் இங்கே மட்டுமல்ல, சீனாவிலும் இப்படித்தான் தொழிலாளிகளை வதைக்கிறது. சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுனவங்கள் மற்றும் அவர்களுக்கு உற்பத்தி  செய்து கொடுக்கும் சீன நிறுவனங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து சீனாவிலேயே வருடந்தோறும் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சீனா மனித உரிமையை மீறுகிறது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் எவையும் இந்த தொழிலாளர் போராட்டத்தை தெரிவிப்பதில்லை. மாவோ காலம் வரையிலும் கம்யூனிச நாடாக இருந்த சீனாவில் இத்தகைய அநீதிகளை, ஒடுக்குமுறைகளை நினைத்து கூட பார்க்க முடியாது. இன்றைக்கு சீனாவை ஆளும் அதிகார வர்க்க முதலாளிகளின் ஆட்சியில் அங்கே ஒடுக்குமுறை தலை விரித்து ஆடுகிறது.

இந்தியாவில் சீனாவைப்பற்றி உண்மையில் மாவோவின் கம்யூனிச சீனாவைப் பற்றி வெறுப்புணர்வை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் யோக்கியதை சீன முதலாளிகளின் ஒடுக்குமுறைக்கு துணை போவதே! ஆனால் செஞ்சீனத்தில் மக்களுக்காக போராடிய அதே கம்யூனிசம் இன்று சென்னையிலும் இருக்கிறது. சீன முதலாளிகளை எதிர்த்து போராடுகிறது. நக்சல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடி முழக்கம் என வரவேற்ற மாவோ இருந்தால் பு.ஜ.தொ.முவை வாழ்த்தியிருப்பார்.

– வினவு செய்தியாளர்கள்

 1. //மாவோ காலம் வரையிலும் கம்யூனிச நாடாக இருந்த சீனாவில் இத்தகைய அநீதிகளை, ஒடுக்குமுறைகளை நினைத்து கூட பார்க்க முடியாது//

  “கம்யூனிச நாடாக”….. என்று இருக்கிறது. “சோசலிச நாடாக” என்று இருக்க வேன்டும்.

 2. NDLF should pay its attention to a thermal unit under construction at Karikkuppam,Cuddalore District.It is a joint venture between a Chinese company Chepco with L&T and Simplex.The name of the unit is IDPCL.Chepco has brought 250 workers from China (including Assistants and General workers)It is reported that there is vast difference between the wages paid to Chinese workers and Indian workers.Not only that,differences are there in workers”accommodation and in the treatment.No employment was given to those families who gave their land for this unit.Refer Nakkeeran dated 16-19,May,2015 for full details.

 3. ஜப்பானியத் தூய்மைத் திட்டத்தின் சரியான பெயர் 5S. அது 6S அல்ல.
  6 Sigma என்று வேறு ஒன்று இருக்கிறது. ஆனால் அது தூய்மைத் திட்டம் அல்ல.

  நன்றி!

  சினிமா விரும்பி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க