Tuesday, October 15, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்முக்கியமான கட்டுரை - மாணவரை அடிமையாக்கும் சதி !

முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !

-

mumbai-iit-in-solidarity-with-apsc-4
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தடையை எதிர்த்து மும்பை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம் – கோப்புப் படம்

லிங்க்தோ கமிட்டி பரிந்துரைமாணவர்களை அரசியலற்ற தக்கை மனிதர்களாக்கும் ஏகாதிபத்திய செயல்தந்திரத்தின் ஒரு பகுதி

.ஐ.டி நிர்வாகத்தால் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட போது தடையை நியாயப்படுத்தி ஆதித்யா ரெட்டி என்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆர். எஸ். எஸ்-ன் ஆர்கனைசரில் கட்டுரைகள் எழுதினார். அதில் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காண்பிக்கிறார். இதையே பத்ரி போன்ற இந்துத்துவ தாராளவாதிகளும் இன்னபிற ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகளும் எடுத்துரைக்கின்றனர். இத்தீர்ப்புக்கு தடைக்கும் நேரடியாக சம்பந்தமில்லை என்பது ஒருபுறம்.

மறுபுறம் இந்துத்துவ கும்பல் 2006-லிருந்து சட்டரீதியாக முற்போக்கு மாணவர் இயக்கங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்த இத்தீர்ப்பையும், லிங்க்தோ கமிட்டி பரித்துரைகளையுமே மேற்கோள் காண்பிக்கின்றனர். வலதுசாரிகள் இதைப் பிடித்து தொங்குவதற்கு காரணம் என்ன?

அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் சங்கம் என்றாலே ஒவ்வாமையோடு அணுகிய கல்வி நிறுவன நிர்வாகங்கள் சமீபகாலமாக மாணவர் சங்க தேர்தல்களை நடத்துவதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

apsc-solidority-protest-usmania-unversity
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடையை எதிர்த்து மோடி உருவ பொம்மையை எரிக்கும் ஐதராபாத் உஸ்மானியா பல்கலை மாணவர்கள் – கோப்புப்படம்

2006-ல் மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் உச்சநீதிமன்ற ஆணைப்படி கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மாணவர் சங்கத் தேர்தல்களை லிங்க்தோ கமிட்டி பரிந்துரைப் படி மட்டுமே நடத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியது. 2006-ம் ஆண்டிற்கு முன் மேற்குவங்க மற்றும் கேரள கல்வி நிலையங்களிலும் ஜே.என்.யு விலும் நடைமுறையிலிருந்து வந்த சுதந்திரமான, ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட மாணவர் சங்க தேர்தல்களுக்கு இப்பரிந்துரை சாவு மணியடித்தது.

அதே நேரம் அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவை தனியார்மயமாக்கப்பட்டு கொள்ளைக்கு திறந்து விடப்படுவதால் ஏற்படும் மாணவர் எழுச்சியை ஒழித்துக் கட்ட ஒரு எளிய வழியை ஆளும் வர்க்கம் கண்டுபிடித்தது. அதனால் தான் அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சங்கத் தேர்தலை லிங்க்தோ பரிந்துரைப்படி நடத்துகின்றனர். இந்த திடீர் ‘ஜனநாயகக்’ காதலின் பின்னே இரண்டு விதமான நலன்கள் ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிறது

  1. மாணவர்கள் அரசியல் மயமாவதைத் தடுத்து அவர்களை சமூக உணர்வற்ற, நாட்டுப்பற்றற்ற தக்கை மனிதர்களாக்குவது
  2. அரசு உயர்கல்வி நிறுவனங்களை அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் போது அதனை அமுல்படுத்தும் கமிட்டிகளில் மாணவர் பிரதிநிதித்துவத்தை அனுமதிப்பதன் மூலம் அரசாங்க அதிகாரிகள், பேராசிரியர்களோடு மாணவர்களையும் பங்குதாரராக்குவது; இதில் மாணவப் பிரதிநிதியும் பங்காளியாக இருக்கும் போது மாணவ சமூகம் இக்கொள்ளையை தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விடும் என்பது அவர்கள் கணிப்பு.

லிங்க்தோ கமிட்டி பரிந்துரையின் சதித்தனத்தால் பாதிப்புக்குள்ளான ஜே.என்.யு மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பரிந்துரைக்கெதிராக போராடிவருகின்றனர்.

லிங்க்தோ கமிட்டி உருவான பின்புலம்

rayf iit protest (3)
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடையை எதிர்த்து சென்னை பு.மா.இ.மு போராட்டம் – கோப்புப்படம்

கேரளாவில் 2000-ம் ஆண்டுகளில், உயர்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்படுவதை எதிர்த்தும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. அவற்றை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, போலீசைக் கொண்டு கொடூரமாக ஒடுக்கியது.

அதே காலகட்டத்தில், மாணவர் சங்கத் தேர்தல்கள் நடைபெற்ற பல இடங்களில், SFI-க்கும், மாணவர் காங்கிரஸுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இவற்றைக் காரணம் காட்டி கேரள பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்க ஆரம்பித்தனர். அவ்வாறு, சோஜன் ஃப்ரான்சிஸ் என்ற மாணவர் சங்க உறுப்பினரை, ’குறைவான வருகைப் பதிவு’ என்ற காரணத்தைக் காட்டி தேர்வு எழுதவிடாமல் தடுத்தனர். அவர் (SFI மூலம்) கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதனை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாணவர்களுக்கு விரோதமான தீர்ப்பு ஒன்றினை அளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் பின்வருமாறு:

  • கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஒழுங்கை நிறுவ முதல்வர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வரைமுறையற்ற அதிகாரம் தேவை. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை (’Code of Conduct’) அந்தந்த கல்லூரி முதல்வர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
  • மாணவர்களை சமூக விரோத செயல்பாடுகளில் (அரசியலில்) இருந்து பிரித்து, படிப்பதற்கு மட்டுமான இடமாக கல்லூரிகளை மாற்ற வேண்டும். ஏனென்றால், கல்லூரி என்பது மாணவர்களின் கல்விக்கான இடமேயன்றி அரசியல் நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.
  • அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமைகளுக்கு (பிரிவு 19(1)(a) & 19(1)(c)) எதிரானது எனக்கூறி கல்லூரி முதல்வர்கள் தீர்மானித்த நடத்தை விதிகள் அமுல்படுத்தப்படுவதை மறுக்கமுடியாது. மாறாக 19(1)(g) மற்றும் 30(1) ஆகிய பிரிவுகளின்படி கல்வி முதலாளிகளும், சாதிமத சங்கங்களும் சுமுகமாக கல்லூரி நடத்த (கொள்ளையடிக்க) உதவும் முகமாகத்தான் அவர்களே வகுக்கும் இந்த நடத்தை விதிகள். எனவே மாணவர் சோஜன் ஃப்ரான்சிஸை தேர்வு எழுத அனுமதிக்காத முதல்வரின் நடவடிக்கை சரியானது என தீர்ப்பு வழங்கியது.

iitm-apsc-ban-rsyf-vmm-demo-posterசிறுபான்மையினர் நடத்தும் பல்வேறு கல்லூரிகளில், கேரளப் பல்கலைக்கழக சிண்டிகேட்டால் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்சங்க அமைப்புச் சட்டத்தை (Students Union Constitution) மதித்துக் கடைப்பிடிக்காமல் (presidential form of election – direct method), வேறுவிதமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன (parliamentary form of election – indirect method). இவ்வாறு பல்கலைக்கழக மாணவர் அமைப்புச்சட்டத்தின்படி தேர்தல் நடத்தாததற்கு எதிராக கேரளப் பல்கலைக்கழகம், கேரள உயர்நீதி மன்றத்தை அணுகியது.

இவ்வழக்கில், எதிர்த்தரப்பாக கல்லூரி முதல்வர்களின் சங்கமான The Council of Principals of College in Kerala (முதல்வர்கள் கவுன்சில்) ஆஜரானார்கள். இவ்வழக்கில் எதிர்த்தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், எந்த முறையில் மாணவர் தேர்தலை affiliated கல்லூரிகள் நடத்த வேண்டும் என்பது பற்றி பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானிக்க உரிமையில்லை எனக் கூறி 2004-ல் சிண்டிகேட்டின் பல்லைப் பிடுங்கியது.

இதற்கெதிராக பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் (Special Leave Petition) செய்தது. கேரளாவில் மாணவர் சங்கத் தேர்தல்கள் அரசியல்மயமாகி இருப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றிய பெருமாள் கமிட்டியின் அறிக்கையையையும், சோஜன் ஃப்ரான்ஸிஸ் வழக்குத் தீர்ப்பையும் மேற்கோள்காட்டி முதல்வர்கள் கவுன்சில் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் வைத்தது. அப்பரிந்துரைகள் பின்வருமாறு:

  1. தற்போது நடைமுறையில் இருக்கும் நேரடித் தேர்தல் நடைமுறையை நீக்கி, அதனிடத்தில் பாராளுமன்ற முறையிலான தேர்தல் முறையை அமல்படுத்துவது. அதாவது, மாணவர்களே நேரடியாக மாணவர் சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு பதிலாக, ஒவ்வொரு வகுப்பும் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் மாணவர் சங்க நிர்வாகிகளை நியமிப்பது.
  2. தேர்தல்களில் போட்டியிடும் மாணவர்கள் சில அடிப்படையான ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டவர்களாகவும், கல்வித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். முதலாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் குறைந்தபட்சம் 80% வருகை (attendance) பதிவாகி இருக்க வேண்டும்; அனைத்துப் பாடங்களிலும் தேறி இருக்க வேண்டும்.
  3. கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் அனுமதிக்கப்பட மாட்டாது. வகுப்பறையினுள் ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரங்கள், கலகம் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது. முதல்வரின் அனுமதி இல்லாது எந்தவொரு கூட்டமும் வளாகத்தினுள் நடத்தப்படக்கூடாது. கல்லூரிச் வளாகத்திலோ, வாயில்களிலோ, மதிற் சுவர்களிலோ, கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது. ஒரு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவ்வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற எவரும், அவ்வகுப்பாசிரியரின் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது.
  4. கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி, எந்தவொரு மாணவர் அமைப்பும் வெளியார் யாரையும் கல்லூரிக்கு வரும்படி அழைக்கக் கூடாது
  5. மாணவர்களால் கல்லூரியின் சொத்திற்கு ஏதேனும் சேதம் நேரிட்டால்: சேதம் ஏற்படுத்தியவர் யார் என அடையாளம் தெரிந்தால் அந்த மாணவரிடமிருந்தே வசூலிக்கப்படும்; சேதம் ஏற்படுத்தியது ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பில் உள்ள மாணவர்கள் என்று சந்தேகம் இருக்கும்பட்சத்தில், அம்மாணவர் அமைப்பிடமிருந்து வசூலிக்கப்படும்; சேதம் விளைவித்தவர்களை அடையாளம் காண முடியாத பட்சத்தில், ஒட்டுமொத்த மாணவர் சங்கத்திடமிருந்து சேதத்திற்கான வசூலிக்கப்படும்;
  6. பொதுச்சொத்திற்கு சேதம் நேரிடும்பொழுது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் சேதத்திற்கான தொகையை மதிப்பீடு செய்வார்; அத்தொகையை கல்லூரி முதல்வர் மேற்கண்ட வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாணவர்(கள்) அல்லது அமைப்பிடமிருந்து வசூலிப்பார்
  7. முதல்வர் அல்லது அதற்காக அதிகாரமளிக்கப்பட்ட ஆசிரியரிடமிருந்து முன் அனுமதி பெறாமல், கல்லூரி வளாகத்திற்குள் செல்பேசி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு அனுமதி பெறாமல் கொண்டுவரப்படும் செல்பேசிகளை பறிமுதல் செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் உண்டு; தேவையானால், அம்மாணவர்களின் பெற்றோர்களையோ / பாதுகாவலர்களையோ (Guardians) அழைத்து அந்த செல்பேசிகள் ஒப்படைக்க ஆசிரியர்களுக்கு அதிகாரம் உண்டு.
  8. கிரிமினல் வழக்கு பதியப்பட்ட அல்லது இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர் எவரும் கல்லூரி வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை
  9. ஆசிரியர்களும் அலுவலர்களும் கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது; வேலைநிறுத்தம் அல்லது கலவரத்தைத் தூண்டும் ஆசிரியர் அல்லது அலுவலர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி வளாகத்திற்குள்ளோ, நுழைவு வாயிலிலோ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
  10. ஒரு குறிப்பிட்ட நாளில், அமைதியான முறையில் கல்வி கற்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று ஒரு கல்லூரியின் முதல்வர் முடிவு செய்யும் பட்சத்தில், கல்லூரிக்கு விடுமுறை அளிக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு
  11. கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு கிரிமினல் நடவடிக்கை நிகழ்ந்தாலும் அது உடனடியாக போலீசுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். போலீஸ் சூப்பரின்டன்டண்டின் நேரடிக் கண்காணிப்பில் அவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்
  12. கல்லூரி அட்மிஷனுக்கான நிபந்தனைகள், நடத்தை விதிகள் ஆகியவை விண்ணப்பப் படிவத்திலேயே தரப்பட வேண்டும். கல்லூரி அட்மிஷன்போதே மாணவர்களும் பெற்றோர்களும், நிபந்தனைகள்/ நடத்தை விதிகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும்.
  13. மேற்கண்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சில ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாசிரியர்கள் இப்பணியை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி, மாணவர்கள்-கல்வி நிறுவனங்களின் நலனைக்கருத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். இவ்வழிமுறையை சரியான முறையில் கடைப்பிடிக்காதவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
  14. மாணவர்களின் பாரதூரமான ஒழுங்கீனம் பற்றிய தகவல் ஆசிரியருக்குத் தெரியவரும் பட்சத்தில், அதனை உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும். அவ்வாறு ரிப்போர்ட் செய்யத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  15. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறை தீர்ப்பதற்கான செயல்முறை நிறுவப்படவேண்டும். அச்செயல்முறையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட தகுதி வாய்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படலாம். மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் ஏதேனும் சர்ச்சை இருந்தால் அதனைத் தீர்த்து வைப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும்போது, அதுகுறித்த மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.
protest iit a (3)
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் போராட்டம் – கோப்புப் படம்

மேலும் இதைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சிந்தனைக் குழாம்கள் அடங்கிய ஒரு கமிட்டியை அமைக்கவும் பரிந்துரை செய்தது. அதுதான் முன்னாள் தேர்தல் ஆணையர் லிங்க்தோ தலைமையிலான லிங்க்தோ கமிட்டி. இந்த லிங்க்தோ கமிட்டியின் உறுப்பினர்களைக் கவனித்தாலே இதன் ஏகாதிபத்தியத் தொடர்பு அம்பலப்பட்டுவிடும். Centre for Political Studies (CPS), Centre for Policy Research (CPR), National Institute of Educational Planning and Administration (NIEPA), Association of Indian Universities (AIU) போன்ற ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் சிந்தனைக்குழாம்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளே இதன் உறுப்பினர்கள். இவர்கள் தயாரித்த அறிக்கையின் பரிந்துரைகளைப் பின்பற்றித்தான் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் 2005-ல் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, லிங்க்தோ கமிட்டி பரிந்துரைப்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் தேர்தல்களை நடத்தும்படி உத்தரவிட்டு நவம்பர் 2006-ல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

லிங்க்தோ கமிட்டியின் மாணவர் விரோத – சமூக விரோதப் பரிந்துரைகள்

  • வயது வரம்பு: அனைத்து மாணவர்களுக்கும் வாக்குரிமை உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை: 22, முதுநிலை: 25, முனைவர்: 28. இது பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளால் உயர்கல்விக்குள் நுழைவதற்கு முன்னால் கல்விப்புலத்தில் நீண்ட இடைவெளியோடு வரும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்தலில் போட்டி போடுவதிலிருந்து தடுக்கிறது.
  • வருகை மற்றும் தேர்ச்சி: தேர்தலில் போட்டியிட 75% வருகையை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் ஏதாவது ஒரு பாடத்தில் அரியர் வைத்திருப்பவர்களும் போட்டியிடத் தகுதியற்றவர்கள். வயது வரம்பு, வருகை மற்றும் தேர்ச்சி ஆகிய மூன்று மையமான தகுதிகளும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சங்கத் தலைமைக்கு வருவதை தடுத்து பார்ப்பன மற்றும் மேட்டுக்குடி மேலாண்மையை மீண்டும் நிறுவுவதற்காகவெ கொண்டுவரப்பட்டுள்ளது.
  • திரும்பப் போட்டியிடும் உரிமையைப் பறித்தல்: ஒரு மாணவன் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் கவுன்சிலராக இருமுறையும் மத்தியக் குழுவுக்கு (Central Panel) ஒருமுறையும் மட்டுமே போட்டியிட முடியும். இதனால் அனுபவம் வாய்ந்த மற்றும் அற்பணிப்புடன் கூடிய மாணவத் தலைவர்களை மாணவர் சங்கங்கள் கொண்டிருப்பதைத் தடுக்கிறது. ஒவ்வொரு முறையும் அனுபவமற்ற புதுப்புதுத் தலைவர்களை மத்தியக் குழுவுக்கு நிறுத்தும் போது, அவர்களால் கல்விநிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல செயல்பட இயலாமல் போகிறது. இதனால் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பங்கெடுக்கும் கல்வி நிறுவன நடவடிக்கைகளில் கூட மாணவர் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கத் தெரியாமலோ திராணியற்றோ நிர்வாகத்தின் கைப்பாவையாக மாறுவதும் / வெறும் கைநாட்டாக செயல்படுவதும் நடக்கிறது. இன்னொருபக்கம் SFI, AISA போன்ற நாடாளுமன்றப் பாதையை பின்பற்றும் போலிகளால் மாணவர்களிடமிருந்து தலைவர்களை வளர்த்தெடுப்பதும் சாத்தியமற்றுப் போகிறது. இதற்கு ஈடாக மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க தொழில்முறை நிறுவனங்கள் மூலம் ட்ரெயினிங் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என லிங்க்தோ பரிந்துரைகிறது.
  • மாணவ அரசியலை ’அரசியல் நீக்கம்’ செய்தல்: தேர்தலின் போது அரசியல் கட்சித் தலைவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிப்பதை லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைகள் தடை செய்கிறது. இந்த கமிட்டி உருவாக்கப்பட்டதன் நோக்கமே மாணவர்களை அரசியலற்றவர்களாக ஆக்குவது தான்.
  • தகுதி: போட்டியிடும் பிரதிநிதிகள் குற்றச்செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவராகவோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவராக இருக்ககூடாது; வகுப்பிற்கு வராததும் வகுப்பைப் புறக்கணிப்பதும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழக்கச் செய்யும் என லிங்க்தோ கமிட்டி கூறுகிறது. பொதுவாக அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மாணவர் விரோத நடவடிக்கைக்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டங்களை குற்றசெயல்களாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைப்பதாகவும் குற்றஞ்சாட்டி மாணவர் சங்கப் பிரதிநிதிகள் மீது கிரிமினல் வழக்குகள் போடுவதும் கல்லூரி நிர்வாகம் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இப்படி வழக்கு உள்ள மாணவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வதன் மூலம் நிர்வாகத்தின் எதிரிகள் சங்கத்தின் தலைமைக்கு வருவதை தடுத்து நிறுத்துகிறது.
  • குறைக் கேட்புப் பிரிவு (Grievance Redressal Cell): லிங்க்தோ பரிந்துரைக்கும் முன்னர் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர் சங்க அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன (உதா. JNU). இந்த சட்டப்படி மாணவர்களின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்தும். இதில் கல்லூரி நிர்வாகம் தலையிடவோ அல்லது அதன் மீது எந்த அதிகாரத்தையும் செலுத்தவோ முடியாது. தேர்தல் முடிந்த பின் தேர்தல் ஆணையம் பட்டியலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும். நிர்வாகம் மாணவர் பிரதிநிதிகளை அங்கீகரிக்கும். இது தான் நடைமுறை. ஆனால் லிங்க்தோ பரிந்துரைப்படி ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் குறை கேட்புப் பிரிவை உருவாக்கவேண்டும்.இது தான் மாணவர் தேர்தல்களை கண்காணிக்கும். இது மாணவர் டீன் தலைமையில், ஒரு பேராசிரியர், ஒரு நிர்வாகி மற்றும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கியது. இவர்கள் தான் தேர்தல் ஆணையத்தைக் கூட கட்டுப்படுத்துவார்கள். தேர்தலின் போது ஏதாவது ஒரு மாணவர் அல்லது மாணவர் அமைப்பு இவர்கள் நடத்தை விதிகளைக் கடைபிடிக்கவில்லை என புகாரளித்தால், அவர்களின் பிரதிநிதித்துவத்தை ரத்து செய்ய இவர்களுக்கு அதிகாரம் உண்டு. தேர்ந்தெடுத்த மாணவர் சங்கத்தைக் கூட இவர்கள் கலைக்க முடியும். இந்த அமைப்பின் நடவடிக்கை மேல் மாணவன் புகாரளிக்க முடியாது. ஏனென்றால் அமைப்பிற்கு மேலே உள்ள சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்ட கல்லூரி முதல்வரைத் தவிர யாராலும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பிது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் சங்கங்கள் தனது உரிமைகளை இழந்து நிர்வாகத்தின் தயவில் மட்டுமே செயல்படும் அவல நிலைக்குத் தள்ளியுள்ளது.

லிங்க்தோவுக்கு எதிரான JNU மாணவர்களின் போராட்டம்

lyngdoh  committee (6)
லிங்கத்தோ கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராட்டம்

JNUSU-க்கு என தனியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. அது மிகவும் ஜனநாயகத் தன்மை உள்ளதோடு மட்டுமன்றி கல்வி நிறுவன நிர்வாகத்தால் தலையிட முடியாத அளவு சுயாதிகாரம் படைத்ததாக இருந்தது. 2007 வரை இதனடிப்படையில் தான் ஜெஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் நடந்தப்பட்டது. இத்தேர்தலில் லிங்க்தோ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி Youth for Equality என்ற அமைப்பு நீதிமன்றத்திற்கு சென்று தடையாணையைப் பெற்றது. இது இடஒதுக்கீட்டுக் கெதிராக போராட்டம் நடத்திய சாதி இந்து மாணவர்களின் அமைப்பு.

அப்போது தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக SFI, AISA போன்றவை லிங்க்தோவை ஆதரித்தது. JNUSU அரசியலமைப்புச் சட்டத்தை கைவிட்டு, லிங்க்தோ பரிந்துரைப்படி GRC யை உருவாக்கப் போராட்டம் நடத்தியது. லிங்க்தோ கமிட்டியை வரவேற்றுப் பாராளுமன்றத்தில் பேசியனர் போலி மார்க்ஸிஸ்டுகள். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் லிங்க்தோவை அமுல்படுத்தக் கோரி இயக்கத்தையும் ஆரம்பித்தது.

லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர். மாணவர் சங்கத் தேர்தல்களில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என இரண்டு பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியதோடு வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றியது.

SFI, AISA போன்ற போலிகளின் சந்தர்ப்பவாதத்திற்கும் பிழைப்புவாதத்திற்கும் எதிராக The New Materialist, DSU, AISF உட்பட பல அமைப்புகள் சேர்ந்து Joint Front Against Lyngdoh என்ற அமைப்பை உருவாக்கி லிங்க்தோவை முழுவதுமாக நீக்கக் கோரி போராடி வருகின்றனர். தற்போது தங்கள் பிழைப்புவாதத்தின் முதல் பலிகடாக்களான SFI, AISA போன்றவையும் சுயவிமர்சனமேற்று தங்களையும் இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளது. JNUSU மற்றும் வலதுசாரி ABVP, YFE தவிர மற்ற அனைத்து மாணவர் அமைப்புகளும் நாடுமுழுக்க மாணவர்களை அணிதிரட்டி லிங்க்தோவுக்கு எதிராக போராடுகிறது.

lyngdoh  committee (5)
லிங்கத்தோ கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராட்டம்

லின்டோ கமிட்டி பரிந்துரையின் முக்கியமான நோக்கங்கள்:

இந்த பரிந்துரைகள் வெறும் மாணவர்களின் உரிமைகளை மறுப்பது; ஆசிரியர்களைக் கண்காணிப்பது; கல்லூரி நிர்வாகத்தின்/ முதல்வரின் யதேச்சதிகாரத்தை நிறுவுவது; அதன் மூலம் தரகு அதிகார வர்க்கங்கள் தனது பொருளாதார சுரண்டலை நிலை நிறுத்திக் கொள்வது என்பதாக மட்டும் குறுக்கி புரிந்து கொள்ளக் கூடாது. லிங்க்தோ கமிட்டியின் மூலமே ஏகாதிபத்தியத்தின் நலனிலிருந்து ஆரம்பிக்கிறது. கேரளாவில் கிருஸ்தவ மிஷனரிகளும் ஆதிக்க சாதி இந்து (நாயர்கள்) சங்கங்களும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக கிருஸ்தவ கல்லூரிகளில் ரெவெரண்ட் ஃபாதர்களே முதல்வர்களாக உள்ளனர்.

பெரும்பாலும் வத்திக்கனுக்கு வேண்டியவர்களே கிருஸ்தவ நிறுவனங்களில் உயர்பதவிகளைப் பெற முடியும் என்பது தான் இன்றுவரை உள்ள நிலைமை. 1970 களின் தொடக்கத்தில் இச்சிறுபான்மை கல்லூரிகளின் முதல்வர்கள் ஏழுபேர் (அதில் ஃபாதர்கள் 3 பேர், இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் ஒருவர் மற்றும் மூன்று சாதி இந்து சங்கங்கள் நடத்தும் கல்லூரி முதல்வர்கள்) சேர்ந்து சொசைட்டீஸ் சட்டப்படி The Council of Principals of College in Kerala என்ற முதல்வர்களின் சங்கத்தை ஆரம்பித்தனர். இந்த சங்கத்தின் ஒரே நோக்கம் ”கல்லூரி வளாகங்களை அரசியலற்றதாக்குவது” என அவர்களே அறிவித்துக்கொண்டனர். ”1970 களில் இப்படி ஒரு சங்கத்தின் தேவை என்ன?” என்று நாம் நினைக்கலாம்.

lyngdoh  committee (4)அக்காலகட்டத்தில் தான் நக்சல்பாரி எழுச்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றின் தாக்கத்தால் அரசியல்மயமான மாணவர்கள் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னின்று நடத்தினர். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் போராளிகளின் உற்பத்திசாலையாக மாறியது. இம்மாணவர் எழுச்சி உருவாக்கிய அரசியல் அலை பரந்துபட்ட மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் பார்ப்பனியத்தையும் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கத்தையும் ஒருங்கே நிலைகுலையச் செய்தது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாணவர் எழுச்சியைத் தடுப்பதன் மூலம் மட்டுமே தனது பொருளாதார நலனை தக்க வைக்க முடியும் என ஏகாதிபத்தியமும் தரகு அதிகாரவர்க்கமும் நினைக்கிறது.

மாணவர்களை ”அரசியல் நீக்கம்” செய்து அதன் மூலம் இளைஞர்களை அரசியலற்ற தக்கை மனிதர்களாக உருவாக்குவதன் மூலம் வருங்காலத் தலைமுறையையும் மொத்த சமுதாயத்தையும் எதிர்ப்பறியதாவர்களாக மாற்றி ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கம் தனது மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்வது என்றதொரு பரந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் முதல்வர்களின் சங்கத் தலைமையில் ”அரசியலற்ற கல்லூரி வளாகங்களை” உருவாக்க தொடர்ந்து பல பிரச்சாரங்களும் கருத்தரங்கங்களும், வழக்குகளும் நடத்தப்பட்டன.

இவர்களின் 40 வருடக் கூட்டு முயற்சியின் பலனைத் தான் லிங்க்தோ கமிட்டி பரிந்துரை மூலம் அறுவடை செய்துள்ளனர். இதைத் தான் நாம் மறுகாலனியாக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒட்டு மொத்த நாட்டையும் மறுகாலனியமாக்கும் ஏகாதிபத்தியங்களின் போர்தந்திர திட்டத்தின் ஒரு பகுதியே லிங்க்தோ கமிட்டி நடவடிக்கை.

லிங்க்தோவை ஒழித்துக் கட்டிவிட்டால் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படுமா?

      மேற்குவங்கம், கேரளா தவிர பிற மாநிலங்களில் இன்றுவரை கல்வித்துறையில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் என்னென்ன என்று கூட அறிந்திராதவர்களாகத் தான் மாணவர்கள் இருக்கிறார்கள். SFI போன்ற சங்கங்களும், சில முற்போக்கு மாணவர்களும் கூட லிங்க்தோவை அமுல்படுத்துவதால் ஏதோ தங்கள் பிரச்சனைகளை நிர்வாகத்திடம் பேசுவதற்கான தளம் கிடைக்கும் என நம்புகின்றனர். அப்படி ஒரு தளம் கிடைத்தாலும் அதை மாணவர் சமுதாயத்தின் நன்மைக்காக பயன்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?

lyngdoh  committee (3)கல்வித்துறையை மட்டுமன்றி கட்டிடங்களையும் மாணவர்களையும் சேர்த்தே தரகு ஏகபோக முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் போது அதற்கு ஒப்புதல் கொடுக்க மாணவப் பிரதிநிதிகளும் தேவைப்படுகிறார்கள். லிங்க்தோவை அமுல்படுத்தக் கூறுவது நமக்கு நாமே சவக்குழி தோண்டுவதற்கு ஒப்பானது. கல்வியை தனியார்மயமாக்கி தாராளமயமாக்கப்பட்டபின் கல்வித்துறையின் அங்கங்களான அரசின் கல்விக்கொள்கை, கல்வி அமைச்சகம், நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்களின் கலாச்சாரம், வேலை வாய்ப்பு சந்தை என ஒவ்வொன்றும் அழுகிப் புழுத்து நாறுகிறது; கல்வித்துறையே மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் சிந்திக்கும், செயல்படும் தன்மை படைத்த மாணவர் சமூகம் லிங்க்தோ பரிந்துரை வழங்கும் வரம்பிற்குள் இந்த அமைப்பிற்குள் சென்று அடிப்படை கட்டுமான வசதிக்காகவும், தன்னுடைய பொருளாயத பிரச்சனைகளுக்காகவும் இந்த திவாலான அமைப்பின் அங்கமாகி தீர்வைத் தேட முடியுமா? லிங்க்தோவை ஒழித்துக் கட்டிவிட்டு மாணவர்களே சங்கமாகத் திரண்டு அந்தந்த கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கைகளை வைத்து போராடி நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியுமா?

lyngdoh  committee (2)காசிருப்பவனுக்கே தரமான கல்வி என்பது அரசின் தாரக மந்திரமான பின்; அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் அரசு கல்வி நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பின்; அரசு-தனியார் கல்விநிலையங்கள் கல்வியியல் செயல்பாடுகளிலிருந்து பிறழ்ந்து ’திறனற்ற தக்கை இளைஞர்களை’ உருவாக்கும் கொத்தடிமைக் கூடங்களாக மாறியபின்; அரசு-தனியார் கல்வி நிறுவனங்களை லஞ்ச லாவண்யத்தாலும் ஊழலாலும் சீரழித்து, திறமையான இளைஞர்களை கூட ‘தகுதியற்றவன்’ என முத்திரை குத்தி வேலைவாய்ப்பு சந்தையிலிருந்து விசிறியடிக்கிறார்கள்.

இச்சூழலில் இக்கல்விநிறுவனங்களில் தண்ணீரில்லை, பெஞ்சில்லை, கட்டணம் ஏறி விட்டது, கோப்புகள் நகரவில்லை, அரசு ஒதுக்கிய நிதியை பட்டுவாடா செய்யவில்லை, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில்லை எனப் போராடுவது எவ்வளவு அபத்தமானது? ஒட்டுமொத்த கல்வித்துறையும் திவாலாகி தீர்க்கமுடியாத சிக்கலுக்குள் மூழ்கிவிட்டபின் ஜனநாயக சிந்தனையுள்ள மாணவர்களும் பேராசிரியர்களும் மக்களும் ஒன்றுசேர்ந்து கல்வித்துறையை கையிலெடுப்பது தானே சரியானது.

lyngdoh  committee (1)நாம் கற்றுக் கொடுக்க மாணவர்கள் தேவை; நமக்கு கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் தேவை; நாம் ஆய்வு செய்ய ஆய்வகங்கள் தேவை; இதற்கு செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம்; இந்த கல்வியியல் செயல்பாடுகளில் கல்வியமைச்சரின் வேலை என்ன? எதற்கு துணைவேந்தர்? எதற்கு பதிவாளர்? கற்றுக் கொடுக்கவேண்டிய பேராசிரியர்கள் ஏன் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் கங்காணிகளைப் போன்ற நிர்வாகிகளாகிறார்கள்? எதற்காக இந்த செயலிழந்த கல்வித்துறை கடல்கிழவனைப் போல பொதுமக்களின் முதுகில் சவாரிசெய்கிறது?

நம்மை ஒட்ட உறிஞ்சி, ஊழலில் திளைத்து, கல்வித்துறையை கொள்ளைத் துறையாக மாற்றியுள்ள இந்த அட்டைப் பூச்சிகளை ஒழித்துக் கட்டுவோம்! மாணவர்கள்-ஆசிரியர்கள்-பொதுமக்களின் கமிட்டிகளைக் கட்டி ஒவ்வொரு கல்லூரியையும் கையிலெடுத்து நடத்துவோம்! கல்வித்துறையை ஜனநாயகமானதாக்குவோம்! கல்வியியல் செயல்பாடுகளுக்கான தளமாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவோம்! நம் தாய்நாட்டின் அறிவுத்துறையை மீட்டெடுப்போம்!

  1. மாணவர்களின் கல்வி உரிமைகள் ,ஜனநாயக உரிமைகள் ஏகாதிபத்திய அடிமைக் கல்விச் சூழலில் எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பதைப் பட்டவர்த்தனமாக எடுத்துக் கூறும் பதிவு. மாணவர்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டிய அவசியமான பதிவு.

  2. ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட லிங்த்தோ அமைப்பின் பரிந்துரைகளின் பின்னே இருக்கும் வர்க்க நலன் யாருக்காக என்பதை அறியாத SFI,AISA போன்ற அமைப்புகள், அந்த அமைப்புகளின் தலைமைகளான போலிகள் மாணவர்களை கறாராக அரசியல் படுத்தாத தனமையையே உணர்த்துகிறது. அருமையான பதிவுக்கு நன்றி! இந்த பதிவை அனைத்து மாணவர்களிடம் கொண்டுச்செல்ல வேண்டிய தருணம் இது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க