privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் - மோடி அரசு

விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு

-

சாலை பாதுகாப்பு மசோதா - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்பெருகி வரும் சாலை விபத்துகளை குறைக்கவும், முறைகேடாக உரிமம் பெறுவதை தடுக்கவும் எனக் கூறி மோடி அரசு புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

விபத்து ஏற்படுத்துவோர்க்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுமாம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய உயிர்ச்சேதம் ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் கடும் தண்டனைக்குள்ளாவார்கள் எனக் கூறுகிறது இந்த  சட்டதிருத்தம். ஆகவே, மக்கள் நலன் கருதி, இந்த சட்டதிருத்தம் அமலுக்கு வர உள்ளது என்று சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பினர் போன்ற அட்டைக் கத்திகள் மோடியின் இந்த அறிவிப்பை கொண்டாடுகின்றனர். போக்குவரத்து சட்டத்தில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க-வினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் நடக்கப் போவதோ வேறு.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்து ஏற்படுகிறது என்பதை சுட்டிக் காட்டும் அரசு, ஒரு முறை சாலை விதியை மீறினால் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்களில், ஒரு ஆங்கிலச் செய்தித் தாளில் புகைப்படத்துடன் நான் தவறு செய்தவன், என்று தன்னை விளம்பரம் செய்து அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. அடுத்த முறை தவறு செய்பவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தண்டனை வழங்கும் அரசு, குடிக்க காரணமான டாஸ்மாக்கையோ அனுமதித்த அரசையோ கேள்விக்குள்ளாக்கவில்லையே ஏன்? தெருவிற்கு தெரு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை என்பதை இந்த சட்டத் திருத்தம் பேசவில்லை.

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஓட்டுனர் 50,000 அபராதம் கட்டி விட்டு ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். இவை புதிய சட்டத் திருத்தத்தின் விதிகளாகும்.

மேலும், இதுவரை ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்களில்  50% பேர் முறையான உரிமம் பெற்றவர்கள் இல்லை எனவும் மோடி அரசு கண்டுபிடித்துள்ளது. முறைகேடாக உரிமம் பெறுகிறார்கள் என்ற அடுத்த குற்றச்சாட்டை சொல்கிறது அரசு. இதனால் உரிமத்தை புதிதாக தரப் போகிறதாம்.

இதுவரை உரிமம் பெற்றது செல்லாது என்றும் அறிவிக்கிறது அரசு. புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற 9 மாதம் பயிற்சியளிக்கப்பட்டு 3 மாதம் சோதனை செய்யப்பட்டு அதன்பிறகு உரிமம் வழங்கப்படும். தற்பொழுது பயிற்சி பெற ஆகும் செலவை விட இதற்கு பல மடங்கு அதிகம் செலவாகும். இதற்கென்று தனிப்படிப்பும், தனியார் கல்லூரிகளும் எதிர்காலத்தில் வர உள்ளன.

சாலை பாதுகாப்பு மசோதா - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்தற்போது இருக்கும் டிரைவிங் ஸ்கூல் முறை ஒழிக்கப்படும். புதிய சட்டத்தின்படி டிரைவிங் ஸ்கூல் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்க வேண்டும். மருத்துவ சோதனைக் கூடம், பணிமனை (ஒர்க் ஷாப்) போன்றவை இங்கு இருக்க வேண்டும். இதற்கு மூலதனம் அதிகம் தேவைப்படும். எனவே, வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே நடத்த வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் இத்தொழிலைச் சார்ந்து பிழைத்து வந்தவர்களின் வாழ்க்கை அழியும்.

முறைகேடாக, உரிமம் பெற்றதாக கூறும் ஓட்டுனர்களுக்கு இது போன்று கடுமையாக நடவடிக்கை எடுக்க உள்ள அரசு இத்தகைய தவறுக்கு காரணமாக இருந்த ஆர்.டி.ஓ உள்ளிட்ட போக்குவரத்து துறையினருக்கு என்ன தண்டனை என்பதை சட்டத்தில் கூறவில்லை..

ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு மூடு விழா!

இதுவரை ஆர்.டி.ஓ அலுவலகம் மூலம் பெறப்பட்டு வந்த ஓட்டுனர் உரிமம், தகுதிச் சான்று, பர்மிட் வழங்குதல், வாகனம் பதிவு செய்தல் போன்ற அனைத்து விதமான பணிகளும் இனிமேல் சேப்டி அதாரிட்டி, ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி போன்ற பல பெயர்களில் கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் செயல்படுத்தப்படும். இதற்கான கட்டணங்களையும் பல மடங்கு உயர்த்தி கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும். இதில் அரசு இனிமேல் தலையிட முடியாது.

வாகன உதிரி பாகம் விற்பனை, வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் பெயின்டிங் போன்ற சிறு குறு மற்றும் சுய தொழில்கள் அழியும். எந்த ஒரு வாகனத்திற்கும் உதிரி பாகங்கள் வாங்க வேண்டுமென்றால், எந்த கம்பெனியின் வாகனமோ அந்தக் கம்பெனி உதிரி பாகங்களைத்தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் என புதிய சட்டம் சொல்கிறது. இதன் விளைவாக வாகனங்களின் உதிரி பாகங்களை மட்டுமே தயாரிப்பதற்கென்றே உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை விற்பனை செய்யும் கடைகளும் அழியும்.

வாகனங்கள் பழுது நீக்கும் (சர்வீஸ்) என்பது பல தனித்தனி சிறு, குறு தொழில்களை உள்ளடக்கியதாகும். பெயின்டிங், வெல்டிங், டிங்கரிங், மெக்கானிக் என சுயமாக தொழில் செய்து இதன் மூலம் பிழைத்து வருபவர் பல லட்சம் பேர். பழுதடைந்த பொருட்களை புதுப்பித்தும், பழுது நீக்கியும் பயன்படுத்துதல் என்பது பெரிய அளவில் நடக்கிறது. புதிய சட்டத்தின்படி ஆட்டோ, கார், பேருந்து இனி இங்கு சர்வீஸ் செய்ய முடியாது. மாறாக, அந்தந்த கம்பெனி சர்வீஸ் சென்டரில்தான் சர்வீஸ் ஒர்க் செய்ய வேண்டும். அனைவருக்கும் வேலை தர வக்கற்ற அரசு சுயமாக தொழில் செய்து பிழைத்து வரும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்க்கையில் மண் அள்ளிப் போடப் போகிறது. நான் என்ன செய்யப் போகிறோம்? இவை அனைத்தும் சாலை விபத்துக்களை தடுக்க அரசு கொண்டு வரும் திட்டம் என்று நாம் நம்ப வேண்டும் என்கிறார் மோடி.

ஆணையங்களின் வழியாக கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்

தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் பெர்மிட் காலம் முடிந்தவுடன் மீண்டும் புதுப்பிக்க முடியாது. இப்படி பர்மிட் பறிக்கப்பட்ட வாகனங்களை இரும்பு கடைக்குத்தான் போட முடியும். இனி பர்மிட் வழங்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. நேஷனல் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி என்ற பெயரில் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டு நாட்டின் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களையும் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஏலம் விடும். இதில், பன்னாட்டு கம்பெனிகளும் பங்கேற்கும். உள்ளூர் முதலாளிகள் அவர்களுடன் போட்டி போட்டு ஏலத்தில் வெற்றி கொள்ள முடியாது.

இலாபம் தரும் வழித்தடங்களில் மட்டும்தான் இந்த பேருந்துகள் இயக்கப்படும். கிராமங்களுக்கான போக்குவரத்து ஒழிக்கப்படும். இதைவிட கொடுமை இது போன்ற பிரச்சனைகளால் ஒட்டு மொத்த போக்குவரத்து துறையையே கலைத்து விட்டு தனியார் வசம் ஒப்படைக்கப் போகிறதாம். இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், போக்குவரத்தை சரிசெய்ய துப்பு கிடையாதாம். உலக முதலாளிகள் வந்து சாலை விபத்தையும், போக்குவரத்தையும் தடுக்கப் போகிறார்களாம். இதுதான் மோடி கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் யோக்கியதையாகும். இது தேசத்தை பாதுகாக்கும் தேசபக்தன் செய்யும் வேலையா? அல்லது தேசத்தை அடகு வைக்கும் தேசத் துரோகி செய்யும் வேலையா?

போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டமாக்கும் மோடி!

போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் நாடு முழுவதும் பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கொண்டது. அரசுக்கு கோடிகளை வருவாயாக ஈட்டித் தருவதாகும்! இதை கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி கொள்ளையடிக்கும் அதே நேரத்தில் இதைச் சார்ந்து பிழைத்து வரும் சிறு, குறு முதலாளிகள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது. எனவே, இரண்டு பக்கமும் மாபெரும் அழிவை உருவாக்கப் போகிறது சாலை பாதுகாப்பு மசோதா 2015.

தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதன் மூலம் தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்பட உள்ளது. பொதுத்துறை வங்கி, இன்சூரன்ஸ், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் மக்களின் பணம் சூறையாடப்படப் போகிறது. உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தெருவோர சிற்றுண்டிக் கடைகள், சிறிய உணவு விடுதிகள் ஒழிக்கப்படப் போகிறது. நிலப்பறிப்பு சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விவசாய நிலங்களை அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளப் போகிறது மோடியின் அரசு.

மொத்த நாட்டின் வளங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், சிறு குறு தொழில்கள், தொழிலாளர் உரிமைகள், பொதுச்சொத்துக்கள் என்ற அனைத்தையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் டாடா, அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகள் கொள்ளையடிக்க சட்டப்படியே வழிவகுத்து கொடுத்துப் பாருங்கள்! இதுதான் தேசத்தின் வளர்ச்சி என்று கொக்கரிக்கிறது மோடி அரசு.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், வறுமை, வேலையின்மை, வேலை பறிப்பு, சுற்றுச் சூழல் சீர்கேடு, அதிகார முறைகேடுகள் என்ற மொத்த சமுதாயமும் மக்கள் வாழத் தகுதியற்றதாய் மாறிப் போய் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. இதில் எதையும் தடுப்பதற்கு வக்கற்று போய் நிற்கிறது அரசு. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி பாசிசத்தை சட்டபூர்வமாக்கி வருகிறது, மோடி அரசு.

ஆளத் தகுதியற்றதாய் மாறிப்போன அரசுக் கட்டமைப்பு

அரசு, தான் உருவாக்கிய சட்டத்தின்படியே ஆட்சி செய்வதற்கு தகுதியற்றதாய் மாறிப் போய் விட்டது. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் இனி நம்மை பாதுகாக்காது என உணர்ந்து கொண்ட மக்கள் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக, மீத்தேன் திட்டத்திற்கு எதிராக என பல்வேறு போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி எதிரிகளை நேருக்கு நேர் களத்தில் நின்று போராடுகின்ற மக்களின் திசைவழியில் நாம் அனைவரும் போராட வேண்டும். ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி விட்டு மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்.

இதன் பொருட்டு,

சாலை போக்குவரத்து மசோதா திருத்தம்!
சாலை விபத்தைத் தடுக்க வாகன ஓட்டுனர்களை பட்டினி போட்டு கொல்வது மோடியின் புதிய நீதி!

என்ற தலைப்பில் 12-10-2015 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜான்சன் ஸ்குயரில் இருந்து பேரணியாகச் சென்று ஜீப் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகவல்
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் – வாகனப்பிரிவு
கோத்தகிரி தொடர்புக்கு : 9047453204