“எனக்கு லாபம் முக்கியம். விலையில்லா மருந்து எப்படி விற்க முடியும்?”
“என் நாடு எனக்கு கல்வியளித்தது. நான் எதைச் செய்தேனோ அதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்”
மருத்துவத் துறை தொடர்பாக சமீபத்தில் வெளியான இரு வேறு செய்திகளில் இடம் பெற்றவை இந்தக் கருத்துக்கள். இவை இரண்டு தனிநபர்களின் கருத்துக்களாக மட்டும் இல்லை. அவர்கள் வாழும்/வாழ்ந்த முதலாளித்துவ மற்றும் சோசலிச சமூகங்களின் விழுமியங்களும் அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன.
சில வாரங்களுக்கு முன்னர் காலை நாளிதழை புரட்டிய அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏற்கனவே காப்பீடு இருந்தால் தான் மருத்துவம் பார்க்கமுடியும் என்று தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், டியூரிங் பார்மசியூடிகல்ஸ் என்ற நிறுவனம் தனது டாராபிரிம் (Daraprim) என்ற மருந்தின் விலையை 5000% (50 மடங்கு) அதிகரித்திருந்தது. ஏதோ பூஜ்யத்தை தவறுதலாக சேர்த்திருப்பார்கள் என்று நினைத்து மேலும் படித்தால் இது நாள் வரை மக்கள் 13.50 டாலருக்கு வாங்கிக்கொண்டிருந்த ஒரு மாத்திரையின் விலை 750 டாலராக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தது அந்நிறுவனம். இம்மருந்தின் தயாரிப்பு செலவு 1 டாலர் எனக் குறிப்பிடுகின்றன அமெரிக்க பத்திரிகைகள்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் toxoplasmosis என்ற நோய் தொற்றிற்கும், நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கும், குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகள்க்கு ஏற்படும் நோய்களுக்கு இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த விலையேற்றம் குறித்து அதிருப்தி எழுந்தபோது டியூரிங் பார்மா முதலாளியும், 32 வயதான இளம் தொழில் முனைவருமான மார்டின் செக்ரிலி (Martin Shkreli) உதிர்த்த சந்தை பொருளாதார விழுமியங்கள் தான் முதல் வரியில் நீங்கள் படித்த, “எனக்கு லாபம் முக்கியம்” எனும் கருத்து.
5000% (50 மடங்கு) விலையேற்றம் எந்தவிதமான குற்ற உணர்ச்சியையும் முதலாளிக்கு ஏற்படுத்தவில்லை. சந்தையில் அரசு தலையிடக்கூடாது என்பதால் விலையேற்றம் செய்தவரை அமெரிக்க அரசு தண்டிக்கவுமில்லை. இதுதான் இவர்களின் சந்தைப் பொருளாதாராத்தின் அறம். முதலாளித்துவ விழுமியங்களில் ஈரத்திற்கு கிஞ்சித்தும் இடமில்லை.
இந்தக் கொள்ளை லாபமில்லாமல் தங்களால் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய இயலாது என்று நியாயப்படுத்துகிறார் மார்டின் செக்ரிலி. உண்மைதான், மருந்து கம்பெனி முதலாளி முதல் முதலாளித்துவ ஆய்வாளர்கள் வரை அனைவரையும் இயக்குவது சக மக்கள் மீதான நேசமல்ல. பணம், பணம் மட்டும் தான் என்பதை வேறு வேறு வார்த்தைகளில் நமக்கு புரியவைக்கிறார் இந்த இளம் தொழில் முனைவர்.
இது ஏதோ ஒரு தனிப்பட்ட நபரின் லாபவெறியல்ல. அமெரிக்க மருந்து நிறுவனங்களின் விலையேற்றத்தை பட்டியலிட்டுள்ளது நியூயார்ட் டைம்ஸ் பத்திரிக்கை. Rodelis Therapeutics என்ற நிறுவனம் காசநோய்க்கு பரிந்துரைக்கப்படும் Cycloserine என்ற தனது மாத்திரையின் விலையை 500 டாலரிலிருந்து 10,800 டாலராக உயர்த்தியிருக்கிறது. இந்த விலையேற்றத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார் அதன் பொதுமேலாளர் Scott Spencer. ஆகஸ்ட் மாதத்தில் Marathon paarma நிறுவனம் தனது இதய நோய்க்கான மருந்தான Isuprel, Nitropress-ஐ முறையே 525%, 212% உயர்த்தியிருக்கிறது. 2014-ல் Doxycycline என்ற மருந்து ஒரு பாட்டில் 20-டாலரிலிருந்து 1849 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் இன்னும் நீளுகிறது.
இச்செய்தி வெளியான சில நாட்களில் தான் மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இச்செய்தியை முழுமையாக தெரிந்துகொள்ள வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
முதலாளித்துவ உலகினரால் வெறுக்கப்படும் தோழர் மாவோ, தன் நாட்டு மக்களும், அமெரிக்க எதிர்ப்பு போரில் ஈடுபட்டிருக்கும் வியட்நாம் மக்களும் மலேரியாவில் கொல்லப்படுவதை கண்டு உடனடியாக அதற்கு தீர்வு காண விழைகிறார். 1960-களில் தோழர் மாவோ வழிகாட்டுதலின்படி மலேரியா மருந்து கண்டுபிடிக்க 523 என்ற இரகசிய பெயரில் குழு அமைக்கப்படுகிறது. அதில் ஒருவர் தான் து யோயோ (Tu Youyou). தற்போது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றிருப்பவர்.

அது கலாச்சார புரட்சி காலகட்டம். மக்கள் தான் எஜமானர்கள், மக்களுக்கு பயன்படும் அறிவியல் ஆய்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டன. மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அதிகார வர்க்கத்தினரும், அறிவுத்துறையினரும் கிராமப்புற பணிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். பல்கலைக் கழக வேந்தர்கள் சமையல் செய்ய நேர்ந்தது. உயர் அதிகாரிகள் கழிவறை சுத்தம் செய்ய நேர்ந்தது. மக்கள் கமிட்டிகள் மேற்கண்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரம் படைத்தவையாயிருந்தன. மக்கள் உண்மையில் எஜமானர்களாயிருந்தார்கள். மக்களை நேசித்த அறிவுத்துறையினர் மக்களிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தனர். அதிகாரம் செய்ய பிறந்ததாக கருதிக்கொண்டவர்கள் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கருதினார்கள். அத்தகையவர்களை முன்னிட்டு மேற்கத்திய நாடுகளின் மூலம் கலாச்சார புரட்சி குறித்த அவதூறுகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.
இக்காலகட்டத்தில் தான் தோழர் மாவோவின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட மலேரியா மருந்து கண்டுபிடிப்பு குழுவில் சேர்க்கப்படுகிறார் து யோயோ; சீனாவில் மலேரியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட ஹூனான் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். தன் நான்கு வயது குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட்டு மலேரியா மருந்து கண்டுபிடிக்கும் பணியை துவக்குகிறார் து யோயோ. (சோசலிச சீனாவில் உழைக்கும் பெண்களின் குழந்தைகளை பல மாதங்கள் கூட கவனித்துக் கொள்ளக்கூடியதான சிறந்த காப்பகங்கள் செயல்பட்டு வந்தன என்பதை இதனூடாக அறிந்துகொள்ள முடிகிறது.)

பல மாதங்களுக்கு பின்னர் வேலையை முடித்து திரும்பி வரும்போது குழந்தையால் இவரை அடையாளம் காண முடியவில்லை. கிராமப்புறங்களுக்கு சென்று வேலை செய்ய பணிப்பதையே கலாச்சாரபுரட்சியின் கொடூரங்களாக கருதியவர்களிடையே குழந்தையை பிரிந்த தூ யோயோ -வை இயக்கியது எது? அவரே கூறுகிறார்.
“எனது சொந்த வாழ்க்கையை இழக்கக்கூட தயாரக இருக்குமளவுக்கு இந்த வேலை முக்கியமானதாக இருந்தது. மலேரியாவின் இறுதி நிலையிலிருந்த பல குழந்தைகளை அங்கு கண்டேன். அக்குழந்தைகள் வெகு வேகமாக செத்துக் கொண்டிருந்தார்கள். பல குழந்தைகள் நோயால் செத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு என்று சொந்த வாழ்வு இருக்க முடியுமா” என்று கூறினார் தூ யோயோ. உழைக்கும் மக்களின் நலனே பெரியது என்ற அன்றய சோசலிச சீனாவின் விழுமியம் இவரையும் ஆட்கொண்டிருந்தது. அனால் அமெரிக்க சந்தை பொருளாதார அறமோ நோயாளிகளின் நடுவே நின்று “எனக்கு லாபம் முக்கியம்” என்று முழங்குகிறது. 5000% விலையேற்றுகிறது.
மக்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் பால பாடங்களில் ஒன்று. அப்படித்தான் அன்றைய தலையாய பிரச்சனையான மலேரியாவிற்கும் மக்களின் பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு கிடைக்க்குமா என்று ஆய்வு செய்யப்பட்டது. தோழர் மாவோவின் வழிகாட்டுதலின்படி சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்படத்தக்க அம்சங்களை ஆய்வு செய்தார்கள். அக்குபஞ்சர் முறையில் மலேரியாவை குணப்படுத்த இயலுமா என்று ஒரு குழு ஆய்வு செய்துகொண்டிருந்தது. தூ யோயோ சீனாவின் நாட்டின் பல பாகங்களுக்கு பயணம் செய்து பாரம்பரிய மருத்துவர்களை சந்தித்து மருந்து குறிப்புகளை சேகரிக்கிறார். பல முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு ஒரு மருத்துவக் குறிப்பு நம்பிக்கையளிப்பதாக தெரிகிறது.
அதை மேலும் ஆய்வுக்குட்படுத்தி செழுமைபடுத்தி வெற்றிகரமாக எலியின் மீது சோதனை செய்கிறார்கள். ஆனால் மனிதனுக்கு இந்த மருந்து சரி வருமா? வேறு விளைவுகளை ஏற்படுத்துமா? உறுதியாக தெரியாத சூழ்நிலையில் து யோயோ யும் அவரது குழுவினரும் தங்கள் மீதே பரிசோதித்துக்கொள்கிறார்கள். இது குறித்து அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறுகிறார்
“ மருந்து ஆய்வு குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் இது எனது கடமை”.
தங்கள் மீது பரிசோதனை செய்து பாதிப்பில்லை என்பதை உறுதி செய்த பிறகு உடனடியாக மலேரியா பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மீதும் ஆய்வு செய்கிறார்கள்.
முதலாளித்துவ விழுமியமோ மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீது அவர்களுக்கே தெரியாமல் மருந்து பரிசோதனைகள் செய்து ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்துவருகிறது. ஆனால் சோசலிச சீனாவில் மருத்துவ ஆய்வாளர் தன் மீதே பரிசோதனை செய்து கொள்கிறார். பாதிப்பில்லை என்று உறுதி செய்த பின்னர் மக்கள் மீது பரிசோதிக்கப்படுகிறது. சோசலிச சீனா தன் நாட்டுமக்கள் மீது ஏகாதிபத்திய நிறுவனங்கள் மருந்து பரிசோதனை செய்வதையும் தடை செய்திருந்தது.
சோசலிச செஞ்சீனம் தயாரித்த மருந்து தான் இன்று உலகமுழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை மலேரியாவிலிருந்து மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. தோழர் மாவோவின் வழிகாட்டலில் கலாச்சார புரட்சி காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பயின்ற விஞ்ஞானிகளினால் உலகிற்கு வழங்கப்பட்ட கொடை இது.
சோசலிச விழுமியங்கள் தனி நபரை முன்னிறுத்துவதில்லை. தனி நபர்களின் பெயரில் இல்லாமல் சமூக சொத்தாகத்தான் இவர்களது கண்டுபிடிப்புகள் வெளிவந்திருக்கின்றன. தங்களது பெயர் வெளிவரவில்லை என்பது குறித்து இவரது குழுவில் எவருக்கும் வருத்தமில்லை. சோசலிச சமூகம் கூட்டுத்துவத்தில் தான் நிறைவு கண்டது.
விருது பெற்றபின் து யோ யோ அளித்த பேட்டியில் கூறுகிறார்,
“நாங்கள் கூட்டுத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். எங்கள் நாட்டில் தனிநபர்களுக்கு விருதளிப்பதில்லை. அணிகளுக்கு தான் அளிப்பது வழக்கம். வெளிநாட்டினர் அப்படியல்ல. அவர்கள் தனிநபர்வாதிகள். அதனால் தனி ஒருவராக எனக்களித்துள்ளார்கள்.” என்று பதிலளித்துள்ளார்.
இது வெறும் அடக்கமல்ல. இரண்டு சமூகங்களின் விழுமியங்களுக்கு இடையிலான முரண்பாடு. இன்றய முதலாளித்துவ சீனாவில் மாவோவின் சீனத்தில் இருந்த சோசலிச விழுமியங்களுக்கு இடமில்லை.
அதனால் தான் இந்த கண்டுபிடிப்பு மூலம் உங்களுக்கு பொருளாதார பலன் எதுவும் கிடைக்கவில்லையே என்ற கேள்விக்கு து யோயோ அளித்த பதிலில் வருத்தத்தின் சாயலை கூட நம்மால் பார்க்கமுடியவில்லை. கொள்ளை லாபமில்லாமல் தங்களால் தொழில் நடத்தமுடியாது என்ற முதலாளித்துவ மருந்து நிறுவனங்கள் கூறும் வழக்கமான பிலாக்கணத்தில் மனிதாபிமானத்தின் சாயலை கூட பார்க்க முடியாது. இரு சித்தாந்தங்களும் விழுமியங்களும் இதில் மோதிக்கொள்கின்றன.

“அறிவை அடக்கிவைக்க முடியாது” என்கிறார் து யோயோ . ஆனால் காப்புரிமை இருந்தால் தான் மேலும் மேலும் ஆய்வு செய்ய முடியும் என்கிறது முதலாளித்துவம்.
மனிதர்களின் உடல்நலனுக்காக போராடுவது விஞ்ஞானிகளின் கடப்பாடு என்கிறார் து யோயோ. கொள்ளை லாபமில்லாமல் அடுத்த மருந்து தயாரிக்க முடியாது என்கின்றன முதலாளித்துவ மருந்து நிறுவனங்கள்.
விருதுகளை விட நோயாளிகள் குணமடையும்போது அதிகம் மகிழ்கிறேன் என்கிறார் து யோயோ. பங்குச்சந்தையில் பங்கு மதிப்பு உயர 5000% விலையேற்றத்தையும் செய்ய துணிகிறது அமெரிக்க மருந்து நிறுவனம்.
நோயாளிகள் மட்டுமல்ல விஞ்ஞானிகளும்கூட இன்று முதலாளித்துவத்தால் கட்டுண்டு கிடக்கிறார்கள். நிறுவனம் விரும்புகிற ஆய்வுகளை செய்து கொடுக்கும் கூலியாட்களாக விஞ்ஞானிகளை மாற்றியிருக்கிறது முதலாளித்துவம். மக்கள் மத்தியில் பழக்கத்திலிருக்கும் அறிவுக்களஞ்சியங்கள் வீணடிக்கப்படுகின்றன. முதலாளித்துவ தளைகளிலிருந்து விஞ்ஞானத்தை விடுவிக்கும்போது தான் உழைக்கும் மக்களுக்கான கண்டுபிடிப்புகள் சாத்தியம்.
நமது நாட்டிலும் மக்களின் பாரம்பரிய அறிவும் வீணடிக்கப்படுகிறன. மஞ்சள் பாசுமதி போன்றவற்றிற்கு ஏகாதிபத்திய நிறுவனங்கள் காப்புரிமை பெறுகின்றன. நாட்டின் அறிவுச்சுரங்கள்கள் முதல் கனிமச்சுரங்கங்கள் வரை ஏகாதிபத்தியங்களால் கொள்ளையிடப்படுகின்றது. இதற்காக பழங்குடிமக்கள் இந்திய அரசினால் வேட்டையாடப்படுகின்றனர். அவர்களுக்காக போராடும் மாவோயிஸ்டுகளை ஒழிக்க உள்நாட்டு போரையே நடத்துகிறது அரசு.
பாரம்பரிய அறிவு ஏகாதிபத்தியங்களால் திருடப்படும் வேளையில் மத அடிப்படைவாதிகளோ மண்டை ஓட்டில் மருந்து தயாரிப்பதில் ஆரம்பித்து, கோமியத்தில் புற்று நோய்க்கு மருந்திருக்கிறது, திருநள்ளாறில் செயற்கைகோள்கூட ஜெர்க் ஆகிறது என்பதாக மூடநம்பிக்கைகள் நிரம்பி வழிகின்றன. கிரானைட் முதலாளிகளில் ஆரம்பித்த பல வகையான நரபலி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
நிலப்பிரபுத்துவத்தைம் ஏகாதிபத்தியங்களையும் வீழ்த்தும் போது தான் சோசலிசச சீனா போன்று மக்களுக்கான அறிவியல் ஆய்வுகளை முன்னெடுக்க முடியும். கொள்ளை லாபமீட்டும் முதலாளித்துவ விழுமியங்கள் வீழ்த்தப்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட கூட்டுத்துவத்தில் நிறைவு காணும் சோசலிச விழுமியங்களை நிறுவுவதற்கு அரசியல் ரீதியில் வேலை செய்வதே இன்றைய தேவை.
– ரவி
மேலும் படிக்க
- Turing Pharmaceuticals boss defends 5,000% increase in price of Daraprim – video
- Drug Goes From $13.50 a Tablet to $750, Overnight
- Nobel Prize goes to modest woman who beat malaria for China
- Tu Youyou: how Mao’s challenge to malaria pioneer led to Nobel prize
- Q. and A.: Tu Youyou on Being Awarded the Nobel Prize
In connection with the above article , we need to publish about Dr Norman Bethune too…