Sunday, June 20, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

-

பிரிக்கால் தீர்ப்பு: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் அடியாளாக நீதிமன்றம்!

டிசம்பர் 3 -ம் தேதி கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் கோவை பிரிக்கால் தொழிலாளர் வழக்கில், 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அவர்களின் வாழ்வைப் பறித்துள்ளது.

puduvai-pricol-demo-2கடந்த 2009-ம் ஆண்டு கோவை பிரிக்கால் நிறுவன தொழிலாளர்கள் தங்களது சட்டபூர்வ உரிமைகளுக்காகப் போராடிய போது, அந்நிறுவன HR அதிகாரியான ராய் ஜார்ஜ் தொழிலாளர்கள் மீது கொடிய அடக்குமுறைகளை ஏவினார். பிரிக்கால் நிர்வாகமும், உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பொய்யான காரணம் கூறி பணிநீக்கம், தற்காலிக பணிநீக்கம், ஊதிய வெட்டு போன்ற அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நியாயமாகப் போராடிய தொழிலாளர்கள் மீது சட்டவிரோதமாக ரவுடிகளை வைத்துத் தாக்கியது நிர்வாகம். நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே நடந்த இந்தப் போராட்டத்தில் HR அதிகாரி ராய் ஜார்ஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி கூட்டுச்சதி செய்து HR அதிகாரியைக் கொன்றனர் என்று கூறி வழக்கைப் பதிவு செய்தது. தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று வேட்டையாடியது போலிசு. அந்த வழக்கில் தான் மேற்படி தீர்ப்பு வந்துள்ளது.

puduvai-pricol-demo-4இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கின்ற வகையிலும், தொழிலாளர்களுக்கெதிரான நீதிமன்ற பாசிசத்தை அம்பலப்படுத்தும் வகையிலும், இந்த அரசுக் கட்டமைப்பே மக்களை ஆளத் தகுதியிழந்து, மக்களுக்கே விரோதமானதாக மாறிவிட்டதை விளக்கும் வகையிலும், திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தியது. ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருபுவனை கிளைச் செயலாளர் தோழர் மகேந்திரன் அவர்களும், புதிய ஜனநாகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச்செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும் விளக்கவுரையாற்றினார்கள்.

விண்ணதிரும் முழக்கங்களுடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் தோழர் சங்கர் தனது தலைமையுரையில், கோவை பிரிக்கால் வழக்கின் தீர்ப்பையும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் விளக்கி, “நீதிமன்றமும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு விரோதமாய் மாறிப் போனது. எனவே, இனி இவர்கள் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்காமல், உழைக்கும் மக்களுக்கான அரசினை நாமே நிறுவுவோம்” என்று நிறைவு செய்தார்.

puduvai-pricol-demo-3விளக்கவுரையில் பேசிய மகேந்திரன், “திருபுவனை வட்டாரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பெரும்பான்மை தொழிற்சாலைகளில் சொற்ப எண்ணிக்கையில் நிரந்த தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கணக்கின்றி சுரண்டுகின்றனர் முதலாளிகள்” என்று இவ்வாட்டாரத்தில் உள்ள, ரானே பிரேக்ஸ், மதர் பிளாஸ்ட், டெக்ஸ்பாண்ட், வேல் பிஸ்கட்ஸ், ஸ்வஸ்திக், ரானே மெட்ராஸ், டிடிகே உள்ளிட்ட தொழிற்சாலைகளின் ஊதிய உயர்வுப் போராட்டங்களை பட்டியலிட்டார்.

“குறிப்பாக, வேல் பிஸ்கட்ஸ் ஆலையில், ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் இழுபறி, வேறு வழியில்லாமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்கியது. தொழிலாளர்கள் தமது கண்டனத்தை அமைதியான வழியில் தெரிவிக்கும் பொருட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்குச் சென்றனர். உணவுப் பொருள் தயாரிக்குமிடத்தில் குண்டூசி உள்ளிட்ட சிறு பொருளும் வரக்கூடாது எனக் கூறி, நிர்வாகமே உற்பத்தியை நிறுத்தி விட்டு, தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலை நிறுத்தம் செய்கின்றனர் என்றும், அதனால் 8 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்யப் போவதாகவும் தொழிலாளர் துறையில் கூசாமல் பொய் புளுகி மிரட்டியது. தொழிலாளர் துறை அதிகாரியோ, அது பற்றி விசாரணை கூடச் செய்யாமல், நிர்வாகம் சொன்னதை அப்படியே பதிவு செய்து தனது வர்க்க விசுவாசத்தைக் காட்டினார். ஆனால், உண்மையில் நிர்வாகம் ஒரு புறம் கதவடைப்பு என்று சொல்லி மறுபுறம் சட்டவிரோதமான முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து உற்பத்தியில் ஈடுபட்டது. இதை அம்பலப்படுத்திப் பேசிய பிறகு தான், எந்தவித நிபந்தனையுமின்றி நிறுவனத்தை திறக்க வேண்டும் என ஆணை போடும் நிலைக்குத் தள்ளப் பட்டார் தொழிலாளர் துறை அதிகாரி. ஆனாலும், இன்னும் ஊதிய உயர்வு பிரச்சினை தீர்ந்தபாடில்லை”.

puduvai-pricol-demo-1“இது வேல் பிஸ்கட் கம்பெனியின் நிலை மட்டுமல்ல, பொதுவாகவே எந்த முதலாளியும் சட்டத்தை மதிப்பதில்லை. தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் கூட அனுமதிப்பதில்லை. ருபுவனை தொழிற் பேட்டையிலுள்ள மற்ற நிறுவனங்களின் நிலையும் அது தான்” என்பதை பகுதி மக்கள் உணரும் வகையில் சொந்த அனுபவங்களிலிருந்து விளக்கினார். “இந்தப் பின்னணியில் தான் இந்த பிரிக்கால் தொழிலாளர்களின் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். எனவே, நமது உரிமைகளை அரசின் தொழிலாளர் துறையோ, காவல்துறையோ பாதுகாக்காது, பெற்றும் தராது. நமது உரிமைகளை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என சொந்த அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன” என்று கூறி தனது உரையை முடித்தார்.

தோழர் லோகநாதன் தனது உரையில், “பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளைத் தர மறுத்து, அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட HR அதிகாரி, சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து போனதற்கு, தொழிலாளர்களைக் காரணமாக்கி, குற்றம் நிரூபிக்கப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். புதுச்சேரி பகுதியில் இந்தியா நிப்பான், எம்.ஆர்.எஃப், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை என தொழிலாளிகளை தற்கொலைக்குத் தூண்டியது அதிகாரிகள் தான் என அப்பட்டமாக நிரூபணம் ஆன பிறகும், அந்த அதிகாரிகள் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இரட்டை ஆயுள் தண்டனை. இது தான் இந்த அரசின் யோக்கியதை.

ஆனால், தொழிற்சங்கம் ஆரம்பிப்பதால் தான் பிரச்சினைகள் ஏற்பட்டு தொழிற்சாலைகள் மூடப்படுகிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப முதலாளிகளும், முதலாளித்துவ பத்திரிக்கைகளும், ஊடகங்களும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் ஓயாமல் புளுகித் திரிகின்றனர். இந்த புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் 13,000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதில் 800 தொழிற்சாலை களில் கூட தொழிற்சங்கங்கள் இல்லை என்ற ஒரு புள்ளி விபரமே இதற்குச் சாட்சி. மேலும், தொழிற்சாலையை மூடிய எந்த முதலாளியும் தனது தொழில் முடங்கி வீதிக்கு வந்து பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துவதாக வரலாறு இல்லை. இந்த 800 தொழிற்சாலைகள் உட்பட மூடப்பட்டதாகச் சொன்ன அனைத்து தொழிற்சாலைகளையும் ஏதோ ஒரு பெயரில், நடத்திக் கொண்டு தான் உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வது, அரசின் சலுகைகளைப் பெறுவது போன்ற உண்மைகளை மறைத்து சங்கம் வைத்து பிரச்சினைகள் செய்வதால் தான் தொழிற்சாலைகள் மூடப்படுவதாக தொழிலாளர்கள் மீது பழி போடுகின்றனர் முதலாளிகள். முதலாளிகளின் இந்த சட்டவிரோத செயல்கள் அனைத்துக்கும் உடந்தையாக இருப்பவர்களே அரசின் அதிகாரிகளும், ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளும் தான்.

முதலாளிகள், ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அடுத்தடுத்த கிளைகளைத் துவக்கி வளருகின்றனர். ஒவ்வொரு புது கிளைக்கும் தனது எந்த சொத்தையும் விற்று புதிய முதலீடுகள் செய்வதில்லை. அரசின் சலுகைகள், வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் பிரதானமாக, தொழிலாளிகளின் உழைப்பை ஒட்டச் சுரண்டுவதன் மூலமும், அதாவது, ஆசான் மார்க்ஸ் சொன்னது போல், தொழிலாளர்களின் கொடுக்கப்படா கூலியின் மூலம் லாபத்திற்கும் மேல் வரும் உபரியின் மூலம் தான் அடுத்தடுத்த கிளைகளைப் பரப்பி, அதன் மூலம் மேலும் மேலும் தொழிலாளர்களைச் சுரண்டுகின்றனர்.

இவ்வாறு தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை. இவ்வாறு தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக விடாப்பிடியாகப் போராடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை மட்டுமல்ல; மாருதி நிறுவனத்திற்கு எதிராகப் போராடி சிறையில் உள்ள தொழிலாளர் வழக்குக்கும் ஒரு முன்னுரையாகவும் தான் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த அநீதியான தீர்ப்பு.

கோவை பிரிக்கால் தீர்ப்பில், தொழிலாளர்கள் மீதான குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படாத போதும், அரசுத் தரப்பு சாட்சிகள், பொய் சாட்சிகள் என நீதிமன்றமே கூறிய போதும், குற்றத்திற்கான சதியில் ஈடுபட்டதாலேயே தண்டனையை உறுதி செய்வதாகக் கூறியுள்ளது நீதிமன்றம். குற்றங்கள் நீரூபிக்கப்பட வேண்டும் என்பதில்லை; முதலாளிகளை எதிர்த்துப் போராடினாலே தண்டனை தான் என்பது தான் நீதிமன்றம் இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்குச் சொல்லியிருக்கும் செய்தி.

பிரிக்கால் தீர்ப்பு மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீது தினம் தினம் அடக்குமுறைகளை ஏவிவரும் முதலாளித்துவத்திற்கு அடியாளாகத் தான் தொழிலாளர் துறையும், போலிசும், நீதிமன்றமும் செயல்படுகிறது. இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களுக்கும் தேவையற்றதாகவும், எதிர்நிலை சக்தியாகவும் மாறிவிட்டது. எனவே, நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பை தகர்த்து, அதிகாரத்தை நாமே கைப்பற்றுவதும், ஆலைகள் தோறும் ஆலைக்கமிட்டிகளை அமைத்து நமக்கான தேவைகளை நாமே நிறைவேற்றுவதும் தான் தீர்வு”.

இறுதியாக, நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி, செல்: 9597789801.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க