Friday, August 12, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் - மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

பேசுவது தேசபக்தி செய்வது தேசத் துரோகம் – மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

-

பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது!
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!
– மார்ச் 23 ஆர்ப்பாட்டம்

ன்பார்ந்த நண்பர்களே,

march-23-notice-1நிரந்தர தொழிலாளர்களே நாட்டில் இருக்கக் கூடாது என்பதிலும், எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட் முறையை அமல்படுத்துவதிலும் சேட்டுக்களின் (மோடியின்) அரசாங்கம் குறியாய் இருக்கிறது. நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டது. எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்த வழிவகை செய்து வருகிறது. 20 தொழிலாளிக்கு மேல் காண்டிராக்ட் முறையில் ஈடுபடுத்தப்பட்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற உச்சவரம்பை 100-ஆக உயர்த்துவதன் மூலம் லைசென்ஸ் இல்லாமலேயே பல காண்டிராக்ட்டுக்களை வைத்துக் கொள்ளவும் சதிகள் தயாராகி வருகின்றன.

இரவுப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதில் இருக்கின்ற கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுவதற்கு வசதியாக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தயாராகி வருகிறது, மத்திய அரசு. எந்தக் கடையையும் விடிய, விடிய திறந்து வைத்துக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் ஷாப்பிங் மால்கள், வலைப்பின்னல் நிறுவனங்கள் 24 மணிநேரமும் கல்லா கட்டிக் கொள்ளவும், சிறுவணிகத்தை ஒழித்துக் கட்டவும் ஏற்பாடு செய்துள்ளது.

ஆட்டோமொபைல், ஜவுளி, ஐ.டி மற்றும் ஐ.டி சார்புத் தொழில்கள், காலணி தயாரிப்பு, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்களை அத்தியாவசியப் பணிகள் என்று அறிவிக்க உத்தேசித்துள்ளதாக அரியானா மாநில பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. பெங்களூர், திருப்பெரும்புதூர், பூனா போன்ற தொழில் நகரங்களில் இயங்கி வருகின்ற ஆட்டோமொபைல் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் பலவும் இதே போல் அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரத்தில் கண்காணிப்பு கட்டமைப்பை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஓய்வறை, கேண்டீன் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் காமிராக்கள் வைத்துக் கண்காணித்து வருகின்றனர். இது போதாது என்று ஒவ்வொரு தொழிற்பேட்டையிலும் சிறப்பு போலிசு நிலையங்கள் வைக்கவும், தொழிலாளர்களது நடமாட்டத்தை மோப்பம் பிடிப்பதற்காக தொழிலக உளவு போலிசுப் பிரிவை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மோடியின் மைய அரசு மட்டுமின்றி, பா.ஜ.க ஆளுகின்ற ராஜஸ்தான், அரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகளும் ஜெட் வேகத்தில் செயல்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்ற அரியானா மாநிலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் கொடூரத்தின் உச்சத்தை தொட்டுள்ளது.
ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையே எந்த உரிமைகளுமற்ற கொத்தடிமைகளாக்கி வருகின்ற அதே தருணத்தில், நாட்டின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடித்து வருகின்ற பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதையும் தீவிரப்படுத்தி வருகிறது. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற, நமது நாட்டை அமெரிக்காவிற்கும் பிற வல்லரசுகளுக்கு மறுகாலனியாக்கும் கொள்கைகளை காங்கிரசு கட்சிதான் அறிமுகம் செய்து, அமல்படுத்தியது. ஆனால், காங்கிரசு கட்சி 20 வருடங்களில் செய்ததை, ஐந்தே வருடங்களில் மிஞ்சிவிட வேண்டும் என்று துடிக்கிறார், மோடி.

தொழிலாளி வர்க்கமும் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களும் இதையெல்லாம் உணர்ந்து விடக்கூடாது என்பதற்காக மதவெறி-சாதிவெறி போதையூட்டி அவர்களை பிளவுபடுத்தி வருகிறது. மதக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தி அச்சுறுத்தியும் வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் முசுலீம்கள், கிருத்துவர்கள், பழங்குடி மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய வைத்து பூஜைகள்-விழாக்களை நடத்தினர். தில்லியில் கிருத்துவ வழிபாட்டுத்தலங்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. பல இடங்களில் மசூதி இருக்கின்ற இடங்களை ஆக்கிரமித்து கோவில்கள் கட்ட எத்தணித்துள்ளனர். எதிர்ப்புகள் எழுந்ததையே காரணம் காட்டி மதக்கலவரங்களை நடத்தி பல அப்பாவிகளது உயிரைக் குடித்தனர். முசாபர்பூர் துவங்கி ஆக்ரா வரை வாரத்துக்கொரு மதவெறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மசூதிகளுக்கு குண்டு வைப்பது, பொது இடங்களில் குண்டு வைத்து முசுலீம்கள் மீது பழி சுமத்துவது என்கிற சதித்தனத்தோடு செயல்படுகிறது, ஆர்.எஸ்.எஸ் கும்பல். சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், அஜ்மீர், மக்கா மஸ்ஜித், தானே, கான்பூர், நந்தித், மாலேகான் (2 முறை), ஹூப்ளி, கோவா என கடந்த 4 ஆண்டுகளில் 10 குண்டு வெடிப்புகளை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல், பயங்கரவாதத்தின் உறைவிடமாக இருக்கிறது. இந்த இலட்சணத்தில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால் இசுலாம் ஒழிய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார், பி.ஜே.பி எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே.
பார்ப்பன (வைதீக) இந்து மதத்தின் உடன்பிறந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததற்காக பகுத்தறிவாளர்களான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரை பட்டப்பகலில் கொலை செய்தது, இந்து மதவெறி கும்பல். அதேபோல உத்திரப்பிரதேசத்திலுள்ள தாத்ரி நகரில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் சொல்லி அக்லக் என்கிற இசுலாமிய முதியவரை கொன்றுள்ளது. மாட்டுக்கறி தின்பதையும், விற்பதையும் தேசத்துரோக நடவடிக்கை போல சித்தரித்து, தாங்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் தடை செய்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை இழிவுபடுத்தி வருகிறது.

இந்துவாகப் பிறந்த நான், இந்துவாக சாகமாட்டேன் என்று முழங்கிய அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதாக நாடகமாடியது, இந்துத்துவா கும்பல். உண்மையில் சாதிவெறியும், இந்துமதமும் பிரிக்க முடியாத இரட்டைக்குழல் துப்பாக்கிகள். இதை நடவடிக்கைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அரியானா மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகளை சாதி வெறியர்கள் கொன்ற போது, நாய்கள் கொல்லப்படுவதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்க முடியுமா என்று கொழுப்புடன் பதில் சொன்னார், பா.ஜ.க அமைச்சர் வி.கே.சிங். சாதிக்கட்டமைப்பில்தான் இந்துமதம் உயிர் வாழ்கிறது என்பதை எவராவது மறுக்க முடியுமா?

ஹைதராபாத் மத்திய பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தலைமையிலான அம்பேத்கர் மாணவர் சங்கமானது ஆர்.எஸ்.எஸ் நச்சுப்பாம்பினையும், அதன் குட்டியான ஏ.பி.வி.பி என்கிற மாணவர் அமைப்பையும் அம்பலப்படுத்தியதை சகித்துக் கொள்ளாமல் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்து வதை செய்தது, பா.ஜ.க அரசு. இறுதியில் இந்த கும்பலின் சித்திரவதைகளுக்குப் பலியானார், ரோகித் வெமுலா. செத்த பின்னரும் அவரை தேசத்துரோகி என்றும், இன்னபிற குற்றச்சாட்டுகளைக் கூறியும் பிணத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது, பாசிசக் கும்பல்.

சென்னை ஐ.ஐ.டி-யில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் மீது தடை விதித்து தன்னுடைய பார்ப்பனத் திமிரைக் காட்டிக் கொண்டது, இந்த கும்பல். பெரியாரின் மண்ணிலே பார்ப்பன பாசிஸ்டுகளுக்குக் கொடுத்த பதிலடி காரணமாக வாலைச் சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தவர்கள், ஹைதராபாத்தில் ரோகித்தின் உயிரைக் குடித்த வெறியோடு, தற்போது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆட்டம் போடத் துவங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட 20 முன்னணியாளர்கள் மீது தேசத்துரோக வழக்கினைப் பதிவு செய்து அச்சுறுத்தி வருகிறது.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற நாட்டை மறுகாலனியாக்கும் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுகின்ற பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் தற்போது தேசபக்தி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது; மொத்த ‘தேசபக்தி’யையும் குத்தகைக்கு எடுத்துள்ள மோடி கும்பல், இந்திய நாட்டின் உள்நாட்டு தொழில்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கூட சூரிய ஒளி மின் தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற உரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக வர்த்தகக் கழகம் பறித்த போது அமைதி காத்தது, மோடி அரசு. அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலை அமைக்கின்ற நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்று நட்ட ஈடு தரத் தேவையில்லை என்கிற ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா, ரசியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்த நாட்டு மக்களை அடமானம் வைத்தது மோடி கும்பல்!

தேசத்துரோகிகளாகவும், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அச்சுறுத்தலாகவும் விளங்குகின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப்பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றது. காலனியாதிக்க காலத்தில் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் காட்டிக் கொடுத்த பாரம்பரியம் அவர்களுடையது. ஆங்கிலேயக் காலனி ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு தியாகியான மருது சகோதரர்கள் – திப்பு சுல்தான் – பகத்சிங்கின் பாரம்பரியம் நமது பாரம்பரியம். பார்ப்பன மதவெறியைத் திரைகிழித்த புத்தர்-பூலே-அம்பேத்கர்-பெரியாரின் மரபு நம்முடையது. வேதமத பார்ப்பனிய எதிர்ப்பு நமது தமிழ் மரபு. திராவிட – தமிழ் பாரம்பரியத்தை படைக்கலனாக ஏந்துவோம்! படையெடுத்து வருகின்ற ஆரிய – பார்ப்பனக் கும்பலை விரட்டியடிப்போம்!

தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே, அணிதிரண்டு வாரீர்!

பகத் சிங் நினைவு நாளில் ஆர்ப்பாட்டம்

நாள் : மார்ச் 23, 2016 நேரம்:  மாலை 4.30 மணி
இடம் : ராஜா திரையரங்கம் அருகில், புதுச்சேரி

[நோட்டீசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க