Monday, July 26, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 2

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 2

-

திருச்சி

காதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் நினைவு நாளான மார்ச் – 23 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளார்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து “பேசுவது தேச பக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

march-23-trichy-posterஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர் சுந்தரராசு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் விதேசிக் கொள்கையை அம்பலப்படுத்தும் வகையில் சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ராஜா கண்டன உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் கோவன் பேசுகையில்…..

தோழர் கோவன்
தோழர் கோவன்

“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நமது முன்னோர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் –ன் மூதாதையர்கள் அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடவில்லை. மாட்டுக்காக போராடினார்கள். ‘கோமாதா தான் தாய். கோமாதா தான் தெய்வம். மாட்ட பாதுகாக்கனும்’ என்று தேசவிடுதலைப் போராட்டத்தை திசை திருப்பினார்கள். எனவே இவர்களுக்கும் தேசவிடுதலைப் போராட்டத்துக்கும் தேசபக்திக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.

‘பாரத்மாதாகி ஜெய்! என்று யாரெல்லாம் சொல்லவில்லையோ அவர்களெல்லாம் தேசவிரோதி’ எனச் சொல்கிறான். அவனது தேசத் துரோகத்தை மறைப்பதற்கு இப்படி பேசுகிறான்.

மோடி அரசின் தேசத் துரோக நடவடிக்கைகள் ஏராளம்.

அணுஉலை என்பது மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறைகளை விட பாதுகாப்பு குறைவானது. நம்ம நாட்டுல நீர், காற்று, குப்பைகள் போன்ற மாற்று எரிசக்திகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், அணு உலைகள் தயாரித்து விற்கும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்துக்காக இந்தியாவில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு வழிவகுக்கு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் துவங்கிய இந்த வேலையை இப்போது வேகமாக அமுல்படுத்தும் வேலையில் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகின்றது.

போபாலில் மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை கசியவிட்டு ஒரே இரவில் 30,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையொத்த பாதிப்புகளை உருவாக்க காத்திருக்கின்றன அணுஉலைகள். ஆனால், ‘அணுஉலை மூலம் பாதிப்பு ஏற்பட்டால் நட்ட ஈடு தரமுடியாது’ என்று அணுஉலையை சப்ளை செய்கின்ற பன்னாட்டு கம்பெனிகள் சொல்கின்றன. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச அணுசக்தி கழகத்தில் நடந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் மோடி. அதன்படி, ‘அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் நட்டஈடு தரமுடியாது. வேண்டுமானால் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.’ ஆகவே, நட்டத்தையும் – இழப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் மோடி. இந்த நடவடிக்கைக்கு கையெழுத்து போட்டது தேசபக்தி நடவடிக்கையா? இது ஒரு அப்பட்டமான தேசத்துரோகம் இல்லையா?

இந்த தேசதுரோகத்தை மூடிமறைக்கத்தான் அவர்கள் குரலை மேலே எழுப்பி உச்ச குரலில் தேசபக்தி என்று பேசுகின்றார்கள்.

march-23-trichy-meeting-1அது மட்டுமல்ல கென்யாவில் நைரோபியில் நடந்த (WTO) உலக வர்த்தக கழகத்தின் மாநாட்டில் ‘உங்கள் நாட்டில் கொடுக்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்ற நிபந்தனையை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ரேசனில் அரசு  போடும் இலவச ரேசன்அரிசியை நம்பி உயிர்வாழும் மக்களுக்கு அதையே வாய்க்கரிசியாக மாற்றுவதற்கு, ரேசன் மானியத்தை ரத்து செய்து, 2018-க்குள் ரேசன் கடையை மூடிவிடுவதாக மோடி கையெழுத்திட்டுள்ளார். இது என்ன தேசபக்தி நடவடிக்கையா? இதற்கு பெயர்தான் வல்லரசு நாடா? என் நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, அரைகுறை உணவுக்கும் வேட்டு வைத்துவிட்டு என்ன தேசபக்திய பத்தி பேசுற நீ ! நீ செய்யக்கூடிய இந்த வேலைக்கு பெயர் தேசத்துரோகம் இல்லையா? அவனுடைய தேசத்துரோகத்தை மூடிமறைப்பதற்குதான் எங்களை தேசத்துரோகியென முத்திரை குத்துகின்றான்.

இவர்களின் துரோகத்தை மூடி மறைக்க செயற்கையான பகையை உருவாக்குவது, அவனோடு சண்டைபோட வைப்பது என்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட எதிரிதான் இசுலாமியர்கள். நாளை நீங்களும் எதிரியாகலாம். பாசிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை எதிரியாக்கினான். பின் தொழிலாளிகளை, கம்யூனிஸ்ட்டுகளை எதிரியாக்கி நரவேட்டையாடினான். அதுபோலத்தான் இன்று இசுலாமியர்களை தேசத்துரோகி என்கிறான். அதே நேரத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுடன் கைக் குலுக்குகிறான். விருந்து சாப்பிடுகின்றான்.

march-23-trichy-meeting-2 நம்ம தமிழ் நாட்டுல இந்து முன்னணிக்காரன் வீட்டில குண்டுவெடிச்சா அங்குள்ள இசுலாமியர்கள் மீது பழிபோடுவது, இறுதி விசாரணையில் குண்டுவைத்தது இந்து மக்கள் கட்சி பிரமுகர், இந்துமுன்னணி பிரமுகர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் என அம்பலப்பட்டு போவதுதான் நடக்கின்றது. இவர்களே குண்டுவைத்துவிட்டு இசுலாமியர்கள் மீது பழியைப் போட்டு பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெறுவது என்ற குறுக்கு வழியைதான் கடைபிடிக்கின்றார்கள்.

அப்படித்தான் உ.பி-யில் முசாபர்நகர் படுகொலை நடந்தது. லவ் ஜிகாத் என்ற நிகழ்வை நடத்தி இந்துப் பெண்களை இசுலாமிய இளைஞர்கள் மயக்கி கவர்ந்து செல்கின்றார்கள் என்ற பொய்யைச் சொல்லி அதன் மூலமாக 40-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தார்கள் அதன்பின் உ.பி தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியது.

இன்று தமிழகத்தில் கூட்டணிக்கு செல்ல யாரும் தயாரில்லை. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் வடமாநிலத்தில் குண்டு வைத்தது போல் இங்கும் குண்டுவைத்தால் வெற்றி பெற்றுவிடலாம். அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியாவது, அய்யாவோட, அம்மாவோட கூட்டணியாவது. ஒரே கூட்டணி நாம்தான் என்ற கனவில் உள்ளனர். குண்டு வைப்பது அவர்களுக்கு ஒரே ஒரு எளிமையான வழி. அதனைப் பயன்படுத்தி பொது எதிரியை சித்தரிப்பதும் அதனை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதும் நடக்கின்றது.

march-23-trichy-meeting-6இது எப்படி அம்பலப்பட்டு போனது என்றால் முசாபர் நகரில் குண்டுவைத்த காவி பயங்கரவாதிகளை கண்டறிய ஜே.என்.யு மாணவர்கள் தங்களை முன்னாள் மாணவர்கள் என்றும் நாங்களும் ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார அமைப்பை சார்ந்தவர்கள் தான் என பத்திரிகையாளர்கள் போல உ.பி மாநிலத்தின் எம்.எல்.ஏ சுரேஷ் ரானா என்பவரிடம் பேட்டிக்கண்ட போது அவன் சொல்கிறான். ‘லவ் ஜிகாத் என்பது நாங்கள் உருவாக்கிய அமைப்புதான். நாங்கள் தான் சாலு என்கின்ற இந்துப் பெண்னை சலீம் என்கிற இசுலாமிய இளைஞன் மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றதாக சலீம் மீது தாக்குதல் நடத்தினோம், படுகொலையை நடத்தியதும் நாங்கள் தான்’ என ஒப்புக்கொண்டான். இதனை பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டனர் ஜே.என்.யு மாணவர்கள். அப்படித்தான் முசாபர் நகர் கலவரத்தை திரையிட்டனர் ஜே.என்.யு மாணவர்கள்.

அதை திரையிட்டதற்காக ரோகித் வெமுலா கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பு என்ற வட்டத்துக்குள் தனது வரம்பை நிறுத்திக் கொள்ளாமல், சாதி ரீதியாகவும்- மத ரீதியாகவும் மக்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற ஆத்திரத்தில் ரோகித் வெமுலா இப்பிரச்சினையில் தலையிட்டார். பண்டாரு தாத்தேத்ரேயா, ஸ்மிருதி ராணி ஆகிய பி.ஜே.பி எம்.பி.க்களின் மிரட்டல், சித்திரவதையால் ரோகித் கல்லூரியை விட்டு விரட்டப்பட்டார். அதன் பின்னும் சும்மா இல்லாமல் உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்தார்கள். அதன் பிறகுதான் ரோகித் தற்கொலை செய்து கொண்டார். தொகுப்பாக பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்படிதான் மாட்டுகறி வைத்திருந்ததாக கூறி ஒரு இஸ்லாமிய முதியவரான அக்லக் என்பவரை கொலை செய்தது, இந்துத்துவ கும்பல். அவரது மகன் சங்க பரிவார கும்பலால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையிருமாய் மருத்துவமனையில் கிடக்கின்றார். இப்பிரச்சனையை ஆய்வு செய்தபோது அங்கிருந்தது மாட்டுகறி அல்ல ஆட்டுக்கறி என்பது நிரூபணமானது. இப்போது சொல்லுங்கள் செத்துப் போனவரை உயிரோடு கொடுக்க முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். இறந்து போன முதியவரின் மகள்கள் இருவருக்கும் அவ்வூரில் உள்ள இந்துக்கள் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மக்களுக்கு மதம் வேறாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்து வருகிறோம் என நிருபித்துள்ளனர்.

ஹரியானாவில் மாட்டு தோலை உரித்த குற்றத்திற்காக இரு இளைஞர்களை அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதம் – சாதி மாறி காதலித்தால் வெட்டி கொல்கிறார்கள். தற்போது கூட உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பசுமாட்டுக்கும் காளைமாட்டுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல். இந்த கும்பல் தான் மதம் – சாதி மாறி காதலித்த தம்பதிகளை வெட்டி கொல்கிறார்கள். விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.

மராத்வாடா பல்கலைகழகம், தமிழகத்தில் கோவை கலவரம், ஹரியானாவில் ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க என எல்லா வகையிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அடியாளாக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் தான் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வெட்டி கொல்கிறார்கள். எனவேதான், ‘நான் பிறக்கும் போது இந்துவாக பிறந்தேன். சாகும் போது இந்துவாக சாக மாட்டேன்’ என முழங்கியதோடு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார் அம்பேத்கர். இவரை தூக்கிக் கொண்டு விழா நடத்தும் பார்பன தேச துரோகிகள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெட்டி கொல்கிறார்கள். யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கிறோர்களோ அவர்கலெல்லாம் தேச துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

வெள்ளைக்காரன் ஆட்சி தொடங்கி இன்று வரை காட்டிக் கொடுப்பதும், கூட்டிக்கொடுப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாக உள்ளது. இத்தகைய வஞ்சக சதிகளுக்கு எதிராக அன்றே ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் போன்ற எண்ணற்ற தியாகிகள் போராடியுள்ளனர். அவர்களின் பாதையிலே செல்வதின் மூலமே நாம் மக்களுக்காக அதிகாரத்தை நிலை நாட்ட முடியும். தேசத் துரோகிகளாகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அச்சுறுத்தலாகவும் உள்ள பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப் பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதை இல்லை. நாடு மீண்டும் அடிமையாவதையும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்ன பாசிசத்தையும் முறியடிக்க வேத பார்ப்பனிய எதிர்ப்பை மரபாகக் கொண்ட தமிழ் பாரம்பரியத்தின் படைகளாக இயங்குவோம்” என தனது உரையை முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே பாடப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலைக் குழுவின் புரட்சிகர பாடல்கள் குழுமியிருந்த மக்களுக்கு புரட்சிகர உணர்வை ஊட்டியது. பறை இசையோடு போடப்பட்ட விண்ணதிரும் முழக்கங்களும் உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை தாங்கள் தான் நிலைநாட்டி கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.

இறுதியாக ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர். கோபி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 8903042388

சென்னை

பேசுவது தேசபக்தி: செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது !
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் !

march-23-chennai-meeting-02புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக, மேற்கண்ட தலைப்பின் கீழ் பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் இன்றைய தேர்தல் கூட்டணி (சூதாட்ட) நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கினார். குறிப்பாக, மத்திய பட்ஜெட் ‘விவசாயிகளுக்கான பட்ஜட்’ என புளுகிக்கொண்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் ஈவிரக்கம் இல்லாமல் பறிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதையே நோக்கமாகவும், அதன் மூலம் நாட்டையே அடமானம் வைக்கும் சதித்தனத்தைப் பற்றி அம்பலப்படுத்தவோ, எதிர்த்து போராடவோ யாரும் இல்லாத நிலையில் நாட்டை மறுகாலனியாக்கப்படுவதிலிருந்து தடுக்க நக்சல்பாரிகளின் வாரிசுகளாகவும், பகத்சிங்கின் வாரிசுகளாகவும் களமிறங்கவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும் என வலியுறுத்தினார்.

தோழர் சிவா
தோழர் சிவா

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டனவுரையில் பா.ஜ.க ஆட்சிபொறுப்பேற்றபிறகு இந்து மதவெறி பாசிசத்தை அதிதீவிரமாக அரங்கேற்றி வருவதையும். சமீபத்தில் சென்னை IIT-யில் துவங்கி, ஹைதராபாத், டெல்லி வரையிலான மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்தி பேசினார். இத்தகைய சூழ்நிலையில் சி.பி.ஐ- சி.பி.எம். போலி கம்யூனிஸ்டுகளோ மக்களை அணிதிரட்டி போராடுவதற்கு மாறாக சாதாரண ஓட்டுக்கட்சிகளைவிட கீழ்தரமாக கூட்டணி அமைத்துக்கொண்டு பிழைப்புவாதத்தை நடத்திவருகிறது என்பதை நையாண்டித்தனமாக அம்பலப்படுத்தி பேசியபோது மக்கள் கரவோசை எழுப்பி ஆமோதித்தனர்.

தோழர் சுதேஷ்குமார்
தோழர் சுதேஷ்குமார்

நான்கு மாவட்டங்களிலிருந்தும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்த்னரோடு 400-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்து மதவெறி பாசிசத்திற்கு எதிராகவும், திராவிட தமிழ் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும் விண்ணதிர கண்டன முழக்கமிட்டனர்.

இறுதியாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் சொ.செல்வகுமார் நிறைவு செய்தார்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941

 

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க