privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் - தொகுப்பு 1

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

-

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; பகத்சிங் நினைவு நாள் - ஓசூர் 2016
மறுகாலனியாக்க எதிர்ப்புத் தினம்!
ஓங்கட்டும் நாட்டுப்பற்று! ஒழியட்டும் மறுகாலனியாக்கம்!

1. கிருஷ்ணகிரி

‘’பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் கிருஷ்ணகிரியில், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு தோழர் அசோக்குமார் தலைமை வகிக்க தோழர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். உரையில், தொழிற்சாலைகளில் நிரந்தர தொழிலாளர்களை ஒழித்து விட்டு காண்டிராக்ட் முறையை அமல்படுத்த வெறியாய் இருக்கும் மோடி அரசாங்கத்தை அம்பலப்படுத்தினார். 20 தொழிலாளர்களுக்கு மேல் காண்டிராக்ட் முறையில் ஈடுபடுத்தப்பட்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற உச்சவரம்பை 100-ஆக உயர்த்துவதன் மூலம் லைசென்ஸ் இல்லாமலேயே பல காண்டிராக்ட்டுக்களை வைத்துக் கொள்ளவும் சதிகள் தயாராகி வருவதை சுட்டிக்காட்டினார்.

மேலும் இரவுப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்த வசதியாக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தயாராகி வருவதன் மூலம் அவர்களை மேலும் சுரண்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை விளக்கினார். அதோடு மட்டுமின்றி ஆட்டோமொபைல், ஜவுளி, ஐ.டி மற்றும் ஐ.டி சார்புத் தொழில்கள், காலணி தயாரிப்பு, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்களை அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு தொழிலாளர் உரிமையை பறிக்க திட்டமிட்டிருப்பதையும் புரிய வைத்தார்.

இதுபோன்ற அடுக்கடுக்கான தாக்குதல்கள் தொழிலாளர்கள்மீது ஏவப்பட்டுவரும் நிலையில் தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தாக்குதலை முறியடிக்கும் வகையில் போராட்டத்தை கட்டியமைக்க முன்வரவேண்டும் என்றார். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற நாட்டை மறுகாலனியாக்கும் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுகின்ற பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் அதை மறைப்பதற்கு தற்போது தேசபக்தி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்திய நாட்டின் உள்நாட்டு தொழில்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கூட சூரிய ஒளி மின் தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற உரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக வர்த்தகக் கழகம் பறித்த போது அமைதி காத்தது, மோடி அரசு. அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலை அமைக்கின்ற நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்று நட்ட ஈடு தரத் தேவையில்லை என்கிற ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா, ரசியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்த நாட்டு மக்களை அடமானம் வைத்தது மோடி பரிவாரம்!

தேசத் துரோகிகளாகவும், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அச்சுறுத்தலாகவும் விளங்குகின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப்பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றது. காலனியாதிக்க காலத்தில் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் காட்டிக் கொடுத்த பாரம்பரியம் அவர்களுடையது. ஆங்கிலேயக் காலனி ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு தியாகியான மருது சகோதரர்கள் – திப்பு சுல்தான் – பகத்சிங்கின் பாரம்பரியம் நமது பாரம்பரியம்.

பார்ப்பன மதவெறியைத் திரைகிழித்த புத்தர்-பூலே-அம்பேத்கர்-பெரியாரின் மரபு நம்முடையது. வேதமத பார்ப்பனிய எதிர்ப்பு நமது தமிழ் மரபு. திராவிட – தமிழ் பாரம்பரியத்தை படைக்கலனாக ஏந்துவோம்! படையெடுத்து வருகின்ற ஆரிய – பார்ப்பனக் கும்பலை விரட்டியடிப்போம்! என்று அறைகூவிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிச் சிறார்களான சிறுமி நக்சல்பாரி மற்றும் ஓவியா இருவரும் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை..” எனும் புரட்சிகர பாடலை எழுச்சியோடு பாடினர். இறுதியாக, தோழர் ராஜி நன்றியுரையாற்றினார். மேலும், அங்கேயிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் , கடைகாரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கூடிநின்று கவனித்துச் சென்றனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.
    தொடர்புக்கு : 9788011784.

_________________

2. விருத்தாசலம்march23-viruthachalam_rsyf-(1)

பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கல்லூரி இளைஞர்களிடமும் மற்றும்  உழைக்கும் மக்களிடத்தில் கிராமத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. திரு கொளஞ்சியப்பார் அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடத்தில் பிரசுரம் கொடுத்து பகத்சிங் நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. 1947 க்கு முன் ஒரு ஏகாதிபத்தியம் (இங்கிலாந்து) நம்மை நாட்டை கொள்ளையடித்தான். அந்த காலனியாக்கத்தை எதிர்த்து போராடினான் தோழன் பகத்சிங். இன்று பல பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டை கொள்ளையடிக்கிறார்கள். இந்த மறுகாலனியாக்கத்தை எதிர்த்து  நாமும் போராட வேண்டும் என மாணவர்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.

பெரியவடவாடி கிராமத்தில் பு.மா.இ.மு கிளைச் செயலர் வீரச்செல்வன் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது கூட்டத்தில் விருத்தாசலம் பகுதி பு.மா.இ.மு இணை செயலர் மணிவாசகம் பேசுகையில் ஓட்டு போடுவதால் நமக்கான பிரச்சனைகள் எதுவும் தீராது, போராட்டம் மூலமாகதான் தீர்க்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.  சிதம்பரம் பகுதி அமைப்பாளர் தோழர் மணியரசன் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக செல்போனில் ஆபாசம், சாராயக்கடை என்று நம்மை திசைமாற்றிவிட்டு நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள், இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் புரட்சிகர அமைப்புதான் தீர்வு என்றார்.

விருத்தாசலம் பகுதி  செயலர் கதிர் பேசுகையில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக ஏன் கடைபிடிக்க வேண்டும்? இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சிலர் பணத்துக்காக கொலை செய்கிறார்கள், கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைத்தும் வியாபார பண்டமாகிவிட்டது, விவசாயிகள் விளைநிலத்தை விட்டே வெளியேற்றப்படுகிறார்கள், பொதுத்துறை அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது அன்று காலனியாக்கத்துக்கு எதிராக போராடிய பகத்சிங் பாதையில் நாமும்களம் இறங்குவோம் அப்போதுதான் நாம் உரிமைகளை மீட்க முடியுமே தவிர தேர்தல் பாதை அல்ல புரட்சி பாதைதான் அந்த பாதையில் திரள்வோம் என்று அறைகூவினார்.

அதேபோல் பூவனூர் கிராமத்தில் இரண்டு இடத்திலும், மாத்தூர் பகுதியில் இரண்டு இடத்திலும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது, பூவனூர் கிராமத்தில் செயலர் கணேஷ், இ.செ கார்த்தி மற்றும் மாத்தூரில் கல்லூரி மாணவர் ஜெயபாண்டி தலைமைதாங்கி பேசினார். தெருமுனை கூட்டங்களை திரளான மக்கள் திரண்டு பார்த்தனர். மாணவர்கள், இளைஞர்கள் விட்டேத்தியாக திரியும் இந்த காலத்தில் இப்படி இளைஞர்கள் சமூக உணர்வுடன் நாட்டுப்பற்றுடன் செயல்படுவதாக கூறி பகுதி மக்கள் வரவேற்றனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாசலம்

______________________

3. திண்டிவனம்மார்ச் 23 திண்டிவனர் பு.மா.இ.மு

திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, மற்றும் அண்ணா பொறியியல் கல்லூரி, நுழைவு வாயில்களில்  23.03.2016 அன்று பிரசுரம் வினியோகிக்கப்படடு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் பிரசுரத்தை வாங்கி ஆர்வத்துடன் படித்தனர். கல்லூரி பேராசிரியர்களும் தோழர்கள் வினியோகம் செய்யும் போது முன்வந்து வாங்கி படித்துவிட்டு மாணவர்களுக்கு இது போன்ற தலைவர்களை எடுத்துக் கூறுங்கள் என்று உற்சாகப்படுத்தினர்.

அண்ணா பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே JNU பிரசுரம் கொடுக்கப்பட்டது. அதை நினைவுகூர்ந்த மாணவர்கள் பலர் பகத்சிங் நினைவுநாள் பிரசுரத்தையும் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திண்டிவனம்.         

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க