மோடி அரசைப் பணிய வைத்த பெங்களூரு தொழிலாளர்களிடமிருந்து கற்போம்!
இந்தியாவின் வளங்களையெல்லாம் பன்னாட்டு கம்பெனிகள் சூறையாடுவதற்கு தூக்கிக் கொடுத்தாயிற்று. இனி எஞ்சியிருக்கும் தொழிலாளர் வைப்பு நிதியையும் (PF-Provident Fund) ஒட்டச்சுரண்டி சந்தையில் அடகுவைக்கலாம் என நினைத்த மோடி அரசின் பகற்கொள்ளையை பெங்களூரு தொழிலாளிகள் போர்க்குணத்துடன் போராடி முறியடித்திருக்கின்றனர்.
கடந்த இருநாட்களாக இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் பெங்களூரு, ஆடை ஏற்றுமதி தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டத்தால் சிவந்திருக்கிறது. 20,000-க்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதித் துறை தொழிலாளர்கள் பெங்களூரு மாநகரை முற்றுகையிட்டு மோடி அரசின் பி.எஃப் திருட்டுக்கு எதிராக போராடியிருக்கின்றனர்.

கடந்த மார்ச் 12-ம் தேதி பி.எப். சட்டத்தின் விதிமுறைகளைத் திருத்துவதாக மோடி அரசு அறிவித்தது. அதன்படி, தொழிலாளர்கள் 58 வயது வரை பி.எஃப். பணத்தை எடுக்க முடியாது; தொழிலாளர்களால் 7 ஆண்டுகள் வரை கோரப்பட்டாத நிதியை அரசு வேறு வகைகளில் பயன்படுத்தலாம்; ரூ 15,000-க்கு மேல் ஊதியம் வாங்கும் தொழிலாளர்களுக்கு பி.எஃப் பங்களிப்பு செய்யப்படாது போன்ற பல தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இந்தத் திருத்தம் அமைந்திருந்தது.
இந்தத் திருத்தம் தொழிலாளர்களின் பி.எஃப். சேமிப்புத் தொகையான 6 இலட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான சதித்திட்டமாக அமைந்துள்ளது. இதனால், இத்திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் கண்டனக் குரல்களும், எதிர்ப்புகளும் வந்து கொண்டிருந்தன.
ஏற்கனவே தாங்கமுடியாத சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் இந்தியத் தொழிலாளிகள், தமது பி.எஃப் சேமிப்பில் உள்ள பணத்தை வைத்துதான் குடும்ப நிகழ்ச்சிகள், மருத்துவச் செலவுகள், கல்யாண நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்துவருகின்றனர். மேலும் தற்பொழுது நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தர வேலையிலும் கிடையாது. 40 வயது பூர்த்தியாகும் முன்பே பல கம்பெனிகளால் ஒப்பந்தத் தொழிலாளியாக்கப்பட்டு வேலையிழந்து நிர்க்கதியாக இருக்கும் பொழுது 58 வயதில் தான் பி.எஃப் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொழிலாளர்களின் குரல்வளையை நசுக்கிக் கொல்கிற செயலாகும். மேற்படி இந்தவிதியை ஏப்ரல்-1-லிருந்து மாற்றி மே 1-க்குள் முடித்துவிட கவனமாய் இருந்த மோடி அரசின் சதிச்செயலை தொழிலாளிகள் நேரடியாக களம் கண்டு முறியடித்திருக்கின்றனர்.

பெங்களூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை ஏற்றுமதி தொழிற்சாலைகளில் 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 18-ம் தேதி திங்கள் அன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பி.எஃப் தொடர்பான மோடி அரசின் புதிய விதிமுறைகளை எதிர்த்து பெங்களூரு-ஓசூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 80%-க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.
ஷாகி ஏற்றுமதி தனியார் தொழிற்சாலையின் நான்காவது யூனிட்டைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் திங்கள் அன்று காலை 8.45 மணி அளவில் கொடிச்சிகனகள்ளியில் ஒன்று கூடி போராடியதாக தெரிவிக்கிறது பெங்களூரு மிரர் பத்திரிகை. நேரம் செல்லச் செல்ல தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,000, 10,000ஆகி, 20,000 வரை தொட்டிருக்கிறது. இதில் ஷாகி தனியார் ஆலைத்தொழிலாளிகள் தவிர, கே.மோகன் அண்ட் கோ எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட், பொம்மனஹள்ளியில் இருக்கும் ஜாக்கி ஆலைத்தொழிலாளிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
பொம்மனஹள்ளி தவிர ஜஜ்ஜாலகிரி மற்றும் பீன்யா தொழிற்சாலைப் பகுதி, மதூர் தாலுகாவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையை மறித்து தொழிலாளிகள் போராடினர். போராடும் தொழிலாளிகளை ஒடுக்க நினைத்த போலீசு படையை தொழிலாளிகள் கற்களுடன் எதிர்கொண்டனர். சாலை மறியல் நடந்துகொண்டிருக்கும் பொழுதே 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் படை சிங்காசந்திராவில் இருக்கும் வட்டார வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறது.

போராட்டக்குழுவின் தலைமையைக் கண்டுபிடித்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைக்கலாம் என்று நினைத்த போலீசு படை, எப்படி இவ்வளவு கூட்டம் கூடியது? யார் போராட்டத்தை நடத்துவது? யாரிடம் பேச்சு வார்த்தை நடத்துவது என்று தெரியாமல் தொழிலாளிகள் அனைவரும் பொறுப்பேற்று நடத்தும் போராட்டத்தைக் கண்டு குலை நடுங்கி நின்றிருக்கிறது. பத்திரிகைகளோ ‘தலைவரற்ற போராட்டம் (Leaderless Protest)’ என்று வர்ணித்துவிட்டு நொறுங்கிப் போன அரசுக்கட்டமைப்பை பாதுகாக்கும் வேலையில் கனஜோராக இறங்கியிருக்கின்றன. தொழிலாளிகளின் போர்க்குணமிக்க போராட்டமோ பெங்களூரு முழுவதும் வடக்கே ஜலஹள்ளியிலும் மேற்கே நீலமங்கலா பேனர்ஹாட்டா சாலையிலும் தெற்கே ஓசூர்-ஹெப்பாகோடி சாலையிலும் வலுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஏப்ரல் 19-ம் தேதி அதிகாலை முதல் பெங்களூருவின் பல இடங்களில் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக தொழிற்பேட்டைகள் நிறைந்த கொரகுஞ்ஜி பாள்யா, காரேபாவி பாள்யா, கோரமங்களா, ஆனெக்கல், கோடிசிக்கன ஹள்ளி, தும்கூர் ரோடு, ஜாலஹள்ளி கிராஸ், நீல மங்களா, பீன்யா மற்றும் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹொசாரோடு, பொம்மனஹள்ளி, கார்வே பாள்யா, ஹெப்பகோடி என நகரின் பல இடங்களில் சுமார் இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல மொழி பேசும் இந்தத் தொழிலாளர்கள் தங்களது பி.எஃப் பணத்தை மோடி அரசு கொள்ளையடிப்பதை உணர்ந்து ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, பெண்கள் இளம் பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் முன்னணியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் கொதிக்கும் தார்சாலையில் அமர்ந்து போராடினர்.
திங்களன்று தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியதை பார்த்த போலீசு மறுநாள் காலை முதலே, தொழிலாளர்கள் கூடவிடாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தது. முன்கூட்டியே தொழிலாளர்கள், சாலையில் நின்று கொண்டிருப்பவர்களை எல்லாம் கைது செய்து ஆட்டம் போட்டது. இருப்பினும் தொழிலாளர்கள் குவிவதை போலீசால் தடுக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக இரவும் பகலும் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரகுஞ்ஜி பாள்யாவில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் ஆலையின் முன்னே குவிந்து போராட்டம் செய்த போது அதனைத் தடுத்தது போலீசு. பெண் தொழிலாளர்களை கொஞ்சமும் இரக்கமின்றி ஆண் போலீசு தாக்கியது. போலீசு தடியடி நடத்தினாலும் பெண் தொழிலாளர்கள் அஞ்சாமல் தங்களது கோரிக்கையை முழக்கங்களாக உரக்க வெளிப்படுத்தினர். போலீசாரின் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோடிசிக்கன அள்ளியில் காலை முதலே போலீசு குவிக்கப்பட்டு அங்கு யாரும் நிற்கக் கூடாது என அடித்து விரட்டத் தொடங்கியது. இதனை எதிர்த்துக் கேட்ட தொழிலாளர்களை சீருடை அணியாத போலீசு குண்டர்கள் தாக்கினர். இதனால், அங்கேயும் தொழிலாளர்கள் வீதியில் குவியத் தொடங்கினர்.
எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது போலீசு. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தும்கூர் ரோடு சாலையில் இருந்த கர்நாடக அரசு பேருந்துக்கு தீவைத்து எரித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போர்க்களமாக மாறியது. முற்றிலுமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதேபோல, ஜாலஹல்லி கிராஸ் பகுதியில் மாநகர பேருந்து எரிக்கப்பட்டது. கார்வே பாள்யாவில் திரண்ட தொழிலாளர்களை போலீசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பெண்கள் என்றும் பார்க்காமல் தடியடி நடத்தி தனது கொடூர முகத்தைக் காட்டிக்கொண்டது.

அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரியும் ஹெப்ப கோடி தொழிற்பேட்டையில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் குவிந்தனர். இதனால், தமிழகத்திற்கான அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில், போலீசு அமைதியாக போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால், போலீசை எதிர்த்து தொழிலாளர்கள் கற்கள் வீசித் தாக்கினர். தொழிலாளர்களின் போராட்டத்தை போலீசால் அடக்க முடியவில்லை. இதன்பின்னர், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இருப்பினும் தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல் வீரத்துடன் எதிர்த்துப் போராடினர்.
அன்றாடக் கூலிகள் போல கொத்தடிமைகளாக பணிபுரிகின்ற கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உதவு பி.எஃப். நிதியையும் மோடி-தத்தாத்ரேயா கும்பல் கொள்ளையடிக்க முயற்சிப்பதைக் கண்டு தொழிலாளர்கள் இந்த அளவிற்கு அணிதிரள்வார்கள் என ஆளும் வர்க்கங்களும் அரசும் எதிர்பார்க்கவில்லை. ‘அமைப்பு ரீதியாக இந்தியத் தொழிலாளர்கள் வலுவாக திரட்டப்படவில்லை, அதனால், எப்படி வேண்டுமானாலும் தொழிலாளர்களின் சட்டங்களைத் திருத்தி கொத்தடிமையாக்கி விடலாம்’ என்ற மோடி கும்பலின் சதிகளை, கனவைத் தகர்த்தெறிந்துவிட்டனர் பெங்களூரு தொழிலாளர்கள். இதன் மூலம் பி.எஃப். சட்ட விதிமுறைகள் திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்களின் பணத்தைக் கொள்ளையடிக்க மோடி கும்பல் திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் போராட்டத்தை கடுமையாக ஒடுக்க முயற்சித்து தடியடி, கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது, கர்நாடக காங்கிரசு அரசு. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இவ்வாறெல்லாம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதும் தொழிலாளர்களின் போராட்டத்தைக் கலைக்க முடியாமல் போன முதலமைச்சர் சித்தராமையா, “தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதுதான், ஆனால், தொழிலாளர்கள் சட்டத்தைக் கையிலெடுப்பது தவறு, பொதுச் சொத்துக்களுக்கு தீவைப்பது தவறு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தொழிலாளர்களுக்கு எதிரான தனது திமிரை வெளிப்படுத்தினார். மேலும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை சிறைவைத்து அடக்குமுறை செலுத்தி வருகிறது கர்நாடக அரசு.
இந்நிலையில் மோடி-தத்தாத்ரேயா கும்பல் தொழிலாளின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பி.எஃப் சட்ட விதிமுறைகள் திருத்ததை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தொழிலாளர்களை மத ரீதியில் பிளவுபடுத்தி, நுகர்வுக் கலாச்சார போதையில் ஆழ்த்தி, அவர்களது உரிமைகளைப் பறித்து ஒட்டச் சுரண்டுவதற்காக மோடி அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் போட்ட சதித்திட்டத்தை தவிடுபொடியாக்கியுள்ளனர் பெங்களூரு தொழிலாளர்கள். இதற்கு பணிந்துதான் மோடி அரசும் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளது.

பெங்களூரு தொழிலாளர் எழுச்சி, சமகாலத்தில் பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
- இந்த அரசு கட்டமைப்புகளான சட்டம், காவல், நீதி, தேர்தல், பாராளுமன்றம் அனைத்தையும் தொழிலாளிகள் நம்பாமல் அவற்றை தூக்கி எறிந்துவிட்டு தன் பிரச்சனையை தாமே கையில் எடுத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்த அரசு ஆள அருகதையற்று தோற்றுபோய்விட்டது என்பதுதான். இதன்படி பெங்களூரு தொழிலாளிகளின் எழுச்சி தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை மூடுவது எப்படி? விவசாயிகள் தற்கொலையை எதிர்ப்பது எப்படி? கல்விக்கொள்ளையை எங்கனம் எதிர்ப்பது? தேர்தல் எனும் மாயையிலிருந்து தெளிவது எப்படி என்று நாட்டு மக்களுக்கு நடைமுறை பாடத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
- தொழிலாளிகளின் பி.எஃப் பிரச்சனை பொருளாதார கோரிக்கை என்ற அளவில் மட்டுமே தான் இருந்தது என்றாலும் மோடி கும்பலின் தனியார்மய தேசவிரோத கொள்கைகளை கூட்டாக நேரிடையாக எதிர்க்கும் வடிவத்தை மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமே தங்களுக்கான விடுதலை என்பதை மக்கள் பற்றுவதற்கான பெளதீக நிலைமைகளை புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
- பெங்களூரு போராட்டத்தின் பெரும்பாலான தொழிலாளிகள் பெண்கள் ஆவர். பெங்களூரு ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் சூழல் மட்டுமல்ல எல்லா பணியிடங்களிலும் குறைவான கூலிக்கு பெண்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்ததோடு களமிறங்கி போராடியிருக்கின்றனர். பெண்களின் பங்களிப்பின்றி சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பதைக் கற்றுக்கொடுக்கிறது பெங்களூரு தொழிலாளர் எழுச்சி!
- ஆளும் வர்க்க ஊடகங்கள் பெங்களூரு தொழிலாளிகளின் எழுச்சியை வழக்கம் போல வன்முறை, கலவரம் என்று திசைதிருப்புகின்றன. பெங்களூருவில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தும் பெரும்பாலான ஊடகங்களில் கருத்து தெரிவித்த வாசகர்கள் தொழிலாளிகளின் போராட்டத்திற்கு ஏகோபித்த வரவேற்பை நல்கியிருக்கின்றனர். நன்றி கூறி பின்னூட்டமிடுகின்றனர். இப்படி வரவேற்பை நல்கியவர்கள் எல்லாம் பி.எஃப் விதியால் தானும் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு எப்படி போராடுவது என்று வழி தெரியாமல் விழிபிதுங்கியிருக்கின்றனர் என்று புரிந்துகொள்கிறோம். என்னதான் ஊடகங்கள் கலந்து கட்டி தொழிலாளிகள் மீது சேற்றை வாரியிறைத்தாலும் மக்கள் தொழிலாளிகள் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
- ஐ.டி நண்பர்களின் அடிமை வாழ்வைச் சுட்டிக்காட்டி, போராடிய தொழிலாளி சகோதர சகோதரிகளுக்கு நன்றி என எழுதப்படும் எழுத்துகள் மோடி கும்பலை, அவற்றிற்கு சேவகம் செய்யும் அதிகார வர்க்கத்தை கறாராக அம்பலப்படுத்துகின்றன. மேலும் இத்தகைய ஆதரவுத்தளம் பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து வர்க்கங்களையும் சுரண்டலிலிருந்து விடுவிக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக பதிய வைக்கிறது.
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் நடைமுறைக்கு வந்த பின்னர் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை, சங்கம் வைக்கும் உரிமை, போராடும் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த உரிமைகளை மீண்டும் நிலைநாட்டவும் ஆலைகளைத் தொழிலாளர்களே நிர்வகிக்கும் உரிமையை நிறுவவும் வேண்டும். தொழிலாளர்கள் மட்டுமல்லாது விவசாயிகள், மாணவர்கள், சிறுதொழில் புரிவோர் என அனைத்து உழைக்கும் வர்க்கங்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் கொஞ்சநஞ்ச இறையாண்மையும் பறிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடே இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. நமது நாடு மீண்டும் காலனியாக்கப்படுகிறது. இன்றைய பி.எஃப் விதிகள் திருத்தம் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அடிக்கொள்ளியாக உள்ள மறுகாலனியாக்கத்தை நாட்டுப்பற்றுடன் எதிர்த்து முறியடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.
- தொழிலாளர்களிடமிருந்து பி.எஃப் சேமிப்பை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வசதியாக சட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்தது மோடி கும்பல்!
- இதற்கெதிராக போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்!
- துப்பாக்கிச்சூடு, தடியடி… அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்!
- மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
- போராடினால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை உணர்வோம்!
- புரட்சிகர சங்கங்களைக் கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 94448 34519
hi
its indeed heroic that the garment workers protested strongly. i.t workers are unable to fight like the garment workers , as they comparatively have benefits or what they think as benefits.
garment workers tried to withdraw their p.f and felt robbed directly.
however the left including vinavu needs to understand this is a ‘red flagless’, ‘leaderless’ protest..which also shows the workers think working with the kattai-panchathu of left groups doesnt make sense. vinavu needs to introspect as well.
-s