Monday, March 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?

பெற்றோர்களே நீங்கள் குற்றவாளிகள் இல்லையா ?

-

சென்ற வருடம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்த சமயத்தில் நமக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? கல்விக்கான நமது அடிப்படை உரிமையை மீட்டெடுக்க போராடுவதன் அவசியம் என்று எனது பள்ளி கல்லூரி வாழ்க்கை அனுபவத்தை (மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்) உங்களிடையே பகிர்ந்திருந்தேன். இப்பொழுது இந்த வருட தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் நாம் பெற்ற அனுபவம்; பெற்றுக்கொண்ட படிப்பினைகள், போக வேண்டிய தூரம் என்ன என்பதை இக்கட்டுரையில் தொட்டுச் செல்வோம்.

தனியார் பள்ளியால் முடியாததைச் செய்த அரசு பள்ளி!

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
“ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன.”

கல்வி, வாங்கி-விற்கும்-பண்டமாக மாற்றப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளின் வக்கிரக் கொள்ளையை நமது பிள்ளைகள் அன்றாடம் அனுபவித்து வருவது கண்கூடு. ‘அரசு பள்ளிகள் என்றால் கேவலமானது; குடும்பத்தின் கெளரவம் பாதிக்கும்’ எனும் மட்டமான மனநிலையை மக்கள் மத்தியில் தனியார்மயம் ஒரு பண்பாட்டுத் தாக்குதலாகவே புகுத்தியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தனியார் பள்ளியால் செய்யமுடியாத ஒன்றை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருக்கிறது.

தனியார் பள்ளியால் மக்குத்தடி என்று விரட்டியடிக்கப்பட ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு பயிற்சி அளித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறது இப்பள்ளி. இன்றைய நிலையில் நூறு சதம் தேர்ச்சி எனும் பெயரில் தனியார் பள்ளிகள் பிளக்ஸ் போர்டு பேனர் வைத்து மக்களிடம் நூதனமாக திருடி வருகின்றன. ஆனால் இந்த திருட்டிற்கு பின்னே ஒன்பதாம் வகுப்பிலேயே மெதுவாக கற்கும் மாணவர்களை கழித்துக்கட்டுவது, உறைவிடபள்ளி என்று பல இலட்சங்களை பிடுங்குகிற போக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

வன்னிவேலம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியரின் நேர்காணலைக் கவனியுங்கள்: “ஒன்றுமே தெரியாத மாணவனை தேர்ச்சியடையச் செய்வதுதான் ஆசிரியரின் வேலை. தனியார்பள்ளியில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகள்தான் இடம் அளிக்கின்றன. அந்த மாணவர்களைப் புறக்கணிக்காமல் தேர்ச்சி பெறச் செய்ய முழு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு மாணவனையும் முறையாக ஊக்குவித்தால் தேர்ச்சி பெறச்செய்யலாம்.” (தி இந்து தமிழ், 27-05-016)

பள்ளியின் நோக்கம் என்ன? ஆசிரியரின் நோக்கம் என்ன? என்பதை இந்த நேர்காணல் தெளிவாகக் காட்டுவதுடன் இலாபம் பார்த்து, கல்வி எனும் சரக்கை விற்கும் தனியார் பள்ளிகள் எப்படி சமூகத்தின் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களை தேர்ச்சி பெறவைக்க வன்னிவேலம்பட்டி பகுதிவாழ் இளைஞர்கள் உதவியிருப்பதும் நமது கவனத்திற்கு வருகிறது. மாறாக நாமக்கல், பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு மதிப்பெண் பெறவைக்க ஆசிரியரே தேர்வு அறையில் வாட்ஸ் அப் வைத்துக்கொண்டு விடைகளை சொல்லியது செய்திகளில் அம்பலப்பட்டது நினைவிருக்கலாம்.

சட்டபூர்வமற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இருப்பை நியாயப்படுத்த நடுத்தரவர்க்க கனவான்கள் அரசு பள்ளி மீது கொட்டும் பல்வேறு அவதூறுகள் கிண்டல்களை நடைமுறையில் இரத்து செய்திருக்கிறது வன்னிவேலம் பட்டி அரசு பள்ளி!

பெற்றோர்களின் மோகமும் அரசு பள்ளி சாதனையும்!

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த கையோடு நாமக்கல், ஊத்தங்கரை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட பிராய்லர் கோழி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தொண்ணாந்து கொண்டு காத்திருந்ததை செய்திகள் பரபரப்புடன் வெளியிட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளுடன் படையெடுத்த பெற்றோர்கள் சொல்லும் முதற்காரணம் இங்கு படித்தால் மருத்துவ சீட்டு கிடைப்பது உறுதியாம். அதற்காக உறைவிடப் பள்ளி எனும் முறையில் இங்கு செயல்படும் பல தனியார்பள்ளிகள் இரண்டு வருட கொடுமைக்கு பிள்ளைகளை உட்படுத்துகின்றனர். பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தாமலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்தும் அப்பட்டமான மோசடி இங்கு நடைபெற்றுவருகிறது! இத்தகைய உறைவிட பள்ளிக்கு பல இலட்சங்களை கந்துவட்டிக்கு வாங்கி பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பணயம் வைக்கின்றனர்.

இந்த வருட தேர்வு முடிவில் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஆர்த்தி மாநிலத்தில் முதல் இடம் பெற்றிருக்கிறார். இவரது குடும்பம் சென்னையில் இருந்தாலும் மகளின் படிப்பிற்காக ஊத்தங்கரையில் தனியாக வீடு எடுத்து தங்கி ஊத்தங்கரையில் தாயும் பிள்ளையும் சென்னையில் தகப்பனும் என்று கல்வி வாசம் செய்திருக்கின்றனர். நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே காணப்படும் மனநிலையின் ஒருவகைப்பாடு இது.

ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி
ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் பள்ளி

மறுபுறத்தில் தன் பிள்ளையின் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட தாயைப் பற்றிய செய்தி இந்தாண்டு வெளிவந்திருக்கிறது. பள்ளி மாணவ மாணவிகள் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்வது ஒருபுறமிருக்க பெற்றோர்களே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு பாசம், கண்காணிப்பு எனும் பெயரில் பெற்றோர்களின் வக்கிரமான நுகர்வு மனநிலையைத் தான் காட்டுகிறதேயன்றி வேறல்ல!

இந்த இரு எதிர் எதிர் முனைகளுக்கு மத்தியில் புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேனிலைப்பள்ளி கடந்த ஏழு ஆண்டுகளில் 14 மருத்துவ மாணவர்களை உருவாக்கியிருக்கிறது எனும் செய்தி தி இந்து தமிழ் நாளிதழில் 06-06-2016 அன்று வெளிவந்திருக்கிறது.

கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இச்செய்தி கட்டியம் கூறுகிறது. இங்கு பெற்றோர்களின் மனநிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசு பொறியியல் மருத்துவக் கல்லூரிகள் தான் சிறந்தது என்று கருதும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளை இதற்கு ஒரு துருப்புச் சீட்டாக என்ன விலை கொடுத்தாவது அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என நினைப்பது மலம் என்று தெரிந்தும் நுகர்ந்து பார்க்கத் துடிக்கும் அறிவாளியின் கதையையே நமக்கு நினைவூட்டுகிறது.

இதில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசுப் பள்ளிகளை வேண்டுமென்றே சீர்கெட அனுமதிக்கிற அரசு இருக்கிற இந்நாட்டில், இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர் இழைகளை வைத்துக் கொண்டு சிறந்த மாணவர்களை புதுக்கோட்டை கொத்தமங்கலம் போன்ற அரசுப் பள்ளிகள் உருவாக்குகிறது என்றால் மக்களாகிய நாம் என்ன செய்திருக்க வேண்டும்?

சாமியானா பந்தலில் இரவு முழுவதும் நாமக்கல் பள்ளிகளில் அட்மிசனுக்காக கால்கடுக்கும் வெட்கங்கெட்ட வேலையைச் செய்யாமல் வீட்டுக்கொரு நபராய் அருகில் உள்ள அரசு பள்ளியை தரம் உயர்த்துவதில் போராடியிருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?

பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்களின் தலைமையில் அமைய வேண்டும்

மக்களின் மனநிலையைச் சுரண்டி தனியார் பள்ளிகள் எவ்விதம் ஆளும் அதிகார வர்க்க உறுப்புகளை வளைத்துப்போட்டிருக்கின்றன என்பதற்கு சான்றாக, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக்குலேசன் பள்ளி, தேர்தலில் பணப்பட்டுவாடா பண்ணுவதற்கு நம்பிக்கைக்குரிய கேந்திரமாக செயல்பட்டிருக்கிறது! தேர்தல் ஆணையம் நடத்திய கண்ணாமூச்சி ரெய்டிலேயே 245 தங்கக் காசுகளும் 3.40 கோடி ரொக்கப்பணமும் சிக்கியிருக்கிறது! தங்க நாணயங்கள் செண்டம் எடுக்க உதவிய ஆசிரியர்களுக்கான ‘நாணய’ப்பரிசு என்று கூறி தங்க நாணயங்களை மீட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம்! சிக்கிய பணத்தின் மீது விசாரணை ஏதும் இல்லை!

வெள்ளத்தைக் காட்டி பள்ளிகளை மூட வேலை செய்த பாசிச ஜெயா கும்பல்!

government-model-school-saidapet
வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன

அரசின் செயலற்ற தன்மையாலும் தனியார்மய ஆக்ரமிப்பாலும் சென்னை மக்கள் சூறையாடப்பட்டதை எடுத்துக்காட்டியது சென்ற வருட வெள்ளப்பெருக்கு. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடியோடு இழந்தனர் என்கிற பொழுது இதில் பள்ளிகளும் விதிவிலக்கல்ல. ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சென்னை கொருக்குப்பேட்டை பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவி ஸ்வப்னா 1166 மதிப்பெண்களையும் சி.ஐ.டி நகர் மற்றும் மடுவன் கரை அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் புவனேஸ்வரி, ராமலெட்சுமி ஆகியோர் 1157 மதிப்பெண்களையும் சைதாப்பேட்டை, கோயம்பேடு, புல்லா அவென்யு அரசு மேனிலைப்பள்ளி மாணவிகள் 1155 மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லாம் மீனவர், தையல் தொழிலாளி, கார் ஓட்டுபவர், தனியார் செக்யுரிட்டி, வீட்டு வேலை செய்பவர் என்று உழைக்கும் வர்க்கமாக உதிரித் தொழிலாளிகளாக இருக்கின்றனர்.

நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கல்வி வழங்கப்படும் பொழுது குன்றிலிட்ட விளக்காக ஒளிர்வதற்கு வாய்ப்பிருக்கும் நிலையில் காதோடு காது வைத்தார்போல் சென்னை வெள்ளத்தைக் காரணம் காட்டி அம்மா கும்பல் பல அரசுப் பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு பலவேலைகளை செய்திருந்ததை 01-01-2016 அன்று இந்து ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது.

நாம் ‘அருகாமை பள்ளிகள் வேண்டும்’ ‘பொதுபள்ளிகள் வேண்டும்’ என்று போராடுகிற பொழுது வெள்ளம் வருவதற்கு முன்பாகவே சென்னை மாநகராட்சி, மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி பல பள்ளிகளை மூட திட்டம் போட்டிருந்தது. 1999-லிருந்து 2011வரை இத்திட்டத்தின் கீழ் 25 மாணவர்களுக்கு குறைவான 56 பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. 2009-ல் (தி.மு.க ஆட்சி) 30 பள்ளிகளை மூட எத்தனித்த பொழுது மக்களின் போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடும் நடவடிக்கை பின்வாங்கப்பட்டது. ஆனால் 2016-ல் பள்ளிகளை மூடிய எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று சொல்வதன் பின்னணியில் வெள்ளத்தைக் காரணம் காட்டி அடையாறு ஓரம் இருக்கும் (திடீர் நகர், ஆத்துமா நகர், மடுவங்கரை) போன்ற பல பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

தனியார் பள்ளி - அரசுப் பள்ளி
ஒருமாதத்திற்கும் மேலாக மின்தடை, நோட்டு புத்தகங்கள் ஆற்றோடு போனது, வெள்ளநீர் வடியாதது என்ற பல நிலைமைகளுக்கு மத்தியில் சாதித்த மாநகராட்சி பள்ளி மாணவிகள்

அ.தி.மு.க கும்பல் மீட்புப்பணிகளை செய்யவில்லை என்பது மட்டுமல்ல மக்களுக்கு எதிர்நிலையாக, அடிபட்டவன் மயக்கநிலையில் இருக்கும் பொழுது பர்ஸ் அடிக்கும் பிக்பாட்டைப் போல வெள்ளத்தைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடியும் இருக்கிறார்கள்.

இப்பொழுது அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனை என்று வியக்கிற பொழுது, நமது அடிப்படை உரிமையான பள்ளிகளே போயிருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அறுக்கமாட்டாதவனுக்கு ஆயிரத்தெட்டு அறுவாள் என்ற கதையாக பள்ளிகளைத் தொலைத்த மக்கள், ஆட்சியை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போட்டார்களாம்!

மருத்துவம் பொறியியலுக்கு ஆசைபட்டால் போதுமா? நீதிமன்றமும் அரசும் நமக்கு எதிராக இருப்பதை உணரவேண்டாமா?

மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஊத்தங்கரை மாணவி ஆர்த்தியின் கதைக்கு மீண்டும் திரும்புவோம். ஆர்த்தியின் பெற்றோர் தன் மகள் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக ஊத்தங்கரையில் வீடு பார்த்து, வித்யா மந்திர் பள்ளியில் படித்து 1195 மதிப்பெண்கள் வாங்கியாயிற்று. ஆனால் மருத்துவக் கனவு நனவு என்று பெற்றோர்கள் நினைக்கும் பொழுது உச்சநீதி மன்றம் மருத்துவத்திற்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று குண்டைப் போட்டிருக்கிறது. மாநிலங்களின் சுயாட்சி உரிமையை ஒரு தீர்ப்பால் கழிவறையில் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். ஆர்த்தி போன்ற உயர்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்கள் உடனடியாக பொதுநுழைவுத் தேர்விற்கு பயிற்சி எடுக்க இன்னொரு நாமக்கல்லை கேரளாவில் தேடுகின்றனர். ஆனால் மருத்துவப்படிப்பை எட்டாக்கனியாக்கும் அரசின் களவாணித்தனத்தை அறியாமல் இருக்கின்றனர். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றனர்.

abhiya
மலையாளப் பாடத்தில் முதலிடம் பெற்ற டீக்கடை தொழிலாளியின் மகள் அபியா

மோடி பதவியேற்றவுடனேயே செய்த முதல் வேலை தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் கீழ் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை மூடுவதாக அறிவித்து நடைமுறைப்படுத்தியதாகும். இதனால் பல ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உருவாவது வேண்டுமென்றே தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக நாடெங்கிலும் போராட்டம் நடைபெற்றது. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் இத்துணைக்கும் தொழிலாளிகளின் வியர்வையால் பி.எப் பணத்தால் விளைந்தவையாகும். என மகன் மகளுக்கு மருத்துவச் சீட்டு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிற எந்தப் பெற்றோரும் இதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

தொழிலாளிகளை ஆதரித்து வர்க்க உணர்வாக குரல் எழும்பினால் தான் இ.எஸ்.ஐ மருத்துவமனைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மக்களிடையே அந்தக் குரல் எழவில்லை என்பது தொழிலாளிகளை காவு கொடுத்தது மட்டுமின்றி பொதுசுகாதாரம் போய் தனது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குரியதாய் நின்றிருக்கிறது. அதாவது அரசுக்கும் நமக்கும் இடையிலான கயிறு இழுக்கும் போட்டி மருத்துவச்சீட்டிற்கானதல்ல. மக்களின் அதிகாரத்திற்கானது. உழைக்கும் மக்கள் தமது அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வதன் மூலமாகத்தான் மருத்துவச் சீட்டு மட்டுமல்ல; நாம் உயிர் வாழ்வதற்கான நிலைமையையும் பெற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.

இதன் அடிப்படையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் ஏன் மூடப்பட வேண்டும்? என்பது அன்றைய நிலையில் பொதுதளத்திற்கு விவாதத்திற்கு வரவில்லை. மக்கள் திரள் போராட்டங்கள் கட்டியமைக்கப்படவில்லை. இதில் குளிர்காய்ந்த மோடி கும்பல் இந்தாண்டு மருத்துவப்படிப்பிற்கு பொதுநுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சொல்வதன் பின்னணியில் முழுக்கவும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்தான் இருக்கிறது. இந்திய நாட்டை விற்கும் உலகவர்த்தக கழகம் கொண்டுவரும் காட்ஸ் ஒப்பந்தம் முன் தள்ளும் புதியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் ஒரே நுழைவுத்தேர்வு என்பதன் மூலமாக நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்த்து காசு இருப்பவனுக்கு கல்வி என்று மாற்றுகிறார்கள்.

எனக்கு ஏகாதிபத்தியம், காட்ஸ், புதிய கல்விக்கொள்கை என்றால் என்னவென்று தெரியாது என்று பொதுமக்கள் வாதிடலாம். நியாயம் தான். அதே சமயம் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி அமல்படுத்தப்பட்டது என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள்.

சங்கல்ப் என்ற என்.ஜி.ஓ நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. ஒரே நுழைவுத்தேர்வு ஒரே இந்தியா என்று பார்ப்பன சங்கப்பரிவாரக் கும்பல் தலைநகரில் கூச்சல் போடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி அனில் ஆர். தாவே யாருடைய தரப்பு வாதத்திற்கும் செவிமடுக்காமல் ஒரே நுழைவுத்தேர்வு என்று தீர்ப்பளிக்கிறார். மேல்முறையீட்டை நிராகரிக்கிறார். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் எனும் வாதத்தை நிராகரிக்கிறார். இந்தியாவின் கல்விச் சூழல் பாரதூரமாக அசமத்துவமாக இருக்கும் பொழுது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு என்பது அநீதி என்று வாதமும் நிராகரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட அனில்.ஆர்.தாவே மனுஸ்மிருதியிலிருந்து அடிக்கடி கோட் செய்து தீர்ப்பளிப்பவர். ஆக தாவே யார் என்று நமக்கு தெரிவதில் சிக்கலில்லை. காட்ஸின் நோக்கங்கள் இவரைப்போன்ற நீதிபதிகளை வைத்து எல்லா தரப்பையும் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வராமலேயே சொடுக்குபோட்டு நிறைவேற்றப்படுகிறது. மக்கள் தேர்தலைப்போலவே, தேர்வு திறமை எனும் வட்டத்தைத் தாண்டி தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்க முடியாமல் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நமது நாட்டு மருத்துவக் கல்வி பகற்கொள்ளையாக போகிறதே என்று யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. கடைசியில் திறமை, சாதி, தாய்மொழி என்று உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதை ஆளும் வர்க்கம் ஐ.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. JEE நுழைவுத் தேர்வு நாட்டின் பெரும்பான்மையான மக்களை உள்ளே வரவிடாமல் தடுக்கும் வண்ணம் இரு அடுக்காக திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்வு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தேர்வை விட 42 மடங்கு கடினம் என்பது திறமை மற்றும் சிந்தித்தல் என்பதன் அடிப்படையில் அல்ல! கல்விசார் செயல்பாடுகள் மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்தல் (Non accessibility) என்பதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது முழுக்கவும் மோசடியாகும்.

சான்றாக மாநில வழிக்கல்வியில் 1165 மதிப்பெண் எடுக்கிறவர் JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவில்லை என்பது அவரது திறமையை மதிப்பிடுவதாக அமையாது. ஏனெனில் JEE பயிற்சி என்பது 250 ஸ்ட்ராக்களை வாயில் திணித்து லிம்கா சாதனை, மயிரைக் கொண்டு காரை இழுத்தல், ஆயிரம் பச்சை மிளகாய்களை உண்டு சாதனை போன்ற அர்த்தமற்ற, பொருளற்ற சாதனைத் தேர்வுகளாகும். 1165 தேர்வு முறையும் அப்படிப்பட்டதுதான் என்றாலும் JEE நிராகரித்தலை அடிப்படையாகக் கொண்டது. இதில் மாணவர்களை ஈடுபடச் சொல்வது என்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். ஏனெனில் என்ன காரணத்திற்காக ஐ.ஐ.டி ஆரம்பிக்கப்பட்டதோ அதற்காகவே முதலில் அது இல்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பொறியியல் தொழில்நுட்பம் தேவை என்று ஐ.ஐ.டிக்கள் அமெரிக்க எம்.ஐ.டி மாடலில் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை இந்திய கட்டமைப்பிற்கு ஐ.ஐ.டிக்கள் எந்தப் பங்கும் ஆற்றியதில்லை. இப்பொழுதுவரை ஐ.ஐ.டிக்கள் ஏகாதிபத்திய நலன் காக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலிக்கு ஆட்கள் என்றுதான் இயங்கிவருகிறது.

ஆனால் நமது பார்வையின் படி உழைக்கும் மக்களின் தலைமையில் நாம் இந்தியாவைக் கட்டியமைக்கிற பொழுது உற்பத்தியில் நமக்கு இருக்கும் சவால்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் கட்டமைப்பை சடுதியில் மேம்படுத்த மிக அவசியமாகும். அப்பொழுது ஐ.ஐ.டிக்கள் ஜரூராக வேலையில் இறங்கும் பொருட்டு பலதிசைகளிலும் முடுக்கி விடப்படும். இதற்கு நமக்கு உண்மையில் நாட்டின் மொத்த இளைஞர் பட்டாளமும் தேவை. இவர்களுக்கு அறிவு ஊட்டும் வேலையைச் செய்வது இன்றியமையாததும் தவிர்க்க இயலாததுமான புரட்சிகர இயக்கங்களின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். நாம் அப்பொழுதும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம். அப்பொழுது நமது தேர்வு முறை நிராகரித்தல் என்பதன் அடிப்படையில் இல்லாமல் தேர்ந்தெடுத்தல் என்பதன் அடிப்படையில் இருக்கும். இதற்கு JEE போன்ற பித்தலாட்டமான பாசங்கான உதவாக்கரை தேர்வு முறைகள் இருக்க வாய்ப்பில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

ஐ.ஐ.டிக்கள் தவிர தனியார் பொறியியல் கல்லூரிகள் என்று பல உப்புமா கல்லூரிகள் படையெடுத்து வருவதை நாம் காண்கிறோம். பெற்றோர்கள் தன் பிள்ளை இஞ்சினியர் என்பதில் ஆர்வமாக இருந்தால் தமிழ்நாட்டில் நிலவும் உண்மைக்கு முகம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 93% சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் போலி பெயரில் பேராசிரியர்கள் பணிபுரியும் மோசடி சென்ற ஆண்டு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது 93% தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே இருப்பதாக கணக்கு காட்டியிருக்கின்றன. ஆசிரியர் எனும் விசயத்திலேயே கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால் கல்லூரி கட்டமைப்பு, வசதிகள் என்பதில் எத்துணை பித்தலாட்டம் இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதற்கு மத்திய அரசும் மாநில அரசும், அதிகாரவர்க்க உறுப்புகளும் முழுக்கவும் உடந்தை.

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி, சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது என சென்ற ஆண்டு சுயநிதி கல்லூரிகளின் அடாவடியை கணக்குப்போட்டு பாருங்கள். தற்பொழுது எஸ்.ஆர்.எம் குழுமம், இடைத்தரகர்கள் மூலமாக மாணவர்களிடம் பணம் பிடுங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

93% சுயநிதி பொறியியல் கல்லூரிகள் டூபாக்கூர்! இதற்கு அரசு, நீதிமன்றம், ஆளும் வர்க்க அதிகார உறுப்புகள் அத்துணையும் உடந்தை என்றால் எந்த அருகதையின் அடிப்படையில் எந்த தார்மீக கடமையின் அடிப்படையின் எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை பொறியியல் கலந்தாய்விற்கு அழைத்து செல்கிறீர்கள் என்பதற்கு பதில் சொல்லுங்கள்.

ஆக இந்தப்பதிவின் மூலமாக நம்மால் ஒரு முடிவை எட்ட இயலும்.

என் பிள்ளை மருத்துவனாக பொறியாளனாக வரவேண்டும் என்று சுயநலமாகவாவது பெற்றோர்கள் சிந்திப்பார்கள் எனில் “அரசுக்கட்டமைப்பு தோற்றுப்போய்விட்டது; இது அழுகி நாறிக்கிடக்கிறது; இதை தகர்த்து நமக்கான கல்வி அமைப்பைக் கட்டினால் தான், தான் ஆசைப்பட்ட கல்வி முறை நம் பிள்ளைகளுக்கு வாய்க்கப்பெறும்” என்பதை உணர்ந்து போராட்டத்திற்கு தயாராக வேண்டும். அரசு-கல்விநிலையங்களில் உள்ள ஒவ்வொரு அரங்கிலும் நமது உரிமைகளை நிலைநாட்டும் மக்கள் குழுக்களை நிறுத்தியாக வேண்டும். அரசுப் பள்ளிகளை நமது பகுதி வாழ் மக்களைக் கொண்டு நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும்! சென்ற ஆண்டு படிப்பினைகள் மூலமாக இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி நிரலை நாம் இவ்விதம் வரையறுத்திருக்கிறோம்!

பெற்றோர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்!

– இளங்கோ

படங்கள் : நன்றி thehindu.com, tamil.thehindu.com

தொடர்பான செய்திகள்

 1. 1.மகள் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளும் தாய் வக்கிரமான நுகர்வு மனநிலையில் இருப்பதாக சொல்வது ஏன் எனப் புரியவில்லை.
  2.தனியார் பள்ளிக்கு போய் அரசு மருத்துவ கல்லூரியை நாடுவதை மலம் எனதெரிந்தும் நுகர்ந்து பார்க்க துடிக்கும் அறிவாளி நிலையுடன் ஒப்பிடுவது சரியான உவமை இல்லையே
  3.பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைய வேண்டும் என்ற தலைப்பில் உள்ள பாராவில் தலைப்புடன் இணைந்த விபரம் ஏதுமில்லையே
  4.1999 லிருந்து 56 பள்ளிகள் சென்னையில் மூடப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் கட்டமைப்பு நெருக்கடி அப்போதே தோன்றியதாக சொல்ல வருகிறீர்களா
  5.ESI மருத்துவ கல்லூரி மூடப்பட்டதாக சொல்வது தவறான தகவல்.
  6.பொது நுழைவுத் தேர்வு மூலமாக எப்படி ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலும் அதனை தொடர்ந்து காசு இருப்பவனுக்கு கல்வி என்பதும் நடைமுறைக்கு வரும் என்பது புரியுமாறு இல்லையே..
  7.எல்லா தேர்வுகளிலும் நிராகரித்தலும் இணைந்துதானே இருக்கும். இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுதானே ஒரு நிகழ்வோ பொருளோ இருக்க முடியும்.
  8.இந்தப் பதிவின் மூலமாக நீங்கள் எட்ட நினைக்கும் இடத்தில் கட்டமைப்பு நெருக்கடியை ஒட்ட வைக்க முடியவில்லையே

  • மணி அவர்களே!

   செங்கதிர் செல்வன் முன்வைக்கும் விமர்சனத்தை ஏற்கிறேன். கட்டுரை எளிமையாக எழுதப்படவேண்டும் என்ற பிரச்சனை நிலவுகிறது! அதிக நீளம், கூறியன கூறல், கூர்மையில்லாத பத்திகள் போன்றவை துறைசார் திறனாய்வு கட்டுரைகளில் வரும் பொழுது அவைகள் வாசகர்களை மட்டுமல்ல ஆசிரியர் குழுவின் பணியையும் கடினமாக்கி விடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறேன். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான திட்டத்தை முன் தள்ளுவதற்கான இலட்சியம், முனைப்பு என்பதில் கைவசம் நம்மிடையே பரிசோதித்து பார்க்கப்படவேண்டிய பிரச்சார உத்திகள் பல உள்ளதால் இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பது சாத்தியமே!

   மற்றடி தாங்கள் முன்வைக்கும் செய்திகள் சரியில்லை எனக்கு உடன்பாடில்லை. அவற்றை வரிசைக்கிரமமாக தாங்கள் எழுப்பியிருக்கும் ஐயப்பாடுகளுக்கு கீழ்க்கண்ட பதிலை முன்வைக்கிறேன். மற்றபடி கட்டுரை புரியவில்லை என்றால் அது புரியவில்லை என்றே எடுத்துக்கொள்கிறேன். வலிந்து நியாயப்படுத்துவதாக எண்ண வேண்டாம்.

   \\1.மகள் சரியாக மதிப்பெண் எடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்துகொள்ளும் தாய் வக்கிரமான நுகர்வு மனநிலையில் இருப்பதாக சொல்வது ஏன் எனப் புரியவில்லை.\\

   தனியார்மயம் மற்றும் பார்ப்பனியம் மக்கள் மீது நிகழ்த்தியிருக்கும் பண்பாட்டுத்தாக்குதலில் ஒன்றுதான் வக்கிரமான நுகர்வு மனநிலை. பள்ளரைக் காதலித்ததற்காக கெளசல்யாவின் தேவர் சாதி உயிரியியல் தாய் அதாவது அக்யூஸ்டு நம்பர் 2 கூலிப்படைவைத்து சங்கரை வெட்டிக்கொலை செய்தபொழுது சாதிக்கு எதிரான அனைவருமே கெளசல்யாவின் உயிரியியல் தாயாரை தாய்மை என்ற நிலையில் வைத்து பார்க்கவில்லை! தனியார்மயம் நிகழ்த்தியிருக்கும் தாக்குதல் இதற்கு இணையான ஒன்று! சூப்பர் சிங்கரில் தோற்றுப்போன சிறுமிக்காக குடும்பமே ஒப்பாரி வைத்து அழுகிற நிலைக்கு பெற்றோர்கள் குழந்தையின் மீது வன்முறையாளர்களாக மாறியிருக்கிறார்கள். இதில் இதுவரை நாம் பார்க்காத ஒரு கொடூரம் தான் மதிப்பெண் குறைவிற்காக தாய் தற்கொலை செய்து கொண்ட செய்தி. இதில் எது புரியவில்லை? என்று சொல்லுங்கள் சரி செய்து கொள்வோம்.

   \\ 2.தனியார் பள்ளிக்கு போய் அரசு மருத்துவ கல்லூரியை நாடுவதை மலம் எனதெரிந்தும் நுகர்ந்து பார்க்க துடிக்கும் அறிவாளி நிலையுடன் ஒப்பிடுவது சரியான உவமை இல்லையே\\

   தங்களின் மதிப்பீட்டின் இது சரியான உவமை இல்லை என்றால் தனியார் பள்ளி மலம் இல்லை என்றாகிறது! எப்படி என்று விளக்குங்கள். அது மலம் என்பதற்கு நடைமுறை உதராணங்கள் இக்கட்டுரையில் இருக்கின்றன. மேலும் முட்டாள்-அறிவாளி கதை கிராமத்து வட்டார வழக்குகளில் இன்னும் நறுக்குத் தெறித்தாற் போல் சொல்லப்படும். உதாரணமாக நுகர்வியத்தைச் சாடுவதற்கு எங்கள் வீட்டுக் கிழவி ‘இந்த நகரத்துல நரகலில் சீனி போட்டாக் கூட வித்துரும்’ என்று சாடுவாள். உங்கள் பார்வையின் படி இதை எப்படி எடுத்துக் கொள்வது?

   \\ 3.பாராளுமன்றம் மட்டுமல்ல பள்ளிகளும் உழைக்கும் மக்கள் தலைமையில் அமைய வேண்டும் என்ற தலைப்பில் உள்ள பாராவில் தலைப்புடன் இணைந்த விபரம் ஏதுமில்லையே\\

   தலைப்புடன் இணைந்த விபரம் தான் அது! இதை இன்னும் விரித்து சொல்லியிருக்கலாம் என்றாலும் தேர்தலிலும் தில்லு முல்லு தேர்விலும் தில்லு முல்லு என்பதற்கு வித்யா மந்திர் பள்ளி தேர்தலோடு சேர்த்து தலைப்புச் செய்தியாயிருப்பது தற்செயல் நிகழ்வல்ல. ஜோசப் தன்னுடைய பின்னூட்டத்தில் வந்தடைந்த முடிவை ஒருதரம் ஒப்பு நோக்குங்கள்!

   \\ 4.1999 லிருந்து 56 பள்ளிகள் சென்னையில் மூடப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் கட்டமைப்பு நெருக்கடி அப்போதே தோன்றியதாக சொல்ல வருகிறீர்களா\\

   இந்தக் கேள்விக்கு இன்ன தேதி கிழமை நேரத்தின்படியே கட்டமைப்பு நெருக்கடி வந்தது என்று சொல்லிவிடுகிறேன் என்று வைத்துக்கொண்டாலும் கூட உங்களுடைய கேள்வி வெற்றுப் பாசாங்கு என்று மதிப்பிடுகிறேன். இதன்படி கட்டமைப்பு நெருக்கடியால் எந்தவொரு பிரச்சனைகளையும் சந்திக்கவே இல்லை என்ற நபராக நீங்கள் காட்டிக்கொள்கீறிர்கள். பசி இல்லாதவரிடம் பட்டினி எப்பொழுது வந்தது என்று விளக்குவதால் எதைக் கொண்டு சேர்க்க முடியும் என்று தெரியவில்லை. மாறாக ‘கட்டமைப்பு நெருக்கடி என்ற பிரச்சாரம் பொய்யானது’ ‘அப்படி ஒன்று இல்லை’ என்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் மீது தங்கள் பார்வையை வைப்பீர்களாயேனால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத் தங்களுடைய 8வது பார்வைக்கும் சேர்த்து பதிலாக வைக்கிறேன்.

   \\ 5.ESI மருத்துவ கல்லூரி மூடப்பட்டதாக சொல்வது தவறான தகவல்.\\

   இல்லை. இது தவறான தகவல் அல்ல. மோடி அரசு “தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் வேலை மருத்துவக் கல்லூரி நடத்துவதல்ல” என்று ஜிஓ போட்டு அதன் நடைமுறைப்படியே தற்பொழுதுவரை அனைத்து வேலைகளையும் செய்துவருகிறது. கடந்த ஒருவருடத்தில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் மூடுவது தொடர்பான செய்திகள் மட்டும் நூற்றுக்கும் மேல். தற்போதைய நிலைப்பாட்டின் படி இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் நடக்க வேண்டுமானால் மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. மார்ச் 2, 2016 செய்தியின்படி இமாச்சலப்பிரதேச மருத்துவக் கல்லூரி பேச்சுவார்த்தை பேரத்தில்தான் இருக்கிறது. கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும் இதே நிலைதான். 36000 கோடி ரூபாய் உபரியைக் கொண்ட தொழிலாளர் பி.எப் நிதியத்திடமிருந்து மருத்துவக் கல்லூரி போனது போனதுதான்! போராட்டமின்றி இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை இயங்க வைப்பது சாத்தியமல்ல. தமிழ்நாட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் சீட்டு 100 எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டும் கூட உள்கட்டமைப்பு வசதி இல்லையென்று இந்தவருடமும் அடுத்தவருடமும் சேர்க்கை நடைபெற வாய்ப்பில்லை எனும் பொழுது இ.எஸ்.ஐ கல்லூரியை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தங்களது பதில் என்ன? முடங்கியிருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை நீங்கள் மறைப்பதன் நோக்கம் என்ன?

   மேலும் எஞ்சியிருக்கும் 12 மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மானிலங்களில் உள்ள இ.எஸ்.ஐ கல்லூரிகளை மானிலங்களே ஏற்று நடத்த வேண்டும் ஆனால் தேர்வு மட்டும் மத்திய அரசு நடத்தும் என்ற முரண்பாட்டிற்கு என்ன பதில்? இதைக் கட்டுரையில் விளக்கவில்லை எனினும் இனிவரும் காலம் அவ்வளவு லேசுபட்டதல்ல. இந்தக் கோணத்தில் நிறைய போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டியிருக்கிறது. தற்பொழுதுவரை இ.எஸ்.ஐ கல்லூரி போனது போனதுதான். இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதா?

   \\ 6.பொது நுழைவுத் தேர்வு மூலமாக எப்படி ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலும் அதனை தொடர்ந்து காசு இருப்பவனுக்கு கல்வி என்பதும் நடைமுறைக்கு வரும் என்பது புரியுமாறு இல்லையே..\\

   கட்டுரையில் பொது நுழைவுத் தேர்வு ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் தான் என்பது எப்படி என்று சொல்லவில்லை. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக நாம் இன்னும் நிறைய விளக்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் பொது நுழைவுத் தேர்வு எப்படி நீதிமன்றத்தைப் பயன்படுத்தி தனக்குத் தோதான நீதிபதியை வைத்துக்கொண்டு அமல்படுத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இங்கு மக்களின் குரலாக அல்லது பிரதிநிதியாக எது இருக்கிறது என்று நேர்மையாக பரிசீலீயுங்கள். இந்த தேர்வு யாருக்காக எதற்காக இவ்வளவு சடுதியில் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்த்தாலே எளிதில் நம்மால் ஒரு நிலைப்பாட்டிற்கு வர இயலும். அப்படி ஒரு நிலைப்பாட்டிற்கு தாங்கள் வந்திருக்கிறீர்களா?

   \\ 7.எல்லா தேர்வுகளிலும் நிராகரித்தலும் இணைந்துதானே இருக்கும். இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுதானே ஒரு நிகழ்வோ பொருளோ இருக்க முடியும்.\\

   இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுதான் ஒரு நிகழ்வோ பொருளோ இருக்க முடியும் என்பது சரிதான். வாழ்வு சாவு என்பதை எடுத்துக்கொள்ளுங்கள். மரணம் இயற்கையானது என்பது இயல்பு. ஆனால் அதுவே கழுத்தை நெறித்துக் கொன்றால் அது இயல்பானதா? அப்படித்தான் jee தேர்வு முறையில் நிராகரித்தல் என்பது. இந்த வகையில் Jee தேர்வு எப்படி நிராகரித்தலின் அடிப்படையில் மோசடியானது என்றும் ஐஐடிக்களுக்கான தேர்வு உழைக்கும் மக்களின் அதிகாரத்தில் எப்படி ஏன் எதற்காக நடத்தப்படும் என்பதைச் சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை அந்தப் பகுதியை வாசித்துப் பாருங்கள். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் நோக்கம் எனில் JEE தேர்வு முறை இப்படி இருக்காது. இதுவரை ஐஐடிக்களும் இப்படி இருக்கவில்லை என்பதால் JEEதேர்வு முறை எந்தளவிற்கு மோசடியானது என்பதை எண்ணிப்பாருங்கள். வேண்டுமானால் JEE தேர்வில் வெற்றி பெற்ற ஒருவர் நான் பத்து பவுனுக்கு செயின் போட்டிருக்கிறேன் என்று ஜமீன் தாரைப் போன்று பீற்றலாம். உண்மையில் ஆந்திரா போன்ற மாநிலங்களில் jee தேர்வு நிலப்புரத்துவ விழிமியமாகத்தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்!

   • செங்கதிர் செல்வனது விமரிசனத்தை ஏற்கிறேன் என்ற உங்களது வாதமே விமரிசனத்தை நீர்த்துப் போக வைக்கும் சந்தர்ப்பவாதமாய் பார்க்கிறேன். உதாரணமாக முதலில் கூர்மையற்ற பத்திகள் இருப்பதை ஒத்துக்கொள்ளும் தாங்கள் பின்னூட்டத்தின் பின்பகுதியில் அதனை மறுக்கின்றீர்கள். அடுத்து உங்களது பதிலில் 1. ’வக்கிரமான நுகர்வு மனநிலையை’ நீங்கள் சொல்லும் சூப்பர் சிங்கர் குழந்தைக்கு பொருத்த முடிகிறது. எப்படி அதனை மதிப்பெண் குறைவாக எடுத்த குழந்தையின் தாய் தற்கொலைக்கு பொருத்துவது. 2. உவமை பொருந்தவில்லை என சாதாரணமாய் சொன்னேன். தவறாகவே இருக்கிறது என்பதை கவனிக்க தவறுகிறீர்கள். மற்றபடி உங்களது பழமொழி ஆளுமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. பள்ளியில் தனியாருக்கு போவதே குறைந்த செலவில் அரசு மருத்துவ கல்லூரிக்கு போவதற்குதான். இதில் மலம் என்று கழித்தா கட்டியிருக்கிறார்கள். 3. (முன்னரே சொல்லியது தான்) 4. கட்டமைப்பு நெருக்கடி பற்றி விவாதிப்பதாக என்னுடைய கேள்வி இல்லை. மையமான தலைப்பில் இருந்து விலகுவதற்காக முயல்கிறீர்கள். எட்டாவது கேள்வி கூட ஒட்டாமல் இருப்பது பற்றித்தானே தவிர அரசியல் உள்ளடக்கம் பற்றி அல்ல. ________5. http://www.newindianexpress.com/nation/MCI-No-to-ESICs-New-Coimbatore-Medical-College/2015/03/23/article2725961.ece, http://indiatoday.intoday.in/education/story/aiims-hp/1/605017.html. இவைதான் நீங்கள் சொல்லும் செய்தியின் உண்மைத் தன்மை. மற்றபடி ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பிஎப் துறைக்கு கீழ் வருவதாக புதிதாய் கேள்விப்படுகிறேன். எல்லா ஈஎஸ்ஐ மருத்துவ கல்லூரிக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு அடிப்படையில் சீட் ஒதுக்கப்படுவதாக சொல்லி விட்டார்கள். அறிவிப்பும் வந்து விட்டது 2016-17ம் ஆண்டுக்கு. http://www.dailypost.in/regions/himachal-j-k/61449-transfer-of-mandi-medical-college-to-state-esic-asked-to-file-compliance-report.html. கடைசியில் மாநில அரசு பட்டியலுக்கு வந்த்துதான் பிரச்சினையா..சீட் கூட்டினால் உள்கட்டமைப்பு வசதி அதிகப்படுத்த வேண்டும். ஆனால் மத்தியிலிருந்து மாநிலத்துக்கு மாறுவதால் கட்டமைப்பில் என்ன மாற்ற வேண்டும். தேவையில்லையே.. இஎஸ்ஐ கல்லூரிகள் முடங்கியிருப்பதாக சொல்வது தவறு. வேண்டுமானால் அதற்கான அறிவிப்பினை லிங்க ஆக தாருங்கள். மற்றபடி மறைப்பது என்பது நீங்கள் தான் செய்கின்றீர்கள் என்பதை மேற்கண்ட லிங்க் ஒன்றே காட்டிக் கொடுக்கிறது. 6. என்னுடைய நிலைப்பாட்டினைக் கேள்வியாக வைத்து கேள்வி கேட்டவரிடமே கேள்வியை திருப்பி போடும் குயுக்தியான வாத முறையை பின்பற்றுகிறீர்கள். நல்லது. ஏன் அப்படி செய்கிறீர்கள் என்றால் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலில் பொது நுழைவுத் தேர்வு திணிப்பை நுழைக்க முடியாது. ஆனால் முடியும் என ஸ்வீப்பிங்காக சொல்லி விட்டீர்கள். இப்போது பதிலுக்கு கிண்டிப் பார்க்கிறீர்கள். 7. நீங்கள் சொல்லும் தேர்வு முறையே புதிராக இருக்கிறதே. தெரிவு செய்யும்போதே நிராகரிப்பதும் தானே நடக்கிறது. வங்கித் தேர்வு, அரசுத் துறை தேர்வு, தனியார் நேர்முகத் தேர்வு எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் தானே. அவ்வளவு ஏன்.. ஒரு அரசியல் கட்சி கூட தலைவரை தெரிவு செய்கையில் போட்டியிடும் இன்னொருவரை நிராகரித்துதானே இவரை தெரிவு செய்யும். இந்த வாதம் முன்னர் ஒருமுறை காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவது ஈழத்துக்கு துரோகம் செய்வது என பரப்புரை செய்து மறைமுகமாக பாஜகவுக்கு காவடி தூக்கிய தமிழ்தேசிய வாதிகளை ஞாபகப்படுத்துகிறது

    • மணி அவர்களே!

     ஆதாரம், லிங்க், விளக்கம் எல்லாம் கேட்டிருக்கிறீர்கள். இந்த மறுமொழியில் கீழ்க்கண்டவாறு தொகுத்திருக்கிறேன்;

     \\இஎஸ்ஐ கல்லூரிகள் முடங்கியிருப்பதாக சொல்வது தவறு. வேண்டுமானால் அதற்கான அறிவிப்பினை லிங்க ஆக தாருங்கள்.\\

     05-01-2015 அன்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் ஒளிப்பட நகல், வினவு தளத்திலேயே படிக்கக் கிடைக்கிறது. லிங்க் இங்கு இருக்கிறது.

     https://www.vinavu.com/2015/03/03/esi-medical-college-students-stir/

     2015இல் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டச் செய்தியின் நேரடி ரிப்போர்ட் வினவில் வெளிவந்திருக்கிறது. இந்த ஒருவருடத்தில் மத்திய அரசின் ஆர்டரில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? மத்தியில் இருந்து மாநிலத்திற்கு மாறிவிட்டதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்டிருக்கிறீர்கள். அதல்ல பிரச்சனை. தொழிலாளிகளின் பணத்தில் நடைபெறும் மருத்துவமனைக் கல்லூரிகளை மோடி கும்பல் கைவிடுவதாக அறிவித்தது எதற்காக? இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் போனது போனதுதான். தற்பொழுதுவரை தாங்கள் இதற்கு முகம் கொடுக்கவே இல்லை!

     \\7. நீங்கள் சொல்லும் தேர்வு முறையே புதிராக இருக்கிறதே. தெரிவு செய்யும்போதே நிராகரிப்பதும் தானே நடக்கிறது. வங்கித் தேர்வு, அரசுத் துறை தேர்வு, தனியார் நேர்முகத் தேர்வு எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் தானே.\\

     இதில் என்ன புதிரைக் கண்டீர்கள் என்று தெரியவில்லை. தரவுகள் தருகிறேன். கொஞ்சம் மேற்கொண்டு முயற்சி செய்யுங்கள். 2016 JEE இரண்டாம் கட்ட மெயின் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் 50000 பேர். முதல் கட்டத்தில் 6 லிருந்து எட்டு இலட்சம் பேர் எழுதினார்கள். மெயின் தேர்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 30000 பேர். ஐஐடிக்களில் உள்ள மொத்த சீட் 15000!

     ஐ.ஐ.டி நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவிற்கு என்று ஐ.ஐ.டி எதையும் செய்ததில்லை! பாப்பார மேட்டுக்குடிகளின் கொட்டகை அது! என்னுடைய வாதம் என்னவெனில் நாட்டில் பொறியியல் தேவைக்கு ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் தேவை. தற்போதுள்ள பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தது போக மீதி இளைஞர்களைக்கும் அறிவு ஊட்டுகிற வேலையை, உற்பத்தியை நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்க வேண்டியதன் பொருட்டு அவசியம் செய்தாக வேண்டும். இங்கு தேர்வு முறையைப் பொருத்திப் பாருங்கள். ஏன் பாசாங்காக அறிவுக்கு ஒவ்வாத, நடைமுறைக்குப் பொருந்தாத லிம்கா சாதனை JEE தேர்வுகள் நடைபெற வேண்டும்? இது எந்த திறமையை சோதித்து நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியது? ஒட்டுமொத்த உழைக்கும் மக்களை வேண்டுமென்றே புறந்தள்ளுகிற ஒரு தேர்வு முறையை எந்த நியாயத்தின்படி முட்டுக்கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லையே! ஏதாவது ஒரு பாயிண்டாவது சொல்லுங்க சார்!

     \\6. என்னுடைய நிலைப்பாட்டினைக் கேள்வியாக வைத்து கேள்வி கேட்டவரிடமே கேள்வியை திருப்பி போடும் குயுக்தியான வாத முறையை பின்பற்றுகிறீர்கள். நல்லது. ஏன் அப்படி செய்கிறீர்கள் என்றால் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலில் பொது நுழைவுத் தேர்வு திணிப்பை நுழைக்க முடியாது. ஆனால் முடியும் என ஸ்வீப்பிங்காக சொல்லி விட்டீர்கள். இப்போது பதிலுக்கு கிண்டிப் பார்க்கிறீர்கள்.\\

     சார் நீங்கள் பதில் சொல்லவில்லையென்றால் அதை அம்பலப்படுத்தி எனது பார்வையை வைக்கத்தான் போகிறேன். இதில் என்ன குயுக்தியைக் கண்டீர்கள்? மேலும் உங்களைக் கிண்டுவதில் உபகாரம் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை!

     2015 டிசம்பரில் நடந்த தோகா மாநாட்டில் காட்ஸின் சரத்துகள் நிறைவேற்றப்படும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. காட்ஸின் படி நாட்டின் சேவைத்துறைகளான கல்வி, பொதுசுகாதாரம், மின்சாரம் போன்றவை முற்றிலும் சூறையாடப்படுகின்றன. இதில் புதியக் கல்விக்கொள்கை (பு.க.கொ) காட்ஸை முன் ஒட்டி தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட பல்வேறு சரத்துகள் அமல்படுத்தப்பட்டுவிட்டன. எஞ்சியிருக்கும் பு.க.கொ, காட்ஸை அடியொற்றி மெடிக்கல் கவுன்சில், யுஜிசி என எந்த அமைப்புகளுமே கூடாது என்கிறது.

     Dismantling the existing education systems என்பதன் அடிப்படையில் நாட்டின் கல்விக்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டு சேவைத்துறையில் ஏகாதிபத்தியம் வரும்படி மாற்ற வேண்டும் என்பதை காட்ஸ் பு.கா.கொ முன் தள்ளுகிறது.

     இந்த வகையில் மருத்துவக் கல்வி கட்டமைப்பை முற்றிலும் மாற்றும் முதற்படிதான் நீட்(NEET) நுழைவுத் தேர்வு.

     நீட் தேர்வு முதலில் தேர்வு குறித்தானதுமட்டுமல்ல. இதுவரை பொதுசுகாதாரம் பொதுப்பட்டியலில் மத்திக்கும் மாநிலத்திற்கும் பொதுவாக இருந்தது. சங்கல்ப் என்ற என் ஜி ஓ நிறுவனம் மற்றும் அனில்.ஆர்.தாவே எனும் பார்ப்பன நீதிபதியை வைத்து மோடி கும்பல் நீட் தேர்வை எந்த விவாதத்திற்கும் கொண்டுவராமலேயே புகுத்தியிருக்கிறது. இது எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதைப் பாருங்கள் என்று இரண்டு முறை உங்களிடம் கோரிக்கை வைத்தும் நீங்கள் பார்க்கவில்லை என்பதைக் கவனியுங்கள்.

     இந்த வழக்கின் மேல்முறையீட்டின் திசை வழி எப்படி இருக்கிறது என்றால் பொதுசுகாதாரம் எந்தப்பட்டியலில் இருக்கவேண்டும் என்று விசாரணை செய்வதற்காக அரசியல் சாசன அமர்வு கூட்டப்படவிருக்கிறது. பார்ப்பன இந்துத்துவ கும்பல், என்ஜிஓ, உச்சநீதிமன்றம் இந்த மூன்றும் செய்யும் வேலை என்ன?

     விசயத்திற்கு திரும்புவோம். ஒரே நுழைவுத் தேர்வு என்பதைக் கொண்டுவந்துவிடுவதால்

     1. மானிலங்களின் அதிகாரம் விலக்கப்படுகிறது.

     2. எந்த மருத்துவக் கல்லூரியையும் தன்னாட்சி நிறுவனங்களாக மாற்ற இயலும். தன்னாட்சி என்பதில் நிதி தன்னாட்சி தான் கொடூரமானது. தனக்கு ஆகும் செலவை கல்லூரி மாணவர்களிடம் பிடுங்கி சமாளித்துக்கொள்ள வேண்டும்.

     3. ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களாக தற்பொழுது ஐ.ஐ.டி இருப்பதைப்போல மாற்ற முடியும்.

     4. அரசு மருத்துவக் கல்லூரிகள் ஐ.ஐடிக்களைப் போன்று கார்ப்பரேட்டுகளின் வசம் வரும்.

     5. மருத்துவக் கல்லூரியிலும் Level Playing Field புகுத்தப்படும்.

     ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் வரிசைக்கிரமம் இது.

     • http://www.esic.nic.in/admission.php http://www.esicmcpgimsrchennai.ac.in/ http://esic.nic.in/backend/writereaddata/file/2d80d90ddd5239313c6f2e58987c8c6d.pdf – மூன்றாம் இணைப்பில் படுக்கை எண்ணிக்கையை கூட்டியிருக்கிறார்கள். இரு மாதங்களுக்கு முன் வந்த அறிவிப்பு. முதல் இரண்டில் தற்போது அட்மிசனுக்கான அறிவிப்பு. உங்களது பதிவு 2015 மார்ச். அதன் 163 வது கூட்டத்தில் இனி அட்மிசனுக்கு மத்திய அரசு பொறுப்பில்லை என்று சொன்னது உண்மைதான். ஆனால் அதன் பிறகு ஒரு செட் மாணவர்களுக்கு அட்மிசன் போட்டு ஓராண்டு படித்தும் முடித்து விட்டார்கள். அடுத்த ஆண்டுக்கான அறிவிப்புதான் நான் மேலே தந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் 2013ல் தான் மேற்படி கல்லூரிகளிலும் இளங்கலை பிரிவே ஆரம்பித்தார்கள் என்பதையும் நினைவு கூருங்கள். தற்போது வரை இக்கல்லூரிகள் அனைத்துமே ஈஎஸ்ஐ வசம் தான் உள்ளது. அதனையும் மேற்படி தளத்தில் தெரிந்து கொள்ள இயலும். 2. தேர்வு முறையைப் பற்றிப் பேசும்போதே எதற்காக ஐஐடி ஐ ஆரம்பித்தார்களோ அதனை இந்த தேர்வு முறை சாதித்து விட்டதா என தாவுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் எந்த தேர்வு முறை இருந்தாலும் சாதிக்க மாட்டார்கள் என்பது தானே இந்த அரசு கட்டமைப்பின் நடைமுறை. இல்லை வேறு எப்படியாவது இருக்க வாய்ப்பிருந்த்தாய் நம்புகிறீர்களா.. இப்படி கேட்கிறேன். ஒரு பதவிக்கு ஒரு கோடி பேர் போட்டியிடும் நிலைமையை எதிர்கொண்டால் என்ன செய்வீர்கள். ஒரு கோடி பதவிகளை உருவாக்குவீர்களா..இதில் உழைக்கும் மக்களை வெளியேற்றியதாக வேறு சொல்கிறீர்கள். எப்போது சார் அவர்கள் உள்ளே வர விட அனுமதிக்கப்பட்டார்கள்.. சும்மா சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லக் கூடாது. 3. ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலோடு அசாத்தியமான முறையில் இணைத்து விட முயன்றிருக்கிறீர்கள். ஆனால் இரண்டாவது பாயிண்டே சறுக்கி விட்டதே.. நிதி விசயத்தில் கூட தன்னாட்சி உடையதாய் மாற்றி அதன் பின் தனியார் மயமாக்க வேண்டுமானால் அதற்கு நீட் தேர்வுக்கு மாறித்தான் செய்ய வேண்டுமா என்ன.. இப்போதைய மாநில அரசுகளின் அட்மிசன் முறையில் செய்தால் வேண்டாம் என்கிறதா என்ன

    • \\ 1. ’வக்கிரமான நுகர்வு மனநிலையை’ நீங்கள் சொல்லும் சூப்பர் சிங்கர் குழந்தைக்கு பொருத்த முடிகிறது. எப்படி அதனை மதிப்பெண் குறைவாக எடுத்த குழந்தையின் தாய் தற்கொலைக்கு பொருத்துவது.\\

     சூப்பர் சிங்கர் வரை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். மக்களிடையே தனியார்மய நுகர்வுக் கலாச்சாரம் பண்பாட்டுத் தாக்குதல் நிகழ்ந்திருக்கும் விதத்தை உங்களால் பகுத்துப் பார்க்கமுடியும் எனில் தன் பிள்ளை மதிப்பெண் குறைவாக எடுத்தமைக்காக தாய் தற்கொலை செய்வதன் கொடூரத்தையும் வக்கிரத்தையும் புரிந்து கொள்ள முடியும். இரு உதாரணங்களை முன் வைக்கிறேன்.

     நல்லதங்காள் கதையிலே பிள்ளைகளைக் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை செய்துகொள்கிறாள். இதற்குப் பிறகு எதுவுமே இல்லை என்கிற வறுமை, சோகத்திலும் சோகக் கதை என்று வழிவழியாக பகிரப்படுகிறது.

     இரண்டாவது சங்க இலக்கியச் சூழலுக்கு வாருங்கள். போர்க்களத்தில் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியறியும் தாய் பதறித்துடிக்கிறாள். செத்துவிட்டான் என்பதற்காக அல்ல. ஒருவேளை புறமுதுகிட்டு செத்திருந்தால் அது இழுக்காயிற்றே என்று பதறுகிறாள். சூழல் கவித்துவம் மிக்க மிகையாக இருந்தாலும் என் மகன் இல்லையென்றால் என்னையார் பார்த்துக்கொள்வார் என்று தனியாக சிந்திக்கவில்லை. அதற்காக அழவில்லை. சமுதாயத்திற்காக பெருமைமிகு முறையில் மடிந்திருக்கிறானா என்று பார்க்கத்துடிக்கும் பண்பு கூட்டுத்தத்துவத்தின் வெளிப்பாடாக வந்திருக்கிறது!

     அது இன்று இல்லை! மனிதர்கள் தனித்தீவுகளாக சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டும் இன்றைய நிலைமை அல்ல. சமுதாயம் உள்ளுக்குள் அழுகத் தொடங்கியிருக்கிறது. மதிப்பெண் குறைந்துவிட்டால் தாயே தற்கொலை செய்யத் தூண்டிய எண்ணம் எதுவாக இருக்கும்? எந்தக் கலாச்சார விழுமியத்தை இழந்துவிட்டார் என்பதற்காக தாய் தற்கொலை செய்தாள்?

     குழந்தை தன் நிலையிலிருந்து தன் தாய்க்கு தான் ஒரு வேண்டாத அவமானமாக நிற்கிறோம் என்று ஒருவேளை நினைத்தால் நீங்களும் நானும் இதை எப்படி எதிர்கொள்வது?

     பெங்களூரில் இது நடைபெற்றிருக்கிறது! பள்ளி மாணவி அபார்ட்மெண்ட் சுவரில் இருந்து குதித்து தற்கொலை செய்த செய்தி நாளிதழ்களில் வந்திருக்கிறது. 2015 இல் கல்வியாளர் மாடசாமி எழுதிய அந்தக்கட்டுரையின் அறிமுகப் பகுதி இப்படி இருக்கிறது.

     “பெங்களூரில் கடந்த மே மாதத்தில் நடந்த துயரச் சம்பவம் இது. நான் அந்த அடுக்ககத்தின் 16-வது மாடியில் இருந்தேன். 12-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள் ஒரு சிறுமி. மாணவி. மரணத்துக்குக் காரணம், தேர்வுத் தோல்வி. அது தமிழ்க் குடும்பம். அந்தக் குடும்பத்தின் நண்பர் சொன்னார், “குடும்பத்தில் தாத்தா- பாட்டிகூட உயிரோடு இருக்கிறார்கள். இந்தச் சிறுமியின் மரணம் – அந்தக் குடும்பத்தின் முதல் மரணம்.”
     இதே மே மாதம். மதுரை அருகே தேர்வில் தோல்வியுற்ற இரு சிறுவர்கள் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து உயிர்விட்ட செய்தி கேட்டு நண்பர் ஒருவர் சொன்னார், “கேட்கவே பயங்கரமா இருக்கு… சின்னஞ்சிறுவர்கள் எப்படி இந்த முடிவுக்குப் போனார்கள்?” விஷயம் இதுதான். நம் சமூகத்தில், குழந்தைகள் உயிரை மாய்த்துக்கொள்வதைத்தான் தற்கொலைகளின் பட்டியலில் சேர்க்கிறோம். அவர்கள் மனதுக்குள் மருகி மருகிச் சாவதைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.”

     இப்பொழுது நாம் விவாதிக்கிற விசயமோ இதுவரை கேள்விப்படாத ஒன்று! பெற்றோர்கள் மதிப்பெண் குறைவிற்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள்! Peer pressure என்பதில் இந்த சமூகம் முன் தள்ளும் தனிநபர், திறமை, மதிப்பெண் என்பதில் வெறிகொண்ட வக்கிரம் இருந்தாலன்றி இது சாத்தியமில்லை என்பது என் மதிப்பீடு. எல்லா கூட்டுத்துவ விழிமியங்களையும் ஒன்றுவிடாமல் நினைவுபடுத்த வேண்டிய கையறுநிலையில் இருக்கிறோம்.

     • 1.இளங்கோ சார்.. சூப்பர் சிங்கர் வரை ஏற்றுக்கொண்டேன் என்பதை சுட்டும்போது ஏதோ நீங்கள் சரியாக விளக்கி நான் புரிந்துகொள்ளாமல் போனது போல் காட்ட முயல்கிறீர்கள். கொஞ்சம் பழைய பதிலை திரும்பவும் படித்துப் பாருங்கள். இப்போதும் கேட்கிறேன். தாயின் தற்கொலையில் வக்கிரம் எங்கே இருக்கிறது (நுகர்வுவெறி என்ற அரசியல் சொல்லை நீங்கள் இப்போது துறந்து விட்டீர்கள்). நல்லதங்காள் கதையை விடுங்கள். புறநானூற்றுத் தாயின் வீரத்தை சீமானின் பாணியில் கூட்டுத்துவத்தின் வெளிப்பாடாக பார்க்கும் உங்கள் உள்ளொளியின் உக்கிரம் தான் தாங்க முடியவில்லை. எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்க முடிகிறது. முடியல சார்.. தன் பிள்ளை உதவாக்கரையாக இருக்கிறான் என்பதற்காக தற்கொலை செய்து கொண்ட தாய்மார்களை காலந்தோறும் தானே பார்த்து வருகிறோம். அவர்களேல்லாம் பீர் பிரசர்-ல் தான் தற்கொலை செய்து கொண்டார்களா.. இதற்கும் கூட்டுத்துவத்துக்கும் உள்ள உறவு கூட வலிந்து திணிக்கும் முயற்சியாக படவில்லையா..

      • உதவாக்கரை பிள்ளைகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர்கள் இயல்புதான் என்று சொல்லவரும் நீங்கள், தேர்வில் தோல்வியுற்றால் உதவாக்கரை என்று முடிவுக்கு வருகிறீர்கள். உங்களுடைய வக்கிரம் எதைவிடவும் அறுவெறுக்கத்தக்கதாக உள்ளது! சாரி சார். உங்கள் தரத்தின் அருகதையைக் கண்டால் நுகர்வுவெறியெல்லாம் சும்மா! கூட்டுத்துவம் பற்றிய எமது விளக்கத்தற்கு பொறுத்தருள்க!

       • என்னே ஒரு தர்க்க முறை.. எனது முடிவு என நீங்களாகவே முடிவு செய்து கொண்டு அதற்காக அருவருப்பு முதல் தராதரம் வரை போய் விட்டீர்கள். அங்கிருந்து நுகர்வுவெறி, கூட்டுத்துவம் எல்லாவற்றையும் சிக்சருக்கு அடித்து விட்டீர்கள். சொல்லாத சொல்லுக்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்… இந்த தர்க்கமுறைதான் நீங்கள் கட்டுரை முழுக்க வந்து நிற்கும் முட்டுச்சந்து என்பதை சொன்னால் அதற்கு தரம் வரை போவீர்கள். சரி விடுங்கள்.. நானும் தன்யனாகி சந்தர்ப்பவாதியாக முயல்கிறேன்.

    • \\ கட்டமைப்பு நெருக்கடி பற்றி விவாதிப்பதாக என்னுடைய கேள்வி இல்லை. மையமான தலைப்பில் இருந்து விலகுவதற்காக முயல்கிறீர்கள். எட்டாவது கேள்வி கூட ஒட்டாமல் இருப்பது பற்றித்தானே தவிர அரசியல் உள்ளடக்கம் பற்றி அல்ல.\\

     ஐயா1999இல் இருந்து பள்ளிகளை மூடுவதை வைத்து அன்றே கட்டமைப்பு நெருக்கடி வந்துவிட்டதா என்று கேள்வியையும் இறுதியில் கட்டுரை கட்டமைப்பு நெருக்கடியை விளக்குவதாக இல்லை என்றும் முடிந்திருந்தீர்கள்.

     93% சதவீத சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இதற்கு மத்திய மாநில அரசு, அதிகார வர்க்க நீதிமன்றங்கள் உடந்தை என்றும் எந்த தார்மீக கடமையின் அடிப்படையில் உங்கள் குழந்தைகளை கலந்தாய்விற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

     இது போன்ற எந்த அம்சங்களையும் நீங்கள் பரிசீலிக்கவில்லை. கட்டுரையின் வடிவம் வாசகர்களுக்கு பிரச்சனை என்றால் நீங்கள் மட்டும் ஆழ்ந்து படித்து எளிமை ஒரு மேட்டர் இல்லை என்று செங்கதிர்செல்வனிடம் மல்லுக்கு நிற்கிறீர்கள்.

     இதன் பின்னணியில் 99லேயே கட்டமைப்பு நெருக்கடி வந்துவிட்டதா என்ற கேள்வியின் மூலம் நீங்கள் கட்டமைப்பு நெருக்கடி என்பதை ஆம்/இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து பேசியதாக எனக்குத்தோன்றவில்லை. கட்டமைப்பு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர் அதன் தோற்ற காலம் குறித்து கேள்வி எழுப்புகிறார் என்றால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என்னால் ஒரு தேதியை சொல்ல முடியும் என்றால் உங்களாலும் அது முடியும் தானே! அப்படியானால் அது பாசாங்கு இல்லையா?

     இப்பொழுது தொகுப்பாக வந்தால் கட்டமைப்பு நெருக்கடி அரசியலின் உள்ளடக்கம் உணர்ந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள். அப்படியானால் இந்தக் கட்டுரையைத் தவிர்த்து மக்களுக்கு புரியும் வண்ணம் கல்வித்துறையில் கட்டமைப்பு நெருக்கடியை எடுத்துச் சொல்வதற்கு கைவசம் என்ன உத்திகளை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பகிருங்கள். நாம் அதன் படி செல்வோம். துண்டுபிரசுரம் தயாரித்து கலந்தாய்விற்கு வரும் மாணவ-பெற்றோர்களுக்கு வினியோகிப்போம். இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி குறித்து தங்களுக்கு பிரச்சனை இருப்பதால் அசோக் நகரில் இருக்கும் கல்லூரிகுச் சென்று கள ஆய்வையும் நிகழ்த்தலாம். சடுதியில் வேலையில் இறங்குங்கள்.

     \\ செங்கதிர் செல்வனது விமரிசனத்தை ஏற்கிறேன் என்ற உங்களது வாதமே விமரிசனத்தை நீர்த்துப் போக வைக்கும் சந்தர்ப்பவாதமாய் பார்க்கிறேன். உதாரணமாக முதலில் கூர்மையற்ற பத்திகள் இருப்பதை ஒத்துக்கொள்ளும் தாங்கள் பின்னூட்டத்தின் பின்பகுதியில் அதனை மறுக்கின்றீர்கள்.\\

     என்ன சந்தர்ப்பவாதம் என்பதை விளக்குங்கள். கூர்மையற்ற பத்திகள் என்பது நான் முன் வைக்கிற பரிசீலனை. அனுப்பிய நீண்ட வடிவத்திலிருந்து ஆசிரியர் குழுவினர் தங்கள் வேலைப் பளுவிற்கு மத்தியில் செம்மைப் படுத்தியிருக்கின்றனர். இப்பொழுது வெளிவந்த பகுதியில் கூர்மையற்ற பத்திகள் எதுவென்பதை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். நான் சுட்டிக்காட்ட விரும்பியது கட்டுரையை Defend செய்வதன் மூலமாக மட்டுமே கட்டமைப்பு நெருக்கடியையோ இன்னபிறவற்றையோ விளக்கிவிட்டதாக மார்தட்ட முடியாது என்பது தான். கட்டுரை புரியவில்லையென்றால் புரியவில்லை அவ்வளவே! இதன் பின்னணியில் நின்று கொண்டு உங்களது கருத்துகள் எனக்கு உடன்பாடில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறேன்.

     • முதலில் இரண்டாம் பத்திக்கு பதில் சொல்கிறேன். அதனுடன் முதல் பத்தியும் தொடர்புள்ளதனால். நான் முதலில் சில தகவல் பிழை, அரசியல்ரீதியில் பொருத்துவதில் உள்ள பிரச்சினைகளை சுட்டினேன். உடனடியாக செங்கதிர் செல்வன் என்ற நண்பர் தாமே முன்வந்து எளிமையாக இருந்தால் சடவு இராது என்று விமர்சிக்கிறார். __________ உள்ளடக்கத்திலேயே பிரச்சினை என அரசியல் சார்ந்த நபர்கள் முன்வைத்தால் இலக்கியவாதிகளோ அதன் வடிவத்தை பற்றி நிற்பார்கள். இது ஒரு போங்காட்டம் தான் இல்லையா.. சந்தர்ப்பவாதமாக நீங்கள் இல்லாமல் இருப்பின் செங்கதிர்செல்வனது சொற்களை பொருட்படுத்தவே அவசியம் இராது. அது இருக்கவே அங்கு ஊன்றி நின்று காத்திரமாய் சுட்டப்பட்ட புள்ளிகளை நீர்த்துப் போக வைக்கிறீர்கள். இது இப்போது வரை பின்னூட்ட விவாதங்களிலும் தொடருவதை, ஜம்ப் அடிக்கும் வாதமுறையை, கைவிடும் சொற்ற்றொடர்களை என சுட்டிக்காட்டிக் கொண்டே போகலாம். இப்போதும் கூர்மையற்ற பத்திகள் எனப் பொதுவாகத்தான் சொல்கின்றீர்கள். அந்த கூர்மை என்பது வடிவமா உள்ளடக்கமா என்பதை சொல்ல தவிர்க்கிறீர்கள். இதுதான் சந்தர்ப்பவாதம்.
      முதலாவது புள்ளி. என்னை உங்களோடு வேலை செய்ய அழைத்தமைக்கு நன்றி. ஆயினும் அழைப்பை ஏற்க இயலாத நிலைமையில் இருக்கிறேன். ஆயினும் அது தொடர்பாக எழும் ஐயங்களை முன்வைக்க தகுதியிருக்கும் உங்களது தரப்பட்டியலில் என்பதால் இது. கள ஆய்வை ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு போய் செய்ய வேண்டிய தேவை என்ன.. அதனை டெஸ்க் ஒர்க் ஆக முடிக்க இயலாதா.. முடியாது எனில் அதற்கான கேள்விகளை ஓரிரண்டு சொல்ல இயலுமா.. அடுத்து பொறியியல் கல்லூரி அட்மிசன் கள ஆய்வு. முதலில் கட்டமைப்பு நெருக்கடிக்கு பிரச்சாரம் என்பதன் கட்டத்தை நிராகரிப்பது தான் எனது புரிதல். அது கிளர்ச்சிக் கட்டத்துக்கானது என்றும் கருதுகிறேன். அடுத்து அண்ணா பல்கலையில் மக்களே கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கும் மேற்பட்ட சீட்டுகளை காலியாக இருக்க விடுவதை அறிந்திருப்பீர்கள். முதல் டயர் கல்லூரிகளை மட்டும்தான் தெரிவு செய்கிறார்கள். அதெல்லாம் இருக்க கட்டமைப்பு நெருக்கடியை குறித்து உங்களது கட்டுரை தெளிவாக வந்தடையவில்லை என சொன்னதனால் உங்களது சுயமுனைப்பு காயப்பட்டிருப்பதாய் நினைக்கிறேன். அப்படி பட்டிருந்தால் மன்னிக்க. பிழையானவற்றை மக்கள் பக்கமிருந்து பேசுவதால் ஏற்படும் நீண்ட காலத் துயரங்களோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமேயில்லை என்று கருதுவதால் தான் அப்படி சொன்னேன்.

  • நண்பர் மணி மயிர்பிளக்கும் வாதங்கள் அமைக்க ஆரம்பித்து விட்டார். ஒரு ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

   • நான் எப்படி உங்களுக்கு நண்பராக இருக்க முடியும். வாதங்களை வைக்கும் முன்னரே மயிர் பிளக்குமா பிளக்காதா என அர்த்தபூர்வமாய் ரசிக்கும் ரசிகமணியான தாங்களுக்கு அடியேனெல்லாம் நண்பராய் இருப்பது வசிட்டரின் மோதிரக்கை குட்டுக்கான ஏக்கமல்லவா

 2. அரசு பள்ளிகள் சாதனை படைத்துள்ளன.தனியார் பள்ளி,கல்லூரிகள் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.குறுக்கு வழியில் மோசடியாக சாதனை படைக்கின்றன.கல்வியில் தனியார் மயத்தை ஒழிக்க மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதை நீரோட்டமாக கட்டுரையாளர் விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.சொன்ன செய்திகள் சரியென்றாலும் விதம் எளிமையாயில்லை.கட்டுரையாளர் தான் எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துச் சரிபார்த்த பின் வெளியிட வேண்டும்.கட்டுரையைப் படிக்கும் போது படிப்பவர்க்குச் சடவு ஏற்படக்கூடாது.

  • செங்கதிர் செல்வன்.. சொன்ன செய்தியும் சரியில்லை. எளிமையை யாரும் கோரவில்லை. சொந்த பிரச்சினையா என்ன.. சடவு ஏற்படுவதற்கு… சம்மன் இல்லாமல் வரும்போதே தெரிகிறது.. நீவிரின் விருப்பம் இன்னதென்று

 3. இந்த எஜுகேசன் சிஸ்டமே நீங்க சொல்லுற போலிஜனனாயம் மாதிரியானதுதான் இந்த போலி ஜனனாயத்தால பாஸிஸ ஜெயாவ வீழ்த்த முடியாதோ அது பொலத்தான் மனப்பாடம் பன்ன வச்சு அதிகமா மார்க் எடுக்க வைக்குற பள்ளிகல்தான் ஜெயிக்கும் இந்த எஜிகேசன் சிஸ்டம் இருக்குற வரைக்கும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிய வீழ்த்த முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க