Monday, March 27, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்

பா.ஜ.க ஹோண்டா கூட்டணியை முறியடித்த தொழிலாளர்கள்

-

வெற்றியின் முதல் படியில் ஹோண்டா தொழிலாளர் போராட்டம்

“இது எங்களுக்கான போராட்டம் மட்டும் அல்ல; ஒப்பந்த தொழிலாளர்களான எங்கள் சகோதரர்களுக்காக, அவர்கள் மிகக் கொடூரமாகச் சுரண்டப்படுவதை எதிர்த்தும் நாங்கள் போராடுகிறோம்.”
திலீப், நிரந்தரத் தொழிலாளி,
ஹோண்டா மோட்டார்ஸ், ராஜஸ்தான்.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் குஷ்கேரா தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஹோண்டா மோட்டார்ஸ்-ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தொழிலாளர்களின் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சம், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஏற்பட்ட ஐக்கியமும் ஒற்றுமையும்தான். அந்தப் பிணைப்பை நிரந்தரத் தொழிலாளர்கள் முன்கையெடுத்து நிலைநாட்டியதுதான்.

honda-sit-in-strike
பிப்ரவரி 16 அன்று ஹோண்டா தொழிற்சாலைக்குள் அந்நிர்வாகத்தின் அடாவடித்தனத்தையும் ஒடுக்குமுறையையும் கண்டித்து உற்பத்தியை நிறுத்தி வைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டம்

நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே ஒற்றுமையே காணமுடியாத அளவிற்குப் பிளவு இருப்பதுபோலத் தென்படுவதெல்லாம் வெறும் மாயை என்பதையும், மொழி, இனம், பண்பாட்டு வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளி வர்க்கம் ஐக்கியப்பட்டு, முதலாளித்துவ சுரண்டல், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராட முடியும் என்பதையும் அப்போராட்டம் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான ஹோண்டா மோட்டார்ஸ், இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 22 சதவீதத்தைத் தனது பிடியில் வைத்திருக்கிறது. அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஹோண்டா நிறுவனத்திற்குத் தொழிற்சாலைகள் இருந்தாலும், ராஜஸ்தானிலுள்ள தொழிற்சாலைதான் உற்பத்தித் திறனில் ஆசியாவிலேயே முதன்மையானது எனக் கூறப்படுகிறது. அத்தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 4,400 இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 20 விநாடிகளுக்குள் ஒரு பைக் அல்லது ஒரு ஸ்கூட்டர்.

எஃப் 2 எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஹோண்டா நிறுவனத்தின் ராஜஸ்தான் தொழிற்சாலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டதட்ட 4,000. ஒரு தொழிலாளி, ஓவர் டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், 12 மணி நேரத்தில் ஒரு வாகனத்தைத் தயாரிக்கிறார் எனக் கொள்ளலாம்.

எட்டு மணி நேரம் கொண்ட ஷிஃப்டில், உணவு இடைவேளை முப்பது நிமிடங்கள், தலா 15 நிமிடங்கள் கொண்ட இரண்டு தேநீர் இடைவேளை, மீதமுள்ள ஏழு மணி நேரமும் ஒரு விநாடியைக்கூட வீணாக்காமல் இயந்திரங்களோடு போட்டிபோட்டு உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். இதில் எந்த இடையூறையும் – சிறுநீர் கழிக்கவோ, தொழிலாளி சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இடைவேளை நேரத்தில் ஒரு நிரந்தரத் தொழிலாளி சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்ப ஓரிரு விநாடி தாமதமானாலும், அவருக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்படுவதோடு, எச்சரிக்கை நோட்டீசும் தரப்படும்.

ஒரு ஒப்பந்த தொழிலாளி இவ்வாறான ‘தவறை’ச் செய்தால், அவரிடம் எந்தவிதமான விளக்கமும் கேட்காமல், அவர் வேலையிலிருந்து துரத்தப்படுவார். ஒப்பந்த தொழிலாளிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும், அதன் காரணமாக ஒருநாள்கூட விடுப்பு எடுக்க முடியாது. அப்படி எடுத்துவிட்டால், அவருடைய ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டிற்குப் புதுப்பிக்கப் படாமல் ரத்து செய்யப்படும்.

சிறு தவறுக்குக்கூட நிரந்தரத் தொழிலாளர்கள் தகாத வார்த்தைகளால் ஏசப்பட்டு, அவமானப்படுத்தப்படுவதும்; ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் ஹோண்டா நிர்வாகத்தில் சர்வ சாதாரணமானது.

honda-workers-solidarity
ஹோண்டா தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து குர்கான், மானேசர், தாபுகாரா சிறப்புப் பொருளாதார மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குர்கானில் உள்ள தேவிலால் விளையட்டு அரங்க மைதானத்தில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

4,000 தொழிலாளர்கள் வேலை செய்து வரும் ராஜஸ்தானிலுள்ள ஹோண்டாவின் எஃப் 2 தொழிற்சாலையில் 472 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ள அனைவரும் பல்வேறு ஏஜென்சியின் கீழ்வரும் ஒப்பந்த தொழிலாளர்கள். ஓவர்டைமையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு நிரந்தரத் தொழிலாளி மாதமொன்றுக்கு ரூ 22,000 வரை ஊதியம் பெறலாம். ஆனால், அதே வேலையைச் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளியின் மாதக் கூலி ரூ 10,000 தான்.

சலிக்காமல், எதிர்த்துப் பேசாமல், கடினமாக வேலை செய்தால் நிரந்தரத் தொழிலாளியாகி விடலாம் என்ற கனவில் ஒப்பந்த தொழிலாளி இருத்தி வைக்கப்படுகிறான். ஆனால், நிரந்தரத் தொழிலாளியாக உயர்வு பெறுவதற்கு ஹோண்டா நிர்வாகம் நடத்தும் தேர்வில் தோல்வியடையச் செய்வதன் மூலம் ஒப்பந்த தொழிலாளி ஒப்பந்த தொழிலாளியாகவே நிறுத்தப்படுகிறான்.

மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, ராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டம், தொழிற்பழகுநர் சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்து, ராஜஸ்தானைப் பன்னாட்டு நிறுவனங்களின் பலிபீடமாக மாற்றியது. இத்திருத்தங்கள் தொழிலாளர்களைத் தமது கொத்தடிமைகளாக நடத்துவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தன.

இத்திருத்தங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கி விடும் என பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கனவு கண்டன. அந்த எண்ணத்தில் சம்மட்டி அடியாக இறங்கியது, ஹோண்டா தொழிலாளர்களின் ஐக்கியமும் போராட்டமும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டவுடேனேயே, ஆகஸ்டு 2015-ல் ஹோண்டா தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தைத் தொடங்கக் கோரும் விண்ணப்பம் தொழிலாளர் நலத் துறையிடம் அளிக்கப்பட்டது.

honda-breaking-bondsதொழிலாளர்களின் நியாயமான, சட்டபூர்வமான, ஜனநாயகப்பூர்வமான இக்கோரிக்கையை, பா.ஜ.க. அரசும், ஹோண்டா நிர்வாகமும் சட்டவிரோதமான, மோசடியான குறுக்கு வழிகளில் முறியடிக்க முனைந்தன. தொழிற்சங்கத்தைக் கட்டுவதற்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட 227 தொழிலாளர்களுள் ஒரு 21 பேரின் கையெழுத்தைப் போலியாக (ஃபோர்ஜரி)ப் போட்டு, தொழிற்சங்கம் தொடங்க தங்களுக்கு விருப்பமில்லை என்ற மனுவைத் தயாரித்து, தொழிலாளர் நலத் துறையிடம் கொடுத்தது, நிர்வாகம். இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையையும் நடத்தாமல், தொழிலாளர்களின் விண்ணப்பத்தை முடக்கி வைத்தது, தொழிலாளர் நலத் துறை.

தொழிற்சங்கத் தலைவராக முன்நிறுத்தப்பட்ட நரேஷ்குமாரை பீகாருக்கு மாற்றியது நிர்வாகம். இதற்கு அவர் அடிபணிய மறுக்கவே, அவரும் தொழிற்சங்கச் செயலராக முன்நிறுத்தப்பட்ட ராஜ்பால் உள்ளிட்டு மூன்று பேரைப் பணி நீக்கம் செய்ததோடு, மேலும் 5 தொழிலாளர்களைப் பணியிடை நீக்கம் செய்தது. மேலும், செப்டம்பர் 2015 தொடங்கி பிப்ரவரி 2016-க்குள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட 1,200 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அந்த வேலை சுமை முழுவதும் மற்ற தொழிலாளர்கள் மீது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டது. நிர்வாகத்தின் அடியாட்கள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் உற்பத்திப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்கள் அவர்களின் நேரடிக் கண்காணிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.

இவ்வாறு தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான முரண்பாடு சிறுகச்சிறுக முற்றி, பிப்ரவரி 16 அன்று போராட்டமாக வெடித்தது. அன்றைய தினம், தொடர்ந்து மூன்று நாட்கள் ஓவர் டைம் வேலை வாங்கப்பட்ட ஒரு ஒப்பந்த தொழிலாளியை நான்காவது நாளாகவும் ஓவர் டைம் செய்யுமாறு அதிகாரிகள் நிர்பந்திக்க, அவர் தனது உடல் நிலையைக் காட்டி மறுத்தார். அவரின் நிலையைப் பரிசீலிக்கவே மறுத்த சூப்பர்வைசர்கள், அத்தொழிலாளியைத் தரக்குறைவாகப் பேசியும் அடித்தும் அவமானப்படுத்தினர். நிர்வாகத்தின் இந்த ஈனத்தனமான செயலையடுத்து, குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உற்பத்தி நிறுத்தம் போராட்டத்தை உடனடியாகவே தொடங்கினர். “ஏ” ஷிப்டில் வேலை செய்துகொண்டிருந்த 2,000 தொழிலாளர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு, ஒப்பந்த தொழிலாளியைத் தாக்கிய மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதோடு நின்றுவிடாமல், பணி நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க முன்னணியாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தவும், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கவும் கோரி தொழிற்சாலைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதேபொழுதில், அடுத்த ஷிப்டுக்கு வரத்
தயாராக தொழிற்சாலையின் வாசலில் நின்றுகொண்டிருந்த தொழிலாளர்களும் நிர்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தைத் தொடங்கினர்.

தொழிலாளர்களின் இந்தப் பதிலடியை எதிர்பார்க்காத நிர்வாகம் போலீசின் உதவியோடு போராட்டத்தை முறியடிக்க முனைந்தது. தொழிற்சாலைகளின் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்து உள்ளே போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களைத் தொழிற்சாலைக்குள் சிறை வைத்தது. நிர்வாகத்தின் கைக்கூலியாக வந்த வட்டாட்சியர், பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐந்து முன்னணியாளர்களை அழைத்துச் சென்று, போலீசிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து பின்புற வாயில் வழியாக போலீசையும் ரவுடிகளையும் தொழிற்சாலைக்குள் இறக்கி, போராடிய தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியது. போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னணியாளர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், தொடர்ந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, சித்திரவதை செய்தது.

இதன் பிறகும் பிப்.16 அன்று தொடங்கிய போராட்டத்தின் கனல் தணிந்து போகாமல் கனன்று கொண்டிருக்கவே, தொழிற்சங்க முன்னணியாளர்களைத் தேடித் தேடிக் கைது செய்தது, போலீசு. மொத்தமாக 44 தொழிலாளர்கள் பிணையில் வெளியில் வர முடியாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். போராடிய தொழிலாளர்கள் ஆலையைச் சுற்றி 500 மீட்டருக்குள் நுழையமுடியாதபடி நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. புதிய ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு எடுத்தும், குஜராத்தில் உள்ள தனது ஆலையின் உற்பத்தி இலக்கைக் கூட்டியும் உற்பத்தி சரிந்துவிடாமல் காப்பாற்ற முனைந்தது, ஹோண்டா நிர்வாகம்.

இந்தப் போராட்டத்தையும், அதன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் வெளியுலகிற்குத் தெரிந்துவிடாதபடி மூடி மறைத்துவிட ஹோண்டா நிர்வாகமும், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டன. தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்த “நியூஸ் லாண்டரி” என்ற இணைய தளப் பத்திரிகையைச் சேர்ந்த அமித் என்ற பத்திரிகையாளர் ஹோண்டா நிர்வாகத்தின் அடியாட்களால் மிரட்டப்பட்டதோடு, உள்ளூர் போலீசு நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டார்.

ஆனாலும், ஹோண்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளும் செய்திகளும் போராட்டங்களும் பரவியதை ஹோண்டா-பா.ஜ.க.கூட்டணியால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக, உள்ளூர் பொதுமக்கள் கட்சி வேறுபாடின்றி, ஹோண்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று கிராமக் கூட்டங்களை நடத்தினர். தாபகுரா, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள மாருதி தொழிலாளர்களும், மானேசரில் உள்ள ஹோண்டா தொழிலாளர்களும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலைமைகள் ஹோண்டா-பா.ஜ.க. ராஜஸ்தான் அரசு கூட்டணியைப் பின்வாங்கச் செய்து, கைது செய்யப்பட்ட 44 தொழிலாளர்களுள் 39 பேருக்குப் பிணை வழங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

ஹோண்டா நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் ஐக்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே, தனது தொழிற்சாலையில் உ.பி., பீகார், ஒரிசா எனப் பல்வேறு மாநிங்களைச் சேர்ந்தவர்களை ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணிக்கு எடுத்து வருகிறது. எனினும், ஹோண்டா தொழிலாளர்கள் நிரந்தர, ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் மத்தியிலும் ஐக்கியத்தைச் சாதித்துள்ளனர். இவையெல்லாம், ஹோண்டா தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க உரிமைக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு தொடங்கி விடாப்பிடியாக நடத்திவரும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளாகும்.

போராட்டத்தின் வெற்றி தோல்வியைக் காட்டிலும், வேறுபாடுகளைக் கடந்து இத்தொழிலாளர்கள் சாதித்திருக்கும் ஒற்றுமை மிகவும் முக்கியமானது. சர்வதேச மூலதனமும் அரசும் இணைந்து நடத்தும் இத்தாக்குதலை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் தேச, இனப் பிரிவினை கடந்த ஒற்றுமையைச் சாதிக்க முடியும். சாதித்தாக வேண்டும்.

– குப்பன்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க