Sunday, June 16, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுதிய கல்விக் கொள்கையல்ல - கல்வி மறுப்புக் கொள்கை !

புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !

-

ந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்காக, மோடி அரசால் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவைத் தயாரித்து, அதனை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சில மாதங்களுக்கு முன்பு அளித்தது. இந்த வரைவை இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடாத மைய அரசு, “தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆவணத்தை மட்டும் வெளியிட்டு, அதன் மீது ஆகஸ்டு 16-ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என அறிவித்திருக்கிறது.

டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன்

தேசியக் கல்விக் கொள்கையை மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மருந்துக்குக்கூட கல்வியாளர் ஒருவரும் இடம் பெறவில்லை. ஐந்து பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தக் குழுவின் தலைவரான டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர். குழுவின் உறுப்பினர்களுள் நான்கு பேர் அரசுத்துறைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள். எஞ்சியஒருவர், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்தவரும், கடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) தலைவராக இருந்து, பாடத் திட்டத்தைக் காவிமயமாக்கியதில் முக்கியப் பங்காற்றியவருமான ஜெ.எஸ்.ராஜ்புத்.

இதுமட்டுமின்றி, இக்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் கமுக்கமாகவே நடந்து வந்தன. 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, வலைத்தளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுக் கல்விக் கொள்கைக்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக இந்தக் குழு கூறினாலும், எங்கே, எப்போது கருத்தறியும் கூட்டங்களை நடத்தினார்கள் என்பது பெரும்பாலான கல்வியாளர்களுக்குத் தெரியவில்லை.

ஜெ.எஸ்.ராஜ்புத்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் உறுப்பினரும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவருமான ஜெ.எஸ்.ராஜ்புத்.

அரசு அதிகாரிகளையும் ஆர்.எஸ்.எஸ்.காரனையும் கொண்டு மட்டுமே இந்தக் குழு அமைக்கப்பட்டதும், அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் இரகசியமாகவே நடந்து முடிந்திருப்பதும் தற்செயலானது அல்ல. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் விருப்பத்துக்கும், தேவைக்கும் ஏற்றவாறு இந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே, கல்வியாளர்களுக்கும் கல்வியில் தனியாரின் கொள்ளை, ஆதிக்கத்தை ஒழிக்கக் கோருபவர்களுக்கும் இக்குழுவில் இடமளிக்க மறுத்திருக்கிறது, மோடி அரசு.

எட்டாவதுவரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிப்பது என்றிருப்பதை, தரம் என்ற பெயரில் இனி ஐந்தாவதுவரை மட்டும்தான் அனைவருக்கும் தேர்ச்சி எனச் சுருக்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன்பின் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களின் பள்ளிப் படிப்புக்கு எட்டாவதோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர்களைத் திறன் மேம்பாட்டுக் கல்விக்கு அனுப்ப உள்ளதாகக் குறிப்பிடுகிறது. படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள் மீது புதிய கல்விக் கொள்கை எத்தகைய “அக்கறையைக் கொண்டிருக்கிறது என்பதை இதுவொன்றே எடுத்துக்காட்டி விடுகிறது.

படிப்புத்திறன் வீழ்ச்சியடைந்திருக்கிறது என்பது உண்மை என்றாலும், அதற்குக் காரணம் மேலே சொல்லப்பட்ட விதியோ, மாணவர்களோ அல்ல. அரைகுறை உண்மைகளை வைத்துக் கொண்டு திரித்துப் புரட்டுவது பார்ப்பனக் கும்பலுக்குக் கைவந்த கலை என்பதால், மாணவர்களின் மீதும்தேர்ச்சி விதியின் மீதும் பழியைப் போட்டுவிட்டு, இப்பிரச்சினையிலிருந்து அரசினைத் தப்பவைக்க முயலுகிறது.

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை, ஒவ்வொரு புலத்துக்கும் ஏற்ற சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது, பள்ளிக்கூடங்கள் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், திண்ணைப் பள்ளிகளாகவோ, மரத்தடிப் பள்ளிகளாகவோ இருப்பது மற்றும் ஆசிரியர்களின் அக்கறையின்மை இவைதான் பள்ளிக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு முக்கிய காரணங்கள். இவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட அரசு, அதிலிருந்து கழண்டு கொள்ளும் தீய நோக்கில்தான் தேர்ச்சி விதியை மாற்றியமைக்கும் முடிவை அறிவித்திருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை நடைபாதப் பள்ளி
மும்பயிலுள்ள வெர்ஸோவா புறநகர்ப் பகுதியில் உதிரித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் நடைபாதைப் பள்ளி

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள், நகர்ப்புறங்களில் உதிரித் தொழிலாளர் குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் ஆகியோரைத்தான் இந்த விதி கடுமை
யாகப் பாதிக்கும். சிறப்புக் கவனம்கொடுத்துக் கைதூக்கிவிடவேண்டிய இந்த வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை நைச்சியமான வழியில் பள்ளிக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறது, மோடி அரசு.

பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்குக் கல்வியறிவு தேவையில்லை என மனுதர்மம் கூறியது என்றால், அடித்தட்டு சாதி மற்றும் வர்க்கங்களுக்கு ஆரம்பக் கல்விக்கு அப்பால் தேவையில்லை என்கிறது, புதிய கல்விக்கொள்கை.

ஐந்தாவது வகுப்பிற்குமேல் தேர்ச்சியடையத் தவறும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படும் எனக் கூறும் இக்கல்விக் கொள்கை, அந்த மாணவர்களின் உடல் தகுதியையும் பார்த்துப் பயிற்சி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிடுவதாகச் சுட்டிக் காட்டுகிறார், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த அருணன். மூளை உழைப்புக்கு பார்ப்பனர்கள், உடல் உழைப்புக்கு கீழ்சாதியினர் என்ற சனாதன தர்மத்தைத்தான், புதிய கல்விக் கொள்கை சுற்றிவளைத்துக் கொண்டு வருகிறது. மற்ற சாதியினருக்குக் கல்விபெறும் உரிமையை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்கள் தம்மை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொண்ட அயோக்கியத்தனத்தைத்தான் புதிய கல்விக்கொள்கை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர எத்தனிக்கிறது.

தரம் என்ற பெயரில் ஏழை மாணவர்களின் கல்வி யுரிமை பறிக்கப்படும் அபாயம் மட்டுமல்ல, மாநிலப் பாடத் திட்டம், மாநிலக் கல்வி வாரியங்களை ஒப்புக்குச் சப்பாணியாக மாற்றி, கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்குக் கடத்திப் போவது, தாய்மொழிவழிக் கல்வி, தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமை ஆகியவற்றைக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்துவது போன்றவற்றை இப்புதிய கல்விக் கொள்கை தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது.

ஏழைகளுக்கு கல்வி மறுப்பு
ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சி என்ற ஆலோசனை அடித்தட்டு குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களைத்தான் கடுமையாகப் பாதிக்கும். சிறப்புக் கவனம் கொடுத்துக் கைதூக்கிவிட வேண்டிய இந்த வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை நைச்சியமான வழியில் பள்ளிக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்த முனைகிறது, மோடி அரசு.

மாநில பாடத் திட்டத்தை ஒழித்துக்கட்ட இரண்டு வழிகளைக் கையாளுகிறது, இப்புதிய கல்விக் கொள்கை. ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கான திட்டத்தை (syllabus) இனி மைய அரசு தயாரித்து அளிக்கும் எனக் கூறும் புதிய கல்விக் கொள்கை, சமூக அறிவியலைப் பொருத்தவரை பாதிப்பாதி என்ற விகிதத்தில் மைய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளப் பரிந்துரைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இனி மாநிலக் கல்வி வாரியங் களுக்கும் ஜெராக்ஸ் மிஷினுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.

வேத கணிதத்தையும், வேதத்தில் உரைக்கப்பட்டதாகக் கூறப்படும் அறிவியல் கருத்துக்களையும் நாடு தழுவியஅளவில் புகுத்துவதற்குத்தான் இந்த ஏற்பாடு. இதன் பிற்பாடு பாபா ராம்தேவும், ரவிசங்கர்ஜியும் அறிவியலையும் கணிதத்தையும் போதிப்பதற்கு நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சமூக அறிவியலில் பாதிப்பாதி என்பது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின் (அவர்களின் மொழியில் மாநிலங்களின்) வரலாறு மற்றும் பண்பாட்டை மறைக்கவோ, திரிக்கவோ உதவும். இதனை எதிர்த்து நடந்த தொலைக்காட்சி விவாதமொன்றில், “நீங்கள் மொழிப்போர் தியாகிகளைப் பற்றிப் பாடத் திட்டத்தில் சேர்ப்பதை அனுமதிக்க முடியாது எனப் பச்சையாகவே தமிழகத்தில் நடந்த மொழிப் போராட்டம் மீது வெறுப்பை உமிழ்ந்தார், பா.ஜ.க.பிரமுகர்.

பாடத் திட்டங்களுக்கு அப்பால், இனி மாநிலக் கல்வி இயக்குநர் பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., போன்று இந்தியக் கல்விப்பணி (ஐ.ஈ.எஸ். ) அதிகாரிகளைத்தான் நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது, புதிய கல்விக் கொள்கை. இந்துமயமாக்கப்பட்ட சமூக அறிவியலையும், கணிதம், அறிவியல் பாடங்களில் புகுத்தப் படும் வேதக் கருத்துக்களையும் மாநில அரசுகள் பிசகாமல் போதிக்கின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. மாநில ஆளுநர் போல இந்தக் கல்வி அதிகாரியும் மைய அரசின் ஏஜெண்டாகச் செயல்படுவார்.

கண்டனப் பேரணி
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திருச்சியில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களால் நடத்திப்பட்ட கண்டன பேரணி.

இப்படி நேரடியாகவே மாநிலப் பாடத்திட்டத்திற்கு வேட்டு வைக்கும் புதிய கல்விக் கொள்கை, அதன் மீது இன்னொரு அடியைக் கொடுப்பதற்காக நுழைவுத் தேர்வு என்ற ஆயுதத்தையும் கையில் எடுத்திருக்கிறது. மருத்துவம், பொறியியில் படிப்புகளுக்கு மட்டுமின்றி, அனைத்து உயர்கல்விக்கும் தேசிய போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது பாடத்திட்டமுறை சி.பி.எஸ்.இ. அளவிற்குத் தரமானதாக இல்லை என ஏற்கெனவே வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் பார்ப்பன கும்பலுக்கும், கல்வி நிபுணர்களுக்கும் இது அவல் கிடைத்தது போலாகிவிட்டது.
மாநில பாடத்திட்டம் எந்த விதத்தில் தரமற்றதாக உள்ளது எனக் கேட்டால், “ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் கல்விக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுகளிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் கலந்து கொள்வதும், வெற்றி பெறுவதும் குறைவாகஇருப்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள், இவர்கள்.

தமிழக மாணவர்களின் பிரச்சினையை விட்டுவிட்டு, தேசியப் பிரச்சினைக்கு வருவோம். சர்வதேச அளவில் நமது நாட்டின் உயர்கல்வி மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தரமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தும், தகுதி, போட்டித் தேர்வுகளை எழுதி ஐ.ஐ.டி.க்களில் படித்து முடித்த பிறகும், நமது நாட்டில் புதிய ஆராய்ச்சிகளோ, கண்டுபிடிப்புகளோ வருவதில்லை. இந்த அவல நிலைமைக்குக் காரணம் கேட்டால், தேசியவாதிகளின் பதில் என்னவாக இருக்கும்? அமெரிக்க பாடத் திட்டத்தை இந்தியாவில் புகுத்த வேண்டுமெனக் கூறுவதற்கும் கூசமாட்டார்கள்.

கல்வி தனியார்மயமாகியுள்ள காலச்சூழலில், மாநில பாடத் திட்டத்தைவிட, மெட்ரிகுலேஷன் பாடத்திட்டம் தரமானது, மெட்ரிகுலேஷனைவிட சி.பி.எஸ்.இ., தரமானது, சி.பி.எஸ்.இ.- ஊட்டி கான்வெண்டுகளில் போதிக்கப்படும் இண்டர்நேஷனல் பாடத் திட்டம் தரமானது என்ற ஓப்பீடுகளையெல்லாம் தோலுரித்துப் பார்த்தால், அதற்குள் கல்வி வியாபாரிகளின் நலனும், பார்ப்பன- கும்பலின் நலனும்தான் மறைந்திருக்கும். சமச்சீர் கல்வியைவிட, மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம் தரமானது எனத் தமிழகக் கல்வி வியாபாரிகளும் சோ போன்ற யோக்கியர்களும் கூப்பாடுபோட்டு அதனை எதிர்த்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள தேசிய நுழைவுத் தேர்வுகள் ஆகட்டும், அல்லது உயர் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் ஆகட்டும், அவை அனைத்தும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படியும்; ஆகப் பெரும்பாலும் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. பல்வேறு தேசிய இனங்களும், மொழிகளும், பாடத்திட்டங்களும் நடைமுறையில் உள்ள நமது நாட்டில், இந்த விதத்தில் தேசிய போட்டித் தேர்வுகளை நடத்துவது சமத்துவத்துக்கு எதிரானது. ஒருவன் இரண்டு கால்களோடும் ஓடுவானாம், அவனோடு போட்டி போடுபவன் ஒரு காலைக் கட்டிக் கொண்டு ஓட வேண்டுமாம் என்ற அயோக்கியத்தனத்திற்கு ஒப்பானது, இது.

இந்த அசமத்துவத்தை, அயோக்கியத்தனமான ஆட்டத்தை எதிர்க்காமல், நாடெங்கும் ஒரே பாடத் திட்டத்திற்கு மாறுவதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறுவது காரியவாதம். கல்வித் திட்டத்தைக் காரியவாதிகள் தீர்மானிப்பதைவிட அபாயகரமானது வேறொன்றும் இருக்க முடியாது. உடல் அளவில் இந்தியர்களாகவும், மனதளவில் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்குவதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மெக்காலே கல்வித் திட்டத்தைப் புகுத்தினார்கள். அதுபோல, இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பன தேசியவாதத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்துவதற்காகவே நாடெங்கும் ஒரே பாடத் திட்டம்என மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்தி வருகிறார்கள்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தேசிய அளவில் தகுதித் தேர்வுகள் நடத்துவதன் மூலம் உயர் கல்வியில் தரமான மாணவர்கள் சேருவதை உத்தரவாதப்படுத்த முடியும் எனப் பார்ப்பனக் கும்பலும், நிபுணர்களும் ஒரு கலர் சினிமாவை நீண்டகாலமாகவே ஓட்டி வருகிறார்கள். இதுவொரு மோசடி என்பதை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள வியாபம் ஊழல் நிரூபித்திருக்கிறது. கல்வி முதலாளிகளோடு, தனிப்பயிற்சி நிறுவன முதலாளிகளும் சேர்ந்து கொள்ளையடிப்பதற்குத்தான் போட்டித் தேர்வுகள் பயன்படுமேயொழிய, அது உயர்கல்வியில் நடக்கும் கொள்ளை, மோசடி, எஸ்.ஆர்.எம். மதன் போன்ற ஏஜெண்டுகளின் வலைப்பின்னல் முதலியவற்றை எந்த விதத்திலும் ஒழித்துக் கட்டிவிடாது.

தேசியத் தகுதி தேர்வு எதிர்ப்பு
மருத்துவக் கல்வி தேசியத் தகுதி மற்றும் போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

உயர் கல்வியைப் பொருத்தவரை, அதற்கான பாடத் திட்டத்தைக் கல்வியாளர்கள் தீர்மானிக்கக் கூடாது, அதனை சந்தையின் கையில், அதாவது கல்வி வியாபாரிகளின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் எனப் பத்தாண்டுகளுக்கு முன்பு அம்பானி கமிட்டி மைய அரசிடம் பரிந்துரைத்தது. மோடியின் புதிய கல்விக்கொள்கை அதனை நடைமுறைப்படுத்துவதை நோக்கி நகர்கிறது.

இதற்கேற்ப பாடத்திட்டத்தில் மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக்கழகக் கட்டுமானங்களிலும் மாற்றங்களைச் செய்யப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றங்களில், மாணவர்களின் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது. அம்மன்றங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக்குவதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுப்பது என்ற பெயரில் அவர்கள் அமைப்பாகத் திரளும் உரிமையைப் பறிப்பது, ஆசிரியர்கள் ஆளும் கட்சியின் கைக்கூலிகளாக இருப்பதை உத்தரவாதப்படுத்துவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி வழங்குவது என்ற பெயரில் அவை குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பதைத் தடுத்து, அவற்றை வணிகமயமாக்குவது, கல்லூரிகள் தமக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட்டுகளைஅண்டிப் பிழைப்பது என்றவாறு உயர் கல்விச் சூழலை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

உயர்கல்விக் கூடங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை. மேலும், தேவையான அளவிற்கு உள்கட்டுமான வசதிகள் இல்லாமல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் இயங்கி வருவது. இப்பிரச்சினைகளில் இனிமேல் அரசோ, நீதிமன்றங்களோ தலையிடக்கூடாது எனப் பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கை, இதற்கென தனி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறது.

காப்பீடு, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைத் துறைகள் தனியார்மயமாக்கப்பட்டு, அதில் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு அனுமதி கொடுத்தபிறகு, அதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள் அச்சேவைகளைப் பெறும் பொதுமக்களுக்கு நியாயமாக நடந்து கொள்ளாமல், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் சாதகமாக, அவர்கள் திணிக்கும் கட்டணக் கொள்ளையை உத்தரவாதப்படுத்தும் ஏஜெண்டுகளாகத்தான் நடந்து வருகின்றன. உயர் கல்வியிலும் அதுபோன்ற முதலாளிகளின் எடுபிடிகளை நீதிபதிகளாக்க முனைகிறது, புதிய கல்விக்கொள்கை.

பார்ப்பனியம், அதன் பிறப்புதொட்டே, வர்க்க ஆட்சியை, ஒடுக்குமுறையை உத்தரவாதப்படுத்துவதை, பாதுகாப்பதை, நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது. இந்து மதவெறி மோடி அரசு தயாரித்துள்ள புதிய கல்விக்கொள்கையும் இதிலிருந்து வேறுபடவில்லை. ஒருபுறம் கல்வியைத் தேசியம் என்ற பெயரில் காவிமயமாக்கி, இன்னொருபுறம் அத்துறையில் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை, ஆதிக்கத்தை உத்தரவாதப்படுத்துகிறது. பார்ப்பனியமும், தனியார்மயமும் இணைந்த ஒட்டுரகம்தான் இந்தப் புதிய கல்விக் கொள்கை.

அனைவருக்கும் இலவசக்கல்வி, தாய்மொழிக்கல்வி, கல்வித்துறையில் அரசின் பொறுப்பையும், கடமையையும் உறுதிப்படுத்துவது என்ற உரிமைகளெல்லாம் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகப் பெறப்பட்டவை. இவை அனைத்தையும் தரம், தேசியம் என்ற பெயரில் ஒழித்துக்கட்டுவதோடு, காசு இருப்பவனுக்குத்தான் உயர்கல்வி, அடித்தட்டு மக்களுக்குக் குலத்தொழில் என்ற பார்ப்பன அநீதியை, மறுகாலனியாதிக்கச் சூழலுக்கு ஏற்றவாறு திணிக்க முயலுகிறது, இப்புதியகல்விக் கொள்கை.

– அழகு
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

  1. //தரமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தும், தகுதி, போட்டித் தேர்வுகளை எழுதி ஐ.ஐ.டி.க்களில் படித்து முடித்த பிறகும், நமது நாட்டில் புதிய ஆராய்ச்சிகளோ, கண்டுபிடிப்புகளோ வருவதில்லை. இந்த அவல நிலைமைக்குக் காரணம் கேட்டால், தேசியவாதிகளின் பதில் என்னவாக இருக்கும்? அமெரிக்க பாடத் திட்டத்தை இந்தியாவில் புகுத்த வேண்டுமெனக் கூறுவதற்கும் கூசமாட்டார்கள்.
    //

    உண்மை அமெரிக்க கல்வியில் பருந்து பார்வை(20000 feet view ) என்பதை முதலில் கற்றுக்கொள்கிறார்கள் . ஏன் எதற்கு என்பதை தெரிந்து கொண்ட பின்னர்தான் டீடைல் ஆக படிக்கிறார்கள். நம் மாணவர்களிடம் மனப்பாடம் செய்வது தான் திறமை என்று வளர்த்து விட்டு இருக்கிறோம். நம் கணித அறிவியல் பாடங்கள் அப்படிதான் உள்ளன . ஏன் எதற்கு என்று தெரியாமலே ,ப்ராபளத்தை சால்வ் பண்ணுவார்கள்.

    அமெரிக்க /ரஷ்ய கல்வி முறையில் அடிப்படையை அறிவியலையும் முழுமையாக பயன்பாட்டோடு படிப்பார்கள்

    இங்கே மதிப்பெண் என்பதற்கு அதிக தேவை இல்லாத முக்கியத்துவம் தந்து சிஸ்டத்தை கெடுத்துவிட்டார்கள்

  2. T.S.R.Subramaniyam,Chairman of the Committee,which has recommended the New Education Policy,when asked about the absence of educationists in the committee,asserted that he,himself,is an educationist,in an interview.In the same interview,he questioned the local standing of Kabil Sibal,former Education Minister,who raised some pertinent questions on NEP, stating that Kabil Sibal has no time for educational matters since he is busy in defending Rahul Gandhi.T.S.R.Subramaniyam,earlier headed a committee on environment.That committee,also did not conduct consultative meetings properly with stake holders and public.Instead of safeguarding the environment,this committee recommended fast clearances of industrial projects.For some undisclosed reasons,this committee’s recommendations were not accepted by the Central Govt.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க