privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !

இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !

-

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

வங்க கூட பெரிய்ய தொல்ல சார். ரெண்டு நாளாகுது டூட்டி மாத்தி விடுங்கடான்னு கேக்கேன். மாத்தி விட மாட்டேங்குறானுவ, ஊருக்கு போனவன் வரல. இன்னும் அரை நாளு பாத்துருங்காரு ஓனரு. நா மனுசனா இல்ல, மாடா? எனப் பொரிந்தார், அவரது கண்கள் ரத்தச் சிவப்பாயிருந்தது.

108 ஆம்புலன்ஸ்
கோப்புப் படம்

முத்துராஜ், வயது 31 சென்னை மாநகரின் தனியார் தொடர் மருத்துவமனை ஒன்றில் அவசரகாலஊர்தி ஓட்டுனர் , திருநெல்வேலிக்காரர்.

“எங்க ஓனருக்கு பதிநாலு ஆம்புலன்ஸ் இருக்கு பாத்துக்கங்க, எல்லாமே பெரிய்ய பெரிய்ய ஆஸ்பத்திரிக்கு காண்ட்ராக்ட்டுல ஓடுது, 365 நாளும், 24 மணி நேரமும் வண்டி ஆஸ்பத்திரி வாசல்ல ரெடியா நிக்கனும், வேல எப்டீன்னு உங்களுக்கே தெரியும், மெட்ராஸ் டிராஃபிக்ல கேஸ் சீரியஸ்னஸ் பொறுத்து பறக்கனும். எவனும் ஆம்புலன்சுக்கு வழிவிடமாட்டானுங்க. சொந்தகாரங்க வேற, வண்டில ஒக்காந்துகிட்டு டென்சன்ல நம்மள வெறட்டுவாங்க.

ஆம்புலன்ஸ் ஓட்டுரதுக்கு எல்லா டிரைவரும் செட்டாவ மாட்டாங்க சார், நெரய்ய டென்சன், கண்ணு முழிப்பு, ரத்தம், கைகால் போன கேசுங்க, அழுக சத்தம், நைட்டு நிம்மதியா தூங்க முடியாது, அசதி ஒன்னுதான் என்ன தூங்க வைக்கும்.

முந்தா நா ஒருத்தரு புதுசா வேலைக்கு வந்தாரு, ஆக்சிடெண்ட்டு ஸ்பாட்டுக்கு போனவரு ரத்தத்த பாத்துட்டு ஒரே வாந்தி, மயக்கம். நேத்து ஊருக்கே போய்ட்டாரு.

பத்தாவது படிச்சுகிட்ருந்தப்போ அப்பா செத்துட்டாரு, இருந்த வெவசாய நெலத்த வித்து அக்காவுக்கு கல்யாணம் பண்ணோம், அம்மா ஊருலதான் இருக்காங்க. நா இவருகிட்ட பத்து வருசமா ஓட்டிகிட்டு இருக்கேன், எட்டாயிரம் ரூவா சம்பளம். டெய்லி பேட்டா நூறு ரூவா. ஆக மொத்தம் பதினோராயிரம் ரூவா, ரூமுக்கு ஆயிரம் புடிச்சுக்குவாங்க. இந்த சம்பளத்துக்கு சிட்டில வாடக கட்டி, குடும்பத்தோட இங்க வாழ முடியுமா? அதுக்கு யோசிச்சுகிட்டு தான் இன்னும் கல்யாணத்த தள்ளி போட்டுகிட்ருக்கேன்.

தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.

நா ஓட்டுறேன்லா அந்த வண்டில ஐ.சி.யூ ல இருக்க எல்லா மிசினும் இருக்கு, சிக்கிம், அகமதாபாத் வரைக்கும் ஓட்டிருக்கேன். போன மாசம் ஒரு கொழந்தைக்கு இதயத்துல ஏதோ பிரச்சனன்னு அகமதாபாத்லேந்து இங்க வந்துருந்தாங்க. ஒருமாசம் இருந்தாங்க. ஒரு நா, அடுத்த நாள் காலைல அகமாதாபாத்ல ஒரு ஆஸ்பத்திரிக்கு போயே ஆகனும்னு சொல்லிட்டாங்க,

நைட்டு 11 மணிக்கு வண்டியெடுத்து அடுத்த நா மதியம் 2 மணிக்கு போய் சேந்துட்டோம், 1800 கி.மீ தூரம், 15 மணி நேரத்துல போய் சேத்தோம். அந்த கொழந்தயோட அம்மா அப்பா இப்ப போன் பண்ணி இங்லீசுல என்னன்னமோ சொன்னாங்க, கொழந்த நல்லாருக்காம் ஓனர் சொன்னாரு.

செல வயசானவங்க சொந்த ஊருல தான் உசுரு போகனும்னு சொல்லிடுவாங்க, ”போறவரைக்கும்” தாங்குற மாதிரி இன்ஹேலர் போட்டு ஏத்திட்டு போய்டுவோம், ஊருல எறக்கிட்டு வண்டி ரிவர்ஸ் எடுக்கரதுக்குள்ள உசுரு போய்யிரும். தப்பித்தவறி போகும் போதே செத்துட்டாங்கன்னா சொந்தக்காரங்க நம்பள திட்டுவாங்க, சரின்னு பொறுத்துத்தான் போகனும்.

செத்தவங்க நெலம பரவாயில்ல படுத்த படுக்கையா இருக்குற வயசானவங்க நெலம இன்னும் மோசம், பெரிய்ய பெரிய்ய பிளாட்ல இருக்கரவங்க ஆஸ்பத்திரிக்கு அட்மிட் பண்ணும் போதும், டிஸ்சார்ஜ் பண்ணும் போதும் ஒத்தாசைக்கு ஒரு கை கூட குடுக்க மாட்டாங்க. மூத்தரப்பையோட நாந்தான் தூக்கி கொண்டுபோய் படுக்க வச்சுட்டு வருவேன். தொடவே அசூச பாக்குரானுவலே எப்டி வச்சு பாத்துப்பானுங்கன்னு யோசிப்பேன்.

ஞாயித்துக்கெழம லீவா? தூங்குற நேரம் மட்டும் தாங்க வேல கெடயாது. பி.எஃப்.-லாம் கெடையாதுங்க சம்பளம் ரெண்டாயிரம் ரூவா ஏத்தி கேட்டதுக்கே ஓனர் ஏசுராரு.

ஊருக்கு போய் பொழச்சுக்கலாம்னுதான் ஆசதான், வெவசாய வேலைக்கு டிராக்டர் ஓட்டுவேன், ஆனா மாசத்துல பத்து நா வேல கெடச்சா பெருசு. கார் வாங்கி கால் டேக்சி ஓட்டி, இன்ஸ்டால்மெண்ட் கட்டி வயித்தக்கழுவரதுக்கு இதுவே பரவால்லன்னு தோனுது, இல்லன்னா வட்டிக்கு வாங்கி ஃபாரின் போகனும். எந்தச் சொத்தும் இல்லாதவனுக்கு சொந்தக்காரன்கூட கடன் கொடுக்க யோசிக்குறான். இதெல்லாம் யோசிச்சாலே தலய வலிக்கி.

இந்த ஆஸ்பத்திரில வேல செய்யுர வார்ட் பாய், ஆயாம்மா, கேண்டீன் மாஸ்ட்டர், செக்கியூரிட்டி, எல்லோரும் என்ன மாரிதாம். அவங்கவங்க கிராமத்த விட்டுட்டு இங்க பொழைக்க வந்து 20, 25 வருசம் இருக்கும். நல்லா ஒழைக்குறவங்க. ஆனா இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது.

டாக்டரு நல்ல கைராசிக்காரரு, சின்ன கிளினிக்கா இருந்துச்சாம், இன்னைக்கு கொழந்தைங்களுக்கு ஒன்னு, நரம்புக்கு ஒன்னு, கிட்னிக்கு ஒன்னு ஓ.பிக்கு (வெளி நோயாளிகள் பிரிவு) ஒன்னு, ஐ.பிக்கு (உள் நோயாளிகள் பிரிவு) ஒன்னு, மல்டி ஷ்பெசாலிட்டி ஒன்னுன்னு, சிட்டிக்குள்ள ஏழு பிரான்ச் இருக்க பெரிய்ய ஆஸ்பத்திரி. டயாலிசிஸ்க்கு அவ்வளவு பேர் வருவாங்க. 11 பெட் இருக்கு அதுக்கு மட்டும். ஒரு தடவ டயாலிசிஸ் பண்ண 2500 ரூபா. மூனு ஷிப்ட் ஓடும். ஒரு நாளைக்கு 20, 30 பேர் வருவாங்க. ஆஸ்பத்திரிக்கு நல்ல வருமானம். இருந்தாலும் இங்க வேல செய்யிரவனுக்கே காசு வாங்கிகிட்டுதான் வைத்தியம் பாப்பானுங்க, எங்க சித்தப்பாவுக்கு ஸ்டேன்லில சேத்துதான் ஆப்ரேசன் பண்ணுனேன், இங்க பணம்கட்ட நம்மளால முடியுமா சொல்லுங்க?

வர்ரேன் சார், பேசண்ட்டு டிஸ்சார்ஜ் ஒன்னு இருக்கு அப்புறம் ராவுகாலம் வந்துருச்ச்சு, எமகண்டம் வந்துருச்சுன்னு கத்துவானுவ.”

முத்துராஜ் சொல்வது உண்மையா? ”உழைப்பால்” உயர்ந்த மருத்துவர் மற்றும் மருத்துவமனையின்’கை’ராசிக்கு பின்னால் இருப்பது என்ன? அதில் மருத்துவமனை தொழிலாளார்களின் உழைக்கும் கைகளில்லையா?.

அவசர கால ஊர்தி ஓட்டி ஊரார் உயிரைக் காக்கும் தொழிலாளி, ஒருவேளை விபத்துக்குள்ளானால் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே கூட சிகிச்சை பெற முடியாது என்பது முரண்பாடில்லையா?

– செவத்தையா