privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !

வறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !

-

றட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 முதல் 7,287 ரூபாய் வரை இழப்பீடு, பயிர் காப்பீடு மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 21,500 முதல் 26,000 ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு, நூறு நாள் வேலைத் திட்டத்தை நூற்றைம்பது நாட்களாக அதிகரித்துத் தரும் வாக்குறுதி – இவைதான் வறட்சியால் விளைச்சலை இழந்து நிற்கும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம்.

விளைச்சல் பொய்த்துப் போனதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் மரணமடைந்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளுக்கு மட்டும்தான் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மீதி மரணங்களைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை வாங்கப்படும் எனக் கூறி, வாய்க்கரிசி போட்டுவிட்டார் முதல்வர் ஓ.பி.எஸ்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், அதிர்ச்சியால் மரணமடைவதும் நவம்பர் மாத இறுதியிலேயே தொடங்கிவிட்டபோதும், அ.தி.மு.க. அரசு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில்தான் நிவாரண அறிவிப்பை வெளியிட்டது. இந்த அலட்சியத்திற்கும் தாமதத்திற்கும் காரணம், ஜெயாவின் உடல் நிலை, அவரது மரணம், அ.தி.மு.க.விற்குள் இருந்த அதிகாரப் போட்டி என்பது ஊரே அறிந்த உண்மை. ஊருக்கே சோறு போடுகின்ற பல இலட்சக்கணக்கான விவசாயிகளின், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையைவிட, ஒரு தனிநபரின் உயிர் எந்தவிதத்தில் உயர்ந்ததாக இருந்துவிட முடியும்? தனிநபர் துதி, ஊழல், கொள்ளை, வன்முறை என்பதையே கொள்கையாகவும் நடைமுறையாகவும் கொண்ட அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்குத் தமிழகத்திற்குக் கிடைத்த தண்டனை என்றே இதனைக் கொள்ளலாம்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எலிக்கறியைத் தின்று வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவல நிலையை உணர்த்தும்விதமாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

தாமதமாக அறிவிக்கப்பட்ட நிவாரணமும் விவசாயிகளின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லை என்பதோடு, இந்த நிவாரண அறிவிப்பு மோசடியாகவும் முடியக்கூடிய வாய்ப்புகளே அதிகமுள்ளன. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டு எடுப்பதற்கு ஏறக்குறைய 25,000 ரூபாய் செலவாகும் சூழலில், இதற்குத் தமிழக அரசு கொடுக்கவிருக்கும் இழப்பீடு தொகை ரூ.5,465/- தான். மீதித் தொகையைக் காப்பீடு நிறுவனங்களின் வழியாகக் கிடைக்க ஏற்பாடு செய்வது என அறிவித்து, நழுவிக்கொண்டுவிட்டது, அ.தி.மு.க. அரசு.

தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு தொகையை வழங்குவதற்கான கணக்கீடும்கூடப் பொங்கலுக்குப் பிறகுதான் தொடங்கவுள்ள நிலையில், அந்தச் சொற்பத் தொகைகூட விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கான காப்பீடு தொகையே இன்னும் முழுமையாக வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டுக்கான காப்பீடு தொகை உடனடியாகக் கைக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

மேலும், இதற்கு முந்தைய பயிர் காப்பீடு திட்டம் அரசு காப்பீடு நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மோடி அரசு அறிவித்திருக்கும் புதிய பயிர் காப்பீடு திட்டமோ தனியார் காப்பீடு நிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்திடம்தான் பெரும்பான்மையான காப்பீடு தொகை செலுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார், வேளாண் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி. இழப்புத் தொகையை வழங்குவதில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் காட்டும் அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் சந்தி சிரித்துவரும் நிலையில், விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு தொகை முழுமையாகவும் விரைவாகவும் கிடைப்பது குதிரைக்கொம்புதான்.

மேட்டூர் பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கான நடவு ஜூன், ஜூலையில் நடந்து முடிந்துவிடும். சம்பா சாகுபடிக்கான நடவு ஆகஸ்டு இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் தொடக்கம் வரையிலும்கூட நடைபெறும். பெரும்பாலான விவசாயிகள் கையில் காசு வைத்துக்கொண்டு நடவு வேலைகளைத் தொடங்குவதில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அடுத்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கு மோடி அரசு தடை விதித்துவிட்ட நிலையில், கந்து வட்டிக் கும்பலும், தனியார் நிதி நிறுவனங்களும்தான் விவசாயிகளின் “ஆபத்பாந்தவனாக” உருவெடுத்தன. நகை தொடங்கி அண்டா குண்டா வரை அடகு வைத்து இந்த முறை வயலில் இறங்கியதாகக் கூறுகிறார்கள், வடக்குவெளி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர்.

விளைச்சலோ பொய்த்துவிட்டது. கிராமத்தை விட்டு வெளியேறிப் போனாலும், வேறு வேலைகள் கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை. டீ குடிக்கக்கூடக் கையில் காசில்லாத அவலம் டெல்டாவின் கிராமப்புறங்களில் உருவாகி வருகிறது. இப்படிபட்ட நிலையில் அரசின் நிவாரணத் தொகையும், காப்பீடு தொகையும் கைக்கு வருவது தாமதமாகத் தாமதமாக, கடனுக்கான வட்டியே விவசாயிகளை விழுங்கிவிடும்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து ஆய்வு செய்யும் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

வடகிழக்குப் பருவ மழை பொய்க்காமல் பெய்து, காவிரியிலும் ஓரளவிற்காவது தண்ணீர் வரத்து இருந்தால், டெல்டா மாவட்டங்களில் ஜூன் தொடங்கி மார்ச் வரையிலும் விவசாயப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும். மே-ஜூனில் குறுவை பயிரிடுவதைத் தொடங்கும் விவசாயிகள், அதனை ஆகஸ்டு-செப்டம்பரில் அறுத்த பிறகு, தாளடி பயிரைப் பயிரிடுவார்கள். ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் தொடங்கும் சம்பா பட்டம் தையில் முடிவடையும். இம்மூன்று பருவப் பயிர்களும் முடிவடைந்த பிறகு,  அதே வயலில் மண்ணின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி உளுந்து அல்லது பயறு வகைகள் பயிரிடப்படும். நிலத்தடி நீர் வாய்ப்புள்ள காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் கோடை கால நெற்பயிர் மார்ச்சுக்குப் பின் பயிரிடப்படும்.

சம்பா நெற்பயிரும், அதனைத் தொடர்ந்து உளுந்து, பயறு வகைகளும் பயிரிடும் வாடிக்கை கொண்டது, நாகப்பட்டினம் மாவட்டம், கீவளூருக்கு அருகிலுள்ள வடக்குவெளி கிராமம். ஓடம்போக்கி ஆறும், அதன் வாய்க்காலும் ஓடும் அக்கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சம்பா அறுப்பு வேலைகள் ஜனவரியில் தொடங்கி நாற்பது நாட்களுக்கும் மேலாக நடைபெறும் எனக் கூறுகிறார்கள், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள். அறுப்பு சமயத்தில், காலையில் ஆறு மணிக்கு வயலில் இறங்கி மாலை ஆறு மணிக்கு வயலைவிட்டு வெளியேறும் ஒரு விவசாயக் கூலி, ஒரு மூட்டை நெல்லை ஒருநாள் கூலியாக எடுத்துவிடுவார் எனக் கணக்குச் சொல்லுகிறார்கள்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசும், மைய பா.ஜ.க. அரசும் தமிழகத்திற்கு இழைத்த அநீதியும் வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதும் இந்த வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் சுத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது. விவசாயிகளுக்காவது ஒரு கண்துடைப்பு நிவாரண உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலுள்ள ஏறக்குறைய 90 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களை அம்போவென்று கைகழுவிவிட்டது, அ.தி.மு.க. அரசு.

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 7.15 இலட்சம் விவசாயத் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மற்ற இரு டெல்டா மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை நிச்சயமாக பத்து இலட்சத்தையும் தாண்டக் கூடும். இவர்களுக்கும் விவசாயம் பொய்த்துப் போய் கடனாளியாக நிற்கும் சிறு விவசாயிகளுக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை கொடுப்பதற்கு அம்மாவட்டங்களில் என்ன கட்டுமானம் இருக்கிறது?

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி வசுதா மிஸ்ரா தலைமையில் வந்த மையக் குழு, தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை வட்டப் பகுதிகளில் நடத்திய ஆய்வு.

குறுவையும், சம்பாவும் பொய்த்துப் போனதால், பொங்கலுக்கு சட்டி, பானை வியாபாரம்கூடப் பெரிதாக நடக்கவில்லை என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத தஞ்சாவூரைச் சேர்ந்த நெல் அரவை ஆலை அதிபர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் விவசாய இழப்பும் டெல்டா மாவட்டங்களில் இரட்டை இடியாக இறங்கியதால், தஞ்சாவூரிலுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவருவதாகவும் கூறுகிறார், அவர். டெல்டா மாவட்டங்களைச் சுற்றி இயங்கி வந்த நெல் அரவை ஆலைகளில் ஏறக்குறைய 90 சதவீத ஆலைகள் ஏற்கெனவே மூடப்பட்டு, அந்த ஆலைகளில் வேலைபார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கிராமத்திற்குத் திருப்பியனுப்பப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

பட்டப்படிப்பு முடித்துவிட்டு குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் பார்த்துவரும் வடக்குவெளியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்று கட்டிட வேலை தேடி நாகப்பட்டினத்திற்கு சென்று வருகிறார். இந்த வேலையும் தினந்தோறும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார், அவர். திருப்பூருக்கு வேலைதேடிச் சென்ற இளைஞர்கள் போன கையோடு திரும்பி வந்துவிட்டதாக அக்கிராமப் பெண்கள் கூறுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தைத் தமிழக அரசு எப்பொழுது தொடங்கும் என்றுதான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

பாலைவனத்தில் தெரியும் கானல் நீரைப் பார்த்து ஏமாந்து போவதைப் போல, நூறு நாள் வேலைத் திட்டம் குறித்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போகுமோ என ஐயப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, நூறு நாள் வேலைத் திட்டத்தையே ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, அத்திட்டத்திற்குரிய நிதி ஆதாரங்களை மோடி அரசு வெட்டிவரும் சூழ்நிலையில், இத்திட்டத்தை நூற்றைம்பது நாட்களுக்கு நீட்டிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. விலையில்லா அரிசி வழங்குவதையே நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசிற்கு நெருக்கடி கொடுத்துவரும் மோடி அரசு, நூறு நாள் வேலையை நூற்றைம்பது நாட்களாக நீட்டிப்பதற்கு உடன்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வறட்சியைக் கருத்தில்கொண்டு நூறு நாள் வேலைத்திட்டத்தின் கூலியை நானூறு ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூலி ரூ.203/-தான். கூலி கூட்டிக் கொடுக்கப்படுமா, இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இத்திட்டத்தின் கீழ் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகத்திற்குரியதாக மாறிவிட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கும் மற்றைய கவர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகளுக்கும் முக்கிய வேறுபாடு உள்ளது. இத்திட்டம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு, சட்டத்தின் வழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அச்சட்டம், இத்திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் அவர்களுக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 2016 தொடங்கி இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளுக்குக் கூலி வழங்கப்படவில்லை என்றும், கிட்டதட்ட 2,954 கோடி ரூபாய் பெறுமான கூலி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. (தமிழ் இந்து, ஜனவரி 11, பக்.8)

மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியமர்த்தப்படும் கூலித் தொழிலாளர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குள் கூலி கொடுக்கமால் இழுத்தடிப்பது வாடிக்கையாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறது, இந்து இதழ். மோடி பதவியேற்ற 2014-15 ஆம் ஆண்டில் நூறு நாள் வேலைத்திட்டத்தின் மொத்தக் கூலியில் 27.43 சதவீதக் கூலிதான் பதினைந்து நாட்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இது 2015-16 ஆம் ஆண்டில் 31.97 சதவீதமாகச் சற்று உயர்ந்து, 2016-17 ஆம் ஆண்டில் 11.71 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.

வறட்சியால் விளைச்சலை இழந்த விவசாயிகளுக்குத் தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடும் உடனடியாகக் கிடைக்காது, பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் தரப்பட வேண்டிய காப்பீடு தொகை எப்போது கிடைக்கும் என்பதும் தெரியாது, நூறு நாள் வேலைத் திட்டம் தொடங்கி, அதில் வேலை கிடைத்தாலும் கூலி உடனடியாகக் கைக்குக் கிடைப்பதற்கும் உத்தரவாதம் கிடையாது என்றால், இதற்குப் பெயர் நிவாரணமா?

அழும் குழந்தைக்குப் பஞ்சு மிட்டாய் கொடுத்து சமாதானம் செய்வதைக் கேள்விப்பட்டிருப்போம். அ.தி.மு.க. அரசோ, பஞ்சு மிட்டாய் எனக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து, அதனை நக்க வைத்துச் சமாதானப்படுத்த முயலுகிறது.

  • ரஹீம்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க