Monday, November 30, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே - சலோ மானேசர் நேரடி ரிப்போர்ட்

ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே – சலோ மானேசர் நேரடி ரிப்போர்ட்

-

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 4

நாங்கள் குர்காவ்ன் மானேசரில் அமைந்துள்ள தேவிலால் பூங்காவில் இருந்தோம். மார்ச் 23-ம் தேதி வியாழக்கிழமை. மாருதி தொழிலாளர் வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பால் தண்டிக்கப்பட்ட 31 தொழிலாளிகளை விடுவிக்க கோரியும் வேலையிழப்புக்கு ஆளான 2340 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் “சலோ மானேசர்” என்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்தது.

தேவிலால் பூங்கா
தேவிலால் பூங்கா

மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு குர்காவ்ன் – மானேசர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. வேலையிழப்புக்கு ஆளான மாருதி தொழிலாளர்கள் பலரும் அந்த ஆர்பாட்டத்திற்கு வரவுள்ளதாக எமக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்ததால் அன்றைய தினம் காலையிலேயே நாங்கள் மானேசர் சென்று காத்திருந்தோம்.

நேரம் நண்பகலைக் கடந்த சமயத்தில் பத்துக்கும் குறைவான தொழிலாளிகளே இருந்தனர். ராம் நிவாசுடன் வந்த தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது உடனிருந்த ராஜஸ்தான் தோழர் மொழி பெயர்த்தார்.

”வேலை இழந்த மாருதி தொழிலாளிகள் என்னவானார்கள் ? அவர்களுக்கு வேலை கிடைத்ததா ? அவர்களின் குடும்பங்கள் என்னவாயின ?” என்றோம்.

“வேலை இழப்பு ஒருபுறம், கொலைப்பழி இன்னொரு புறம். அவர்களுக்கு வேறெங்கும் வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. சில காலம் இங்கேயே சுற்றித் திரிந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. சிலர் சொந்த ஊர்களுக்கே திரும்பினர். சிலருக்கு வேறு தொழிற்சாலைகளில் வேலை கிடைத்தது. வாழ்க்கை சென்றாக வேண்டும் அல்லவா ? உயரத்தில் இருந்து விழுந்தால் தானே பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்றவர் பலமாகச் சிரித்தார்.

”தொழிற்சங்க முன்னோடிகள்?”

“பன்னிரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர் அல்லவா ? ராம் நிவாஸ் போல் ஒருசிலரை ஜூலை 18 சம்பவத்துக்கு முன்பே வேறு வேறு காரணங்கள் சொல்லி வேலை நீக்கம் செய்திருந்தனர். ராம் நிவாஸ் இப்போது வரை தொழிலாளர்களின் பராமரிப்பில் தான் இருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்”

”வேலையிழப்பு ஆளான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டிருதோம். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார்கள் தானே?”

“இங்கே வாழ்க்கையே சிரமம் தான் நண்பரே. மாருதியால் மேலும் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளானோம் என்பது உண்மை தான். ஆனால் தாக்குப்பிடித்துக் கொண்டோம். பெரும்பாலான தொழிலாளிகள் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் பலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. எனவே அவர்களின் குடும்பங்கள் வெளியூர்களில் தான் இருக்கின்றன”

“நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்க முடிந்தது. தொழிலாளர்கள் பலரும் இளம் வயதினராக இருக்கிறார்களே? முதிய தொழிலாளிகளை அதிகம் காண முடியவில்லையே ?”

“இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன செய்வார்கள் என்றால், ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை இருபது வயதுகளின் துவக்கத்தில் ட்ரைனியாக எடுப்பார்கள். பின்னர் அப்பிரண்டிஸ் ஆக்கி சில ஆண்டுகள் கழித்து கான்டிராக்ட் தொழிலாளியாக்குவார்கள். ஒரு தொழிலாளி வேலைக்குச் சேர்ந்து முப்பது வயது கடந்த பின்னரே வேலை நிரந்தரம் செய்யப்படுவார். வருடங்கள் கூடக் கூட உற்பத்தி இலக்குகளும் வேலை நிலைமைகளும் கடினமாக்கப்படும், முப்பத்தைந்து வயதுக்குப் பின் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கடினமாக உழைக்க முடியாது. ஒரு கட்டத்தில் மருத்துவ ரீதியில் வேலைக்குத் தகுதியில்லை (Medically unfit) என்கிற சான்றிதழைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நாற்பத்தைந்து வயதுக்குள் எல்லாம் முடிந்து போகும்.”

”இதையெல்லாம் தொழிற்சங்கங்கள் தட்டிக் கேட்காதா?”

மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.

”தொழிற்சங்கம் வலுவாக இருக்கும் ஆலைகளில் இப்படிச் செய்ய முடியாது. எனவே தான் அவர்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் சிவப்புச் சங்கங்களை விட மஞ்சள் சங்கங்களை அனுமதிப்பார்கள். மீறி சிவப்புச் சங்கங்களைக் கட்ட முயற்சித்தால் எல்லா வகையிலும் தடை போடுவார்கள்”

”ஆனால், சட்டப்படி தொழிற்சங்கம் துவங்குவதைத் தடுக்க முடியாதே? சட்டப் பாதுகாப்பு உள்ளது தானே?”

”தோழரே. சட்டம் எங்கே உள்ளது? காகிதத்தில் தானே? அது பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதை யார் கண்காணிப்பது? அரசாங்கம் தானே? நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? இப்போது ஒரு ஆலையில் தொழிற்சங்கம் துவங்கினால் அதை முதலில் பதிய வேண்டும். பதிவு அலுவலகத்தில் கொண்டு போய் அதற்கான மனுவைக் கொடுத்தால் அந்தக் காகிதங்கள் அப்படியே தேங்கி நிற்கும். அதற்கு நடையாய் நடக்க வேண்டும். பல வாரங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களைப் போல் அதிகாரிகளின் டேபிள்களுக்கு முன் கைகட்டி நிற்க வேண்டும். பின் அந்தக் காகிதத்தில் ஏதோ எழுத்து குறைகிறது என்று முகத்தில் எரிந்து துரத்தி விடுவார்கள். நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதற்கு வேலையை விட்டுவிட்டு அலைய வேண்டும். இதற்குள் ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும். இதற்கிடையே சங்கம் துவங்க முன்னே நிற்பவர்களை விலைக்கு வாங்கும் பேரத்தை நிர்வாகம் துவங்கியிருக்கும். ஒருவேளை படிந்து வந்தால் மஞ்சள் சங்கமாக உடனடியாக பதிந்து விடலாம். சங்க முன்னோடிகள் பேரத்துக்குப் படியவில்லை என்றால் ? மேலும் சில மாதங்கள் நீதி மன்றத்துக்கு அலைய வேண்டியிருக்கும்.”

நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராம் நிவாசும் அவருடன் வந்த தோழர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைந்தனர். நாங்கள் அந்த வளாகத்தைச் சுற்றி வந்தோம். பூங்கா எனச் சொல்லப்பட்டாலும் பூச்செடிகளோ புல்வெளியோ சரியான பராமரிப்போ இன்றி வறண்டு கிடந்தது. சில பத்து ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த அந்தப் பூங்காவின் ஒரு முனையில் முன்னாள் ஹரியாணா முதல்வர் தேவிலாலின் சிலை ஒன்று நின்றது.

தேவிலாலின் சிலையைச் சுற்றிலும் அகழி போல் அமைத்திருந்தனர். அதன் ஓரத்தில் நீரூற்றுக்கான குழாய்கள் துருப்பிடித்த நிலையில் தென்பட்டன. பூங்காவுக்கு நேர் எதிரே இருந்த சாலையில் மேம்பால வேலை நடைபெற்று வந்தது. அருகிலேயே வேறு சில கட்டுமானப் பணிகளும். தேவிலாலின் சிலை எதிரே புழுதி பறந்து கொண்டிருந்த குர்காவ்ன் மானேசர் சாலையையும் உயிரற்ற அந்த நகரத்தின் எந்திரகதியான இயக்கத்தையும் வெறித்துக் கொண்டே நின்றது.

ஆளரவமற்றுக் கிடந்த அந்தப் பூங்காவின் மறுகோடியில் மெல்ல மெல்ல தொழிலாளிகளின் நடமாட்டம் தென்படத் துவங்கியது. சரியாக 3:45 மணிக்கு சாரை சாரையாக அணிவகுக்கத் துவங்கிய தொழிலாளிகள் எழுப்பிய கோஷங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.

”ஆவாஸ் தோ… ஹம் ஏக் ஹே”
“பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ. பஹால் கரோ பஹால் கரோ”
”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்”

பள்ளமான நிலத்தை நான்கு திசைகளிலும் பாய்ந்து சூழ்ந்து கொள்ளும் காட்டாற்று வெள்ளம் போல்  வெவ்வேறு திசைகளில் இருந்தும் தொழிலாளர்கள் அணியணியாக பூங்காவினுள் நுழைந்தனர். தொழிலாளர்களில் சிலர் அப்போது தான் ஷிப்டு முடித்திருந்தனர்; அவர்கள் நிறுவனத்தின் சீருடைகளோடு செங்கொடியேந்தி அணிவகுத்து வந்தனர். மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.

அதன் பின்னும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சில பத்து பேர் கொண்ட குழுக்களாக தொழிலாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அங்காங்கே ஜே.என்.யூ-வைச் சேர்ந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் காண முடிந்தது. நம்முடன் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ராஜஸ்தானி தோழர் இருந்தார்; எனினும், தொழிலாளிகளின் வெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்.

இந்தி மட்டுமே தெரிந்த தொழிலாளிகளிடம் ஆங்கிலமும் தமிழும் உடைந்த இந்தியும் கலந்து பேச்சுக் கொடுத்தோம். தமது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள நாட்டின் தென்கோடியிலிருந்து வந்தவர்கள் என்பதே அவர்களுக்கு உற்சாகமூட்டியது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக இந்தியிலும், உடைந்த ஆங்கிலத்திலும், சைகை பாஷையிலும் என மூன்று முறை பதில் சொன்னார்கள். பதிலைப் புரிந்து கொண்டோம் என்பதை தலையசைப்பில் நாம் உறுதி செய்ததைக் கண்டு தோழமையுடன் சிரித்தார்கள்.

”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி
”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி

”பாஷா கோயி தக்லீஃப் நஹி ஹேய்” என்ற ரஜேந்தர் சிங், (மொழி ஒரு பிரச்சினையே அல்ல) வலதுகையை இடது மார்பில் வைத்து விட்டு நமது தோளைத் தட்டினார். அவரிடம் மேலே எழுப்பப்பட்ட கோஷங்களின் பொருளைக் கேட்டு விளங்கிக் கொள்ள முயற்சித்தோம். அவர் விளக்கியதில் இருந்து நாம் புரிந்து கொண்டது.

”ஆவாஸ் தோ ஹம் ஏக் ஹே” – ”உரக்கச் சொல், நாம் ஒன்று என” ” பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ.” – “தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” “”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்” – “புரட்சி ஓங்குக. மோடி அரசு ஒழிக”

கூட்டத்தில் மாருதி ஆலையில் தற்போது பணிபுரிந்து வரும் தொழிலாளிகளைத் தேடினோம். சீருடையின்றி சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம்.

”2012, ஜூலை 18 அன்று நடந்த சம்பவத்துக்குப் பின் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்னவாயின?” பெயர் குறிப்பிட மறுத்த அந்த தொழிலாளியிடம் கேட்டோம்.

”தொழிற்சங்கம் மொத்தமும் முடக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டன. வெளியில் இருந்து மீண்டும் ஒப்பந்த தொழிலாளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்”

”தற்போது மானேசர் ஆலையில் எத்தனை தொழிலாளிகள் பணிபுரிகின்றனர்”

”சுமார் ஐயாயிரம் பேர். வழக்கம் போல இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளிகள் தான்”

”தொழிற்சங்க நடவடிக்கைகள்?”

அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்
அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்

“நாளுக்கு நாள் நிர்வாகம் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடும் சித்திரவதைகள் அதிகரித்து வந்தன. சரியாக இரண்டே ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் ஒரு சிவப்புத் தொழிற்சங்கத்தைக் கட்டினோம். எங்கள் அதே பழைய கோரிக்கைகளை தூசி தட்டி கையிலெடுத்தோம். ”சமமான வேலை, சமமான கூலி, சமமான சலுகைகள்” என்பதை முன்வைத்தோம். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்த தொழிலாளிகளாக்குவது, வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை என்பதை முன்வைத்து மீண்டும் போராடத் துவங்கினோம். அதே போல் 44 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற உற்பத்தி இலக்கை தளர்த்தக் கோரினோம்”

”இந்தக் கோரிக்கைகளை வென்றெடுத்தீர்களா ?”

“சிலவற்றில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை நிர்வாகம் எடுக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். உதாரணமாக 42 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற இலக்கை தற்போது 60 நொடிகளாக தளர்த்தியுள்ளனர். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற கோரிக்கையை நாங்கள் இன்னும் விடவில்லை. எப்படியும் விரைவில் வெல்வோம்” என்றவர் நம்மிடம் விடைபெற்றுக் கூட்டத்தில் கலந்தார்.

மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது. தாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்கிற நம்பிக்கையை அந்தக் கூட்டம் அவர்களுக்கு ஏற்படுத்தியதா? அல்லது இந்திய அரசின் ஆதரவையும் சர்வ வல்லமையையும் கொண்ட ஒரு ஜப்பானிய கோலியாத்தைப் பணிய வைத்த வர்க்கப் பெருமிதமா? அல்லது இறுக்கமான சாதிய கட்டுமானத்தின் நடுமையத்தில் சாதி கடந்த வர்க்க ஒற்றுமை ஒன்றைச் சாதித்த வெற்றிச் செருக்கா?

தேவிலால் பூங்காவில் எதிரொலித்த முழக்கங்களில் வெளிப்பட்ட வர்க்க கோபத்தின் அடியாழத்தில் இருந்த தோழமைப்பூர்வமான மகிழ்ச்சியின் நினைவுகளோடு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.

முற்றும்.

  • வினவு செய்தியாளர் குழு.

மாருதி தொழிலாளர் நிலை : நேரடி அறிக்கை ( பகுதி – 1 )
அரசு ஆசியுடன் ஜப்பான் மாருதி நடத்தும் கொத்தடிமைத் தொழில் (பகுதி 2)
வழக்கறிஞர் ஹர்ஷ் போரா நேர்காணல் – அவசியம் படியுங்கள் ! பகுதி 3

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க