Thursday, December 5, 2024
முகப்புஉலகம்இதர நாடுகள்சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் - படக் கட்டுரை

சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை

-

ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாடு உகாண்டா. ஆப்பிரிக்காவின் மற்ற வறிய தேசங்களின் கதைகளும் உகாண்டாவின் கதையும் சாராம்சத்தில் ஒன்று தான். நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த காலனிய சுரண்டலில் இருந்து உள்ளூர் யுத்த பிரபுகளின் கையில் மாட்டிக் கொண்ட ஒரு தேசம் அது. அள்ள அள்ளக் குறையாத இயற்கைச் செல்வங்களுக்காக ஏகாதிபத்தியங்களும் அவற்றின் உள்ளூர் தரகர்களுக்கும் நடத்தும் நாய்ச்சண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது மக்களின் வாழ்க்கை.

இதோ, உகாண்டாவின் புற்றுநோயாளிகள் குறித்து அல்ஜசீராவில் வெளியான புகைப்படக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு உங்கள் இதயத்தை அசைத்துப் பார்க்கும்.

ஜேம்ஸ் இஸாப்ரியா அந்தப் புழுதிபடிந்த சாலையை வெறித்துக் கொண்டிருக்கிறார். முன்னோக்கி வளைந்த அவரது தோள்களில் இருந்து நீண்ட கரங்கள் அந்த வாகனத்தின் ஸ்டியரிங்கின் மேல் ஓய்ந்துள்ளது. அவர் ஜேம்ஸ் ஜிங்கா மருத்துமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். அங்கே பக்கத்தில் இருக்கும் கடைக்கும் ஆரம்ப பள்ளிக்கும் இடையே உள்ள குறுகிய சந்து ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஜேம்சும், அவரது சகா எஸ்தர் அபோலோட்டும்.

“மார்ஃபின்னை எடுத்துக் கொள்ள மறக்கவில்லையே” என்று கேட்ட எஸ்தர், ”நோயாளி மிக மோசமான நிலையில் இருக்கிறார்” என்றார்.

வண்டியை வலதுபுறம் ஒடித்த ஜேம்ஸ், எதிர்பட்ட குறுகிய மண் சாலைக்குள் வாகனத்தை நுழைக்கிறார். அது ஒரு முட்டுச் சந்து; அதன் முடிவில் சிதிலமான இரண்டு செம்மண் வீடுகளே தென்பட்டன.

”இங்கே தான். அவள் உள்ளே தான் இருக்கிறாள்” என்றார் எஸ்தர்

தகரக் கூரை வேயப்பட்டிருந்த அந்த வீட்டினுள் கான்க்ரீட் தளத்தின் மேல் விரிக்கப்பட்டிருந்த ஃபோம் மெத்தையில் அமர்ந்திருந்தார் 32 வயதான ஹார்ரியெட் நமுவோயா. ஏழு குழந்தைகளின் தாயான அவர் வயிற்றுக் கான்சரால் அவதியுற்று வருகிறார். தர்பூசணிப் பழம் அளவுக்குப் பெரிய கட்டி ஒன்று அவரது வயிற்றிப் பகுதியில் துருத்திக் கொண்டிருந்தது.

”முன்பே கண்டறியப்பட்டிருந்தால், கதிர்வீச்சு சிகிச்சையாவது பலனளித்திருக்கும்” என்ற எஸ்தர், “இப்போது அவளுக்கு நிறைய வலி இருக்கும்” என்றார்.

ஹார்ரியெட்டின் கதை தனித்த ஒன்றல்ல. உகாண்டாவில் இருந்த ஒரே ஒரு கதிரியக்க சிகிச்சை இயந்திரம் கடந்த ஏப்ரல் மாதம் பழுதடைந்த பின் குணமாகும் நிலையில் இருந்தும் சாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகளில் ஹார்ரியெட்டும் ஒருவர்.

கென்யாவின் நைரோபியில் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்று உள்ளது. ஆனால், அங்கே பயணிப்பதற்கான வசதியில்லை. மேலும் கென்யாவில் சிகிச்சை மற்றும் தங்கும் செலவுகளே சுமார் 5000 அமெரிக்க டாலர்கள் வரை ஆகிவிடும். ஹார்ரியெட்டும் உகாண்டா முழுக்க அவரைப் போன்று புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மரணத்திற்காக காத்திருக்கிறார்கள்.

ஹார்ரியெட் நமுவோயாவும் அவரது தாயாரும் தெற்கு உகாண்டாவில் உள்ள புசோகா பகுதியில் இருக்கும் தங்கள் வீட்டில் இருக்கிறார்கள். 21 ஆண்டு பழமையானதும் உகாண்டாவில் இருந்த ஒரே கான்சர் சிகிச்சை இயந்திரமும் ஆன வெளிக் கதிர்வீச்சுக் கதிரியக்க சிகிச்சை இயந்திரம் செயல்பாட்டில் இருந்திருந்தால், ஹாரியெட்டின் வயிற்றில் தர்பூசணி அளவுக்கு உருவாகியிருக்கும் புற்றுநோய்க் கட்டி குணமாகியிருக்கும் என்கிறார்கள் செவிலியர்கள்.

ஏழு பிள்ளைகளின் தாயான ஹார்ரியெட் முன்பொரு காலத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது படுக்கையில் காலம் தள்ளி வருகிறார். ஜிங்கா மருத்துவமனையின் செவிலியர்கள் நாளொன்றுக்கு சுமார் 20 நோயாளிகளைப் பார்க்கிறார்கள். நோயாளிகளின் வலியைக் குறைக்கும் மருந்துகளை வழங்கும் செவிலியர்கள், நோயாளிகளின் மரணத் தருணங்களையும் கையாள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகள் ஏழைகள் என்பதால் அருகிலிருக்கும் கென்யாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. பலரும் குணப்படுத்தக்கூடிய அளவில் இருக்கும் புற்று நோயைச் சுமந்து கொண்டு மரணத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். “எங்கள் வேலையெல்லாம் வலியைக் குறைப்பதும், புண்களைச் சுத்தம் செய்வதும் மட்டும் தான்” என்கிறார் செவிலியர் எஸ்தர்.

ஜிங்கா மருத்துவமனையின் செவிலியர்கள் புற்றுநோயாளி கிரேஸ் அவுமாவுக்கு மாதாந்திர வலிநிவாரணி மாத்திரைகளைக் கொடுக்கின்றனர். கர்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையில் அவதியுற்று வருகிறார் கிரேஸ். உகாண்டாவின் ஒரே கதிரியக்க சிகிச்சை இயந்திரம் பழுதாகி ஏழு மாதம் கழித்து, 2016 அக்டோபர் மாதத்தில் இருந்து தான் கிரேஸ் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். ”அரசாங்கத்துக்கு மக்கள் இப்படியெல்லாம் துன்பத்தில் உழல்வது தெரியுமா? எனக் கேட்கிறார் எஸ்தர்.

முற்றிய நிலையில் இருக்கும் மார்பக புற்றுநோய் உண்டாக்கும் வலியைக் குறைக்க மார்ஃபின் பெற்றுக் கொள்கிறார் 50 வயதான காசிட்டா நாபியே. அரசு மருத்துவமனைகளில் திரவ நிலை மார்ஃபின் இருப்பு வைத்துக் கொள்வது மிக அரிதானது என்கிறார் புமான்யா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் பால் கிபிரிகே. சுமார் 20,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனது மருத்துவமனையால் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களுக்கு ஏதும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் பால். ”இவர்களெல்லாம் நைரோபிக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாக வேண்டும். ஆனால் வசதியில்லை.. வலியால் சாவதைத் தவிற வேறெதுவும் செய்வதற்கில்லை” என்கிறார் பால்.

நாற்பத்தைந்து வயதான விவசாயி மூசா காலியின் கண்களில் புற்றுநோய்க் கட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஒரே ஒருமுறை கம்பாலாவில் உள்ள முலாகோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன் பின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து விட்டது. “அந்த இயந்திரம் இல்லாத நிலையில், இனி மூசா பயங்கரமான முறையில் சாவதைத் தவிற வேறு வழியில்லை” என்கிறார் ஜிங்கா மருத்துவமனையின் செயல் அதிகாரி சில்வியா நகாமி.

தனது வீட்டினுள் மௌனமாக அழுது கொண்டிருக்கும் 45 வயது தாய் மோனிகா நகாய்மா. கருப்பை புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக மிகையான உதிரப் போக்கால் அவதிப்படுகிறார். கென்யாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதியில்லை. தனது குடிசையினுள்ளே தனிமையில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார். மோனிகாவை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருப்பதாகச் சொல்கிறார் செவிலியர் எஸ்தர். ஜிங்கா மருத்துவமனை ஒன்று தான் இப்பகுதியில் செயல்பட்டு வரும் இலவச மருத்துவமனை. தங்களது மருத்துவமனை ஒன்று தான் “மரணத்தையும், கௌரவமாகச் சாதலையும்” குறித்து அக்கறை கொண்டிருப்பதாக அதன் செயல் அலுவலர் சில்வியா தெரிவிக்கிறார். 400க்கும் அதிகமான நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், இலவச மருந்துகளையும் வழங்கி வருகின்றது ஜிங்கா மருத்துவமனை.

ப்ளோரன்ஸ் நபீதாவின் இடது மார்பகத்தின் மேல் வெடித்துள்ள புற்றுநோய்க் கட்டியின் மேல் அவரது மகள் ஆண்டிபயோடிக் மருந்தைத் தூவுகிறார்.

திரவ நிலை மார்ஃபின் தீர்ந்து போன நிலையில் வலியால் துடிக்கும் க்ரிஸ் வாக்கோ. கடந்த ஆண்டு க்ரிஸ் வாக்கோவுக்கு குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 15 ஆயிரம் செலவாகும் கோலோனோஸ்கோபி என்கிற பரிசோதனையோ, 7 ஆயிரம் செலவாகும் சி.டி ஸ்கேனோ எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளவே இந்த சோதனைகள் முன்தேவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது ஜிங்கா மருத்துவமனை செவிலியர்கள் தரும் இலவச வலிநிவாரணி மருந்துகளை மட்டுமே நம்பியிருக்கிறார் க்ரிஸ் வாக்கோ.

தனது தாயாரின் வலிநிவாரணி மருந்துப் புட்டியில் உள்ள வழிகாட்டுதல்களை வாசிக்கிறாள் 14 வயதான சௌலினா நாமிகோஸ். மார்பக புற்றுநோயால் இறந்து கொண்டிருக்கும் அந்த தாயின் இளைய மகளான சௌலினா தான் அவளைக் கவனித்துக் கொள்கிறாள். ”இவளைத் தவிற அவள் தாயை எவரும் கவனிப்பதில்லை” என்கிறார் செவிலியர் எஸ்தர்.

வலிநிவாரணி மருந்தைப் பெற்றுக் கொள்ளும் மதீனா நாமிகோஸ். கதிரியக்க சிகிச்சை இயந்திரம் பழுதான பின் பல நோயாளிகளின் எதிர்காலமே இருண்டு விட்டதாகச் சொல்கிறார் சில்வியா. “எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்” என்கிறார் சில்வியா.

68 வயது நூஃகு மலிங்காவுக்கு சிறுநீரகப் புற்றுநோய். வீட்டுக்குள் வெப்பம் அதிகம் என்பதால் பெரும்பானான நேரம் வீட்டுக்கு வெளியே ஃபோம் மெத்தையில் படுத்துக் கிடக்கிறார்.

சாப்பிடவும் முடியாமல் தாங்க முடியாத வலியினாலும் ரணப்படுத்தும் படுக்கைப் புண்களாலும் தனது தந்தையின் வீட்டில் அழுது கொண்டிருக்கிறாள் 23 வயதான பீட்ரிஸ் அகோத். கடந்த மார்ச் மாதம் கல்லீரல் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. உகாண்டாவில் கதிரியக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை. உகாண்டா அரசு சுமார் 400 நோயாளிகளைத் தெரிவு செய்து கதிரியக்க சிகிச்சைக்காக கென்யாவுக்கு அனுப்பவுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. ஆனால், உண்மையில் அதனால் எத்தனை பேர் பலனடைந்தார்கள் என்பது தெரியவில்லை.

பீட்ரிசின் தந்தை வீட்டுக்கு வெளியே அமர்ந்துள்ளார். உகாண்டாவின் மருத்துவ அமைச்சகம் இன்னும் சில மாதங்களில் புதிய கதிரியக்க சிகிச்சை இயந்திரம் ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதற்கு பல மாதங்கள் ஆகலாம்.. அதுவரை பட்ரீஸ் அகோத் தாக்குப்பிடிக்க மாட்டார். செவிலியர்கள் இன்னும் மூன்று மாதங்களே அகோத் உயிர்வாழ்வார் எனச் சொல்கின்றனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் அவதியுறும் என்பது வயதான ஜோய்ஸ் மடாமா, இலவச வலிநிவாரணி மருந்துகளைத் தரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். ”இன்றைக்கு வலி கட்டுக்குள் வந்து விட்டது” என்கிறார் செவிலியர். சுமார் 414 நோயாளிகள் ஜிங்கா மருத்துவமனையின் விலி நிவாரண சிகிச்சையால் பலனடைகிறார்கள். “இன்னும் எத்தனை எத்தனையோ பேர்களுக்கு எங்கள் உதவி தேவைப்படுகின்றது” என்கிறார் ஜிங்கா மருத்துவ மனையின் செயல் அலுவலர் சில்வியா.

– கேத்தி. ஜி. நெல்சன்

நன்றி: அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்

மூலக்கட்டுரை: Waiting to die: Uganda’s untreated cancer patients

Add to Anti-Banner

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க