Thursday, February 25, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?

போக்குவரத்துத் துறை நட்டம் யார் காரணம் ?

-

 மிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தமிழகத்தில்  இதுவரை இல்லாத ஒரு மக்கள் ஆதரவைப் பெற்றது. இரண்டு நாட்களிலும் போராட்டம் பெரும் வெற்றியை பெற்றது. போராட்டத்தை முடக்க அரசு மேற்கொண்ட சதி வேலைகள்  எதிர்பார்த்த பலன்களை அளிக்காத நிலையில் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிலாளர்  தரப்பில் அறிவிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், நிர்வாகத்தால் கையாடல் செய்யப்பட்ட தொழிலாளர் சேமிப்புத் தொகையை திரும்ப ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன. மற்றொரு புறம், போராடிய தொழிலாளர்களிடம் அரசும் – நீதிமன்றமும் எஸ்மா சட்டத்தைக் காட்டி மிரட்டியுள்ளன. இதன் மூலம் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் முன்பை விடக் கூடியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டும் தொழிலாளர்களின் இணையற்ற உழைப்பால் வளர்ந்துள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் முக்கியமாக பேசப்பட்ட விசயம் போக்குவரத்துத் துறையின் கடன் -நஷ்டம் தான். இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வதும் அதற்கான தீர்வை முன்வைப்பதும் தொழிலாளி வர்க்கத்தின் கடமை.
தொழிலாளர்களுக்கு சொந்தமான PF, பென்சன் உள்ளிட்ட சேமிப்பு தொகை சுமார் 6700 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கு வெளிப்படையான காரணம் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல் தான் என்பது ஊரறிந்த உண்மை. மறைக்கப்படும் மற்றோர் உண்மையும் உள்ளது. தொழிலாளர்களின் பணத்தை ஏன் அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தினார்கள்? ஊழல் கடன் – நட்டத்திற்கான காரணங்களை ஏன் தடுக்கப்படவில்லை.
இந்த நிலைமை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல.  பல ஆண்டுகள் பல்வேறு வழிவகையில் நடந்தது. பேருந்து ஒன்று விபத்தில் சிக்கினாலோ அல்லது கண்ணாடி உடைந்தாலோ ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் லைசென்ஸ் மீதும் சம்பளத்திலும் கை வைக்கின்றனர் அதிகாரிகள்.  அப்படியிருக்க ‘கட்டுபாடுள்ள’ கழக நிர்வாகம் நஷ்டமடைந்து, கடன் ஏற்பட்டு, தொழிலாளர்களின்  கோடிக்கணக்கான பணத்தை முறைகேடு ( ஊழல்) செய்யப்படும் வரை அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? இந்தக் கேள்வியில் தான் கழகத்தொழிலாளர்கள் பிரச்சனைக்கான தீர்வு அடங்கியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யக் கூடாது, அந்த நோக்கிலான தொழில்களை நடத்தக் கூடாது, மக்கள் நல அரசு என்ற கொள்கையைக் கைவிட வேண்டும், அனைத்து துறைகளையும் அரசு தனியார்மயமாக்க வேண்டும்  என்பது தான் உலக வங்கியின் உத்தரவு. இதனை ஏற்று தான் காட்-டங்கல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டு நடைமுறைபடுத்தி வருகிறது. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் போது,  பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டது. மாநில அரசுகளும் அதே பாதையில் செயல்பட்டன.
பெரியமரத்தை வெட்டி சாய்க்க அதன் கிளைகளை முதலில் வெட்டி கழிப்பது போல இந்தத் துறைகளையும் பல கட்டமாக வெட்டி சுருக்கின. இதில் முக்கியமான அம்சம் நட்ட கணக்கு காட்டுதல். இந்த நட்டக் கணக்கு பார்முலா பயன்படுத்தித்தான்  மார்டன் பிரட், பால்கோ, VSNL உட்பட ஏராளமான பொது மற்றும் அரசுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. சேலம் உருக்காலையை தனியாரிடம் தாரை வார்க்க சதிகள் நடக்கிறது.
நட்ட கணக்குக் காட்ட ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு காரணங்கள் காட்டப்பட்டுள்ளன; பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும்  பொய்யாவை தொழிலாளர் எண்ணிக்கை அதிகம், அவர்களது செயல்பாடு மந்தம், உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை குறைந்து விட்டது,  அவற்றின் தரம் தனியாருடன் போட்டி போடும் வகையில் இல்லை போன்றவை தான் நட்டத்திற்கு காரணம் என  பொய்யான குற்றச்சாட்டுகளை சதித் தனமாக தயார் செய்து காட்டின.
அதே போல போக்குவரத்து துறையும் நட்டக் கணக்கு காட்டினர். மேற்கண்ட பல்வேறு காரணங்களை போக்குவரத்துத்  துறை நட்டத்திற்கு காரணமாக பல்வேறு காலங்களில் கூறப்பட்டுள்ளன என்றாலும் இவையெல்லாவற்றையும் விட அரசே முன்வைக்காத காரணம்  ஒன்று உண்டென்றால் அது ஊழல் – முறைகேடுகள் தான். அமைச்சர்கள் – அதிகாரிகளால் செய்யப்பட்ட இந்த ஊழல் – முறைகேடுகளைத் தடுக்காமல்,  குறைந்தபட்சம் முறைபடுத்தாமல் அப்படியே கைவிட்டதற்கு இந்தத் தனியார்மயமாக்க சதிதான் முக்கியக் காரணம். ஊழலும் தனியார்மயமும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
அனாமத்தாக கைவிடப்பட்ட கட்டிடத்தின் ஜன்னல், கதவுகள், கம்பிகள், கற்கள் என அவரவருக்கு வேண்டியதை அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதைப் போல இந்த அதிகாரிகள், அமைச்சர்கள் போக்குவரத்துத் துறையை சுருட்டியுள்ளனர். அடுத்து, அரசு போக்குவரத்து கழக நஷ்டத்திற்கு மற்றொரு வழியை அகலத் திறந்து விட்டுள்ளது, தமிழக அரசு . அதாவது நல்ல வருமானமுள்ள  வழித்தடங்களை ஆம்னி பஸ், தனியார் பஸ், மினி பஸ் உள்ளிட்ட 7500 பஸ்களை இயக்கி தனியார் இலாபம் ஈட்டிட அரசே துணை நிற்கிறது.  இந்தத் ‘தனியார்’களில் அமைச்சர்கள் அவர்களது உறவினர்கள் அல்லது கூட்டாளிகளும் பங்காளிகளும் அடங்குவர். அரசு போக்குவரத்துத் துறை நட்டத்தைக் காரணம் காட்டி பேருந்துக்  கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட ஒவ்வொறு முறையும்  பல கோடி ரூபாயை கொள்ளைக்காரர்கள் போல இந்த முதலாளிகள் தான் சுருட்டிக்கொண்டனர். அல்லது அவர்கள்  சுருட்டுவதற்கு பேருந்துக்  கட்டணம் உயர்த்தப்பட்டது.
இப்படி உயிருக்குப் போராடி வரும் போக்குவரத்துத் துறையின் உயிர் மூச்சை நிறுத்தி விட முடிவு செய்துள்ளதுதான் மோடி அரசின் சாதனை. பன்னாட்டு பஸ் கம்பெனிகளே வழி தடத்தை தீர்மானிக்கலாம், பேருந்துக் கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம், FC பார்த்துக் கொள்ளலாம், டிரைவிங் லைசன்ஸ் வழங்கலாம் என ஒட்டு மொத்தப்  பொதுப் போக்குவரத்தையே கார்ப்பரேட்  முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் புதிய போக்குவரத்து சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது,
போக்குவரத்துத் தொழிலாளர்  மீதான அடக்கு முறை அதிகரிப்பு, உரிமைகள் பறிப்பு, பேருந்து கட்டண உயர்வு, ஓட்டைப் பேருந்துகளால் அவதி – மரணம், விழாக்கால  கொள்ளை போன்றவை இந்தப்  பின்னணியில் உள்ளன. போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவையும் ஊடகங்களின் எதிர்-பொய் பிரச்சாரத்தையும் இந்த வகையில் உணர வேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான மெரினா எழுச்சிக்குப் பின்னர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் இதற்கு காரணம்.
ஜல்லிக்கட்டுக்காக எழுந்து நின்ற தமிழகம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காகவும் எமுந்து விடக் கூடாது என அவர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்தை நிரந்தரமாக்குவோம்!
தகவல் :
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி, 
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க