Friday, August 19, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !

உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !

-

சுதந்திர சந்தை இல்லை – சுதந்திர கொள்ளை !

ருளைக்கிழங்கு நான்கு மாதப் (120 நாட்கள்) பயிர். “ஒரு பிகாவில் (தோரயமாக 0.4 ஏக்கர்) உருளைக்கிழங்கு பயிரிட 28,500 ரூபாய் செலவானதாக”க் கூறுகிறார்கள், அசாம் மாநில விவசாயிகள். இந்தக் கணக்கின்படி, விளைச்சல் நன்றாக இருந்தால் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் உற்பத்திச் செலவு ஒன்பது ரூபாய் ஆகிறது. உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய விவசாயிகள் போட்ட மூலதனம், அவர்கள் நான்கு மாதம் செலுத்திய உழைப்பு இவற்றையெல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு கிலோ உருளைக்கிழங்கு சந்தையில் குறைந்தபட்சம் பதினைந்து ரூபாய்க்கு மேல் விற்க வேண்டும். ஆனால், நடப்புப் பருவத்தில் அசாம் உள்ளிட்டு, இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்குக் கிடைத்த விலை கிலோவிற்கு இரண்டு ரூபாய். அதிகபட்சமாக மூன்று ரூபாய்.

ஒரு கிலோ உருளைக்கிழங்கை விற்றதில் எல்லா செலவும் போக வெறும் 11 பைசா மட்டுமே கைக்குக் கிடைத்ததால், ஆறு இலட்ச ரூபாய் நட்டமடைந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுக்பால் சிங். (நன்றி: அவுட்லுக்)

இந்த விலையிலிருந்து, உருளைக்கிழங்கை வயலில் இருந்து சந்தைக்குக் கொண்டுவருவதற்குத் தரப்பட்ட ஏத்துக்கூலி, இறக்குக்கூலி, போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட செலவுகளைக் கழித்துவிட்டால், ஒரு விவசாயிக்குக் கிடைப்பது 11 பைசாதான். இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் விளைந்த உருளைக்கிழங்கில், மூன்றில் இரண்டு பங்கு வயல்களிலும், தெருக்களிலும் கொட்டி அழிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறது, அவுட் லுக் இதழ்.

இந்த அநியாயத்திற்குப் பதில் சொல்லுங்கள் என விவசாயிகள் கேட்டால், “இதுதான் சுதந்திர சந்தையின் விதி; இதனைப் புரிந்துகொண்டு விவசாயிகள் பயிரிடக் கற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தொலைக்காட்சி விவாதங்களில் எகத்தாளமாகப் பதில் அளிக்கிறார்கள், பொருளாதார வல்லுநர்கள்.

கடந்த ஆண்டு நவம்பருக்கும் இந்த ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட ஏழு மாதங்களில் இந்திய விவசாயிகள் மீது, குறிப்பாக வட மாநில விவசாயிகள் மீது வீசப்பட்ட இரண்டாவது கொத்துக்குண்டு, இந்த விலை வீழ்ச்சி. முதல் கொத்துக்குண்டு, இந்து சாம்ராட் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பொருளாதாரத்தில் எவ்வித எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தவில்லை என மோடியும் அவரது துதிபாடிகளும் சாதித்துவந்த நிலையில், ரிசர்வ் வங்கி, கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள பணக் கொள்கை சீராய்வு அறிக்கையில், “பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாகப் பலவிதமான விவசாய விளைபொருட்களின் விலைகளும் சரிந்து, அதனால் விவசாயிகள் தமது பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட” உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறது.

உற்பத்திச் செலவுக்குத் தகுந்த விலைகூட கிடைக்காததால், விளைந்த பூண்டைத் தனது வீட்டில் கொட்டி வைத்திருக்கும் ராஜாஸ்தான் மாநிலம், கோடாவைச் சேர்ந்த விவசாயி.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஆடி பட்ட (ராபி கால) பயிர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை தைப் பட்ட (காரிஃப்) விளைச்சலைக் கொண்டு ஈடுகட்டி விடலாம் என்ற நம்பிக் கொண்டிருந்த விவசாயிகளின் எண்ணத்தில் “சுதந்திர” சந்தை விதிகள் விளையாடின. உணவுப் பொருள் இறக்குமதி செய்யும் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள், உள்ளூர் கமிசன் மண்டி ஏஜெண்டுகளோடு மோடி அரசும் கைகோர்த்துக் கொண்டு விவசாயிகளைக் காவுவாங்கியது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலைகூட சந்தையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தாமல், தானொரு பனியாக்களின் அரசு என வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது மோடி அரசு.

விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை உடனடியாகக் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவது, விளைபொருட்கள் தரமற்று இருப்பதாகக் கூறி, கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழித்துவிடுவது, குறைந்த அளவு கொள்முதல் செய்துவிட்டு கொள்முதல் நிலையங்களை மூடிவிடுவது ஆகிய சதித்தனங்களின் மூலம், விளைபொருட்களை வந்த விலைக்கு விற்க வேண்டிய சந்தையின் சூதாட்டத்திற்குள் விவசாயிகளை நெட்டித் தள்ளியது, பா.ஜ.க. கூட்டணி அரசு.

உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு, சோயாபீன்ஸ், திராட்சை, வெங்காயம், தக்காளி, பால், பூண்டு, சீரகம், வெந்தயம், கொத்தமல்லி – என இந்தப் பருவத்தில் விளைந்த அனைத்து விவசாய விளைபொருட்களும் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கடும் விலை வீழ்ச்சியைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார், திட்டக் கமிசனின் முன்னாள் உறுப்பினர் மிஹிர் ஷா.

அந்தப் பட்டியலைக் கீழே தந்திருக்கிறோம். ஏழை, நடுத்தர விவசாயிகளின் உழைப்பும், சேமிப்பும், மூலதனமும் கொள்ளையடிக்கப்பட்டதை அதன் வழியாக யாரும் புரிந்துகொள்ள முடியும்.

  • கோதுமைக்கு மைய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை ரூ.1,625/-. சந்தையில் விவசாயிக்குக் கிடைத்த விலை ரூ.1,400/-. ஒரு மூட்டைக்கு விவசாயிகள் அடைந்த நட்டம் 225 ரூபாய்.
  • சோளத்திற்கு மைய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை ரூ.1,240/-. சந்தையில் வர்த்தகச் சூதாடிகள் தந்த விலை ரூ.900/-. விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட நட்டம் ரூ.340/-
  • சூரியகாந்தி விதைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை ரூ.3,950. விவசாயிகளுக்குச் சந்தையில் கிடைத்த விலையோ ரூ.2,700.
  • ஒரு குவிண்டால் கம்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆதார விலை ரூ.1,260. ஆனால், விவசாயிகளின் கைக்கு வந்ததோ ரூ.1,100.
  • கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் 10,000 ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை, இந்த ஆண்டில் 3,000 ரூபாயாகச் சரிந்து போனது.
  • ரூ.8,000 என இருந்த ஒரு குவிண்டால் பூண்டு, ரூ.3,200 எனச் சரிந்தது.
  • நாற்பது ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விற்றுவந்த ஒரு கிலோ வெங்காயம், ஐந்து ரூபாய்க்கு மேல் விலை போகவில்லை.
  • ஒரு குவிண்டால் வெந்தயம் ரூ.7,000-லிருந்து ரூ.2,200-க்கும், ஒரு குவிண்டால் சன்னா பருப்பு ரூ.10,000-லிருந்து ரூ.4,000-க்கும், ஒரு குவிண்டால் கடுகு ரூ.3,700-லிருந்து ரூ.3,400-க்கும், ஒரு குவிண்டால் கொத்தமல்லி ரூ.7,000-லிருந்து ரூ.3,000-க்கும் சரிந்து விழுந்தன.

ஆதார விலைக்கும் சந்தையில் கிடைத்த விலைக்கும் அல்லது உற்பத்திச் செலவோடு கூடிய இலாபத்திற்கும் சந்தையில் கிடைத்த விலைக்கும் இடையேயான மதிப்பு முழுவதையும் வர்த்தகச் சூதாடிகள் சுருட்டிக் கொண்டுவிட்டனர் என்பதை இந்தப் பட்டியலின் வழியாக யாரும் புரிந்துகொள்ள முடியும். தங்கள் மீது திணிக்கப்பட்ட நட்டத்திற்கு ஈடாகத்தான் விவசாயிகள் கடன் தள்ளுபடி கோருகிறார்கள்.

நிதி நெருக்கடி என்ற பூச்சாண்டியைக் காட்டி, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளிக்கக்கூடாது என வாதிடும் பொருளாதார மேதைகள், விவசாயிகளுக்கு சந்தையில் இலாபத்தோடு கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்; அல்லது, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, வர்த்தகச் சூதாடிகளிடமிருந்து பறிமுதல் செய்து தர வேண்டும்.

ஆனால், சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திர சந்தையின் விதிகளோ, தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அடிமாட்டு விலையில் கொள்முதல் செய்வதைச் சட்டபூர்வ வர்த்தக நடவடிக்கையாக அங்கீகரிக்கிறது. உண்மை இவ்வாறிருக்க, குறைந்தபட்ச ஆதார விலைக்கும் கீழாக விவசாய விளைபொருட்களைக் கொள்முதல் செய்வதை கிரிமினல் குற்றமாகத் தண்டிக்கும் சட்டத்தை இயற்றப் போவதாக பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் உதார்விட்டுத் திரிகிறார்கள்.

-குப்பன்

-புதிய ஜனநாயகம் – ஜூலை 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க