privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !

-

”ப்ரிவெனார்-13 – என்ற நிமோனியா காய்ச்சல் தடுப்பு மருந்திற்கான காப்புரிமை கோரி, இந்தியக் காப்புரிமை அலுவலகத்தில் முறையிட்டிருந்தது ‘ஃபிசர்’ நிறுவனம் (Pfizer). இந்த மருந்து புத்தம் புதிய கண்டுபிடிப்பு அல்ல என்றும், ஏற்கனவே இருக்கும் மருந்தினை விட சக்தி வாய்ந்ததாகவும் இல்லை என்றும் கூறி ‘எல்லையற்ற மருத்துவர்கள்’ (Doctors without Border) என்ற அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அந்நிறுவனத்திற்குக் காப்புரிமை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதை கணக்கில் கொள்ளாமல் கடந்த ஆகஸ்ட் 22, 2017 அன்று இந்தியக் காப்புரிமை அலுவலகம், ’ஃபிசர்’ நிறுவனத்திற்கு அம்மருந்திற்கான காப்புரிமையை வழங்கியது.

ப்ஃபிசர் நிறுவனத்தின் ப்ரிவெனார்-13 – விலை-ரூ. 10,895 மட்டுமே!!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ’ஃபிசர்’ நிறுவனத்திற்கு வருகிற 2026-ம் ஆண்டு வரை இந்த மருந்துகளை ஏகபோகமாக விற்பனை செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை இந்த மருந்தில் உள்ள இரசாயனக் கலவைகளைக் கொண்டு மற்ற மருந்து நிறுவனங்கள் நிமோனியாவுக்கான மருந்துகளை போட்டி விலையில் தயாரிக்க முடியாது. இந்நிறுவனம் ஒரு குழந்தைக்கு / நபருக்கான இந்தத் தடுப்பு மருந்தின் விலையை ரூ. 10,895ஆக நிர்ணயித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள காப்புரிமை காரணமாக இந்த மருந்தை வேறு நிறுவனங்கள் தயாரித்துக் குறைந்த விலையில் கொடுக்க முடியாது.

உலகிலேயே அதிக அளவில் நிமோனியா மற்றும் வயிற்றுப் போக்கு நோய்களால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பலியாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது.  உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.

இந்தியாவில் ’தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின்’ கீழ் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும், நோய்த் தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு முதல் நிமோனியாவிற்கான இந்த மருந்தையும் சேர்த்தது இந்திய அரசு. கடந்த ஆண்டு முதல், இந்த மருந்து ஹிமாச்சல் பிரதேசம், பீஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் மத்திய பிரதேசமும், இராஜஸ்தானும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன. ஏழைகளுக்கான மானியங்களை வெட்டி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கித் திண்ணும் இந்த அரசு, மக்கள் நலனுக்காகவா இந்த நிமோனியா தடுப்பு மருந்தை இலவசமாகச் சேர்த்திருக்கும்?  சோளியன் குடுமி சும்மா ஆடுமா என்ன?

ஏகாதிபத்தியங்களின் துணை நிறுவனமான ’கவி’ (GAVI) என்ற தனியார் அரசு கூட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், ’ஃபிசர்’ நிறுவனம் தற்போது ஒரு குழந்தைக்கான நிமோனியா மருந்தை ரூ.500-க்கு இந்திய அரசிற்கு விற்பனை செய்து வருகிறது. இந்த ஒப்பந்தப்படி வரும் 2021 வரை மட்டுமே இந்த மானிய விலையில் இந்நிறுவனம் நிமோனியாவுக்கான மருந்துகளைத் தரும். அதற்குப் பின்னர், இந்த நிறுவனத்திடம் இருந்து நிமோனியாவிற்கான மருந்தை முழுவிலை கொடுத்து தான் வாங்க வேண்டும். அதாவது ஒரு குழந்தைக்கு நிமோனியா வராமல் தடுக்க ப்ஃபிசர் நிறுவனத்திற்கு நாம் நேரடியாகவோ, நம் வரிப்பணத்தின் மூலமாகவோ ’அழுக’ வேண்டிய தொகை ரூ.10,895 மட்டுமே/-

நிமோனியா தடுப்பு மருந்து என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களின் சதிவலையில் இந்த நாட்டு மக்களைச் சிக்க வைக்கவே நிமோனியா தடுப்பு மருந்தை தற்போது இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றது – இந்த கார்ப்பரேட் – அரசு கூட்டணி. சரி, இந்த மருந்தின் யோக்கியதையையும் இதற்குத் தற்போது கொடுக்கப்பட்டுள்ள காப்புரிமையின் பின்னணியையும் சற்றுப் பார்க்கலாம்.

நிமோனியா காய்ச்சல் ஏற்படுவதற்கு ’நிமோகோக்கல்’ பாக்டீரியா என்ற கிருமியே முக்கியக் காரணியாக இருக்கிறது. இந்த வகை பாக்டீரியாக்களிலேயே மொத்தம் 100 தனி வகைகள் இருக்கின்றன. இவை தவிர பிற பாக்டீரியாக்களாலும், வைரஸ்களாலும் நிமோனியா ஏற்படுகிறது. ஃபிசர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ’ப்ரிவெனார்-13’ என்ற தடுப்பு மருந்து இந்த ’நிமோகோக்கல்’ பாக்டீரியாக்களில் வெறும் 13 வகை பாக்டீரியாக்களை மட்டுமே ஒழித்துக் கட்டும் தன்மையுடையது. மேலும் அதன் வெற்றித் திறன் என்பது, 1000க்கு வெறும் 3.6 மட்டுமே. அதாவது பத்தாயிரம் குழந்தைகளுக்கு இம்மருந்து கொடுக்கப்பட்டால் வெறும் 36 குழந்தைகள் மட்டுமே இம்மருந்தின் மூலமாக நிமோனியாவில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

நிமோனியாவை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் ஒரு வகை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற மருத்துவ இதழான “நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின்” இந்த ப்ரிவெனார்-13 மருந்தின் உப விளைவுகள் குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த மருந்தினால் குணப்படுத்தப்படும் குழந்தைகளில் இரண்டில் ஒரு குழந்தையை ஆஸ்துமா நோய் தாக்குகிறது என்று தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய மருந்துகளிடம் உள்ள பல்வேறு பிரச்சினைகளையும் தன்னகத்தே கொண்டு, பல்வேறு உபவிளைவுகளையும் ஏற்படுத்தும் இந்த மருந்துக்கு எவ்வாறு காப்புரிமை அளிக்கப்பட்டிருக்கும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளின் அறிக்கையில் இந்தியாவின் அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்கள் பலவீனமாக இருப்பது குறித்து கவலை தெரிவித்திருக்கிறது, அதோடு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஏதுவான வகையில் அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியாவையும் சேர்த்துள்ளது.

இது வெறுமனே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளின் அறிக்கை அல்ல, பெரியண்ணனின் மிரட்டல் கடிதம் தான் என்பது கார்ப்பரேட் கதாநாயகன் மோடிக்குத் தெரியாதா என்ன ? இந்த மிரட்டல்களுக்கு அடிபணிந்து தான் தற்போது நிமோனியா மருந்துக்கான அறிவுசார் சொத்துரிமையை இந்நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.  நிமோனியா காய்ச்சலுக்கு ப்ரிவெனார்-13-ஐத் தவிர வேறு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் ப்ஃபிசர் நிறுவனம் நிர்ணயிக்கும் விலையில் தான் வாங்க வேண்டும். அரைப்பட்டினியுடன் வாழ்க்கையைக் கடத்தும் பெரும்பான்மை ஏழைகள் ரூ.10,895 கொடுத்து ஒரு தடுப்பு மருந்து வாங்க முடியுமா? இதன் மூலமாக அரசு சொல்ல வரும் செய்தி, காசிருந்தால் உன் குழந்தையைக் காப்பாற்றிக் கொள். இல்லையேல், அது செத்து ஒழியட்டும் என்பது தானே?

இந்த மருந்துக்கு இந்தியா காப்புரிமை கொடுத்திருக்கும் அதே வேளையில், ஐரோப்பாவில், இதே மருந்துக்குக் காப்புரிமை வழங்க முடியாது என்று மறுத்துள்ளது, ஐரோப்பிய காப்புரிமை நிறுவனம். அதே போல அமெரிக்காவிலும், தென் கொரியாவிலும் இம்மருந்துக்கான காப்புரிமைக்கு எதிராக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இது இன்று நேற்று நடந்து வரும் விசயங்கள் அல்ல. 1990-களிலேயே தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலகநாடுகளில் ஏகாதிபத்தியங்கள் திணித்து வந்திருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாகத் தான், மருந்து நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளைக் கொள்ளையடிக்க அமெரிக்கா தமது தூதரகங்கள் மூலம் அனைத்து விதமான லாபிகளையும் செய்துவருகிறது. இது குறித்த கடிதப் போக்குவரத்தைக் கடந்த 2010ம் ஆண்டிலேயே விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதே போல, ஃபிசர் நிறுவனம் நைஜீரியாவில் தன் மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய, நைஜீரிய அட்டர்னி ஜெனரலின் பழைய ஊழல்களுக்கு ஆதாரம் சேகரித்து அதனை வைத்து அவரை மிரட்டி, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த தன் மீதான வழக்கில் வெற்றி பெற்றது. இத்தகவலையும் விக்கிலீக்ஸ் அச்சமயத்தில் வெளியிட்டிருந்தது.

இதைத் தான், “ பொருத்தமான இலாபம் இருக்கும் பட்சத்தில் மூலதனம் விழித்துக் கொள்கிறது. 10% இலாபம் என்றால் எங்கேயும் வரத் தயார். 20% என்றால் மூலதனம் குஷியாகிவிடுகிறது. 50% என்றால் கேட்கவே வேண்டாம், கம்பீரம்தான். 100% இலாபம் என்றால் எல்லா மனிதச் சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பதற்கு மூலதனம் தயாராகிவிடுகிறது. 300% இலாபம் என்றால் எத்தகைய கிரிமினல் குற்றத்தைச் செய்வதற்கும் மூலதனம் தயார். தூக்கு மேடை ஏறுவதற்கும் மூலதனம் துணிந்து விடும் என்று மூலதனத்தின் இலாபவெறியைப் பற்றிக் குறிப்பிட்டார் மார்க்ஸ்.

இப்போது சொல்லுங்கள், உலகெங்கிலும் பச்சிளங் குழந்தைகளின் உயிரைக் குடித்துக் கொண்டிருப்பது நோய்க்கிருமிகளா? இல்லை முதலாளித்துவ இலாபவெறியா?

– நந்தன்.

மேலும் படிக்க

India Grants Pfizer Patent for Pneumonia Vaccine

_____________

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்துள்ளதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி