Sunday, March 26, 2023
முகப்புசெய்திஉழைக்கும் மக்கள் மீதான மோடியின் பேரழிவு ஆயுதங்கள் ! - புதுச்சேரி ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்கள் மீதான மோடியின் பேரழிவு ஆயுதங்கள் ! – புதுச்சேரி ஆர்ப்பாட்டம்

-

பணமதிப்பிழப்பு – ஜி.எஸ்.டி – மாட்டுக்கறி தடை – நீட் – ரேசன், கேஸ் மானிய வெட்டு – தொழிலாளர் சட்டத்திருத்தம் – உழைக்கும் மக்கள் மீதான மோடியின் பேரழிவு ஆயுதங்கள்!

காங்கிரசின் மக்கள் விரோத காட்டுதர்பார் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இனி, நாட்டில் மக்கள் எவ்வித கவலையோ பயமோ பிரச்சினைகளோ இன்றி நிம்மதியாக வாழலாம் என்று பல்வேறு ஜம்பமான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தார் மோடி.

ஆனால் மன்மோகனுக்கு தான் எள்ளளவும் சளைத்தவரில்லை என்பதையும், மக்களை வாட்டி வதைப்பதில் மன்மோகனுக்குப் பெரியண்ணன் என்பதை நிரூபிக்கும் வகையில்; பணமதிப்பிழப்பு தொடங்கி, ஜி.எஸ்.டி, மாட்டுக்கறி தடை, நீட், ரேசன், கேஸ் மானிய வெட்டு என அடுத்தடுத்து தாக்குதல்களை தொடுத்ததுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வக்கற்றுப் போயுள்ளன. மேலும் தொழிலாளிகளின் குரல் வளையை நெறிக்கும் வகையில், எதிர்வரும் பாராளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரில் Wage Code Bill – 2017 என்ற பெயரில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தப் போகிறது.

கடந்த 2016 நவம்பர் மாதம் 8 -ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து, மக்களை வங்கி வாசலில் நிற்கவைத்து, சாகடித்தார் மோடி.

தஞ்சை திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் என்ற பெயரில் காங்கிரசு கொண்டு வந்த நாசகார திட்டத்தை. ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் திணித்தது மோடி கும்பல்.

மாட்டுக்கறி, மாடு விற்பனைக்கு தடை என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தும், பார்ப்பன மதவெறியை ஊட்டி தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களை கொன்று இந்துத்துவத்தை நிலை நிறுத்த எத்தனிக்கிறது பாஜக மதவெறிக் கும்பல்.

ஜி.எஸ்.டி., நீட், ரேசன் – கேஸ் மானிய வெட்டு என வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. வரி என்ற பெயரில் வழிப்பறி செய்தும், தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களின் உயிரையும் – கல்வி உரிமையையும் பறித்து ஆட்டம் போடுகிறது.

இப்படி, தான் தொட்ட திட்டங்களிலெல்லாம் மக்களைக் காவு வாங்கி வருகிறது. தற்போது தொழிலாளர்களையும் விட்டு வைக்காமல், சட்டத் திருத்தம் என்ற பெயரில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகி விட்டது.

தமிழகம் அல்லாது நாடு முழுவதும் மோடியின் பொருளாதாரத் தாக்குதல்களுக்கும், மதவெறி தாக்குதல்களுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். மோடியின் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு ஒத்திசைவாக கார்ப்பரேட் ஒடுக்குமுறைகள் இருக்கின்றன.

மக்களை மதவெறியூட்டி பிரித்தாள்வதன் மூலம் தனது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்புகள் இல்லாமல் நிறைவேற்ற எத்தனிக்கிறது மோடி கும்பல். இவற்றை முறியடிக்க ஒரே வழி உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்பது தான்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளையும், அதற்குச் சேவை செய்யும் மதவெறி பயங்கரவாதத்தையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் ஒழித்துக் கட்டுவோம்! என்று மக்களை அறைகூவி அழைக்கும் விதமாக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு 09.09.2017 அன்று மாலை 06:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர் சரவணன் தலைமையேற்றார். நிகழ்ச்சியில் புதுச்சேரி புஜதொமு இணைச் செயலாளர் தோழர் மகேந்திரன், புஜதொமு பொருளாளர் தோழர் செல்லக்கண்ணு, புஜதொமு பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வட்டாரக் கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களுடன் நிகழ்ச்சி நடந்தது.

கண்டனவுரையாற்றிய தோழர்கள், உழைக்கும் மக்கள் மீதான மோடியின் தாக்குதல்களை அம்பலப்படுத்திப் பேசினர்.

குறிப்பாக, பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் நீட் பற்றி விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது, நீட் தேர்வை யார் கேட்டனர்?  மக்கள் கேட்காத நீட் தேர்வு எதற்கு?  பணமதிப்பிழப்பை யார் கேட்டனர்? மாட்டுக்கறியை யாராவது தடை செய்யச் சொன்னார்களா? ஜி.எஸ்.டி.-யை வியாபாரிகள் கேட்டார்களா ? என்றும் கேள்வி கேட்டு, விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்ய காவிரி நீரைக் கேட்டால், பெற்றுத் தர துப்பில்லை. மாணவர்கள் தரமான இலவச கல்வியைக் கேட்டால், கல்வியைத் தனியாருக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் மோடி. . ஆக, மக்கள் எதைக் கேட்டனரோ அதைத் தராமல், மக்கள் எது வேண்டாம் என்று சொல்கின்றனரோ அதைத் திணிப்பது தான் மோடியின் நோக்கமாக இருக்கிறது எனப் பேசியது, ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்துக் கொண்டிருந்தவர்கள் சிந்திக்கும் விதமாக இருந்தது.

மோடியின் ’ஸ்வச் பாரத்’ (தூய்மை இந்தியா) திட்டம் என்பது குப்பைகளை அள்ளி தெருக்களை வீடுகளை தூய்மைப்படுத்தும் திட்டம் என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். ஆனால், மக்களின் அன்றாட சேமிப்புக்களை உருவி, விவசாயத்திலிருந்து விவசாயிகளை விரட்டி, கடல், மலை, கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களையும், மாட்டிறைச்சி வரை என அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்து, மக்களை ஒழித்துக் கட்டும் திட்டம் தான் ‘தூய்மை இந்தியா திட்டம்’ என விளக்கிப் பேசியது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க